privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மதுரை ஆர்ப்பாட்டம் – 6

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த கல்யாணி மதிவாணன் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நியமிக்கப்படவில்லை. அவர் பொய்யான தகவல்களைத் தந்து ஏமாற்றி பதவி பெற்றுள்ளார். எனவே அவரது நியமனம் செல்லாது என்று கடந்த 26.06.2014 அன்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது. அந்த வழக்கு கோ வாரண்டோ ரிட் மனு என்பதால் நீதிமன்றத் தீர்ப்பு சொல்லப்பட்ட மறு விநாடியே குற்றம் சாட்டப்பட்டவர் பதவியை இழந்து விடுகிறார் என்பது தான் சட்ட நிலை. ஆனால் கல்யாணி மதிவாணன் இதுவரை பதவி விலகவில்லை. அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது உயர் கல்வித்துறைச் செயலாளரோ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இதுவரை அவரைப் பதவி நீக்கமும் செய்யவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். எனவே 01.07.2014 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழுவும் இணைந்து நீதிமன்றப் பதிவாளரைச் சந்தித்து நீதிமன்றம் தாமே முன்வந்து மேற்கண்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தது. அதனை நீதிபதிக்கு அனுபுவதாகக் கூறி பதிவாளர் பெற்றுக் கொண்டார். கல்யாணி மதிவாணன், பல்கலை வேந்தர் ரோசய்யா, உயர்கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும், பல்கலைக் கழக விதிமுறைகளின்படி துணைவேந்தர் இல்லாத போது அதனை நிர்வகிக்க ‘கன்வீனர் கமிட்டி’ அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 02/07/2014 காலை 10.30 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ம.உ.பா. மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சமநீதி வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர்கள் கனகவேல், ராஜேந்திரன் ஆகியோர், கல்யாணி மதிவாணன் உடனே பதவிவிலக வேண்டும் அல்லது அரசு அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க துணைச் செயலாளர் அப்பாஸ் அவர்கள் கல்யாணி மதிவாணனை நீக்கக் கோரி ம.உ.பா. மையம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகிறது. அவரை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது என்றும் இந்த நியாயமான போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் துணை நிற்போம் என்றும் கூறி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். ம.உ.பா. மையத்தின் மதுரைக் கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசிய போது, கல்யாணி மதிவாணன் இப்போது துணை வேந்தர் இல்லை. ஆனால் அவர் தானாகப் பதவி விலகவும் இல்லை. அரசு அவரைப் பதவி விலக்கவும் இல்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும் பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க கன்வீனர் கமிட்டி அமைக்கவில்லை. இதன் மூலம் கல்யாணி மதிவாணன் திரைமறைவிலிருந்து பல்கலையை இயக்குவது தெரிகிறது. "உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பதவியைப் பெற்று வந்துவிடுவேன். அதுவரை பல்கலைக் கழகம் காத்திருக்கட்டும். நீங்கள் எல்லாம் கை கட்டி, வாய்பொத்தி இருங்கள்" என்று பல்கலைப் பதிவாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு (Contempt of court) வழக்குத் தொடரவில்லை என்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் அப்பணியை உடனே செய்யும். ஜெயலலிதா சட்டத்தை, நீதிமன்றத்தை மதிப்பவர் அல்ல. அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதை ஊத்தி மூடுவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரால் பதவிபெற்ற கல்யாணி பின் எப்படி இருப்பார்? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் விலைகொடுத்து வாங்கவே முயற்சி செய்கின்றார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கு இதுவரை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு பல்கலைக்கழகம் கல்யாணியின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதைப் போன்றதொரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள் அவரால் பதவி பயனடைந்தவர்கள் மற்றும் கைக்கூலிகள். தற்போது பல்கலைக் கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கிடையில் ஜூலை 1-ம் தேதி திறக்கப்படவேண்டிய பல்கலை வகுப்புகள் ஜூலை 9-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது யாரால் என்ற கேள்வி எழுந்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் இப்படி தகுதியற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் இருப்பதற்குக் காரணம் நம்மை ஆளுகின்றவர்கள் கடைபிடிக்கின்ற கல்வி தனியார் மயக் கொள்கைதான். இன்றைக்குக் கல்வி, கொள்ளையர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சமூக விரோதிகள், கள்ளச்சாராய வியாபாரிகள், கிரிமினல் அரசியல் வாதிகள் எல்லாம் கல்வி வள்ளல்களாக மாறிவிட்டனர். ஒழுங்கு என்ற பெயரில் அவர்கள் மாணவர்களைக் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். ஏராளமான மாணவர்கள் தற்கொலைகக்குத் தள்ளப்படுகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமாக அவர்கள் தங்களை உலகப் பேரறிஞர்களாக் காட்டிக் கொள்கிறார்கள். இதனை முறியடித்து கல்வியை அரசே வழங்கு வதற்குப் போராடவேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெறுகிற இந்தப்போராட்டத்தில் மக்களுக்குத்தான் இறுதிவெற்றி. போராடும் நாம் வெற்றிக் கனியைப் பறிக்காமல் விடப்போவதில்லை. இனி வரும் காலங்களில் மதுரைப் பல்கலைக்கு வரும் துணைவேந்தர்களுக்கும் நியமிக்கும் அரசுக்கும் ஒருபாடமாக அமைய வேண்டும். கல்யாணியை விரட்டும்வரை போராடுவோம் ! என்றுபேசினார். இறுதியாக நன்றியுரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் ம.உ.பா. மையத்தோடு இணைந்து போராடி வருகின்றனர். ஒத்தக்கடை பகுதி எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளர் சங்கம், பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு, பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகளும் பல்வேறு தொழிற் சங்கங்களும் இணைந்து போராடி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று (1.7.2014) நீதிமன்றப் பதிவாளரிடம் கல்யாணி மதிவாணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு பிற்பகலில் பல்கலைப் பதிவாளரைச் சந்தித்து பல்கலையின் இப்போதை நிலவரத்தைத் தெரிவிக்கக்கோரி மனு அளிப்பது என்றும் நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்தி நிலைமையை விளக்குவது என்றும், வெள்ளிக்கிழமை (04/07/2014) காலை 10.00 மணியளவில் பல்கலை நுழைவாயில் முன்பு பல்வேறு இயக்கங்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு ஊழல் துணைவேந்தரை வெளியேற்றி வெற்றி காண்போம் என்று கூறினார். தகவல் – மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை.
மதுரை ஆர்ப்பாட்டம் – 5