privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?

உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?

-

ஐ.எஸ்.ஐ.எஸ் அணிவகுப்பு
அதிநவீன ஆயுதங்களுடன் இராக்கிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதப் படையினரின் அணிவகுப்பு.

டந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புப் போரினால் நாசமாக்கப்பட்டுள்ள இராக், உள்நாட்டுப் போரினால் குருதிச் சேற்றில் புதைந்து கொண்டிருக்கிறது.

இராக்கின் வடமேற்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் புதியதொரு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் வேகமாக வளர்ந்துள்ளதோடு, இப்பயங்கரவாதிகள் இராக்கின் பொம்மை அரசுக்கு எதிராக நடத்திவரும் போர்த்தாக்குதல்களை, அடுத்து சிரியாவின் வடபகுதியிலுள்ள அலெப்போ நகரிலிருந்து இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரையிலான பகுதிகளைத் தனிநாடாக்கி, ஷாரியத் சட்டப்படியான இஸ்லாமிய அரசை (கிலாஃபத்) உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையிலான இந்த சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கிலுள்ள ஷியா மார்க்கத்தினர் மீதும் அவர்களது மசூதிகள் மீதும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இராக்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினரும் குர்திஷ் இனத்தவர்களும் இதர மத, இனச் சிறுபான்மைப் பழங்குடிப் பிரிவினரும் கொண்ட நாடுதான் இராக். இராக்கில் சதாம் ஆட்சி அமெரிக்காவால் தூக்கியெறியப்பட்ட பின்னர், இராக்கின் தெற்கே பஸ்ராவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தி வந்தனர். மறுபுறம், இராக்கின் வடமேற்குப் பகுதியில் இராக்கிய அல்கய்தா என்ற ஒரு சன்னி மார்க்க ஆயுதக்குழு அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திவந்தது. இதன் தலைவர்களுள் ஒருவரான அல் பாக்தாதி பின்னர் அமெரிக்காவின் விசுவாசக் கைக்கூலியாக மாறினார். இராக்கின் அண்டை நாடான சிரியாவின் ஆசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல் பாக்தாதியின் கூலிப்படையை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்தது. இக்கூலிப்படைக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.

அப்போது சிரியாவில் இயங்கியவந்த இன்னுமொரு இஸ்லாமிய அடிப்படைவாத அல் நுஸ்ரா என்ற அமெரிக்கக் கூலிப்படையுடன் இணைந்து அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ். ) அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவண்ட் (ஐ.எஸ்.ஐ.எல்.) எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர இந்தக் கூலிப்படையை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்ட போதிலும், அந்தக் குழுவோ வாய்ப்பைச் சாதகமாக்கிக் கொண்டு வங்கிக் கொள்ளைகளிலும், ஆயுதப் பறிப்பிலும் ஈடுபட்டுப் புதியதொரு பயங்கரவாத இயக்கமாக வளர்ந்துவிட்டது. இராக் மீதான இத்தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கவலை கொண்டுள்ளதாகக் கூறும் அமெரிக்காவின் ஒபாமா அரசுதான், நேற்றுவரை இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான சுதந்திரத்துக்கான போராளிகள் என்று சித்தரித்தது. இப்போது அவர்கள் பயங்கரவாதிகளாகவும், இராக்கின் ஜனநாயக அரசைச் சீர்குலைப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இராக் அகதிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் படையினரின் போர்த்தாக்குதலாலும் அமெரிக்க பொம்மை அரசின் எதிர்த்தாக்குதலாலும் உயிருக்கு அஞ்சி அகதிகளாகத் தப்பியோடும் இராக்கிய மக்களின் அவலம்.

ஏதோ சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால்தான் இராக்கின் அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைப் போல அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. உண்மையில் ஏகாதிபத்தியவாதிகளால்தான் இராக் மட்டுமின்றி மேற்காசியா பிராந்தியமே பேரழிவுக்கு ஆளாகி நிற்கிறது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போர்தானேயன்றி, அமெரிக்கா கூறுவதுபோல அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அதன் நோக்கமல்ல. தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் எண்ணெய் வளமிக்க மேற்காசியப் பிராந்தியம் இருக்க வேண்டும்; அதேசமயம் அப்பிராந்தியத்தில் தனது மறுகாலனிய நடவடிக்கைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை மடைமாற்றிவிடும் நோக்கில் மத, இனப் பிரிவுகளுக்கிடையே முறுகல் நிலையும் பதற்றநிலையும் நீடிக்க வேண்டும் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் அணுகுமுறையாக உள்ளது.

உலக மேலாதிக்கத்துக்காக கெடுபிடிப் போர்களில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தீவிரமாக ஈடுபட்டுவந்த காலத்தில், மத்திய ஆசிய நாடுகளின் மதவாதப் பிற்போக்குக் கும்பல்களுடன் அமெரிக்கா கூடிக் குலாவி தனது செல்வாக்கின்கீழ் அந்நாடுகளைக் கொண்டுவந்தது. அன்று இரான் மன்னன் ஷா-வுடைய ஆட்சியை அமெரிக்கா ஆதரித்தது. ஷா ஆட்சியையும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடிய கொமேனி தலைமையில் இஸ்லாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்ததும், இரானைத் தாக்க அதன் அண்டை நாடான இராக்கின் அதிபர் சதாம் உசேனைத் தூண்டி விட்டு, விசவாயு உள்ளிட்ட ஆயுதங்களைச் சதாமுக்கு வழங்கியது, அமெரிக்கா. எட்டு ஆண்டுகள் நடைபெற்ற இரான் – இராக் போரில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இரு நாடுகளும் பேரழிவுக்குள் தள்ளப்பட்டன.

இதே காலகட்டத்தில் ஆப்கானை அன்றைய சோவியத் வல்லரசு ஆக்கிரமித்ததும், ரசியாவை வெளியேற்றுவதற்கு சன்னி வகாபி அடிப்படைவாதக் குழுக்களை அமெரிக்கா உருவாக்கியது. இதற்குப் பயிற்சியளிப்பதற்காகவே பாகிஸ்தானில் ஏராளமான மதரசாக்களை உருவாக்க சவூதி அரேபிய மன்னராட்சியும் அமெரிக்காவும் இணைந்து நிதியுதவி செய்தன. ஆப்கானின் பழங்குடி யுத்தப்பிரபுக்களுக்கும் முஜாகிதீன்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி செய்தது. இதற்கு உதவியாக பாகிஸ்தான் மாற்றப்பட்டு, அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இப்பணிகளை பாகிஸ்தானின் உளவுப்படை ஒருங்கிணைத்தது.

ஷியா முஸ்லீம்கள்
சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்க பொம்மை அரசுப் படைகளுக்கு ஆதரவாகவும் இராணுவச் சீருடையுடன் அணிதிரண்டுள்ள ஷியா முஸ்லிம்கள்.

சோவியத் வல்லரசு தனது படைகளை விலக்கிக் கொண்டு ஆப்கானிலிருந்து வெளியேறியதும், அமெரிக்காவின் ஆதரவுடன் தாலிபான்களின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. இருப்பினும், தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் தத்தமது நலன்களையொட்டி முரண்பாடுகள் எழுந்து அவை பிளவுபட்டன. வளைகுடாப் போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் இஸ்லாமிய மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தன. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பின்லேடனின் அல்கய்தா இயக்கம் வளரத் தொடங்கி தாலிபான்களும் அல்கய்தாவுடன் சேரத் தொடங்கினர். அமெரிக்காவுடன் அது முரண்படத்தொடங்கியதும் அல்கய்தா இயக்கம் ஆப்கான் மட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டது. போர்த்தாக்குதல்களால் ஆப்கான் சிதைக்கப்பட்டு அமெரிக்காவின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது.

தனது முன்னாள் காலனிய நாடுகள் அல்லது சோவியத் ஆதரவு நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றுவதற்கும், தனது மேலாதிக்கத்தின் கீழ் வராத இதர நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நடத்துவதற்கும் ஜனநாயகம், மனித உரிமை, தேசியஇன விடுதலை என்ற பெயரில் தலையிட்ட அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தைப் பல நாடுகளாகத் துண்டாடித் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது. பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் நாடுகள் துண்டாடப்பட்டன. மேற்காசியாவில் இராக் மீது காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தியது. இந்தியாவில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத ரீதியாகப் பிளவுபடுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதைப் போலவே, இராக்கில் இஸ்லாமியர்களின் ஷியா மற்றும் சன்னிப் பிரிவுகளுக்கிடையிலான மோதலைத் தனது தேவைக்கேற்ப அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு தனது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டியது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக அடுத்தடுத்து சிரியா, லிபியா என்று காய்களை நகர்த்தியது.

தனது நோக்கங்களுக்குச் சேவைசெய்யும் வகையிலான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தலைமையிலான ஒருபொம்மை அரசை இராக்கில் உருவாக்கி ‘ஜனநாயக’த்தையும் ‘அமைதி’யையும் சாதித்துவிட்டதாகக் கூறிக் கொண்டாலும், அமெரிக்காவால் அதனை உறுதியாக நிலைநாட்டிக் கொள்ள முடியவில்லை. அந்த பொம்மை அரசு பலவீனமானதாகவும், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கத்தைக் கொண்டதாகவும் இருந்ததால், சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் வளர்ந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கக் கிளம்பிவிட்டன. இதேபோல சிரியாவிலும் லிபியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களைக் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முன்வைத்த இராணுவ தந்திரத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து விட்டன.

ஆப்கானில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட பின்னர், அங்கு ‘அமைதி’யை நிலைநாட்ட கர்சாய் தலைமையிலான ஒரு பொம்மை அரசை அமெரிக்கா உருவாக்கியது. ஆனாலும் தாலிபான்களை ஒடுக்க முடியாத நிலையில், ‘அமைதி’யை நிலைநாட்டுவது என்ற பெயரில் இப்போது ‘நல்ல’, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அதேபோல இராக்கிலுள்ள தனது பொம்மை அரசைப் பாதுகாக்க முடியாத நிலையில், இராக் மற்றும் சிரியாவில் புதியதொரு கூலிப்படையை உருவாக்கி அதன் மூலம் இராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை முடக்கிவிட முயற்சிக்கிறது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் உள்நாட்டுப் போர்களையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நிரந்தரமாக்குகிறது.

அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
“நாடு சீர்குலைக்கப்பட்டு 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள ஈராக் மீது போர் தொடுக்காதே!” எனும் முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தும் அமெரிக்க மக்கள்.

இராக் உள்நாட்டுப் போரின் பின்புலம் இதுதான். இராக்கிலும் சிரியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நடக்கும் போர்களுக்கும் ரத்தக்களறிகளுக்கும் காரணமான பிரதான குற்றவாளி அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். இந்த வரலாற்று உண்மையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இடமிருந்து அமெரிக்காதான் இராக்கை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்த் திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா, அமெரிக்கா உருவாக்கியுள்ள இராக்கிய அரசுக்கு உதவுவதாகவும் மறுநிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறிக்கொண்டு அமெரிக்காவுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலை செய்கிறது. கட்டிடப் பணியாளர்கள் முதல் செவிலியர்கள் வரையிலானவர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கிறது. தற்போது உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டுவிட்ட செவிலியர்கள் உள்ளிட்டோரை மீட்பதற்குப் போர்க்கப்பலை அனுப்பி, தனது புஜபலத்தைக் காட்டும் நாடகத்தை நடத்திவருகிறது, மோடி அரசு. இப்படித்தான் ஆப்கானில் அமெரிக்க பொம்மையாட்சியின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டபோதும், தனது குற்றத்தை மறைத்துக் கொண்டு இந்திய அரசு நீலிக்கண்ணீர் வடித்தது. இந்திய அரசு மறைமுகமாகச் செய்யும் இந்த அமெரிக்க தொண்டூழியத்தைத்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்களுக்கு எதிராக இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்வைக்கின்றனர். இஸ்லாத்தின் மூலம் அரபு நாடுகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை. ஷியா மற்றும் சன்னி பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் மென்மேலும் அதிகரிக்கின்றனவேயன்றி, குறையவில்லை. அகண்ட இஸ்லாமை நிறுவ முயற்சித்தாலும் அதன் மூலம் காலனியாதிக்கத்தையோ, மேலாதிக்கத்தையோ வீழ்த்த ஒருக்காலும் சாத்தியமில்லை.

வர்க்க உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக அரசியலும்தான் மக்களை ஒன்றிணைக்குமே தவிர, மதத்தின் மூலமாக மக்களை ஒருக்காலும் ஒன்றிணைக்கவோ, ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்தை வீழ்த்தவோ முடியாது; மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தியபடியே, அமெரிக்க மேலாதிக்கம் – இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் இரட்டை நுகத்தடியில் சிக்கிய இராக் மீண்டும் பேரழிவுக்குள் அமிழ்த்தப்படுகிறது.

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2014
_________________________________