படங்கள் : ஓவியர் முகிலன்
தடைகளை தகர்த்து புதுச்சேரியில் புஜதொமு பொதுக்கூட்டம்
தொழிலாளி வர்க்கமே எழுச்சி கொள்!
புதுச்சேரி புஜதொமு – வின் பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி!
கடந்த 05.08.2014 அன்று தொழிற்பேட்டைகளில் ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் முதலாளிகளின் ஏவல்படையாக செயல்படும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளைக் கண்டித்து பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேரணி தொடங்கிய சில நிமிடத்திலேயே, ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் செயல்படும் ரவுடிகள் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்களைக் தற்காத்துக் கொள்ள திருப்பித் தாக்கினர். இதைப் பயன்படுத்தி போலீசு, தொழிலாளர்களில் 20 பேரை கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது.
கைதான தோழர்களுக்கு பிணை வழங்காமல் தடுத்து அவர்களைச் சிறையில் வைப்பதன் மூலம் அவர்களை அச்சமூட்டி, அதன் மூலம் தங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கும், சங்கம் துவங்க நினைக்கும் தொழிலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு – நீதிமன்றம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இருந்து செயல்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் பிணை கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கைதான 23 நாட்களுக்குப் பிறகு 23.09.2014 அன்று தோழர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
கைது, சிறை போன்றவை எங்களது போராட்ட குணத்தை முடக்கிவிடாது, அது எங்களது போராட்ட உணர்வை மேலும் விசிறியெழச் செய்யும் என்பதை முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு கூட்டுக் களவாணிகளுக்கு உணர்த்தும் வகையில் இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்லும் வகையில் 09.09.2014 அன்று திருபுவனை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டு அதற்காக, சம்மந்தப்பட்ட போலிசு நிலையத்தில் அனுமதி கோரி கடிதம் தரப்பட்டது. எதிர்பார்த்தது போலவே போலீசு அனுமதி மறுத்தது.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “நீங்கள் கூட்டம் நடத்தினால், ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வரும் அதனால் உங்களுக்கு அனுமதி தரமுடியாது” என்பது தான். ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் உள்ளது என விளக்கிப் பேசப்பட்டது.
“அதைப் பற்றியெல்லாம் பேசமுடியாது. அனுமதி கிடையாது என்றால் கிடையாது தான்” என்று ஒப்பந்ததாரர்களுக்கு பங்காளி போல் பேசி காலம் கடத்துவதிலும், அனுமதி மறுப்பதிலுமிலேயே குறியாக இருந்தது போலீசு. இதற்கு மேல் இவர்களிடம் பேசுவதில் பலன் இல்லை என்பது உணர்ந்து அனுமதி மறுப்பை எழுதிக் கேட்டபோது அதையும் தர மறுத்தது போலீசு.
“நாங்கள் அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அனுமதி கொடுங்கள்; இல்லையேல் அனுமதி மறுத்து எழுதிக் கொடுங்கள்” என்று விடாப்பிடியாகப் போராடி கேட்ட பிறகு தான் அனுமதி மறுப்பதாக எழுதி கொடுத்தது போலீசு. அதனையும் எப்போதும் போல் கடைசி நேரத்தில் கொடுத்து தாங்கள் முதலாளிகளின் எடுபிடிகள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
அதன்பின் 19.09.2014 அன்று பொதுக்கூட்டம் நடத்தும் வகையில் திட்டமிட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அங்கும், காலம் கடத்துவதில் தான் குறியாய் இருந்தது போலிசு. எமது தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக 23.09.2014 அன்று திருபுவனைக்குப் பதிலாக அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியான மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.
அந்த ஆணையின் அடிப்படையில் ஆணை பெறப்பட்ட 20.09.2014 அன்றே அனுமதி கோரி போலிசிடம் கடிதம் தரப்பட்டது. அதற்கு பதில் கேட்டபோது இரண்டு நாட்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. 22.09.2014 அன்று அழுத்தம் கொடுத்து கறாராக பேசி அனுமதி பற்றிக் கேட்ட போது, “உங்களது அனுமதி கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி, வேறு கடிதம் கேட்டனர். “கடிதத்தில் எண் குறிக்கப்பட்டுள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய பிறகும், வேறு கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிட்டுத் தருமாறு கேட்டது.
“ஏற்கனவே கொடுத்த கடிதத்தின் மீதான பதில் தெரியாமல் புதிய கடிதம் தரமுடியாது” என கறாராக மறுத்த பிறகு, நீதிமன்ற ஆணை நகலைக் கேட்டது போலிசு. ஆணை கொடுத்தபின் அதைப் பார்த்து, “ஆணையில் தேதியும், இடமும் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி மீண்டும் இழுத்தடித்தது போலிசு. அதுவும் குறிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டி விளக்கப்பட்டது.
அதன்பின், “அந்த ஆணையில் அனுமதி தருவதாக குறிக்கப்படவில்லை, அனுமதியை பரிசீலிக்க மட்டுமே கூறியுள்ளது. அதனால், பரிசீலித்து முடிவு சொல்வ”தாக கூறியது.
“ஆணையில் அனுமதி தரச் சொல்லித் தான் உத்தரவு உள்ளது. மாற்று இடமான மதகடிப்பட்டில் நடத்த தேவையான விதிமுறைகளைப் பற்றிப் பரிசீலிக்குமாறு தான் குறிப்பிடப்பட்டுள்ளது” என போலிசு அதிகாரியிடம் விளக்கியதும் உடனே, “அதைப் பற்றி தனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று தனது எரிச்சலைப் பொரிந்து தள்ளினார்.
மேலும், எஸ்பி தெய்வசிகாமணியோ, “வாங்கிய காசிற்கு மேலாக தனிநபர்களைப் பற்றிப் பேசக்கூடாது, யார் மனதும் புண்படும்படி பேசக் கூடாது, தவறான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என நீங்கள் எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி பற்றிப் பேசமுடியும்” என்று கூவினார்.
“ஏற்கனவே, இவையெல்லாம் அனுமதி கடிதத்தில் விதிமுறைகளாக நீங்கள் கொடுப்பீர்கள். பின் ஏன் தனியாக எழுதித் தரவேண்டும்” எனக் கேட்ட போதும், “எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி” என்று எஸ்பி கூறிவிட்டார்.
ஆகவே, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி பகுதியின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் தோழர் ராஜூ அவர்களிடம் தெரிவித்து, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்பியிடம், “தனிநபரைப் பற்றிப் பேசினால், சம்மந்தப்பட்ட அந்தத் தனிநபர் புகார் கொடுக்கும் பட்சத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கத்தான் போகிறீர்கள். மேலும், என்ன பேசப் போகிறோம் என முன்கூட்டியே கடிதம் தர சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே, தனியாக எழுதித் தரமுடியாது” என கறாராக கூறியவுடன், அவரிடம் அனுமதி அளித்து விடுவதாக கூறிய எஸ்பி, தோழர்களிடமோ, பொதுக்கூட்டம் நடத்தும் பகுதியில் உள்ள கோவில் தீமிதி பிரச்சினை காரணமாக, சிபிஎம் அலுவலகம் எரிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, உங்கள் அமைப்பினரைத் தவிர யாரையும் பேச அழைக்கமாட்டீர்கள் என எழுதிக் கேட்டார்.
வாங்கின காசுக்காக ஏதாவது எழுதிவாங்கி அதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்தைத் தடுத்து விட வேண்டும் என்பதில் அனைத்து அதிகாரிகளும் குறியாய் இருந்தனர். நமக்கோ போலீசுக்கு சட்டநடைமுறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தைப் பற்றிக் ’கற்றுக்’ கொடுக்க வேண்டிய சூழல் தான் இருந்தது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் நாமும் பதில் சொல்ல வேண்டியதாய் இருந்தது.
அதனால், நிகழ்ச்சி நிரலின் படி தான் பொதுக்கூட்டம் நடக்கும். அதனால் தனியாக எழுதித் தரமுடியாது என மறுத்த பின், மீண்டும் அனுமதி தரவேண்டுமென்றால், தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் திருபுவனை பகுதி போலீசு நிலையத்தில் சென்று எஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு வந்தால் தான் தரமுடியும் என்று கூறினார்.
“பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை எழுத்துபூர்வமாக அளித்தால் தான் நாங்கள் வருவோம்” என்றும், “இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. அதனால், அனுமதி தரமுடியாது எனில் அனுமதி மறுத்து கடிதம் கொடுங்கள். நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுக் கொள்கிறோம். மற்றதை நீதிபதி உங்களுக்கு சொல்லுவார்” என்று கூறிய பிறகு, வேறு வழியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தும் அன்று காலை 10.30 மணிக்குத் தான் அனுமதி கொடுத்தனர். அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது போலீசு. முதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும் வீசிய எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு, அந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகவே இத்தனை கடிதங்கள், இழுத்தடிப்புகள் செய்து புதுச்சேரி முதலாளிகளின் சட்டபூர்வ அடியாள்படையாக பகிரங்கமாக செயல்பட்டது போலீசு.
உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றும் 22.09.2014 அன்று முழுவதும் இந்த அனுமதிக்காக போலீசு அலுவலகத்தில் காத்துக் கிடந்து தான் வாங்க முடிந்தது. இந்த அரசு, நமது நாட்டை ஜனநாயக நாடு என்றும், மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளும் உள்ளது என மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்தாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை வெளிநாட்டு நிறுவனத்தின் லாப வெறிக்காக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் இந்த நாடு சுதந்திர நாடு இல்லை என நிரூபித்தது போலீசு. இப்போது இன்னொரு முறை புதுச்சேரியில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
“மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்களே” என்ற வடிவேலுவின் காமெடி போல் ஜனநாயகம் பல்லிளிக்கிறது. ஆனால், மக்கள் வெள்ளந்தியாக இந்த அரசை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அடித்தாலும் வாங்குவதால் மக்களை ரொம்ப நல்லவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறது அரசு. நாம் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருக்கப் போகிறோமா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலாகத் தான் இந்தப் பொதுக்கூட்டம் இவ்வளவு இடர்ப்பாடுகளுக்குமிடையிலும் அனுமதி வாங்கி நடத்தப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டம் அனுமதியின் படி மிகச் சரியாக 06.00 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது. பொதுக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர்.சுதாகர் தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமையுரையில், அவர் பணிபுரியும் ஸ்ரீ மதர் பிளாஸ்ட் நிறுவனத்தில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். “50 இயந்திரங்களுடன், மூன்று பணிமுறைகளில் இயங்கும் நிறுவனத்தில் வெறும் 30 பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து அந்தத் தொழிலாளர்களை சட்டப்படி பணிநிரந்தரமாக்கக் கோரி சம்மந்தப்பட்ட தொழிலாளர் துறையிடம் மனு கொடுத்தால், ஆய்வு செய்ய வந்த தொழிற்சாலை ஆய்வாளர், நிறுவன அலுவலகத்தில் உட்கார்ந்து சமோசா, டீ சாப்பிட்டுவிட்டு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மறைத்து வைத்த பின்னர் சாவகாசமாக வந்து சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். தொழிலாளர்களிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை. இதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆய்வறிக்கை கேட்டு வாங்கிப் பார்த்தால், நிறுவனத்தில் அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறது என்று அறிக்கை கொடுத்துள்ளது தெரிந்தது. 50 இயந்திரங்கள், மூன்று பணிமுறைகளில் இயங்கினால் 30 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு நிறுவனத்தை இயக்க முடியும் என்ற அடிப்படையான கேள்வி கேட்கக் கூட தெரியாத முட்டாளா அந்த ஆய்வாளர் என்று நாம் நினைக்கலாம். தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதால், நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள். நமது அமைதியைக் கலைத்து ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
அடுத்து கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு மங்கலம் கிளைப் பொருளாளர் தோழர் வீரலட்சுமி, தான் பணிபுரிந்த பவர் சோப் நிறுவனத்தில் தொழிலாளர் படும் துயரங்களை தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கிப் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
படிக்காத முட்டாளான பவர்சோப் முதலாளி தனபால் என்ற ஒருநபரின் குடும்பம் சொகுசாக இருக்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது என்பதையும், தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி யோசிக்காமல், நிர்வாக அதிகாரியின் கால் புண்படும் என்று கவலைப்படும் போலீசு அதிகாரிகளின் திமிர்த்தனத்தை, அடிமைப் புத்தியை தனது பாணியில் உணர்ச்சிகரமான முறையில் விளக்கிப் பேசினார். சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்கள் படும் துயரங்களை விளக்கி இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட புதிய ஜனநாயக அரசு ஒன்று தான் தீர்வு என பேசினார்.
கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு வின் புதுச்சேரி மாநில அலுவலக செயலாளர் தோழர். லோகநாதன் தனது உரையில், “05.08.2014 அன்று நடந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் போலீசு தான். ஒருபக்கம் அனுமதி கொடுத்து விட்டு மறுபுறம் பிரச்சினை வரும் என்று சொல்லி, அவ்வாறு வந்தால் வழக்குப் போடுவேன் என்றும் சொல்லி, திட்டமிட்ட முறையில் போலீசின் பின்புலத்தில் தான் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகத் தான் தோழர்கள் மீது பொய்வழக்கு, கைது, சிறை. எனவே, இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், போலீசு தான் என்பதையும், முதலாளிகள், ஒப்பந்த ரவுடிகளுக்கு அடியாளாக செயல்பட்டு தொழிலாளர்களை ஒடுக்கி தான் மக்களின் விரோதி என்பதை நிரூபித்துள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சிறை என்றால் பயப்பட நாங்கள் சமூகக் குற்றம் செய்து சிறை செல்லவில்லை. போராடித் தான் சிறை சென்றுள்ளோம். சிறையிலுள்ள தொழில்முறைக் குற்றவாளிகள் கூட தங்கள் சூழ்நிலைகளைச் சொல்லி குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ள இந்த நேர்மை கூட காக்கிச்சட்டை போட்ட இந்த குற்றவாளிகளுக்குக் கிடையாது” என போலீசு அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை கேலிசெய்தார்.
“சிறையில் எங்களது போராட்டம் தொடர்ந்தது. சிறை அதிகாரிக்கும் நாங்கள் ஒரு போராளியாகத் தான் தெரிந்தோம். சிறை எங்களைத் தான் பூட்டி வைக்க முடிந்தது.. எங்கள் அரசியல் உணர்வுகளைப் பூட்டிவைக்க முடியவில்லை. எனவே, எங்களை சிறையில் தள்ளியதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது” என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் பதிவு செய்தார். தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது உரிமைகளை வெல்லமுடியும் என்பதையும் அதற்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதையும், வர்க்கமாய் அணிதிரள வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மாநில மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது உரையில், “இந்தப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே போலீசு எப்படியெல்லாம் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டது” என்பதை விளக்கிப் பேசினார். “திருபுவனை போலீசின் கட்டுப்பாட்டில் ரவுடிகள் இல்லை; ரவுடிகளின் கட்டுபாட்டில் தான் திருபுவனை போலீசே இருந்தது. அதனால் தான், ரவுடிகளைக் கட்டுப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசு, தொழிலாளர்களை ஒடுக்கி, மக்களை பயமுறுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியரோ போராடி கைதான தொழிலாளர்களை தண்டிக்கும் அதிகாரம் இல்லாத போதும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு நேரடியாக தண்டனை வழங்கி உத்தரவிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் இங்கு இப்படித்தான் என்று அதிகாரத் திமிரில் பேசுகிறார். சட்டத்தை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியவரே சட்டத்தை மீறி தண்டனை வழங்கிய கொடுமை இந்த புதுச்சேரியில் மட்டும் தான் உள்ளது” என்று இந்தப் பிரச்சினையில் போலீசு, அரசின் கூட்டுக் களவாணித் தனத்தை அம்பலப்படுத்தியதுடன், மாவட்ட ஆட்சியரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியதையும் விளக்கினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
“தொழிலாளர்கள் அமைதியாக போராடாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று சொல்கிறது போலீசு. இனிமேல், தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளைக் கோரி போலீசிடம் முறையிடுங்கள். அவர்கள் அதை பெற்றுத் தரட்டும் அல்லது எவ்வாறு போராடுவது என்று அவர்கள் சொல்லட்டும். தொழிலாளர்கள் போராடினால் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் போலீசு, தொழிலாளர்களின் சட்டபூர்வ கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் முதலாளிகளையோ அல்லது அதன் மீது நடவடிக்கைகளை எடுக்காத தொழிலாளர்துறை அதிகாரிகளையோ தூக்கிக் கொண்டு போய் வெளுக்க முடியுமா?” என்று கேட்டபோது மக்கள் தங்களது கரவொலி மூலம் போலீசின் கையாலாகத்தனத்தை கேலிசெய்தனர்.
“இந்த அரசின் சட்ட மீறல்கள், அனைத்து மக்கள் போராட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்று, விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களும், மாணவர்களிடமிருந்து கல்வியும், மீனவர்களிடமிருந்து கடலும், பழங்குடி மக்களிடமிருந்து காடுகள், மலைகளும் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. போராடும் மக்கள் மீது அரசு வன்முறையால் ஒடுக்குகிறது. இதை மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து, சிறப்புரையாற்றிய புஜதொமுவின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு, தனது உரையில், “தொழிலாளர் சட்டதிருத்தங்கள் என்ற பெயரில் தற்போது இருக்கும் அரைகுறை உரிமைகளும் பறிக்கப்படவிருக்கின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் என்ற தரகர்கள் முதலாளிகளுக்குத் தேவையில்லை. முதலாளிகளே நேரடியாக அப்பரண்டீஸ் என்ற தொழிற்பழகுநர்களையே தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். இன்று ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் ஆட்டம் போடும் இவர்களும் நாளைக்கு வீதிக்குத் தான் வந்து ஆகவேண்டும்” என்று நடைமுறையை உணர்த்தும் வகையில் சொன்னார்.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தப்போவதாக எந்த வாக்குறுதியும் சொல்லவில்லை. வாக்குறுதியாக கொடுத்ததைச் செய்ய தாமதிக்கும் மோடி, முதலாளிகளுக்கு தாமதமின்றி சேவை செய்வதை விளக்கி மோடியைத் தேர்ந்தெடுத்தது மக்கள் அல்ல. காங்கிரசு மேல் மக்களுக்கிருந்த வெறுப்பை, மோடிக்கு செல்வாக்காக திருப்பும் வகையில் செயல்பட்ட முதலாளிகளே என்பதை விளக்கினார்.
மேலும், இந்த சட்டதிருத்தங்களால் ஏற்படப்போகும் அபாயங்களை உணத்திப் போராட வேண்டிய அவசியத்தை விளக்கினார். 650 கோடி ரூபாய் முதலீட்டிலும், பல்வேறு அரசின் சலுகைகள் மூலமும் தொழிலைத் தொடங்கிய நோக்கியா நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள வித்தியாசத்தைச் சொல்லி நமது நாட்டுத் தொழிலாளியின் மோசமான நிலையை விளக்கினார். இந்த நிறுவனம் ரூ 89,000 கோடி இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகையை செலுத்தாததால் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க மறுத்தது. ஒரே ஒரு நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகை மட்டுமே இவ்வளவு என்றால் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அடையும் இலாபத்தைக் கணக்கிட்டால் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்லப்படும் மக்கள் உழைப்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் திமுக, அதிமுக, காங்கிரசு, பாஜக, இடது-வலது போலிகள் என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வித்தியாசம் இன்றி செயல்படுகிறது என்பதை விளக்கிப் பேசினார். இது போன்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், ஓட்டுக் கட்சிகளை நம்பாமல் மாற்று அரசை நிறுவுவது தான் வழி என்று விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மக்கள் கலை இலக்கிய கழகம் மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி அங்கு திரண்டிருந்த தொழிலாளர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்புவதாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
புஜதொமு திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல் நன்றியுரைக்குப் பின் பாட்டாளிவர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.
இப்பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களிடமும், தொழிலாளர்களிடமும் போராடும் எண்ணத்தைத் தூண்டியுள்ளதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு : 9597789801
அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
50/103, ஆர்மேனியன் தெரு, பாரிஸ், சென்னை – 01.
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
செயலாளர், சென்னைக் கிளை.
தொலைபேசி – 98428 12062
பத்திரிகை செய்தி,
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வைக்கக் கோரி பொதுநல வழக்கு தாக்கல்:
கடந்த 27.09.2014 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்காரர்கள் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இன்றுகூட இயல்பு நிலை திரும்பவில்லை. தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கும் மற்றும் வியாபாரிகளின் கடைகள் மற்றும் அலுவலகங்களை திறப்பதற்கும் பாதுகாப்பு அளித்து இயல்பு நிலைக்கு திரும்ப மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், காவல்துறை தலைமை இயக்குனர் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், பொது அமைதிக்கு தேவையான காவல்படைகளை பணியில் அமர்த்த வேண்டுமெனவும் இப் பொதுநல வழக்கில் கோரப்பட்டது.
இவ்வழக்கு அவசரமான தேவை என்பதால் விடுமுறை நாளான இன்று (ஞாயிறு கிழமை செப்டம்பர் 28, 2014) மதியம் 1.30-க்கு நீதிபதி ச.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி கே.மாகாதேவன் அடங்கிய சிறப்பு அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் G புருசோத்தமன் அரசியலமைப்பில் ஒரு வெற்றிடமும், அறிவிக்கப்படாத பந்த் போன்ற நிலைமையும் இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அரசாங்கம் செயலற்ற நிலையில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நீதிமன்றம் தலையிட வேண்டுமெனவும் வாதிட்டார்.
அரசு தலைமை வழக்குரைஞர், கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் கைதாகும்போது இதுபோல உணர்ச்சி மயமான போராட்டத்தை தமிழகம் ஏற்கனவே சந்தித்துள்ளது என்றாலும் தற்போது அமைதி நிலை திரும்பியுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குனர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், வழக்கை 06.10.2014 அன்று பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.
இப்படிக்கு,
சு.ஜிம்ராஜ் மில்ட்டன்
தமிழகமெங்கும் அ.தி.மு.க ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டம், பேருந்து எரிப்பு உள்ளிட்ட நாசவேலைகள் குறித்த பத்திரிகை செய்திகள் (தொகுப்பு : மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை)
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திருச்சியில் அதிமுக கும்பலின் கலவரத்துக்கு குடை பிடித்த காவல்துறை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி அனுப்பிய செய்தி
கலவரங்களை அந்தந்த பகுதி செயலாளர்கள் அவர் அவர் பகுதியில் முன்னின்று நடத்தினர்.
அ.தி.மு.க முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரான், மறைந்த அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் மரியம் பிச்சையின் மகன். மரியம் பிச்சையின் மறைவிற்கு பிறகு திருச்சி மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் பாலியல் புகார்களில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் 300-க்கும் மேற்பட்ட அதிமுக ரவுடிகளை அழைத்துக்கொண்டு பாலக்கரை, மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் கலவரம் செய்தார். அனைத்து கடைகளையும் மூடச்சொல்லி மிரட்டிக் கொண்டும், கண்ணில் தென்படும் பொருட்களை அடித்து நொறுக்கிக் கொண்டே சென்றனர். சில இடங்களில் மட்டும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர், தடியடி நடத்தி களைத்தனர்.
இறுதியாக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தை அடித்து நொறுக்கச் சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் முழுவதுமாக ஓடாததாலும், கடைகள் எதுவும் இல்லாததாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி பகுதி.
மனித உரிமை பாதுகாப்பு மையம் பத்திரிகை செய்தி ஆங்கிலத்தில்
HUMAN RIGHTS PROTECTION CENTRE-TN
50, Armenian Street, Parrys, Chennai – 01.
S Jim Raj Milton Phone : 98428 12062
Secretary-Chennai wing
Press Release
PIL filed to restore Normalcy in Tamil Nadu
On 27.9.2014, the present Chief Minister of Tamil Nadu, J.Jayalalitha has been found guilty and awarded imprisonment for 4 years on a Charge under Prevention of Corruption Act for the Disproportionate Assets by the designated special Court at Bangalore.
Immediately after the pronouncement of the judgment, party men belonging to All India Anna Dravida Munnetra Kazhagam,(AIADMK), indulged in atrocities and massive violence erupted all over Tamilnadu yesterday. Even today normalcy is not restored. Tamil Nadu police was mere spectator of above said incident. It is like a lawless State.
Hence, to restore law and order, Public safety and tranquility Human Rights Protection Center moved a PIL to restore normalcy in the state and police protection to the peace full transportation and running shops and offices. It seeks court should direct the DGP to file a report regarding law and order situation and deploy adequate police protection to ensure public safety.
The matter was taken up as urgent hearing by by vacation Bench consist of Justice S Vaidhyanathan and Justice K Mahadevan today (Sunday September 28, 2014)
Reg.
S Jim Raj Milton
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.
மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், இந்த உண்மையை 7-9-1995 அன்றே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் முன்னிலையில் முன்னறிவித்தார் ஜெயலலிதா. அந்த தேதியில் தான் அவரது வளர்ப்புக் கோயில் மாடான சுதாகரனின் திருமணம் நடந்தேறியது. ஜெயாவின் அந்த முதலாம் ஆட்சியே தமிழக அரசியலில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பொற்காலத்தை துவங்கி வைத்தது. ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்ததும், அதற்கு துணையாக பெரும் ரவுடிகளைக் கொண்ட தளபதிகளின் கூட்டம் நின்றதும் வரலாறு.
”நான் அடித்தது இத்தனை தான், உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்” என்று இந்தியாவின் பெருமை மிகு போலி ஜனநாயகத்தின் மூஞ்சியில் ஜெயா கும்பல் பீச்சாங்கையை வைத்து ஏறக்குறைய 19 ஆண்டுகள் கடந்து விட்டது.
ஜெயா ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு சுப்ரமணி சாமியால் தொடரப்பட்ட வழக்கை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்ட பின் அவ்வழக்கின் மீதான விசாரணை தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து விட்ட ஜெயா கும்பலின் சொத்துக்கள் மிடாஸ் முதலாக தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாம்ராஜ்யத்தில் பல ஆயிரம் கோடிகளாக வளர்ந்திருக்கின்றன. இப்போது, முதல் ஆட்சியில் ரூ 66 கோடி சொத்து சேர்த்தார்கள் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது நீதித்துறை. இதுதான் சட்டம் ஆற்றிய கடமையின் லட்சணம்.
இன்றைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி 1991-96 காலகட்டத்தில் ஜெயா அடித்த கொள்ளைகளுக்கான குற்றவாளி என்றால், இந்தக் குற்றவாளி இடைப்பட்ட காலத்தில் சுமார் எட்டாண்டுகள் அதிகாரத்தில் அமர வாய்ப்பளிக்கும் விதமாக வழக்கை நத்தையின் வேகத்தில் நகர அனுமதித்த நீதிமன்றத்தை யார் தண்டிக்கப் போகிறார்கள்?
ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது.
தற்போது வெளியாகியிருக்கும் மொக்கைத் தீர்ப்பும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடவில்லை. 2001-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயா வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஏற்கனவே கொசுவலை போல் கணக்கில்லாத பொத்தல்களோடு கிழிந்து கந்தலாகித் தொங்கிக் கொண்டிருந்த சட்டத்தில் புதிய ஓட்டைகளைக் கண்டுபிடித்து இந்தியாவின் அரசியல் சட்டத்தை அன்றாடம் கேலி செய்து வாய்தா ராணியென்ற சாதனை படைத்தார்.
வாய்தா ராணியின் அஸ்திரங்களை வெல்லும் அரசியல் உறுதியோ இல்லை தார்மீக நெறியோ திமுகவிடம் இல்லை. அரசியல் ரீதியில் காலாவதியாகிப் போய் நின்ற தி.மு.கவிடம் ஜெயாவை எதிர்ப்பதற்கு இறுதியாக எஞ்சிய ஒரே ஆயுதம் இந்த வழக்கு ஒன்று தான் என்பதைத் தாண்டி திமுக பலவீனமான நிலையிலேயே இந்த வழக்கை எதிர்கொண்டது.

கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி, ஆளும் தரகு முதலாளிகளின் கிளப்பில் சேர்ந்து விட்டாலும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது பெரிய விசயமில்லை. ஏனெனில் திமுக உருவாகி வந்த திராவிட பாரம்பரியத்தின் மீதான பார்ப்பனிய வன்மத்தை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நேரெதிராக ஜெயா கும்பல் இத்தனை பகிரங்கமாக ஊழல் செய்து பேயாட்சி செய்தாலும் அவரை ஒரு குற்றவாளியென்றோ, தண்டிக்கப்பட வேண்டுமென்றோ ஊடகங்களும், பார்ப்பனிய அறிவு ஜீவிகளும் கோரியதே இல்லை. கூடவே மறுகாலனியாக்கம் கோரும் பாசிச மற்றும் பாப்புலிச ஆட்சிக்கு பொருத்தமான நபராக ஜெயாவை ஆளும் வர்க்கங்கள் கருதின. மோடியும் கூட இப்படித்தான் அரியணை ஏற்றப்பட்டார்.
அதனால்தான் இந்த நெடிய 18 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரசு அல்லது பாரதிய ஜனதா யார் ஆண்டாலும் ஜெயா கும்பலின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இந்த பின்புலத்தில்தான் அரசியல் சட்ட புத்தகத்தை ஒவ்வொரு காகிதமாக கிழித்து கழிவறையில் தொங்க விட்டு அழகு பார்த்தார் ‘அம்மா’.
தனது ரத கஜ துரக பதாதிகள் துணையோடு ஜெயா கடந்த பதினெட்டாண்டுகளாக உலகம் ஒரு சதுரம் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார். என்றாலும், மறுக்கவே முடியாத உண்மையான ’உலகம் உருண்டை’ தான் என்பதை நீதிமன்றம் வேறு வழியின்றி இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரம் இந்த தீர்ப்பு உலகம் சதுரமாகவும் இருப்பதற்குரிய நியாயத்தை முற்றிலும் மறுத்து விடவில்லை. ஜெயா, சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடியாது என்பதோடு, ஓபி வகைப்பட்ட பொம்மைகளை முதல்வர் பதவியில் அமர்த்தி போயஸ் தோட்டத்து ரிமோட்டே கட்டுப்படுத்தும் என்ற யதார்த்தத்தை இந்த தீர்ப்பு தடுக்கப் போவதில்லை.

எனினும் ஜெயா கும்பல் இறுதி நேரத்தில் மோடி ஆட்சியின் சகல ஆசிகளுடன் இந்த வழக்கிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக கும்பல் சிவகாசி வெடிகளோடு பெங்களூருவுக்கு படையெடுத்தது. ஆனால் சட்டப்படியே என்ன போங்காட்டம் ஆடினாலும் ஜெயா கும்பலை முற்றிலும் விடுவித்து விட முடியாது என்ற நிலையும் உருவாகி இருந்தது. மேலும் ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.
என்றாலும் ஜெயாவுக்கு ஆதரவாக ஒரு மாபெரும் சென்டிமெண்ட் அலையை ஏற்படுத்த அதே ஆளும் வர்க்கமும், ஊடகங்களும் முயலாமல் இல்லை. அம்மாவை கடைசி வரை காப்பாற்ற முயன்ற பாஜக கும்பல் இந்த வழக்கின் பெருமை திமுகவிற்கு செல்வதை கடுப்புடன் பார்க்கிறது.
ஜெயாவின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை முதலில் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லும் போது தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று முன்பே தெரியுமென தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். மாமா சாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது அம்மா கட்சி மகளிர் அணி அளித்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பை தமிழகம் மட்டுமல்ல சாமியும் மறந்திருக்க மாட்டார். ஆனாலும் ஒரு தெருவோர விபச்சார தரகனுக்கு ரோசம், மானம், வெட்கம், சுயமரியாதை என்று ஏதாவது இருக்குமா என்ன?
பார்ப்பனிய பங்காளிகளான சாமி மற்றும் மாமிக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடு தற்காலிகமானதே. அதனால்தான் சாமியும் இந்த 18 ஆண்டுகளில் தான் போட்ட வழக்கின் மீது அம்மா கும்பல் வாய்தாக்களின் பேரில் சிறுநீர் கழித்த போதும் அதை பன்னீர் என்று உச்சிமோந்து அதிமுகவின் கூட்டணியிலேயே ஓட்டுக் கேட்டார். இந்த தரங்கெட்ட தரகன் இன்று எச்சிலொழுக நான்தான் கிழிச்சேன் என்று ஊளையிட்டாலும் அப்படி ஒரு பெருமையை பாஜகவோ இல்லை மோடியோ விரும்பவில்லை.

கடைசி வரை போயஸ் தோட்டத்தின் வாசலில் ராப்பிச்சைக்காரனைப் போல் நின்ற பொன்னாரை அம்மா பீச்சாங்காலால் எத்தி விட்ட பின் வேறு வழியின்றித் தான் காவி கோஷ்டியினர் பூணூலை உருவிக் கொண்டு பெருமாள் கோயில் உண்ட கட்டியாவது கிடைக்காதா என்று கேப்டனிடம் ராப்பிச்சை கேட்டார்கள். ‘உத்தமர்’ வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் சென்னை வரும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து அம்மனிடம் ஆசி வாங்கிச் சென்றதையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
அம்மாவை பகைத்துக் கொண்டால் திருநெல்வேலி ஊரே காணாமல் போய்விடும் என்பது சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காவிகள் கற்றுக் கொண்ட பாடம்.
காவி கும்பலே வெட்கப்படுமளவுக்கு ‘பாட்டாளிகளின்’ கட்சியான தாபா கட்சியும், காரத் கட்சியும் போயஸ் தோட்டத்திற்கு 5 வருடத்திற்கு ஒரு முறை விரதம் இருந்து பாதயாத்திரை போய் கால், அரை சீட்டு பஞ்சாமிருதம் வாங்கியதும் கூட வரலாற்றின் பக்கங்களில் சிரிப்பதற்காக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பிச்சை பஞ்சாமிர்தமும் கடைசி தேர்தலில் கிடைக்கவில்லை எனும் போது ஆதித்யா சேனலில் வடிவேலுவின் டிஆர்பி ரேட்டிங்கை தாபாவின் டிஆர்பி ரேட்டிங் தகர்த்தெறிந்தது.
தாபா கட்சியின் தேசிய செயலரான டி.ராஜா, பெங்களூரு தீர்ப்பை ஒட்டி தந்தி டி.வி நிருபரிடம் திருவாய் மலர்ந்ததை பார்த்தால் புத்தரே கொடு வாளினை எடுத்துக் கொண்டு தாபா கட்சி ஆபிசுக்கு சென்று விடுவார்.
அதாவது பதினெட்டாண்டு காலம் வழக்கு நடந்தது, வேறு வேறு மாநிலங்களுக்குப் போனது, வேறு வேறு நீதி மன்றங்களுக்கு மாறியது, மேல் முறையீடுகள் நடந்தது என்றெல்லாம் பீடிகை போட்ட டி.ராஜா, தற்போது சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று யாருக்கும் தெரியாத உண்மையை போட்டு உடைத்தார். டி.ராஜாவிடம் தொடர்ந்து பேசிய தந்தி நிருபர், தீர்ப்பின் விளைவாக ஏற்படவுள்ள அரசியல் அணிசேர்க்கையின் மாற்றங்கள், எதிர்கால கூட்டணிக் கணக்கு வழக்குகள் குறித்த கேள்விக்கு சட்டென உள்ளே புகுந்த டி.ராஜா “ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தனது கருத்தல்ல என்றும், அது சட்டத்தின் கருத்து” என்றாரே பார்க்கலாம்.

“அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா” என்ற கோலிவுட்டின் கோமாளி ஸ்டார் ரஜினிகாந்தின் தத்துவத்தின் படி டி ராஜாவின் வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அம்மாவை தண்டிக்க வேண்டுமென்று தாபா கட்சி கோரவில்லை, கோரியதில்லை, கோரப்போவதில்லை. அடுத்த தேர்தலில் பஞ்சாமிர்தம் கிடைக்காது என்றாலும் அதன் மணம் வீசும் காலி டப்பாவாவது கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கமே டி ராஜாவின் வாயில் அத்தனை எச்சரிக்கையுடன் வெளிப்படுகிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் – தங்கள் சொந்த குடும்ப தொலைக்காட்சிகளில் நடக்கும் பாதுகாப்பான விவாதங்களில் கூட – கருத்து சொல்லும் தி.மு.கவினரோ தங்களது அரசியல் ஆதாயத்துக்காகக் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துப்பற்றவர்களாக நிற்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கே தட்டி வைப்பது ஒரு புறமிருக்கட்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை குப்பறத் தள்ளி வெற்றிபெற்றிருக்கும் ஜெயாவை எதிர்த்து நிற்கும் தார்மீக நெறியோ, அரசியல் கடப்பாடோ, மக்கள் நலனோ கருணாநிதி கட்சிக்கு இல்லை. அதனால்தான் தாக்குதல் நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாட முடியாததோடு, தற்காப்பு நிலையில் கூட அவர்களால் பேசவோ, நடமாடவோ முடியவில்லை.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா கும்பலின் சார்பில் அதிமுக ரவுடிகள் தமிழகம் முழுவதும் திமுக அலுவலகங்களை தாக்கி, கருணாநிதி கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி வழக்கு போட்டவனை நீதிமன்றத்திலேயே போட்டு கதற கதற அடிப்பதை எங்கேயாவது பார்க்க முடியுமா?
தி.மு.க சார்பு ஊடகங்களான சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியினர் நெருப்புக் கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதைப் போல சொத்துக் குவிப்பு வழக்கின் அலுப்பூட்டும் வரலாற்று விவரங்களில் தங்களது மூளைகளைப் புதைத்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான புதைப்புதான்.
திமுகவின் செய்தி ஊடகங்களுக்கு எதிர்வரிசையில் நடுநிலை வரிசையாக ஃபிலிம் காட்டும் ஊடகங்களின் யோக்கியதை என்ன?

அம்மாவின் பிய்ந்த செருப்புகளாக அணிவகுக்கும் புதிய தலைமுறை தந்தி தொலைக்காட்சியினரோ தமிழின் ‘ங’ எழுத்தே நாணிக் கோணும் அளவுக்கு வளைந்து நெளிகிறார்கள். பாரிவேந்தர் மற்றும் சிவந்தி வகையறா மறத்தமிழன்களின் மானங்கெட்டத்தனத்தை விரிவாக எழுத விரல் கூசுவதால் ஒரு சில தெறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.
ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆங்கில சேனல்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் போது தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தான் அவ்வாறு தெரிவிக்கின்றன என்று ஆரம்பித்து பின்னர் ”குற்றம் நிரூபிக்கப்பட்டடதாக நீதிமன்ற வளாகத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என நகர்ந்து இனி சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்த பின் “குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது” என்று நெளிந்தார்.
இந்த பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதிமுக காலிகள் தமிழகம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன. கடைகளை அடைக்கச்சொல்லி வன்முறைசெய்கிறார்கள் அதிமுக குண்டர்கள். தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ தமிழகமெங்கும் ”அதிமுகவினர் போராட்டம்”,” “மக்கள் தங்களாகவே நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டனர்”, என்று கூறி வன்முறை கும்பலை நியாயப்படுத்துகிறார். புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
18 நெடிய ஆண்டுகளில் நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அதனால்தான் ஜெயா கும்பல் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை இதே சட்டமும், சட்ட ஒழுங்கும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
இந்த வகைப்பட்ட போராட்டங்களின் தேவை இன்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உணவு மானியம்: மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஒன்பதாவது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்களை அதிரடியாகக் குறைக்கக் கோரிய மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள், அது தொடர்பாக, “ஏழை நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தமது ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985-88-ம் ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது” என்ற நிபந்தனையை முன்வைத்தன. இந்த நிபந்தனையை ஏழை நாடுகள் முழுமையாகவும் உடனடியாகவும் ஏற்க மறுத்ததையடுத்து, “ஏழை நாடுகள் தற்பொழுது வழங்கிவரும் விவசாய மானியத்தை 2017-ம் ஆண்டு வரை தொடரலாம். அதற்குள் இப்பிரச்சினையில் ஓர் இறுதி முடிவை எட்ட வேண்டும்” என சமரச உடன்பாடு கொண்டு வரப்பட்டது.

இந்தச் சமரச உடன்பாடை ஏழை நாடுகள் பெறுவதற்கு ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதன்படி, ஏழை நாடுகளின் இறக்குமதி வர்த்தகத்தை மேலும் தாராளமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தமொன்று (Trade Facilitation Agreement) இறுதி செய்யப்பட்டது. இப்புதிய ஒப்பந்தத்தை 2014-ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் உ.வ.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் அங்கீகரித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பாலி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறாக, பாலி மாநாடு ஏழை நாடுகள் மீது இரண்டு இடிகளை இறக்கி, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்குச் சாதகமாக முடிந்தது. இம்முடிவுகளை ஏழை நாடுகள் மீது திணிப்பதற்கு இந்திய அரசு – மன்மோகன் சிங் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு – ஏகாதிபத்தியங்களின் அல்லக்கையாக நடந்துகொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் நடந்த உ.வ.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி அரசு, விவசாயத்திற்கு மானியம் அளிக்கும் விசயத்தில் ஓர் இறுதியான முடிவை எட்டாமல், இறக்குமதி வர்த்தகம் தொடர்பாக பாலி மாநாட்டில் எடுத்த முடிவை அங்கீகரிக்க முடியாது எனக் கூறியதையடுத்து, அக்கூட்டம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏமாற்றமளிப்பதாக முடிந்து போனது. 160 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உ.வ.க.வில் இந்தியாவின் முடிவை தென் ஆப்பிரிக்கா, கியூபா, வெனிசுலா உள்ளிட்டு ஒரு நான்கைந்து நாடுகள் மட்டுமே ஆதரித்து நின்றன. எனினும், உ.வ.க.வில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், இந்திய அரசின் திடீர் கலகம் வெற்றிகரமாக முடிந்தது.
இந்த திடீர் கலகத்தைக் காட்டி, ஏகாதிபத்தியங்களை எதிர்த்து நிற்கும் உறுதி கொண்ட சுயமரியாதைமிக்க போராளி போலவும்; இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வந்த இரட்சகன் போலவும் மோடி அரசை ஊடகங்கள் துதி பாடின. “மோடி அரசு இறுதிவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்” என நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் அறிவுரை வழங்கி, மோடி அரசிற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால், அவரது அரசோ அரிசி மற்றும் கோதுமை கொள்முதலின்பொழுது மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்குத் தடைவிதித்துத் தனது உண்மைச் சொரூபத்தை வெளிகாட்டிக் கொண்டது.

உ.வ.க.வின் ஜெனீவா மாநாடு தோல்வியில் முடிந்து போனதற்கு இந்தியாதான் காரணமென்று கூறி, ஏகாதிபத்தியவாதிகள் மோடி அரசைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியவுடனேயே, அவரது அரசு தன்னிலை விளக்கம் என்ற வெள்ளைக் கொடியைக் கையில் ஏந்தி, இம்சை அரசன் வடிவேலு கணக்காக சரணடைந்தது என்பதே உண்மை.
“வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதை இந்தியா மறுக்கவில்லை. விவசாய மானியம் பற்றிய முடிவும் வர்த்தக ஒப்பந்தமும் ஒரே சமயத்தில் நிறைவேற வேண்டும் என்பதுதான் அடியேனின் கோரிக்கை.
“செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உ.வ.க.வின் கூட்டத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுகிறோம். செப்டம்பரில் முடியாவிட்டால்கூட, டிசம்பர் இறுதியில் நடைபெறும் கூட்டத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவோம்.
“விவசாயத்திற்கும் ரேசன் பொருட்களுக்கும் எவ்வளவு மானியம் தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஆண்டை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் விண்ணப்பம்.”
– என்றெல்லாம் அதிகாரிகள் மூலம் விளக்கத்திற்கு மேல் விளக்கமளித்து அமெரிக்க எஜமானர்களின் கோபத்தைத் தணிக்க முயன்றது மோடி அரசு. ஜெனீவா மாநாட்டில் மோடி அரசு நடத்திய சவடால் நாடகம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உ.வ.க. கூட்டத்திலோ அல்லது பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் செல்லும் சமயத்திலோ முடிவுக்கு வந்துவிடக் கூடும். ஆனால், விவசாயிகளின் மானிய உரிமையைக் காப்பதற்காகவோ அல்லது விவசாயத்திற்கு எவ்வளவு மானியம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நமது நாட்டின் சுயாதிபத்திய உரிமையைத் தட்டிப் பறிக்க முயலும் ஏகாதிபத்தியங்களின் அடாவடித்தனத்தை எதிர்த்து நிற்பதற்காகவோ இந்த சவடால் நாடகம் நடத்தப்படவில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஏனென்றால், நெல்லுக்கு ஆதார விலையாக ரூ 2,500/- ரூபாய் தர வேண்டும் என விவசாயிகள் கோருகிறார்கள். ஆனால், மோடி அரசோ சன்ன ரக நெல்லுக்கு ஆதார விலையாக ரூ.1,400/-ஐ மட்டும் அறிவித்து, இதற்கு மேல் ஒரு தம்பிடிகூடத் தரக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு மேல் மாநில அரசுகள் ஊக்கத் தொகை கொடுத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி கொள்முதல் செய்ய மாட்டோம் என்று மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும், யூரியாவிற்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்ய ஆலோசித்து வருவதாக பட்ஜெட் உரையிலேயே அறிவித்திருக்கிறது, மோடி அரசு. யூரியா மானியத்தை ரத்து செய்வதன் மூலம் அரசிற்கு 20,000 கோடி ரூபாய் வரை மிச்சமாவது ஒருபுறமிருக்க, விவசாயிகளிடமிருந்து 20,000 கோடி ரூபாய் அளவிற்குப் பகற்கொள்ளையடிக்கும் வாய்ப்பு உரக் கம்பெனிகளுக்குக் கிடைக்கும். உணவுப் பொருள் கொள்முதலில் தனியாரையும் அனுமதிக்கும் நோக்கில் தேசியப் பொதுச் சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, “மானியம் வழங்குவது நாட்டுக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ நல்லதல்ல. பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத்தால், அதன் சுமை அதிகரித்து வருகிறது. எனவே, மானியங்களுக்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்வதன் மூலம் அந்தச் சுமையைக் குறைக்க வேண்டியுள்ளது” என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த அறிவிப்பை வழக்கமான மிரட்டல் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனென்றால், அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலவு மேலாண்மைக் கமிட்டியை அமைத்து, அதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலானைத் தலைவராக நியமித்திருக்கிறது மோடி அரசு. பிமல் ஜலான் முந்தைய காங்கிரசு அரசுக்கு நெருக்கமானவர் என்பதெல்லாம் மோடிக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அம்பை எய்யத் தயாராக இருந்த அர்ஜுனனுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்ததாகக் கூறப்படுவதைப் போல, மோடியின் கண்களுக்கு பிமல் ஜலான் தனியார்மயத்தின் தீவிர விசுவாசி என்பது மட்டுமே தெரிகிறது. தனியார்மயம் என்ற சரடு காங்கிரசையும் பா.ஜ.க.வையும் எப்படியெல்லாம் பிணைக்கிறது என்பதற்கு இது இன்னொரு சான்று.
மானியம் வழங்குவது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என உ.வ.க. கூட்டத்தில் மோடி அரசு வாதாடியிருப்பதன் பொருள், தற்பொழுது விவசாயிகள் பெற்றுவரும் மானியத்தையும் தட்டிப் பறிப்பதாகத்தான் அமையுமேயொழிய, வேறெதுவுமாக இருக்க வாய்ப்பே இல்லை. மானியத் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை, ரேசன் கடைகளில் அரிசியையும் கோதுமையையும் என்ன விலையில் விற்க வேண்டும், எவ்வளவு விற்க வேண்டும், யாருக்கு விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியங்களிடம் தாரை வார்க்கும் துரோகத்தை மூடிமறைப்பதற்காகவே மோடி அரசு ஜெனீவாவில் சவடால் நாடகத்தை நடத்தியிருக்கிறது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன.
உ.வ.க. பரிந்துரைக்கும் விவசாய மானிய வெட்டு நேரடியாக விவசாயிகளையும், ரேசன் கடையில் கிடைக்கும் அரிசியையும் கோதுமையையும் பருப்பையும் பாமாயிலையும் நம்பிவாழும் ஏழைகளையும் பாதிக்குமென்றால், வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கை சிறுதொழில்கள் மீதும் அதனை நம்பி வாழும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தலையிலும் இறங்கப் போகும் இடியாகும்.
ஆப்பிள், ஜெனரல் எலெக்ட்ரிக், காட்டர் பில்லர், ஃபைசர், சாம்சங், சோனி, எரிக்சன், இ-பே, ஹுண்டா, லெனோவா உள்ளிட்ட கையளவேயான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் உ.வ.க. கொண்டுவரவுள்ள வர்த்தக ஊக்குவிப்பு நடவடிக்கையால் பலன் அடையவுள்ளன. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்பொருட்களைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மாற்றப்படும். எனவே, பாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளையும் எதிர்ப்பதற்குப் பதிலாக விவசாயத்திற்கு மானியம் வழங்குவதில் கொஞ்சம் சலுகை காட்டினால் வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் என்பது கீழ்த்தரமான பேரமன்றி வேறல்ல. இந்த பேரம் எதிர்வரவுள்ள பஞ்சாப், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்குவதற்கு மோடிக்கு உதவக்கூடும்.
– செல்வம்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________
அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை
களப்போராளிகள் தேவை என்பதை உணர்த்திய தொழிலாளர்களுக்கு நன்றி! நன்றி!!
ஒசூர் அசோக் லேலாண்டு ஆலை-2-ல் 19–09–2014 அன்று நடந்து முடிந்த சங்கத் தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இணைச் செயலாளர் பொறுப்புக்கு தோழர் பரசுராமன் போட்டியிட்டார். இவ்வாலையில் 3 இணைச் செயலாளர் பொறுப்புகளுக்கு மூன்று அணிகள் சார்பாக (தலா 3 பேர் என்ற வகையில்) 9 பேர் போட்டியிட்டனர். தோழர் பரசுராமன் மற்றும் பாரி என்ற இரண்டு பேர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தோழர் பரசுராமனுக்கும் பாரிக்கும் தலா 289 வாக்குகள் மட்டும் கிடைத்தன. இதில் வெற்றி பெற்ற ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் முறையே 747, 656, 720 ஆகிய ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர்.
அணி அரசியலின் வெற்றியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தோழர் பரசுராமன் பெற்ற வாக்குகள் 289 என்பது குறைவானதே. இதேபோல, எல்.சி.வி. சேசிஸ் பகுதியில் கமிட்டிக்குப் போட்டியிட்ட தோழர் ரவிச்சந்திரன் பெற்ற வாக்குகளும் குறைவானதே. வெற்றியா, தோல்வியா என்று எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது தோல்வியே.
இந்த வெற்றி தோல்வி – வாக்கு எண்ணிக்கை அதிகம் – குறைவு என்பதை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை விளக்கி பு.ஜ.தொ.மு. சார்பாக வெளியிட்ட துண்டறிக்கையின் உள்ளடக்கத்தை இங்கே தருகிறோம்.
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
அன்பார்ந்த லேலாண்டு தோழர்களே!
நாங்கள் சொல்லும் நன்றி, இணைச் செயலாளர் (ஒகு) பொறுப்புக்கு போட்டியிட்ட தோழர் பரசுராமன் மற்றும் கமிட்டிக்கு போட்டியிட்ட தோழர் ரவிச்சந்திரனுக்கு வாக்களித்ததற்காக மட்டுமல்ல. இதன் மூலம் தொழிலாளர்கள் உணர்த்தியுள்ள உண்மைக்காக…
ஆம், தொழிலாளர்கள் உணர்த்திய அந்த உண்மை, களப்போராளிகள்தான் இன்றைய தேவை என்பதே!
தொழிலாளர்களால் சங்க நிர்வாகியாக எங்களைத் தேர்ந்தெடுக்க இயலாமல் போனாலும் கணிசமான தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இது எங்களைத் தொடர்ந்து செயல்பட ஊக்கமருந்தாக அமைந்துள்ளது.
தொழிலாளர்களது இந்த உணர்வை பெரிதும் மதிக்கிறோம்! போற்றுகிறோம்! உயர்வாகக் கருதுகிறோம்!
எந்தச் சூழலில் தொழிலாளர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை சீர்தூக்கிப் பார்த்தாலே இந்த உண்மை உங்களுக்கு புரியும்.
எங்களது தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பிரசுரத்தில் குறிப்பிட்டது போல நடந்து முடிந்த இந்தத் தேர்தலும் காசு, தண்ணி, பிரியாணி உள்ளிட்ட அனைத்துவித ஓட்டைக் கவரும் பண்டங்களுடன் அணி கவர்ச்சிகளுடன் நடை பெற்றது. தனிப்பட்ட முறையில் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் இவற்றைத் தாண்டி லேலாண்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் காட்டிய கவர்ச்சி வாசகங்களும் வழமையானதைவிட ‘சிறப்பாகவே’ இருந்தது. தலைவர்களை கவர்ச்சியாகக் காட்டி ஓட்டு கேட்கும் நடைமுறையும் புதிய வடிவங்களை எடுத்தது. ஆலை நிர்வாகத்தின் மூலதன இலக்கிற்கு – அடக்குமுறை நோக்கங்களுக்கு குந்தகம் விளைவிக்காத, அவற்றைத் தாக்காத, பதவிக்கு பாதுகாப்பான வீரச் சவடால்களும் நிறைந்திருந்தன. எங்களுக்கு வாக்களித்த – வாக்களிக்காத பல தொழிலாளர்கள் நாங்கள் நேரில் அவர்களது சாப்–க்கு வந்து ஓட்டு கேட்கவில்லை என்று எங்களது குறையை சுட்டிக்காட்டினார்கள்.
இந்தச் சூழலில்தான் தொழிலாளர்கள் அளித்த வாக்குகளை சீர்தூக்கிப் பார்க்கிறோம். பு.ஜ.தொ.மு.வின் கடந்த கால செயல்பாடு, பு.ஜ.தொ.மு. தோழர்களின் போராட்டம், அவர்களது நடைமுறை ஆகியவற்றை உரசிப்பார்த்து, இந்தத் தேர்தலில் ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை நாங்கள் உறுதியாக அம்பலப்படுத்தியதைப் பார்த்து, தொழிலாளர்கள் அளித்த வாக்குகள் என்பதால் அதனை மேலானதாகக் கருதுகிறோம்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் போதும், வாக்களித்துவிட்டு திரும்ப வரும்போதும், தொலைபேசியிலும் நேரிலும் தொழிலாளர்கள் பேசிய வாசகங்கள், தெரிவித்த கருத்துகள், எங்கள் மனதில், உணர்வில் நிழலாடிக்கொண்டுள்ளது.
“பரசு நான் உனக்கு ஒரு ஓட்டுப்போட்டேன். ஏன்னா போராடுற ஒருத்தன் வேணும்.”
“உனக்கு ஓட்டு போடலனா நான் மனுசனில்லப்பா.”
“உனக்காக நான் 10 ஓட்டாவது சேகரிப்பேன்”
“போராடுறவன் இல்லைன்னா இவர்கள யாராலையும் தட்டிக்கேட்க முடியாது.”
இப்படி உற்சாகத்துடன், மனநெகிழ்ச்சியுடன் தொழிலாளர்கள் பேசிய வார்த்தைகள் பாட்டாளி வர்க்க உணர்வின் வெளிப்பாடு! தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் அடையாளம்!
தேர்தல் முடிவு குறித்து:
பொதுவாக, லேலாண்டில் இரு அணிகளுக்கு இடையே நடந்த தேர்தல்களின் பொழுதெல்லாம், ஏதாவது ஒரு அணி பெரும்பான்மை வாக்குகளை (50%விட அதிகமான வாக்குகள்) பெற்றுவிடும். இந்தத் தேர்தலிலோ பெரும்பான்மை வாக்குகளை யாரும் பெறவில்லை. அதிகமான ஓட்டுகளை வாங்கியவர்தான் வெற்றி பெற்றவராகவும் அதற்கடுத்த ஓட்டு வாங்கியவர் எதிரணி என்பதாகவும் அமைந்துள்ளது.
இதன் பொருள் என்ன? இதன் பொருள் என்னவென்றால், முதல் இடத்தை பிடித்தவரை 900 பேர் எதிர்க்கின்றனர். இரண்டாம் இடம் பிடித்தவரை 1100 பேர் எதிர்க்கின்றனர். மூன்றாம் இடம் பிடித்தவரை 1200 பேர் எதிர்க்கின்றனர். அதாவது இந்தத் தேர்தலில் தலைவராக நின்றவர்களுக்கு வாக்களித்தவரைவிட எதிர்ப்பவர்கள்தான் அதிகம்.
அதாவது, தொழிலாளர்கள் அறுதியிட்டு யாரையும் தலைவராகக் கொண்டுவரும் உணர்வில் இல்லை. இதனை சிலர் இடைநிலை என்று கருதலாம். அப்படியல்ல, தொழிலாளர்களின் உணர்வின் தொங்குநிலை. இந்தத் தொங்குநிலைக்குக் காரணம் தற்போது போட்டியிட்ட மூன்று அணிகளிடமும் கொள்கை, நடைமுறையில் தொழிலாளர்கள் எந்த பாரிய வேறுபாட்டையும் பார்க்கவில்லை என்பதே. புதிதாக யாராவது வந்தால் அவருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாமே என்ற உணர்வு, எச்.1 தொழிலாளர்கள் என்ற உணர்வு, வேலை வாங்கித்தந்தவர் என்ற உணர்வு, அணி உணர்வு, பொருளாதார உறவினால் ஏற்பட்ட உணர்வு ஆகியவையே வாக்களித்ததற்கான முதன்மைக் காரணங்கள்.
சுருக்கமாக சொன்னால், தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு தெரியாத தொழிலாளர்கள் தலைமைகளின் மீது காட்டிய அதிருப்தியுணர்வைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஆனால், நாங்களோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தேர்தலை எதிர்கொண்டோம். சரியான தீர்வை முன்வைத்தோம். தனிநபர்துதி, நிர்வாகத்தின் மீதான பிரமை, காசு–தண்ணி போன்ற இன்னபிற போதைகளை தெளியவைக்க முயற்சித்தோம். காசு கொடுக்கவில்லை, தேர்தல்நிதி கேட்டோம். அடக்குமுறைகளைத் துணிவாக அம்பலப்படுத்தினோம். களப்போராளிகளை உருவாக்க வேண்டும் என்ற தேவையை உணர்த்தினோம். வர்க்க ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினோம். எங்கள் அரசியலை, அடையாளத்தை மறைக்காமல், நம்மைச் சூழ்ந்துவரும் மறுகாலனியாக்க அபாயத்தை உணர்த்தினோம். தொழிலாளர்கள் வாக்களித்துள்ளார்கள்!
மொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது இதுதான். எந்தத் தலைவர்களாலும் லேலாண்டில் நடக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அடக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. களப்போராளிகளை உருவாக்குவதே உடனடிப் பணியாக உள்ளது. அந்தவகையில் லேலாண்டு தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கவும், லேலாண்டின் அடக்குமுறைகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர 1,000 தொழிலாளர்களை புதிதாக பணியமர்த்தவும், ஜனநாயகமான உற்பத்தி நிலைமை; பாதுகாப்பான பணிச்சூழல்; பணிப் பாதுகாப்பு; நியாயமான ஊதியம்–போனசு ஆகியவற்றை வென்றெடுக்கவும் உறுதியுடன் போராடுவோம்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளியிட்ட பிரசுரங்கள்
17-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
18-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம் 4
19-09-2014 அன்று வேட்பாளர் அட்டை
[பிரசுரத்தை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.
கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பாதையில் அணி திரள்வோம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,
அன்று இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது.
எனினும், கைது, சிறையெல்லாம் துச்சமாக மதித்து இம்மண்ணிலிருந்து அந்நிய ஆதிக்கத்தைத் துடைத்தெறிய தீரமிக்க போராட்டத்தை நடத்திய போராளிகள் ஏராளம். இன்று பெயரளவுக்கேனும் சுதந்திரம் இருக்கிறதென்றால் அது அந்த தியாகத்தின் பலன்தான். சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது நம் முன்னோர்களின் ரத்தத்தையும், கண்ணீரையும், சுவாசத்தையும் கலந்து தியாகத்தால் எழுதப்பட்ட சரித்திரம். இப்படிப்பட்ட சரித்திரத்தைப் படைத்தவர்களின் முன்னோடிதான் தோழர் பகத்சிங்
செப்-28, தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள் !
ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிவருடியாக இருந்த காந்தி மற்றும் காங்கிரஸின் துரோகத்தை தோலுரித்தார் பகத்சிங்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை இம்மண்ணிலிருந்து விரட்டி சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் எனும் உன்னத லட்சியத்திற்காக போராடியவர், பகத்சிங்.
இந்தத் தீரமிகு போராட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப தன் மரணத்தையே வேலைத் திட்டமாக முன்வைத்தார், பகத்சிங்
“புரட்சி ஓங்குக!” என்ற பகத்சிங்கின் முழக்கம் நாடு முழுக்க வியாபித்தது. தனது 23-வது வயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த பகத்சிங்கின் மரணம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தோற்றுவித்தது.
அன்று ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளையடித்தது என்றால் இன்றோ பல பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாகி வருகிறது நமது நாடு. காடுகளும், மலைகளும் இன்னபிற மதிப்புமிக்க இயற்கை வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வேட்டைக்காக இரக்கமின்றி சூறையாடப்படுகின்றன. அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் சுரண்டப்படுகின்றனர். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் கப்பல்கள் நமது கடல் வளத்தை அபகரிக்கின்றன. இதனால் மீன் வளமும் அழிந்து மீனவர்களின் வாழ்க்கையும் அழிந்து வருகிறது.
பணம் இல்லாதவனுக்குப் படிப்பு இல்லை. படித்தவனுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தவனுக்கு அது நிரந்தரமில்லை என்று பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வு நிர்க்கதியாகிவிட்டது. லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் அதிகார வர்க்கமே புழுத்து நாறுகிறது. கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றும், நீரும், உணவும் நஞ்சாகி நோய்கள் பெருகுகின்றன. வாழவழியின்றி தற்கொலைச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? இந்த அரசு என்பது மக்கள் நல அரசு அல்ல.
மோடி ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும், ஆறாக ஓடும் என மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் நடப்பதென்ன? பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கான, பார்ப்பன கும்பலுக்கான ஆட்சிதானே நடக்கிறது? சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 250-க்கும் மேற்பட்ட மத மோதல்களை நடத்தியுள்ளது சங்கப் பரிவாரக் கும்பல்.
தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கு மானிய வெட்டு, தடை செய்யப்பட வேண்டிய மரபணு மாற்று பயிர்கள் பயிரிட அனுமதி, கல்விக்கான மானியம் குறைப்பு, வரி அதிகரிப்பு என பாசிச மோடியின் ஆட்சியில் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.
அன்று நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் எட்டப்பன், தொண்டைமான், ஆற்காடு நவாப் என்றால் இன்று காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய, சிறிய ஓட்டுக்கட்சிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்).
எனவே, மாறி மாறி ஓட்டுப்போட்டு பலனில்லை, பன்னாட்டு கம்பெனிகளை இம்மண்ணிலிருந்து விரட்டி உழைக்கும் மக்களின் அரசமைய பகத்சிங் மேற்கொண்ட புரட்சி பாதை இன்று அவசியமாகியுள்ளது.
பகத்சிங்க்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் !
“இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை”
– தோழர்.பகத் சிங்
அரங்குக் கூட்டம்
நாள் : 26.09.2014
இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி திரையரங்கம் அருகில், கோவை)
நேரம் : மாலை 4.00 மணி
நிகழ்ச்சி நிரல
தலைமை
தோழர் உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
வரவேற்புரை
தோழர் திலீபன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சிறப்புரை
தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி
புமாஇமு குழுவினர்
நன்றியுரை
தோழர் கிரிஷ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை
8220840468
rsyfkovai@gmail.com
வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு கிராமம் சுமார் 400 குடும்பங்களைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் மீன் பிடித்தொழிலையும் உப்பளத் தொழிலையுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அன்றாடம் உழைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் இருக்கும் இம்மக்களின் ஒற்றுமையை குலைக்க அரசும் அதிகார வர்க்கமும் மற்றப் பகுதிகளில் செயல்படுத்தும் தந்திரங்களைப் போல இங்கு உருவாக்கப்பட்டதுதான் வீர சைவப் பேரவை (பண்டாரம்) என்கிற சாதிச் சங்கம்.

இப்பகுதியில் வசித்துவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆதரவாளர் குமார் என்பவரின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இச்சங்கத்தின் செயல்பாடு குறித்து அவர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். கட்டப்பஞ்சாயத்தாரின் அழுத்தம் காரணமாக காவல் நிலையத்தில் புகார் ஏற்கப்படாமல் போக உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை வழக்கின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குமாரின் மனைவி லதாவை மானபங்கப்படுத்தி தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் மூலம் அளித்த புகாரின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் கொடுத்த காரணத்தால் கட்டப்பஞ்சாயத்தினர், பாதிக்கப்பட்ட குமாருக்கு அபராதம் விதிக்கின்றனர்.
இதனை ஏற்காத குமார் மீது சாதி சங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவரது தந்தையும் சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட குமார் ரத்தம் வழிந்து கிடந்ததை பார்த்து அப்பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினர் உதவியோடு வேதாரண்யம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து புகார் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் தாக்குதல் தொடுத்த நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கட்டப்பஞ்சாயத்து நபர்களையும் தாக்கியவர்களையும் கைது செய்யக்கோரியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்தும் வி.வி.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. மேலும் முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் என புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
வி.வி.மு வின் இந்நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்தினருக்கு ஆத்திரமூட்டியதால் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 6 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். திருமணம், இறப்புக்கு ஒதுக்கி வைத்தல், குடிநீர் எடுக்க விடாமல் தடுப்பது, கடைகளில் சாமான்கள் கொடுக்கக்கூடாது என மிரட்டுவது என அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
சமாதானக் கூட்டத்தில் நாங்கள் இனி அவ்வாறு செய்யமாட்டோம் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்ற கட்டப்பஞ்சாயத்தினர் 6 குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டுகின்றனர். இதனையொட்டி காவல் துறையினரிடம் புகார் செய்யப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த கட்டப்பஞ்சாயத்தினர் கும்பலாகச் சேர்ந்து குமார் என்பவரை மீண்டும் கடுமையாக தாக்குகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு குமாருக்கு ஆதரவானவர்களையும் தாக்க முற்படுவதோடு குமாரை மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாமல் தடுக்கின்றர்.
இதனைக் கேள்விபட்ட வி.வி.மு. பொறுப்பாளர் தோழர் தனியரசு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே காவலர்கள் சென்று தாக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். அன்று இரவு குமாருக்கு ஆதரவானவர்களை 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கற்களாலும் ஆயுதங்களாலும் தாக்க முற்படுகின்றனர். இதனை அறிந்த வி.வி.மு அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதக் காரணத்தால் இரவு 12 மணியளவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று முறையிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த துணைக் கண்காணிப்பாளர் புகார் கொடுக்கச் சென்ற அனைவர் மீதும் 307 பிரிவில் வழக்கு போடுவேன் என மிரட்டுகின்றார்.
அதன்பின் கோடியக்காடு பகுதிக்கு இரண்டு காவலர்களை ரோந்து பணிக்காக அனுப்புகின்றார். போலிசைக் கண்டதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிவிடுகின்றனர். காலையில் போலிசு சென்றதும் பால்சாமி, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகியோரின் வீடுகளையும் அவர்களையும் கல் வீசியும் ஆயுதங்களாலும் வீடு புகுந்து தாக்குகின்றனர், ரவுடிக் கும்பல். இதனை அறிந்த வி.வி.மு. தோழர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். போலிசு அங்கு சென்ற பிறகு தாக்குதல் தொடுத்தவர்கள் ஓடிவிடவே தாக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தோழர்களுடன் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

அதன்பிறகு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ என் வி. காமராஜ் என்பவர் வி.வி.மு தோழர்கள் தனியரசு, வெங்கடேசன் ஆகிய இருவரையும் அவரது ஆட்களை அனுப்பி வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு சாதி சங்க கட்டப்பஞ்சாயத்து கும்பல் மற்றும் அவரது அடியாட்கள் முன்னிலையில் தோழர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி,
“எல்லா பிரச்சனைகளிலும். வி.வி.மு, ம.க.இ.க எதுக்குடா வரிங்க? நாங்க ஆளுங்கட்சி இருக்கிறோம்டா, நாங்க இருக்கிறப்போ நீங்க எதுக்கடா வரிங்க? எல்லா ஊரிலும் அ.தி.மு.க ஆளும் கட்சி எவ்வளவு ரவுடித்தனம் செய்றாங்க பாத்தியா? இதுக்கப்புறம் எந்த பிரச்சினையிலும் தலையிடக் கூடாது. அப்படி மீறி தலையிட்டா உங்கல ரோட்ல ஓடவுட்டு வெட்டுவேன், கடையெல்லாம் அடிச்சு நொறுக்கிடுவேன். பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளுவேன்”
என மிரட்டி அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக வி.வி.மு சார்பில் தோழர் தனியரசு முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து வி.வி.மு மற்றும் பு.மா.இ.மு. சார்பில் சுவரொட்டி மாவட்டம் முழுதும் ஒட்டப்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த காமட் பர்னிச்சர் கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி ரோட்டில் வீசியெறிந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூபாய் 30,000 ரொக்கத்தையும் திருடிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சூறையாடப்பட்ட கடையை படம் எடுத்த ஊடகங்களை மிரட்டி படத்தை அழித்தனர், காமராஜின் ஆட்கள். இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி வெளியிடவில்லை.
தனது கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனத்திற்கு எதிராக இருந்த நபர்களை ஒடுக்க மீனவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்கிய எம்.எல்.ஏ என்.வி, காமராஜ் அதற்கு எதிராக யார் வாயை திறந்தாலும் அவர்களை நிம்மதியாக விடுவதில்லை. விவிமு தோழர்கள் மீது கொலை மிரட்டல் விடுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.
- வேதை நகரப்பகுதியில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக விவிமு-பு.மா.இ.மு. அமைப்புகள் நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் மற்றும் முற்றுகை செய்த போது அக்கடையின் சாக்னா கடையை இவரது எடுபிடிக்கு மாற்றிக்கொடுக்க இருந்ததால் அந்த போராட்டத்தை கைவிடுமாறு தோழர்களிடம் பேசினார். தோழர்களிடம் அது எடுபடாமல், சாராயக்கடை அகற்றப்பட்டது.
- நகராட்சியில் துப்புரவு பணிக்கு ஆதிக்க சாதியினரை ( தேவர், முத்தரையர்) தேர்ந்தெடுத்து அவர்களை அந்த வேலையில் ஈடுபடுத்தாமல் அலுவலக பணியில் ஈடுபடுத்தியது எம்.எல்.ஏ தலைமையில்தான் நடந்தது. இதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சார்பாக விவிமு துணையோடு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் மனு போடப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ் தோழர்களை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பார்த்தார். தோழர்கள் அடிபணியவில்லை.
- ஏற்கனவே பகுதியில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் உப்பள தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவிமு தலையிட்டு சம்பள உயர்வு பெற்றுத் தந்தது காமராஜூக்கு எரிச்சல் ஊட்டியிருந்தது.
- இதே பகுதியில் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழாவில் ஆபாச நடனம் ஆட விடப்பட்டது தோழர்களால் தட்டிக்கேட்கப்பட்டது. அதனால் ஆபாச நடனம் நிறுத்தப்பட்டது. அப்போது விழாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காமராஜூக்கு கோபம் தலைக்கு ஏறியது. அன்றைக்கு ஏதும் பேச முடியவில்லை.
- பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் சரியான முறையில் மருத்துவர் வருவதில்லை. இது தொடர்பாக தோழர் தனியரசு ஒரு நாள் மருத்துவ மனையில் போராடி, மருத்துவமனைக்கு வட்டாட்சியர் வருகிறார், அவரிடம் முறையிடுகிறார், பிரச்சினை பெரிதாகிறது. அன்று இரவு மருத்துவராக இருந்தவர் அதிமுக பிரமுகரின் மகள் என்பதால் இச்சம்பவம் எம்.எல்.ஏ.வுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இறுதியாகத்தான் கோடியக்காடு மீனவர் பிரச்சனையில் விவிமு தோழர்களின் தலையீடு அவருக்கு இன்னும் எரிச்சல் ஊட்டியிருக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக மக்களுக்கான கோரிக்கைகளூக்காக விவிமு தோழர்கள் போராடி வந்துள்ளார்கள். இத்தகைய போராட்டங்கள் எப்போதும் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுகிற, சுரண்டுகிற, கட்டபஞ்சாயத்து செய்கிற மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால்தான் விவிமு தோழர்களுக்கு எதிராக வேதை அதிமுக எம்.எல்.ஏ என்.வி, காமராஜின் கொலை மிரட்டல், கடை சூறையாடல் நடத்தப்பட்டுள்ளது.
ரவுடி எம் எல் ஏ காமராஜ் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாரதிய ஜனதாவில் இருந்தார். சாதாரண உப்பளத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் இந்த இரண்டு கட்சிகளில் இருந்து, தற்போது எம்.எல்.ஏவாக மாறி குறுக்கு வழியில் சம்பாதித்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக உருவெடுத்துள்ளார். சமீபத்தித்தில் இவரது மகனது திருமணம் சில கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்டது. ஆளும் கட்சி திமிரிலும், அதிகார வர்க்க அரவணைப்பிலும் இந்த காமராஜும், கட்டப்பஞ்சாயத்தினரும் செய்யும் அராஜகங்களை எதிர்த்து விவிமு இறுதி வரை போராடும்.
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள் : 24.09.2014
க. காளியப்பன்,
மாநில இணைப் பொதுச்செயலாளர்,
1, அண்ணாநகர்,
சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 613 001,
தொலைபேசி : 04362-272765, 9443188285
பத்திரிகை செய்தி
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழரின் கடையை அடித்து நொறுக்கி, பொருட்களைக் கொள்ளையடித்த வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜையும், அவரது அடியாட்களையும் கைது செய்!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் தனியரசு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரது சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை அடித்து நொறுக்கி, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000 பணத்தையும் வேதாரண்யம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜூம், அவரது அடியாட்களும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர் என்று கருதப்படுகின்றன ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய அராஜக, ரௌடித்தனத்தில் இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது, கடும் கண்டனத்திற்குரியது.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறது. குறிப்பாக, சாதிப் பஞ்சாயத்து, உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரும் தொல்லையாக இருந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதில் போராடி வெற்றி கண்டது. இத்தகைய எமது செயல்பாடுகளால் தமது செல்வாக்கும், அதிகாரமும் பாதிக்கப்படுவதாகக் கருதிய சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் எமது தோழர் தனியரசுவைக் கடத்திக் கொண்டு போய் நாகூசும் சொற்களால் அவமானப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் அந்த அராஜகத்தைக் கண்டித்து 19.09.2014 அன்று வி.வி.மு அமைப்பினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற காமராஜ் 24.09.2014 அதிகாலை சுமார் 3 மணிக்கு தனது அடியாட்களை அனுப்பி எமது தோழர் தனியரசுவின் கடையை உடைத்து நொறுக்கி அதிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000/- பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். தகவலறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.
எனவே, காவல்துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அவரது அடியாட்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணம், பொருட்களை மீட்டுத் தருவதுடன், தோழர் தனியரசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் 30-ம் தேதி நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 1-ம் தேதி வேதாரண்யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள
க. காளியப்பன்
மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
தமிழ்நாட்டில் ‘அம்மா’வின் ஆணையில்லாமல் ஒரு அணுவும் அசைய முடியாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ‘அம்மா’வுக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
இன்றைய நாளிதழ்களில் (24.09.2014) முழுப்பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது இந்த ஆணையம்.

வீடுகளுக்கு உள்ளிட்ட குறைந்த அழுத்த பயன்பாட்டுக்கு 15% அதிகரிப்பு, தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள், நீர்இறைப்புக்கு பயன்படுத்தப்படும் உயர்அழுத்த பயன்பாட்டுக்கு 30% அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ 2.60-ரூ 5.75 ஆக உள்ள வீடுகளுக்கான மின்கட்டணம் இனி ரூ 3 முதல் ரூ 6.60 என அதிகரிக்கும். இந்த மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கு முடிந்த பிறகு வரும் நவம்பர் மாதம் முதல் இதை அமலுக்கு கொண்டு வருகிறார்கள்.
தான் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் தனது அனுமதி இல்லாமல், தான் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்யாமல் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குண்டர் சட்டத்தை ‘அம்மா’ பாய்ச்சுவார் (தேவைப்பட்டால் அதற்கேற்றபடி சட்டத்தை திருத்திய பிறகு பாய்ச்சுவார்); அல்லது குறைந்தபட்சம் ஒரு அவதூறு வழக்காவது போட்டு பல்வேறு ஊர்களுக்கு இழுத்தடிப்பார் என்று யாராவது நினைத்தால், ஆணையத்தின் மீது கைவைக்க அம்மாவாலேயே, ஏன் ‘ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய’ திறன் படைத்த (ஆனால் இன்னும் கொண்டு வரவில்லை) மோடியாலேயே கூட முடியாத காரியம். ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது. அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளின் நேரடி பிரதிநிதிகளால் ஆளப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களே இன்றைக்கு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வலிமையான அமைப்புகள்.
2003-ல் பா.ஜ.க. ஆட்சியில் இயற்றப்பட்ட மின்சார சட்டத்தின்படி மின் உற்பத்தி, மின் அனுப்புகை, மின் விநியோகம் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்யக்கூடாது என்று வாரியங்கள் மூன்றாக உடைக்கப்பட்டன.

மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை, தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்திரவிடப்பட்டது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.
மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பு மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம்; அதை மின்சார ஒழுங்குமுறை மேல் முறையீட்டு ஆணையமும் உறுதி செய்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் (மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) மின்கட்டண உயர்வு கேட்டு விண்ணப்பிக்காத போதே, 2014-15 நிதி ஆண்டுக்கான அதன் வருவாய்த் தேவையை கணக்கிட்டு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஒழுங்குமுறை ஆணையம். அப்படி மின்வாரியத்தின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆணையத்துக்கு என்ன அக்கறை?
தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம்.
இந்த மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையை தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.
அதில், தனியார் முதலாளிகளின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத தனது கையாலாகாத்தனத்தை ஒத்துக் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு ரூ 4,370 கோடியாக உயர்ந்திருப்பதாலும், மின் வாரியத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்திருப்பதாலும் ஆணையம் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது என்று மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார் ஜெயலலிதா.
மேலும், இந்த 30% கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்கா வண்ணம் தனது அரசு பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் மக்கள் தலையில் கட்டப்படும். ஏற்கனவே பெரும்பான்மை நேரம் மின்வெட்டில் அவதிப்படும் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு குண்டு பல்பு எரிவதற்கு கட்டண உயர்வில்லை என்று அறிவிப்பது யாரை ஏமாற்ற?
ஊழியரின் ஊதியம், நிலக்கரி விலை என்று பேசும் ஜெயலலிதா மின்வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55%-ஐ விழுங்கும் மின்சாரம் வாங்கும் செலவு பற்றி பேசவில்லை.
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04-ம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இது 2008-09-ம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09-ம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
2009-10-ல் தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் 19 விழுக்காட்டை வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனம், பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின்நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ 10.41, ரூ 8.55, ரூ 10.18, ரூ 10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள், அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 காசுகள் என்பதையும் இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்குமேல் ரூ 657 கோடி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கப்பமாக ஆண்டு தோறும் செலுத்தப்படுகிறது. ஜி.எம்.ஆருக்கு ரூ 147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ 108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 110 கோடி ரூபாய் 2013-14-ம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்தத் திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.
1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.
1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் இவைதான் நட்டத்துக்கு காரணம் என்று அவதூறு சொல்கின்றனர் மேட்டுக்குடி ‘அறிவுஜீவி’கள். ஆனால், இந்த திட்டங்களுக்கான மானியத்தை தமிழக அரசு வழங்கிய பிறகும் ஏற்படும் மின்வாரியத்தின் பற்றாக்குறைக்கு தனியார் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பணமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.
இதற்கு உதாரணமாக 2005-06-ல் தமிழக அரசு வாங்கிய மின்சார விலை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். அந்த ஆண்டு அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 17.78. சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ 8.74; மதுரை பவர் ரூ 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 6.58. யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.
இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.
2011-ம் ஆண்டு ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ 75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 1 முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால் சென்னையைத் தவிர்த்து சிறுநகர மற்றும் கிராமப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இப்போது, கூடுதலாக உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில்துறை மற்றும் வணிகத்துறையினருக்கு செவ்வாய் கிழமையிலிருந்து இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20% மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரப்பட்டுள்ள மின்திறனில் 10% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மின்சாரம், தொலைபேசி, பெட்ரோல்/டீசல்/சமையல்வாயு கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணையங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற சேவைகள் தனியாரின் லாபக் கொள்ளைக்கு விடப்பட்டுள்ள நிலையில் காசு இருப்பவர்களுக்குத்தான் வெளிச்சம், மற்றவர்கள் இருட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?
– அப்துல்
மேலும் படிக்க
சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்
இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 2
சுக்ரீவனும், அனுமானும் இராமனுக்காக திரட்டிய (வானர) சேனையோடு இலங்கை மீது இராமன் படையெடுக்கிறான். அப்போதும் வாலி-சுக்ரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக் கேவலமான வழிமுறையைத்தான் இராமன் கையாளுகிறான். பேரரசன் இராவணனையும் அவன் மகனையும் கொன்றுவிட்டு இராவணனுடைய தம்பி விபீஷணனை அரியணை ஏற்றுவதாய்ச் சொல்லி விபீஷ்ணனின் உதவியைப் பெறுகிறான். அதன்படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகின்றான். போர் ஓய்ந்தபின் இராமன் செய்கிற முதற் காரியம் பேரரசன் இராவணனின் உடலை நல்லடக்கம் செய்வது தான். அதன் பின்னர் இராமனின் நோக்கமெல்லாம் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே இருந்தது. ஆட்சி அரங்கேறிய பின், தானும் இலட்சுமணன் சுக்ரீவன் ஆகியோரும் சுக மகிழ்வோடு இருப்பதாகவும் இராவணன் கொல்லப்பட்ட சேதியையும் அனுமான் மூலம் சீதைக்கு அனுப்புகிறான்.
இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டுபோய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.
சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”
இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ன எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-“நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.

ஆயினும் இராமனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.
அயோத்திக்குத் திரும்பிய மன்னன் இராமன் தன் மனைவி சீதையிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான்? இராமன் இப்போது அயோத்தியை ஆளும் அரசன். அவன் மனைவி சீதையோ பேரரசி. இராமன் அரசாளுங் காலத்திலேயே வெகு விரைவில் சீதை அரசி என்ற நிலை இல்லாமற் போய் விட்டது. இராமனின் அவப்பெயருக்கு இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பு வைத்தது போல உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்திலேயே இந்நிகழ்ச்சி காணக் கிடக்கிறது.
அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது. இவற்றினின்று விடுபட இராமன் மிகத் துரிதமான குறுக்கு வழியைக் கையாளுகிறான்.
அதாவது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும். சீதையை நாடு கடத்திக் காட்டிற்கு அனுப்புவதெனும் இராமனின் முடிவு திடீரென மேற்கொள்ளப்பட்டதல்ல என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. இராமனுக்குள் இப்படியோரு முடிவு உதயமானது, உருவெடுத்தது, நிறைவேறியதைப் பற்றியெல்லாம் சற்று தெளிவாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
சீதையைப் பற்றி நாட்டில் உலவிய வதந்திகளைத் தன் அரசவைக் கோமாளியான பத்ரன் மூலம் கேட்டறிந்த இராமன் தன் சகோதரர்களை அழைத்து, தனது உணர்வுகளைப் புலப்படுத்துகிறான். சீதையின் புனிதமான கற்பும், தூய்மையும் இலங்கையிலேயே நிரூபிக்கப்பட்டது. அதற்குக் கடவுள்களே சாட்சியாயிருந்தார்கள். தானும் அதனை முற்றிலும் நம்புவதாக இராமன் தன் சகோதரர்களுக்கு சொல்கிறான். “எனினும் பொதுமக்களோ சீதை மீது வதந்திகளைக் கிளப்புவதாகவும் என்னைப் பழிப்பதாகவும், எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் அறிகிறேன். இத்தகைய இழிவினை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. மானம், கௌரவம் என்பது பெரும் சொத்து. கடவுள்கள் மற்றும் பெருமான்கள் எல்லாம் அத்தகைய மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு படுகின்றனர். இத்தகைய இழிவையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள என்னால் முடியவில்லை. அப்படிப்பட்ட இழிசொல் மற்றும் அவமானத்திலிருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள உங்களைத் துறந்திடவும் நான் தயாராய் இருக்கிறேன். சீதையை கைவிட்டு விட மாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்றான் இராமன்.
நாட்டு மக்களின் வதந்திகளிலிருந்து தப்பிட சீதையை காட்டிற்கு அனுப்பி விடுவதொன்றே சுலபமான வழியென இராமன் திடமாக முடிவு செய்து விட்டான் என்பதையே இவ்வாக்குமூலம் காட்டுகிறது. இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. யாரோ ஒரு சிலர் கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு இணங்க வேண்டியவனானான்.
இராமனின் இச்செயலைச் சுட்டிக்காட்டி இராமன் ஒரு ஜனநாயகப் பேரரசன் எனச் சொல்லித் திரியும் இந்துக்கள் இல்லாமலில்லை. அதே வேளையில் இராமன் கோழைத்தனமாய் விளங்கிய பலவீனமான மன்னன் எனச் சொல்பவர்களும் இல்லாமலில்லை.
எது எப்படி இருப்பினும் தன் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொள்ள சீதையை காட்டிற்கு அனுப்பிடுவது எனத் தான் செய்த கொடுமையான முடிவினை தன் சகோதரர்களுக்கு சொல்லிய இராமன் சீதைக்கு சொல்லவில்லை. அந்த முடிவினால் பாதிப்புக்கு ஆளாகப் போவது சீதை மட்டுந்தான். எனவே அந்த முடிவினை கட்டாயம் தெரிந்து கொள்ளும் உரிமைக்குரியவள் சீதையாவாள். ஆனால் சீதையோ முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறாள். இத்திட்டம் சீதைக்குத் தெரியக் கூடாத மிகப்பெரும் இரகசியமெனக் கருதி அத்திட்டத்தை செயற்படுத்த சரியானதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இராமன் காத்திருந்தான். சீதையின் கொடிய விதி இராமனின் எதிர்பார்ப்புக்கு கைகொடுத்தது.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படுவார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு என்பது இராமனுக்கும் தெரியும். சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன். கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை. அதைக் கேட்டு இராமனுக்கு அளவிலா மகிழ்ச்சி. ‘’அன்பே, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளையே நீ அங்கு போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான் இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதுகிறாள். ஆனால் இராமன் செய்ததென்ன?

சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைக்கிறான். அதற்கொப்ப தம் சகோதரர்களை இரகசியமாய் அழைத்துச் சந்திக்கிறான். சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறான். அதற்கு இதுவே தக்க தருணம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறான். இராமனின் சகோதரர்கள் எவரும் சீதைக்காகப் பரிந்து பேசக் கூடாது என்கிறான். இராமனின் முடிவுக்கு எதிராக சீதைக்காகப் பரிந்து பேசினால் அவர்களை எதிரிகளாய்க் கருதுவேன் என்கிறான்.
அடுத்த நாள் காலையில் சீதையைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய் கங்கைக் கரையோரக் காட்டிலுள்ள ஓர் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வா என்று இராமன் இலட்சுமணனுக்கு ஆணையிடுகிறான். சீதையைப் பற்றி இராமன் செய்துள்ள முடிவை சீதைக்கு தெரிவிக்க இலட்சுமணனுக்கு போதிய துணிவுமில்லை, வழியும் தெரியவில்லை. இச்சங்கடத்தைப் புரிந்துகொண்ட இராமன் கங்கைக் கரையோரக் காடுகளில் தங்கி சில காலத்தைக் கழிக்க சீதையே விரும்பிச் சொன்னாள் எனச் சொல்லி இலட்சுமணனின் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றான்.
இந்த உரையாடல்கள் எல்லாம் இரவிலேயே நடந்து முடிந்தன. மறுநாள் விடியற் காலையில் இலட்சுமணன் சுமந்தனை அழைத்து தேரில் குதிரைகளைப் பூட்டச் சொன்னான். குதிரைகளைப் பூட்டியுள்ள தேர் தயாராய் உள்ளதென்று சுமந்தன் சொன்னான். பிறகு இலட்சுமணன் அரண்மனைக்குப் போகிறான். சீதையை சந்திக்கிறான். வனத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கிச் சில நாள் வாழ்ந்து திரும்பிட விரும்பியதாய் அவள் வெளிப்படுத்திய ஆசையை நினைவூட்டுகிறான்; அதனை நிறைவேற்ற இராமன் அளித்த உறுதிமொழியை சொல்லுகிறான். அதன்படி அப்பணியைத் தான் செய்ய இராமன் பணித்திருப்பதையும் சீதைக்கு சொல்லுகிறான். பூட்டிய குதிரைகளுடன் காத்திருக்கும் தேரைக் காட்டி, ‘புறப்படுங்கள் போகலாம்’ என்கிறான். சீதையின் உள்ளம் விம்மிப் புடைக்கிறது. தாவி ஏறித் தேரில் அமர்கிறாள். அவள் உள்ளமெல்லாம் இராமனுக்கு நன்றி சொல்லும் நல்லுணர்வால் நிரம்பியது. சுமந்தன் தேரோட்ட இலட்சுமணன் காவலனாய்த் தொடர அவர்கள் குறிப்பிட்ட வனத்திற்குப் போகிறார்கள். கடைசியில் கங்கைக் கரையை அடைந்தார்கள். மீனவர்களின் உதவியோடு படகில் ஏறி அக்கரையை அடைகிறார்கள். இலட்சுமணன் சீதையின் கால்களில் வீழ்கிறான். அவன் தன் கண்களில் நீர் மல்க ‘மாசற்ற பேரரசியே, என்னை மன்னியுங்கள். உங்களை அரண்மனையில் வைத்திருப்பது அவமானத்திற்குரியதென்று மக்கள் கிளப்பிய வதந்திகளிலிருந்து தப்பிட நாடாளும் இராமன் எனக்கிட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். உம்மைக் காட்டிலே கைவிட்டுத் திரும்பும் என்னை மன்னிக்க வேண்டும்’ என்றான் இலட்சுமணன்.
காட்டில் எப்படியாவது செத்தொழியட்டும் என்று கைவிடப்பட்ட சீதை, அடைக்கலம் தேடி அருகிலிருந்த வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்தாள். வால்மீகி தன் ஆசிரமத்தில் சீதைக்கு இடமளித்துப் பாதுகாப்பும் கொடுத்தார். கொஞ்ச காலத்தில் சீதை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். குசா, லவா என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டாள். தாயும் இரு குழந்தைகளும் வால்மீகியுடன் வாழ்ந்து வந்தனர். வால்மீகி அச்சிறுவர்களை வளர்த்து தாம் இயற்றிய இராமாயணத்தை அவர்கள் பாடக் கற்றுக் கொடுத்தார். காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச்சிறுவர்கள் 12 ஆண்டுகள் வளர்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்னவானாள்-அவள் செத்தாளா-பிழைத்தாளா-என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில் இராமன் சீதையை சந்திக்கிறான். இராமன் ஒரு யாகம் வளர்க்க நினைக்கிறான். அந்த யாகத்தில் அனைத்து ரிஷிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறான். வால்மீகியின் ஆசிரமம் அயோத்திக்கு மிக அருகிலிருந்தும் கூட வேண்டுமென்றே இராமன் வால்மீகியை அந்த யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால் வால்மீகியோ, குசா, லவா ஆகிய சீதையின் இரு பிள்ளைகளைத் தன் சீடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த யாகத்தில் கலந்து கொள்ள வந்தார்.
யாகம் நடந்து கொண்டிருந்தபோது குழுமியிருந்த பேரவை முன் அவ்விரு சிறுவர்களும் இராமாயணப் பாடல்களைப் பாடினர். செவிமடுத்த இராமன் நெகிழ்ந்து போனான். இக்குழந்தைகள் யார் எனக் கேட்டான். அவர்கள் சீதையின் பிள்ளைகள் என்றார்கள். அப்போதுதான் சீதை அவன் நினைவுக்கு வருகிறாள். அந்த நேரத்திலும் அவன் செய்ததென்ன? சீதையை அழைத்து வாருங்கள் என்று அவன் ஆள் அனுப்பவில்லை. பெற்றோர்கள் செய்த பாவத்தை அறியாத அந்த அப்பாவிக் குழந்தைகளை அழைத்து வால்மீகிக்கு சொல்லச் சொன்னான்.
‘’சீதை களங்கமற்றவளாகவும் கற்புமுள்ளவளாகவுமிருந்தால் யாகத்தில் குழுமியுள்ள இச்சபையோர் முன் வந்து தன் தூய்மையை நிரூபிக்கட்டும். அதன் வாயிலாக என் மீதும் அவள் மீதும் படிந்துள்ள விஷம பேச்சுக்கள் மறைந்து போகும்’’-என விதிப்பயன் விளைவித்த கொடுமைக்கு ஆளான அக்குழந்தைகள் மூலம் சொல்லியனுப்புகிறான்.
இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள். சீதையை காட்டிற்கு அனுப்புமுன், மீண்டும் சீதை அத்தகையதொரு சோதனையை மேற்கொள்ள வேண்டுமென்று இராமன் சொல்லி இருக்கலாம். சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினால், அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் சீதையை மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை. இருப்பினும் வால்மீகி சீதையை யாக சபைக்கு அழைத்து வருகிறார். இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் இச்சபை முன் அவள் தன் தூய்மையை சத்தியம் செய்து நிரூபிப்பாள். இதோ உன்னுடைய இரட்டைப் புதல்வர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்களுக்கு உணவளித்து, என் குடிலை உறைவிடமாய்த் தந்து நான் பராமரித்து வளர்த்து வந்தேன்’’ என்றான். இதைக் கேட்ட இராமன் சொன்னான்: ‘’சீதை களங்கமற்றவள், கற்புள்ளவள் என்பதை நான் நன்கறிவேன். இவர்கள் என் பிள்ளைகள் என்பதும் எனக்குத் தெரியும். அவளுடைய தூய்மைக்கு ஆதாரமாக முன்பொருமுறை இலங்கையில் அவள் கடும் சோதனையை மேற்கொண்டாள். அதன் பின்னரே நான் அவளை மீண்டும் மனைவியாய் ஏற்று கூட்டி வந்தேன். ஆயினும் மக்கள் இன்னும் அவ்வித சந்தேகம் கொண்டுள்ளனர். எனவே சீதை மீண்டுமொரு முறை இங்கு கூடியுள்ள ரிஷிகள் மற்றும் பொது மக்கள் முன்னால், அவர்கள் பார்க்கும்படி அத்தகையதோர் சோதனையை மேற்கொள்ளட்டும்’’ என்றான்.
நீர் மல்கிய கண்கள் நிலம் நோக்கிட இரு கரம் கூப்பிய நிலையில் சீதை சொன்னாள்: ‘’இராமனைத் தவிர வேறொரு ஆடவனை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை; அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய், நான் புதையுண்டு போகிறேன். என் சொல்லிலும் செயலிலும் நினைவிலும் கனவிலும் எப்போதும் நான் இராமனையே நேசிக்கிறேன்-அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய். நான் புதையுண்டு போகிறேன்’’ என்றாள். சீதை வார்த்தைகளை உதிர்க்கும்போதே பூமி பிளந்தது; சீதை உட்புகுந்தாள். தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்ந்து அவள் மறைந்து போனாள். சீதை மீது வானவர்கள் பூமாரி பொழிந்தார்கள். பார்த்திருந்த மக்களோ மெய்மறந்து நின்றார்கள்.
அதாவது காட்டுமிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது…
(தொடரும்)
அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பாகம் 2
முந்தைய பகுதி : நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
இந்திய உயிரைக் குடிக்கும் அமெரிக்க கோக்
செய்தி : கோக் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் நர்மதா ஆற்று நீர்
போராடும் மக்களுக்கு பரிசு போலீஸ் குண்டாந்தடி
பூமிப் பந்தையே விழுங்கிச் செரிக்கும் அமெரிக்க கோக்
கடைசிச் சொட்டு நீரையும் உறிஞ்சி குடிக்க நீளும் கொலைக்கரங்கள்
உலகையே கொத்திக் குதறும் அமெரிக்க ஏகாதிபத்திய மூளை
நமது நீரை உறிஞ்சி காய்க்கும் கோக், பெப்சி, கின்லே, அக்வாஃபினா
அமெரிக்க கோக்கே வெளியேறு
படங்கள் : ஓவியர் முகிலன்
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1
முன்னுரை
தனது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.
இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.
இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.
1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.
பிப்ரவரி’ 2002
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்
1. பொது சிவில் சட்டம் : மாயையும் உண்மையும்
பொது சிவில் சட்டம் என்று வழங்கப்படும் ‘ஒரு சீரான உரிமையியல் சட்டம்’ (Uniform Civil Code) குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.
இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.
”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.
இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பின் இணைப்பாக ”பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல் கோட்பாடு தந்துள்ள இந்த வாக்குறுதியை அமல்படுத் வேண்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருப்பது பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன் “ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து. “முசுலீம்களை ராஜீவ் அரசு தாஜா செய்கிறது” என்ற பாரதீய ஜனதா கும்பல் குற்றம் சாட்டியவுடனே அதைச் சமாளிப்பதற்காகப் பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு ராமஜென்மபூமி விவகாரத்துக்கு உயிரூட்டினார் ராஜீவ். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.
இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டித் தன்னைச் சந்தித்த முசுலீம் தலைவர்களிடம் ”பொது சிவில் சட்டமெதுவும் கொண்டு வரும் உத்தேசம் அரசுக்கு இல்லை” என்று வாக்குறுதியளித்திருக்கிறார் நரசிம்மராவ். சிறுபான்மையினரைத் “தாஜா” செய்யும் இந்த வாக்குறுதியினால் கோபமடையக்கூடிய இந்து வெறியர்களை சமாதானப்படுத்த, ராவ் எதைத் திறத்துவிடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
முசுலீம் மதவாதிகளோ ”எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை” என்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம்!
ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு- ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாரதீய ஜனதா அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. பாரதீய ஜனதா மட்டுமல்ல, மீனாவின் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குல்தீப் சிங்கும் இதையேதான் கூறுகிறார்.

“இந்தியாவுக்குள்ளே இரண்டு தேசங்கள் அல்லது மூன்று தேசங்களாக வாழ்வது குறித்த கோட்பாடுகளையெல்லாம் இந்தியத் தலைவர்கள் ஏற்கவில்லை என்பதும், இந்தியக் குடியரசு எனபது ஒரே தேசம்தான் – இந்தியத் தேசம்தான் என்பதும், அதில் எந்தச் சமூகத்தினரும் மதத்தின் அடிப்படையில் தனித்தன்மை எதையும் கோர முடியாது என்பதும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. இந்துக்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், ஜைனர்களும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் மத உணர்வுகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சில சமூகத்தினர்தான் அவ்வாறு விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.”
மத உரிமை, பெண்ணுரிமை, சொத்துரிமை, குடும்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினை இந்திய ஒருமைப்பாடு குறித்த பிரச்சினையாக மாறிவிட்டது. பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் ) தங்கள் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் விஷமப் பிரச்சாரம் உச்சநீதி மன்றத்தீர்ப்பினால் புனிதப்படுத்தப்பட்டுவிட்டது.
இத்தனை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் என்பது தான் என்ன?
- எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
- ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
- கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
- பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
- சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
- மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.
மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக மேற்கத்திய அரசுகள் கொண்டு வந்த, மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட “குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்” என்பது திருமணம், சொத்துரிமை, மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தைப் பறிக்கிறது; மதச்சார்பற்ற அரசு அவற்றைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.
முசுலீம் சட்டத்திற்கு மட்டுமா முரண்பாடு?

இத்தகையதொரு பொது சிவில் சட்டத்துடன் முசுலீம் தனிநபர் சட்டம் மட்டுமல்ல, தற்போது அமலில் உள்ள இந்து, கிறித்தவ, பார்சி தனிநபர் சட்டங்கள் அனைத்துமே வெவ்வேறு அளவில் முரண்படுகின்றன.
ஆனால் அத்வானியின் சீடர்கள் பொது சிவில் சட்டத்திற்குத் தரும் விளக்கம் மிகவும் சுருக்கமானது; “முசுலீம் நாலு பொண்டாட்டி வச்சிக்கலாம்; ‘நமக்கு’ அந்த உரிமை இல்லை. அவன் ‘தலாக் தலாக தலாக்’ னு சொன்னாப் போதும். உடனே விவகாரத்து; நாம் கோர்ட்டுக்கு அலையணும். அதென்ன அவனுக்கு மட்டும் தனிச் சட்டம்?”
நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். முசுலீம் தனிநபர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். பாரதீய ஜனதாவிற்குத் தங்கள் மேல் தோன்றியுள்ள திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, பாரதீய ஜனதாவும் இப்பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்வதில்லை. மாறாக ,மேற்படி ‘உரிமைகளில்லாத ‘ இந்து ஆண்களிடம் தான் கொண்டு செல்கிறது. அதன் நோக்கமும் கண்ணோட்டமும் இதன் மூலம் அம்பலமாகிறது.
இந்துச் சட்டத்தின் வரலாறு
இது ஒருபுறமிருக்க, ‘நமக்குள்ளேயே’ இந்து சட்டம் விதித்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், நம்முடைய சட்டத்தில் அசிங்கமாக வெளிப்படும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் பற்றியும் பாரதீய ஜனதா பேசுவதில்லை.
வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது முழுமுதற் கொள்ளையாக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதா இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாரதீய ஜனதாவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’ இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும் . கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது . இதனால்தான் இந்துச் சமூகத்தில்தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.
”கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை’’ என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.
காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.
இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.
”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.
பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார்.
திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவைகளைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு முன்வைத்த சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால் மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.
இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்
தற்போது வழக்கில் உள்ள இந்துச் சட்டம் 1955-56-ல் நிறைவேற்றப்பட்டது. இது மூன்று வகைப்பட்ட விசயங்களைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
- வருண சமூகத்தைக் கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பார்ப்பனியச் சட்ட மரபுகளான சுருதிகள், சுமிருதிகள் மற்றும் அவற்றுக்கான விளக்கவுரைகள்.
- சூத்திரர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மரபுகள்.
- மேற்கத்திய சட்ட மரபுகளான நியாயம் – நீதி – மனச்சாட்சி, முன்மாதிரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்கள்.
1.சுருதிகள், சுமிருதிகள், விளக்கவுரைகள்
வேதங்கள் ‘ஒலி வடிவில் இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டவை’ என்பதால் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுருதி என்ற சொல்லுக்கு ‘காதால் கேட்டது’ என்று பொருள்.
சுமிருதிகள் என்றால் ‘நினைவில் நின்றவை ‘ எனப் பொருள். வேதங்களின் உட்பொருள் குறித்த ஆதிகால முனிவர்கள் அளித்த விளக்கங்களைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொண்டவையே சுமிருதிகள். முற்கால சுமிருதிகளுக்குத் தரும சூத்திரங்கள் என்றும், ‘மனுஸ்மிருதி’ போன்ற பிற்கால சுமிருதிகளுக்குத் தரும சாத்திரங்கள் என்றும் பெயர்.
தரும சாத்திரங்கள் என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் நாடெங்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை. புதிதாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி எழுதப்பட்ட விளக்கவுரைகள் ஏராளமாக உள்ளன. கி.பி- 7-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை இத்தகைய விளக்கவுரைகள் பல எழுதப்பட்டுள்ளன. நால்வருண முறை என்னும் அடிப்படைச் சட்டத்தில் ஒன்றுபடுகின்ற அதே சமயம் மரபுகள், பழக்கங்கள், ஒவ்வொரு வட்டாரமும் சந்திக்கும் சிறப்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த விளக்கவுரைகள் மாறுபட்டன
2. சூத்திரர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் மரபுகள்
இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களாகிய மேற்கூறியோர் மத்தியில் (ஒவ்வொரு சாதி அல்லது சமூகக் குழுவிற்குள்ளும்) நிலவி வந்த பண்பாடு, மேல் வருணத்தாரின் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனது பண்பாட்டைப் பின்பற்றும்படி முற்காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, அவ்வாறு பின்பற்ற முயன்றோரைத் (எ.கா: நந்தன்) தண்டித்தது.
ஆனால், இந்து மதத்தை அனைத்திந்திய ரீதியில் ஒருங்கிணைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இப்போது ‘கீழ்சாதி மரபு’ களையும் இந்துச் சட்டத்தின் அங்கமாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் வேதங்கள், சுமிருதிகளின் அடிப்படையிலான மைய நீரோட்ட இந்துச் சட்டத்திற்கு இவற்றை அடிப்படையாக ஏற்காமல், ‘இழிவான இந்த மரபுகளை’ பின்னிணைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் தனது ‘புனிதத்தை’க் காப்பாற்றிக் கொண்டது.
3. மேற்கத்திய சட்ட மரபுகள்
நவீன சமூகம் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு சுமிருதிகளில் விடை தேடவியலாது என்பதை இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் புரிந்திருந்தனர். எனவே மதச்சார்பின்மை என்னும் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, மேற்கத்திய சட்ட மரபின் வடிவத்தை அவர்கள் இந்துச் சட்டத்தின் அடிப்படையாகச் சேர்த்துக் கொண்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டத்திற்கேற்ப புதியதொரு இந்து மதத்தை உருவாக்க இது அவசியமாக இருந்தது.
ஆசை வார்த்தைகள், மன்னர்- மானியம், பதவிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு உபாயங்களையும் கடைப்பிடித்து ‘இரும்பு மனிதர்’ இந்தியாவை உருவாக்கிவிட்டார். ஆனால் இந்து மதத்தை ஒருங்கிணைத்து புத்துருவாக்கம் செய்வது இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணியாக இருந்தது.
தனது வாள்முனையில் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரிட்டீஷ் ஆட்சியின் பேனா முனையேகூட ஒருங்கிணைந்த இந்துச் சட்டத்தை உருவாக்கவில்லை. அந்தந்த வட்டாரத்தில் என்ன தரும சாத்திரங்கள் வழக்கில் உள்ளனவோ அவற்றிற்கு பிரிட்டீஷ் நீதிமன்றங்களில் விளக்கம் கூறும் அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களுக்கே இருந்தது.
‘சுதந்திர – ஜனநாயக ‘ இந்தியாவில் இந்த முறையைத் தொடர முடியாதென்பதால் ஒரே சுமிருதியையும், அதற்கு விளக்கம் சொல்ல ஒரே பண்டிதரையும் உருவாக்கும் பணியை இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்கிய சநாதனிகள் மேற்கொண்டனர். ( இவ்வாறு தொகுக்கும் போது அடிப்படையான வருண தருமநெறிகளுக்கு ஊறு வந்துவிடக் கூடாதேயென்று திரைமறைவில் காஞ்சி சங்கராச்சாரி செய்த சித்துவேலைகளை வீரமணி அவர்கள் தனி நூலில் அம்பலப்படுத்தியுள்ளார் ) ஒருவாறாக இந்துச் சட்டத் தொகுப்பு எனும் ‘ஒருங்கிணைந்த சுமிருதி’ உருவாக்கப்பட்டது. அதற்கு விளக்கமளிக்க இறுதி அதிகாரம் படைத்த பார்ப்பனப் பண்டிதராக உச்சநீதி மன்றம் ‘நியமனம்’ பெற்றது.
அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, இந்து திருமணச் சட்டம் (1955), இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1955 ) (1956), இந்து காப்பாளர் சட்டம் (1956) ஆகியவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.
(தொடரும்…)
பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்
டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒப்பந்தம் பெறுவதற்காக ‘அல்ஸ்டோம் இங்கிலாந்து’ என்ற பிரெஞ்சு ரயில் மற்றும் டர்பைன் உற்பத்தி நிறுவனத்தின் இங்கிலாந்து கிளை லஞ்ச ஊழலில் ஈடுபட்டது இங்கிலாந்து அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ பணி, மற்றும் போலந்து, துனிசியா நாடுகளில் டிராம் சேவை கட்டுமானங்களுக்கான ஒப்பந்தப் பணி பெறுவதற்காக ஊழல், ஊழலுக்கான சதி செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவத்துவத்திற்கே உரிய முறைகளில் ஆட்சியாளர்களை ஊழல்மயப்படுத்தி வளர்ந்துள்ளது இந்நிறுவனம்.
டெல்லி மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தில் ரயில் கட்டுப்பாடு, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு கட்டுமானம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக 30 லட்சம் யூரோக்களை (சுமார் ரூ 24 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளது அல்ஸ்டோம். இதை அடித்தளமாக கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தடுத்த பணிகளுக்கும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது இந்நிறுவனம்.
இந்த லஞ்சப்பணம் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டமர் 12, 2001-ல் ரூ 1.98 கோடி இந்தோ-யூரோப்பியன் வென்சர்ஸ் பிரைவைட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு மே 3, 2002 ல் 31 லட்சம் யூரோ குளோபல் கிங் டெக்லானஜி நிறுவனத்திற்கும் ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேசன் என்ற அரசு நிறுவனம் மத்திய மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசு ஆகியவற்றால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நிர்வாக ரீதியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தான் அதை கட்டுப்படுத்துகிறது. தற்போது ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 2000-ம் ஆண்டில் ‘உத்தமர்’ வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ தான் மத்தியில் ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது டெல்லி மெட்ரோவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் அத்வானி, மெட்ரோவை கட்டுப்படுத்தும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் கர்நாடக சுயம்சேவக் ஆனந்த் குமார். அப்போதைய டெல்லி மெட்ரோ சேர்மேனாக இருந்தவர் பா.ஜ.க வின் அப்போதைய டில்லி மாநில தலைவர் மதன்லால் குரானா. ஆக முறைகேடு நடந்த காலத்தில் பா.ஜ கும்பல் தான் டெல்லி மெட்ரோவை கட்டுப்படுத்தி இயக்கியிருக்கிறது. இவர்களின் ஒப்புதலுடன்தான் லஞ்சத்தின் மூலம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது அல்ஸ்டோம்.
டெல்லி மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இதற்கு உரிமை கொண்டாடுவதாக புலம்பிய பாஜகவினர் இது முழுக்க முழுக்க பா.ஜ.க ஆட்சியின் சாதனை என்று சொந்தம் கொண்டாடினர். இப்போது அந்த சொந்த சாதனையை வேதனையாக நினைத்து மறக்க முயற்சிக்கின்றனர். கேடி மோடியைக் கொண்டாடும் ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் கள்ள மவுனம் சாதித்து வருகின்றனர்.
இந்த ஊழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்போதைய டெல்லி மெட்ரோ நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் தாங்கள் பிரெஞ்ச் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் தான் கூட்டு வைத்திருந்ததாகவும் அதன் இங்கிலாந்து கிளையிடம் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி சப்பைகட்டு கட்டியிருக்கிறார். அதுபோல குற்றச்சாட்டில் பணபரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும் இந்தோ யூரோப்பியன் வென்ச்சர்ஸ், குளோபல் கிங் டெக்னாலஜி குறித்து தான் கேள்விபட்டது இல்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார். இவர்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை மிகவும் திறமையுடன் நிறைவேற்றிக் காட்டியதாக புகழப்படுபவர். இந்தத் திட்டத்துக்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியது பற்றிக் கூட தெரியாமல் இதை திறமையுடன் நிறைவேற்றியிருக்கிறார். சென்னை மெட்ரோவிலும் இவர்தான் அவ்வப்போது மேற்பார்வை செய்து வருகிறார். மேலும் அப்துல் கலாம் வரிசையில் உழைத்து முன்னேறிய நட்சத்திரங்கள் வரிசையில் இந்த ஸ்ரீதரும் முக்கியமானவர்.
டெல்லி மெட்ரோ திட்ட செலவுகளில் 60% ஜப்பான் கடனாக கொடுத்துள்ளது. கடனை நம் தலையில் கட்டிவிட்டு, திட்ட ஆலோசனை, தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்திய நாடுகளே மீண்டும் அதை கொள்ளையடித்து விடுகின்றன். ஆக கடனாகவும், ஒப்பந்தங்களாகவும் என இரட்டை லாபம் அடைகின்றன ஏகாதிபத்தியங்கள். தரகு முதலாளிகள் இவர்களின் பங்காளிகாளாக இருந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களால் அளிக்கப்படும் எலும்புத் துண்டுகள் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்த்தினருக்கு அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
ஏதோ நாட்டை உய்விக்க்க வந்த திட்டங்கள் போல ஆளும்வர்க்கங்களால் பிரச்சாரம் செய்யப்படும் இது போன்ற திட்டங்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் கொழுக்கவே பயன்படுகின்றன. மறுபுறம் உழைக்கும் மக்களோ அத்து கூலிக்காக தகர கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டு இதே மெட்ரோ திட்டங்களில் உயிரை பணயம் வைத்து வேலைவாங்கப்படுகிறார்கள்.
மேலும் பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்ற பெயரில் கொண்டு வரப்படும் மெட்ரோ திட்டங்கள் பொதுபோக்குவரத்தை அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றும் சதியையும் கொண்டிருக்கிறது. சில மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரிலையன்ஸ் மெட்ரோ என்றுதான் சின்னங்களே பொறிக்கப்பட்டுள்ளன. அதுபோல கட்டண நிர்ணயமும் தனியாரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியையும், மருத்துவத்தையும், தண்ணீரையும் மக்களிடமிருந்து பறித்து முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, முதலாளிகளின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்படும் பெரிய பெரிய கட்டிடங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் காட்டி வளர்ச்சி என்று நம்மை நம்பச்சொல்கிறது ஆளும்வர்க்கம். உள்கட்டமைப்பு திட்டங்களில் நடக்கும் ஊழல் மட்டுமல்ல மக்கள் பணத்தில் முதலாளிகளுக்காகச் செய்யப்படும் உள்கட்டமைப்பு திட்டமே ஊழல் தான்.
அல்ஸ்டோம் நிறுவனம் மீதான யுகே தீவிர குற்ற அலுவலகத்தின் விசாரணை 2011-ல் துவங்கியது. லஞ்ச ஊழலை தடுக்கத் தவறியதற்காக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அல்ஸ்டோம் நிறுவனத்துக்கு 2.56 கோடி யூரோ (சுமார் ரூ 20 கோடி) அபராதம் விதித்திருந்ததைத் தொடர்ந்தே இங்கிலாந்தில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. அல்ஸ்டோமின் கன்னட்டிகட் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் நிறுவனத்தின் சார்பாக லஞ்சம் கொடுத்ததாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூன்று யுகே இயக்குனர்களை லஞ்சம், பணப் பரிமாற்ற மோசடி, போலிக் கணக்கு ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்திருந்தது. அல்ஸ்டோமின் ஜெர்மன் போட்டியாளர் சீமன்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தப் பணிகளை வெல்ல முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் $160 கோடி (சுமார் ரூ 9,600 கோடி) அபராதம் கொடுத்து தப்பித்துக் கொண்டது.
2G அலைக்கற்றை போன்ற விவகாரங்கள் இந்தியா போன்ற முதிர்ச்சியடையாத நாடுகளில்தான் நடக்கின்றன என்று பித்தலாட்டம் செய்யும் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களின் முகத்தில் அறைவது போல முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நிறுவனங்களின் ஊழல் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.
மேலும் படிக்க
சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!
வினவு தளத்தின் முதல் ஆவணப்படமான “கருவாடு “படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் கடந்த சனிக்கிழமை (20-09-2014) அன்று உற்சாகத்துடன் நடைபெற்றது.
விரிவான ஏற்பாடுகளோ, அணிதிரட்டலோ இல்லாமல் மிகக்குறைந்த அவகாசத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால் தோழர்களும் வாசகர்களும் சேர்த்தே குறைந்த அளவில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதை தகர்க்கும் வண்ணம் வினவு வாசகர்கள், தோழர்களுக்கு இணையாக கலந்து கொண்டார்கள். வினவு வாசகர்கள், தோழர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சற்று நேரத்திற்கெல்லாம் அரங்கம் முழுவதும் நிரம்பிவிட்டது. அதற்கு மேலும், பல வாசகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய முடியாதது வருத்தம் அளித்தது.
இத்தகைய சூழலை முன்னரே எதிர்பார்த்து விழா அரங்கத்தின் கீழ் தளத்திலுள்ள மற்றொரு அரங்கத்தையும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வது என பதிவு செய்திருந்தோம். இதன்படி தோழர்களை கீழ் தளத்திலும் வாசகர்களை மேல் தளத்திலுமாக என இரண்டு திரைகளில் கருவாடு வெளியிடுவது என முடிவானது. இரண்டு தளங்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.
விழாவிற்கு தோழர் அஜிதா வினவு சார்பாக தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கினார்.

அவர் பேசியதாவது,
“கோயம்பேட்டில் கருவாடு விற்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறி தி இந்து செய்தி வெளியிட்டதையும் அதன் எதிரொலியாக கருவாடு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வைத்ததையும் கண்டித்து வினவில் செய்தி வெளியிட்டோம். அது வாசகர்களால் பரவலாக வரவேற்புடன் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டோம்.
சரி இணையத்தைத் தாண்டியும் மக்கள் கருத்தை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து கோயம்பேடு சந்தை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை, மூலக்கொத்தளம் சந்தைகளில் மக்களை சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சரி போகிறதுதான் போகிறோம், ஒரு கேமராவையும் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்று நண்பர்கள் உதவியுடன் கேமராவை எடுத்துச் சென்று மக்கள் கருத்தை பதிவு செய்தோம்.
அதன் படி ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் கருவாடு ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன” என படம் கருவாகி வளர்ந்து கருவாடான வரலாற்றை கூறினார்.
“கருவாடு படத்தில் மக்கள் கருத்தை தொகுத்து அளித்திருக்கிறோம். இதைத் தாண்டி நாம் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. தந்தை பெரியாரின் காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் எங்கெல்லாம் தலை எடுத்ததோ அங்கெல்லாம் அதை தலையில் அடித்து உட்கார வைத்தார். அந்தப் பணியை தற்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக கருவாடு ஆவணப்படத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் வெளியிட்டார். ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முன்னாள் ஸ்டன்ட் மாஸ்டரான பெரியவர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தோழர் கதிரவன்,

“செய்தி வெளியிட்டு, கருவாட்டை பறிமுதல் செய்ய வைத்து தன் பார்ப்பன செல்வாக்கை காட்டியிருக்கிறது பார்ப்பன இந்து பத்திரிகை. உழைக்கும் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடும் போது கண்டுகொள்ளாத அரசு கருவாடு பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ரூ 20,000 மதிப்புள்ள கருவாடுகளை பறிமுதல் செய்ததன் மூலம் தன் பார்ப்பன பாசத்தை காட்டியிருக்கிறது.
பார்ப்பனர்களை தவிர மற்றவர்கள் சூத்திரர்கள், இழிந்தவர்கள் என்று கூறி கருவறைக்குள் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்களும், உச்சநீதிமன்றமும் சொல்கிறார்கள். அதுபோல தான் இங்கேயும். கருவாடு என்பது ‘இழிந்த’ உணவு, ‘இழிந்த’ மக்களின் உணவு என்பதால்தான் தடை செய்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே சங்கிலியின் இரண்டு கண்ணிகள்.
இதே ஜெயலலிதாதான் 2002-ல் கிடாவெட்டு தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். மதுரை பக்கம் ஆண்ட பரம்பரை என்று வீரம் காட்டும் எவனும் சட்டத்தை மீறி கிடாவெட்டத் தயாராக இல்லை. மகஇக மற்றும் எமது தோழமை அமைப்புகளைச் சேர்நத தோழர்கள்தான் கிடா வெட்டும் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். இறுதியில் அந்த சட்டம் முறியடிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அது தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச்ச பாசை என்கிறார்கள்.
ஆக இது ஏதோ கருவாட்டு பிரச்சனை மட்டும் என்பதல்ல, கருவறை தீண்டாமை, மொழித் தீண்டாமை போன்ற ஒரு பார்ப்பனிய பிரச்சனை. அதற்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணப்படத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
இதைத் தொடர்ந்து “கருவாடு” படம் திரையிடப்பட்டது. வாசகர்கள் பல காட்சிகளுக்கு கைதட்டி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்கள். “எங்களுக்கு உசிதமா படலை”, ”உயிரை கொன்ன்ன்னு”, “என் பையன் அப்படி இல்லை” என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர். பார்ப்பனர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் “மனுசன்னு இருந்தா கோவம் வரணும்” “எம்.ஜி.ஆரே கருவாடு இல்லாம சாப்பிட மாட்டாரு தெரியுமா” என்பன போன்ற கோயம்பேடு தொழிலாளிகளின் கருத்துக்களும், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பெரியவர் பேசிய கருத்துக்களும் கைத்தட்டல்களை அள்ளியது.

“தமிழகத்திற்கு வரும் கருவாட்டின் பெரும்பகுதி மோடியின் குஜராத்தில் இருந்துதான் வருகிறது. கருவாடு தேவையில்லை என்றால் அவரே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்ற கருவாடு மொத்த வியாபாரி கூறிய செய்தி ஆச்சரியமளித்தது.
தோழர்கள் மற்றும் பொதுவான வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் “கருவாடு” கவர்ந்ததை பார்க்க முடிந்தது. படம் நிறைவடைந்ததும் ஆரவாரமாக கைதட்டி படத்தை வரவேற்றார்கள்.
இதைத் தொடர்ந்து படத்தின் மீதான் விவாதத்தை துவக்கிவைத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பேசினார். அதில் குஜராத்தில் இருந்து வந்த நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும், குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை. நகரின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலால் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் பதிவு செய்தார். மஹாராஷ்டிராவில் மகாவீரார் ஜெயந்தியை ஒட்டி பத்து நாட்களுக்கு புலால் கிடைப்பதை தடைசெய்கிறார்கள் இந்துமத வெறியர்கள் என்பதையும் இது இன்னும் பல பண்டிகைகளுக்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் கூறி எச்சரித்தார்.

பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கத்தை தடைசெய்யும் பார்ப்பனியத்தின் அராஜகத்தை கண்டித்தார்.
“நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டிலும் பல பத்தாண்டுகளாக நம் மக்கள் இதற்கு பழக்கப்படுகிறார்கள் என்பது தான். தாங்கள் இழிந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் போல தாங்களை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதை அகற்ற வேண்டியது முக்கியமான வேலை” என்று கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து படத்தில் கருத்து சொல்லிய எம்.ஜி.ஆர் நகர் பகுதி பெரியவர் ராஜா, தான் சிறு வயதில் அனுபவித்த பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை பற்றி விளக்கினார்.

“ஏன் பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு சொல்றேனா அதை அனுபவிச்சவங்க நாங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
இப்போ எனக்கு 90 வயசு ஆகுது. எனக்கு 14 வயசு இருக்கும் போது, தம்பி எந்திரிபா, (ஒரு வாசகரை எழும்பச் சொல்கிறார்). இந்தத் தம்பி மாதிரிதான் இருப்பேன். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். என் அம்மா டீச்சரா இருந்தாங்க.
லீவுக்கு எங்க அம்மா வேலை பார்க்கும் ஊருக்கு போயிருந்தேன். குளிக்க கால்வாய்க்கு போனேன். அது தாமிரபரணி ஆத்தோட கால்வாய். ஆத்தில குளிக்க படித்துறை கட்டி வைச்சிருப்பாங்க. அந்த ஊரில் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு படித்துறை. ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுது என்றால் முதலில் பார்ப்பனர்களுக்கான படித்துறை இருக்கும். அடுத்து பார்ப்பனர்கள் இல்லாத ஜாதியினருக்கான படித்துறை. இன்னும் பத்து பதினைந்து அடி தள்ளி பள்ளர், பறையர்களுக்கான படித்துறை இருக்கும்.
நான் ஊருக்கு புதுசு, சின்ன பையன். எனக்கு இது எதுவும் தெரியாது. தெரியாம போய் பார்ப்பனர்களுக்கான படித்துறையில் குளிச்சிட்டு தலை துவட்டிக்கிட்டிருந்தேன். அங்க வந்த பூணூல் போட்ட ஐயர் ஒருத்தர்
“ஏண்டா இங்கே குளிச்ச” என்றார்.
“படித்துறை இருந்தது. தண்ணி இருந்தது குளிச்சேன். இன்னா இப்போ?” என்று கேட்டேன்.
அந்த பார்ப்பனர் அங்கிருந்த மரக்குச்சியை எடுத்து என்னை அடிக்க முயற்சிக்க நான் ஓடினேன். அவரும் விரட்டினார்.
இறுதியில் வேறு நபர்கள் வந்து காப்பாற்றி, “தெரியாம பண்ணிட்டான். இனி இப்படி நடக்காது” என்று உறுதிமொழி கொடுக்கவும்
“இனி இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிடுவேன்” என்று அனுப்பி வைத்தான் அந்த பார்ப்பான். எனக்கு அவமானமாக இருந்தது.” இதை நினைவு கூர்ந்த பெரியவர் தன்னால் அந்த அவமானத்தை இப்போது நினைத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
“பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்” என்று பெரியாரின் பணிகளின் தாக்கத்தை தன் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “இளைஞர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். சின்ன வயசுல போஸ்ட் ஆபீஸ்ல போய் ஒரு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றால் “சாமீமீமீமீ ஒரு ஸ்டாம்ப் குடுங்க” என்று தான் கேட்க வேண்டும். நாமம் போட்டுக்கொண்டு ஒரு பார்ப்பான் உள்ள உக்காந்திருப்பான். போலீஸ் ஸ்டேசன் போனா சப்-இஸ்பெக்டர் நாமம் போட்டிருப்பார். “சாமீஈஈஈஈ என்ன விட்டிருங்க”-ன்னு கெஞ்சணும்.
கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் நாமம் போட்டிருப்பாரு. அவருக்கு விசிறிவிட நம்மாளு இருப்பான். பக்கத்துல இருந்து விசிறுனா தீட்டுனு சொல்லி பத்தடி தூரத்தில நின்னு கயிற்றை பிடித்து இழுத்துக் கொண்டிருப்பான். அவரும் ஜாலியா தீர்ப்பெழுதுவாரு. இப்படித் தான் இருந்தது.
இப்போ மாதிரி சார் என்று சொல்ல முடியாது, சாமி சாமின்னு தான் சொல்லனும். சாமி தான் நமக்கு பிரச்சனை. இப்ப திருப்பியும் சாமிகளை கொண்டு வருகிறான்.
பெரியார் இல்லைனா நாம் இன்னைக்கு மாதிரி இருக்க முடியாது. இப்போ முன்ன மாதிரி இல்ல. முன்ன எங்க ஊரு அக்கிரகார தெருவுல போகும் போது செருப்பு போட்டு நடக்கக் கூடாது, துண்டை தோள்மேல போடக் கூடாது. இப்ப ஊருக்கு போனா அக்கிரகார தெருவுல அவங்க யாருமே இல்ல. கொஞ்ச வருசத்து முன்னாடி கல்கத்தா, டெல்லினு போனானுக. இப்போ அமெரிக்கா, யூரோப் னு செட்டிலாயிட்டாங்க.
டிரெயின்ல 3 டயர் ஏசி கம்பாட்மென்டுல போனா நீங்களே கூட இதத் தெரிஞ்சிக்கலாம். “என்ன அத்திம்பேர்! அமெரிகாவுல இருக்குற பொண்ணு எப்படி இருக்கா”, “மாமா அமெரிகாவுல இருந்து ஆப்பிரிக்கா போயிட்டாளேமே” இப்படித் தான் பேசிப்பானுக.. இந்தித் திணிப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டி எனக்கு வயசாயிருச்சி. இளைஞர்களா நிறைஞ்சி இருக்கீங்க. போராடுங்க” என்று கேட்டுக்கொண்டு தன் கருத்தை பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து படம் தொடர்பாக வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர். இறுதியாக தோழர் அஜிதா நன்றி கூறினார். வெளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிடிகளை பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள். பதிவு செய்யப்பட்ட வாசகர்களின் கருத்துக்களை தனியாக வெளியிடுகிறோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
நாம் நேரடியாக கருத்து கேட்டால் நன்றாக இருப்பதாகத் தான் கூறுவார்கள். எனவே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டால் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் என்று கூடி பேசிக்கொண்டிந்த ஒரு வாசகர்களின் கூட்டத்தில் புகுந்தோம்.
படம் நன்றாக இருப்பதாகத் தான் அவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கூடவே வினவு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற படங்கள் எடுக்கப் போவதாகவும், அடுத்து தண்ணீரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூற
அதுதான் ஒரு நாளில் படம் எடுத்துவிட்டார்களாமே அப்படியானால் மாதத்திற்கு ஒரு படம் எடுத்து வெளியிடலாமே என்றார் இன்னொருவர்.
நல்ல ஆலோசனை தான், முயற்சிக்கிறோம்!
– வினவு செய்தியாளர்
(திரையிடல் நிகழ்விற்கு வந்த நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் விரைவில் வீடியோ பதிவாக வெளியிடப்படும்)
டி.வி.டி பெற விரும்புபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி : எண் 16, முல்லை நகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
மொபைல் : (+91) 99411 75876
லேண்ட்லைன் : (+91 44) 23718705 (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)