Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 649

காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

1

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யாலய கேந்திரா மெட்ரிக் பள்ளியில் மாணவி வைஷ்ணவி மர்ம மரணம் ! நீதி கேட்க சென்றவர்கள் மீது போலீசு தடியடி !

”திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை…

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் வைஷ்ணவி. நேற்று பள்ளிக்கு சென்ற வைஷ்ணவி வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் மாணவியின் அம்மாவும் உறவினர்களும் பள்ளி ஆசிரியர்களும் அலுவலர்களும் பள்ளியில் தேடினார்கள். அப்போது அம்மா என்ற அலறலோடு மாடியிலிருந்து குதித்த வைஷ்ணவி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த உயிரிழந்தாள். மாணவியின் கையில் ”சாரி மம்மீ, சாரி டாடி” என்று எழுதப்பட்டிருந்தது.”

இப்படி ஒரு செய்தியை நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து இருப்போம். அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது தடியடி நடத்தியதை கூட கடனுக்காக சில ஊடகங்கள் கூறின. மொத்தமாக அது தற்கொலைதான் என்று அரசு, போலீசு, ஊடகங்கள் என அனைத்தும் ஒற்றுமையாக சாதித்தன.

எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அரசோ, பள்ளியோ, ஊடகங்களோ சொல்லவில்லை. இதைப் பற்றி பேசாமல் தற்கொலை என்று சொல்வது எதையோ மறைப்பது என்பது வெள்ளிடை மலை. ஒரு தனியார் பள்ளி என்று அப்பள்ளியின் பெயரை போடாதது பத்திரிக்கை தர்மம் என்றால் போஸ்ட்மார்டம் செய்யாமலே இது தற்கொலைதான் என்று அறிவிப்பதும் கூட பத்திரிக்கை தர்மமாக இருக்கலாம். ஒரு சோகக்கதையைப் போல இச்சம்பவத்தை வடித்த பத்திரிக்கைகள், இதற்கு அக்குழந்தையையே காரணமாக்கின.

உண்மைதான்.

“கந்து வட்டிக்கு வாங்கி புள்ளைய தனியார் பள்ளியில சேர்க்காதீங்க, அது பொணாமாகத்தான் திரும்பி வரும்” என்று பேருந்து, ரயில்கள், தெருக்களில் முழங்கிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் கூறிய வார்த்தைக்கு இம்மியளவும் மாறாமல் நடந்த கல்வி தனியார்மயத்தின் கொலைக்களத்தில் மறக்கடிக்கப்பட்ட கதைதான் வைஷ்ணவியுடையது.

ஆம், ‘நாம்தான் படிக்கவில்லை, நாம் என்ன கஷ்டப்பட்டாலும் சரி, நம் பிள்ளையயாவது படிக்கவைக்க வேண்டும்’ என்று கனவு கண்ட லட்சக்கணக்கான அப்பாக்களைப்போலவே ஒரு அப்பாதான், திருவொற்றியூர், பர்மா நகரில் வசிக்கும் வைஷ்ணவியின் தந்தை உதயகுமார். கார் டிரைவராக வேலை பார்த்தாலும் கருவேப்பிலைக்கொழுந்து போல பெற்றெடுத்த ஒரு பெண்ணையும் ஒரு பையனையும் சுற்றிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் சேர்த்தார். பெண்ணை திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியிலும் பையனை டான் பாஸ்கோவிலும் சேர்த்தார். கல்விக்கட்டணம் மிகவும் அதிகம் தான், என்ன செய்வது ? பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தார்.

சென்ற வாரம் கூட வைஷ்ணவி படிக்கும் பள்ளியில் இருந்து உதயகுமாரை வரச்சொன்னார்கள். பீஸ் கட்டுவதற்கான கெடு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியதாக தகவல் தெரிவித்தார்கள். “அய்யய்யோ பிள்ளையோட வாழ்க்கை பாழாப்போயிடுமே” என்று கந்து வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கி தனியார் பள்ளியில் கொட்டினார், தன் பிள்ளையை இன்னும் ஒரு வாரத்தில் சடலமாக மூட்டையில் வந்து கொட்டுவார்கள் என்று தெரியாமலே.

எப்போதும் பள்ளி 3.30 மணிக்கே முடிந்துவிடும், 4 அல்லது 4.30 மணிக்குள் வைஷ்ணவி வீட்டிற்கு வந்து விடுவாள். 27 ஜூன் அன்று மாலை 5 மணி ஆகியும் அவள் வரவில்லை என்பதால், வைஷ்ணவியின் உறவினர்கள் பள்ளியில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது வாட்ச்மேன், அவர்களிடம் ”உள்ளே யாரும் இல்லை அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். உங்கள் மகள் எங்கே போனாள்? என்பது எங்களுக்கு தெரியாது, மறுபடி வீட்டிற்கு போய் பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி உள்ளார்.

அதன் பின் மறுபடி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். இரவு 7 மணி ஆனதும் பயந்து போன உறவினர்கள் மறுபடியும் சென்று பள்ளியில் விசாரித்துள்ளனர். பள்ளியின் காவலர் மீண்டும் பழையபடியே பேச, வந்த உறவினர்கள் கோபத்தில் சத்தமிட வேறு வழியின்றி “உள்ளே பி.டி ஆசிரியர் இருப்பார். அவர்கிட்ட கேட்டுப் பாருங்க” என்று அவர் வழிவிட்டார். பதைபதைப்போடு அவரிடம் முறையிட்டார்கள், அவரோ உள்ளே யாரும் இல்லை என்று மாணவியின் உறவினர்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

வேறு வழியின்றி திரும்பிய அவர்களின் கண்ணில் பள்ளிக்கட்டிடத்தில் யாரோ காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது போல் இருந்தது. நம்ம பொண்ணா இருக்குமோ? என்ற பயத்தில் ”அம்மா வைஷ்ணவி ” என்று உறவினர்கள் அழைத்துபடியே அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள், காலில் ஷூவும் சாக்ஸும் இல்லை.

குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வைஷ்ணவியோடு மேலே யாராவது இருந்தார்களா என்று கவனிக்காமல் தூக்கிச் சென்றார்கள், மருத்துவமனைக்கு. செல்லும் வழியிலேயே வைஷ்ணவியின் உயிர் பிரிந்தது. மேற்கொண்டு பள்ளியில் இருந்து யாரும் வைஷ்ணவியின் பெற்றோரை சந்தித்து பேசவும் இல்லை. இந்த மவுனமே மாணவியின் இறப்புக்கும் பள்ளிக்கும் உள்ள தொடர்பைக் கூற அந்த மாணவியின் வீட்டருகே உள்ள சாலையில் உறவினர்கள், அருகில் உள்ள மக்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளியின் ‘செல்வாக்கை’ பயன்படுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள் மூலமாக அப்போராட்டம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

வைஷ்ணவியின் மரணத்துக்கு காரணமான தனியார் பள்ளியின் மீதான கோபம் போராடிக் கொண்டிருந்த மக்களிடம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. பிரச்சினையை கேள்விப்பட்டுப் போன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், தமிழகம் முழுவதும் நடக்கும் கல்வி தனியார்மயத்தின் பலிகளை விளக்கி “இனியும் இப்படி அழுது கொண்டிருந்தால் எந்த பயனும்கிடைக்காது, பிள்ளையின் இறப்பிற்கும் நியாயமும் கிடைக்காது. பள்ளி நிர்வாகம் நேரில் வரும் வரை பிணத்தை எடுக்காமல், பள்ளிக்கு சென்று முற்றுகையிடுவோம்” என்றார்கள்.

உள்ளூர் அரசியல்கட்சியை சேர்ந்த சிலரோ, “போராட்டம் எதுவும் வேண்டாம், டி.வி யில் பேட்டி கொடுப்பதன் மூலமே இந்த விசயத்தை பரவலாக்கலாம்” என்று பேச,

அழுது கொண்டிருந்த மாணவியின் அம்மா “அவர்களிடம் பேட்டி கொடுத்தால் மட்டும் என் பிள்ளை திரும்பி வந்து விடுமா? உங்களால் என் பிள்ளையை திருப்பி கொடுக்க முடியுமா? இறந்தது என் பிள்ளை, அதற்கு நியாயம் கிடைக்கணும். பத்திரிக்கையில என் மகள், என் கண் முன் தான் விழுந்து இறந்தாள் போட்டிருக்குது, எப்படி அவர்கள் எழுதுவார்கள், என் பிள்ளையின் மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்காது, யாரோ தள்ளி விட்டு தான் இருக்கணும், என்ன நடந்தது என்று யாரும் சொல்ல மாட்றாங்க, தனியா அந்த பிள்ளை ஏன் மொட்டை மாடிக்கு போகணும், அப்படி போகணும் என்று நினைத்தாலும் வழி குறுகலாகத்தான் இருக்கும். அதில் பையை மாட்டிக் கொண்டு போய் இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை தற்கொலையாகவே இருந்தாலும், பெற்றோர்கள் பிள்ளையை காணவில்லை என்று சொல்லும் போது, ஒழுங்காக எந்த பதிலும் சொல்ல வில்லை. நாங்க காசு கொட்டி அழுதது, பிள்ளையை அவர்கள் காவு வாங்குவதற்கா? நம்பி தானே பிள்ளையை அனுப்பினேன். இப்போது பிணமாக அனுப்பி இருக்காங்க, எனக்கு இதற்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்” என்றபடி அந்தத்தாயும் அவரின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட கிளம்பினார்கள்.

நாம் வருவதற்கு முன்பே தனியார் பள்ளியைக் காக்க போலீசு காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. போலீசு மக்களை தடுத்து நிறுத்த முயன்ற போதும் யாரும் கலைந்து செல்லவில்லை. நேரம் செல்லச்செல்ல மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்து ஏறத்தாழ முந்நூறைத் தொட, இன்ஸ்பெக்டர் வந்து பள்ளிக்கு ஆதரவாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

”பள்ளியின் தாளாளர் இங்கு வந்தாக வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம்” என மக்கள் கூறத்தொடங்க, ”எங்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசம் கொடுங்கள் இப்போது வந்து விடுவார்கள்” என்று கூறிய போலீசு சிறிது நேரத்தில் , பள்ளியின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர்களை மட்டும் உள்ளே அனுப்பியது.

உள்ளே பேச்சு வார்த்தையின் போது, பள்ளி முதல்வரின் தந்தை “ஒழுக்கமான பொண்ணா இருந்தா தற்கொலை பண்ணியிருக்காது, வீட்டுல ஒழுக்கமா வளர்க்காம இங்க வந்து பேசுற”? என்று எகிற, பள்ளி முதல்வர்  ”இது தவறு தான் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், வெளியே பெரிய விசயமாக கொண்டு செல்லாதீர்கள் , காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்று இருவரும் நாடகமாட, எவ்வித முடிவும் இல்லாமல் மக்கள் வெளியேறினார்கள்.

நிர்வாகத்தின் சார்பில், பி.டி ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், மற்றும் வாட்ச்மேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தனர். மக்கள் இதை ஏற்காமல் “நடவடிக்கை மட்டும் போதாது, அவர்களையும் பள்ளி நிர்வாகியையும் கைது செய்ய வேண்டும்” என்று கூச்சலிட, அதை ஏற்பது போல கூறி சிலரை சஸ்பெண்ட் செய்வதை மட்டும் எழுதிக்கொடுத்தது பள்ளி நிர்வாகம்.

அதை ஏற்க மறுத்த மக்கள் மீது போலீசு தடியடி நடத்தி தன் விசுவாசத்தைக் காட்டியது. சிதறி ஓடிய 50 பேரை குறிவைத்துத் தாக்கி, தான் தனியார் பள்ளி முதலாளிகளின் விசுவாசமிக்க நாய் என்பதை மீண்டும் நிரூபித்தது. அரசு ஊரை ஏமாற்ற அமைத்த ஆர்டிஓ விசாரணையோ தனியார்பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் விசாரணை நடத்திவிட்டு சென்றது.

வைஷ்ணவியின் அப்பா உதயகுமார் நம்மிடம் “ஆர்டிஓ அறிக்கை வர ஒரு வாரம் ஆகுமாம். இனி எது செய்தாலும் பயன் இல்லை, நாளை என் பிள்ளைக்கு நடந்தது வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக் கூடாது. இருக்குற இன்னொரு புள்ளையையும் தனியார் பள்ளிக்கு நான் காவு கொடுக்க மாட்டேன். உடனே டிசியை வாங்கிட்டு, அவனை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க போறேன். அவனோட உயிர்தான் முக்கியம்.”என்றார்.

பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்றால் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மேல் நடத்தும் உளவியல் சித்திரவதை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படிக்கும் வயதில் படிப்பதற்கான செலவே கழுத்தை நெரிக்கும் காரணமாக இருந்தால் வைஷ்ணவி ஒரு கணத்தில் ஏன் உடைந்து போக கூடாது? அல்லது வேறு காரணங்களா? அப்படி இருந்தாலும் பள்ளி பெயரைக் காப்பாற்ற இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். வைஷ்ணவியின் பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கதறலை நெரிப்பதற்கு அரசும், போலிசும், சங்கர வித்யாலயாவும் பெரு முயற்சி செய்கின்றன.

கல்வி தனியார்மயத்தை ஒழிக்கப் போராடாமல் இனியும் நாம் அமைதியாக இருந்தால் கல்வி தனியார்மயத்தின் புதைகுழியில் நம்பிள்ளைகளை பலிகொடுப்பதில்தான் முடியும் என்பதைத்தவிர வைஷ்ணவியின் மரணம் வேறெதைக் கூறுகிறது?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் –
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை . தொடர்புக்கு : 9445112675

உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

4

தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்

திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சே்ாந்த மாணவர்கள் 250 பேர் தங்கி படித்து வருகின்றனர். கழிவறை வசதி கேட்டும், நல்ல சோறு, நல்ல தண்ணீர் வசதி கேட்டும் விடுதியின் அவலநிலைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதிகடந்த டிசம்பர் மாதம் (2013), “சுகாதாரத்தைப் பற்றி வாய்கிழிய வகுப்பெடுக்கும் மாவட்ட ஆட்சியரே! கழிவறையை கட்டி கொடு, இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து விடு!” என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் இணைந்து நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டினோம்.

அதன் பிறகு, நிர்வாகம் புதிய கழிவறை கட்டிக் கொடுத்தது. பராமரிப்பின்றி கிடந்த கழிவறைகளை சீர்செய்தது. விடுதியில் உள்ள முட்புதர்களை வெட்டியதும், தண்ணீர் குழாய்களை போட்டு தருவதும் என கண்துடைப்பு நாடகமாக பெயரளவுக்கு சில பராமரிப்பு வசதிகளை செய்து கொடுத்தனர்.

அப்போது, ‘போர்டு மாணவர்களின் சாப்பாட்டை கெஸ்ட்டாக தங்கி இருக்கும் மாணவர்கள் வாங்கிக் கொள்வதும், கழிவறையை பயன்படுத்தியதும்தான் பிரச்சனை, அவர்கள் தான் போராடுகிறார்கள்’ என்று கெஸ்ட் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றியது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டியது போல அதிகாரிகள் நடித்தனர்.

குள்ளநரி சாயம் வெளுத்து போனது போல, மாவட்ட அதிகாரிகளின் யோக்கியதை அம்பலமாக தொடங்கியது.

02-07-2014 அன்று காலை குடிநீர் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குடிநீர் சகதி கலந்த செம்மண் நிறத்தில் வருவதை கண்டனர். மேலும், கல்லூரி துவங்கி ஏழு நாட்கள் ஆகியும் தரம் குறைந்த உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவது, கழிவறையை திறந்து விடாமல் பூட்டி வைத்திருப்பது என மாவட்ட நிர்வாகம் மாணவர்களை வஞ்சிக்க ஆரம்பித்தது. அதிகாரிகள் தன் வீட்டில் குளிரூட்டப்பட்ட மேற்கத்திய பாணி கழிவறையில் மலம் கழிக்கின்றனர். ஆனால் இங்கு விடுதி மாணவர்கள் திறந்த வெளியில், முட்புதர்களில் மலம் கழிக்கின்றனர்.

தொடர்ந்து இது போன்ற இன்னல்களை பொறுக்க முடியாத மாணவர்கள் பு.மா.இ.மு வுடன் தொடர்பு கொண்டு, விடுதி மாணவர்களும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் அன்று காலையே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் முருகவேல், ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்வது போல, சகதி கலந்த குடிநீரை விடுதி அட்டண்டரிடம் கொடுத்து, “இந்த நீரை நீ குடிய்யா? பாக்கலாம்”, என்று கூறி, பிறகு அந்த நீரை அவர் குடித்து காட்டினார். பிறகு அட்டண்டர் குடித்தார். தனது சொந்த செலவில் குடிநீர் வரவழைப்பதாக கூறி போராட்டத்தை முடிக்கக் கூறினார்.

“ஒரு நாள் கொடுப்பீங்க சார், வருடம் முழுவதும் கொடுப்பீங்களா?” என்று மாணவர்கள் கேட்டனர். “எங்கள் விடுதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், நல்ல தண்ணீர் வர வேண்டும்” என பேசிய மாணவர்கள் “அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்று அந்த காவல் ஆய்வாளருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதன்பின் வந்த கோட்டாட்சியர் பஷிர் அலி, வழக்கம் போல் பிரச்சனையை கேட்டு மாணவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பேசினார். உடனே மாணவர்கள், “சார் செய்து தரேன்னு சும்மா சொல்லாதீங்க சார்…, ஏன் இத்தனை நாளா எதுவும் செய்யலைனு பதில் சொல்லுங்க..” என கேள்வி கேட்டு அவரை சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் புதிய பொறுப்பு என அறிவித்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சொர்ணா பியுலா அங்கு வந்து, “10 அல்லது 15 நாட்களில் சரிசெய்வோம்” என திமிராக பேசினார்.

உடனே மாணவர்கள் பதிலடியாக, “அப்ப அதுவரைக்கும் உங்க வீட்டையும், கக்கூசையும் திறந்து விடுங்க… நாங்க அங்க தங்கியிருக்கோம்! நீங்க இங்க எங்க விடுதில தங்கி பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு…” என ஆதங்கத்தோடு பேச வாயை மூடினார் தாசில்தார்.

உடனே சுத்தமான தண்ணீர், நல்ல உணவு, நூலகவசதி, பத்திரிக்கை, மின்விசிறி போன்றவை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தபின் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அன்று மாலை வந்த உதவி கலெக்டர் முருகையா, ‘அமைப்பில் இணைந்து போராடினால் படிப்புக்கு பிரச்சனை’ என மாணவர்களை மிரட்டினார்.

பிறகு நாம் தலையிட்டபோது ‘மாணவர் அமைப்பிற்கு விடுதியில் என்ன வேலை’ என பு.மா.இ.மு தோழர்களை பார்த்து பணிந்து கேட்டார்.

“UGC விதிமுறைப்படி கல்லூரியிலும், விடுதியிலும் மாணவர்கள் கோரிக்கைகாக மாணவர்கள் சங்கமாக, அமைப்பாக சேர்ந்து செயல்படலாம் என உரிமை உள்ளது. அதனால் விடுதியில் அல்லது கல்லூரிகளில் எதாவது பிரச்சனை என்றால் மாணவர்கள் எங்களிடம் (பு.மா.இ.மு) தான் சொல்கிறார்கள். எந்த அதிகாரியிடமும் சொல்வதில்லை. மாணவர் உரிமைக்காக போராடுவது எங்கள் உரிமை. அதை மறுப்பது சட்டப்படியும், நீதிப்படியும் தவறு, மறுத்தால் பணிந்து போக மாட்டோம்” என்று கூறினோம்.  “மாணவர்களை சங்கமாகசேரக் கூடாது என்று மிரட்டினால் – UGC சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் உங்கள் யோக்கியதையை அம்பலப்படுத்தி போஸ்டர் போட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்” என்று கூறிய போது வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார் உதவி கலெக்டர் முருகையா.

மாணவர்கள் அமைப்பாக இருந்து போராடினால் மட்டுமே வெற்றி என்று கூறியதை விடுதி மாணவர்கள் ஆதரித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?

207
ஐ.எஸ்.ஐ.எஸ் அணிவகுப்பு
அதிநவீன ஆயுதங்களுடன் இராக்கிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதப் படையினரின் அணிவகுப்பு.

டந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புப் போரினால் நாசமாக்கப்பட்டுள்ள இராக், உள்நாட்டுப் போரினால் குருதிச் சேற்றில் புதைந்து கொண்டிருக்கிறது.

இராக்கின் வடமேற்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் புதியதொரு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் வேகமாக வளர்ந்துள்ளதோடு, இப்பயங்கரவாதிகள் இராக்கின் பொம்மை அரசுக்கு எதிராக நடத்திவரும் போர்த்தாக்குதல்களை, அடுத்து சிரியாவின் வடபகுதியிலுள்ள அலெப்போ நகரிலிருந்து இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரையிலான பகுதிகளைத் தனிநாடாக்கி, ஷாரியத் சட்டப்படியான இஸ்லாமிய அரசை (கிலாஃபத்) உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையிலான இந்த சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கிலுள்ள ஷியா மார்க்கத்தினர் மீதும் அவர்களது மசூதிகள் மீதும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இராக்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினரும் குர்திஷ் இனத்தவர்களும் இதர மத, இனச் சிறுபான்மைப் பழங்குடிப் பிரிவினரும் கொண்ட நாடுதான் இராக். இராக்கில் சதாம் ஆட்சி அமெரிக்காவால் தூக்கியெறியப்பட்ட பின்னர், இராக்கின் தெற்கே பஸ்ராவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தி வந்தனர். மறுபுறம், இராக்கின் வடமேற்குப் பகுதியில் இராக்கிய அல்கய்தா என்ற ஒரு சன்னி மார்க்க ஆயுதக்குழு அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திவந்தது. இதன் தலைவர்களுள் ஒருவரான அல் பாக்தாதி பின்னர் அமெரிக்காவின் விசுவாசக் கைக்கூலியாக மாறினார். இராக்கின் அண்டை நாடான சிரியாவின் ஆசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல் பாக்தாதியின் கூலிப்படையை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்தது. இக்கூலிப்படைக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.

அப்போது சிரியாவில் இயங்கியவந்த இன்னுமொரு இஸ்லாமிய அடிப்படைவாத அல் நுஸ்ரா என்ற அமெரிக்கக் கூலிப்படையுடன் இணைந்து அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ். ) அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவண்ட் (ஐ.எஸ்.ஐ.எல்.) எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர இந்தக் கூலிப்படையை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்ட போதிலும், அந்தக் குழுவோ வாய்ப்பைச் சாதகமாக்கிக் கொண்டு வங்கிக் கொள்ளைகளிலும், ஆயுதப் பறிப்பிலும் ஈடுபட்டுப் புதியதொரு பயங்கரவாத இயக்கமாக வளர்ந்துவிட்டது. இராக் மீதான இத்தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கவலை கொண்டுள்ளதாகக் கூறும் அமெரிக்காவின் ஒபாமா அரசுதான், நேற்றுவரை இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான சுதந்திரத்துக்கான போராளிகள் என்று சித்தரித்தது. இப்போது அவர்கள் பயங்கரவாதிகளாகவும், இராக்கின் ஜனநாயக அரசைச் சீர்குலைப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இராக் அகதிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் படையினரின் போர்த்தாக்குதலாலும் அமெரிக்க பொம்மை அரசின் எதிர்த்தாக்குதலாலும் உயிருக்கு அஞ்சி அகதிகளாகத் தப்பியோடும் இராக்கிய மக்களின் அவலம்.

ஏதோ சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால்தான் இராக்கின் அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைப் போல அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. உண்மையில் ஏகாதிபத்தியவாதிகளால்தான் இராக் மட்டுமின்றி மேற்காசியா பிராந்தியமே பேரழிவுக்கு ஆளாகி நிற்கிறது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போர்தானேயன்றி, அமெரிக்கா கூறுவதுபோல அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அதன் நோக்கமல்ல. தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் எண்ணெய் வளமிக்க மேற்காசியப் பிராந்தியம் இருக்க வேண்டும்; அதேசமயம் அப்பிராந்தியத்தில் தனது மறுகாலனிய நடவடிக்கைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை மடைமாற்றிவிடும் நோக்கில் மத, இனப் பிரிவுகளுக்கிடையே முறுகல் நிலையும் பதற்றநிலையும் நீடிக்க வேண்டும் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் அணுகுமுறையாக உள்ளது.

உலக மேலாதிக்கத்துக்காக கெடுபிடிப் போர்களில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தீவிரமாக ஈடுபட்டுவந்த காலத்தில், மத்திய ஆசிய நாடுகளின் மதவாதப் பிற்போக்குக் கும்பல்களுடன் அமெரிக்கா கூடிக் குலாவி தனது செல்வாக்கின்கீழ் அந்நாடுகளைக் கொண்டுவந்தது. அன்று இரான் மன்னன் ஷா-வுடைய ஆட்சியை அமெரிக்கா ஆதரித்தது. ஷா ஆட்சியையும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடிய கொமேனி தலைமையில் இஸ்லாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்ததும், இரானைத் தாக்க அதன் அண்டை நாடான இராக்கின் அதிபர் சதாம் உசேனைத் தூண்டி விட்டு, விசவாயு உள்ளிட்ட ஆயுதங்களைச் சதாமுக்கு வழங்கியது, அமெரிக்கா. எட்டு ஆண்டுகள் நடைபெற்ற இரான் – இராக் போரில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இரு நாடுகளும் பேரழிவுக்குள் தள்ளப்பட்டன.

இதே காலகட்டத்தில் ஆப்கானை அன்றைய சோவியத் வல்லரசு ஆக்கிரமித்ததும், ரசியாவை வெளியேற்றுவதற்கு சன்னி வகாபி அடிப்படைவாதக் குழுக்களை அமெரிக்கா உருவாக்கியது. இதற்குப் பயிற்சியளிப்பதற்காகவே பாகிஸ்தானில் ஏராளமான மதரசாக்களை உருவாக்க சவூதி அரேபிய மன்னராட்சியும் அமெரிக்காவும் இணைந்து நிதியுதவி செய்தன. ஆப்கானின் பழங்குடி யுத்தப்பிரபுக்களுக்கும் முஜாகிதீன்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி செய்தது. இதற்கு உதவியாக பாகிஸ்தான் மாற்றப்பட்டு, அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இப்பணிகளை பாகிஸ்தானின் உளவுப்படை ஒருங்கிணைத்தது.

ஷியா முஸ்லீம்கள்
சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்க பொம்மை அரசுப் படைகளுக்கு ஆதரவாகவும் இராணுவச் சீருடையுடன் அணிதிரண்டுள்ள ஷியா முஸ்லிம்கள்.

சோவியத் வல்லரசு தனது படைகளை விலக்கிக் கொண்டு ஆப்கானிலிருந்து வெளியேறியதும், அமெரிக்காவின் ஆதரவுடன் தாலிபான்களின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. இருப்பினும், தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் தத்தமது நலன்களையொட்டி முரண்பாடுகள் எழுந்து அவை பிளவுபட்டன. வளைகுடாப் போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் இஸ்லாமிய மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தன. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பின்லேடனின் அல்கய்தா இயக்கம் வளரத் தொடங்கி தாலிபான்களும் அல்கய்தாவுடன் சேரத் தொடங்கினர். அமெரிக்காவுடன் அது முரண்படத்தொடங்கியதும் அல்கய்தா இயக்கம் ஆப்கான் மட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டது. போர்த்தாக்குதல்களால் ஆப்கான் சிதைக்கப்பட்டு அமெரிக்காவின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது.

தனது முன்னாள் காலனிய நாடுகள் அல்லது சோவியத் ஆதரவு நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றுவதற்கும், தனது மேலாதிக்கத்தின் கீழ் வராத இதர நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நடத்துவதற்கும் ஜனநாயகம், மனித உரிமை, தேசியஇன விடுதலை என்ற பெயரில் தலையிட்ட அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தைப் பல நாடுகளாகத் துண்டாடித் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது. பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் நாடுகள் துண்டாடப்பட்டன. மேற்காசியாவில் இராக் மீது காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தியது. இந்தியாவில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத ரீதியாகப் பிளவுபடுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதைப் போலவே, இராக்கில் இஸ்லாமியர்களின் ஷியா மற்றும் சன்னிப் பிரிவுகளுக்கிடையிலான மோதலைத் தனது தேவைக்கேற்ப அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு தனது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டியது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக அடுத்தடுத்து சிரியா, லிபியா என்று காய்களை நகர்த்தியது.

தனது நோக்கங்களுக்குச் சேவைசெய்யும் வகையிலான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தலைமையிலான ஒருபொம்மை அரசை இராக்கில் உருவாக்கி ‘ஜனநாயக’த்தையும் ‘அமைதி’யையும் சாதித்துவிட்டதாகக் கூறிக் கொண்டாலும், அமெரிக்காவால் அதனை உறுதியாக நிலைநாட்டிக் கொள்ள முடியவில்லை. அந்த பொம்மை அரசு பலவீனமானதாகவும், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கத்தைக் கொண்டதாகவும் இருந்ததால், சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் வளர்ந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கக் கிளம்பிவிட்டன. இதேபோல சிரியாவிலும் லிபியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களைக் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முன்வைத்த இராணுவ தந்திரத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து விட்டன.

ஆப்கானில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட பின்னர், அங்கு ‘அமைதி’யை நிலைநாட்ட கர்சாய் தலைமையிலான ஒரு பொம்மை அரசை அமெரிக்கா உருவாக்கியது. ஆனாலும் தாலிபான்களை ஒடுக்க முடியாத நிலையில், ‘அமைதி’யை நிலைநாட்டுவது என்ற பெயரில் இப்போது ‘நல்ல’, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அதேபோல இராக்கிலுள்ள தனது பொம்மை அரசைப் பாதுகாக்க முடியாத நிலையில், இராக் மற்றும் சிரியாவில் புதியதொரு கூலிப்படையை உருவாக்கி அதன் மூலம் இராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை முடக்கிவிட முயற்சிக்கிறது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் உள்நாட்டுப் போர்களையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நிரந்தரமாக்குகிறது.

அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
“நாடு சீர்குலைக்கப்பட்டு 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள ஈராக் மீது போர் தொடுக்காதே!” எனும் முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தும் அமெரிக்க மக்கள்.

இராக் உள்நாட்டுப் போரின் பின்புலம் இதுதான். இராக்கிலும் சிரியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நடக்கும் போர்களுக்கும் ரத்தக்களறிகளுக்கும் காரணமான பிரதான குற்றவாளி அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். இந்த வரலாற்று உண்மையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இடமிருந்து அமெரிக்காதான் இராக்கை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்த் திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா, அமெரிக்கா உருவாக்கியுள்ள இராக்கிய அரசுக்கு உதவுவதாகவும் மறுநிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறிக்கொண்டு அமெரிக்காவுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலை செய்கிறது. கட்டிடப் பணியாளர்கள் முதல் செவிலியர்கள் வரையிலானவர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கிறது. தற்போது உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டுவிட்ட செவிலியர்கள் உள்ளிட்டோரை மீட்பதற்குப் போர்க்கப்பலை அனுப்பி, தனது புஜபலத்தைக் காட்டும் நாடகத்தை நடத்திவருகிறது, மோடி அரசு. இப்படித்தான் ஆப்கானில் அமெரிக்க பொம்மையாட்சியின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டபோதும், தனது குற்றத்தை மறைத்துக் கொண்டு இந்திய அரசு நீலிக்கண்ணீர் வடித்தது. இந்திய அரசு மறைமுகமாகச் செய்யும் இந்த அமெரிக்க தொண்டூழியத்தைத்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்களுக்கு எதிராக இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்வைக்கின்றனர். இஸ்லாத்தின் மூலம் அரபு நாடுகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை. ஷியா மற்றும் சன்னி பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் மென்மேலும் அதிகரிக்கின்றனவேயன்றி, குறையவில்லை. அகண்ட இஸ்லாமை நிறுவ முயற்சித்தாலும் அதன் மூலம் காலனியாதிக்கத்தையோ, மேலாதிக்கத்தையோ வீழ்த்த ஒருக்காலும் சாத்தியமில்லை.

வர்க்க உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக அரசியலும்தான் மக்களை ஒன்றிணைக்குமே தவிர, மதத்தின் மூலமாக மக்களை ஒருக்காலும் ஒன்றிணைக்கவோ, ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்தை வீழ்த்தவோ முடியாது; மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தியபடியே, அமெரிக்க மேலாதிக்கம் – இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் இரட்டை நுகத்தடியில் சிக்கிய இராக் மீண்டும் பேரழிவுக்குள் அமிழ்த்தப்படுகிறது.

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2014
_________________________________

விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து

4

உலகக் கோப்பைக் கால்பந்து 2006: விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து

(2006 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ஒட்டி, புதிய கலாச்சாராத்தில் வெளிவந்த கட்டுரை)

“2006-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?” என்று ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஃபிஃபா சொத்து
உலகக் கோப்பைக் கால்பந்து என்ற சொற்றொடர் கூட ஃபிஃபாவுக்கு சொந்தம்.

காரணம் அந்த சொற்றொடர் கூட ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை அந்த சங்கத்தின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்கள் தவிர வேறு எவரும் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது ஃபிஃபா உலகெங்கும் வழக்கு தொடுத்திருக்கிறது. ஜெர்மனியில் மட்டும் கால்பந்து தொடர்பான தங்களது காப்புரிமைகளை காப்பாற்றுவதற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட சந்தைப் படை நிர்வாகிகளை ஃபிஃபா சுற்றவிட்டிருக்கிறது.

இரசிகர்கள் கால்பந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஃபிஃபாவும், பன்னாட்டு நிறுவனங்களும் போட்டியை வைத்து காசாக்குவதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. கால்பந்து என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

முக்கனிகளில் சுவையான முதல் கனி மா போல விளையாட்டுகளில் அழகானது கால்பந்து. பதினொரு பேர் கொண்ட அணியினர் பந்தைக் காத்து, கடத்தி, உதைத்து, கட்டுப்படுத்தி, சீற வைத்து, கால்களால் கோலமிட்டு கண நேர வித்தையில் கோல் போடும் அந்த விளையாட்டு நிச்சயம் அழகானதுதான். இந்த அழகின் வலிமையை நிகழ்த்திக் காட்டிய பல்வேறு அணிகளையும், பீலே முதல் மரடோனா, மெஸ்ஸி வரையிலான வீர்ர்களையும் மறக்க முடியாதுதான்.

இது ஒலிம்பிக்கிற்கு இணையாக உலகமக்கள் பார்க்க விரும்பும் தனித்துவமிக்க விளையாட்டு. கால்பந்தின் மொழியில் இணையும் சர்வதேச உணர்வு, பல்வண்ண ஆடைகளை அணிந்திருக்கும் வீரர்களை குழந்தைகள் அழைத்து வருகிறார்கள். விதவிதமான இராகங்களில் தேசியகீதம், அந்த நேரத்தில் குறும்புக்கார வீரர்கள் சிலர் கண்ணடிக்கிறார்கள். சவுதி அணிவீரர்கள் கோல் போட்டதும் அல்லாவைத் தொழுகிறார்கள். கானா வீரர்கள் சிலுவை போடுகிறார்கள். ஐவரி கோஸ்ட் வீர்ர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடி நடனம் ஆடுகிறார்கள். பிரேசில் இரசிகர்கள் சம்பா நடனம் ஆடுகிறார்கள்.

உலகக் கோப்பை கால்பந்து
கால்பந்து மேஜிக்

பல்தேசியக் கொடிகளின் வர்ணங்கள் பூசப்பட்ட அழகான முகங்கள், தத்தமது அணிகளின் சட்டைகளை அணிந்தவாறு நடனமாடும் இரசிகர்கள், பீலே பாணி உதை, மரடோனா கையால் போட்ட கடவுளின் கோல், மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போது இரசிகர்கள் முதன் முதலாக உருவாக்கிய கடல் அலையின் ஆர்ப்பரிப்பு, முந்தைய போட்டியொன்றில் முதல் நுழைவிலேயே காலிறுதி வரை சென்ற காமரூன் அணியின் சாதனை, சென்ற உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென் கொரிய அணி, இவ்வாண்டு போட்டியின் காலிறுதியில் பெனால்டி உதையில் தோற்ற அர்ஜென்டினா அணி வீரர்களின் கதறல், வெற்றி பெற்ற ஜெர்மன் அணி பயிற்சியாளர் கிளிம்ஸ்மென்னின் உற்சாகம், கால்பந்தை நேசிக்கும் கேரளத்தில் அர்ஜென்டினா அணியின் வண்ணத்தை தமது படகில் பூசி அழகு பார்க்கும் மீனவர்கள், இந்தியாவில் கால்பந்து உயிர்த்திருக்கும் மேற்கு வங்கத்தில் உலகக் கோப்பைப் போட்டிகளை கூட்டமாக அமர்ந்து பார்க்கும் தொழிலாளிகள்.

கால்பந்தின் நினைவுகளில் தோய்ந்து எழும் படிமங்கள் கவித்துவமானவை. இந்தக் கவித்துவம் போட்டியை நேரடி ஒளிபரப்பில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து எழவில்லை. உலகமக்களில் பெரும்பான்மையினர் இன்னமும் கால்பந்தைக் காதலிக்கிறார்கள் என்பதே அதன் தோற்றுவாய்.

1954-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்போது தொலைக்காட்சி இல்லை. இன்று வரையிலும் உலகின் தலைசிறந்த மாஜிக் அணி என்று போற்றப்படும் 1958-ம் ஆண்டின் பிரேசில் அணியில் பீலே, தீதி, கார்ரின்ச்சா முதலான வீரர்களின் ஆட்டத்தை வானொலியில் மட்டுமே கேட்க முடிந்தது. அந்தப் புகழ்மிக்க ஆட்டத்தின் துடிப்பை ஸ்பானிய வருணனையாளர்கள் உரையில் கொண்டு வந்தார்கள்.

1970-ல் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போதுதான் தொலைக்காட்சி வந்தது. பொருளாதாரத்தில் பிரிந்திருந்த முதல் உலகமும் மூன்றாம் உலகமும் கால்பந்தில் சேருவதற்கான வாய்ப்பை 80-களில் உலகமயமும், செய்தி–விளையாட்டு ஊடகங்களும் உருவாக்கின. ஆனால் இந்த வாய்ப்பு கால்பந்து என்ற விளையாட்டை வளர்ப்பதற்கு அல்ல, அதைச் சந்தையில் விலைபேசும் பண்டமாக மாற்றுவதற்கே பயன்பட்டது.

இன்று உலகக் கோப்பை என்பது திறமையும் துடிப்பும் கொண்ட தென் அமெரிக்க – ஆப்பிரிக்க இளம் வீரர்களை ஐரோப்பாவின் தனியார் கிளப்பைச் சார்ந்த தரகர்கள் அடையாளம் காணும் மாட்டுச் சந்தையாக மாறிவிட்டது. இரசிகர்கள் தேசப்பற்றுடன் கூச்சலிடும்போது வீர்ர்கள் தங்கள் திறனை அடையாளப்படுத்துவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

வணிகமயமான கால்பந்து
வணிகமயமான கால்பந்து

கால்பந்தில் ஒரு அணியின் வலிமையான துடிப்பான ஒற்றுமையில்தான் ஒருவர் கோல் போட முடியும். அதனால் கோல் போட்டதின் பெருமை பல வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தின்பால் சேரும். இன்றோ கோல் போடுபவர் மட்டுமே நட்சத்திர வீரர் என்று தொலைக்காட்சியும், ஸ்பான்சர் நிறுவனங்களும் இலக்கணத்தை மாற்றிவிட்டன. அதனால் பல வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் போடவேண்டும் என்று நினைப்பதால் பலவாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு அந்த அணிகள் சுயநலத்தின் விளைவைச் சந்திக்கின்றன. இப்படி ஒவ்வொரு வீரரும் நட்சத்திர வீரராக மாறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

தன் நாட்டுக்காக ஆடுவதில் அவர் பெருமைப்படுவதில்லை. மாறாக தன் நாட்டுக்காக ஆடுவதற்கான வாய்ப்பை வைத்து ஐரோப்பாவின் புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா, லிவர்பூல், ரியல் மாட்ரிட், பார்சிலோனா, ஏ.சி.மிலன் முதலான பணக்கார கால்பந்து கிளப்புகளில் விளையாடி கோடிசுவரனாக மாறவேண்டும். அப்படி நட்சத்திர வீரராக நிலைபெற்ற பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர தூதராக கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் இலட்சியம்.

விளையாட்டில் கால்பந்து மட்டுமே சர்வதேசப் பிரபலத்தைக் கொண்டிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நட்சத்திரங்களை உருவாக்கி விற்பதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று கால்பந்தைக் கட்டுப்படுத்துவது இந்த தனியார் கிளப்புகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

இங்கிலாந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் சொத்து மதிப்பு மட்டும் 600 கோடி. ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடும் பிரான்சின் ஜிடேனின் வார ஊதியம் 75,000 பவுண்டுகள், பிரேசிலின் ரொனால்டோவின் வாரஊதியம் 60,000 பவுண்டுகள். நல்ல மாடுகளைப் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் தேடிப் பிடித்து வாங்குவதைப் போல, பல ஐரோப்பிய கிளப்புகள் தென்னமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் பல ‘மாட்டுத் தரகர்களை’ வைத்திருக்கின்றன.

கால்பந்து
மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டி சம்பாதிக்கிறது.

இந்த இரு கண்டங்களைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தற்போது ஐரோப்பிய கிளப்புகளுக்காக விளையாடி வருகிறார்கள். மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டி சம்பாதிக்கிறது. ஐரோப்பாவில் தேசிய உணர்வைவிட கிளப் உணர்வு அதிகம். அதனாலேயே ஃபிஃபா உலகக் கிளப் கோப்பைக் கால்பந்து போட்டிகளையும் நடத்துகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கிளப்புகள் விளையாட்டு ஆர்வத்திற்காக துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களாக மாறிவிட்டன. இவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களின் விற்பனைக்கேற்ப பங்கு விலை உயரும். பலதொழில்துறை, ஊடக முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது பல உலகநாடுகளில் உள்ள கால்பந்தை நேசிக்கும் ஏழ்மையான கிளப்புகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. லத்தீன் அமெரிக்க ஏழைமக்கள் வாழும் சேரிகளிலிருந்து மட்டும்தான் வீரர்கள் கிடைக்கிறார்கள் என்ற அளவில் அவர்களுக்கு ஏழ்மை தேவைப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள், கிளப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களுக்கிடையே கால்பந்தின் ஆதாயத்தை பங்கிட்டுத் தரும் வேலையினை ஃபிஃபா ஒரு அரசு போல செய்து வருகிறது. பழைய மிட்டாமிராசுகள் காளைகளையும், குதிரைகளையும் வளர்த்து பெருமை காண்பிப்பார்கள். நவீன முதலாளிகளோ கால்பந்து அணியினை பெருமைக்காகவும் வருவாய்க்காகவும் வளர்க்கிறார்கள்.

கால்பந்தில் வர்த்தகம் விளையாட ஆரம்பித்த சில வருடங்களிலேயே ஊழலும் விளைய ஆரம்பித்து விட்டது. நட்சத்திர வீரர்களை வாங்கி விற்பதில் ஊழல், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து மோசடி செய்தல் என்று ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் ஊழல் புராணம் மேற்குலகின் ஊடகமே தாங்க முடியாத அளவில் நாறி வருகிறது. இதில் விளையாட்டு எங்கே இருக்கிறது? கால்பந்தில் வணிகமயமாக்கம் நடந்தேறிய பிறகு விளையாட்டு தொலைந்து போனது குறித்து மேற்குகலகின் அறிவுஜீவிகள் வருத்தப்படுகிறார்கள். கடிவாளம் கை மாறிய பிறகு குதிரை குறித்து நொந்து என்ன பயன்?

ஒரு கிளப்புக்கு ஒரு நட்சத்திர வீரர் எப்போது வருவார், எவ்வளவு காலம் இருப்பார் என்பது அந்த கிளப்பின் பயிற்சியாளருக்குக்கூடத் தெரியாது. இப்படி பல நாடுகளைச் சேர்ந்த, பலமொழி, பண்பாட்டு பின்புலமுள்ள வீரர்களை ஒரு அணியாக்கிப் பயிற்சியளித்து விளையாட வைப்பது ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துவது போல இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார் ஒரு பயிற்சியாளர்.

கால்பந்தை சீரழித்த நிறுவனங்கள்
கால்பந்தை சீரழித்த வணிக நிறுவனங்கள்

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும். இப்படி விளையாட்டில் மட்டுமல்ல இரசனையிலும் தரம் மிகவும் கீழே இறங்கிவிட்டது.

தற்போதைய உலகக் கோப்பைக்காக ஜெர்மனி வந்துள்ள இரசிகர்கள் விளையாட்டு பார்க்க மட்டுமல்ல, மாபெரும் கேளிக்கைக்காகவும் வந்துள்ளனர். இவர்களுக்காக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 40,000 விலைமாதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சோவியத் யூனியனிலிருந்தும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலிருந்தும் தரமான விளையாட்டு அணிகள் வந்தன. தற்போதைய உலகக் கோப்பைக்காக ரசியாவிடமிருந்து கூட அணி வரவில்லை. ஆனால் விலைமாதர்கள், தடையின்றி வருகின்றனர். சோசலிசத்தை வென்ற முதலாளித்துவம் உலகிற்கு அளித்திருக்கும் கொடை இதுதான்! இப்படி ரசிகர்கள் பீரைக் குடித்து, செக்சில் மூழ்கி, கால்பந்தையும் இரசிக்கிறார்கள்.

இப்படிக் கால்பந்தை சீரழித்த பன்னாட்டு நிறுவனங்களின் தெரியாத முகம் ஒன்றும் உள்ளது. உலகக் கால்பந்தின் 60% பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் எனும் இடத்தில் தயாராகிறது. சுமார் 2,000 பட்டறைகளில் சுமார் 40,000 கொத்தடிமைத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்காக கால்பந்துகளை தைத்து வருகின்றனர். அடிடாஸ், நைக், பூமா போன்ற பிரபலமான விளையாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கேதான் கால்பந்துகளைத் தயாரிக்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 50 ரூபாய் மட்டும் கூலி கொடுத்து கொடூரமாகச் சுரண்டிதான் இந்த நிறுவனங்கள் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்கின்றன.

கால்பந்து குறித்த சோகக்கதையில் இந்திய சோகத்தை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா உலகக் கால்பந்து நாடுகளின் தரவரிசையில் 117-வது இடத்தில் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறது. ‘வாழைப்பழக் குடியரசு’ என்று கேலி செய்யப்படும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து டிரினிடாட் மற்றும் டுபாக்கோ என்ற பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு கூட உலகக் கோப்பைக்காக தனது அணியை அனுப்பியிருக்கிறது. ஆனால் 100 கோடி மக்கள் தொகையில் ஒரு 11 பேரைக்கூட தயார் செய்ய முடியவில்லை.

இதுவும் விளையாட்டு குறித்த பிரச்சினையல்ல, இந்தியாவில் ஜனநாயகம் என்ன தரத்தில் இருக்கிறதோ விளையாட்டும் அந்த தரத்தில்தான் இருக்கும். ஆனால் வர்த்தகத் தரம் அந்த அளவுக்கு மோசமில்லை. இ.எஸ்.பி.என் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப சுமார் 55 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களைப் பிடித்திருக்கிறதாம். சென்றமுறை டென் ஸ்போர்ட்ஸ் பத்து கோடிக்குத்தான் வர்த்தகம் செய்தது எனும் போது இது ஐந்து மடங்கு வளர்ச்சி!

இப்போது சொல்லுங்கள். ‘கால்பந்து குறித்த கவித்துவமான நினைவுகளில் எது எஞ்சி நிற்கிறது? இன்றைய உலகமயச் சூழலில் கால்பந்து என்ற விளையாட்டு பன்னாட்டு நிறுவனங்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் ஒரு உண்மையான இரசிகர் என்ற முறையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நாமும் விளையாட வேண்டும். விளையாட்டு மைதானத்தில் அல்ல. அரசியல் களத்தில். சர்வதேச பாட்டாளி வர்க்க அணியில் சேர்ந்து உலக முதலாளித்துவத்தை எதிர்த்து ஆடும் ஆட்டத்தின் இறுதியில் நாம் கால்பந்தை மட்டுமல்ல, ஏனைய விளையாட்டுக்களையும் மீட்க முடியும். மனித குலம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள கண்டெடுத்து வளர்த்த விளையாட்டுணர்வுக்குப் பொருத்தமான பொற்காலம் அப்போது, அப்போது மட்டுமே நிலவ முடியும்.

– இளநம்பி
புதிய கலாச்சாரம், ஜூலை – 2006

பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?

11

சென்னையில் கல்லூரி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பச்சையப்பன் கல்லூரிதான். ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முக்கியமான ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி.

அங்கு படிக்கும் மாணவர்களை ரவுடிகள் என்றும் பொறுக்கிகள் என்று போலீசும் ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சித்தரித்து கொண்டிருக்கும் வேளையில், அக்கல்லூரி மாணவர்களோ மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தங்களின் கல்வி உரிமைக்காகவும் அன்று முதல் இன்று வரை குரல் கொடுத்து வருகின்றார்கள். அப்படித்தான் தங்களுடைய கல்வி உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக, “காசுள்ளவனுக்கு ஒரு கல்வி, காசில்லாதவனுக்கு ஒரு கல்வி” என்ற புதிய மனு நீதிக்கு எதிராக தங்களுடைய போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்த கல்லூரி, எத்தனையோ அறிஞர்கள் படித்த கல்லூரி, வரலாற்று சிறப்பு மிக்க கல்லூரி என்று எத்தனை பெருமைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட பெரிய பெருமை இருக்கிறது என்று அறிவித்து இருக்கிறார்கள் அக்கல்லூரி மாணவர்கள். ஆம், கழிவறையே இல்லாமல் 6 ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் ஒரே கல்லூரி என்ற பெருமை.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

கழிவறை இல்லை, குடிப்பதற்கு குடிநீர் வசதியில்லை, கேண்டீன் வசதி இல்லை, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை . இந்த அடிப்படை உரிமைகளை கேட்கக்கூடாது என்பதற்காகவே கல்லூரியில் போலீசு குவிப்பு என தொடரும் இந்த கல்வி உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் , புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் 04.07.14 அன்று காலை 11 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். சுமார் 500 மாணவர்கள் ரூட் வேறுபாடின்றி கலந்து கொண்ட இந்த உள்ளிருப்பு போராட்டம் 1 மணி நேரம் நீடித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான வேலைகளை தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வாக்களித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் அதே அரசுதான் மாணவர்களை ரவுடிகளாக பொறுக்கிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய அநியாயம். அடிப்படை வசதிகளை செய்துதர போராடும் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதுதானே நம் முன் உள்ள ஒரே நியாயம்.

அனுப்புதல்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.

பெறுதல்
கல்லூரி முதல்வர்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

பொருள்
பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் ஆய்வகம், குடிநீர், கழிவறை, கேண்டீன், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்திடவும் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிகளை உடனே நடத்திடக் கோருவது தொடர்பாக…

அய்யா,

சென்னையில் கல்லூரி என்றாலே முதலில், நினைவுக்கு வருவது நமது பச்சையப்பன் கல்லூரிதான். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட இக்கல்லூரியின் மூலமாக படித்து உயர் நிலைக்கு சென்றவர்கள் பலர் என்பது தாங்கள் அறிந்ததே. அப்படி ஏழை எளியோர்களை ஏற்றம் காண வைத்த கல்லூரி, மாபெரும் தலைவர்களை உருவாக்கிய கல்லூரி, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கல்லூரி என்றெல்லாம் புகழப்பட்ட நம் கல்லூரியின் நிலைமை என்ன?

ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வகங்கள் போதிய அளவில் இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, கழிவறை இல்லை, கேண்டீன் வசதி இல்லை. இப்படி மோசமான நிலையில் கிடக்கும் நமது கல்லூரியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.

பணம் படைத்தவர்களுக்கு வசதியான சூழ்நிலையில் கல்வி வழங்கப்படுவதும், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய, அதுவும் ஏழை மாணவர்கள் படிக்கக் கூடிய நம் கல்லூரியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய அநியாயமாகும்.

மாணவர்களின் அனைத்து திறன்களையும் வெளிக்கொணர்ந்து, அவர்களை திறமையானவர்களாக உருவாக்கக்கூடிய அளவில் தான் ஒரு கல்லூரி என்பது இருக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என்பதும் தாங்கள் அறிந்ததே. ஆனால் அவ்வாறு நமது கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை.

ஆகவே மாணவர்களுக்கு படிக்கின்ற சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெனில், கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் ஆய்வகம், குடிநீர், கழிவறை, கேண்டீன், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளை உடனே செய்துதர வேண்டும் என்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நமது கல்லூரியில் நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி !

தங்கள்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
மற்றும்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

நாள் : 04.07.2014
இடம் : சென்னை.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வாழ்க !
பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒற்றுமை ஓங்குக !

அரசு கல்லூரிகள்
அரசு உதவி பெறும் கல்லூரிகள்
கல்விக்கூடமா ? மாட்டுத்தொழுவமா?

குடிநீர் இல்லை
கழிவறை இல்லை
கேண்டீன் இல்லை
நூலகம் இல்லை
ஆசிரியர்களோ பற்றாக்குறை !

விளையாட்டுப் போட்டிகள் இல்லை!
கல்விச் சூழல் கொஞ்சமும் இல்லை !
கலாச்சார நிகழ்ச்சிகள் இல்லவே இல்லை !
சிண்டிகேட், செனட் அமைப்புகளில்
மாணவர்களுக்கு இடமே இல்லை !

எங்கே போனது ? எங்கே போனது ?
மாணவர் தேர்தல் எங்கே போனது ?

ஏழை எளிய மாணவர்களுக்காக
உருவாக்கப்பட்ட கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி

சீரழிஞ்சு கிடக்குது!
பாழடஞ்சு கிடக்குது !

வாயை மூடி சும்மா இருக்க
மாணவர் நாங்கள் கோழைகள் அல்ல

நிதி ஒதுக்கு ! நிதி ஒதுக்கு !
தமிழக அரசே ! நிதி ஒதுக்கு !

அரசு கல்லூரிகளில்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில்
அடிப்படை வசதிகளை செய்துதர
நிதி ஒதுக்கு ! நிதி ஒதுக்கு !

பறிபோகுது! பறிபோகுது!
ஏழை மாணவர் கல்வி உரிமை
பறிபோகுது! பறிபோகுது!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே!
வீரம் மிக்க மாணவர் படையே !
உரிமைக்காகப் போராடு !
அடிப்படை வசதிகளை வென்றெடு !

பேராசியர்களே ! மாணவர்களே !
சிண்டிகேட், செனட் அமைப்புகளில்
பேராசிரியர்கள், மாணவர்கள்
பிரதிநிதித்துவத்துக்கு போராடுவோம் !

அரசு கல்லூரிகளை
அரசு உதவி பெறும் கல்லூரிகளை
தரம் உயர்த்தப் போராடுவோம் !
மாணவர்களாக ஒன்றிணைவோம் !

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வாழ்க !
பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒற்றுமை ஓங்குக !

தகவல் :புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!

0
  • சிவகங்கை மன்னர் அரசுக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாபெரும் மோசடி!
  • ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கூட்டாக நடத்தும் சட்டவிரோத மோசடி!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் நினைவு அரசுக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையிலும் சட்ட விரோதமான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மோசடி வருகின்ற 07/07/2014, திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

இக்கல்லூரியில் ஒன்பது (9) இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இரண்டு சுழற்சி முறை (ஷிஃப்ட் சிஸ்டம்)களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஒரு வகுப்பிற்கு நாற்பது மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் அரசு விதிகளின்படி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுகிறார்கள். இவ்வாறான சில கலந்தாய்வுகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன. ஒரு வகுப்பின் சேர்க்கைக்காக சராசரியாக எண்பதிலிருந்து நூறு வரையிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதில் நாற்பது பேர் தவிர மீதமுள்ளவர்கள், வெளிப்படையாக நடைபெறுகின்ற இந்தக் கலந்தாய்வுகளில் இடமில்லையென்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

சிவகங்கை மன்னர் கல்லூரி

ஆனால், அதன்பிறகுதான் மோசடி தொடங்குகிறது. இந்த வெளிப்படையான கலந்தாய்வுகளுக்குப் பிறகு மறைமுகமாக ஒரு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வை “வராண்டா அட்மிசன்” (VARANDA ADMISSION) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வராண்டா அட்மிசனில் அரசுவிதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதிப்பெண் அடிப்படையும் கிடையாது, இடஒதுக்கீடும் கிடையாது.

மாறாக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள்; போலீஸ், நீதித்துறை, மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள்; ஓட்டுக்கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் அல்லக்கைகள்; நகர்மன்ற, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்; உள்ளூர் பிரபலங்கள்; கல்லூரியில் அலுவலகப்பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள்; ஆகியோரின் சிபாரிசோடு வருபவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும்; சொந்த சாதிக்காரர்களுக்கும்தான் சேர்க்கை வழங்குகிறார்கள். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடைபெறுகின்ற சேர்க்கையாகும்.

கல்லூரி நுழைவாயில்
கல்லூரி நுழைவாயில்

இவர்களுக்கு வழங்கப்படுகிற சேர்க்கை இடங்கள் பல்கலைக்கழகத்திடம் எழுதிக்கேட்டு அனுமதி பெற்று வழங்கப்படுகின்றன. இருப்பினும் அது வெறும் கண்துடைப்பான பேச்சுதான், ஏனெனில் சேர்க்கை நடத்தி விட்டுத்தான் பல்கலைக்கழகத்திற்கு எழுதியே அனுப்புவார்கள்.

கல்லூரி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு சிபாரிசு செய்பவர்களின் தயவு தேவைப்படுகிறது. இப்படி சிபாரிசு செய்து வாங்கிக் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் பலசாதகங்கள் சிபாரிசு செய்பவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் மாணவர் சேர்க்கை என்பது முழுக்க முழுக்க பணப்பட்டுவாடா சம்பந்தமானதாகவே இருக்கிறது.

இந்த முறையினை பல ஆசிரியர்கள் விரும்பாவிட்டாலும் எதிர்த்துப் பேசுவதில்லை. ஆனால், சில ஆசிரியர்கள் இதை வைத்து நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு துறைத்தலைவர் மட்டும் சுமார் ஒரு லட்சம் பார்த்திருக்கிறார். கல்லூரியின் பொறுப்பு முதல்வாராக இருக்கும் ஜெகன்னாதனை சென்ற ஆண்டு சிலர் கத்தியால் குத்தினார்கள். அதற்கு இந்த “வராண்டா அட்மிசன்”தான் காரணம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. மேலும் சென்ற ஆண்டில் ஒரு துறைத்தலைவர் மீது இது குறித்து விசாரணையும் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டும் “வராண்டா அட்மிசனு”க்காக பல மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட மன்ற உறுப்பினர் (M.L.A) வீட்டிலும், கல்லூரி அலுவலக ஊழியர்கள் வீட்டிலும் காத்துக் கிடக்கிறார்கள்.

பொறுப்பு முதல்வர் ஜெகன்னாதன்
பொறுப்பு முதல்வர் ஜெகன்னாதன்

நடத்தைச் சான்றிதழில் மோசம் எனும் தகுதியை வாங்கியிருப்பவர்கள் கூட இந்தக் கொல்லைப்புற சேர்க்கை வழியாக கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறார்கள். இவர்கள்தான் பல சமூக விரோதச் செயல்களுக்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே சில ஆசிரியர்களின் வேதனை.

இது காலங்காலமாக இந்தக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பதுதான் பெரிய கொடுமை. தற்போது கல்லூரியில் இயங்கிவருகின்ற போலிகளின் மாணவர் அமைப்புகள் அனைத்திற்கும் இப்படிப்பட்ட சட்டவிரோதமான சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும், இவர்களும் இந்த “வராண்டா அட்மிசனி”ல் மாணவர்களை சிபாரிசு செய்து “வரும்படி” பார்ப்பதால், இம்மோசடியினை மூடி மறைத்து விடுகிறார்கள்.

வெளிப்படையான கலந்தாய்வுகளில் கலந்துவிட்டு இடங்கிடைக்காமல் அழுதுகொண்டு நிற்கின்ற மாணவர்களை நாம் கலந்தாய்வு நேரங்களின் போது கல்லூரிகளில் காண முடியும். அவர்களுக்கு இப்படியொரு மோசடி நடப்பதும் தெரியாது.

மதிப்பெண் இருந்தும், ஒடஒதுக்கீடு வாய்ப்பு இருந்தும் கல்லூரியில் சேர முடியாத நிலை எவ்வளவு துயரமானது. இதுநாள் வரையிலும் வெளிவராமலிருந்த இந்த மாணவர் சேர்க்கை மோசடி இதோ இப்போது வெளி வந்துவிட்டது. இது சிவகங்கை அரசுக் கல்லூரிக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதேநிலைதான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இடங்கிடைக்காத மாணவர்கள் உடனே தொடர்பு கொள்க!

  • வராண்டா அட்மிசனைத் தடைசெய்!
  • மாணவர் சேர்க்கை முழுவதையும் வெளிப்படையாக நடத்து!
  • அரசு விதிகளைமீறி மாணவர்களைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடு!
  • சிபாரிசு செய்பவர்களை கிரிமினல் லஞ்சக்குற்றத்தின் கீழ் கைது செய்!

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், சிவகங்கை.

எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ?

51

மோடி மாயை 1தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக் கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர் ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப் படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை ஆதரிக்க மறுக்கிறீர்கள்?” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள் கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள்.

அம்பிகள், அம்பானிகள் மற்றும் அமித் ஷா கூட்டணியானது, தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெருவெற்றி பெற்றுவிட்டது. ஆனால் அதனை கொண்டாடித் தீர்க்க வேண்டிய தேசபக்தர்களோ, கள்ளக்காதலி வீட்டில் கடிகாரத்தை தொலைத்தவனைப்போல சொல்ல இயலாத சங்கடத்தில் தவிக்கிறார்கள். கெட்ட நண்பர்களில் சகவாசத்தால் இளமையில் தவறான வழிக்கு சென்று மோடியை முக்கி முக்கி ஆதரித்த ஃபேஸ்புக் பிரச்சாரகர்கள் பலர், மோடிஜியின் ஒருமாத கசப்பு மருந்திலேயே கலங்கி நிற்கிறார்கள்.

இத்தனைக்கும் “இந்தியாவின் சூப்பர்மேன், தெற்காசியாவின் டோரிமான், அகில உலக சோட்டாபீம்” மோடி அவர்கள் இன்னும் தனது டிரீட்மெண்டை ஆரம்பிக்கவே இல்லை. குனிய வைத்ததற்கே தினத்தந்தி வாசகர்களில் 61 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தி கொண்டுவிட்டார்களாம். கும்பிபாகத்துக்குப் பிறகு இவர்கள் என்ன கதியாவார்கள் என நினைக்கும்போதே நம் நெஞ்சம் நடுங்குகிறது.

“அளவுக்கு மீறி ஆதரித்து விட்டோமோ” எனும் கவலையில் இருக்கும் பலர் “ஃபேக் ஐடி ஆரம்பித்து மோடியை எதிர்க்கலாமா?” எனும் யோசனையில் இருப்பதாகக் கேள்வி. ஃபேக் ஐடிக்களால் ஆராதிக்கப்பட்ட மோடி, அதே ஃபேக் ஐடிக்களால் கழுவி ஊற்றப்படவேண்டுமென அந்த இறைவன் விரும்பினால் அதை யாரால் மாற்ற முடியும்? ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுள் மெம்பர் ரங்கராஜ் பாண்டேவும் மோடியின் தாசானு தாசர் வைத்தி மாமாவும் ஒரு மாதத்துக்குள் மோடி அரசாங்கத்துக்கு எதிராக பேசவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமக்கு வருமென கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மோடி பிரதமரானால், பொருளாதார வல்லுனர்களுக்கே தண்ணி காட்டும் பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, சொல்லி வைத்தாற் போல “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.

மோடி மாயை 2
அல்லேலுயா கூட்டங்களுக்கும் மோடி வாலாக்களின் கூட்டங்களுக்கும் எந்த வேறுபாடுமில்லை!

வளர்ச்சி வளர்ச்சி என முழங்கிய பாஜக, ஆட்சிக்கு வந்த உடனே தன் வார்த்தையை காப்பாற்றும் முயற்சியை ஆரம்பித்துவிட்டது. கார்பரேட்டுக்கள் வளர்ச்சிக்கு இருந்த சிறிய அளவு முட்டுக்கட்டைகளும் நீக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்ப ஒழிக்கப்பட இருப்பதற்கான சமிக்ஞைகள் வந்துவிட்டன. இராணுவ உற்பத்தி உள்ளிட்டு, சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் அன்னிய மூலதனத்தை கொண்டுவருவோம் என அரசு தெளிவுபட சொல்லிவிட்டது. யார் கண்டது? ஐந்தாண்டு முடிவதற்குள் குடிமக்களின் படுக்கையறைகூட கார்பரேட்டுக்கள் வசம் ஒப்படைக்கப்படலாம். “எனது முப்பதுநாள் அனுபவங்கள்” எனும் மோடியின் கட்டுரை வளர்ச்சி வளர்ச்சி என பேசுகிறதே ஒழிய அதனால் எந்த மக்கள் பயனடையப் போகிறார்கள் என சொல்லவில்லை.

ஆனால் அந்தப் பக்கமோ ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகள் அமுலுக்கு வர ஆரம்பித்து விட்டன. மகராஷ்டிராவில் முதல் கலவரம் ஆரம்பமாகி ஒரு முஸ்லீம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். ஹிந்தியே இனி அலுவல்மொழி என டெல்லி பல்கலைக் கழகம் அறிவிக்கிறது. ஹிந்தியே இனி தொடர்பு மொழி என அரசு அறிவித்து விட்டு லேசாக பின்வாங்கியிருக்கிறது. கேட்டால் “வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு பயன்படுத்திய ஆங்கிலத்தை இன்னும் பயன்படுத்துவது அடிமைத்தனம்” என்கிறார் பாஜக ராகவன். அப்படிப்பார்த்தால் ஜட்டிகூட வெள்ளைக்காரன் அவன் வசதிக்கு உருவாக்கியதுதான். அடுத்தது அதையும் உருவிவிட்டு வலுக்கட்டாயமாக கோவணத்தை மாட்டிவிடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. மாட்டுச்சாணி சாம்பலில் பல்தேய்ப்பது மாட்டு மூத்திரம் குடிப்பது ஆகியவையும் ஆர்.எஸ்.எஸ்சின் புனிதக்கடமைகள் பட்டியலில் இருப்பதால் அச்சம் இன்னும் அதிகரிக்கிறது.

மோடியின் குறைந்தபட்ச செயல்திட்டமும் சிறப்பாக நிறைவேற ஆரம்பித்துவிட்டது. பெண்ணை வேவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை கைவிடப்பட்டுவிட்டது. அமித் ஷாவை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டுவிட்டார். மீதமிருக்கும் வழக்குகளுக்கு எள்ளும் தண்ணியும் தெளிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. போதும் போதாததற்கு கோபால் சுப்ரமணியம் போன்ற ஆகாத ஆட்களை அவமானப்படுத்தும் காரியங்களும் ஜரூராக நடக்கின்றன.

மோடி மாயை 3
முதலாளிகளின் தேவைக்காக மோடியின் கலவர இமேஜை அழிக்க பெரு முயற்சி நடைபெற்றது.

இதில் அதிகம் ஏமாற்றமடைந்தது இந்திய நடுத்தர வர்க்க மக்கள்தான். அதுவும் மிடில்கிளாஸ் இந்துக்கள், கிருஸ்துவர்கள் தேர்தலுக்கு முன்பே தங்கள் மனதை ஓரளவுக்கு தயார்படுத்திக் கொண்டார்கள். முஸ்லீம்களுக்கு மோடி வந்துதான் நெருக்கடி வரவேண்டும் என்ற நிலை இல்லை. ஏறத்தாழ இந்தியாவின் எல்லா அரசுகளும், போலீசும், புலனாய்வு நிறுவனங்களும் முஸ்லீம் விரோத சிந்தனை கொண்டவையே என்பதால் அவர்கள் எல்லா ஆட்சியிலும் அச்சுறுத்தலுடனேயே வாழ்கிறார்கள். ஆனால் மிடில் கிளாஸ் இந்துக்களோ, ஒரு பக்கம் கலவரம் வந்தாலும் மறுபக்கம் வளர்ச்சியும் அமோகமாய் இருக்கும் என நம்பினார்கள். நட்டம் எனக்கில்லை லாபம் வந்தால் அது நமக்கு மட்டுமே எனும் குருட்டு நம்பிக்கை அவர்கள் வசம் இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து வைத்த முதல் ஆப்பு இவர்களுக்குத்தான்.

மோடிக்கு ஓட்டு போட்ட ஒரு நண்பர் ரயில் கட்டண உயர்வுக்குப் பிறகு குழப்பத்துடன் கேட்டார் “எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க?”. மோடிக்கு ஓட்டு போட்டவரே இத்தனை பெரிய மெஜாரிட்டியை எதிர்பார்த்திருக்கவில்லை. எப்படி நாடெங்கும் மக்கள் ஒரே மாதிரி ஏமாந்தார்கள் எனும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. பவர் ஸ்டாரிடமே ஏமாறத்த யாராயிருக்கும் நாடு, பத்தாயிரம் கோடி செலவு செய்பவனிடம் ஏமாறுவதில் என்ன அதிசயம்?

அது ஒன்றும் கடினமான நுட்பமில்லை. ஏற்கனவே செவன் ஸ்டார் (திருப்பூர்), அனுபவ், சுசி ஈமு ஃபார்ம் போன்ற வெற்று விளம்பரங்கள் வாயிலாகவே தங்களை பிரபலமாக்கிக் கொண்டும் ஊரை ஏமாற்றினார்கள்.

“பிள்ளையார் பால் குடிக்கிறார்” என்ற வெறும் செய்தி பரப்பப்பட்டபோது அது எப்படி சாத்தியம் என அறிவுபூர்வமாக கேட்டவர்கள் அதிகமா? “எதுக்கும் பால் கொடுத்து பார்ப்போமே” என யோசித்தவர்கள் அதிகமா? “என்னைப்பார் யோகம் வரும்” எனும் கழுதைப் படத்தை கடையில் மாட்டியவர்களில், அதன் பலன் குறித்த தரவுகள் அடிப்படையில் படத்தை வாங்கியவர்கள் எத்துணை பேர்? ஒருவேளை யோகம் வந்தால் நல்லதுதானே எனும் நப்பாசையில் வாங்கியவர்கள் எத்தனை பேர்? கிட்டத்தட்ட இதே தொழில்நுட்பத்தின் அப்டேட்டட் வெர்ஷன்தான் மோடி விளம்பரங்களும். அது எப்படி சாத்தியமாக்கப்பட்டது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

மோடி மாயை 4
ஹிட்லரின் சீடர் காந்தியின் வேடம் தரித்ததை நம்புவதற்கு கூட இந்த நாட்டில் ஆட்கள் இருந்தார்கள்

டெக்னிக் 1: நம்மில் பெரும்பாலானவர்கள் முதலில் முடிவெடுக்கிறோம். அதற்கான காரணங்களை பிறகுதான் தேடுகிறோம். ஏனென்றால் முடிவெடுப்பதற்கான மூளை பாகம் வேறு, காரணங்களை ஆராய்வதற்கான மூளைப் பகுதி வேறு.. முடிவெடுப்பதற்கான மூளைப் பகுதியே வலுவானது என்பதால் விளம்பரங்கள் நம்மை முடிவெடுக்க தூண்டுகின்றன. எடுத்த முடிவை நியாயப்படுத்தும் செயலை பிறகு செய்கிறீர்கள். கேட்டரிங் கல்லூரி விளம்பரத்துக்கு சினேகா வருவது இந்த காரணத்தினால்தான். ரஜினியைக் காட்டிலும் வடிவேலு நிஜத்தில் வலுவானவராக இருக்கலாம். ஆனால் ரஜினி 100 பேரை அடித்தாலும் அதனை ரசிக்கும் நீங்கள் அதையே வடிவேலு செய்யும்போது சிரிக்கிறீர்கள். காரணம் ரஜினி ஒரு ஹீரோ எனும் உங்களது முடிவு. அதேபோல மோடியும் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்தான். ஸ்டிரெய்ட்டாக ஹீரோவாக அறிமுகமானார், அவரது பஞ்ச் டயலாக்குகளுக்கு நீங்கள் கைதட்டினீர்கள். ஹீரோவை தலைவராக்கும் இயல்பு நமக்கு பாரம்பர்யமாக இருப்பதால் மோடிக்கு பிரதமராவதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை.

டெக்னிக் 2 : நீங்கள் மிகவும் பரிச்சயமான மற்றும் எளிய பெயருடைய வாய்ப்புக்களையே தெரிவு செய்கிறீர்கள். கடினமான மற்றும் புதிய ஐஸ்கிரீம் பெயர்களைத் தவிர்த்துவிட்டு அனேகம்பேர் வெனிலாவை தெரிவு செய்வது இதனால்தான். இதற்காகத்தான் மோடியின் பெயரை பிரபலப்படுத்த மட்டும் பல்லாயிரம் கோடிகளை இறைக்கப்பட்டன. மோடி குனிந்தார், நிமிர்ந்தார், கொட்டாவி விட்டார் என அவர் அசைவுகள் யாவையும் செய்தியாக்கப்பட்டன.

டெக்னிக் 3 : கிளுகிளுப்பான மனோ நிலையில் தரப்படும் வாய்ப்புக்களை நீங்கள் அதிகம் யோசிக்காமல் தெரிவு செய்கிறீர்கள். டேட்டிங் துணையை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட உளவியல் ஆய்வொன்றில் இது நிரூபணம் செய்யப்பட்டது. ஒரே தகுதியுடைய இரண்டு குழுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் குழு வாசிக்க, பாலியல் ரீதியாக தூண்டும் புத்தகங்கள் தரப்பட்டன. இரண்டாவது குழுவுக்கு அவை தரப்படவில்லை. பிறகு துணையாக தெரிவு செய்ய தரப்பட்ட  பெண்ணின் புகைப்படத்தை முதல் குழுவினர் உடனடியாக தெரிவு செய்தார்கள். இரண்டாம் குழுவினர் அப்படி செய்யவில்லை. அவர்கள் தெரிவு செய்ய இன்னும் கூடுதலான பெண்களது படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் கோரினார்கள். இரண்டு குழுவினருக்கும் ஒரேயொரு பெண்ணின் புகைப்படம் மட்டுமே தரப்பட்டது என்பது நம் கவனத்துக்குரியது.

மோடியை ஆதரவு மனக்கிளர்ச்சியை உருவாக்கவும் இப்படியான கவர்ச்சிகரமான முன் தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு அறிக்கை கொடுக்க வைக்கப்பட்டார்கள். குஜராத் செப்டிக் டேங்குகளில்கூட செண்ட் வாசம் அடிப்பதாக செய்திகள் பரப்பப்பட்டது. முடவர்கள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் எனும் அல்லேலூயா பாணி பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது.

ரஜினி, விஜய் என சாத்தியப்பட்ட எல்லா பிரபலங்களையும் சந்தித்தார் மோடி. மேக்னா படேல் சாத்தியப்பட்டவரைக்கும் ஆடைகளை துறந்து ஆதரவு கேட்டார். வளர்ச்சி மோகம், வல்லரசு கனவு, சினிமா கவர்ச்சி போன்றவை தூண்டப்பட்டு மோடியின் முகம் காட்டப்பட்டது. உணர்ச்சி வேகத்தில் அறிவு வேலை செய்யாது எனும் நிரூபணமான தத்துவம் மீண்டும் உண்மையானது. (விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2013 இல் குஜராத் வந்தபோது அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள மோடி கடும் முயற்சி எடுத்தார். குஜராத் அரசு அதிகாரிகள் அவரை மோடியுடன் பேசவைப்பதற்காக அவர் பயணித்த இடங்களிலெல்லாம் விரட்டினார்கள். ஹரேன் பாண்டியாவின் குடும்பத்தை சந்தித்த சுனிதா, மோடியை சந்திக்க மறுத்தார் என்ற செய்தியை இங்கே நினைவ கூர்க)

டெக்னிக் 4 : பெரும்பான்மையானவர்களின் முடிவை பின்பற்றுவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என நீங்கள் கருதுகிறீர்கள். கூட்டத்தின் முடிவோடு ஒத்து போவது உங்களது முடிவெடுக்கும் வேலையை குறையும், முடிவு தவறானால் அதனை எதிர்கொள்ளும் கட்டாயம் அந்த கூட்டம் முழுமைக்கும் ஏற்படும் என்பதால் தனிப்பட்ட முறையில் தனக்கான ஆபத்து குறைவதாக மனித மூளை கருதுகிறது. ஆகவே நம்மில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையோரது முடிவோடு ஒத்துப்போவதற்கே விரும்புகிறோம். கூட்டமே இல்லாத மற்றும் அதிக கூட்டமிருக்கிற என இரண்டு மாட்டுக்கறிக் கடைகள்!!! அருகருகே இருந்தால் நாம் அதிக கூட்டமிருக்கிற கடையையே தெரிவு செய்வோம் இல்லையா, அதுபோலத்தான்.

மோடி மாயை 5
தேர்தலுக்கு முன்பேயே மோடிதான் பிரதமர் என்று அறிவித்து விடும் அளவுக்கு ஊடக பிரச்சாரம்

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் அடுத்த பிரதமர் என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. மோடிக்கு ஓட்டுபோடுங்கள் என்றுகூட விளம்பரம் வரவில்லை மோடியை கொண்டுவரப் போகிறோம் என்றுதான் அனேக விளம்பரங்கள் வந்தன. சில சந்தர்பங்களில் காங்கிரஸ் பேச்சாளர்களே வருங்கால பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட சம்பவங்களும் நடந்தது. தொழிற்சாலை வைத்து உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான ஃபேக் ஐடிக்களும் கோடிகளைக் கொட்டி நாடெங்கும் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கூட்டங்களும் மோடிக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பதான தோற்றத்தை உருவாக்கின. அதை நம்பிய மக்கள் இல்லாத கும்பலோடு கோவிந்தா போட ஆரம்பித்தார்கள். கோயிந்தா சத்தம் மெஜாரிட்டியாகிவிட்டது.

டெக்னிக் 5 : பிழைக்க வழியற்ற சூழலில் எத்தகைய அடிமுட்டாள்தனமான வாய்ப்பையும் மனிதர்கள் பரீட்சித்துப் பார்க்க முற்படுவார்கள்.

ஆஸ்திரேலியா சென்று சேரும் சாத்தியம் ஏறத்தாழ பூஜ்ஜியம் என்ற நிலையிலும் ஈழ அகதிகள் சாதரண மீன்பிடி படகுகளில் பயணம் போகக் காரணம் இதுதான். தமிழக அகதி முகாமிலும் இலங்கையிலும் வாழ்வு விவரிக்க இயலாத அளவு துயரமானதாக இருக்கையில் ஏதோ ஒருவழியில் அவர்கள் அதிலிருந்து மீள விரும்புகிறார்கள், அது எத்தகைய அபாயகரமான வழியாக இருந்தாலும். காங்கிரஸ் ஆட்சியின் முடிவில் பெரும்பாலான பாமர மக்களிடம் உயிர் மட்டுமே மிச்சமிருந்தது. விலையேற்றம் வேலை உறுதியின்மை என ஏதேனும் ஒரு பெரிய நெருக்கடியிலேயே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு காட்டப்பட்ட ஒரே மாற்று மோடிதான். அது அபாயகரமானது என தெரிந்தாலும் அவர்களுக்கு இந்த அமைப்பில் வேறு மாற்று தெரிந்திருந்திருக்கவில்லை.

டெக்னிக் 6: அதீத அச்சத்தின்போது நீங்கள் அபாயத்தை வலிந்து ஏற்றுக்கொள்ள முற்படுவீர்கள். ஏனென்றால் சிலசமயங்களில் தண்டனை பற்றிய சஸ்பென்ஸ் தண்டனையைவிட மோசமானது. தமிழகத்தில் ஒரு தூக்குதண்டனைக் கைதி தானே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கருணை மனு மீதான முடிவு வராத நிலையில் தனது தண்டணைக்கு முதல்நாள் மாலை அவர் தற்கொலை செய்துகொண்டார் (விவரங்கள்: தூக்குமர நிழலில் நூலில், எழுதியவர் சி.ஏ பாலன்). மோடி வந்தால் நாடு என்னவாகுமோ எனும் அச்சம் ஒருவருக்கு அதிகரிக்கையில் அவரது மனம் அதை சரிசெய்ய ”மோடி வந்து அதோட பலனை இந்த ஜனம் அனுபவிக்கட்டும்… அப்பத்தான் இவர்கள் திருந்துவார்கள்” எனும் எண்ணத்தை உருவாக்குகிறது. மனநிலையை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கை இது (டிஃபென்ஸ் மெக்கானிசம்). அத்தகைய சந்தர்பங்களில் மோடியே வந்து தொலைக்கட்டும் எனும் சமாதானத்துக்கு சிலர் வர வாய்ப்பிருக்கிறது. மோடிக்கு எதிரான மனோநிலை கொண்டவர்களில் ஒரு பகுதியினர் அமைதியானதற்கு இதுவும் ஒரு காரணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டு போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை நாம் நீண்ட  அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆகவே தேர்தலை ஒரு ஆள் மாற்றி விளையாடும் பொழுதுபோக்காக நாம் கையாளத் துவங்கிவிட்டோம். ஆகப் பெரும்பாலானவர்கள் ஜோடி நம்பர் ஒன் போட்டியில் ஓட்டுபோட மெனக்கெடும் அளவுக்குக்கூட பொதுத்தேர்தலின்போது அலட்டிக்கொள்வதில்லை. இந்த மனோபாவத்தை அதிகாரவர்க்கம் விரும்புகிறது, அதனை ஊடகங்கள் பெருமளவு ஊக்குவிக்கின்றன. கட்சிகளில் எம்.பி சீட்டுக்கான தகுதியாக பணபலம் மாறியிருப்பது ஒரு அவலமாக அல்லாமல் சுவாரஸ்யமான செய்தியாக பத்திரிக்கைகளால் பரிமாறப்படுகிறது. இந்த விளையாட்டு மனோபாவம் இந்த சுரண்டல் அரசு எந்திரத்தை நமது கோபத்தில் இருந்து காப்பாற்றுகிறது.

நண்பர்களே,

இது பெரிய திட்டங்களோடு விரிக்கப்பட்ட வலை. ஒருவேளை உங்களது தேர்வு மோடியாக இருந்திருக்கும் பட்சத்தில் அதுகுறித்து நீங்கள் இப்போது குற்ற உணர்வுகொள்ள அவசியமில்லை. முதலாளித்துவமானது மத அடிப்படைவாதிகளையும் ஃபாசிஸ்டுகளையும் உற்பத்தி செய்வதன் வாயிலாகவே ஜீவித்திருக்கிறது. இது கார்ப்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஒரு தேசம். இங்கே தேர்தல் என்பது நம்மை கழுவிலேற்றுபவனை நாமே தெரிவுசெய்யும் நடைமுறை. அரசு அதிகாரிகள், மதத்தீவிரவாதிகள், பொருளாதார வல்லுனர்கள், என்.ஜி.ஓக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகிய அனைத்து தரப்புமே கார்பரேட்டுக்களின் கூலிப்படைதான். ஒரு இடத்தில் வேலை செய்யவேண்டியது ஆர்.எஸ்.எஸ்ஸா  அல்லது என்.ஜி.ஓவா என்பதை பெருமுதலாளிகளின் தேவைதான் தீர்மானிக்கிறது. நாட்டை ஆளவேண்டியது மன்மோகனா அல்லது மோடியா என்பதையும் அவர்களே முடிவு செய்கிறார்கள்.

எழுபத்தைந்து சதவிகித முதலாளிகள் மோடியே பிரதமராக வரவேண்டுமென விரும்பினார்கள். இந்த நாடு அவர்களுக்கான ஒரு பெரிய ஆலை நிலம், ஒரு கொத்தடிமைச் சந்தை. பல்லாயிரம் கோடி முதலீடு போட்டு தாங்கள் விரும்பியவரை தங்களுக்கான ஒரு மேலாளராக நியமனம் செய்திருக்கிறார்கள், இது முன்பிருந்த மேலாளருக்கு செய்யப்பட்ட செலவைக் காட்டிலும் மிக அதிகம்.  போட்ட முதலீட்டுக்கான லாபத்தை அவர்கள் எடுத்தாக வேண்டும்.

மன்மோகன் ஆட்சியில் நாம் எதிர்கொண்ட துயரங்கள் இனி இன்னும் தீவிரமாகும். விவசாயிகள் தற்கொலை, விலையுயர்வு, வேலையிழப்பு என சகலமும் முன்னைக்காட்டிலும் தீவிரமாகும். ஆனால் சிலகாலத்துக்கு அவை “வளர்ச்சிக்கான தற்கொலை, வளர்ச்சிக்கான விலையுயர்வு” என ஊடகங்களால் விளக்கப்படும். கூடுதலாக மோடி நல்லவர் வல்லவர் எனும் தனிமனித துதிபாடல் ஒரு பக்கமாக நடக்கும் (ரயில் பயணத்தின்போது மோடி டீ வாங்கிக்கொடுத்தார், பெண்களுக்கு இடம்கொடுத்தார் என ஒரு கட்டுரையும், மோடியின் இளமைகால சாகசங்கள் என் ஒரு கட்டுரையும் தற்போதைக்கு தமிழ் இந்துவில் வந்திருக்கின்றன)

பிறகு மக்கள் அதிருப்தி அதிகமாகும் போதெல்லாம் பாஜகவின் வழக்கமான உத்தியான தீவிரவாத அச்சுறுத்தல் எனும் பீதி கிளம்பும். அதுவும் காலாவதியாகி, மோடியும் வேலைக்காகாதவர் என முதலாளிகள் முடிவு செய்யும் பட்சத்தில், அவரை அனுப்பிவிட்டு அடுத்த ஆப்ஷனை நமக்கு அம்பானியும் டாடாவும் அருளுவார்கள். தனக்கு கிடைத்த மிகக் கேவலமான தோல்வியைகூட ஒரு வழக்கமான பணி ஓய்வைப்போல மன்மோகன் “பக்குவத்துடன்” எதிர்கொண்டதற்குக் காரணம், அவர் இந்த ஆட்டத்தை நன்கறிந்தவர் என்பதுதான்.

முதலாளித்துவத்தின் லாபவெறி வரம்பற்றது. அதன் இறுதி இலக்கு நம்மை வீதிக்கு விரட்டுவதுதான். இதனை எதிர்கொள்ள இரண்டு உபாயங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று இந்த அமைப்பை எதிர்த்து போராடும் வீரனாக நாம் வீதிக்கு வருவது. அல்லது முதலாளித்துவத்தால் நாம் வீதிக்கு விரட்டப்படும்வரை ஒரு ஏதிலியைப்போல மௌனமாக காத்திருப்பது.

–          வில்லவன்.

ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?

பெண் தொழிலாளி. 1

சூரியன் உதிக்கும் அதிகாலை பொழுதும், அந்தி மயங்கும் மாலை பொழுதும் பரபரப்பாக இருக்கும் மாநகராட்சி பூங்காக்களை அறியாத சென்னை மக்கள் யாரும் கிடையாது. நாம் போகும் அதிகாலை நேரத்திலும் கூட பூங்காக்கள் துப்புறவு செய்யப்பட்டு, சுத்தமாக இருப்பதை பார்த்திருக்கிறோம். செடிகளை பார்த்து ரசிக்கும் விதத்தில் வடிவமாக வெட்டிவிட்டு கோடையிலும் பசுமை மாறாமல் மனதை ஈர்க்கும் அழகை சேர்க்கும் இந்த உழைப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்தந்த பூங்காக்களின் ஒரு மூலையில் இருக்கும் புறா கூண்டு போல் உள்ள ஒரு கொட்டடியில் இருந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இந்த ஜீவன்கள்தான் பூங்காக்களை பராமரிக்கிறார்கள். நாம் ரசிக்கும் பூக்களுக்கும், செடிகளுக்கும் உயிர் கொடுக்கும் அவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்?

பூங்காவின் ஓரத்தில் ஒரு ஆள் படுக்கும் அளவு கொண்ட ஒரு அறையும் அதில் மண்வெட்டி, செடி வெட்டும் கத்தரிக் கோல், தண்ணீர் விடும் குழாய், குப்பை அள்ளும் கூடை, தொடப்பம் என்று தளவாட சாமன்களுடன் அந்த சமையலுக்கு இரண்டொரு பாத்திரம், ஒரு கொடியில் துணிமணிகள், ஒரு பாய் தலயணையும் கூட இருந்தது. இதுதான் பூங்காவை பராமரிக்கும் பணியாளர் வாழும் இடம்.

இவர்களின் சமையலோ மரத்தில் ஒரு கோணியை பந்தல் போல் கட்டி அதுக்கு கீழே கல்லு வச்சு அடுப்புக் கட்டி சமைச்சுக்கணும். மாநகராட்சி பூங்காவில் வேலை செய்யும் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த இடத்தை பார்த்தால் ஒரு குடும்பம் வாழும் சூழ்நிலையில் இல்லாமல் பூங்காவை பராமரிக்க உதவும் மராமத்து சாமானை அடைத்து வைக்கும் இடத்தில் இந்த உயிர்களையும் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

அப்படி ஒரு பூங்காவை பராமரிக்கும் 70 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவரை சந்தித்தேன். அவருக்கு ஒரு கண்ணுல பூ விழுந்து ஒரு பக்க கண் பார்வை தெரியாது. எலும்பும் தோலுமா பார்க்கவே பரிதாபமாக இருந்தார். ஒரு ஏக்கருக்கு குறைவில்லாமல் இருக்கும் அந்த பூங்காவை தனி ஒரு ஆளாக இருந்து கவனித்துக் கொள்கிறார். செடிகளின் ஓரத்தில் கூட ஒரு தூசியை தேடி எடுக்க முடியாத அளவு சுத்தமாக வைத்திருந்தார். இவரை பல தடவை பார்த்திருக்கிறேன். சொந்த நிலத்தில் பாடுபடும் அக்கறையோடு எந்நேரமும் ஏதாவது ஒரு மூலையில் எதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருப்பார்.

அவரிடம் பேசும் போது குப்பையை அள்ளிக் கொண்டேதான் பேசினார். “எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆச்சு. அவங்க பொண்டாட்டி புள்ளைய கவனிக்கவே ஓடா தேய்றானுவொ, நாம எதுக்கு ஒருத்தருக்கு பாரமா இருக்கனுன்னு இந்த வேலைய பாக்குறேன். அஞ்சு வருசமா இந்த வேலை பாக்குறேன். முதல்ல பீச்சுல வேல பாத்தேன். பொறவு தி.நகர்ல வேல பாத்தேன். இப்ப இங்க வடபழனிக்கி வந்து மூணு வருசமா ஒரே எடத்துல வேல பாக்குறேன். மொதலாளி எந்த பூங்காவுக்கு மாத்தி விட்றாரோ அங்க வேல பாக்கணும்”.

பெண் தொழிலாளி. 1“காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சு மொதல்ல நட பாதைய பெருக்குவேன். பெரியவங்க வெளையாட்டு தெடல பெருக்கி தண்ணி தெளிப்பேன். பிள்ளைங்க வெளையாட்டு எடத்த பெருக்குவேன். இதுக்கே மணி பத்தாயிரும். பொறவு புல்லுல உள்ள குப்பைங்கள பொறுக்கிட்டு தண்ணி விட ஆரம்பிச்சேன்னா மணி 3 ஆயிரும். அப்பால ரெண்டு மொடக்கு கஞ்சி தண்ணிய குடிச்சுட்டு சாயந்தரம் சனமெல்லாம் வர்றதுக்கு முன்னாடி திரும்ப நடபாதைய ஒரு மொற பெருக்கிட்டு மிச்சமீதி இருக்குற செடிக்கி தண்ணி விடனும். 8 மணிக்கி பூங்காவ பூட்டிட்டு அதுக்கு பொறவு நான் குளிச்சு துணி தொவச்சு சாப்புட்டுட்டு படுக்க மணி ஒம்பது பத்தாயிரும்.”

இதற்கிடையில் பூங்கா வாசலில் ஒருவர் அந்த அம்மாவை அதிகார தோரணையில் கூப்பிட்டார். அந்த அம்மா அருகில் போனதும் “என்ன ஆடி அசஞ்சு தேரு மாறி வர்ரே”ன்னு  திட்டின அவரு மறுவார்த்தை பேசரதுக்குள்ள,

“என்னாய்யா பேச்சு பேசுரறீங்க, மூணு நாளா மிசினு வெட்டுன குப்பையெல்லாம் குனிஞ்ச தல நிமுறாம பெருக்கி அள்ளிக் கொட்டிட்டு கெடக்குறேன். நிமுறவும் முடியல. காலு மரத்துப் போயி நடக்கவும் முடியல. உயிர் போறா மாறி இருக்கு. என் வலி எனக்குதான் தெரியும். படி அளக்குற மொதலாளி நீங்க, கூப்புட்டா ஓடி வரனுன்னு நெனைக்கிறீரு குத்தமில்ல. அதுக்காக? கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்”னு தன்மானத்தோடு பேசியது மகிழ்ச்சியா இருந்தது.

தன் வேலையை காப்பாத்திக்கவும், சம்பள உயர்வுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழும் ‘பெரியவங்க’ளுக்கு இந்த அம்மாவோட தன்மான உணர்ச்சி புரியுமா தெரியல.

“இவ்வளவு வேலைகளுக்கு நடுவுல எப்ப சமைப்பிங்க சாப்புடுவிங்க?” என்று அந்த அம்மாவிடம் கேட்கும்போது மனதை வதைக்கும் படி பதில் சொன்னார்.

“என்னத்த பெரிய சமையலு! மத்தியானம் ஒரு நேரம் கொஞ்சம் அரிசி போட்டு வடிப்பேன். அதயே மறுநாளு காலையில வரைக்கும் தின்னுக்குவேன். இப்ப காலையில தின்னுக்கலான்னு கொஞ்சம் கஞ்சித் தண்ணி வச்சிருந்தேன். இன்னைக்கி பாரு ரோடு கூட்ற அம்மா வந்து நீராகாரம் (சோத்துத் தண்ணி) இருந்தா கொஞ்சம் உப்புப் போட்டு குடும்மான்னுச்சு. பாவம் நாலு மணிக்கி எந்திருச்சு ரோடு கூட்ட வந்துருப்பா, விக்கிற வெலவாசில ஒரு டீ கூட குடிச்சுருக்க மாட்டாளேன்னு இருந்த ரெண்டு கரண்டி சோத்துல ஒரு கரண்டி அள்ளிப் போட்டு தண்ணிய ஊத்தி குடுத்தேன். பசி மயக்கத்துல கண்ண மூடிக்கிட்டு மடக்கு மடக்குன்னு குடிச்சா. நம்ப மென்னுதின்னு துப்புன குப்பையதானே எடுக்குறான்னு ஜனங்க யாரும் எரக்கப்பட்டு ரெண்டு கஞ்சி குடுக்காதுங்க. கல்நெஞ்சம் படச்சதுங்க.”

“இங்கன பெரும்பாலும் அய்யருமாருங்க வீடுங்கதான் அதிகம். நானும் இங்கன மூணு வருசத்துக்கு மேல வேல பாக்குறேன். யாரும் ஒரு நாள் ஒரு வாயி சோறு போட்டது கெடையாது. அம்மாச, கிருத்திகன்னா எதுத்த வீட்டு மாமி காக்கைக்கு வைக்கிற அளவுக்கு இத்தினியோண்டு சோறு குடுக்கும். அது என் வயித்து மூலைக்கு கூட பத்தாது. ரெண்டு தடவ வெக்கங்கெட்டு போயி வாங்கிட்ட, பொறவு கூப்புட்டா சாப்புட்டேன்னு சொல்லி புடுவே. பூங்காவுக்கு நித்தமும் வர்ரதுங்க கூட எதையாவது திண்ணுட்டு திங்க முடியாம அப்புடியே பாக்கெட்டோட போட்டுட்டு போவுமே தவிர இந்தான்னு கொடுக்காதுவ, ஈவு எறக்கமெத்த சனம் என்னத்த செய்ய.”

இப்படி பேசிக்கொண்டிருந்த அம்மா தயக்கத்தோட மெதுவாக கேட்டார், “எலும்பிச்ச சாதம் கடையில என்ன வெல இருக்கும்மா”.

“20 ரூவா இருக்கும்மா. எதுக்கு கேக்குறீங்க.”

“மிசினு வந்து வெட்டுன புல்ல ரெண்டு நாளா பெருக்கி அள்ளிக் கொட்றேன் இன்னும் பாதி வேல கூட முடியல. ரெண்டு நாளா தண்ணி கஞ்சி குடிச்சு நாக்கு செத்துக் கெடக்கு. இன்னைக்காவது கொழம்பு வப்போன்னு நெனச்சேன் முடியல. அதான் ஒரு பொட்டலம் எலும்பிச்ச சாதம் வாங்கி சாப்புடலான்னு கேட்டேன். நீ இந்த வெல சொல்ற ஒரு வேளக்கி 20 ரூவாய்க்கி சாப்புட்டா நமக்கு கட்டுப் படியாகாது. அரைக் கிலோ இட்லி மாவு வாங்கவே ஒரு வாரம் யோசிச்சேன். 20 ரூவா இருந்தா ரெண்டு நாள் பொழப்ப ஓட்டிருவேன்.” என்றார்.

சம்பளம் பத்தி கூறும் போது “வாங்குற 3600 சம்பளத்த வச்சுகிட்டு கண்டதுக்கும் ஆசப்பட முடியுமா? சாப்பாட்டு சாமான், குளிக்க, தொவைக்க, பாத்தரம் கழுவ சோப்பு, தலைக்கி எண்ண, மாத்தர மருந்துன்னு எத்தன செலவு இருக்கு. கையில கெடச்சதெல்லாம் செலவு பண்ணிட்டு பின்னாடி வேல இல்லாம, கை கால் விழுந்துருச்சுன்னே வையி; வெறும் கையோட போய் நின்னா பிள்ளைங்களுக்குதானே கஷ்டம். அவங்களுக்கு ஒரு தொந்தரவு தராம நம்ம பாதைய நாமளே பாத்துக்கனும்”, என்றார்.

ஒரு எலுமிச்ச சாதத்துக்கும், ஆழாக்கு இட்லி மாவுக்கும் அந்தம்மா தயங்குற ஊருலதான் பிசா, பர்கரு, தலப்பாகட்டு எல்லாம் பெருக்கெடுத்து ஓடுது. பெட்டிக் கடையிலயே அமெரிக்க சிப்சு வகைங்களெல்லாம் சரம் சரமா தொங்குது. செட்டிநாடு, மதுரை, திண்டுக்கல்லு, தஞ்சாவூருன்னு எல்லா ஊரு சுவையும் ஓட்டல் ஓட்டலா கிடைக்கிது. ஒத்த ரூபாய பாத்து செலவு பண்ற இந்த அம்மாவுக்கும், காந்தி நோட்ட வீசி ஜீரணம் ஆகாம வாந்தி எடுக்குற கூட்டத்துக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

சென்னை பூங்கா 1
சென்னை பூங்காக்களில் காலை நடைப் பயிற்சியில் மக்கள்

சென்னையில மட்டும் 260 மாநகராட்சி பூங்காக்கள் உள்ளது. இந்த பூங்காக்களை பராமரிக்க மூன்று வட்டாரங்களாக பிரித்து மூன்று தனி தனி முதலாளிகளுக்கு 12.61 கோடி டெண்டர் விடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீழ் பராமரிக்கப்படும் இந்த பூங்காக்களில் விதவைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பொற்றோர்கள், சின்ன பிள்ளைகளுடன் நிற்கதியாய் ஆதரவற்றவர்களாய் இருப்பவர்கள் என்று எதிர்த்து கேள்வி கேட்க முடியாத படி வாழ்க்கையில் தூக்கி எறியப்பட்டவர்களே இந்த வேலையில் இருக்கிறார்கள். அவங்க கடந்த கால கிராமத்து வாழ்க்கையில மட்டுமில்ல, இப்போதைய பட்டணத்து வாழ்க்கையிலயும் கொத்தடிமைங்கதான்.

முன்பு பூங்காக்களை பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் இருந்தார்கள். அவர்கள் சரிவர பராமரிக்க வில்லை என்று கூறி, அவர்கள் வாழ்க்கையில் மண்ணள்ளி போட்டு விட்டு, மற்ற எல்லா துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்த மாறி பூங்கா பராமரிப்பு வேலையையும் தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு.

தின்னுட்டு உடம்பு பெருத்துப் போச்சுன்னு பூங்காக்களுக்கு நடக்க வார ஆபிசருங்களுக்காக பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த தொழிலாளிங்களுக்கு இல்லை. பனித்துளியில இருக்குதுடா உலகம்ணு கவிதை எழுதர எழுத்தாளருங்களெல்லாம் சென்னை பூங்காக்கள்ள குந்திக்கிணு ‘உலக’ இலக்கியமெல்லாம் படைச்சிருக்கோம்ணு அவங்களே சொல்லக்கிறாங்க. ஆனால உலக இலக்கியத்த எழுதுனவங்க எல்லாரும் செடி கொடிக்கு கண்ணீர் விட்ட மாதிரி அதுக்கு தண்ணி ஊத்துனவங்களுக்கு விடல. ஏன் பாக்க கூட இல்ல.

இந்த பூங்காக்கள் இன்று பெரும்பாலும் தேகப் பயிற்ச்சி, நடை பயிற்சி, தியானம், யோகா என்று நடுத்தர வர்க்கத்தின் உடல் குறித்த கவலை தீர்க்கும் இடமா மாறி வருதுது. ஓட்டல்ல தீனி, பார்க்குல நடைன்னு இந்த முரண்பாடு என்னைக்குமே முடியாது.

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதால், ஒரு காற்றோட்டமான, மரம் செடிகளுடன், இயற்கையோடு இளைப்பாற, பேசி மகிழ என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது பூங்கா. ஆனால் அதை பராமரிக்கும் ஊழியர்களுக்கு, இவ்வளவு அழகான இயற்கைக்கு மத்தியில் கக்கூசு போன்ற கொட்டடியில் ஒரு எலுமிச்சை சாதத்திற்கு கூட வழியில்லாத கொத்தடிமை வாழ்க்கை தான் கிடைத்துள்ளது.

மனுசனை மறந்துட்டு இயற்கையை ரசிக்கிறவங்களுக்கும், ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோவுக்கும் வேறுபாடு இல்லேங்கறேன். என்ன சொல்றீங்க?

–    சரசம்மா

வருமான வரி வழக்கு : ஜெயாவை காப்பாற்றும் மோடி அரசு!

7

அதிமுகதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் அவரது உடன்பிறவாத் தோழி சசிகலா நடராசன் மீதும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக, வருமான வரித்துறை 1997-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். இவ்வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்த வாரம் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்காக வந்தது. ஆனால் குற்றச்சாட்டப்பட்ட இருவரும் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. பதிலாக இரண்டு மனுக்கள் ஆஜராகின.

“இவ்வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையிடம் நான் ஒரு மனு கொடுத்திருகிறேன், அது அவர்களின் பரிசீலனையில் உள்ளது. என்னுடைய கோரிக்கைக்கு வருமான வரித்துறை பதிலளிக்கும் வரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று இந்த நீதி மன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதையே சசிகலாவும் தனது மனுவில் வழிமொழிந்திருக்கிறார். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராமசாமி குற்றவாளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டார். எனவே இரு மனுக்களையும் ஏற்று வழக்கு விசாரணைனையை நீதிபதி தட்சிணாமூர்த்தி ஜூலை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

வாய்தா ராணி எனும் அடைமொழி பெற்றிருக்கும் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு போல இந்த வழக்கையும் தள்ளி வைக்கும் வழக்கமான தந்திரம் மட்டுமல்ல இது. எந்த வழக்கை எப்படி நினைவு கொள்வது என்று தவிப்பவர்களுக்காக வழக்கு குறித்த ஒரு நினைவூட்டல்.

சசி எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனம் 1989-ம் ஆண்டு சசிகலாவையும் டி.வி. தினகரனையும் பங்குதாரர்களாகக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது. பிறகு  1990-ல் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் பங்குதாரர்களாகக் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 1991-ல் ஜெயா ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தை மொட்டையடித்த பணத்தில் ஒரு பகுதி சசி எண்டர்பிரைசசில் போடப்படுகிறது. சசி எண்டர்பிரைசஸ் என்கிற இந்த நிறுவனம் என்ன நிறுவனம்? கார்கள் தொடர்பான வணிகம் செய்யும் நிறுவனமாம். அப்படி தான் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது சுருட்டப்பட்ட பணத்தை மறைப்பதற்க்காக துவங்கப்பட்ட ஒரு டுபாக்கூர் கம்பெனி. 1991 முதல் 1996 வரை முழுமையாக ஐந்து ஆண்டுகள் நடந்த பகற்கொள்ளை முடிவுற்ற பிறகு தான் ‘வருமான’ வரி ஏய்ப்பு என்கிற பெயரில் 1997 இல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

1997-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அதன்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. ஜெயா, சசி இருவரும் 2006-ல் வழக்கிலிருந்தே தங்களை விடுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அப்படியானால் இடைப்பட்ட ஒன்பதாண்டுகளில் என்ன நடந்தது. நீதி மன்றம் தூங்கிக்கொண்டிருந்ததா? என்கிற கேள்வியை எழுப்பினால் அது நீதி மன்ற அவமதிப்பு என்பார்கள்.  எனவே இந்த இடைப்பட்ட இருண்ட காலத்தில் என்னமோ நடந்தது என்று ஒதுக்கிவிட்டு அதற்கடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

மோடி ஜெயலலிதா
அரசியல் கொள்கை அனைத்திலும் ஒன்றுபட்டாலும் சென்ற தேர்தலில் ஒருத்தருக்கொருத்தர் எதிர்ப்பது போல எப்படியெல்லாம் நடித்தார்கள்?

வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று குற்றம சாட்டப்பட்டோர் மனுத்தாக்கல் செய்தாலும் உயர்நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அடுத்ததாக இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றனர். உச்சநீதி மன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இப்படியாக டெல்லிக்குச் சென்ற வழக்கு இறுதியில் எழும்பூருக்கே உச்சநீதி மன்றத்தின் உத்தரவுடன் திரும்பி வந்தது. இதற்கே 17 வருடங்கள் ஆகிவிட்டன.

கடந்த திங்கள்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் ஜெயலலிதாவும், சசிகலாவும் ‘வருமான வரித்துறைக்கு நாங்கள் அபராதம் செலுத்தி வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக இருக்கிறோம்’ என்று தமது மனுவில் கூறியுள்ளனர். இதன் மூலம் அம்பலமாகியிருப்பது என்ன என்றால். ‘நாங்கள் குற்றம் செய்தது உண்மை தான்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். குற்றவாளிகளே விலங்கை மாட்ட இவ்வாறு கைகளை நீட்டி வாய்ப்பளித்த போதிலும், வழக்கு தொடுத்த வருமான வரித்துறையின் வழக்குரைஞர் ராமசாமி அதற்கு மாறாக எப்படி தப்பிப்பது என்றும் அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

“முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள மனுவின் மூலம் வருமான வரித்துறை சட்டப்பிரிவு 279-பிரிவு 2-ன் கீழ் சமரசம் செய்து கொள்ள முடியும். அவர்களின் மனுக்கள் வருமான வரித்துறை, இயக்குனர் ஜெனரலிடம் கொடுக்கப்பட்டுள்ளது, காம்பவுண்டிங் முறையில் (வருமானவரி பாக்கி உள்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்துவது) வருமானவரி பிரச்சினையை தீர்க்கத் தயார் என்றும், வருமான வரித்துறையின் பதில் வரும் வரை வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வருமான வரித்துறை வழக்கறிஞர் இதை தனது தனிப்பட்ட கருத்தாக கூற முடியாது. மத்திய அரசின் அல்லது மோடியின் முடிவைத்தான் அமல்படுத்த முடியும். பா.ஜ.க.வும் அ.தி.மு.க வும் வெவ்வேறு கட்சிகளாக இருப்பினும், மோடியும் ஜெயலலிதாவையு இணைக்கின்ற கொள்கையும் சித்தாந்தமும் வர்க்க நலனும் ஒன்று தான். பார்ப்பன பாசிசமும், மறுகாலனியாக்கமும் தான் இவர்களின் கொள்கை மற்றும் ஒற்றுமைக்கான காரணம். எனவே தான் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவை குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க பா.ஜ.க உதவி செய்கிறது. அதில் ஒன்று தான் வருமான வரித்துறையால் போடப்பட்டுள்ள இவ்வழக்கில் எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதை வட்டியும் முதலுமாக கட்டிவிடுகிறோம் என்று ஜெயா கூறியுள்ளதை வருமான வரித்துறை வழக்கறிஞர் அனுமதித்துள்ளார்.

இதை ஆரம்பத்திலேயே ஜெயலலிதா ஏன் செய்யவில்லை? செய்திருந்தால் வருமான வரி ஏய்ப்பை ஒத்துக் கொண்டதாக ஆகிவிடும். வழக்கை தள்ளி வைப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இறுதியில் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் ஜெயா. அதுவும் மத்திய அரசு ஆதரவின்றி சாத்தியமில்லை என்பதுதான் இதன் சூட்சுமம்.

ஜெயாவை விடுங்கள், ஆனால் ஊழலை சகித்துக் கொள்ளமாட்டேன் என்று சண்டமாருதம் செய்த மோடி இப்போது பகிரங்கமாக ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும் வேலையை செய்து வருகிறார். இது ஏதோ ஜெயாவுக்கு மட்டும் தரப்படும் தனிச்சலுகை அல்ல. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாகளுக்கு நிறுவன ரீதியாக தரப்படும் சட்டபூர்வ ஓட்டைகளே இப்போது ஜெயலலதாவுக்கும் தரப்படுகிறது.

தமிழகம் கண்ட முதல்வர்களிலேயே ஜெயலலிதான் ஒரே இந்து முதல்வர் என்று இந்து முன்னணி ராமகோபாலன் அன்றே சொல்லியிருந்தார். அந்த இந்து பாரம்பரிய நட்பு இன்றும் தொடர்கிறது. அநீதிகள் கூட்டணியாக சேருவதில் எந்த ஆச்சரியமில்லை. ஆனால் இவர்கள் தேர்தலின் போது எதிரெதிர் முகாம் போல காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்து நடித்தார்கள்!

சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?

6

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து இது வரை 50 தொழிலாளிகள் கொல்லப்பட்டும் 27 பேர் காயங்களுடனும் மீட்கபட்டிருக்கின்றனர்.

தற்போது வந்திருக்கும் செய்திகளைப் பார்க்கும் போது பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் போலத் தெரிகிறது. எவ்வளவு பேர் உள்ளே சிக்கியிருக்கின்றனர் என்ற விவரம் கட்டுமான முதலாளிக்கோ இல்லை அரசு, போலீசுக்கோ தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. உயிரிழப்புகள் அதிகமாய் பதிவு செய்யப்படுவது இருதரப்பினருக்கும் நல்லதல்ல என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் அதை குறைத்தே தெரிவிக்கின்றனர். காணமல் போன தொழிலாளிகளின் உறவினர்கள் அதை முறையாக புகார் செய்ய மாட்டார்கள் என்று கூட இவர்கள் யோசித்திருக்க கூடும். 11 மாடி கட்டிடத்தின் உள்ளே எத்தனை பேர் வேலை செய்தார்கள், மாட்டிக் கொண்டார்கள் என்பதைக் கூட இவர்களால் கூற முடியவில்லை என்றால் இந்த கட்டிடம் என்ன இலட்சணத்தில் கட்டப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கட்டிடம் கட்ட ஏரிப் பகுதி நிலத்தை தேர்ந்தெடுத்த கட்டிட நிறுவன முதலாளிகளிருந்து, விதிமுறைகளை தளர்த்தி தேவையான அனுமதிகளை வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர்கள், துறை அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் அடங்கிய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுதான் இந்த கட்டிடம் இடிந்து விழுந்த குற்றச் செயலுக்கான முதன்மை குற்றவாளிகள். அவர்களது குற்றத்தின் விளைவாக கட்டிடம் இடிந்த பிறகும் அவர்களில் யாரும் கட்டிட இடிபாடுகளை நீக்கி சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க வரவில்லை.

நூற்றுக் கணக்கான மீட்புப் பணி ஊழியர்கள், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர்தான் இரவும், பகலும் உழைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உழைத்து வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கி, அதற்கு உடந்தையாக இருந்து இந்தக் கொலைகளுக்கு காரணமாக இருந்த ‘புரட்சித்’ தலைவியும் அவரது கூட்டாளிகளும் எதுவுமே தெரியாதது போல மறுநாள் வந்து கட்டிடத்தை பார்வையிட்டு காயமடைந்த தொழிலாளிகளுக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதலும் கூறிச் சென்றிருக்கின்றனர்.

‘அம்மா’ உள்ளே சென்று பார்வையிடும் போது, கட்டிடத்தில் முன்பகுதியில் உள்ள பொக்லைன் இயந்திரங்கள் அவருக்கு தடையாக இருக்கும் என்பதால் இயந்திரங்களை பயன்படுத்துவது தற்காலிமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நிமிடமும் உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் பொன்னான கணங்களாக விரிந்த அந்த நாளில் ‘அம்மா’வின் வருகை உள்ளே சிக்கியிருந்த தொழிலாளிகள் சிலரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என்பதற்கு வாய்ப்பில்லையா என்ன?

கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதில் தவறு இழைக்கப்படவில்லை என்றும், கட்டுமான நிறுவனம் விதிமுறைகள அனைத்தையும் மீறியதாகவும், விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் ஜெயலலிதா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார். அவரது அமைச்சரின் உத்தரவின்படியும், ஒப்புதலோடும் பிரைம் சிருஷ்டிக்காக விதிமுறைகளை தளர்த்தி, மாற்றி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட உண்மை அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மவுலிவாக்கம் போரூர் ஏரிக்கருகில் உள்ள 1.11 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்துக்கு சொந்தக்காரர்தான் கலிபுல்லா. இவரது மர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நிலம் ஏலத்திற்கு வந்தது. இந்தியன் வங்கியில் கிளார்க்காக வேலை செய்து வந்து 2011-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற மனோகரன் தான் கூட்டாளியாக இருந்த பிரைம் சிருஷ்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக நிலத்தை வாங்கியிருக்கிறார். தலா 44 குடியிருப்புகளைக் கொண்ட இரண்டு அடுக்கு மாடி கட்டிடங்கள கட்ட திட்டமிட்டுள்ளார்.

மனோகரனது பிரைம் சிருஷ்டி நிறுவனம் மதுரையில் வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டியிருக்கிறது. லேக் வியூ ஹோம்ஸ் என்று வீடுகள் கட்டி விற்பனை செய்திருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தி.மு.க அல்லது அ.தி.மு.க அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் தமது ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வந்திருக்கிறது இந்தக் கும்பல். ஆட்சிகள் மாறினாலும் மக்கள் மீதான மறுகாலனியாக்க சுரண்டலுக்கு இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு அளிக்கின்றனர் என்பதற்கு பிரைம் சிருஷ்டி மனோகரன் ஒரு எடுத்துக்காட்டு.

2011-ம் ஆண்டு தேசிய குற்றப் பதிவேட்டு விபரங்களின் படி தமிழ்நாட்டில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஒவ்வொரு நாளும் ஒருவர் சாகிறார். அந்த ஆண்டில் 437 பேர் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் 22 கட்டிட இடிந்து விழுந்த நிகழ்வுகளில் 21 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பான்மையான கட்டிடங்கள் இடிந்து விழுந்த பிறகு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் நடப்பதாக ‘கண்டுபிடிக்கிறார்கள்’. ஆனல் இந்த விதிமீறலை அனுமதித்து விதியை வளைத்ததும் இவர்கள்தான். நகராட்சிகளும், குடிசை மாற்று வாரியம் போன்ற அரசு அமைப்புகளும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர். அதற்கு இவர்கள்தான் பொறுப்பு என்பதை யார் அடையாளம் காண்பது? மேலாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தாலும் இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அல்லது பேருக்கு எடுத்து விட்டு அவர்கள் தண்டிக்கப்படாமல் தொழிலை செவ்வனே தொடர்கிறார்கள்.

தன்னிடம் இரண்டு 11 மாடி கட்டிடங்கள் கட்டும் திட்டத்துக்கு அனுமதி கேட்டு வந்த மனோகரனிடம் “போரூர் ஏரிக்கரையில் உள்ள இந்த கிராமத்தில் 6 அடி தோண்டினாலே ஏரி தண்ணீர் வரும். 18 அடிக்கு மேல் களிமண் வரும். 60 அடியில்தான் பாறைகள் வரும்” என்று அவரை எச்சரித்திருக்கிறார் மவுலிவாக்கம் பஞ்சாயத்து தலைவர் சதாசிவம்.

விழுந்து நொறுங்கிய கட்டிடத்தின் அண்டை வீட்டுக்காரர்களிடம் (சீனிவாசன், ரவி முதல்தெரு, ராஜராஜன் நகர்) பேசிய போது

”நாங்க இவ்வளவு பெரிய கட்டிடம் இங்க வருமுன்னு நினைக்கல. அந்த கட்டிடத்துக்கு அடித்தளம் போடும்போது கூட, அவங்க பெரிய மெசின் எதையும் எடுத்துவரலை. அதனால் சின்ன அபார்ட்மென்டுகள் கட்டப்போறாங்கன்னு நெனைச்சோம். வீட்டுக்கு போர் போடும் அளவிலதான் இந்த 12 மாடிக்கும் அடித்தளம் போட்டாங்க. மொத்த நிலத்திலயும் 5அடி ஆழத்துக்கு குளம் போல் பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில அங்கங்கே 15 அடி ஆழத்துக்கு ஒரு அடி விட்டத்தில பில்லர் எழுப்பி அதன் மேல் 12 அடுக்கு மாடியை உட்கார வெச்சிட்டாங்க. இங்க எல்லாம் 10 அடி தோண்டினாலே தண்ணீ வரும். 50 அடி ஆழம் வரை களிமண்ணும் சேறும்தான் வரும்…

இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது. அதற்கே தண்ணீர் சொளசொளவென ஊறும். 2 மாடிக்கு மேல் இங்கு யாரும் கட்டிடம் கட்டுவதே இல்லை.” என்றார்.

11 மாடி கட்டிடம் கட்ட தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் எப்படி  அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை என்கின்றனர் பகுதி மக்கள்.

88 குடியிருப்புகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறது பிரைம் சிருஷ்டி நிறுவனம்.

போரூர் கட்டிட விபத்து குற்றவாளிகள் 3
கட்டுமான முதலாளிகளின் இலாபவெறிக்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளிகள்.

அடுக்கு மாடி குடியிருப்பு எனில் 60 அடி சாலை இருக்க வேண்டும். நிலத்தின் பட்டா, கட்டிட வரைபடம், மண் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ், போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், சுற்றுச் சூழல் ஆகிய துறைகளின் அனுமதி கடிதங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பத்தோடு பட்டா, கட்டிட வரைபடம் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கடிதங்கள் இணைக்கப்படவில்லை.

அமைச்சர் வைத்தியலிங்கத்தை சந்தித்து ‘கவனித்த’ பிறகே விண்ணப்பம் அனுப்பியதால் நடைமுறைகளை பின்பற்றுவதை பிரைம் சிருஷ்டி அலட்சியம் செய்திருக்கிறது. பெருநகர வளர்ச்சிக் குழுமம் கேட்ட பிறகு மண்வள உறுதிக்கான சான்றிதழை மட்டும் பெற்று இணைத்திருக்கிறது. ஆவணங்கள் போதாமையால் பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாததை, மேலிடத்து ‘அருள்’ உறுதி செய்திருக்கிறது.

பிரைம் சிருஷ்டியின் விண்ணப்பம் திட்ட ஒப்புதல் பிரிவின் உதவி திட்ட அமைப்பாளர் துணை திட்ட அமைப்பாளர் ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டு, கட்டிடம் கட்டும் இடத்தை இருவரும் நேரடி ஆய்வு செய்த பிறகு தலைமை திட்ட அமைப்பாளர் ராஜசேகர பாண்டியனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

உதவி திட்ட அமைப்பாளரும், துணை திட்ட அமைப்பாளரும் கட்டிடம் அமையவிருக்கும் பகுதியில் சாலை 42 அடி அகலம் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரைம் சிருஷ்டிக்கு தலைமை பூசாரியான அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ஆசீர்வாதம் இருந்ததால் இந்த முக்கிய குறைபாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பிரைம் சிருஷ்டி பத்திர பதிவுத்துறையிடம் சமர்ப்பித்த வில்லங்க சான்றிதழிலேயே நிலத்தின் தெற்கில் கட்ட தோட்டி நிலம் மற்றும் ஏரி கால்வாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை திட்ட அமைப்பாளர்கள் புறக்கணித்ததோடு நேரில் ஆய்வு செய்தும் உள்ளூர் மக்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த விபரத்தை ஆட்சேபணையாக எழுப்பவில்லை.

தனது சாதியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியனை தலைமை திட்ட அமைப்பாளர் பதவியில் உட்கார வைத்தவரே அமைச்சர் வைத்தியலிங்கம். எனவே அமைச்சரின் பினாமியாக, அவர் சொல்வதுபடி கட்டிட ஒப்புதல்களை வழங்குவதுதான் இந்த அடிமையின் வேலை என்று புரிந்து கொள்ளலாம்.

ராஜசேகரபாண்டியன் தன் தரப்பில் எந்த ஆய்வையும் நடத்தாமல் கோப்பை மாநகர வளர்ச்சிக் குழு செயலர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்சுக்கு அனுப்பியிருக்கிறார். வெங்கடேசன் தான் தலைவராக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு அனுமதி வழங்கும் குழுவை கூட்டியிருக்கிறார். இந்த குழுவின் உறுப்பினர்களாக தலைமை திட்ட அமைப்பாளர் (ராஜசேகர பாண்டின்), போக்குவரத்து துறை இணை ஆணையர், தீயணைப்புத் துறை இயக்குநர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநர், சுற்றுச் சூழல் துறை நிர்வாக இயக்குநர், மின்வாரிய தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இருப்பார்கள். இத்தனை உயரதிகாரிகள் அடங்கிய குழு 60 அடி சாலை இல்லை என்பதையும், கட்டிடத்தின் பக்கவாட்டில் போதுமான இடம் விடப்படாததையும், கட்டிடம் கட்டப்படவிருக்கும் நிலம் ஏரி நிலம் என்பதையும், விண்ணப்பத்தோடு தேவையான ஒப்புதல்கள் அனைத்தும் இணைக்கப்படவில்லை என்பதையும் பொருட்படுத்தாமல் விதிகளை தளர்த்தி பிரைம் சிருஷ்டியின் கட்டிடங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

“நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு” இந்த முடிவை எடுத்ததாக குழு பதிவு செய்திருக்கின்றனர். ‘வளர்ச்சி’ என்றால் மக்கள் விரோத அதிகாரிகளும், முதலாளிகளுக்கு தொண்டு செய்யும் அரசியல்வாதிகளும் ஊதிப் பெருப்பது, பெரும்பான்மை உழைக்கும் மக்களை சிறுகச் சிறுக அல்லது ஒரேயடியாக கொன்று குவிப்பது என்பதற்கு பிரைம் சிருஷ்டி ஒரு உதாரணமாக அமைந்து விட்டது.

பிரைம் சிருஷ்டி கட்டிடங்களுக்கான ஒப்புதலை குழு வழங்க வேண்டும் என்பது அமைச்சரின் விருப்பம் என்று அந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ்.

அதன் பிறகு கோப்பு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டு துறையின் துணை செயலாளர், செயலாளர் ஆகியோரின் பார்வைக்குப் பிறகு அமைச்சரின் முத்திரையை பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிருஷ்டி நிறுவனத்திற்காக சாலை அகலம் குறித்த விதியையும், பக்கவாட்டு இடம் பற்றிய விதியையும் தளர்த்தியும், வரன்முறை செய்தும் இரண்டு அரசாணைகளை பிறப்பித்திருக்கிறது வீட்டு வசதித் துறை.

அதன் அடிப்படையில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியிருக்கிறது பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

அமைச்சரிலிருந்து, கீழ்மட்ட ஆய்வாளர்கள் வரை ஒவ்வொருவரும் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கியதற்கு பொறுப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றத்திற்காக விசாரித்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

2013-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா பூஜை போட கட்டிட வேலை ஆரம்பித்திருக்கிறது. 1,260 சதுர அடி, 1,410 சதுர அடி, 1,600 சதுர அடி, 1,713 சதுர அடி என்று நான்காக பிரித்து சதுர அடி விலை ரூ 4,800 முதல் ரூ 5,500 வரை வைத்து விற்று விட்டார்கள். ரூ 58 லட்சம் முதல் ரூ 90 லட்சம் வரை விலை வைத்து விற்கப் போகும் கட்டிடத்தை வேகமாக முடிப்பதற்கு வெகுவேகமாக கட்டி வந்திருக்கின்றனர்

கட்டிடம் கட்டும் ஒவ்வொரு நிலையிலும் கட்டிடம் விதிமுறைகளின்படி கட்டப்படுகிறதா என்று வளர்ச்சிக் குழும பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. பல மாடி கட்டிடத்துக்கு போட வேண்டிய முறையான அடித்தளம் போடப்பட்டதா, மண்ணின் தாங்கு திறனுக்கு ஏற்றபடி வடிவமைக்கும்படி கட்டுமான பொறியாளர் கலந்தாலோசிக்கப்பட்டாரா, சராசரி சிமெண்டுக்கு பதிலாக அதிக தரம் உள்ள கிரேட் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டதா என்று கண்காணிக்கப்படவில்லை. தரமான சிமெண்ட் கலவையை பற்றி கவலைப்படாமல் ரெடிமிக்ஸ் கலவையை பயன்படுத்தியிருக்கிறது பிரைம் சிருஷ்டி. எடை அதிகமில்லாத ஹாலோ பிளாக்குகளை பயன்படுத்தாமல் எடை அதிகமுள்ள சாம்பல் கற்களை பயன்படுத்தியிருக்கிறது. இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எதையும் கவனிக்கவில்லை.

அரை மணி நேர காற்று, மழை, இடியில் அப்பளம் போல நொறுங்கி விழுந்திருக்கிறது கட்டிடம். அருகில் கட்டப்பட்டு வரும் இன்னொரு கட்டிடம் சீல் வைக்கப்பட்டு அது பாதுகாப்பற்றது என்று பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது.

ஆனால், பிரைம் சிருஷ்டியின் முதலாளிகளோ, கட்டிடம் எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டு, தரமாக கட்டப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தது இயற்கையின் சீற்றத்தால்தான் என்று சாதிக்கிறார்கள்.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் இந்த கட்டிடக் கொலை குறித்து பாதுகாப்பாகவே பேசியிருப்பதன் காரணம் என்ன? எல்லா ஓட்டுக் கட்சிகளின் தளபதிகளுக்கும் வாழ்வளிப்பது ரியல் எஸ்டேட் துறைதான். இடங்களை வளைப்பது, ஆக்கிரமிப்பது, விற்பது, என்று அதிகார வர்க்கம், கட்டுமான முதலாளிகள் துணையுடன் இவர்கள் பணத்தை அள்ளுகிறார்கள். சொகுசு கார்களில் கட்சி கொடி கட்டிவிட்டு சுற்றும் இவர்களை வைத்தே தமிழக அரசியல் இயங்குகிறது என்றால் மிகையல்ல.

பிரைம் சிருஷ்டி கட்டிய இந்த இரு கட்டிடங்களிலும் 60 லட்சம் முதல் 90 லட்சம் வரை வீடுகள் வாங்கும் நடுத்தர வர்க்கத்தின் கதை தனி. இந்த வார ஆனந்த விகடன் நேர்காணலில் இடிந்து போன கட்டிடத்தில் 60 லட்சம் கொடுத்து வீடு வாங்கிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் புகாரே கொடுக்கவில்லையாம், காரணம் என்ன? 30 லட்சம் வங்கி கடன் வாங்கியவர் புகார் கொடுத்தால் இன்னொரு 30 லட்சத்திற்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதால் புகார் கொடுக்க வில்லையாம். எனில் அந்த கணக்கில் வராத முப்பது இலட்சத்திற்கும் கட்டுமான நிறுவனத்தின் விதிமீறலுக்கும் என்ன வேறுபாடு? பிரைம் சிருஷ்டி விதிமீறலில் பல பேர் கொலை செய்யப்பட்டனர் என்றால் அரசு ஊழியரின் முறைகேடான பணத்தால் வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்?

இது போக எப்படியாவது சொந்த வீடு கட்டியாக வேண்டும் என்ற நுகர்வு வெறி காசி யாத்திரை போல நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை இலட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதில் சிக்கி தனது ஆயுள்கால சேமிப்பையும் இழந்து ஆயுள் தண்டனை போல வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் இப்படி அழிய வேண்டும்?

இந்த மக்களை இப்படி வெறியேற்றும் குற்றச் செயலை அனைத்து ஊடகங்களும் அணிசேர்த்து செய்கின்றன. பிரைம் சிருஷ்டி கட்டிடத்திற்கு விளம்பரம் கொடுக்கவில்லை என்று எதாவது ஒரு பத்திரிகையோ இல்லை தொலைக்காட்சியோ நெஞ்சு நிமிர்த்தி சொல்ல முடியுமா?

இந்த அரசியல்வாதிகளும் முதலாளிகளும் கொண்ட கொலைக் கூட்டத்தின் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட, தமது உடைமைகளை இழந்த தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர்கள். விவசாயம் இல்லாததால் கட்டிட வேலைக்கு வந்திருக்கின்றனர். ஊரில் பெரியவர்கள் விவசாயம் செய்வதாகவும் அறுவடை சமயம் போன்ற முக்கியமான சமயங்களில் இரண்டு மாதங்கள் அங்கே சென்று விவசாய வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாலா, சக்லி சாதியை சேர்ந்த தலித் மக்கள். நிலமற்ற கூலி தொழிலாளிகளாக இருந்தவர்கள். இவர்களை தவிர ரெட்டி, யாதவ் போன்ற இடைநிலை சாதியினரும் இருக்கின்றனர்.

தங்கள் மோதுகவலசா கிராமத்திலிருந்து சுமார் 40 பேர் இந்த கட்டிடத்தில்  வேலை செய்து வந்தாகவும் அவர்களில் பெரும்பான்மையானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறினார் ஒரு இளைஞர். ஹிரமண்டலம் அணைத்திட்டத்தால பாதிக்கப்பட்ட  கிராமங்களில் மோதுகவலசாவுன் கிராமமும் ஒன்று. அணைக்காக அரசு அவர்களை நிலத்திலிருந்து விரட்டியடித்திருக்கிறது. விவசாய நிலம் இல்லாமல் போனதால் பலர் வெளியூருக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

சொந்த ஊரில் விவசாயிகளை வாழவிடாமல் துரத்தியடித்த ‘வளர்ச்சி’ வந்த இடத்திலும் காவு வாங்குகிறது.

ஆந்திர தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த நெல்லூர் கூடுதல் ஆட்சியாளர் டைம்ஸ் நவ் நிருபருக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

“இந்த மக்கள் அப்பாவிகள். ஒன்றும் அறியாதவர்கள். பாருங்கள் நூற்றுக்கணக்கான உறவினர்களை இழந்திருக்கிறார்கள். பாருங்கள் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஒரு சத்தம் கூட இல்லை.”

ஆம், அவர்களது வாழ்வையும் உறவினர்களின் உயிரையும் பறித்த அரசியல்வாதிகளே அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்; உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என்று நிவாரணத் தொகை அறிவிக்கிறார்கள். தொழிலாளர்களோ அடுத்த வேளை சோற்றுக்குக் கூட, தவிக்கும் வாய்க்கு தண்ணீருக்குக் கூட அந்த கொலைகாரர்களின் கருணையை நாடி நிற்க வேண்டியிருக்கிறது.

வறுமை என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? ஒருவேளை சோறு என்பது மட்டுமா வறுமை? “சீ நாயே போடா வெளியே” என்ற பின்னாலும் “சாமீ…” என்று வில்லாக வளைவது வறுமை. கட்டிய பெண்டாட்டியை கையைப் பிடித்து இழுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்வது வறுமை. பத்து ரூபாய் காசுக்காக பட்டணத்துக்கு லாரியேறி “வாழ்க” கோஷம் போடுவது வறுமை.  வறுமை கொடியது; காசிருப்பவன்தான் சிரிக்க முடியும், மகிழ முடியும். ஆனால் அழுவதற்கும் வறுமை தடையாகுமோ!

– புதிய கலாச்சாரம் இதழில் வெளி வந்த “கண்ணீர் சிந்தவும் காசு வேண்டும்” என்ற கட்டுரையிலிருந்து

போராடுவதற்கும் காசு வேண்டுமா? வறுமை தடையாகுமா?

தங்களை கொலை செய்த ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கத்தின்  கருணையில்தான் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றால் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது?

–    வினவு செய்தியாளர்கள்

படங்களை பெரியதாக பார்க்க சொடுக்கவும்

நூர் அகமது இனி எங்கே தங்குவார் ?

5

வீடற்றவர்கள் ஓவியம் 3”நானும் என் மனைவியும் தோட்ட வேலை கற்றுக் கொண்டோம். நாங்கள் இந்த லோதி சாலையை அழகுபடுத்த நாளெல்லாம் வேலை செய்தோம். மண்ணைப் பறித்து, அதை பண்படுத்தி, அதில் பூ விதைகளைப் போட்டு செடிகளை வளரச் செய்தோம். அந்தச் செடிகளுக்கெல்லாம் சரியான நேரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினோம். எங்கள் இருவருக்குமாகச் சேர்ந்து ஆறாயிரம் ரூபாய்கள் சம்பளமாக கிடைத்தது. அதை வைத்து எங்கள் இருவரையும் தவிர எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் வயிறார சாப்பாடு போட முடிந்தது…”

“அப்புறம் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. நிறைய வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள். விளையாடி விட்டுச் சென்று விட்டார்கள். சொந்தமான ஒரு வீட்டில் குடியிருக்க வேண்டும் என்கிற எங்கள் கனவைப் போலவே வாகனங்கள் நிறுத்தும் அந்த இடமும் காலியாகவே கிடக்கிறது. கொஞ்சம் பணத்தை சேர்த்து வைக்கலாம் என்று தான் முயற்சிக்கிறோம்.. ஆனால்…”.

பேசும் போதே நூர் அகமதின் குரல் அடைத்துக் கொள்கிறது. பல்லாண்டுகளாக அவரும் அவரது குடும்பமும் தில்லியின் லோதி காலனியில் இருந்த விக்லாந்த் பஸ்தி என்கிற சேரிப் பகுதியில் வீடு என்று அவரால் அழைக்கப்படும் ஒரு அமைப்பினுள்தான் ஒண்டிக் கொண்டிருந்தனர். லோதி காலனியில் அமைக்கப்பட்டிருக்கும் நேரு விளையாட்டரங்கிற்கான வாகன நிறுத்தம் ஒன்றை அமைப்பதற்காக அகமதின் குடிசை அமைந்திருந்த விக்லாந்த் பஸ்தியுடன் சேர்த்து பிரபு மார்கெட் கேம்ப், பிரபு மார்கெட் கேம்ப் விரிவு மற்றும் இந்திரா காந்தி கேம்ப் ஆகிய சேரிப் பகுதிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. இன்றைக்கு நூர் அகமதின் குடும்பம் தில்லியின் தெருக்களில் விசிறியடிக்கப்பட்டுள்ள வீடற்ற பல்லாயிரம் குடும்பங்களில் ஒன்று.

அகமதுவைப் போல் லட்சக்கணக்கானோர் தலைநகர் தில்லியில் ஒண்ட இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடற்றவர்கள் யார் என்பதைப் பற்றி அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை கொண்டிருக்கும் அளவுகோலில் இருந்தே அரசின் வக்கிரங்கள் தொடங்குகின்றன. .

மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையின் அளவுகோலின் படி, வீடற்றவர்கள் என்றால் சாலையோரங்களிலோ, கூரையற்ற இடத்தில் உறங்குகிறவர்களாகவோ, குழாய்களுக்குள் ஒண்டிக் கொள்பவர்களாகவோ, கோவில்களில் உறங்குகிறவர்களாகவோதான் இருக்க வேண்டும். தலைக்கு மேல் மழைக்காகவோ வெயிலுக்காகவோ தார்பாலின் கித்தாயை விரித்திருந்தாலே அது ’வீடு’ என்கிற கணக்கில் அடங்கி விடும்.

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பார்த்தால், தில்லியில் சுமார் 46,724 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பல்வேறு தன்னார்வக் குழுக்கள் எடுத்த கணக்கின்படி தில்லியில் மட்டும் சுமார் 2,46,800 பேர் வசிப்பிடம் இல்லாதவர்கள். வறுமைக் கோட்டில் தில்லுமுல்லு செய்து வறுமையை ஒழித்ததும் இதுவும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஏழைகள் குறித்த அரசின் கண்ணோட்டத்தில் உறைந்து போயிருக்கும் தடித்தனம் தான்.

வீடற்றவர்கள் ஓவியம் 2இத்தனை பேருக்குமாகச் சேர்த்து அரசால் சுமார் 229 இரவு நேர வசிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 83 மட்டும் தான் நிரந்தரமானவை. மீதமுள்ளவைகளில் 97 தற்காலிகமாக மரத்தடுப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, 22 டெண்டுகள் மற்றும் 27 தனிநபர்களுக்குச் சொந்தமானவை. இதன் ஒட்டு மொத்தக் கொள்ளளவு சுமார் 17,000 தான். தவிர, ஏற்கனவே அரசால் நடத்தப்பட்டு வந்த இரவு நேர தங்குமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டும் கைவிடப்பட்டும் வருகின்றன.

தில்லி ஜூம்மா மசூதியை அடுத்துள்ள மீனா பஜார் பகுதியில் சுமார் ஆயிரம் பேர் வரை கொள்ளும் தங்கிடம் ஒன்று சமீபத்தில் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கே மூப்பது ரூபாய் வாடகைக்குக் கயிற்றுக் கட்டில், தலையணை மற்றும் கம்பளி ஒன்றும் வாடைகைக்கு விடும் தொழில் போலீசின் ஆசியோடு சிறப்பாக நடந்து வருகிறது. தினக் கூலிக்கு உழைத்து விட்டு இரவு நேரங்களில் முப்பது ரூபாய் கொடுத்து தெருவோரக் கட்டில்களில் ஒடுங்கிக் கொள்பவர்கள் அப்படியும் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒருவேளை மாமூல் சென்று சேர தாமதமானால் போலீசின் தடிக் கொம்பு எந்த நேரத்திலும் புட்டத்தைப் பதம் பார்க்கும் வாய்ப்புகளும் உண்டு.

வீடற்றவர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏராளமானவை. அதிலும், தில்லியின் தட்பவெட்பம் பிற இந்தியப் பெருநகரங்களில் இருந்து பாரிய அளவுக்கு வேறானது. ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் இறுதி மாதங்களில் குருதியை உறைய வைக்கும் குளிரும் மத்திய மாதங்களில் எலும்பை உருக வைக்கும் வெப்பமும் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பறித்து விடுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பத்து தேதிகளுக்குள் மாத்திரம் சுமார் 123 பேர் வெயிலின் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். 2009-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் வரை இவ்வாறு வெயில் மற்றும் குளிரின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,397. இவர்களில் எண்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் வீடற்றவர்கள்.

தில்லியின் தெருவோரங்களில் சிறு கடைகளை நடத்துவது, வீட்டு வேலைகள் செய்வது, ரிக்சா இழுப்பது, கைவண்டி இழுப்பது போன்ற சிறு சிறு வேலைகள் மட்டுமின்றி நகர சுத்தி வேலைகளில் ஈடுபடுபவர்களும் இவர்கள் தான். சொல்லப் போனால், பணக்கார தில்லி மேட்டுக்குடி சுகவாசிகளின் அன்றாட இயக்கமே இவர்களைச் சார்ந்து தான் சுழல்கிறது. தில்லியின் தெருக்களில் ஒண்டிக் கிடக்கும் இவர்கள் இல்லையென்றால், மொத்த நகரமும் ஸ்தம்பித்துப் போய் விடும்.

இம்மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்வதோடு பதிலுக்கு மனிதர்கள் நுழையவே தகுதியற்ற கொட்டகைகளை இவர்களுக்கான தங்குமிடங்களாக ஒதுக்கியிருக்கிறது அரசு. பச்சையான இந்த அயோக்கியத்தனத்தைத் தான் முன்னேற்றம் என்று சாதிக்கிறது ஆளும் வர்க்கம். உலகளவில் இராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகவும், முதல் ஐந்து பொருளாதார சக்திகளில் ஒன்றாகவும் இந்தியா ’வளர்ந்துள்ளது’ என்று பீற்றிக் கொள்ளும் ஆளும் வர்க்கம், தனது சொந்த மக்களுக்கு சாப்பாடு கூட போட வக்கில்லாததோடு குளிர் மற்றும் வெயிலில் இருந்து மக்களின் உயிர்களைக் கூட காப்பாற்ற கையாலாகாமல் இருக்கிறது. இதைத் தான் முன்னேற்றம் என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

காசிருந்தால் உயிர் இருக்கலாம், காசில்லா விட்டால் சமூகத்தின் இயக்கத்திற்கு என்னதான் பங்களிப்பு செய்திருந்தாலும் மரணத்தைத் தான் கூலியாக பெற்றுக் கொள்ள முடியும் என்கிறது ஆளும் வர்க்கம். தலைநகரிலேயே இந்த வக்கிரம் இவ்வளவு கோரமாக பல்லிளிக்கிறது என்றால் மற்ற பின்தங்கிய பகுதிகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும்.

நூர்அகமதுவின் பேட்டி வெளியாகி இரண்டாண்டுகளூக்கும் மேல் ஆகிறது… இந்தக் கோடை காலத்தை அவர் தாக்குப் பிடித்து பிழைத்துக் கிடக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சொந்தமான ஒரு இடத்தில் கவுரவமாக வாழ வேண்டும் என்கிற கனவு நிச்சயம் நிறைவேறியிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

வசதி படைத்த நடுத்தர வர்க்கம் பல இலட்சங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறது. மேட்டுக்குடியினரோ பொழுதுக்கு ஒரு பண்ணை வீடுகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஏழைகளுக்கோ ஒண்டிக் கொள்வதற்கு கூட ஒரு தரையில்லை.

இதுதான் இன்றைய இந்தியா!
___________________________
புது தில்லியின் வீடற்ற மக்களின் வாழ்க்கை காட்சிகள் – பெரிதாக பார்க்க சொடுக்கவும்


மேலும் படிக்க:
In two days, 41 homeless deaths in the Capital
The deplorable plight of Delhi’s homeless
Delhi government turns abandoned buses into night shelters for thousands of homeless people

கோதாவரி கெயில் விபத்து – வளர்ச்சியின் பெயரில் கொலை

1

கெயில் தீ விபத்து 1ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எனும் கிராமத்தில், கெயில் நிறுவனத்தின் (இந்திய எரிவாயுக் கழகம்) இயற்கை எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் தீயில் கருகி பலியாயினர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சியின் தடிப்பாக்கம் எரிவாயு வயலில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு, கெயில் நிறுவனத்தின் குழாய்கள் மூலம் கிருஷ்ணா மாவட்டம் கொண்டபள்ளியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனமான லான்கோ உள்ளிட்ட 3 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  தரைக்கடியில் பதிக்கப்பட்டிருக்கும் இக்குழாய்கள் எண்ணெய் வயலிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திலிருக்கும் நகரம் கிராமத்தின் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த ஜூன் 27 வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் கெயில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்து நகரம் கிராமம் முழுவதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே மொத்தம் 13 பேர் உடல் கருகி உயிரிழந்த்துடன் 31 பேர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 19- ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் 18 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவுக்கு வாசனை இல்லாததால், கசிவை அப்பகுதி மக்களால் உணர இயலவில்லை என்றும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடையில், அடுப்பு பற்றவைக்க தீ மூட்டியதால், கசிந்த எரிவாயு தீப்பற்றி ஊர் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது. குழாய் பதிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகில் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்த்தாகவும் கூறப்படுகிறது. அதாவது இக்கோர விபத்து ஏற்படுவதற்கும் கூட பாதிக்கப்பட்ட மக்களே காரணம் என்ற வகையில் செய்திகள் கசிய விடப்படுகின்றன.

சுமார் 200 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயில் தென்னை மரங்கள், பயிர்கள், கால்நடைகள், அருகில் மரத்திலிருந்த பறவைகள்  உள்ளிட்ட ஒட்டு மொத்த கிராமமே  எரிந்து சாம்பலாகிப் போனது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்குழாய் அமைப்பு முழுவதுமே கசிவை கண்டறியும் உணர்கருவிகள், கசிவு ஏற்பட்டால் அதை எச்சரிக்கும் அமைப்பு, நெருக்கடியான சூழலில் எரிவாயுவை நிறுத்துவதற்கான தானியங்கி அமைப்பு என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இன்றி காலாவதியான தொழில்நுட்பத்தில் உள்ளதாக துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஆண்டுகளில் துருப்பிடித்தல், தேய்மானம் போன்றவற்றால் மொத்த குழாயமைப்பும், குறிப்பாக குழாய் இணைப்புகள் கசிவு ஏற்படும் அபாயகரமான சூழலில் இருக்கின்றன.

இப்பகுதியில் எரிவாயு கசிவு ஒரு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. அமலாபுரம் அருகே பசர்லபுடி என்ற இடத்தில் ஏற்பட்ட கசிவு இரண்டு மாத காலத்திற்கும் மேல் நீடித்திருக்கிறது. கசிவு குறித்து பலமுறை முறையிட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டாலும், புதிய குழாய் அமைப்புகளை கொண்டு அமைக்கப்படுவதில்லை என்பதோடு பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்படவில்லை.

கெயில் தீ விபத்து 2
நகரம் கிராமத்தில் இறந்து போனவர்களின் உறவினர்கள்

மூன்று நாட்களுக்கு முன்னரே நகரம் கிராம மக்கள் எரிவாயு கசிவு குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பெயரளவில் மட்டும் சீரமைப்புப் பணிகளை செய்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறதா என்பதைக் கூட சோதித்தறியாமல் விட்டுவிட்டதாக கெயிலின் மீது  அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனிடையே விபத்து ஏற்பட்டதற்கு முதல் நாள் கசிவு குறித்து புகார் பெறப்பட்டு குழாய்கள் பழுது பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள கெயில் நிறுவனம், சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 20 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளது கெயில்.

இதே கெயில் நிறுவனம் தான் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் வழியாக கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிட்தக்கது.

குழாய் பதிக்கப்படும் இடத்தில் நிலத்தை உழுவதோ, அந்த இடத்தில் ஆழ்குழாய்க் கிணறு போடுவதோ கூடாது என்றும் வயலில் பதிக்கப்படும் குழாய்களுக்குச் சேதமோ, விபத்தோ நேர்ந்தால் சம்பந்தப்பட்ட விவசாயியின் மீது கிரிமினல் குற்றவழக்கு போடப்படும் என்றும் பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளது  கெயில் நிறுவனம். ஆனால் குடியிருப்பு பகுதிக்கு அருகில் குழாய்களை கொண்டு செல்லக்கூடாது, மீறி கொண்டு செல்வதாக இருந்தால் நடைமுறைப்படுத்த வேண்டிய உயர் பாதுகாப்பு அம்சங்கள் என்பது போன்ற எந்த அடிப்படை விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

இக்கையகப்படுத்துதல் விவசாய நிலங்களை துண்டு துண்டாக்கி விவசாயத்தை சீர்குலைக்குமென்பதால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள் கடுமையாக போரடி வருகின்றனர். சுமார் 310 கி.மீ. தூரத்துக்கும் மேல் விவசாய நிலங்களின் வழியே குழாய்களைப் பதிக்கும் இத்திட்டத்தினால், கோவை மாவட்டத்தில் மட்டும் 50,000 ஏக்கர் பாதிக்கப்படும். விவசாய நிலத்தில் 20 மீட்டர் அகலம் மட்டுமே கையகப்படுத்துவதால்,  நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இழப்பீடாக தரப்படும் என அறிவித்திருக்கிறது கெயில்.

பொது நலன், நாட்டின் வளர்ச்சி என்ற காரணங்களை கூறி ஆளும் வர்கங்களும் நீதிமன்றமும் இக்கையகப்படுத்தல்களை நியாயப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற  பெயரில் கெயில் மக்களின் பொருளாதார வாழ்வாவை சூறையாடுகிறது. அவ்வளர்ச்சி மக்களின் உயிரையும் சேர்த்து பறிக்கிறது.

முதலாளிகளின் வளர்ச்சிக்கு பேயாய் வேலை செய்யும் அரசு மக்களை பொறுத்த வரை அதே வளர்ச்சிக்காக பலி கொடுக்கும் பிணம் தின்னும் அரசாகவும் இருக்கிறது.

 

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்

2

<strong>ம</strong>துரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நியமிக்கப்படவில்லை. அவர் பொய்யான தகவல்களைத் தந்து ஏமாற்றி பதவி பெற்றுள்ளார். எனவே அவரது நியமனம் செல்லாது என்று கடந்த 26.06.2014 அன்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கு கோ வாரண்டோ ரிட் மனு என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு விநாடியே குற்றம் சாட்டப்பட்டவர் பதவியை இழந்து விடுகிறார் என்பது தான் சட்ட நிலை.  ஆனால் கல்யாணி மதிவாணன் இதுவரை பதவி விலகவில்லை. அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது உயர் கல்வித்துறைச் செயலாளரோ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இதுவரை அவரைப் பதவி நீக்கமும் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.  எனவே 01.07.2014 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழுவும் இணைந்து நீதிமன்றப் பதிவாளரைச் சந்தித்து நீதிமன்றம் தாமே முன்வந்து மேற்கண்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தது. அதனை நீதிபதிக்கு அனுபுவதாகக் கூறி பதிவாளர் பெற்றுக் கொண்டார்.  கல்யாணி மதிவாணன், பல்கலை வேந்தர் ரோசய்யா, உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும், பல்கலைக் கழக விதிமுறைகளின்படி துணைவேந்தர் இல்லாத போது அதனை நிர்வகிக்க ‘கன்வீனர் கமிட்டி’ அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 02/07/2014 காலை 10.30 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ம.உ.பா. மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சமநீதி வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர்கள் கனகவேல், ராஜேந்திரன் ஆகியோர், கல்யாணி மதிவாணன் உடனே பதவிவிலக வேண்டும் அல்லது அரசு அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்கள் கல்யாணி மதிவாணனை நீக்கக் கோரி ம.உ.பா. மையம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகிறது. அவரை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் இந்த நியாயமான போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் துணை நிற்போம் என்றும் கூறி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.  ம.உ.பா. மையத்தின் மதுரைக் கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசிய போது, <blockquote>கல்யாணி மதிவாணன் இப்போது துணை வேந்தர் இல்லை. ஆனால் அவர் தானாகப் பதவி விலகவும் இல்லை. அரசு அவரைப் பதவி விலக்கவும் இல்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க கன்வீனர் கமிட்டி அமைக்கவில்லை. இதன் மூலம் கல்யாணி மதிவாணன் திரைமறைவிலிருந்து பல்கலையை இயக்குவது தெரிகிறது. "உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பதவியைப் பெற்று வந்துவிடுவேன். அதுவரை பல்கலைக் கழகம் காத்திருக்கட்டும். நீங்கள் எல்லாம் கை கட்டி, வாய்பொத்தி இருங்கள்" என்று பல்கலைப் பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு (Contempt of court) வழக்குத் தொடரவில்லை என்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் அப்பணியை உடனே செய்யும்.  ஜெயலலிதா சட்டத்தை, நீதிமன்றத்தை மதிப்பவர் அல்ல. அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதை ஊத்தி மூடுவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரால் பதவிபெற்ற கல்யாணி பின் எப்படி இருப்பார்? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் விலைகொடுத்து வாங்கவே முயற்சி செய்கின்றார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கு இதுவரை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு பல்கலைக்கழகம் கல்யாணியின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதைப் போன்றதொரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள் அவரால் பதவி பயனடைந்தவர்கள் மற்றும் கைக்கூலிகள். தற்போது பல்கலைக் கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கிடையில் ஜூலை 1-ம் தேதி திறக்கப்படவேண்டிய பல்கலை வகுப்புகள் ஜூலை 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது யாரால் என்ற கேள்வி எழுந்துள்ளது.  உயர்கல்வி நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் இப்படி தகுதியற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் இருப்பதற்குக் காரணம் நம்மை ஆளுகின்றவர்கள் கடைபிடிக்கின்ற கல்வி தனியார் மயக் கொள்கைதான். இன்றைக்குக் கல்வி, கொள்ளையர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சமூக விரோதிகள், கள்ளச்சாராய வியாபாரிகள், கிரிமினல் அரசியல் வாதிகள் எல்லாம் கல்வி வள்ளல்களாக மாறிவிட்டனர். ஒழுங்கு என்ற பெயரில் அவர்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். ஏராளமான மாணவர்கள் தற்கொலைகக்குத் தள்ளப்படுகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமாக அவர்கள் தங்களை உலகப் பேரறிஞர்களாக் காட்டிக் கொள்கிறார்கள். இதனை முறியடித்து கல்வியை அரசே வழங்கு வதற்குப் போராடவேண்டும்.  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெறுகிற இந்தப்போராட்டத்தில் மக்களுக்குத்தான்  இறுதிவெற்றி. போராடும் நாம் வெற்றிக் கனியைப் பறிக்காமல் விடப்போவதில்லை. இனி வரும் காலங்களில் மதுரைப் பல்கலைக்கு வரும் துணைவேந்தர்களுக்கும் நியமிக்கும் அரசுக்கும் ஒருபாடமாக அமைய வேண்டும். கல்யாணியை விரட்டும்வரை போராடுவோம் ! என்றுபேசினார்.</blockquote> இறுதியாக நன்றியுரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், <blockquote>மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் ம.உ.பா. மையத்தோடு இணைந்து போராடி வருகின்றனர். ஒத்தக்கடை பகுதி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர் சங்கம், பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு, பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு தொழிற் சங்கங்களும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று (1.7.2014) நீதிமன்றப் பதிவாளரிடம் கல்யாணி மதிவாணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு பிற்பகலில் பல்கலைப் பதிவாளரைச் சந்தித்து பல்கலையின் இப்போதை நிலவரத்தைத் தெரிவிக்கக்கோரி மனு அளிப்பது என்றும் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்தி நிலைமையை விளக்குவது என்றும், வெள்ளிக்கிழமை (04/07/2014) காலை 10.00 மணியளவில் பல்கலை நுழைவாயில் முன்பு பல்வேறு இயக்கங்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு ஊழல் துணைவேந்தரை வெளியேற்றி வெற்றி காண்போம் என்று கூறினார்.</blockquote> <b>தகவல் – மனித உரிமை பாதுகாப்பு மையம்  தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை.</b>துரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நியமிக்கப்படவில்லை. அவர் பொய்யான தகவல்களைத் தந்து ஏமாற்றி பதவி பெற்றுள்ளார். எனவே அவரது நியமனம் செல்லாது என்று கடந்த 26.06.2014 அன்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கு கோ வாரண்டோ ரிட் மனு என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு விநாடியே குற்றம் சாட்டப்பட்டவர் பதவியை இழந்து விடுகிறார் என்பது தான் சட்ட நிலை.

ஆனால் கல்யாணி மதிவாணன் இதுவரை பதவி விலகவில்லை. அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது உயர் கல்வித்துறைச் செயலாளரோ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இதுவரை அவரைப் பதவி நீக்கமும் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.

எனவே 01.07.2014 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழுவும் இணைந்து நீதிமன்றப் பதிவாளரைச் சந்தித்து நீதிமன்றம் தாமே முன்வந்து மேற்கண்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தது. அதனை நீதிபதிக்கு அனுபுவதாகக் கூறி பதிவாளர் பெற்றுக் கொண்டார்.

கல்யாணி மதிவாணன், பல்கலை வேந்தர் ரோசய்யா, உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும், பல்கலைக் கழக விதிமுறைகளின்படி துணைவேந்தர் இல்லாத போது அதனை நிர்வகிக்க ‘கன்வீனர் கமிட்டி’ அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 02/07/2014 காலை 10.30 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ம.உ.பா. மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சமநீதி வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர்கள் கனகவேல், ராஜேந்திரன் ஆகியோர், கல்யாணி மதிவாணன் உடனே பதவிவிலக வேண்டும் அல்லது அரசு அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்கள் கல்யாணி மதிவாணனை நீக்கக் கோரி ம.உ.பா. மையம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகிறது. அவரை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் இந்த நியாயமான போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் துணை நிற்போம் என்றும் கூறி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

ம.உ.பா. மையத்தின் மதுரைக் கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசிய போது,

கல்யாணி மதிவாணன் இப்போது துணை வேந்தர் இல்லை. ஆனால் அவர் தானாகப் பதவி விலகவும் இல்லை. அரசு அவரைப் பதவி விலக்கவும் இல்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க கன்வீனர் கமிட்டி அமைக்கவில்லை. இதன் மூலம் கல்யாணி மதிவாணன் திரைமறைவிலிருந்து பல்கலையை இயக்குவது தெரிகிறது. “உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பதவியைப் பெற்று வந்துவிடுவேன். அதுவரை பல்கலைக் கழகம் காத்திருக்கட்டும். நீங்கள் எல்லாம் கை கட்டி, வாய்பொத்தி இருங்கள்” என்று பல்கலைப் பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு (Contempt of court) வழக்குத் தொடரவில்லை என்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் அப்பணியை உடனே செய்யும்.

ஜெயலலிதா சட்டத்தை, நீதிமன்றத்தை மதிப்பவர் அல்ல. அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதை ஊத்தி மூடுவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரால் பதவிபெற்ற கல்யாணி பின் எப்படி இருப்பார்? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் விலைகொடுத்து வாங்கவே முயற்சி செய்கின்றார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கு இதுவரை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு பல்கலைக்கழகம் கல்யாணியின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதைப் போன்றதொரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள் அவரால் பதவி பயனடைந்தவர்கள் மற்றும் கைக்கூலிகள். தற்போது பல்கலைக் கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கிடையில் ஜூலை 1-ம் தேதி திறக்கப்படவேண்டிய பல்கலை வகுப்புகள் ஜூலை 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது யாரால் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் இப்படி தகுதியற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் இருப்பதற்குக் காரணம் நம்மை ஆளுகின்றவர்கள் கடைபிடிக்கின்ற கல்வி தனியார் மயக் கொள்கைதான். இன்றைக்குக் கல்வி, கொள்ளையர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சமூக விரோதிகள், கள்ளச்சாராய வியாபாரிகள், கிரிமினல் அரசியல் வாதிகள் எல்லாம் கல்வி வள்ளல்களாக மாறிவிட்டனர். ஒழுங்கு என்ற பெயரில் அவர்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். ஏராளமான மாணவர்கள் தற்கொலைகக்குத் தள்ளப்படுகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமாக அவர்கள் தங்களை உலகப் பேரறிஞர்களாக் காட்டிக் கொள்கிறார்கள். இதனை முறியடித்து கல்வியை அரசே வழங்கு வதற்குப் போராடவேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெறுகிற இந்தப்போராட்டத்தில் மக்களுக்குத்தான்  இறுதிவெற்றி. போராடும் நாம் வெற்றிக் கனியைப் பறிக்காமல் விடப்போவதில்லை. இனி வரும் காலங்களில் மதுரைப் பல்கலைக்கு வரும் துணைவேந்தர்களுக்கும் நியமிக்கும் அரசுக்கும் ஒருபாடமாக அமைய வேண்டும். கல்யாணியை விரட்டும்வரை போராடுவோம் ! என்றுபேசினார்.

இறுதியாக நன்றியுரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் ம.உ.பா. மையத்தோடு இணைந்து போராடி வருகின்றனர். ஒத்தக்கடை பகுதி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர் சங்கம், பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு, பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு தொழிற் சங்கங்களும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று (1.7.2014) நீதிமன்றப் பதிவாளரிடம் கல்யாணி மதிவாணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு பிற்பகலில் பல்கலைப் பதிவாளரைச் சந்தித்து பல்கலையின் இப்போதை நிலவரத்தைத் தெரிவிக்கக்கோரி மனு அளிப்பது என்றும் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்தி நிலைமையை விளக்குவது என்றும், வெள்ளிக்கிழமை (04/07/2014) காலை 10.00 மணியளவில் பல்கலை நுழைவாயில் முன்பு பல்வேறு இயக்கங்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு ஊழல் துணைவேந்தரை வெளியேற்றி வெற்றி காண்போம் என்று கூறினார்.

ஆர்ப்பாட்ட படங்கள் – பெரிதாக பார்க்க சொடுக்கவும்

தகவல் – மனித உரிமை பாதுகாப்பு மையம்,  மதுரை மாவட்டக்கிளை.

மோடி ஆட்சியில் நீதி ஏது நீதித்துறை சுதந்திரம் ஏது?

4

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார்.

மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், மூத்த வழக்கறிஞர் ரோகிந்தன் நாரிமன், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

ஆர்.எம். லோதா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா

நீதிபதிகள் நியமன குழுவினர் அரசுக்கு அனுப்பும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பரிந்துரை பட்டியலில் உள்ள நீதிபதிகளின் பெயர்களில் மத்திய அரசுக்கு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால், அதைக் குறிப்பிட்டு பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டும். நியமன குழு மீண்டும் தனது பரிந்துரையை வலியுறுத்தினால் அரசு அதை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். எப்படி இருந்தாலும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக் கொள்வதுதான் நடைமுறை.

மோடி அரசு இந்த நடைமுறையை தூக்கி எறிந்து, கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மட்டும் நிராகரிப்பதற்காக ‘அவரை ஏன் நிராகரிக்க வேண்டும்’ என சில பல செய்திகளை ஊடகங்களில் கசிய விட்டது. இதைத் தொடர்ந்து மோடி அரசு மற்ற 3 பேரை நீதிபதிகளாக நியமித்து ஜூன்  19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இரகசியமாக தலைமை நீதிபதிக்கு அனுப்பாமல் ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அதன் மூலம் கோபால் சுப்பிரமணியத்தை அவமானப்படுத்துவதோடு, அவரை நீதிமன்ற நியமனத்திலிருந்து துரத்தி அடிப்பதும் மோடியின் நோக்கம்.

மத்திய அரசின் பரிந்துரைப்படி ஜூன் 22-ம் தேதி ரோகிந்தன் நாரிமன், ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகிய மூன்று பேர் மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிமன்ற நியமனத்துக்கு தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதோடு சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது ஏதாவது களங்கம் கற்பிக்கும்படி சி.பி.ஐக்கு வெளிப்படையாக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டினார். நீதித்துறை தனது சுயேச்சையை காத்துக் கொள்ள போராடவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என் வெங்கடாச்சலையா உள்ளிட்ட நீதித்துறையினர், மத்திய அரசு நீதிபதி தேர்வுக் குழுவின் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஜூலை 1-ம் தேதி “எனக்கு தெரியாமல், எனது ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டும் பிரித்து நிராகரித்ததற்கு நான் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்” என்றும், மத்திய அரசு ஒரு உயர்ந்த அரசியல் அமைப்பு பதவிக்கான நியமனத்தை மிகவும் அலட்சியமாக  கையாண்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.

கோபால் சுப்பிரமணியம்
கோபால் சுப்பிரமணியம்

ஜூன் 28-ம் தேதி நாடு திரும்பிய நீதிபதி லோதா, கோபால் சுப்பிரமணியத்தை சந்தித்து அவரது கடிதத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோபால் சுப்பிரமணியம் நீதிபதி பதவிக்கு தனது பெயரை பரிந்துரைப்பதை மீண்டும் நிராகரித்திருக்கிறார்.

“20 ஆண்டுகளாக நீதித்துறையின் சுதந்திரத்துக்காக நான் போராடி வந்திருக்கிறேன். இதில் விட்டுக் கொடுக்கவே முடியாது. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று தெரிந்தால் இந்த பதவியை தூக்கி எறியும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்றும் நீதிபதி லோதா கூறியுள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது இன்னும் எப்படி உணர்த்தப்பட வேண்டும் என்று கனம் நீதிபதி எதிர்பார்க்கிறார் என்று விளக்கவில்லை. ஒருவேளை கோபால் சுப்ரமணியம் இதை வெளியே தெரிவித்திருக்கா விட்டால் லோதா இதை சாதாவாக மறந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாறாக நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையே பறிபோயிருக்கிறது என்று கோபால் பேசிய பிறகே வேறு வழியின்றி தலைமை நீதிபதி பேசியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் மோடி அரசு மீது யாரும் அப்படி நாக் அவுட் குத்து விட முடியாது.

“வளர்ச்சி”, “திறமையான, நேர்மையான நிர்வாகம்” என்றெல்லாம் விதந்தோதி மோடி அரசை வரவேற்று, ஆதரித்த வலதுசாரி அறிவுஜீவிகள் ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்று அடுத்தடுத்து மக்கள் மீது அரசு இறக்கும் இடிகளை, தாங்கள் கோரும் “வளர்ச்சிக்கு” தேவையானதாக நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் தாங்களே வியந்து போற்றும் சட்ட திட்டங்களைக் கூட மோடி தன் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிப்பது குறித்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். அந்த வளர்ச்சியும் இந்த மௌனமும் வேறில்லையோ?

நீதிபதி நியமன விவகாரம் மட்டுமின்றி பிரதமர் அலுவலகத்துக்கு முதன்மை செயலராக நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதற்கு அவசரச் சட்டம் மூலம் செபி சட்டத்தை திருத்தியது, ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரயில் கட்டண உயர்வை அறிவித்தது என மோடி அரசின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் எதைப் பற்றியும் இவர்களில் பலர் வாய் திறக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த மே 16-ம் தேதி கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி நாடாளுமன்ற தேர்தலில் “பாஜகவுக்கே 272+ கிடைத்த”தைத் தொடர்ந்து மோடியின் சாதனைகளைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார். மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்”

அந்த சாதனைகளில் முதலாவதாக அவர் பட்டியலிட்டது

1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

நரேந்திர மோடி
வளர்ச்சி நாயகன் மோடி (படம் : நன்றி MANJUL)

இதற்கு முன்பாகவே மோடியின் வாழ்க்கை பற்றி நிலஞ்சன் முகோபாத்யாயா எழுதிய Narendra Modi: The Man, The Times மற்றும் கிங் ஷூக் நாக் எழுதிய The NAMO story, a political life என்ற இரண்டு புத்தகங்களையும் படித்திருந்ததாக பத்ரி குறிப்பிட்டிருந்தார். ‘மோடி பற்றிய தனது கருத்துக்களை மாற்ற வேண்டியிருக்குமோ’ என்று அப்போது கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்த நூல்களில் 1980-களில் குஜராத் மாநில ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக மதக் கலவரங்களை கட்டளையிட்டு ஒருங்கிணைத்து நடத்தியதிலிருந்து, 1990-களில் முரளி மனோகர் ஜோஷியின் பாரத் ஏக்தா யாத்திரையை நடத்தியதில் ஜோஷியை மதிக்காமல் கட்சியில் கோஷ்டி கட்டியது, கேஷூபாய் படேலுடன் சேர்ந்து வகேலாவை ஓரம் கட்டி கட்சியை விட்டுத் துரத்தியது, 2000-களில் கேஷூபாய் படேலிடமிருந்து முதலமைச்சர் பதவியை தனக்கு பறித்துக் கொண்டது, ஹரேன் பாண்டியாவை அரசியல் ரீதியாக தீர்த்துக் கட்டியது, கோர்தன் ஜடாஃபியாவை அழைத்து மிரட்டியது என்று மோடி மற்றும் அவரது தலைமையிலான அரசு “நியாயமான முறைகளை” பின்பற்றப் போவதில்லை என்பதை விளக்கும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

ஹரேன் பாண்டியா கொலை, இஷ்ரத் ஜகான், சோராபுதீன் ஷேக் வரை பலர் போலி மோதல்களில் கொலை என சட்ட விரோத ஆட்சி நடத்தியதிலிருந்து, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஒட்டுக் கேட்க உளவுத் துறையை பயன்படுத்தியது வரை நூற்றுக் கணக்கான வழிகளில் சட்ட வழிமுறைகளை மீறியே ஆட்சி செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின.

அதற்கு பிறகும் மே 16-ம் தேதி மோடி நல்லவர், “நியாயமான முறைகளை” பின்பற்றுபவர் என்று எழுதிய பத்ரி ஒன்று, தான் படித்தவற்றை புரிந்து கொள்வதில் குறைபாடுடையவர் அல்லது தான் நாடும் “வளர்ச்சிக்காக” இத்தகைய முறைகேடுகள் சரி என ஆதரிக்கிறார். போகட்டும் இப்போதும் கூட பத்ரி அவர்கள் மோடி எனும் மாமனிதர் பிரதமர் அலுவலக அறையில் ஒரு சுவிட்சை போட்டு இந்தியா முழுவதும் வளர்ச்சி எனும் பல்பை எரிய வைப்பார் என்று நம்புவதாகவே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன?

தேர்தல் முடிவுகள் வெளியான அதே மே 16-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கு குறித்து அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு, குஜராத்தில் போலீசு-உளவுத் துறை மூலம் அரசு பயங்கரவாத, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியதன் மூலம்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை முதல்வராகப் பதவியில் அமர முடிந்தது; இந்த சமூக விரோத கிரிமினல்தனத்தைத் தாண்டி அவரது தேர்தல் வெற்றிகளுக்கு வேறெந்த அடிப்படையும் கிடையாது” என்பதை நிரூபித்துக் காட்டியது. அது குறித்தும் பத்ரி திருவாய் மலரவில்லை.

இப்போது பத்ரி போன்ற வலதுசாரிகள் புனிதமாக கருதும் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திலேயே மோடி அரசு எந்த அறத்தையும், சட்டத்தையும் மதிக்காமல் புகுந்து விளையாடியிருக்கிறது. ஒரு வேளை இதுவும் மோடி அறையில் உள்ள சுவிட்சை போட்டு வளர்ச்சி லைட்டை எரிய வைக்கும் திறமையாக இருக்குமோ? இல்லை தலைமை நீதிபதி லோதி காங்கிரசின் கையாளாக இருப்பாரோ? இல்லை இது ஏதோ மறதியாக நடந்த தவறா? அல்லது இதை வைத்து மோடி அரசை விமரிசிக்க கூடாதா?

பத்ரி மட்டுமல்ல பாஜகவை பல்வேறு காரணங்களால் ஆதரிக்கும் அறிஞர் பெருமக்களும், முதலாளிகளும் நிச்சயம் வேறு காரணத்தை முன்வைப்பார்கள். அது அன்னிய முதலீடுக்கு இந்திய நாட்டை திறந்து விடும் வேகம் முந்தைய மன்மோகன் சிங் அரசைக் காட்டிலும் அதிகம் என்பதால் இந்த சில்லறை பிரச்சினைகளை எழுப்பாதீர்கள் என்பதே அவர்களது உள்ளக்கிடக்கையாக இருக்கும். முதலாளிகளின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஒரு தலைவன் அதற்காக அவன் காட்டும் வேகம், ஒடுக்குமுறையை இந்துத்துவத்திற்காகவும் காட்டுவது நல்லதுதானே? அப்போதுதானே இதே சட்டவிரோத முறைகளை ‘வளர்ச்சிக்காகவும்’ செய்ய முடியும்?

வளர்ச்சியும் இந்துத்துவமும் வேறு வேறா என்ன?

–    செழியன்

மேலும் படிக்க

தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

4

ன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி.

சன் டி.வி ராஜா
சன் டி.வி ராஜா

ராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது சன் டி.வி. நிர்வாகம். குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் விதமாக புகார் கொடுத்தவரை நீக்கி தனது ஆண்டைத்தனத்தை காட்டியது சன் நிறுவனம். இருப்பினும் பொதுவெளியில் பெயர் அம்பலப்பட்டதால், பணியிடத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணையை சன் நிறுவனம் ஒரு பக்கம் நடத்தியது. மறுபுறம் நீதிமன்றத்தில் அகிலா கொடுத்த குற்ற வழக்கு நடந்து வந்தது. விசாகா கமிட்டி எல்லாவற்றையும் ஆற அமர விசாரித்துவிட்டு சன் நிர்வாகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துவிட்டு சென்றது. ராஜா, பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து வினவில் தொடர்ந்து எழுதியிருக்கிறோம். அறியாதவர்கள் அந்த பழைய கட்டுரைகளை படித்தறியலாம்.

ஆனால் குற்ற வழக்கு முடிவடையாமல் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இந்த வழக்கின் சுருக்கமான பின்னணி.

ராஜா சன் செய்தியில் இருந்து வெளியேறிய பிறகு ‘அந்த டி.வி.யில் சேரப்போகிறார். இந்த டி.வி.யில் சேரப்போகிறார்’ என்று அவ்வப்போது பரபரப்பான பேச்சுக்கள் அடிபடுவது உண்டு. அவர் எதிலும் சேரவில்லை. கடைசியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்பாக ‘செய்தி ஆலோசகர்’ என்ற பதவி கொடுக்கப்பட்டு ராஜா மீண்டும் சன் செய்தியில் சேர்க்கப்பட்டார். பதவியின் பெயர் மாறியிருந்தாலும், அவர் முன்பு பார்த்த அதே வேலையைத்தான் பார்த்து வருகிறார். பழைய உருட்டலும், மிரட்டலும் மட்டும் குறைந்திருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் இங்கு விவகாரம் ராஜாவின் ‘சாமர்த்தி’யம் பற்றியது அல்ல. பணியிடத்தில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தம் கீழ்த்தரமான நபர் என்பது ஆதாரபூர்வமாக அம்பலப்பட்டப் பின்னரும், ராஜா போன்ற பொறுக்கியை எந்த கூச்சமும் இல்லாமல் மறுபடியும் வேலையில் சேர்த்திருக்கும் சன் நிர்வாகத்தைப் பற்றியது. ஒருக்கால் ராஜா குற்றம் செய்யவில்லை என்று சன் நிர்வாகம் தனது பொய்மையை நிலைநிறுத்த வேண்டுமென்றாலும் அகிலா தொடுத்த வழக்கு முடிந்த பிறகே, அதுவும் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்த பிறகே, அதைச் செய்ய வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் ராஜாவை கூட்டி வந்து அழகு பார்த்தால் அதற்கு என்ன பொருள்?

இதுபற்றி யாரும் எதுவும் பேசவில்லை. எனில், சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா? இல்லை அவர் யோக்கியர் என்றால் அதை நீங்களா தீர்மானிப்பது? பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கை கூட இவர்கள் குப்பையாக மதிக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இதுவே அகிலாவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை ஐயமற நிரூபிக்கிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பெண்களை பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் ஒழுக்கமற்ற நபர்களை தலைமைப் பொறுப்பில் வைத்திருந்தால் அதன் நன்மதிப்பு சரியும். அது வியாபாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். இது தெரிந்தும் சன் நிர்வாகம் ராஜாவை மறுபடியும் பணியில் அமர்த்தியிருக்கிறது. எந்த விளக்கமும் கூறவில்லை. ஒருவேளை ‘விசாகா கமிட்டி ராஜா மீது குற்றம் இல்லை என்று சொல்லிவிட்டது’ எனலாம்.

சன் நியூஸ்
சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா?

ஆனால் விசாகா கமிட்டி என்பது கண் துடைப்பு. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சன் தொலைக்காட்சி நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள்தான் என்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். அதையும் தாண்டி குற்ற வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது இன்னும் விசாரணை மட்டத்தில்தான் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் இத்தகைய ‘குற்றவாளியை’ வேலைக்கு சேர்த்தது சன் நிர்வாகம்?

சன் நிர்வாகம் மட்டுமல்ல, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட இத்தகைய பேர்வழிகளை காப்பாற்றவே செய்கின்றன. நிறுவனத்தின் நன்மதிப்பை காப்பாற்ற வேண்டி நீதிமன்றத்திற்கு வெளியே இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை ‘மிரட்டி’ ஒப்பந்தம் போட்டு வழக்கை திரும்பப் பெறுமாறு செய்கிறார்கள். எந்த நிறுவனமும் தனது மேலதிகாரி குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வாங்கித் தருவதில்லை. இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் பெண்கள் தினம் அது இது என்று உபதேசங்களை அள்ளிவிடுகிறார்கள்.

’ராஜா போன்ற திறமையாளர்கள் ஊர் உலகத்தில் இல்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பு சேர்த்துள்ளனர்’ என்றும் சன் நிர்வாகத்தை சொல்ல முடியாது. அப்படி ஒன்றும் அவர் மலையைப் புரட்டியவர் இல்லை. ராஜாவின் வீழ்ச்சி, இன்னொரு பொருளில் சன் நிறுவனத்தின் வீழ்ச்சி. அகிலா என்ற ஒற்றைப் பெண், சன் டி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்திற்கு சவால் விட்டதை அவர்களால் நிச்சயம் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியாது. ஆகவே ராஜாவை மீண்டும் தலை நிமிர வைத்தாக வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அகிலா தரப்பை நீர்த்துப் போக செய்வதில் அதிக கவனம் செலுத்திய சன் டி.வி. நிர்வாகம், ராஜாவின் கிரிமினல்தனத்துக்கு துணை போன பலரையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது. எனினும் ராஜாவின் தற்போதைய இணைவில், இந்த தர்க்கங்களை மீறிய வர்த்தகக் கூட்டுகளும், யூகிக்க முடியாத ரகசிய பேரங்களும் இருக்கக் கூடும். இல்லையேல் சேர்த்தது ஏன் என்று சன் நிர்வாகம் தனது விளக்கத்தை கூறட்டும்.

மொத்தத்தில் வாய்கிழிய ஊர் நியாயம் பேசி, தீர்ப்பு வழங்கும் இந்த ஊடகங்களின் யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் நடக்கும் குற்றத்தை வேறு நிறுவன செய்தியில் காட்டக் கூடாது என்று இவர்கள் தங்களுக்குள் உடன்படிக்கை போட்டு செயல்படுகின்றனர். இந்த கூட்டுக்களவாணித்த்தனத்திற்கு ஊடக “எத்திக்ஸ்” என்று வேறு தத்துவ விளக்கம் அளிக்கின்றனர். எத்துவாளித்தனங்களெல்லாம் எத்திக்ஸ் என்றால் அந்த எத்திக்ஸ் நாசமாக போகட்டும்.

இத்துடன் டி.வி.யில் மூஞ்சி தெரிகிறது என்பதற்காக பல்லை இளித்துக்கொண்டு கருத்து சொல்வதற்காகப் போகும் காரியவாத அறிவாளிகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் ஊர், உலக பிரச்சினை எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வார்கள். ஆனால் ஒரு பயலும் சன் டிவியின் அயோக்கியத்தனம் குறித்து வாய் திறக்கவில்லை. இது கருத்து கந்தசாமிகளுக்கு மட்டுமல்ல, கருத்து காயத்ரிக்களுக்கும் பொருந்தும்.

பச்சமுத்து
புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து

இதைவிட முக்கியமாக தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களின் சுயமரியாதையற்ற தன்மையை பரிசீலிக்க வேண்டும். சம்பளம், கவர், பரிசுப் பொருட்கள், ஓசி குடி, பஸ் பாஸ், வீட்டு மனை, குடித்துவிட்டு வண்டி ஓட்ட பர்மிட் என பல சௌகர்யங்களை அனுபவிக்கும் பத்திரிகையாளர்கள் உண்மையில் மழுங்கினிகளாக இருக்கின்றனர். எதையும் எதிர்த்துப் பேச அவர்களுக்கு நா எழுவதே இல்லை. ஜெயலலிதா நடத்தும் பிரஸ் மீட் காட்சிகளை ஜெயா டி.வி.யில் பார்த்தால் உங்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது.

தன்னிடம் வரும் அனைவரையும் ஓபிஎஸ்ஸாக மாற்றிவிடும் அற்புத சக்தி படைத்தவர் அம்மா என்பது ஒரு உண்மைதான் என்றாலும், இதில் பத்திரிகையாளர்களின் பணிவும் குறிப்பிடத்தகுந்தது. விஜயகாந்தை சீண்டிவிட்டு வாயைப் பிடுங்கும் இவர்கள், ஜெயலலிதாவிடம் சொன்னதை குறித்துக் கொண்டு போட்டதை தின்றுவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

ராஜா மீண்டும் வேலையில் சேர்ந்துள்ள இந்த நிலை குறித்து சிலரிடம் பேசியபோது, தமிழ் ஊடக உலகில் நடைபெற்று வரும் மற்றொரு அவலம் கவனத்துக்கு வந்தது. பல தொலைக்காட்சிகளில் கொத்து, கொத்தாக ஆட்களை வேலையை விட்டுத் தூக்கி வருகின்றனர். குறிப்பாக புதிய தலைமுறை குழுமத்தில் இருந்து 20 பேர், 30 பேர் என்று அனுப்பப்படுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து. அதற்காக ஏராளமானோரை வேலைக்கு எடுத்தார்கள். கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து முக்கியமான பத்திரிகையாளர்களும் அங்குதான் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் நம்ப முடியாத அளவுக்கு சம்பளம். 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று பயமுறுத்தும் விதமாக இருந்தது. அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்ததைக் காட்டிலும் இரு மடங்கு ஊதியம். அங்கு வேலை கிடைக்காதோர் அங்கு பணிபுரிகிறவர்களை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஆட்குறைப்பு இப்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ’வேலையில் திறன் அற்றவர்களை அனுப்புகிறோம். காஸ்ட் கட்டிங்’என்று சொல்லப்பட்ட போதிலும் திறமையானவர்களும் வெளியில் அனுப்பப்பட்டு வருகின்றனர். 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் பெற்று ஓரளவு வேலையும் தெரிந்தவர்கள் தப்பித்தனர். அதைவிட அதிக சம்பளம் வாங்கியவர்களுத்தான் சிக்கல். அவர்களின் வேலைத்திறன் நன்றாகவே இருந்தாலும் வெளியேற்றப்படுகின்றனர். குறிப்பான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. முறையான விளக்கமோ இல்லை நிவாரணமோ எதுவும் இல்லை. தனிப்பட்ட நபர்களின் பேரம் பேசும் திறமையை பொறுத்து செட்டில்மெண்ட் தொகையாக 3 மாத சம்பளமோ, 4 மாத சம்பளமோ கிடைக்கிறது, அவ்வளவுதான்.

இதிலே இவர்களது திறன் என்று நாங்கள் குறிப்பிடுவது வணிக ஊடக உலகில் அவர்களே சொல்லிக் கொள்ளும் ‘எழுத்து மற்றும் பேசும்’ திறன்தான். ஊடகங்களில் மக்கள் நலனின் பாற்பட்டு காத்திரமான செய்திகளை வழங்குவது என்பது ஒரு பத்திரிகையாளனின் திறமை குறித்த பிரச்சினை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விருப்பு வெறுப்பிற்கும் உட்பட்டதுதான். இருப்பினும் குறைந்த பட்சமாக மக்களை கவருவதற்கு இவர்களுக்கு கொஞ்சமாவது திறமை கொண்ட ஊடகவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் தேவையில்லை என்று தொலைக்காட்சிகள் நினைக்கின்றன என்றால் சானல்களை பார்க்கும் மக்களை இவர்கள் எவ்வளவு மட்டமாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.

”நான் அப்ளை பண்ணலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. ஆனா இப்போ வெளியில் போகச் சொல்றாங்க. நான் இனிமே எங்கே போய் வேலை தேடுறது?” என்று கேட்கிறார் வெளியேற்றப்பட்ட ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இப்படி பலர் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பான வேலையையும் கூட, அதிக சம்பள ஆசையால் விட்டுவிட்டு வந்துள்ளனர். இப்போது வேலை பறிபோன நிலையில் பரிதவித்து நிற்கின்றனர். சென்னையின் முக்கியமான, திறன் உள்ள பத்திரிகையாளர்களை அதிக சம்பளம் கொடுத்து இழுத்து, அவர்களின் திறமையைப் பயன்படுத்தி தனது நிறுவன பிரபலத்தை நிலைநிறுத்திவிட்டு இப்போது துரத்தி அடிக்கின்றனர். இனிமேல் அதிக சம்பளம் பெறுபவர்கள் அவர்களுக்குத் தேவை இல்லை. 8 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு ஆட்களை அமுக்கிப் போட்டு இரவும், பகலும் கொல்லலாம்.

வைகுண்டராஜன்
’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’

இந்த பச்சையான சுரண்டல் போக்கை எதிர்த்துக் கேட்க ஒரு நாதி இல்லை. புதிய தலைமுறையில் மட்டும் இல்லை. கேப்டன் நியூஸ் சேனலில் கூட கடும் ஆட்குறைப்பு. மொத்தமாக 25 பேரை நிறுத்திவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஜிடிவி.எஸ்.பி.வி. என்ற டி.வி.யில் கடும் பிரச்னை எழுந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் யாருக்கும் சம்பளம் தரவில்லை. தமிழ் ஊடக வரலாற்றில் முதன் முறையாக அதன் செய்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். எனினும் எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்தும் பலர் வெளியேறினார்கள்.

சமீபத்தில் ஜெயா டி.வி.யில் இருந்து சுமார் 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படி அண்மை சில மாதங்களில் மட்டும் வேலை இழந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், வேறு எந்த ஊடகத்திலும் வேலை கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். ஒருவேளை அவர்கள் தாதுமணல் திருடன் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் துவங்கப்போகும் புதிய டி.வி.யில் வேலைக்கு சேரக்கூடும். ஆமாம், அந்த கொடுமையும் நடக்கப்போகிறது. வைகுண்டம் இப்போது டி.வி.யிலும் இறங்கிவிட்டார்.

’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’ என்று அவர் கருதியிருக்கக்கூடும். அனேகமாக இன்னும் சில ஆண்டுகளில் வைகுண்ட ராஜன் கட்சி கூட துவங்கலாம்.

இதுபோன்ற இழிவான நிலைதான் நமது சமகால தமிழ் ஊடகங்களின் உண்மை நிலையாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பல் பிடுங்கப்பட்டவர்களாக, எதிர்த்துப் பேசும் திறன் அற்றவர்களாக, ஒரு பிரச்னையை சொந்த அரசியல் கண்ணோட்டத்துடனோ மக்கள் நலனிலிருந்தோ அணுகும் ஆற்றல் அற்றவர்களாக, விழுமியங்கள் வீழ்ந்து போனவர்களாக இருக்கின்றனர். தன் சொந்த துறையில் தன் சக ஊடக பணியாளர்கள் கொத்து, கொத்தாக வேலையை விட்டுத் தூக்கப்படுவது குறித்த தகவல் கூட முழுமையாக தெரிந்திராத இவர்கள்தான் நமக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

இவர்களே இப்படி என்றால், பத்திரிகையாளர்களுக்கு என்று இருக்கும் சங்கங்கள் எதைக் கிழிக்கும் என்பது அதிசயமில்லை. தமிழ்நாட்டிலேயே மிகவும் சொகுசான டாஸ்மாக் பார் எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டுமானால், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குப் பின்பக்கம் உள்ள பிரஸ் கிளப்புக்கு வாருங்கள். தினசரி மாலையில் அங்கு உட்கார்ந்து ஒரு கும்பல் குடித்துக் கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் அந்த இடத்திற்கு சம்மந்தப்படாத கும்பல் அல்ல. அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள்தான். எழுதிவிட்டு குடிக்கிறார்களா, குடித்துவிட்டு எழுதுகிறார்களா தெரியவில்லை. ஆனால் எந்நேரமும் குடி. இதுதான் அவர்களின் வேலை. இதற்கு ஒரு பிரஸ் கிளப். அதற்கு அரசாங்க இடம். கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய ஊடகத் தூண் இப்படித்தான் சரிந்து வருகிறது.

இதனால் நாங்களெல்லாம் நேர்மையாக இல்லையா என்று சில பத்திரிகையாளர்கள் சீறலாம். அப்படி யாரும் சீறினால் அது குறித்து உண்மையில் மகிழப்போவது நாங்கள்தான். ஆனால் அந்த சீற்றம் உண்மை எனும் பட்சத்தில் சன் டிவி ராஜா குறித்தோ, இல்லை வேலை நீக்கம் செய்யும் தொலைக்காட்சிகளைப் பற்றியோ பேசவோ, எழுதவோ, போராடவோ நீங்கள் செய்யவில்லை என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

அது வேறு இது வேறு என்று நீங்கள் சமாளிக்கலாம். ஆனால் நாளையே கூட நீங்களும் காரணமற்று வேலை நீக்கம் செய்யப்படும் பட்டியலில் இருக்கலாம். அப்போது உங்களுக்காக போராட யாரும் இருக்கமாட்டார்கள்.

இது வெறுமனே வேலை பாதுகாப்பு குறித்த சுயநலம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. பொதுநலனில் பத்திரிகையாளர்கள் எப்படி நேர்மையாக செயல்படுகிறார்களோ அதுதான் அவர்களது பணிபாதுகாப்பிலும் பிரதிபலிக்கும். இதை எப்படி செய்வது என்ற தயக்கம் இருந்தால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!  இதன்றி நேர்மைக்கு வழியேதும் இல்லை நண்பர்களே!