Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 736

வடு!

11

கவிதைநிறைய இரவுகள்
கடந்துவிட்டன இதுவரையில்
ஒரு சில இரவுகள் மட்டும்
மறக்க முடியாதவைகளாய்…

அப்படி ஒரு இரவுதான் அதுவும்
தூக்கம் வரவில்லை.
கண்களை மூடினால்
நீண்ட… இருட்டு.
மகிழ்ச்சி நிரம்பி வழியும்போது
தூக்கம் வருவது கடினம்தான்.

நான்தான்
முதலில் பார்த்தது
புது நோட்டுக்கள்
புதுப் புத்தகங்களை சுமந்துகொண்டு
சாயங்காலம் பள்ளிக்குள் நுழைந்த
பழைய லாரி ஒன்றை.

எப்படியும் வந்துவிடும்
புது நோட்டுக்களும்
புதுப் புத்தகங்களும்
நாளை என் கையில்.

வாங்கியவுடன்
முதல் பக்கங்களை பிரித்து
‘மோந்து’ பார்க்க வேண்டும்
அவ்வளவு வாசமாய் இருக்கும்.
சலவைக்கு போட்ட
சேலையொன்றை
எப்பொழுதாவது எடுத்து கட்டும்
அம்மாவிடமிருந்து
வருமே ஒரு வாசம்…
அதுபோல.

முடிந்தவரை
இந்த வருடம்
எழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
சித்திரத்தை போல
செதுக்க வேண்டும் புதுநோட்டில்.
ஆசிரியர் வாங்கி பார்த்தால்
ஆச்சரியத்தில்
திளைக்க வேண்டும்.

கையில் இருக்கும்
மயிலிறகுகளை
கணக்கு புத்தகத்தில்தான்
முதலில் வைக்க வேண்டும்.
நாளு நாட்கள் கூட
எடுத்துகொள்ளட்டும்
நல்லகுட்டி போட்டால் சரி.

பக்கத்து தெரு
பாண்டித்துரை வீட்டில்தான்
‘நியூஸ் பேப்பர்’  இருக்கும்.
அவனும் கூட
என் ‘சோடு’தான்
ஆனாலும் தைரியமாய்
என் அப்பாவை
பெயர் சொல்லியே அழைப்பான்.
அவன் கொஞ்சம்
கொடுத்தால் போதும்
அட்டைபோட்டு பெயரெழுதி
அழகாய் வைத்துக் கொள்வேன்.

இந்த உரச்சாக்கு பையை
கண்டால்தான் கடுங்கோபம்.
மாமா  புதுப்பை ஒன்று
வாங்கி வரும்வரை,
இதிலேயே புத்தகங்கள்
இருந்து தொலைக்கட்டும்
……………………………..

இன்னும் தூக்கம் வரவில்லை.
நீண்ட விழிப்பிற்கு பிறகு
தூங்கிப் போனேன்.

‘பிரேயர்’
நத்தை வேகத்தில்
நகர்ந்து முடிந்தது.

‘‘ ஸ்காலர்சீப்
புத்தகம் வந்திருக்கு
பள்ளன், பறையன்,
சக்கிலியெனெல்லாம்
அப்படியே நில்லு !
மத்த எல்லோரும்
வகுப்புக்கு போ ’’
எரிச்சலும், கோபமும்
கலந்த குரலொன்று
செவிகளை துளைத்தது.

புதுநோட்டுகளும்
புதுப்புத்தகங்களும்
என் அருகில்தான் இருந்தன

ஆனால்,
முந்தைய இரவு போலவே
தூக்கம் மட்டும்
இன்னும் வரவில்லை.

முகிலன்

————————————————————————–

குறிப்பு: தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 80-களில் பணிபுரிந்த  கிளார்க் ரத்தினபாண்டி  தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிகக் கேவலமான முறையில் சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.

————————————————————————–

இடானியாவின் கடிதம்…

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று நிகாரகுவா. 1979 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள், நிகராகுவாவின் சர்வாதிகாரியும், அமெரிக்க உதவியுடன் ஆட்டம் போட்டவனுமாகிய அனஸ்டூடசியோ சமோசாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு மக்கள் வெற்றி கண்ட மகத்தான நாள். இத்தேசியப் புரட்சியில் பங்கு கொண்ட இடானியா என்ற பெண் போராளி 8.3.1979 தேதியில் தனது மகளுக்கு எழுதிய கடிதம் கீழே தரப்படுகிறது. 16.4.1979 அன்று சமோசாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது இப்போராளியின் வயது 26

இடானியாவின் கடிதம்!

இடானியா
மகளுடன் தோழர் இடானியா (1976)

எனது அன்பு மகளே,

எல்லா இடங்களிலும் மக்களுக்கு
இது ஒரு முக்கியமான நேரம்.
இன்று நிகராகுவாவில்,
நாளை பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில்,
பிறகு உலகம் முழுவதும்.

புரட்சி
ஒவ்வொருவராலும் தரமுடிந்த அனைத்தையும் கோருகிறது.
நமது மனசாட்சியும்தான்.

தனி மனிதர்களான நாம் பிரத்யேகமாகச் செயல்பட்டு
இந்த உருவாக்கத்தில் இயன்றளவு,
உதவிடவேண்டி வலியுறுத்துகிறது.

விரைவிலேயே ஒருநாள்
சக மனிதர்களைப் போல வளர்ந்து முன்னேறி,
விரோதிகளாக அல்லாமல், சகோதர சகோதரிகளாக
சுதந்திரமான சமூகத்தில் வாழ்வது,
உனக்கு சாத்தியமாகுமென்று நம்புகிறேன்.

அப்போது உன்னுடன் கைகோர்த்து வீதிகளில் செல்லும்போது
எல்லோரும் புன்னகைப்பதை குழந்தைகள் சிரிப்பதை
பூங்காக்கள் நதிகளையெல்லாம் பார்க்க விரும்புகிறேன்.

நமது மக்கள் மகிழ்ச்சியான குழந்தைகளாக வளர்வதையும்,
புதிய மனிதர்களாகவும்
எங்குமுள்ள மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை
உணர்ந்தவர்களாக மாறுவதையும் கண்ணுற்ற நாம்
மகிழ்ச்சியுடன் புன்னகை செய்வோம்.

நீ அனுபவிக்கப் போகும் அமைதியும், சுதந்திரமும் கொண்ட
சொர்க்கத்தின் மதிப்பை நீ அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏற்கனவே நமது மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.
சமூகத்தின் மீதும், சுதந்திரத்தின் மீதும், அமைதியின் மீதும்,
தமக்குள்ள ஆழ்ந்த அன்பினால்,
நாளைய தலைமுறையினருக்காகவும்,
உன்னைப் போன்ற குழந்தைகளுக்காகவும்
தங்கள் ரத்தத்தை தந்துவிட்டார்கள்,
மிக்க விருப்பத்துடன்.

நமது அழகான நிகராகுவாவின்
எத்தனையோ ஆண்களும், பெண்களும், குழந்தைளும்,
அடக்குமுறையிலும், அவமானத்திலும், வேதனையிலும்
துடிப்பது போல இனி ஒரு போதும் துடிக்கக் கூடாது
என்பதற்காக
அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துவிட்டார்கள்.

ஒருவேளை நான் இவற்றையெல்லாம்
உன்னிடம் நேரில் சொல்லமுடியாமல் போகலாம்.
வேறொருவர் சொல்வதும் முடியாது போய்விடலாம்,
என்பதால் உன்னிடம் சொல்கிறேன்.

அன்னை என்பவள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பவள் மட்டுமல்ல,
எல்லாக் குழந்தைகளும் தனது கருப்பையிலிருந்து தோன்றியவர்கள் போல,
எல்லா மக்களின் வலிகளையும்
அன்னை என்பவள் நன்கு அறிவாள்.

ஒரு நாள்
நீ
மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட
உண்மையாக பெண்ணாக உருவாக வேண்டும்
என்பதே என் விருப்பம்.

நீதியை யார் எப்போது குலைக்க முயன்றாலும்,
அதை எதிர்த்து நின்று காப்பது எப்படி என்று
உனக்கு எப்போதும் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி நீ மாறவேண்டுமானால்,
நாம் நாட்டுப் புரட்சியின் தலைவர்களும்,
பிறநாட்டுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களும்
எழுதிய புத்தகங்களை
நீ படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

அனைத்திலும் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தி
அதன் மூலம் வளர்ச்சியைத் தொடர வேண்டும்.
நீ இதைச் செய்வாய்!
உன்னால் முடியுமென்று எனக்குத் தெரியும்.

உனக்கென
வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும், வெற்றுப்போதனைகளையும்
விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.

உனக்கென நான் விட்டுச்செல்ல நினைப்பது
வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.
என்னுடையதையும்
(அதுதான் சிறந்தது என்று நான் நினைக்கவில்லை என்றாலும்)
எனது சான்டினிஸ்டா சகோதர – சகோதரிகளுடையதையும்
உனக்கு விட்டுச் செல்கிறேன்.
அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று
நீ கற்றுக் கொள்வாயென்று எனக்குத் தெரியும்.

சரி, என் குண்டுப்பெண்ணே,
உன்னை மறுபடியும் பார்க்கும் பேறு எனக்கு கிடைத்தால்?
அதுகூட சாத்தியம்தான்.
வாழ்க்கை பற்றியும் புரட்சி பற்றியும் நாம் நீண்டநேரம் பேசுவோம்.

நமக்குக் கொடுக்கப்படும் செயல்களை
கடினமாக உழைத்து நிறைவேற்றுவோம்.
கிடார் வாசித்து, பாட்டுப்பாடி ஒன்றாக விளையாடுவோம்.
ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வோம்.

வா,
பூவையும் சுதந்திரத்தையும் போன்ற
உன் அழகு முகத்தை எனக்குக்காட்டு!

உன் சிரிப்பையும் நமது யதார்த்தத்தையும் பிணைத்து
நான் போராடுவதற்கான சக்தியைக்கொடு!

தினமும் உன்னைப்பற்றியே நினைக்கிறேன்.
நீ எப்படியிருப்பாய் என்று கற்பனை செய்கிறேன்.

எப்போதும் உன் மக்களை
மனித குலத்தை நேசி!
உன் அம்மாவின்
அன்பு முழுவதும் உனக்கே!

  • இடானியா.

“என்றென்றைக்குமான வெற்றி கிட்டும் வரை
சுதந்திரத் தாய்நாடு அல்லது வீரமரணம்”

(“சான்டினோவியப் புதல்விகள்” ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பு: அமரந்தா.) – புதிய கலாச்சாரம், ஜனவரி’ 2000

இருபத்தி ஆறு வயது போராளி இடானியா தனது மகளுக்கு எழுதிய கடிதம்தான் இது. கடிதத்தை கவிதை வடிவில் மாற்றியிருக்கிறோம். வாழ்வின் முழுமை பற்றியும், கடமை பற்றியும், தனிப்பட்ட நேசத்தைக் கூட சமூக உறவின் வெளிச்சத்தில் நேசிக்கும் இந்த இளம் போராளியின் வார்த்தைகளும், வரிகளும் செயலற்றவர்களின் பாதுகாப்பான இதயத்தை உலுக்குகிறது. அவளது சிறிய குண்டுப் பெண்ணுடன் கிடார் வாசித்து புரட்சியின் கடமைகளை நிறைவேற்ற நினைக்கும் எதிர்பார்ப்பு கண்ணீரை வரவழைக்கிறது. ஆம். நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.

முருகப்பாவுக்கு ‘நேரம்’ சரியில்லை !

14

24-ம் தேதி இரவு ஏழு மணி. ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் ஃபார்ம்மிங் (காருக்கு கதவுகள் தயாரிக்கும் தொழிற்சாலை) ஆலையின் வாசலை கடந்து சர் சர் என்று  பாய்ந்து கொண்டு வந்த ஆறு ஏழு உயர்ரக கார்கள் சடன் பிரேக் அடித்து நின்றன. கார்களிலிருந்து ஆலையின் மேலாளர்கள், உயர் அதிகாரிகள், மொத்த முருகப்பா குழுமத்தின் மிக உயர்மட்டத்திலுள்ள மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட அதிகாரிகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பதட்டத்துடன் இறங்கி ஆலைக்குள் ஓடினர்.

மாலை நாலரை மணிக்கு ஷிப்ட் முடியும் தருவாயில் அடுத்த ஷிப்ட்டுக்காக வந்த தொழிலாளர்களும் ஷிப்டில் இருந்தவர்களும் இணைந்து  ஆலையின் உற்பத்தியை திடீரென்று நிறுத்தினர். கேந்திரமான உற்பத்தி பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டவை அனைத்தும் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் திங்கட்கிழமை சப்ளைக்காக உடனடியாக உற்பத்தியை துவங்க வேண்டிய நெருக்கடி நிலையில் தான் தொழிலாளர்கள் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

முருகப்பா குழுமத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இக்குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. பாரிஸ், ஈ.ஐ.டி பாரி, பாரி அக்ரோ, டி.ஐ சைக்கிள்ஸ், டி.ஐ.டி.சி , டி.ஐ மெட்டல் பார்ம்மிங், பி.எஸ்.ஏ மோட்டார்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷ்னல், சோழமண்டலம் பைனான்ஸ் என்று இருபத்து எட்டு துறைகளில் இந்தியாவின் பதிமூன்று மாநிலங்களில் இந்நிறுவனம் தனது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவியுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனம் ஒரு ’தமிழ் முதலாளி’ கம்பெனி. அதாவது செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ கம்பெனி.

இக்குழுமத்திலுள்ள டி.ஐ மெட்டல் ஃபார்ம்மிங் நிறுவனம் ஜி.எம், மாருதி சுசுகி, ஹூண்டாய், ரெனால்ட் நிசான், டொயோட்டா போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் டாடா, மகேந்திரா போன்ற சில தரகு முதலாளித்துவ கார் தொழிற்சாலைகளுக்கும் இந்திய ரயில்வேவுக்கும் கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. சென்னையில் இரண்டு ஆலைகளும் குஜராத், அரியானா, மகாராஷ்ட்ராவில் ஒரு ஆலையும் இயங்கி வருகிறது. உத்திரகாண்ட்டில் ஒரு புதிய ஆலை கட்டப்பட்டு வருகிறது.

முருகப்பா ‘முறுக்கு’ கம்பெனி!

தற்போது ஆவடிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரியிலுள்ள ஆலையில் தான் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை கடந்த பதினைந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பிரதானமாக ஹூண்டாய் மற்றும் ரெணால்ட் நிசான் கார்களுக்கான கதவுகள் தயாரிக்கப்படுகின்றன.

மொத்தம் தொள்ளாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் வெறும் அறுபத்து எட்டு பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளிகள். இந்திய தன்மைக்கேற்ப பண்ணையார் பானியில் கம்பெனி நடத்தும் இக்குழுமம். தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் முறையே வித்தியாசமானது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களுக்கும், நெல்லை, கன்னியாகுமரி போன்ற எல்லையோர மாவட்டங்களுக்கும் சென்று வேன்களில் முருகப்பா குரூப் என்கிற பதாகையை மாட்டிக்கொண்டு ஆள் எடுப்பு முகாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

முருகப்பா குரூப் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி, இந்நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்த வேலை உங்களுடைய எதிர்காலத்தை மாற்றும் என்று முறுக்கு கம்பெனிக்கு ஆள் எடுப்பதை போல தனக்கு தேவையானவர்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு வருகிறது. தற்போது அதிகமான அளவில் வடமாநிலங்களிருந்து சட்டவிரோதமான முறையில் ஒப்பந்ததாரார்கள் மூலம் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். தொழிலாளர்களில் பெரும்பான்மையினரான வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் ஆதரிக்கின்றனர்.

பு.ஜ.தொ.மு உதயம்!

இங்கு பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இணைந்துள்ளனர்.

முருகப்பா குழுமத்தின் ஒட்டுமொத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாக இருப்பவர் திருவாளர் பிரசாத். உங்களுக்கு நினைவிருக்கலாம், சில மாதங்களுக்கு முன்பு பு.ஜ.தொ.மு வை தடை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் மீது கருணை மழை பொழியும் அம்மாவுக்கு கோரிக்கை வைத்தார்களே முதலாளிகள், அந்த முதலாளிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் இந்த பிரசாத் தான்.

எனவே பு.ஜ.தொ.மு வின் கீழ் தொழிலாளர்கள் சங்கமாக இணைந்ததை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சங்கத்தை உடைக்க வேண்டும் என்று முயற்சித்தனர். யாரும் சோரம் போகும் நிலையில் இல்லாததால் தொழிலாளர்கள் மத்தியில் பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டனர்.

இவர்கள் நக்சலைட் தீவிரவாதிகள், ஏற்கெனவே பல இடங்களில் நிர்வாகத்திடம் காசு வாங்கிக் கொண்டு ஓடிப் போனவர்கள் என்றும் இன்னும் பலவாறாகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் தொழிலாளர்கள் நிர்வாகம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறதோ அதை தான் இன்னும் தீவிரமாக செய்தனர். முன்பு நிர்வாகத்திலுள்ள கீழ்மட்ட அதிகாரிகளை பார்த்தால் கூட பணிந்து போகும் தொழிலாளிகள் இப்போதெல்லாம் உயர்மட்ட அதிகாரிகளின் அடாவடிகளுக்கு கட்டுப்படுவதில்லை. எனவே நிர்வாகத்தின் விருப்பத்திற்கு மாறாக பு.ஜ.தொ.மு வில் தான் இணைவோம் என்று இணைந்தனர்.

தொழிலாளர்களை கங்காணிகளாக்கிய முருகப்பா!

தொழிலாளர்கள் சங்கத்தில் உறுதியடைய துவங்கியதும் நிர்வாகம் தனது வேலைகளை காட்டத் துவங்கியது. தொழிலாளர்களை தொழிலாளர்களாகவே வைத்திருந்தால் சட்டப்படி பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் தகுதிகளை சூப்பர்வைசர்கள் என்று தந்திரமாக உயர்த்தியது.

தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு மூலம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். பிரச்சினை தொழிலாளர் உதவி ஆணையரிடம் சென்றது. இவர்கள் நிர்வாக ஊழியர்கள் அல்ல உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தான் என்பதை பு.ஜ.தொ.மு ஆதாரங்களுடன் நிரூபித்தது நிர்வாகத்திற்கு விழுந்த முதல் அடி!

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை!

நிறுவனத்தின் லாபம் மற்றும் வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது நிர்வாகம் தொழிலாளிகளுக்கு வழங்கும் கூலி என்பது லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

முருகப்பா கும்பலை பொருத்தவரை ஒவ்வொரு ஆலைக்கும் தனித்தனியே ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வளவு ஊதியம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து ஒரு தொகையை ஒதுக்கி விடுகின்றனர். டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய ஊதியம் ஒரு கோடி தான் ஒன்று ஒதுக்கிவிட்டு அதிலும் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ, குறைக்கிறார்கள். மிச்சமுள்ள பணத்தை ஆலையின் உயர் அதிகாரிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்குகிறார்கள்.

நிரந்தரத் தொழிலாளிகளுக்கே அதிகப்பட்ச ஊதியம் எட்டாயிரம் தான். ஒப்பந்ததத் தொழிலாளர்களுக்கோ மிக மிக அடிமாட்டு கூலியாக மூவாயிரத்து ஐநூறு முதல் நாலாயிரம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது. எனவே தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்று வரும் நிர்வாகம் பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே இழுத்தடிப்பதும், பாதியிலேயே எழுந்து செல்வதுமாக தொழிலாளர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் குழுமத்தின் நிறுவன நாள் என்று ஒரு நாளை கொண்டாடுகிறார்கள். அன்று அனைத்து அதிகாரிகளும் ஆலையில் கூடி இனிப்புகள் வழங்கி, உரையாற்றி உணவருந்தி பிறகு கலைவார்கள். இந்த ஆண்டின் நிறுவன நாளன்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. உங்களுடைய கொண்டாட்ட நாள் எங்களுக்கு துக்க நாள் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளிகள் அனைவரும் சட்டைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து கொண்டு விழா நடந்த அரங்கிற்கு எதிரில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நின்றனர். அவர்கள் கொடுத்த இனிப்புகளையும் புறக்கணித்தனர்.

ஏற்கெனவே வருடத்திற்கு எண்ணூற்றி ஐம்பது ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதாவது மாதத்திற்கு எழுபத்தியோரு ரூபாய். இன்றுள்ள நிலைமைகளில் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்பதால் தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்தை கோரினார்கள். கூடுதலாக நான்காண்டுகளுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அதாவது இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது என்றால் ஆண்டுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது அல்ல அந்த மொத்த தொகையை ஆண்டுக்கு அறுநூற்று என்பத்து எட்டு என்று நான்காண்டுகளுக்கு பிரித்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு பிரித்துக்கொண்டால் மாதத்திற்கு ஐம்பத்து ஏழு ரூபாய் சொச்சம் வரும். எனினும் பரவாயில்லை என்று தொழிலாளர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர்.

ஏற்கெனவே வழங்கி வந்ததைவிட இது மிகக்குறைவான ஒரு ஊதிய உயர்வு. அதை தருவதாக ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இதை தருகிறேன் ஆனால் ஏற்கெனவே வழங்கி வந்த எழுபத்தியோரு ரூபாயை தரமுடியாது என்று மறுத்தது. இது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் ?

தற்போது தொழிலாளர்கள் உற்பத்தியை முடக்கி ஆலையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பிறகு நேற்று தொ.உ.ஆணையர் முன் நடந்த பேச்சு வார்த்தையையும் கணக்கில் சேர்த்தால் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் சுமார் ஐம்பது முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது !

பேச்சுவார்த்தை என்கிற பெயரில் தொழிலாளிகளை அலைக்கழித்து இழுத்தடித்ததாலும், ஊதிய உயர்வு தருகிறேன் என்கிற பெயரில் சீண்டிப்பார்க்கும் விதத்தில் ஏற்கெனவே வழங்கி வந்த ஊதியத்தையே அயோக்கியத்தனமாக வெட்டியதாலும் வேறு வழியே இன்றி தான் தொழிலாளிகள் இயந்திரங்களின் பொத்தான்கள் மீது கை வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம் உற்பத்தி நிறுத்தம்!

24-ம் தேதி மாலை நாலரை மணிக்கு அனைத்து இயந்திரங்களும் நிறுத்தப்பட்டு உள்ளிருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆலையிலிருந்த மேலாளர்கள் மூலம் உடனடியாக மேல்மட்டத்திற்கு தகவல் பறந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அதிகாரிகள் கூட்டம் திபுதிபுவென ஆலைக்குள் நுழைந்தது. அதற்கு முன்பாக அவர்களுக்கு காவல் காக்கக்கூடிய போலீசு கும்பல் சட்ட விரோதமான முறையில் ஆலைக்கு வெளியில் குவிக்கப்பட்டது. பத்து மணியை கடந்தும் அதிகாரிகள் வெளியே வரவில்லை.

தொழிற்சாலைக்குள் நடக்கும் பிரச்சினை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல ! எனவே போலீசு இதில் தலையிடுவதற்கு சட்டப்படியே அதிகாரம் இல்லை. எனினும் விசுவாசம் காரணமாக போலீசார் ஆலைக்கு வெளியில் ஹூண்டாய் முதலாளி கொடுத்த காரில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

தொழிலாளிகளுக்காக ஆவடி அம்பத்தூர் பகுதி பு.ஜ.தொ.மு தோழர்களும் நின்று கொண்டிருந்தனர். தோழர்களை நெருங்கிய போலீசு “பத்து மணிக்கு மேல இங்க என்ன கூட்டம் போட்டுக்கிட்டு. எல்லோரும் கலைஞ்சு போங்க” என்று மிரட்டியது. “உள்ள எங்க தோழர்கள் போராடிட்ருக்காங்க, அவங்களுக்காக நாங்க நிக்கிறோம். இது ரோடு. ரோட்ல நிக்கிறதுக்கு இந்த நாட்டின் குடிமகன் என்கிற வகையில் எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்று தோழர்கள் தெரிவித்தனர். தனது அதிகாரம் செல்லுபடியாகவில்லை என்றதும் சரி சரி ரெண்டு ரெண்டு பேரா பிரிஞ்சி நில்லுங்க என்றனர்.

நிர்வாகம் தன்னுடன் இரு கியூ பிரிவு போலீசாரையும் ஆலைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்கள்  தொழிலாளிகளை கண்காணிக்கத் துவங்கினர். அதிகாரிகள் தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர். அருகிலேயே கியூ பிரிவு போலீசாரும் நின்று கொண்டிருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் இவர்கள் யார், எதற்காக வந்துள்ளனர் என்று கேட்டனர் அவங்க சும்மா கூட இருப்பாங்க என்றனர். இவங்க யார்னு எங்களுக்கு தெரியும். இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பிரச்சினை. அவர்களை வெளியேற்றுங்கள் நாம் பேசுவோம் என்றனர். அதன் பிறகும் பல காரணங்களை கூறி அவர்களை நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் தான் பேச்சுவார்த்தை பற்றியே பேச முடியும் என்று தொழிலாளிகள் கராறாக கூறிவிட்ட்தால் கியூ போலீசு அவமானப்பட்டு வெளியேறியது.

வழக்கமாக பேச்சுவார்த்தை கான்ப்ரன்ஸ் ஹால், அல்லது ஏதாவது ஒரு அறையில் தான் நடக்கும். இப்போதோ அங்கெல்லாம் வர முடியாது இங்கேயே பேசுங்கள் என்று அதிகாரிகளை அங்கேயே நிற்க வைத்து பேசினர். பேச்சுவார்த்தை தோல்வி, மறுபடியும் பேச்சு மீண்டும் தோல்வி என்று இரவு இரண்டரை மணி வரை ஐந்து முறை பேச்சுவார்த்தை தோல்வி, தோல்வி, பேச்சுவார்த்தை என்று விளையாட்டுகாட்டிக்கொண்டிருந்தது நிர்வாகம்.

விளையாட்டு மட்டுமல்ல மிரட்டலும் விடப்பட்டது. “முருகப்பா குரூப்ல உங்களை மாதிரி முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவங்க வேலை செய்றாங்க. அதுல நீங்க வெறும் அறுபத்து எட்டு பேர் தான். உங்களால என்ன பண்ண முடியும் ? மரியாதையாக வெளியேறிட்டீங்கன்னா நல்லது இல்லைனா விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என்று பூச்சாண்டி காட்டினர். அந்த விளைவுகளையும் பார்க்கலாமே என்று தொழிலாளிகள் மிரட்டலை சட்டை செய்யாமல் உறங்கச் சென்றனர். பிறகு கூடி பேசிய அதிகாரிகள் மூன்று மணிக்கு ஆலையிலிருந்து வெளியேறினர்.

விடாப்பிடியான இழுபறி நிலை!

இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கார் கதவுகளும் ஹூண்டாய்க்கு அனுப்பப்பட்டுவிட்டன. மறுநாள் அனுப்புவதற்கு கதவுகள் இல்லை. அன்றிரவு எட்டு மணிக்குள் உற்பத்தி துவங்கப்படாவிட்டால் அதற்கடுத்த நாள் ஹூண்டாய் கார்கள் அனைத்தும் கதவுகள் பொருத்தப்படாத நிலையில் அசெம்ப்ளி லைனில் நிற்கும், அங்கு உற்பத்தி ஸ்தம்பிக்கும் என்பது மறுநாள் நிலைமை.

மறுநாள் விடிந்தது. ஆலைக்கு வெளியே பத்து தோழர்களும் தூங்காமல் காத்துக் கொண்டிருந்தனர். போலீசும் நகரவில்லை. சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆலைக்குள் வந்த அதிகாரிகள். மறுபடியும் பேசலாம் என்றனர். அதற்குள் இங்கே நடக்கின்ற பிரச்சினைகள் எப்படியோ ஹூண்டாய்க்கு தெரிந்துவிட்டது. உடனே TI  ல் என்ன நிலைமை என்பதை பார்த்துவர ஒரு அதிகாரியை அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில் காட்சி ஊடகங்களுக்கு தகவல் தெரிந்து சன் நியூஸ், ஜீ தமிழ், கேப்டன் நியூஸ் ஆகிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. மக்கள் போராடக்கூடாது என்று விரும்புகின்ற ’புதிய தலைமுறை’ மட்டும் வெளியிடவில்லை.

ஊடகங்கள் வந்ததையும், தொழிலாளிகள் பேட்டியளித்ததையும் அறிந்த நிர்வாகம் வெளியே வந்த தொழிலாளர்கள் மீண்டும் உள்ளே சென்றதும் ஷட்டரை இழுத்து பூட்டு போட்டது. தொழிலாளர்களை இவ்வாறு உள்ளே தள்ளி கதவை மூடுவது என்பது சிறை வைப்பதாகும், இது சட்டவிரோத நடவடிக்கை.

வெளியில் நின்று கொண்டிருந்த தோழர்களுக்கு இந்த தகவல் கிடைத்ததும் தொழிலாளர்களுடைய பெற்றோர்கள், மனைவி குழந்தைகள் அனைவரையும் அணிதிரட்டி ஆலைக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தி முழக்கமிட்ட்னர். காவல்துறை உடனே பெண் காவலர்களை கொண்டு வந்து இறக்கியது. பிறகு ஷட்டர் திறக்கப்பட்டது.

இதற்குள் பிற்பகல் ஆகிவிட்டது. ஆலைக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி கோடி கோடியாக விழுங்கும் முதலாளிகள் சல்லித்தனமாக மாதத்திற்கு ஐம்பத்தியேழு ரூபாயை உயர்த்தி கொடுக்க முடியாது என்பதில் பிடிவாதமாக நின்றனர். உழைக்காத உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால் உழைத்து சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் என்று தொழிலாளிகளும் பிடிவாதமாக நின்றனர்.

தமிழகத்தில் பன்னிரெண்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் முதலீடு செய்கின்றன என்று சமீபத்தில் ஜெயலலிதா பெருமைபட்டுக் கொண்ட நிறுவனங்களில் முருகப்பா குழுமமும் ஒன்று. இக்குழுமம் பத்தாயிரம் கோடிகளை முதலீடு செய்யவிருக்கிறது. எனவே அரசு தரப்பிலிருந்து  உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தொழிற்துறை செயலர் மூலம் தொழிலாளர் ஆணையருக்கும், இணை ஆணையருக்கும் (JCL) இணை ஆணையரின் உத்தரவுப்படி தொ.உ.ஆணையர் (ACL) “ஞாயிற்று கிழமை என்றாலும் பரவாயில்லை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று அழைத்தார்.

மாலை நாலரை மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு எட்டரை மணிக்கு முடிந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் புதிய ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்பதாகவும் ஏற்கெனவே வழங்கி வந்த பழைய ஊதிய உயர்வையும் தொடர்ந்து வழங்குவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. அதன் பிறகு ஆலைக்குள்ளிருந்த தொழிலாளிகள் வெளியேறினர்.

எழுபதுகளில் இதே அம்பத்தூர் ஆவடி பகுதிகளில் முருகப்பா குழுமத்தில் இதே போல தொழிலாளி வர்க்கம் போராடியுள்ளது. அப்போது ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர், அந்த காலத்து இரும்பு தொப்பி போட்ட போலீசை ஏவிவிட்டு தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தார். ஆனால் தொழிலாளி வர்க்கம் போலீசை விரட்டி அடித்தது வரலாறு.

அதன் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாக முதலாளிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமலிருந்ததால் குளிர்விட்டு போயிருந்தது. தற்போது அந்த வரலாற்றை மீட்டெடுக்க, முதலாளிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பு.ஜ.தொ.மு வளர்ந்து வருகிறது. எழுபதுகளுக்கு பிறகு முருகப்பாவில் இத்தகையதொரு போராட்டம் நடைபெற்றதில்லை. அந்த தேக்க நிலையை உடைத்தெறிந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. முருகப்பாவில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பு.ஜ.தொ.மு விலுள்ள தொழிலாளிகள் முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்குவார்கள்.

முன்பு ஒரு முறை நடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது பேச்சுவார்த்தை நடந்த இடத்தின் வாஸ்து சரியில்லாதது தான் தோல்விக்கு காரணம் என்று கூறி அந்த இடத்தை இடித்துவிட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து புதிய கட்டிடத்தை கட்டினார்கள். தோல்விக்கு காரணம் வாஸ்து தான் என்றால் தற்போதைய பேச்சுவார்த்தை தொண்ணூற்று ஒன்பது சதவீதம் ஆலையின் நடு மையத்தில் தான் நடந்திருக்கிறது. என்ன செய்யப்போகிறது முருகப்பா குழுமம்? முழு ஆலையையும் இடித்து விடுமா?

போராட்டம் முடிவுக்கு வந்த அன்றைக்கு இரவோடு இரவாக தொழிலாளிகளை கண்காணிப்பதற்கான உளவு கேமராக்களை ஆலைக்குள் பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்களுக்கு ஒரு பார்ப்பானை வைத்து பூஜையும் போட்டு நல்ல நேரம் பார்த்து அதை ஆன் செய்துள்ளனர். எத்தனை கேமராக்களை வைத்தாலும் முதலாளித்துவத்திற்கு இனி நல்ல நேரம் இல்லை.

________________________________________________

– வினவு செய்தியாளர்
___________________________________________

ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

5

ரசியல் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல், அதிகார முறைகேடுகள், மோசடிகள் பற்றிய செதிகள் நாளும் வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை நாளுக்கு நாள் பெரும் அளவிலும் பரவலாகவும், அடி முதல் முடி வரை எல்லா மட்டங்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அரசியல் கட்சிகளில் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள்; அரசியல்வாதிகள் மட்டுமல்ல, போலீசு, இராணுவம், அனைத்து மட்ட நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினர்;  கல்வியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் மட்டுமல்ல,  தனியார்துறை தொழில் நிறுவன நிர்வாகிகள் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டன, ஊழல்களும் அதிகார முறைகேடுகளும்.

நடைபெறும் ஊழல்கள், அதிகார முறைகேடுகளில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன. இவற்றுள்ளும் ஒன்றிரண்டு மட்டுமே மக்கள் கவனத்திலும் செய்தி உலகிலும் சில காலம் நீடித்து நிற்கின்றன. மற்றவை புதிது புதிதான ஊழல்கள், அதிகார முறைகேடுகள் பற்றிய செய்திகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பரபரப்புகள் அடங்கி, மறந்து அல்லது மறைந்து போகின்றன; அல்லது சம்பந்தப்பட்டவர்களாலேயே அமுக்கப்படுகின்றன. வகைமாதிரிக்குக் கூட அல்ல, உள்நோக்கங்களுடன் தெரிந்தெடுத்த, அரிதினும் அரிதாக புகார்கள் விசாரணைக்கு வந்தாலும் புலன் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணை, மேல் முறையீடு என்று இழுத்தடிக்கப்பட்டுச் சாகடிக்கப்படுகின்றன. இடைக்காலத்தில் குற்றவாளிகள் வழக்கமான அதிகாரம், சோகுசு வாழ்க்கை என்றுதான் இருக்கிறார்கள். ஜெயலலிதா – சசிகலா கும்பல் 42 வழக்குகளில் சிக்கினாலும் மற்ற எல்லா வழக்குகளிலிருந்தும் தப்பி, சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் 15 ஆண்டுகளாக இழுத்தடித்து நாட்டுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சட்டத்துறையையும் நீதித்துறையையும் கண்களில் விரலை விட்டு ஆட்டி, எங்களை யாரும் ஆட்டவோ, அசைக்வோ முடியாது” என எக்காளமிடுகிறது.

அரசின் வரவு -செலவுகளை ஆய்வு செய்து வழக்கமாக அறிக்கைகள் தரும் பொதுக்கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பின் கருத்துகள் – முடிவுகளைக் கையிலெடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சிகளும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சில ஊழல்கள், அதிகார முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. மேலும் சில விவகாரங்கள் தகவல் உரிமைச் சட்ட – சமூக ஆர்வலர்களாலும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளாலும் ஊடகங்கள் நடத்தும் புலனாய்வுகளாலும் அம்பலத்துக்கு வருகின்றன. இன்னும் சில விவகாரங்கள் கார்ப்பரேட் தொழில் கழகங்களுக்கிடையிலும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையேயும் நடக்கும் தொழில் போட்டிகள் காரணமாக வெளிவருகின்றன.

இரண்டாம் அலைக்கற்றை (2-ஜி) ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகள், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆகியவற்றில் தொடங்கி எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு, இராணுவ நிலங்கள் விற்பனை, உ.பி.யில் பொது விநியோக (ரேஷன்) பொருட்கள் கடத்தல், கோதாவரி படுகை பெட்ரோலிய உற்பத்தியில் அம்பானியின் வரிஏப்பு, ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கொள்முதல், மகாராஷ்டிராவில் சுற்றுலா வளர்ச்சித் தொழிலுக்கு பழங்குடி மக்களின் நில அபகரிப்பு ( லவாசா ஊழல்), ஆந்திரா – கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களின்  சுரங்கக் கொள்ளை; ஒரிசா, ஜார்கந்து, சட்டிஸ்கரில் வேதாந்தா, போஸ்கோ, மிட்டல், எஸ்ஸார், டாடாக்களின் இரும்பு, செம்பு, அலுமினியக் கனிமவளக் கொள்ளை, கடைசியாக நிலக்கரி ஒதுக்கீடு எனத் தொடர்ந்து பல ஊழல், அதிகார முறைகேடுகள் – இவை வெளியில் தெரிந்தவை. இன்னும் வெளிவராதவை, இதெல்லாம் இயல்பானவை, தவிர்க்கமுடியாதவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை, அமுக்கப்பட்டவை ஏராளம்.

இவற்றுள்ளும், ஆட்சியாளர்களுக்கு எதிராக வீசப்படும் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பிவிட காங்கிரசும், அரசியல் ஆதாயம் கருதி பா.ஜ.க., ஜெயா-சு.சாமி அடங்கிய எதிர்த்தரப்பும், அரசியல் கும்பல் தகராறு காரணமாக மாறன் சகோதரர்களும், டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதற்காகப் பத்திரிகைகளும், வானொளி அலைவரிசைகளும், வீழ்ந்துவிட்ட நம்பகத்தன்மையைத் தூக்கி நிறுத்திக் கொள்வதற்காக  சி.பி.ஐ.யும் உச்ச நீதிமன்றமும் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் அக்கறையும் ஆர்வமும் காட்டின. மற்ற விவகாரங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

இதற்கிடையே ஊழலுக்கு எதிராக மக்களிடம், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவிய பொதுக்கருத்தை – மனநிலையைப்  பயன்படுத்திக் கொள்ள அன்னாஹசாரே, கேஜரிவால், கிரண்பேடி, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் மூலமாக பா.ஜ.க. ஆகியோர் களத்தில் குதித்தனர். குறிப்பான ஊழல், அதிகார முறைகேடு விவகாரங்களை எல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு, பொத்தாம் பொதுவான ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜன லோக்பால்” கோரிக்கையை முன்வைத்து, அறவழி அடையாளப் போராட்டங்களை நடத்தினர். அரசியல் சாணக்கியம் – சகுனித்தனத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசு கும்பல் இவர்களை எளிதில் முடக்கியது. பிறகு இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளோடு பின்னிப் பிணைந்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையின் இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை முன்தள்ளும் குறிக்கோளை எளிதில் சாதித்து விட்டது.

அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பலமும் நம்பகத்தன்மையுமே கட்சி சார்பற்ற அல்லது அரசியலற்றவாதம்தான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான ஒரு பகுதி ஆதரவை அதனால் ஈர்க்க முடிந்தது. ஆனால், அந்த இயக்கம் பிளவுபட்டு அன்னா, ராம்தேவ் தலைமையிலான ஒரு பிரிவு பா.ஜ.க.வுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. கேஜரிவால் தலைமையிலான மற்றொரு பிரிவு தனியொரு ஓட்டுக் கட்சி அரசியல் அமைப்பாக அவதாரமெடுத்தது. இது ஆளும் கும்பலுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

கேஜரிவால் தலைமையிலான பிரிவு தனியொரு அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளதால், காங்கிரசு, பா.ஜ.க., உட்பட தற்போதுள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும் எதிரான ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்தி, ஆதரவைத் திரட்ட முயல்கிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், வீரபத்திர சிங், தேசியவாத காங்கிரசுத் தலைவர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித்பவார், பா.ஜ.கட்சியின் தலைவர் நிதின் கட்கரி முதலானோரின் ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் சிலவற்றை அம்பலமாக்கியது. இதனால் மீண்டும் ஊழல் செதிகள் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஊழல் எதிர்ப்பு மனநிலை மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடேயே வேகம் பிடித்துள்ளது. இதை ஆதாயமாக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஒரு கருவியாகக் கொண்டு காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அணிகளுக்கு மாற்றுச் சக்தியாக அரசியல் அணியை நிறுவுவதற்கான திசையில் காகளை நகர்த்துகிறார்கள். இதற்காக, நாடு முழுவதுமுள்ள தன்னார்வக் குழுக்கள், அரசியலற்ற ஆர்வலர்கள், விளிம்புநிலை அடையாள அரசியல் குழுக்கள் போன்ற சக்திகளை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க முயல்கிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியாளர்கள் அனைவரும் மெத்தப்படித்த அறிவுஜீவிகள்தாம். ஆனாலும் ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள். ‘அரசு அதிகாரம் – அதை வைத்து தனிமனிதர் அல்லது ஒரு கும்பல் ஆதாயம் தேடிக்கொள்ளும் வெறிதான் ஊழலின் ஊற்றுக்கண்; அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழலினால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று இந்த அறிவுஜீவிகள் அனைவரும் வாதிட, பாமர மக்களும் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

ஆனால், இக்கருத்தில் பாதி உண்மைதான் உள்ளது. அரசு அதிகாரத்துக்கு வெளியில் இருந்தாலும், செல்வ – மூலதன ஆதிக்கம் பெற்றிருப்பவர்கள் அதிகாரத்தை விலைக்கு வாங்க முடியும்; அதை வைத்துக் கொண்டு தனிமனித அல்லது கும்பல் ஆதாயத்தைக் குவித்து கொள்ள முடியும். இப்படிச் செய்வது ஊழலின் மறுபாதி – இன்னொரு வடிவம். தனிநபர் ஆதாயம் அல்லது ஒரு கும்பலின் ( இதன் அதிநவீன வடிவம்தான் கார்ப்பரேட் கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) இலாபவெறியை அடிப்படையாகக் கொண்டதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை. இதையும், இதன் விளைவான தனியார் அல்லது கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) கொள்ளை, இலாபவெறியையும் ஊழலையும் தனியே பிரிக்க முடியாது. இதனால்தான் இப்போது ஊழல் 2 இலட்சம் கோடி, 10 இலட்சம் கோடி என்று பிரம்மாண்ட உச்சநிலைக்குப் போகிறது. அரசும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அறிவித்துக் கொண்ட இப்புதிய தாராளவாதக் கொள்கைக்கு மாறாக, 2-ஜி விவகாரத்தை மட்டும் முன்தள்ளிக் கொண்டு போனதால் நாட்டு வளங்களைக் கொள்ளையடிப்பதில் எப்படிப் பங்குப் போட்டுக் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அரசும், அரசியல் கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் அவர்களோடு உச்ச நீதிமன்றமும் மீளமுடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன.

‘அரசு அதிகாரத்தைப் பரவலாக்கி மக்களிடம் ஒப்படைக்கும் பஞ்சாயத்து ஆட்சிமுறை வேண்டும்; பொருளாதாரத்தின் உந்துசக்தியாக இலாபநோக்கு மட்டும் இருக்கக் கூடாது; பொருளாதார வளர்ச்சியின் இலக்கு கடைசி மனிதனின் தேவையை நிறைவு செயும் சமத்துவமாக இருக்க வேண்டும்’ என்று “ஊழலுக்கு எதிரான  இந்தியா’’வின் அறிவுஜீவிகள் அறிவித்திருக்கிறார்கள். காந்தி – நேரு – காங்கிரசு எதைச் சோல்லிக் கொண்டு இவ்வளவு காலமும் ஊழல் இந்தியாவைப் பெற்றெடுத்து வளர்த்துள்ளார்களோ, மீண்டும் அங்கிருந்து அதேவழியில் தொடங்கச் சொல்கிறார்கள்.  இது, பாமரர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அறிவுஜீவிகளான இவர்களுக்குத் தெரியாதா  – மக்கள் சர்வாதிகாரமும், அதன்கீழ் தொடர்ந்து நீடித்த உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டமும்தான் எல்லா ஊழல்கள், அதிகார முறைகேடுகளுக்கும் முடிவுகட்டும் என்ற உண்மை!

___________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________________

வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடர் மீது மோசடி வழக்கு!

9

மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் ராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

– வினவு

__________________________

சோதிடம், ஜாதகம், ராசி பலன், பெயர் ராசி, எண் கணிதம், வாஸ்து, கைரேகை, மச்ச பலன், அங்க லட்சணம், யோனி பொருத்தம், நாடி சோதிடம்…. என்று ஒரு நூறு மடத்தனங்களும் ஆரியக் கலாச்சாரத்திலிருந்து வந்த, இந்து மத மூடத்தடனங்களாகும்.

இந்த முட்டாள்தனங்களை ”ஐதீகம்” என்று சொல்லி நீண்ட காலமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொழிலாகச் செய்து கொண்டிருந்தார்கள். மூலதனம் தேவையில்லாத இந்த மோசடித் தொழிலுக்கு மூடர்களே வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

ஆனால், அந்த மோசடித் தொழில் இன்றைக்குத் தமிழர்களிடமும் வேகமாகப் பரவி விட்டது. பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் என்று மொத்த ஊடகங்களிலும், முற்றிலும் உண்மை போல் பிரச்சாரம் செய்யப்பட்டு, இன்றைய சமூகத்தில், முதன்மை பெற்ற பெரிய தொழிலாக இந்தச் சமூக விரோத மோசடி உச்சாணிக்குப் போயிருக்கிறது.

தினசரி ரூ. 5000-10000 வாடகை கொடுத்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, சோதிடம் – வாஸ்து என்று சொல்லி விளம்பரம் போட்டு மிகப்பெரிய மோசடியைப் பகிரங்கமாகச் செய்யும் அளவுக்கு இந்தத் ”தொழில்” நடக்கிறது!

விபச்சாரம்; கள்ள நோட்டு, கரன்சி இரட்டிப்பு, லஞ்சம் போன்ற சமூக விரோதக் கேடுகளைத் தேடிப் பிடிக்கும் காவல்துறையால், எல்லாவற்றுக்கும் மேலான இந்த ஏமாற்று – மோசடிக்காரர்களைத் தடுக்க முடியவில்லை! காரணம் அதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான்!

”இந்த ஆட்சி பெரியார் ஆட்சி; நான் பெரியார் குருகுல மாணவன்” என்று கொல்லிக் கொள்பவர்கள் ”மந்திரத்தில்” வந்த மோதிரத்தை மாட்டிக் கொண்டு படு மண்டூகங்களாகத் திரிகிறார்கள்! ”பகுத்தறிவு ஆட்சி” என்று சொல்லிக் கொண்டவர்களே இப்படி அரைஞாண் கயிற்றில் தாயத்து கட்டிக் கொண்டிருப்பர்களாகி விட்டதால், தந்தை பெரியார் சொன்ன ”மானமும் அறிவும்” இல்லாத தமிழர்களே பல்கிப் பெருகி வருகிறார்கள்! இதன் காரணமாகத்தான் பார்ப்பான்களின் ஆதிக்கத் தொழிலான சோதிடம்; வாஸ்து என்கிற பச்சை ஏமாற்று மோசடியும் வானளாவ வளர்ந்து கொண்டிருக்கிறது!

2 ஆண்டு 3 ஆண்டுகளென்று தண்டனை பெற்று, சிறைச்சாலையில் இருக்க வேண்டியவனெல்லாம் ”சோதிடக் கலாநிதி,” ”வாஸ்து பூஷணம்” என்ற பட்டப் பெயர்களோடு, புலிநகம் மைனர் செயின் போட்டு, சந்தனம் – ஜவ்வாது பூசிக் கொண்டு மோசடித் தொழிலைப் பட்டப்பகல் கன்னக்கோல் கொள்ளையாக, ஒரு பயமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்! ”சுயநலம்” ஒன்றைத் தவிர, மற்ற எதுவும் தங்கள் வேலையல்ல என்று நடந்து வரும் ஆட்சியாளர் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோயில் என்பது இன்றைய நாகை மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற ஒரு கோயில் ஊராகும்.

முற்காலத்தில் இது தேவதாசிகள் நிறைந்த ஊராக இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் தேவதாசிகள் முறையை ஒழித்த பொட்டறுப்புச் சட்டம் வந்த பிறகு, இங்கே தேவதாசிகள் இல்லை!

ஆனாலும் கோயில் உள்ள ஊர்களில் மாட வீதிகளைச் சுற்றி நடக்கும் எல்லா வகையான சமூகக் குற்றங்களும் இந்த ஊரிலும் இன்று வரையில் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இந்த ஊரிலுள்ள ஈஸ்வரன் கோயிலைத் தரிசனம் செய்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்பது பார்ப்பனர்களின் தொழில் பிரச்சாரமாகும். ஆனாலும் இந்த ஊரிலும் ஏராளமான நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

இந்த ஊருக்குப் போனால் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்ற நிலை இருப்பதால், பக்தி வேஷம் போட்டுக் கொண்டு இங்கே ஏராளமானவர்கள் வந்து குவிகிறார்கள்!

வார விடுமுறை நாட்களிலும், மற்ற அரசு விடுமுறைக் காலங்களிலும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் என்று மேல் தட்டிலுள்ள ஏராளமான பேர் இங்கே வந்து தங்குகிறார்கள்!

இந்த பக்தி – பகல் வேஷ – சமூகக் குற்றவாளிகளை சுலபத்தில் ஏமாற்றலாம் என்று உணர்ந்த சிலர், சில காலமாக ”நாடி சோதிடம்” என்று ஒரு மோசடித் தொழிலை இங்கே ஆரம்பித்தார்கள்! ”நாடி சோதிடம்” என்றால் முக்காலப் பலனும் சொல்லும் சோதிடமாம்! அதாவது கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலப் பலன்களையும் ஓலைச் சுவடியில் அறிந்து சொல்லுவார்களாம்!

இந்த நாட்டிலுள்ள 120 கோடி மக்களின் முக்காலப் பலாபலன்களையும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பிரும்ம தேவன் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து விட்டார் என்றும்; இப்போது ஒரு ஆள் தனது பெயர், கைரேகை, அங்க – மச்ச அடையாளங்களை நாடி சோதிடரிடம் சொன்னால், அவர் தம்மிடமுள்ள அந்த ஓலைச் சுவடிகளில் அந்த ஆளுடைய சுவடியை எடுத்து வந்து படிப்பாரம்! அதிலே அந்த ஆளின் முக்காலப் பலன்களும் இருக்குமாம்!

இந்த ஓலைச் சுவடி படிக்கும் நாடி சோதிடனுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் உண்டு! கட்டணத்தை முதலிலேயே கட்டினால்தான், ஓலைச் சுவடியையே எடுத்து வருவார்கள்!

இந்த மாபெரும் மோசடியை நம்பி வெளியூர்களிலிருந்து வரும் பேராசைக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரங்களை இழந்து போகிறார்கள். நாடி சோதிடம் பொய் என்பதை அவர்கள் உணர்ந்த போதும், தவறான காரியத்துக்காக வந்த இடத்தில், தப்பான சோதிடக்காரனிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த உண்மையை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஊமையாகிப் போய்விடுவது நடைமுறை!

இந்த நிலையில் சீர்காழி, நாடாளன் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வாலிபர் வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் பார்க்க விரும்பினார். இவர் பெரியார் இயக்க வாதியோ, மதநம்பிக்கையற்றவரோ அல்ல – சராசரி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, ”இந்து” என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் தமிழர்!

வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போன சீர்காழி – கோபாலகிருஷ்ணன், அங்கே மில்லடித் தெருவில் சிவகாமி என்பவரால் நடத்தப்படும் ”அகஸ்தியமகா சிவ நாடி சோதிய நிலையம்” என்ற பிரபலமான நாடி சோதிடக்காரரிடம் போயிருக்கிறார்.

நாடி சோதிடர் முன் கூட்டியே ரூ.2000 வாங்கிக்கொண்டு, கோபாலகிருஷ்ணன் கட்டை விரல்ரேகை, அப்பா பெயர், அங்க மச்ச அடையாளம், சொந்த ஊர் என்று எல்லா விவரங்களையும் கேட்டுக் எழுதிக் கொண்டு, அதன்படி உள்ளே போய் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து வந்து, ”இது தான் பிரும்ம தேவனால் உமக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடி” என்று படித்துக் காட்டியிருக்கிறார்!

அதில், முழுக்கமுழுக்கப் பொய் – புளுகாகக் காலபலன்களைப் படித்திருக்கிறார்!

”கோபாலகிருஷ்ணன் திருமணம் ஆனவர் என்றும்; மனைவி ஸ்ரீதேவி போன்றவள் என்றும், பட்டப்படிப்புப் படித்து, மின்சாரத் துறையில் பொறியாளர் வேலை பார்ப்பவர் என்றும், கார் மற்றும் மோட்டார் வாகனங்கள் உள்ளவர் என்றும், எதிர்காலத்தில் தலைமைப் பொறியாளர் ஆவார் என்றும், அவரது தாயார் இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்றும் இஷ்டத்துக்கு ஏராளமாகப் புளுகியிருக்கிறார், மோசக்கார நாடி சோதிடர்!

நாடி சோதிடர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட உண்மையில்லை – எல்லாமே பொய் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன், பதட்டப்படாமல் சோதிடர் சொன்னவைகள் அத்தனையையும் ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டதோடு, ஒலி நாடாவிலும் பதிவு செய்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் கோபாலகிருஷ்ணன் பட்டதாரியல்ல ஒரு விவசாயி, திருமணம் ஆகாதவர். அவரிடம் காரோ, வேறு வாகனங்களோ இல்லை; அவரது தாயார் நல்ல திடகாத்திரமாக உயிருடன் இருக்கிறார்!

இந்த நிலையில் தன்னிடம் பச்சைப் பொய்யைச் சொல்லி ரூ.2000 ம் மோசடியாகப் பறித்துக் கொண்ட நாடி சோதிடரின் சுயரூபத்தை அறிய கோபாலகிருஷ்ணன் மேலும் ஒரு ஆதாரத்தைத் தேடினார்.

2003-ஆம் ஆண்டிலேயே, இளம் வயதில் அகால மரணமடைந்த தனது நண்பர் செங்குட்டுவன் என்பவரின் கைரேகையை எடுத்து வந்து, இதற்கும் முக்காலப் பலன் சொல்லும்படி நாடி சோதிடரைக் கேட்டிருக்கிறார்.

நாடி சோதிடரும் வழக்கம் போல் எல்லா விவரங்களையும் கேட்டறிந்து, நண்பரின் ஓலைச்சுவடியை எடுத்து வந்து படித்துக் காட்டியிருக்கிறார்.

ஜாதகர் – செங்குட்டுவன் தீர்க்காயுளாக 75 வயதுக்கு மேல் நீடுவாழ்வார் என்றும், ஏராளமான குழந்தைச் செல்வமும், ஏனைய செல்வ வளமும் கொண்டு நிறை வாழ்வு வாழ்வார் என்றும், பிரும்ம தேவனின் ஓலைச்சுவடி சொல்லுகிறது என்றும் நாடி சோதிடர் சொல்லியிருக்கிறார்!

கோபாலகிருஷ்ணன் அதையே ஒரு காகிதத்தில் எழுதித்தரும்படி வாங்கிக் கொண்டு, ஓலைச்சுவடியையும் சிறிய கேமராவில் படம் பிடித்துக் கொண்டு, நாடி சோதிடரிடம் கூச்சல் போட்டிருக்கிறார்!

”நீர் சொன்ன சோதிடம் எதுவுமே உண்மையாக இல்லை; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்; நாடி சோதிடம் – ஓலைச் சுவடி – பிரும்மா எழுதியது என்பது எல்லாமே பொய்…… மோசடி” என்று கூச்சல் போட, சோதிடர் சிவசாமி கோபாலகிருஷ்ணனையே மிரட்டியிருக்கிறார்!

”நான் யார் தெரியுமா? காலம் காலமாக சோதிடம் பார்ப்பவன்; அரசாங்க மேலிடமே எங்கள் உறவுக்காரர்கள்தான்! என்னை எதுவும் செய்ய முடியாது! மரியாதையாக நீர் போகா விட்டால் போலீசைக் கூப்பிட்டு உம்மை ஒப்படைப்பேன்” – என்று பணத்திமிர் ஆணவத்தோடு மிரட்டிப் பேசியிருக்கிறார்! உடனே கோபாலகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கூறியிருக்கிறார். அவர்களோ –

”….விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீரே! அவர்கள் மேலிட செல்வாக்கு உள்ளவர்கள்! பேசாமல் ஊர் போய் சேரும். இல்லா விட்டால் அவர்களிடம் கலாட்டா செய்ததாக உம்மைப் பிடித்து உள்ளே போடச் சொல்லுவார்கள்; நாங்களும் அவர்கள் சொன்னபடியே உம்மைப் பிடிக்க வேண்டியது வரும் – அதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்குப் போய்விடும்” என்று எச்சரித்திருக்கிறார்கள்!

சோதிடக்காரரால் ஏமாற்றி மோசடி செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், தன்னைப் போல் பலரும் ஏமாற்றப்படக் கூடாது – அதைத் தடுக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நேராக வழக்கறிஞரைத் தேடிப் போயிருக்கிறார்.

பெரியார் இயக்கச் சிந்தனையாளர்களான வழக்கறிஞர்கள் வேலு குபேந்திரன், சீர்காழி சோமசுந்தரம் உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்த முன் வந்துள்ளார்கள்.

கோபாலகிருஷ்ணன் நாடிசோதிடர் மீது வழக்குப் போட்டிருக்கிறார் என்ற செய்தி, வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மோசடி சோதிடர்களைப் பதட்டமடையச் செய்துள்ளது.

மோசடியில் சம்பாதித்த ஏராளமான பணமும், ஆட்சி மேலிட ஆதரவும், அடியாட்கள் பலமும் இருப்பதால் அவர்கள் கோபாலகிருஷ்ணனையும், வழக்கறிஞர்களையும் நேரடியாகவே மிரட்டியிருக்கிறார்கள்; இது பற்றிய புகார் சீர்காழி காவல்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட போது, அவர்கள் முழுப்பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த நாடி சோதிடம் மீதான வழக்கில் பெரியார் இயக்க – முற்போக்குச் சிந்தனையுள்ள மொத்தப் பொதுநலத் தொண்டர்களும் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாகத் திரண்டு, வழக்கைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோபால கிருஷ்ணனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மனுவில் –

”புராதன காலத்தில் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் என்று பொய் சொல்லி, போலியாக இவர்களால் தயாரிக்கப்பட்ட பனை ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளைக் காட்டி, எனக்கு நாடி ஜோதிடம் பார்த்துச் சொல்லுவதாக பொய்யையும், புளுகையும் சொல்லி, பரிகாரம் தேடாவிட்டால் பல சங்கடங்கள் வரும் என்று என்னை மிரட்டி பல ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டார்கள்.”

எனவே உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்டிரேட் – நீலாவதி, நாடி சோதிடர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

நாடி சோதிடர்களின் இந்த ஓலைச் சுவடிக்கு மூலாதாரம், தெலுங்கு நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தெலுங்கு மொழி ஓலைச்சுவடி தான் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்!

மற்றபடி இந்தச் சோதிட மோசடிகளை ஒழிக்க இப்போதைய அரசாங்கம் சட்டம் போடும் என்று நம்புவதற்கில்லை! எனவே சீர்காழி கோபால கிருஷ்ணனைப் போல, தமிழ்நாட்டில் பரவலாக 100 இடங்களிலாவது, சமூக விரோத மோசடி சோதிடர்கள் மீது, சில கிரிமினல் வழக்குகளைத் தொடுத்தாக வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் திரு. கோபாலகிருஷ்ணனைப் போல துணிந்து முன்வந்து, இந்த சமூக சேவையைச் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பெரியார் இயக்க உண்மைத் தோழர்களும், முற்போக்குச் சிந்தையுள்ள பொதுவுடைமைக் கருத்தாளர்களும் நிச்சயம் துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

சோதிடப் புரட்டை – பொய்யை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, அதனை அழித்தொழிக்க அரிமா நோக்குடன் ஆர்த்தெழுந்துள்ள சீர்காழி கோபால கிருஷ்ணனை வாழ்த்திப் பாராட்டுகிறோம்; வெல்லுக, அவரது சுயமரியாதை ஆவேசம்!

________________________________________________________

– நாத்திகம் இராமசாமி, நாத்திகம் – 30.03.2007 இதழில்

__________________________________________________

தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

48

கூமாபட்டி-வத்திராயிருப்பு பகுதிகளில் தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

 ஆனந்தன்
வண்டியில் இருப்பவர் ஆனந்தன்

பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் ஆட்சி வந்து விட்டால் போலீசுக்குக் கொண்டாட்டம் தான். ஜெயலலிதாவின் ஆட்சி போலீசின் ஆட்சி. அதுபோலவே ‘அவாளுடைய’ ஆட்சியும் கூட. பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி ‘அவாளின்’ அனைத்து தரப்புக்கும் ஒரு நமுட்டு மகிழ்ச்சிதான். அத்தோடு இப்போது முக்குலத்தோர் சாதி வெறியாட்டமும் சேர்ந்து கொண்டு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடிய தலித் விவசாயி கூமாபட்டி ராமசாமியாபுரம் ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 11ந்தேதி அதற்காகத் தீக்குளித்து இறந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய அவரது குடும்பத்தார் மற்றும் அந்த ஊர் மக்களை அனுமதிக்காமல் காட்டு மிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டிவிட்டு உடலை போலீசே சிதையில் வைத்து தீ முட்டியது. இறுதி அஞ்சலிக்குச் சென்றிருந்த மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மீதும் தடிகொண்டு தாக்கிய டி.எஸ்.பி.சக்திவேல், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் மீது உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதற்குள் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது வத்திராயிருப்பு-கூமாபட்டி போலீசு. கூமாபட்டியை அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆனந்தன். வயது 24. தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில். கடந்த 13/05/12 அன்று கான்சாபுரத்துக்கு தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்த போது நடைபெற்ற தகராறில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆனந்தன். அவர் மீது காவல்துறை குண்டாஸ் வழக்குப் போட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக் குழுவின் முன்பாக நிருபிக்க முடியாமல் தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் துடிப்பாகச் செயல்படும் ஆனந்தனின் கொட்டத்தை அடக்க போலீசு துடித்தது. ஆனந்தனைக் கண்ட இடத்தில் கைது செய்யத் தீர்மானித்து கொலை வெறியுடன் அலைந்தது கூமாபட்டி முக்குலத்து சாதிவெறி போலீசு படை.

கடந்த 14/11/2012 அன்று குடும்பத்தினருடன் அவரது வீட்டிலிருந்த ஆனந்தனை இருபது பேர் கொண்ட போலீசு படை வந்து திடீரென கைது செய்து கூமாபட்டி காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றது. மறுநாள் 15-ம் தேதி இரவு ஆனந்தனின் பெற்றோரை அழைத்து “உன் மகன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில இருக்கான் போய் பார்த்துக்க” என்று கூமாபட்டி போலீசு ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையச் செயலாளருக்கு கூமாபட்டி வழக்கறிஞர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது. ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஆனந்தன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் கொலையுயிருமாக தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனந்தன் நம்மிடம் சொன்னது:

“நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை. எனது இரண்டு சிறுநீரகங்களும் சிதைந்து சிறுநீர் ரத்தமாக வெளியேறுகிறது. அடிவயிற்றில் உதைத்ததில் ஆசனவாய் வழியாகவும் ரத்தம் வெளியேறுகிறது.”

பின்னர் ஆனந்தன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 3 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்தது. உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு நிற்கவில்லை. பாதுகாப்பில் இருந்த போலீசு ஆனந்தனைச் சந்தித்துப் பேச யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனந்தனின் உடம்பு முழுவதும் காயம் உள்ளது. லத்தி, இரும்புத்தடி கொண்டு தாக்கிய காயங்கள் உள்ளன. ஆனால் எலும்பு முறிவு இல்லை. கொடுங்காயம் விளைவிக்காமல் கொஞ்ச நாள் அவகாசத்தில் சாவை நோக்கித் தள்ளும் கொலைக்கலையை தமிழக போலீசிடம் உலகமே கற்றுக் கொள்ள வேண்டும். அடிபட்டவரை புகைப்படம் எடுக்க காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.

கூமாபட்டி எஸ்.ஐ.சந்திரசேகரன், கருப்பசாமி பாண்டியன், ஏட்டுக்கள் முரளி, பெரியசாமி ஆகியோர் தான் சாதி வெறி கொண்டு கீழ்த்தரமாகத் திட்டி மிருகத்தனமாக அடித்தவர்கள் என்று பதிவு செய்தார் ஆனந்தன். 17ந் தேதி மாலை 5.30 மணியளவில் ஸ்ரீவிலிபுத்துர்ர், மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போன போது ஆனந்தன் தனக்கு நேர்ந்த  கொடுமைகளை விளக்கியிருக்கிறார். மாஜிஸ்டிரேட் ஒரு பெண். அவர்தான் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்லியிருக்கிறார்.

ஆனந்தனின் அப்பா ரெங்கநாதன் விவசாயி. அம்மா மலர்விழி பி.காம். டி.கோ ஆப் பட்டதாரி. சகோதரர் ராஜேஷ், கூமாபட்டி போலீசின் கொலை வெறிக்குப் பயந்து சென்னைக்குப் போய்விட்டார்.

ஆனந்தன் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு கண்ட நேரங்களில் வந்து அவரது பெற்றோரை மிரட்டி வந்துள்ளது போலீசு. போலீசின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பயந்து தலைமறைவாயிருந்த ஆனந்தனை ஒப்படைக்கக் கோரி போலீசு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனந்தனின் அம்மா மலர்விழியைச் சந்தித்து கேட்ட போது கூமாபட்டி போலீசு அவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை வேதனையுடன் விவரித்தார்.

“என்னுடைய மகன் ஆனந்தன் தென்னை ஏறும் தொழில் செய்து வந்தான். பொதுப் பிரச்சனைகளில் தலையிடுவான். போலீசு செய்யும் சட்ட விரோத செயல்களைத் தட்டிக் கேட்பான். போலீசுக்கு பயப்படமாட்டான். எதிர்த்து நிற்பான். அவன் மேல நிறைய பொய் கேசுகளை போட்டு எங்களை வந்து அடிக்கடி தொல்லை பண்ணினாங்க. என்மேல கூட போலீசு ஒரு பொய் கேச போட்டுச்சு. ஒரு பொம்பளையாளுகிட்ட நான் செல்போன் கேட்டதாகவும், அந்தம்மா தராமாட்டேன்னு சொன்ன உடனே அந்தம்மாவை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சி பண்ணதாகவும் பொய்கேசு போட்டு உள்ள அடச்சாங்க. நான் ஜாமீன்ல வெளியே வந்தேன். இப்பவும் என்மேல கேசு இருக்குது. போலீசு தொல்லை கொடுக்கிறதப்பத்தி டி.எஸ்.பி. கிட்ட புகார் கொடுத்ததுக்கு கூமாபட்டி எஸ்.ஐ. என்னை சாதியச் சொல்லி கேவலமாக திட்டி “உனக்கு ரெண்டு பிள்ளைகள்ல ஒன்று இல்லன்னு நினைச்சுக்கோ. என்றைக்காயிருந்தாலும் அவனுக்கு என்கையால தான் சாவு. தியாகம் செய்யிறதுக்குன்னு பிள்ளை பெத்து விட்டிருக்கியா? தேவடியாப்பிள்ளையை பெத்து விட்டிருக்க” என்று கேவலமாகப் பேசினார்.”

” 2010-ல் ஊர்த்திருவிழாவின் போது கண்ணையா எஸ்.ஐ. வண்டிய (பைக்) அன்பழகன் என்கிற பையன் தீ வச்சுட்டான். அவனப் புடிச்சி ஊர்க்காரங்க ரு.10 ஆயிரம் தெண்டம் வாங்கி எஸ்.ஐ க்கு கொடுத்துட்டாங்க. ஆனா அந்த கேச என் மகன் ஆனந்தன் மேல போட்டுட்டாங்க. தீபாவளியப்ப ஆனந்தனை எப்படியாவது பிடித்துவிடனுமுன்னு கங்கணம் கட்டி அலஞ்சது போலீசு. அதனால் அவனை நான் வெளியூருக்கு அனுப்பிவைச் சுட்டேன். தீபாவளி முடிஞ்சு மறுநாள் (14.11.12) அவன் வந்த உடனே பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று சொன்னார் மலர்விழி.

ஆனந்தனின் பெற்றோர்

ஆனந்தன் மீது என்ன புகார். என்ன வழக்கு என்கிற எந்த விவரமும் தெரிவிக்காமல் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போவதற்கு முன் ஆனந்தனின் மாமியாரிடம் மிரட்டி 2 வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கியிருக்கிறது கூமாபட்டி கிரிமினல் போலீசு. அதில் ஆனந்தன் குடித்துவிட்டு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாக புகார் எழுதிக் கொண்டது.

எதற்காக இந்த தாக்குதல். ஏன் இந்தக் கொடுமை? என்ன தவறு செய்தார் ஆனந்தன்?

மலர்விழியிடம் கேட்ட போது சொன்னார் : போலீசிடம் இருக்கும் சாதி வெறி தான் இதற்கு காரணம். கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு (தேவர் சாதி) மரியாதை என்னாவது? என்கிற வெறிதான்.

இதுதான் 2011 செப்டம்பர் 11-ல் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளன்று நடந்தது. அங்கேயும் போலீசில் பெரும்பான்மை முக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான். வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியிலும் அதே நிலைமை தான் என்று சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தன்மானமுள்ள ஒருவன் போலீசு கையில் சிக்கினால் அந்த ஏரியா முழுவதும் உள்ள சாதி வெறி கொண்ட போலீசு மிருகங்கள் அங்கே அழைக்கப்படும். பெரிய அளவில் திட்டமிடப்பட்டால் உயர் அதிகாரிகள் கூட வருவார்கள். பரமக்குடி செந்தில்வேலன் எஸ்.பி. வந்ததைப் போல. தருமபுரி யிலிருந்து ஆஸ்ராகர்க் மதுரை தேவர் குருபூஜைக்கு அழைக்கப்பட்டதைப் போல. (அந்த நேரத்தில்தான் தருமபுரியில் தலித்களின் மீது வன்னியர்களின் கொலைவெறியாட்டம் நடைபெற்றது).

பிளவக்கல் மணல் கொள்ளைக்கு எதிராக உயிர்நீத்த தியாகி ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அனுமதி மறுத்த போலீசு, தேவர் குருபூஜை சம்பவத்தில் செத்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோரிப்பாளையம் தேவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பழிக்குப் பழியாக கொன்றொழிப்போம் என்று பகிரங்கமாக கொக்கரிக்கவும் அனுமதித்தது.

80களில் விருதுநகர் மாவட்டம் சேத்துர்ர், சிவகிரி, வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் ராயப்பன், கணபதி போன்ற நக்சல்பாரி தோழர்களால் சிவந்திருந்தது. அது மீண்டும் சிவந்து விடாமலிருக்க போலீசு இந்த வெறியாட்டம் போடுகிறது என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. அத்துடன் போலீசுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க சாதி வெறி-குறிப்பாக முக்குலத்து சாதி வெறியும் ஒரு காரணம். இது ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய பரிணாமம்.
________________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை
________________________________________________________________

மண்ணிற் சிறந்த மலர்கள்!

14

பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்!
அனுபவமும் – அரசியலும்!!

மச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.

இத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.

000

rsyf-women-cardes-1! ஊன்னா… சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க…! ஒழுங்கா அவனவன் பேசாம போவல!  ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க” என்பது அஜிதா எனும் பெண் தோழரின் அனுபவம். தன்னைப் போல அடிமையாக இருப்பதே இயல்பு என்று எண்ணும் போலீசுக்கு பு.மா.இ.மு வின் பெண்கள் மேல் கோபம் வந்தது இயல்புதான். ஆனால் ‘பேசாம போகிறவர்கள்’ மீது போலீசு கொண்டிருப்பது மதிப்பா அவமதிப்பா என்பதை அத்தகையவர்கள்தான் யோசித்துப் பார்க்கவேண்டும்.

“ஏ.சி. சீனிவாசன், எஸ்.ஐ. கோபிநாத் ரெண்டுபேரும் எங்கள வேனில் தள்ளியபடியே கை நசுங்கும்படி கதைவைச் சாத்தி, ‘தேவடியா முண்டைங்களா சாவுங்கடி’ என்று திட்டியபடியே இருந்தார்கள்” என்பது இன்னொரு மாணவியின் அனுபவம். போராடினாலே போலீசுக்குப் பிடிக்காது; அதுவும் பெண்கள் போராடினால் ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும் சேர்ந்து கொள்கிறது. கைது செய்யத்தான் சட்டமிருக்கிறது; போராடும் பெண்களைக் காலித்தனமாகப் பேச போலீசுக்கு யார் உரிமை கொடுத்தது? சட்டமெல்லாம் இளிச்சவாய் குடிமக்களுக்குத்தான். போலீசுக்கு அது கெட்டவார்த்தை என்பதுதான் ஏ.சி. முதல் ஏட்டு வரை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

அடிப்பது மட்டுமல்ல, வசவுகளால் பெண்களைக் கூச வைப்பதும் போலீசின் தாக்குதலில் ஒன்று. “ஏண்டி போராட வர்றீங்க? ரோட்டுக்கு வந்து போராடுற நீங்கள்லாம் நல்ல குடும்பத்த சேர்ந்தவங்களா?” இது இன்னொரு போலீசின் வசனம் என்கிறார் தோழர் வினிதா. விலைவாசி உயர்வும், கடுமையான பொருளாதார நெருக்கடியும் வீட்டிலிருக்கும் பெண்களை வேலைக்காக ரோட்டில் தள்ளிக் கொண்டிருக்கும் சூழலில், உரிமைகளுக்காகப் பெண் ரோட்டுக்கு வந்தால் மட்டும் ‘குடும்பமே’ சந்தேகத்துக்குரியதாம்! இதை ரோடு மேயும் போலீசு சொல்வதுதான் நகைச்சுவை.

“நான் அமைப்புக்குப் புதுசு.. போலீசு துணியப் புடிச்சு இழுத்து, கேவலமா திட்டி அடிச்சப்பவும்,  நாம என்ன தப்பு செஞ்சோம், நியாயத்துக்காகத்தானே போராடுறோம்னுதான் தோணிச்சி. போலீச திருப்பியும் அடிச்சேன்…” இது 17 வயதான பிரியங்கா எனும் பெண் தோழரின் நியாயம். இது மட்டுமல்ல, தோழர்களோட சேர்ந்து ஜெயில்ல இருக்கணும்னு  தன் வயதை 22 என்று  கூட்டிச் சொல்லியிருக்கிறார்.  கம்யூனிசப் பண்பு எந்த அளவுக்கு தன்னலத்தை மறக்க வைக்கிறது என்பது பிரியங்காவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இந்த உயரிய மனிதப் பண்பை நான்கு சுவருக்குள் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று ஒழுக்கமாக வாழும் குடும்ப அமைப்பிலிருந்து கற்றுக்கொள்ள வழியுண்டா?

அடிவாங்கிய தோழர்களுக்கு தாங்கள் ஏன் தாக்கப்பட்டோம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் அவர்களை அடித்த போலீசின் நிலையைப் பாருங்கள். “ஒரு பொம்பள போலீசு எங்கள விடாம அடிச்சிட்டு,  கடைசில நாங்க ஆஸ்பத்திரியில இருக்குறப்ப, “ஆமா, நீங்க எதுக்கு போராடுனீங்க?” ன்னு கேட்டாங்க. எனக்கு கோபத்துக்கு பதில் சிரிப்புதான் வந்துச்சு” என்றார் ஒரு பெண். எதுக்கு அடிக்கிறோம் என்று தெரிந்து கொள்ளாமலேயே, மக்களை அடித்துத் துவைக்கும் இவர்களின் பெயர் சட்டம் ஒழுங்கின் காவலர்களாம்.  இப்பேர்ப்பட்ட ‘சட்டம் – ஒழுங்கை’ சீர்குலைக்காமல், பேர் வைத்து தாலாட்டவா முடியும்?

“என்னங்கடி! நீங்கள்லாம் ஸ்டூடண்டா! ரோட்ல அடிச்சாதான பார்ப்பாங்க! உள்ளாற ஸ்டேசன்ல ட்ரஸ்ஸெல்லாம் அவுத்துட்டு உன் ‘மாமன்’ விசாரிப்பான் உள்ளாற போங்கடி!” என்று ஒரு பெண் போலீசு, தங்களை ஸ்டேசனுக்குள் இழுத்துத் தள்ளியதாகச் சொல்கிறார் தோழர் கயல்விழி.  “ஏய் என்னடா? இவ்ளோ நேரம் அரஸ்ட் பண்றீங்க; தொடுற எடத்துல தொட்டா தானா ஏறுறாளுவ!” என்று மார்பைத் தொடுவது, இடுப்பைத் தொடுவது, ஷூ காலால் மிதிப்பது ஆண் போலீசின் அணுகுமுறை. போலீசுக்கேது ஆண்பால், பெண்பால்? அது ஒரு அரசு எந்திரம் என்று கோட்பாடாய் சொல்வது, நடைமுறையிலும்  நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

தடிக் கம்பினால் தோழர்களைத் தாக்கிய போலீசை வார்த்தைகளால் எதிர்கொண்ட பெண் தோழர்களின் துணிச்சல் கற்றுக்கொள்ளத் தக்கது. “நாலஞ்சு பெண் போலீசு, தொடர்ந்து திட்டியபடி  அடித்துக் கொண்டே இருந்தாங்க. அடிக்கும் போலீசின் சட்டையில் உள்ள பெயரைப் பார்த்து, “ஏய்! உன் பேரு மாரீஸ்வரிதான! உன்ன இன்னும் ரெண்டு நாள்ல நாங்க என்ன செய்யுறோம் பாரு! சட்டப்படியே உன்ன சந்திக்கு இழுக்கிறோம்” என்று பெண் தோழர்கள் எச்சரித்திருக்கின்றனர்.  உடனே எல்லா போலீசும் தத்தம் பேட்ஜை கழட்டி பாக்கெட்டில் போட்டவர்கள்தான்.  எல்லோரும் வெளியில் போகும்வரை யாரும் பாட்ஜைகுத்தவில்லை” பேட்ஜை கழட்டினால் என்ன, மாணவிகள் மனப்பாடமாக விலங்கியல் பெயர் போல ஒப்பிக்கிறார்கள். மாரீஸ்வரி, கல்பனா, தேவி, சுசீலா.. என்று.

“மரியாதையா பேசு! நாங்க மாணவிகள். வாடி போடின்னு பேசுன, வாங்கிக் கட்டிக்குவ. இதுக்குப் பயந்தெல்லாம் நாங்க போராட்டத்த விட மாட்டோம். நாங்க என்ன ஜெயலலிதா போல கொள்ள அடிச்சோமா?” பதிலுக்குப் பதில் அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துக் கேள்வி கேட்டுள்ளார் தோழர் துர்கா. நியாயத்தின் உறுதிபட்டு லத்திக்கம்பு வெலவெலத்திருக்கிறது.

“உங்க மேல எப்.ஐ.ஆர் போட்டாச்சு, இனி படிப்பே போச்சு. ஃபாரின்லாம் நீங்க போக முடியாது!” என்று ஏட்டு சுசீலா உளற, தோழர் அஜிதாவோ, “நாங்க படிச்சு ஃபாரின் போறது இருக்கட்டும். மொதல்ல நாங்க யூரின் போகணும். அதுக்கு விடுங்க!” என்று கேலி செய்திருக்கிறார்.

இன்னொரு போலீசு “ஏம்மா! படிச்ச, நல்ல குடும்பத்து பொண்ணுங்களா தெரியுறீங்க! போராடி இப்படி அடி வாங்குறீங்களே…” என புத்தி சார்ஜ் செய்ய, “ஏன், இது லத்தி சார்ஜ் பண்றப்ப உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கும் சேர்த்து தான் போராடுறோம். லட்சம் லட்சமா கொடுத்து உங்க புள்ளகள தனியார் கல்லூரில படிக்க வைக்க முடியுமா? ஐ.ஜி யோட புள்ளை படிக்குற படிப்ப ஏட்டு புள்ளை படிக்குமா?” என்று பெண் தோழர்கள் பதில் சொல்ல, உடனே ஏட்டு சுசீலா, “ஏய்! நான் விஜயசாந்தி படம் பார்த்து ப்ளஸ் டூ முடிச்சு காலேஜே போகாம போலீசு வேலைக்கு  வந்தேன்! உங்கள மாதிரி படிப்ப கெடுத்துக்கல! இங்க வந்தா… உங்களோட கழுத்தறுவுது, தலவலி” என்று புலம்பியுள்ளார். விஜயசாந்தி படத்துக்கு விசிலடித்த ஏட்டக்காவுக்கு பு.மா.இ.மு. தலைவலி ஆனதில் வியப்பில்லை.

என்னதான் தோழர்களைப் போட்டு அடித்தாலும், மேலதிகாரியிடம் முறையிட  முடியாத தனது பிரச்சினையை பெண் தோழர்களிடமே  முறையிட்டார் பெண் போலீசு ஜோதி லட்சுமி.  ”நின்னு, நின்னு காலு வீங்கி, உட்காந்து மோசன் கூட போக முடியல”. வேனில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும்போது, வேலைப் பிரச்சினை, லீவுப் பிரச்சினை என பெண் போலீசார்  வழிநெடுக  தங்கள் சொந்தப் பிரச்சினைகளையே புலம்பிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இவர்களிம் அடி வாங்கிய பெண் தோழர்களோ ஒரு இடத்தில் கூட தனது காயத்தைச் சொல்லிப் புலம்பவில்லை. கழுத்துப் பகுதியில் சதை பிய்ந்து போகும்வரை தாக்கப்பட்ட தோழர் வாணிஸ்ரீ “எங்கள அடிச்சபோது கூட எங்களுக்கு பெரிசா வலிக்கல. தோழர் மணி, கிருஷ்ணா, மருது தோழர்களை அடிச்சு ரத்தமா ஓடுறத பாத்து எங்களால கோபத்த அடக்கவே முடியல. போலீசை எதிர்த்து திட்டி கையால தள்ள ஆரம்பிச்சோம்” என்றார். மிகவும் இயல்பாக அவர்கள் வெளிப்படுத்திய அந்த உன்னதப் பண்புக்கு எதனை ஈடு சொல்ல முடியும்?

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் நியாயத்தை உணர்ந்தவர்களாலும் கூட போராட்டத் தெம்போடு எழ முடிகிறது என்பதற்கு ஒரு சாட்சி குமரேசன் என்ற தோழரின் தாய். வாணிஸ்ரீ யின் ஆடையைக்  கிழித்த போலீசின் மீது அவர் பாய்ந்து அறைந்துள்ளார். போலீசு அந்தத் தாயைக் கன்னத்தில் அறைந்து சாய்க்க, வலியைப் பொருட்படுத்தாத அந்தத் தாய், “ஏய்! உங்ககிட்ட துப்பாக்கி, கம்பு இருக்குறதுனாலதான இந்த ஆட்டம் போடுறீங்க. அந்தப் புள்ளைங்களும் இத எடுத்து வந்தா, எதிரே நிப்பீங்களாடா?” என ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசியுள்ளார்.  புரட்சியின் வழிமுறையைத் தம் அனுபவம் மூலமாகவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே, இத்தனை போராட்டங்கள்!

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு “ஏய்! நாம எவ்வளவோ ட்ரெயினிங் எடுத்து வந்துருக்கோம். ஆள பாத்தா எலும்பும், தோலுமா இருக்காளுவ. ஒருத்திய கூட நம்மளால தூக்கி ஏத்த முடியல!” என்று இரண்டு ஆண் போலீசார் புலம்பியுள்ளனர்.  கூலிப்படையால் கொள்கைப் படையை தூக்க முடியாதென்பது உண்மைதானே!

இன்னோரு போலீசு “ஏய்! ஆம்பளங்களை கூட ஈசியா வண்டில ஏத்திட்டோம். இந்த பொம்பளங்கள ஏத்தவே முடியல” என்று புலம்பியிருக்கிறது. போராடும் பெண்ணுக்கு தான் சமூகத்தில் ‘வெயிட்’ அதிகம் என்று போலீசுக்குப் புரிந்திருக்கும்  இந்த உண்மை வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு விளங்கினால் நல்லது.

போலீசின் அடியை விடவும், அறிவைப் பார்த்து தான் அஞ்ச வேண்டியிருக்கிறது, இளைஞர் திவாகரை கோயம்பேடு ஸ்டேசனில் வைத்து அடித்த ஒரு போலீசுக்காரன் “டேய்! நான் பாக்சிங்டா, பாக்சிங்டா!” என்று ஆக்சன் காட்டியிருக்கிறான். பாக்சிங் தெரிந்தால் போய் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பதக்கம் வாங்குவதை விட்டுவிட்டு, கைதானவரிடம் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” எனும் அறிவை என்னவென்பது!

போராட்டத்தின்போது போலீஸ்காரர்கள் தனது நான்கு வயது மகனை கையிலிருந்து பறித்துக் கொண்டு ஓட, அந்த சிறுவனோ போலீசு பிடிக்குள்ளிருந்து “போலீசு அராஜகம் ஒழிக!” என்று முழக்கமிட்டதை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து சொல்கிறார் தோழர் அபிராமி. தாக்குதல் நடந்த போலீசு நிலையத்தின் வாசலில்,  போலீசு பிடுங்கிப் போட்ட அமைப்புப் பதாகைகளையும், கொடிகளையும், இறைந்து கிடக்கும் தோழர்களது செருப்புகளையும் எடுத்துவர துணிச்சலுடனும், பொறுப்புடனும் சென்றிருக்கின்றனர் தோழர் அபிராமியும் உமாவும். ஸ்டேசனிலிருந்து போலீசு… “ இதெல்லாம் கேசுல இருக்கு. எடுக்க கூடாது” என்று நக்கலடிக்க, அபிராமியோ…” இதெல்லாம், எங்க தோழர்கள் உழச்சி சம்பாதிச்சு வாங்கினது, உன்னைப் போல ஓ.சி.ல உடம்பு வளர்க்குல,” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

“ஏய்! அதிகம் பேசாத, வாங்குனது பத்தாதா?” என்றவாறு அந்த போலீசுக்காரன் செருப்பைத் தள்ளிவிட “ச்சீ! எங்க தோழர்கள இத்தன அடி, அடிச்சீங்களே, ஒருத்தராவது ஓடுனோமா! பாத்தீல்ல.  சீ தள்ளு! எங்க தோழர்கள் செருப்ப தொடக்கூட உனக்கு யோக்கியதை இல்ல!” என்று சீறியிருக்கிறார்கள் அந்தத் தோழர்கள்.

அவர்களின் கைபட்டு செருப்புத் தோல் சிலிர்த்தது. போலீசின் தோலோ உணர்ச்சியற்று மரத்துக் கிடந்தது.

__________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
__________________________________________________________

கூவம் நதிக்கரையோரம்…..!

10

சென்னையில் இன்று எந்த ஆற்றைக் கடக்கும் போதும், நமது கை அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தி விடுகின்றது, அல்லது சுவாசிப்பை சில விநாடிகளுக்கு நிறுத்த முனைகிறோம். சில விநாடிகள் அங்கு நிற்க வேண்டுமானால் கூட பல முறை “உச்” கொட்டி நொந்து கொள்கிறோம். ஆனால் சென்னையை தமது உழைப்பால் உயர்த்திக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களும், சென்னையின் பூர்வ குடிகளும் அந்த ஆற்றங்கரைகளில் துர்நாற்றத்தின் மத்தியில் தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

ஃபில்டர் காபி, மைலாப்பூர், எல்ஐசி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், அதை படிக்கும் நடுத்தர வர்க்கம் சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.

சென்னை நகர வளர்ச்சியின் உண்மையான சாட்சியாக இருக்கும் மக்களை துர்நாற்றம் வீசும் ஆறுகளின் ஓரங்களில் நீங்கள் பார்க்கலாம். துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு சில நொடிகள் நிற்க முடிந்தால் அவர்கள் உலகத்தினுள் நாம் நுழைந்து விடலாம்.

கூவம்

சென்னையின் ஐடி வளர்ச்சியை சுட்டிக் காட்டும் டைடல் பார்க், பின்னால்  அதன் கழிவுகள் கலந்தபடி இருக்கும் அடையாறு கரையோரமாக வாழும் மக்களைச் சந்திக்க சென்றோம். சைதாப்பேட்டை பாலத்தின் மேல் இருந்து பார்த்தபோது, பல சிறுவர்கள் ஆற்றின் ஓரம் சேற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆற்று நீரை ஒட்டி இருக்கும் குடிசைகள் கரையில் இருக்கின்றனவா அல்லது ஆற்றில் இருக்கின்றனவா என்று பிரித்தறிய சிரமமாக இருந்தது.

பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை சர்வசாதாரணமாக பெரியவர் ஒருவர் தூக்கிக் கொண்டு சென்றார். கான்கிரீட் தரை போடப்பட்ட குறுகலான ‘தெரு’க்களில் நடந்து குடியிருப்புப் பகுதியின் விளிம்பில் இருக்கும் குடிசைகளுக்கு அருகில் சென்றோம். டைல்ஸ் போட்டு சுத்தமாக இருந்த தெருவோர அம்மன் கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் பாடல் அலறிக் கொண்டிருந்தது.

ஒரு ஓலைக் குடிசையின் வெளியே ஒரு பெண்மணி துணி துவைத்துக் கொண்டிருந்தார். குடிசைக்குள் நான்கைந்து குழந்தைகள் திருத்தமாக உடையணிந்து, பாட்டுப் பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். குடிசையின் மறுபக்க சுவரைத் தாண்டினால் ஆற்று நீரைத் தொட்டு விடலாம்.

‘என்னம்மா குடிசைக்குள்ள தண்ணி வந்திடுச்சு?’ என்று கேட்டபடியே பேச்சுக் கொடுத்தோம். அவர் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைத்தார். பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குழந்தை ஒற்றையடிப் பாதையில் குடு குடுவென ஓடிப் போய் ஆற்று (சாக்கடை) நீருக்கருகில் விளையாடப் போகிறது. துர்நாற்றத்துடன் ஈக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

“ஆமா, குடிசைக்குள்ள தண்ணி புகுந்துடிச்சு. என்ன பண்றது. பை ஸ்டார் ஓட்டல்லையா தங்க முடியும். வேற இடத்துக்கு போனா வாடக கொடுக்க காசு இல்லாம தான் இங்க இருக்குறோம்”

“ராத்திரியானா கொசு புடுங்குது. கொழந்தைங்க ராத்திரிலே எழுந்து அழ ஆரம்பிக்குதுங்க. எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்?”

பேசியபடியே லேசாக அழுது, முகத்தைத் திருப்பி கண்ணீரைத் தோள் பட்டையின் ஓரத்தில் துடைத்து சரிப்படுத்திக் கொள்கிறார்.

குழந்தைகளிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் விளையாடுவதில் தான் மும்முரமாக இருந்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு வயதான அம்மா அருகில் வந்து விசாரித்தார்.

அந்த அம்மா 1958-ல் இங்கே வந்து விட்டாராம்.

“அப்பவெல்லாம் நாங்க இந்த ஆத்துல தான் குளிப்போம். துணி தொவைப்போம். காசு போட்டா பாக்கலாம், தண்ணி அவ்வளவு சுத்தமா இருக்கும். மாடி வீடுகள் வரவர மொத்த சாக்கடையும் இதுல கலந்துடறாங்க” என்றார்.

“என்னமா! இங்கயே இருக்கீங்களே! நாத்தம் அடிக்கலையா?”

“நாத்தமா? அடிக்குது. என்ன பண்ணறது?. இங்கேயே வாழ்ந்துட்டோம் வேலைக்கு, பஸ்ஸுக்கு எல்லாம் வசதியா இருக்கு, வேற எங்கெயாவது போனா மட்டும் நம்ம சம்பாத்தியத்துக்கு மாளிகையிலயா தங்கப் போறாம்.”

“என்ன வேல பாக்குறீங்க?”

“இப்பயெல்லாம் வேலைக்கு எங்க தம்பி போக முடியுது. முன்னயெல்லாம் வீட்டு வேலைக்கு போவேன், இப்ப முடியல. இப்ப வடை, போண்டா போட்டு விக்கிறேன். எடுத்து ஏரியா ஃபுல்லா சுத்தி விக்க முடியாது. இங்கேயே வீட்டு திண்ணையில தான் வியாபாரம்.”

நாம் பேசுவதை பார்த்து பக்கத்திலிருப்பவர்கள் இயல்பாக பேச முன் வந்தார்கள். ஈக்களின், பூச்சிகளின் மொய்ப்பும் இடைவிடாது சேர்ந்து கொண்டன.

“ஏதாவது பெரிய செலவு வந்துட்டா கடனெல்லாம் வாங்குவீங்க இல்ல எவ்வளவு வட்டிக்கு கடன் தராங்க?” என்று கேட்டோம்.

“கடனா? எங்களுக்கு யாருப்பா தருவாங்க?”

“சரி! பெரிய செலவு வந்தா?”

“வரக் கூடாது, வராத மாறி நடந்துக்கணும். வந்தா அவங்க மாதிரி ஆயிடும்” என்று ஒரு கூட்டத்தைக் கை காட்டுகிறார். அவர் கை காட்டிய திசையில் பெரிய சண்டை. என்னவென்று விசாரித்தோம். ஏதோ நுண்கடன் நிறுவனத்தின் பிரதிநிதி, பல குழப்பும் கண்டிஷன்களைச் சொல்லி பணம் வசூலிக்க வந்திருக்க,  மக்கள் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

வெளி ஆட்கள் வந்தால் மக்கள் பார்க்கும் பார்வைக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன, ஒன்று ஏதாவது சங்கம், க்ளப்பில் இருந்து வந்த புரவலர்களாக  பார்க்கிறார்கள்.  இலவசமாக குடம், படுக்கை விரிப்புகள் கிடைக்கலாம். அல்லது அரசு அதிகாரிகள் வந்து வேறு இடத்துக்கு மாறிப் போகும் படி வற்புறுத்த வரலாம்.

ஆற்றோரம் வாழும் மக்களின் வாழ்க்கை பாவத்திற்குரியதோ, தலைவிதியோ அல்ல. அது நமது சமூக அமைப்பின் ஒரு கொடிய முகம்.

குடிசைகளை ஒழிக்கவும், ஏழ்மையைக் குறைக்கவும் அரசு பல திட்டங்கள் வைத்திருக்கின்றது. வறுமைக்கோட்டின் வரம்பைக் குறைத்து, ”இந்தியா வல்லரசு ஆயிடிச்சு, ஏழ்மை ஒழிஞ்சிடுச்சி” என்று ஜோக்கர் போல் கத்துவது, குடிசைகளைத் தீ வைத்துக் கொளுத்தி விடுவது, மக்களை சென்னைக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு, பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இடங்களுக்கு துரத்தியடிப்பது என்றுதான் இந்தத் திட்டங்கள் உருவெடுக்கின்றன.

‘குறிப்பிட்ட தொகையை மாதத் தவணையில் கட்டினால் இடத்தை பட்டா போட்டு கொடுத்து விடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் ஒரு சில வருடங்கள் பணத்தை கட்டியிருக்கிறார்கள். ஆனால் நிலைமை மாறி விட்டது. நிலத்தின் விலையேற ஏற, இவர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. கட்டிய பணமும் போச்சு.

‘இவர்கள் கூவத்தை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் ஆற்று நீர் சாலைக்கு வந்து விடுகிறது’ என்பது தான் அரசின் வாதம். அதனால் இவர்களைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஆனால்,  உண்மை என்பது வேறு விதமாக இருக்கிறது.

கூவத்தின் ஓரம் இவர்கள் குடிசை இருப்பது உண்மை தான், ஆனால் இவர்கள் குடிசை போட்டதெல்லாம் ஆற்றின் கரை மீது தான், ஆற்றில் இறங்கி குடிசை போடும் தொழில் நுட்பமோ, அதற்கான கான்கிரீட் வீடுகளைக் கட்டும் வசதியோ இவர்களிடம் இல்லை. மாறாக ஆற்றை உண்மையில் ஆக்கிரமித்திருப்பது யார்?

அமைந்தகரை பூந்தமல்லி சாலையில் இருக்கும் ‘அம்பா மால்’போன்றவை ஆற்றை ஆக்கிரமித்து, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது, அவர்கள் ஆக்கிரமித்ததால் சுருங்கிப் போன ஆற்றின் அகலத்தை ஈடுசெய்ய மறுகரையில் இருக்கும் குடிசைகளைக் காலி செய்யச் சொல்கிறது, அரசு.

ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள், குடிசை ஒழிப்பு என்ற பெயரில் இந்த தகிடுதத்தம் நடக்கிறது.  சைதாப்பேட்டையில் நிலத்தின் விலை சரமாரியாக உயர்ந்து விட்டது. இவர்களை அடித்துத் துரத்தி விட்டு அங்கே ஒரு மால் கட்டலாம், நல்ல வருமானம் கிடைக்கும்; அல்லது அபார்ட்மென்ட்டுகள் கட்டி பல கோடிகள் சம்பாதிக்கலாம். மக்கள் வாழ்ந்தால் அல்லது செத்தால் யாருக்கு என்ன நஷ்டம்?

சைதாப்பேட்டையில் தங்கியிருக்கும் மக்களை பள்ளிக்கரணைக்கு மாறச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு தரும் இடம், மிகச் சிறியது. கான்கிரீட் குடிசைகளை மட்டும் கட்டி விட்டிருக்கும் குடிசை மாற்று வாரியம் சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி எதற்கும் பொறுப்பேற்பதில்லை. அவர்கள் தினசரி வேலை செய்வதற்கு  சைதப்பேட்டை போன்ற இடங்களுக்கு வர வேண்டும்.

ஆற்றிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் வீடுகள் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப கொஞ்சம் வசதியாகவே இருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சி, கேபிள் டிவி போன்றன சில வீடுகளில் நல்ல மின்சார இணைப்புடன் இருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லை, ஆனால் இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, மின்விசிறி என்று சில உள்ளன.

மழை வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. வீட்டிற்குள் நீர் புகுந்து சகதியாகி விடும். எல்லோரும் எடுக்க முடிந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு சென்று விடுகிறார்கள்.

மழை முடிந்து திரும்பி வந்தால் வீடு முழுவதும் சகதியாகி விட்டிருக்கும். சில நாட்கள் அதை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் வீட்டை நிர்மாணம் செய்ய வேண்டும். குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கும். சுவர் இடிந்து விழுந்திருக்கும். அனைத்தையும் சரி செய்துகொள்ள வேண்டும். சிறிது கடன் வாங்குவார்கள், அந்த ஆண்டு முழுவதும் சம்பாதித்து அதை அடைப்பார்கள். அடுத்த ஆண்டும் இது தொடரும். அரசு உதவி செய்யலாம்… சரி அதை விடுங்கள்..

மலர் எனும் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஆற்றோர வாழ்க்கையைப் பற்றி சொல்லியபடி இருந்தார். ‘’ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், பிள்ளைகள் இல்லையா?” என்று கேட்டோம்.

சிறிது நேரம் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென அழத் துவங்கினார். அழகைக்கு மத்தியில் “கஷ்டப்பட்டு வளர்த்த புள்ளைய கூட்டிகிணு போய் கொன்னுடாங்களே” என்றார்.

நாம் சற்றே அதிர்ச்சியடைந்து விசாரிக்க தொடங்கினோம். அவருடைய மகனைக் காதல் பிரச்சனையில்  கொலை செய்து விட்டார்கள். ஆனால் போலிசை விலைக்கி வாங்கி விட்டதால், அதை பைக் ஆக்ஸிடண்ட் என்று வழக்கை முடித்து விட்டார்கள். அந்த அம்மா நீதி கேட்டு இத்தனை ஆண்டுகள் போராடிய படியே இருக்கிறார்.

ஏழை மக்களை எப்படிக் கிள்ளுக்கீரையாக அதிகார அமைப்புகள் நடத்துகின்றன என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம். தன் மகன் இறந்த அந்த துக்க நேரத்தில் போலீசார் தன்னை ஒரு நாய் போல் நடத்தியதாகச் சொல்கிறார். ‘’பொணத்தை எடுத்துக் கொண்டு செல்” என்பதை தவிர இவர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட போலிசு பதில் சொல்லவில்லை. மேலும் இவரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி வெளியே துரத்தியிருக்கிறார்கள். இவர் விடாமல் இன்னும் தன் பிள்ளையின் மரணத்திற்கு நீதியை தேடிய படியே போராடிக்கொண்டு இருக்கிறார்.

“போகாத எடம் இல்ல, பெரிய ஆபிஸருங்க, கவுன்சிலரு, எம் எல் ஏன்னு போய்கிட்டே தான் இருக்கேன். அலைச்சல் தான் மிச்சம். கடைசியா இருக்கிற ஒரே நம்பிக்கை அம்மன் தான். வெள்ளிக் கிழமையானா அம்மன் கோயில்ல வெளக்கேத்தி, ரெண்டு எலுமிச்சை பழம் வாங்கி சூலத்துல குத்திட்டு வருவேன். எம் பையன கொன்னவங்கள ஆத்தா பாத்துப்பா” என்று உடைந்து போய் அழுகிறார்.

சைதாப்பேட்டையில் இருந்து வரும் போது என் நண்பனை சந்தித்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பார்த்த அனுபவங்களை அவனுக்கு சொல்லியபடி இருந்தேன். ‘’வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்த்தாயா?” என்றேன்,

அவன் சற்றே சத்தமாகவும், கோபமாகவும் “இவங்களை எல்லாம் ஏன் போய் பார்க்க வேண்டும். என்னிடம் கேட்டால் நானே சொல்லியிருப்பேனே. எங்கோ டவுன் சௌத்திலிருந்து இங்க வந்து விடுகிறார்கள். முதலில் ஒரு குடிசை போட்டுக் கொள்கிறார்கள். அதன் பிறகு பக்கா வீடு கட்டிக்கொண்டு, காலி செய்ய மாட்டேன் என்று அடாவடி செய்கிறாங்க, அவங்களுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. இதுதான் பிரச்சனை” என்றான்.

கிராமத்தில் விவசாயம் நசிந்து போய்விட்ட நிலையில், பிழைப்பைத் தேடி சென்னை வருகிறார்கள் பலர். கிராமத்தில் சாதி ஒடுக்குமுறையின் உக்கிரம் தாங்காமல் சென்னைக்கு வருகிறார்கள் சிலர். ஊரில்  சிறு தொழில் செய்ய, விவசாயம் செய்ய  கடன் வாங்கிவிட்டு அடைக்க முடியாமல் இரவோடு இரவாகக் குடும்பத்துடன் சென்னைக்கு ஓடி வந்தவர்கள் அதிகம். ஏதோ ஒரு விதத்தில் நகரம் வாழ வைக்கும் என்று வருபவர்கள் தான் இவர்கள்.

என் அலுவலக மேலாளரான பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த போது  உழைக்கும் மக்கள் குடிசைப் பகுதி பற்றிய பேச்சும் வந்தது.

”அவர்கள் எல்லாம் கொஞ்சம் பணக்காரர்களாகி விட்டால் நன்றாக இருக்கும்” என என் ஆசையைச் சொல்ல, நான் வாக்கியத்தைக் கூட முடிக்காத நிலையில் வேகமாகச் சொன்னார், “அவங்கெல்லாம் போயிட்டா நமக்கு வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்க கஷ்டமாகிடும்” என்றார். வீட்டு வேலைக்கு ஆள் வேன்டும் என்ற காரணத்திற்காகவே மக்கள் ஏழையாக இருக்க வேண்டும் என்று மேலாளர்களே நினைக்கிறார்கள் என்றால், இந்த நாட்டையே ஆளும் தரகு முதலாளிகளுக்கு இந்த எண்ணம் எவ்வளவு வீரியமாக இருக்கும் என நினைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

குறைந்த கூலிக்கு வேலை செய்ய, நிரந்தர இடமோ, வேலையோ, சம்பளமோ இல்லாத உதிரி பாட்டாளிகளை அவர்கள் அரசின் உதவியுடன் உருவாக்குகிறார்கள். ஒரு வேளை இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக கிராமத்தில் வாழ்கிறேன் என்று சொன்னாலும், அவர்களை உதிரிப் பாட்டாளிகளாக்கும் திட்டம் முதலாளிகளால் செம்மையாகத் தீட்டப்படும். இதையெல்லாம் என் நண்பன் புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. அவனுமே முதலாளிகளால் கொஞ்சம் வசதிகள் அனுமதிக்கப்பட்ட பாட்டாளிதான் என்பதும் அவனுக்கு புரிந்திருக்கவில்லை.

நதிக்கரையில்தான் மனித குல நாகரீகங்கள் தோன்றி வளர்ந்தன. குழந்தைப் பருவத்தில் இருந்த மனித குலத்தை வளர்த்து ஆளாக்கிய நதிக்கரைகளில் கூவமும் ஒன்றாய் இருந்திருக்கும். இன்றும் சென்னை நகரத்தின் கடுமுழைப்பு வேலைகளுக்கு உழைப்பாளிகளை சப்ளை செய்யும் சேரிகளில் கூவம் நதிக்கரை சேரிகளும் அடக்கம். மகிழ்ச்சியான சென்னை வாழ்க்கைக்கு பாடுபடும் இந்த மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் அடையாளம் கூட இல்லை. ஆனாலும் அவர்கள்  வாழ்கிறார்கள். என்றாவது ஒரு நாள் நகரத்திற்கு வெளியே தூக்கியெறியப்படுவது நிச்சயமென்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள்.

_________________________________________________

– வினவு செய்தியாளர்கள்
____________________________________________

துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!

5

சென்னையைச் சேர்ந்த 29 வயதே நிரம்பிய ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்வார் என்பதை அதற்கு ஒரு நாள் முன்பு அவரது நெருங்கிய நட்பு வட்டத்திலும், உறவினர்களிடமும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள்.  பொறியியல் பட்டம் பெற்ற ஜெயக்குமார் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று திரும்பி சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது மேல்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பிய ஜெயக்குமார், இங்கே சில தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்க கலாச்சாரம் தனக்கு ஒத்துவரவில்லையென்றும், அந்தச் சூழலை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையென்றும், எனவே மீண்டும் அங்கே சென்று படிப்பைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் ஜெயக்குமார் சொல்லியிருந்தார். அவர் படித்த மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் வெர்ஜினியா பகுதி இனவெறிக்கும், நிறவெறிக்கும் பெயர் போனது. இந்நிலையில் அமெரிக்கப் படிப்பை அந்தஸ்தின் அடையாளமாகக் கருதிய பெற்றோர்,  ஜெயக்குமாரை மீண்டும் அமெரிக்கா செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், தனது தாயின் சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்குமாட்டி உயிர் விட்டிருக்கிறார்.

தற்கொலை-1இது போன்ற செய்திகள் சமீபகாலமாய் பத்திரிகைகளில் மீண்டும் மீண்டும் தலைகாட்டியபடியே இருக்கிறது. இவற்றில் இடம், பெயர், காலம் போன்றவற்றை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் காரணங்களின் சாராம்சம் அதிசயக்கத்தக்க விதத்தில் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

சந்தையில் குவியும் கண்ணைக் கவரும் நுகர்பொருட்கள் அணிவகுக்கும் அதே நேரத்தில், பொருளாதார வாழ்க்கை மேலும் நொறுங்கி வீழ்ந்து வரும் போக்குகள் ஒரு பக்கமும், வேலைச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக சம்பளம் குறைந்து வருவது மறு பக்கமுமாக சேர்ந்து மாணவர்களைத் தங்கள் பொருளாதாய வாழ்க்கையின் கடும் சவால்களை எதிர்கொண்டு வென்றேயாக வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளி விடுகிறது. பந்தயத்தில் ஓடும் தமது குதிரையும், பிற பந்தயக் குதிரைகளிலிருந்து எந்த வகையிலும் ‘தரம்’ குன்றிப் போய் விடலாகாது என்பதில் பெற்றோரும் உறுதியாக இருக்கின்றனர். குதிரைகளுக்கே கூட கொள்ளுப்பயிறு தின்னக் கொடுக்கலாம்;  மெல்லத் தின்கிறதே என்று வயிற்றைக் கிழித்து திணிக்க முயன்றால் என்னவாகும்?

சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்த போது, எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை ஐ.ஐ.டியில் சேர்ப்பதற்காக இப்போதே டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி வருவதாகப் பெருமையுடன் கூறினார். உயர் படிப்புக்கு மூளையைத் தயார் செய்யும் அதே நேரம், பிற்காலத்தில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கு தனது வாரிசு எந்த வகையிலேனும் தகுதியில் குறைந்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். அந்தச் சின்னப் பையனின் ஓய்வு நேரத்தை பட்டியலிட்டு, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், எதை விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும், யாரோடு விளையாட வேண்டும் என்று சகலத்துக்கும் கறாரான வேலைத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.

நீச்சல், சதுரங்கம், கர்நாடக சங்கீதம், கிரிக்கெட் கோச்சிங், கராத்தே, சிலம்பம், யோகா, அபாக்கஸ் என்று நீண்ட அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தேன். பதினைந்து என்று வந்தது. அந்தச் சிறுவனின் வயது அதில் ஒரு எண் குறைவு – பதினான்கு தான். நான் அவனை அருகில் அழைத்து உட்கார வைத்தேன். பதினான்கு வயதுக்கேயுரிய எந்தவிதத் துருதுருப்பும் இன்றி ஒரு ஜோம்பியைப் போல் இருந்தான். நிலைகுத்திய பார்வையோடு எங்கோ வெறிப்பதும், கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களை முணுமுணுப்பதுமாக இருந்த அவனைப் பெருமிதத்துடன் நோக்கிய அவன் தந்தை என்னிடம் இவ்வாறு சொன்னார் – “சார், அவன் ஒரு ஜீக் (Geek – அறிவுஜீவி) மாதிரி தான் எங்க கிட்டயே பேசுறான்”

இப்படி நடமாடும் கலைக்களைஞ்சியமாக மாறியாக வேண்டிய கட்டாயமும், அப்படியும் தட்டுத்தடுமாறி மாறிய பின் நடக்கும் போட்டியில் தோற்றால் இழந்து போய் விடக்கூடிய வாழ்க்கை, கண்களுக்கு முன்னே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.  கண் சிமிட்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும் வேகத்துக்கு இணையாக ஓட வேண்டிய நிர்ப்பந்தமும், அந்த வாழ்க்கையை துய்க்கத் துடிக்கும் அடங்காத ஆசையும், அந்த ஆசை உண்டாக்கும் ஏக்கமும், ஏக்கம் நிறைவேறாமல் வரும் ஏமாற்றமும், ஏமாற்றம் உண்டாக்கும் விரக்தியும் இளையோர் உலகில் செல்வாக்கு செலுத்துகிறது.

இது ஜெயக்குமாரைப் போன்ற மாணவர்களுக்கு மட்டுமா நேர்கின்றது..?

***

தற்கொலை-2ற்ப பிரச்சினைகளுக்காகத் தற்கொலைகள் மற்றும் சில்லறைச் சண்டைகளுக்காகக் கொலைகள் என்பது பெருநகரங்களோடு மட்டும் முடிந்து விடவில்லை. சிறிய தொழில் நகரங்களிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது. கடந்த 2009 ஜனவரி மாதம் தொடங்கி  2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே திருப்பூரில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 980. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை மட்டுமே 264 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. திருப்பூரில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 தற்கொலை முயற்சிகள் நடப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த இறப்புகளில்  61 சதவீதம் ஆண்கள், 33 சதவீதம் பெண்கள் மற்றும் 6 சதவீதம் சிறுவர், சிறுமியர். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் மட்டும் சுமார் 12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் தொழில் நகரமான திருப்பூர் தற்போது பனியன் நகரம், டாலர் சிட்டி என்று மட்டும் அறியப்படுவதில்லை – அது தற்கொலை நகரமாகவும் அறியப்படுகிறது.

திருப்பூர் நகர செய்தித்தாள்களைப் புரட்டினால், பக்கத்துக்குப் பக்கம் தற்கொலைகளைச் சந்திக்காமல் கடந்து போக முடியாது. “கள்ளக் காதலை உறவினர்கள் கேலி பேசியதால் தனது மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தாய்”. “கணவன் நகையை அடகு வைத்துக் குடித்ததால், மனமுடைந்த இளம் மனைவி தூக்கில் தொங்கினார்”. “கல்விக்கடன் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர் தற்கொலை” “கந்துவட்டிக்காரர்கள் தொந்திரவு தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை”  “வேலை கிடைக்காததால் தற்கொலை…”

மேலே தினசரிகளில் தலைப்புச் செய்திகளாய் வந்தவற்றில் சிலவற்றை மட்டும் பார்த்தோம். திருப்பூரின் தற்கொலைகளுக்குக் காரணங்களாய் செய்தித்தாள்கள் சொல்பவையனைத்தும் சாமானிய மக்கள் வாழ்வில் எதார்த்தமாய் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்கள் தான். கல்விக்கடன் தாமதப்படுவது அல்லது கிடைக்காமல் போவது, பள்ளியில் ஆசிரியர்கள்  கண்டிப்பது, வேலை கிடைக்கத் தாமதமாவது அல்லது கிடைக்காமல் போவது, கடன்காரன் வீட்டு வாசலின் முன் நின்று ஏசுவது என்று நீளும் தற்கொலைக்கான காரணங்கள் ஏதும் புதிதில்லை – கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய காரணங்கள் தாம்.

எனில், இப்போது மட்டும் ஏன் இவை தற்கொலைகளாய் முடிகின்றன?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பள்ளி மாணவர்களாய் இருந்த போது இப்போதிருப்பதை விட கண்டிப்பு அதிகமாய்த்தான் இருந்தது. மாணவர்களை அடிப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் விசேசமான புளியம் விளார்களை வைத்திருப்பார்கள். எங்கள் தமிழாசிரியர் பிரம்படிக்கு ‘பிரம்பாம்பழம்’ என்றே பெயர் வைத்திருப்பார். ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அல்லது படிக்காமல் குறும்புத்தனம் காட்டித் திரியும் மாணவர்கள் எவரும் பிரம்பாம்பழத்தை ருசிக்காமல் தப்பிக்க முடியாது. எமது பெற்றோர் பள்ளியில் எங்களை விடும்போதே தெளிவாய்ச் சொல்லி விடுவார்கள் ‘படிக்கிறானோ இல்லையோ, ஒழுக்கமா நடந்துக்க வையுங்க சார்… கண்ணு ரெண்டையும் விட்டுப்பிட்டு தொலிய உரிச்சிடுங்க’. ஆனால், அப்போது மாணவர்கள் யாரும் கண்டிப்புக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதில்லை.

அதே போல், வேலை தேடுவதிலாகட்டும், கடன்களை எதிர்கொண்டு சமாளிப்பதாகட்டும், குடும்ப விவகாரங்களாகட்டும் இந்தளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையில் தற்கொலைகளாய் முடிந்ததில்லை. இப்போது மட்டும் ஏன் என்கிற கேள்விக்கு விடை திருப்பூரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதில் கிடைக்கலாம். திருப்பூர் அதையொத்த சிறிய தொழில்நகரங்களின் வாழ்க்கைச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள ஒரு துலக்கமான வகைமாதிரியாய் விளங்குகின்றது.

70களில் சிறியளவில் உள்நாட்டுச் சந்தைக்கு மட்டுமே உள்ளாடைகள் தயாரித்து வந்த திருப்பூரின் இன்றைய வளர்ச்சியோ அபரிமிதமானது. இன்று திருப்பூரில் தயாராகும் ஆயத்த ஆடைகள் உலக ஆயத்த ஆடைச் சந்தையின் ஒரு முக்கிய அங்கம். திருப்பூர் முதலாளிகள் மாறிவரும் சந்தையின் தேவைகளுக்கு ஈடுகொடுத்து போட்டியில் தாக்குப்பிடிப்பதற்காக தமது தயாரிப்புகளில் மட்டும் புதிய வகைகளைப் புகுத்தவில்லை – உற்பத்தி முறைகளிலும், கருவிகளிலும், தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதிலும் புதியபுதிய முறைகளைப் புகுத்தியுள்ளனர்.

தென்மாவட்டங்களில் இருந்து பதின்ம வயதுச் சிறுமிகளை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, கம்பெனிக்கு அருகிலேயே ‘ஹாஸ்டல்’ எனப்படும் சிறைச்சாலைக்குள் அடைத்துவைத்து, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இப்படி சில ஆண்டுகள் வேலை செய்த பின், திருமணச் செலவுக்கு முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை ரொக்கமும், தாலியில் கோர்த்துக் கொள்ள குந்துமணி தங்கமும் ‘கூலி’யாகத் தரப்படுவதற்கு திருப்பூர் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர் – சுமங்கலித் திட்டம்.

உ.பி, ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, ‘கேம்ப்’ எனப்படும் தகரக் கொட்டடியில் அடைத்துப் போட்டு, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு, அதிகபட்ச வாரக் கூலியாக 1700 ரூபாய்கள் கொடுப்பதற்குப் பெயர் – கேம்ப் கூலித் திட்டம்.

இவர்கள் யாரும் பணி நிரந்தரம் பெற்றவர்கள் அல்ல.  பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் இவர்கள் எப்போதும் பயிற்சியாளர்கள் தான். ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் உண்டாகும் ஃபைன் டஸ்ட் எனப்படும் குறுந்துகள்களை சுவாசிப்பதன் மூலம் இந்தத் தொழிலாளர்கள் பலருக்கும் ஆஸ்துமா, டி.பி போன்ற நுரையீரல் கோளாறுகளும், சாயப்பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளும் சர்வசாதாரணமாக ஏற்படும். ஆனால் மருந்துக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களோ, தடுப்பு முறைகளோ இங்கு பயன்படுத்தப் படுவதில்லை. மருத்துவக் காப்பீடு என்கிற சொல்லையே இந்தத் தொழிலாளர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

திருப்பூரின் நான்கு லட்சம் தொழிலாளர்களில் சுமார் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் நிரந்தத் தொழிலாளிகள். பெரும்பான்மையான ஒப்பந்தத் தொழிலாளிகள் மற்றும் ‘பயிற்சிக்’ காலத்தில் உள்ள தொழிலாளிகளுக்கு தொழிற்சங்க பாதுகாப்பு என எதுவும் இல்லை. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது; தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும்போது குரல் கொடுக்க தொழிற்சங்க அமைப்புகள் வலுவாக இருந்தன. இன்றோ தொழிலாளர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.  பணியிடப் பிரச்சினைகளில் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரோ அதே போல் தான் சமூகத்திலும் அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.

திடீரென்று வேலை அதிகரிப்பது, திடீரென்று குறைவது, எதிர்பாராமல் வேலை பறிபோவது என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் தவிர்க்கவியலாமல் கந்துவட்டிக் கும்பல்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். வறுமையும், வேலையின்மையும், கடன் சுமையும் ஒரு பக்கத்திலிருந்து நெட்டித் தள்ளுகிறதென்றால், நிலையற்ற வேலை இன்னொரு முனையிலிருந்து கழுத்தை இறுக்குகிறது. ஓரு ஈசலின் பிறப்பையும், இறப்பையும் ஒத்த வேகத்தில் திருப்பூரின் தொழிலாளர் வாழ்க்கை அலைபாய்கின்றது. ஆர்டர்கள் குவியும் நாட்களில், சிறுநீர் கழிக்கவும் கூட நேரம் தரப்படாமல் கசக்கிப் பிழியப்படும் அவர்கள்; ஆர்டர்கள் குறையும் நாட்களில் ஈவிறக்கமின்றி தூக்கி வீசப்படுகிறார்கள். ஏஜெண்டின் அழைப்புக்கு  ஏங்கிக் கிடக்கும் காதுகளில் கந்து வட்டிக்காரனின் பைக் உருமல் அமிலமாய்ப் பாய்கிறது.

திருப்பூரின் அராஜகமான பணிச்சூழல் உளவியல் ரீதியில் உண்டாக்கும் அழுத்தமும், நெருக்கடியும் தொழிலாளர்களின் பண்புகளில் அராஜகமான சிந்தனைப் போக்கை உண்டாக்கி விட்டிருக்கிறது. பாதுகாப்பற்ற பரபரப்பில் சிக்குண்டு போன  மனம் சில்லறைச் சிக்கல்களுக்குக் கூட நின்று நிதானமாய் யோசித்து ஒரு முடிவெடுக்கத் தடுமாறுகிறது – முழம் கயிற்றை நம்பிச் சரணடைகிறது. சட்டென்று துவங்கி சட்டென்று முடியும் வேலைகளைப் போல் வாழ்க்கையும் சில நொடிக் கனவு போல் முடிந்து போகிறது. கடந்து போகும் பிணத்தின் முகத்தைப் பார்க்கக் கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

***

தற்கொலை-3பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டும் மக்களின் வாழ்க்கை சமூகத்தினின்றும் துண்டிக்கப்பட்டு, தனித்து விடப்படவில்லை. இந்தியப் புவிப்பரப்பின் பெரும்பங்கை ஆக்கிரமித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக விரிந்து கிடக்கும் கிராமங்களின் நிலையும் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவெங்கும் தற்கொலை செய்து மாண்டு போகும் இலட்சக்கணக்கான விவசாயிகளின் இறந்த உடல்கள் எழுப்பும் கேள்விகள், பதில்களைத் தேடி நம்மைத் துரத்துகின்றன.

விவசாயத்தின் பிரச்சினை ஓரிரு பத்தாண்டுகளில் தோன்றியதல்ல எனும்போது தற்கொலைகள் சமீபத்திய வருடங்களில் அதிகரித்துச் செல்லக் காரணம் தான் என்ன?

2009-ம் ஆண்டு மட்டுமே இந்தியாவில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். 1995 – 2011 கால அளவில் மட்டும் சுமார் 2,53,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாய விளைபொருட்கள் இறக்குமதியாவது, விளைச்சலுக்கு விலை கிடைக்காதது,  உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விண்ணை முட்டும் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகள் விவசாயிகளுக்கு கடன் வாங்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயக் கடன்களைப் புறக்கணிக்கும் நிலையில், தவிர்க்கவியலாமல் அவர்கள் உள்ளூர் கந்து வட்டிக் கும்பலின் பிடியிலோ, குறுங்கடன் தரும் கார்ப்பரேட் கந்து வட்டிக் கும்பலிடமோ மாட்டிக் கொள்கிறார்கள்.

ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லெம் சட்டென்னாவுக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சென்ற பருவத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததைப் பார்த்து இந்த முறையும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மேலும் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பருத்தி விதைத்துள்ளார். இதற்காக 1,80,000 ரூபாயை உள்ளூர் கந்து வட்டிக்காரர் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று பருத்தியின் விலை சரிந்து, குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் வரை குறைந்துள்ளது. சட்டென்னாவுக்கோ எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கவில்லை. மொத்த நிலத்திலிருந்தும் முதல் பருத்தியெடுப்பில் வெறும் ஒரு குவிண்டால் பருத்தி தான் கிடைத்திருக்கிறது. கந்துவட்டிக்காரனுக்கு அஞ்சிய சட்டென்னா பூச்சி மருந்தைக் குடித்து உயிரை விட்டுள்ளார்.

இறந்து போன சட்டென்னாவுக்கு இன்னும் வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத ஏழு வயதேயான மகன் இருக்கிறான். இளம் மனைவி இருக்கிறார். தான் இறந்து விட்டால் இவர்களின் நிலை நிர்க்கதியாகும் என்பது சட்டென்னாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; அது போலவே அவருக்கு இன்னொன்றும் சர்வ நிச்சயமாகத் தெரியும் – அது கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கு எந்தெந்த எல்லைகளுக்கெல்லாம் செல்வார்கள் என்பது.

25/02/2012 தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் குறுங்கடன் வங்கிகள் கடனை வசூலிக்க பின்பற்றும் வழிமுறைகளையும், அதனால் ஆந்திராவில் அதிகரித்துள்ள தற்கொலைச் சாவுகளையும் பற்றி விரிவான செய்தியொன்று வெளியாகியுள்ளது. கடன் வாங்கியவரின் வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை அடாவடியாகப் பறித்துச் செல்வது, வீட்டின் முன் நின்று ஏசுவது மட்டுமல்ல, கடனை வசூலிக்கு வந்த குண்டர் படை வீட்டிலிருக்கும் பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பியாவது கடனைக் கட்ட வேண்டியதுதானே  என்று கூட விவசாயிகளை அவமானப்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.

எண்பதுகளிலும், அதற்கு முன்பும் விவசாயிகள் ஓரளவு  அமைப்பு ரீதியாக அணி திரண்டிருந்தனர். அன்று வலுவாக இருந்த விவசாயச் சங்கங்கள் இன்று வலுவிழந்து போயுள்ளதுடன், அரசியல் ரீதியிலும் தீர்மானகரமான ஒரு சக்தியாக இல்லை. அன்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக வாதாட, போராட அமைப்புகள் இருந்தது. விவசாயிகள் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவோ, பிரச்சினைகளைத் தானே தனித்து நின்று எதிர்கொண்டாக வேண்டுமென்றோ நெருக்குதலுக்குள்ளாக வில்லை. இன்றைக்கு விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறிய விவசாயிகளும் நகரங்களுக்கு அத்துக்கூலிகளாய்ச் சென்று விட்ட நிலையில், எஞ்சியவர்கள் அமைப்பு பலமற்று தணித்து விடப்பட்டுள்ளனர்.

சமூகத்தின் இயக்கம் அமைப்பு ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்த போது இருந்த பாதுகாப்பு இன்று தனிநபர்களாய்ச் சிதறி விட்ட பின் அகன்றுள்ளது. அரசு தனது அடக்குமுறைகளை இன்னும் கூர்மையாக்கி மேலும் மேலும் பாசிசமயமாகி வரும் சூழலும், எவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களில்லை எனும் மமதையில் நாட்டின் எல்லைகளைப் பன்னாட்டு மூலதனத்துக்கு அகலத் திறந்து விட்டிருக்கும் சூழலும், இதனால் மாறி வரும் பொருளாதாரச் சூழலும், அதைத் தொடர்ந்து சமூகத்தில் கூர்மையடைந்து வரும் ஏற்றத்தாழ்வுகளும், அதிகரித்து வரும் நுகர்பொருள் மோகமும், அதை அடைய மக்கள் செய்து கொள்ளும் சமரசங்களும், இவற்றால் விளையும் பிரச்சினைகளும் மக்களின் முன் கைகோர்த்து நிற்கும் போது மக்கள் அதைத் தன்னந்தனியே எதிர்கொள்ளும் நிலையில் நிற்கிறார்கள்.

நவீன கால கோலியாத்து கையில் ஏ.கே 47 வைத்திருக்கிறான் – அவனை எதிர்கொள்ளும் டேவிட்டோ இன்று தன்னந்தனியே அதே பழைய கவன்கல்லோடு நிற்கிறான். விதர்பாவில் குண்டடிபட்டுச் சாயும் டேவிட்டுகளின் ரத்தம் திருப்பூர் தெருக்களில் சிதறுகிறது. தூக்கில் தொங்கிய ஜெயக்குமாரின் உறைந்த கண்கள் சமூகத்தை வெறித்துப் பார்க்கிறது.

__________________________________

– தமிழரசன்

_______________________________________

நாட்டையே திவாலாக்கும் கல்வி!

11

ஜூன் மாதம் வந்துவிட்டால் இந்தியா முழுவதும் மேற்படிப்பு ஜுரம் தொடங்கி விடுகின்றது. உடனடியாக பணம் சம்பாதிக்கும் படிப்பு, சமுக அந்தஸ்துக்கான படிப்பு என விதவிதமான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிட வேண்டும் எனப் பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளை படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டால் தன் கவலைகள் தீர்ந்துவிடும். அதனால் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கருதுகின்றனர்.

உயர் மத்தியதர வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கப் பெற்றோர்களிடம் முன்பெல்லாம் கோலோச்சிய படிப்பு மருத்துவம் அல்லது பொறியியல் தான். இப்பொழுதோ அது மெல்ல விரிந்து ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனஜ்மென்ட், எம்பிஏ, விசுவல் கம்யூனிகேசன், ஃபோட்டொகிராபி எனப் பெருகி விட்டது. இந்தப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்து விட்டால், பன்னாட்டு, தனியார் பெரு நிறுவனங்களில் நல்ல வேலை, ஐந்திலக்கச் சம்பளம், சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம். இந்த மாயைகளை முதலீடாகக் கொண்டு இன்று பல தனியார் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன.

பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் படிக்கும் இந்தப் படிப்புகளால் உண்மையில் இளைஞர்களின் வாழ்க்கை வளம் பெருகிறதா? ஏன் இந்தியாவில் இன்னும் வேலை இல்லாதோரின் சதவிகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது? இந்தப் படிப்புகளினால் இந்தியா முன்னேறுகிறதா?

மேற்படிப்பு – தொழிற்கல்வி

இப்போது இருக்கும் கல்வி முறைக்கான வித்து பிரிட்டிஷ் காலானியாக நாம் இருந்தபோதே தொடங்குகிறது. காலனிய கால இந்தியாவில் மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டுசெல்ல வேண்டியிருந்ததால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொறியாளர்கள், வல்லுநர்களின் தேவை குறைவாக இருக்கவே முதலில் நிர்வாகப் பணிக்கான எழுத்தர்களை உருவாக்கவே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்து ராணுவம், போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்காக முக்கிய நகரங்களில் மாத்திரம் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

தொழிற் கல்வி

1947 க்குப் பிறகு நாட்டின் கட்டுமானம், தொழிற்சாலை, எந்திரம், மோட்டார் வாகனங்கள் போன்ற துறைகள் வளர வளர அது சார்ந்த படிப்புகளின் தேவை அதிகமாகியது. தேர்ந்த தொழிநுட்ப வல்லுனர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என ஐஐடிகளை 1957ல் உருவாகியது. மெல்ல மாநில அரசுகள் சேர்ந்துகொண்டன, குறைந்த கட்டணம் மட்டும் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொண்டியங்கும் தொழில்நுட்ப கல்லுரிகளை அரசு உருவாக்கியது.1950 களில் 10க்கும் குறைவான தொழில்நுட்ப கல்லுரிகளில் இருந்து 500 க்கும் குறைவான பொறியாளர்கள் வெளிவந்தனர்.

1990 ல் உலகமயமாக்கல்- தனியார்மயமாக்கல்- தாராளமயமாக்கல் காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு வரத்துவங்கியது. அவுட் சோர்சிங் எனும் ஒருமுறை உலகில் அறிமுகமாகியது. தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளை எந்த நாட்டில்  குறைந்த சம்பளத்திற்கு செய்கிறார்களோ அங்கே வேலைகள் குவியத் தொடங்கின. இதில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் அந்நிய முதலீடு பெருகியது.

மறுபுறம் கல்வியும் தனியார்மயமாக்கப்பட்டு, பல தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தொடங்கப்பட்டன. 70 ஆயிரம் வேலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தால், அதைக்காட்டியே பல நூறு பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் கல்லூரிகள் முளைத்தன. 1990 க்கு முன் 400க்கும் குறைவான கல்லூரிகளில் இருந்து 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்த நிலை போய், 2011ல் 1800 கல்லூரிகளில் இருந்து 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 400 கல்லூரிகளிலிருந்து ஓராண்டுக்கு 2 லட்சம் பேர் வரை வெளிவருகிறார்கள்.

7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஒரு ஆண்டுக்கு வெளிவந்து என்ன செய்கிறார்கள்? ஏன் இத்தனை பேர்? அவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா?

ஒருவர் பொறியியல் பட்டம் பெற 4 ஆண்டு படிப்பதற்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் குறைவாக வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் கடன் வாங்கி தான் இந்தப் படிப்புகளுக்கு அனுப்புகிறார்கள். பிள்ளை படித்து முடித்து விட்டால் தங்கள் கவலைகள் போய்விடும், கடனும் அடைக்கப்பட்டு விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஐஐடியில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே வேலையும் கிடைத்து விடும். இது சில தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் சாத்தியம். அனைத்து பொறியியல் கல்லுரிகளுமே தங்கள் மாணவர்கள் 90 சதவீதம் வரை வேலையில் இருப்பதாகப் புளுகுகிறார்கள்.

2008 உலகப் பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன் தனியார் கார்ப்பரேட்டுகள் ஓரளவு வேலை கொடுத்தன. ஆனால் அதன்பிறகு அதுவும் குறைந்து விட்டது. அப்புறம் ஏன் இத்தனை கல்லூரிகள்? இத்தனை மாணவர்கள்?

என்ஜினியரிங் சூதாட்டம்

அதிக கட்டணம் வாங்கியும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், ஆய்வுக் கூடம், நூலகம், உணவு, தங்கும் வசதி எதுவும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சரியாக இருப்பதில்லை. அனைத்து ரவுடிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் கல்வி வள்ளலாக இருப்பதால் அதிகாரிகளை சரிக்கட்ட அவர்களுக்கு வழியும் அத்துப்படி தான்.

மாணவர்களும் கல்விக்கடன் வாங்கிப் படிப்பதால் போராட்டம் அது இதுவென்று போய்விடக் கூடாது என நான்காண்டுகளைக் கெட்ட கனவாக கருதி அடிபணிகின்றனர். படித்து முடித்தவுடன் வேலை, வாழ்க்கையில் செட்டிலாவது என்ற கனவுகள் வேறு அவர்களைத் துரத்துகிறது.

ஐஐடி, ஐஐஎம் இல் மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால் இங்கு படித்த பலரும் வெளிநாட்டு வேலைக்கு சென்று, குடியுரிமையும் பெற்று விடுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் ஐஐடியில் படிக்கும் மாணவன் அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிலோ, கூகிளிலோ பல லட்சம் மாதச் சம்பளமாகப் பெற்று அமெரிக்க சென்று விடுகிறான். அவன் படித்த படிப்பால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை.

மறுபுறம் சொந்த முதலீட்டில் படிக்கும் மாணவனுக்கு, படித்து முடித்தபின் தான் தன்னைப் போலவே பல லட்சம் பேர் அந்த ஒரு சில வேலைக்காகப் போட்டியிடுவது தெரியவரும்.

வேலை இல்லை

படித்து முடித்து, வேலை தேடும் போது தான் வேலை இல்லை என்ற உண்மை புரியவரும். வாங்கிய கடன் வட்டியுடன் குட்டி போட்டுக் கொண்டிருக்கும். வேலையில்லாத் ஒவ்வொரு நாளும் அதை நினைத்தாலே நெஞ்சு பதறும். ஒரு வேளை தனக்குத்தான் வேலைக்கான தரம் இல்லையோ என சந்தேகப்பட்டு அதனை உயர்த்த சில பயிற்சி நிறுவனங்களில் சேருவார்கள். ஆண்மைக் குறைவு சித்த மருத்துவர்களுக்கு இணையாக சும்மா பார்க்க வரும் பட்டாதாரிகளையும், உங்க இங்கிலீஷே சரியில்ல, நீங்க இருக்கிறதே வீண் என்ற அளவுக்கு முதலில் குழப்புவார்கள். சில ஆயிரம் தாருங்கள், நாங்க பயிற்சி தர்றோம், இதெல்லாம் கிடைக்கப் போற சம்பளத்துல 10% தான பாஸு என்று கூறி குழப்பி ஒருவழியாக உங்களுக்கு பயிற்சி தருவார்கள். பல ஆயிரம் செலவழித்த பிறகுதான் வேலை கிடைக்காத நிலைமை தெரிய வந்தாலும், பயிற்சியளிப்பவனிடம் அதைக் கேட்க முடியாது. வாக்குறுதியிலயே அவன் பயிற்சிதானே தருவேன் என்றான், வேலையைப் பற்றி பேசவில்லையே. ஐடி துறையில் ஒரே மாதத்தில் விண்டோஸ், லினக்ஸ், ஆரக்கிள் கற்றுத்தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கறந்து விடுகிறார்கள். மொத்தத்தில் பணம்தான் பட்டதாரிகளுக்கு விரயமாகிறது.

வேலை இல்லை ஏன்?

2000 ல் Y2K  பிரச்ச்னையைத் தீர்க்க நிறைய கணிப்பொறிப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள், சொல்லப் போனால் நிறைய பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள். அந்தக் காலகட்டதில் கணிப்பொறி என்றில்லாமல் எந்திரவியல் முதல் சாதாரண அறிவியல் பட்டதாரிகள் வரை கணிப்பொறி நிறுவனப் பணிகளுக்குச் சென்றனர்.

ஆனால் Y2K பிரச்சினை முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை போனது. இதுபோன்ற தற்காலிகத் தேவைகள் பூதாகரப்படுத்தப்பட்டு தனியார் கல்லூரிகள் பல திறக்கபட்டன. குறிப்பாக 80களின் இறுதியில் கல்வியில் தனியார் மையம் தாரளமாக புகுந்தது. அரசியிலில் கடைவிரிக்க வாய்ப்பில்லாதவர்கள் ஒதுங்கி கல்வி வள்ளல்களாக அவதாரம் எடுத்தார்கள்.

இருக்கும் 80 ஆயிரம் வேலைகளைக் காட்டி பல லட்சம் இடங்களுக்கான ஒப்புதலை வாங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் இருக்கும் அதே 70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பணியிடங்களுக்கு 7.5 லட்சம் பேர் போட்டி இடுகிறார்கள்.

அடிமை வேலை

இந்த ஒரு லட்சம் வேலைக்கு 7.5 லட்சம் பேர் என்பதால் தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்கவும் பேரம் பேசவும் முடிகிறது. வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்டதாரி சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் உள்ளதும் போய், வேலையில்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு வாய்ப்பாகி விடும்.

சாதரண பட்டதாரியே போதும்

இந்தியாவில் செய்யப்படும் பல அவுட்சோர்சிங் பணிகள் சேவைத்துறை சார்ந்தவை. இதற்கு சாதாரண பட்டாதாரிகளே போதும், பொறியியல் பட்டதாரியை வேலைக்கு எடுத்தால் நிறைய சம்பளம் தர வேண்டியிருக்குமே எனப் புலம்புகின்றன நிறுவனங்கள்.

முன்னர் ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை அள்ளிய டிசிஎஸ், சி டி எஸ், எல் அண்ட் டி, டிவிஎஸ் நிறுவனங்கள் இப்போது பெரும்பாலும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும், பட்டயப்படிப்பு படித்தவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கிறது. செய்யப்படும் வேலைகளுக்கு இவர்களே போதுமானதாக இருப்பதால் தரமில்லை என்ற வாதமே சொத்தை என்பது நிரூபணமாகிறது.

பொருளாதார நெருக்கடி தொடரும் இக்காலத்தில் எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை நோக்கிச் செல்கின்றது. ஆண்டுக்கு ஆயிரம் பேராக முன்னர் வேலைக்கு எடுத்தவர்களை இன்று 100 ஆக குறைத்து விட்டதால், சாதாரண பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை.

அமெரிக்காவில் அதிக சம்பளம் என இந்தியாவிற்கு கடைவிரித்தனர். இப்போது சீனா மற்றும் பிலிப்பைன்சில் குறைவான சம்பளம் என்பதற்காக எல்லா முதலாளிகளும் அங்கே கிளம்பி விட்டனர். இந்தியர்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக எழுத, பேச வருகிறது என்ற வாதம் அதை சீன, பிலிப்பைன்சு மக்கள் கற்க துவங்கியவுடன் அடிபடத் துவங்கி விட்டது.

வேலையே இல்லை எனும் போது அந்த உண்மையை மறைத்து உங்களுக்கு திறமையில்லை; திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் தரமில்லை; தரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய முன்னேற்ற வகுப்புகள், கூட்டம், அதைச் சார்ந்த புத்தகம், டிவிடி என பகல் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒன்று உருவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வேலை இல்லை, தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மை தெரிந்தால் யாரும் முதலீடு போட்டு படிக்க வர மாட்டார்கள், அவர்களுக்கும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குறையும், பட்டதாரிகளுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். தனியார் கல்லூரி முதலாளிகளது கல்லா பாதிக்கப்படும். இதனால் கல்வி தனியார்மயமாதல் கேள்விக்குள்ளாக்கப்படும். வேலை, 5 இலக்க சம்பளம் இது தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்குமான முதலீடு. தன் பிள்ளை மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று தான் தரம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அங்கு படிக்கும எல்லோருக்கும் அப்படிப்பில் இடம் கிடைக்காது என்ற எளிய உண்மை பெற்றோர்களுக்கு உரைக்கும்போது கல்வி தனியார்மயத்திற்கெதிரான போராட்டம் வலுப்படும்.

குப்பை படிப்புகள்

மத்தியதர வர்க்கம், உயர் மத்தியதர வர்க்கத்திடம் விதவிதமான ஆடைகளை வடிவமைக்கும் ஃபேஷன் டெக்னாலஜி, நட்சத்திர ஹோட்டல்களில் உணவைத் தயாரித்து அதை அலங்கரிக்கும் கேட்டரிங் டெக்னாலஜி, விளம்பரம், சினிமா, டி.வி.யில் நுழைய உதவும் விஷுவல் கம்யூனிகேசன் என இவையனைத்தும் பல லட்சம் செலவழித்து கற்றுக்கொள்ளப்படும் கல்விகள். முதலில் இந்தக் கல்வியினால் என்ன பயன்?

நம் நாட்டில் 40 கோடி மக்கள் அன்றாடம் ஒரு வேளை சாப்பிடுவதே வாய்ப்பில்லாமலிருக்க, நம் நாட்டிற்கு தேவையான படிப்பு இத்தனை பேருக்கு குறைந்த செலவில் எப்படித் தரமான உணவைத் தயாரிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். மாறாக செய்த தயிர்ச்சாதத்தில் வண்ண வண்ணமாக வட்ட வட்டமாக தக்காளி, கரிவேப்பிலை போட்டு அதை அழகு படுத்தும் படிப்பல்ல. இதை விடக் கொடுமை அதை அழகாக புகைப்படம் எடுக்க “உணவு புகைப்படக்கலை” (FOOD PHOTOGRAPHY) என ஒரு படிப்பு.

இந்திய வளங்களையும், வனங்களையும் தனியார் முதலாளிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க பழங்குடியினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் மாணவனோ வனத்தையும், வன விலங்குகளையும் அழகாகப் படம்பிடிக்க “காட்டு வாழ்க்கை பற்றிய புகைப்படக்கலை” (­WILD LIFE PHOTOGRAPHY) படிக்க பல லட்சம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் பல கோடி மக்களுக்கு புதுத்துணி என்பதே கனவு எனும் போது நாட்டு மக்களுக்கு தேவையான அளவு துணியை மிகவும் குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தருவதைப் பற்றிய படிப்பு தான் நேர்மையான படிப்பாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்கும் துணியை விதவிதமாகக் கிழித்துப் போடச் சொல்ல ஒரு படிப்பு; அதன் பேர் ஃபேஷன் டெக்னாலஜி யாம். படிக்க கட்டணம் சில லட்சம் ரூபாய் களாம்.

இந்த குப்பைப் படிப்புகள் எதுவும் இந்திய மக்களுக்கான தற்போதைய தேவை இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள், முதலாளிகள், பணக்காரர்கள் அவர்களின் ஆபாச செலவுகளுக்கும், ஆட்டம் பாட்டத்திற்கும் தேவை. அவர்கள் தேவைக்காக மாணவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டுப் படிப்பது மேலும் ஆபாசமாக உள்ளது.

கல்வியில் தனியார்மயத்தின் சாதனைக் கற்கள் இவைதான். இறுதியில் மக்கள் கைக்காசைப்போட்டு செலவழித்து திவாலானதுதான் மிச்சம். இந்திய மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படைத் தேவையில் இங்கே கல்வி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான கல்வி மட்டுமே இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. விளைவு இரட்டை இலக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. தாங்கள் மட்டும் முன்னேறி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் சிந்திக்கட்டும்!

____________________________________________________________

– ஆதவன்
______________________________________________________

விமானப் பணிப்பெண் கீதிகாவின் தற்கொலை…

2
கீதிகா ஷர்மா - கோபால் கண்டா
கீதிகா ஷர்மா – கோபால் கண்டா

ரியானாவைச் சேர்ந்த கீதிகா ஷர்மா என்ற 23 வயதான இளம் பெண் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தில்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் விட்டுச் சென்ற தற்கொலை கடிதங்களில், ‘தன்னுடைய மரணத்திற்கு முக்கியத் தூண்டல் ஹரியானா மாநில அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டா மற்றும் அவரின் வேலையாள் அருணா சத்தா ஆகியோர் தொடர்ந்து கொடுத்த சித்திரவதைதான்’ என்பதை பதிவு செய்திருந்தார்.

அருண் சத்தா உடனடியாக கைது செய்யப்பட்டாலும், கண்டா தலைமறைவாகி விட்டார். அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பிறகு  செப்டம்பர் 10ம் தேதி போலீசிடம் சரணடைந்தார்.

47 வயதாகும் கோபால் கண்டா செருப்புக்கடை முதலாளி, ரியல் எஸ்டேட் புரோக்கர், தொழிலதிபர், கார் டீலர், தாரா பாபா பக்தர், விமான நிறுவன முதலாளி என்று வளர்ந்து அரசியல்வாதியாக உருவெடுத்தவன். 1998ல் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் கைத்தடியாக இருந்து அவரது ஆட்சி முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டான். 10 நீதிமன்ற வழக்குகளை எதிர் கொண்டிருந்த கண்டா 2009 சட்டசபை தேர்தலில் சிர்சா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் முதலமைச்சர் பூபிந்தர் சிங்  ஹூடா அரசு அமைக்க ஆதரவு அளித்து அதற்கு பரிசாக அமைச்சர் ஆக்கப்பட்டான்.

கீதிகா சர்மா வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகமுடைய நடுத்தர வர்க்கப் பெண். கோபால் கண்டா 2007ம் ஆண்டில் ஆரம்பித்த எம்.டி.எல்.ஆர் விமான சேவை நிறுவனத்தில் அப்போது 18 வயதான கீதிகா ஷர்மா விமான பணிப்பெண்ணாக சேர்ந்தார். அதிகாரம், ஆணவம், பெண்களை ஆளும் வெறி பிடித்திருந்த கோபால் கண்டா தன் மகள் வயதான கீதிகாவை தன் வசப்படுத்த ஆரம்பத்திலிருந்தே வேலை செய்திருக்கிறார்.

கீதிகாவுக்கு பல சலுகைகள் கொடுத்து, கீதிகாவின் மேல் படிப்புக்கு பண உதவி செய்வது, வெளி நாட்டு பயணங்களுக்கு அழைத்துப் போவது, புதுப்புது பெயரில் பதவிகளை அளிப்பது என்று வெளிப்படையான நாடகங்களை நடத்தியிருக்கிறார். தனது பணி முன்னேற்றத்திற்காகவும், தனது பொருளாதார நலன்களுக்காகவும் கீதிகா அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

எம்டிஎல்ஆர் நிறுவனம் நொடித்துப் போய் 2009 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதனால் எமிரேட்சுக்கு போக வேண்டியிருந்த கீதிகாவை தன்னுடைய வேறு நிறுவனமான எம்டிஎல்ஆர் குழுமத்தில் ஒருங்கிணைப்பாளர்  என பதவி உயர்வு கொடுத்து பக்கத்திலேயே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார் கண்டா. எமிரேட்ஸ் வாய்ப்பின் மூலமாக கண்டாவை விட்டு ஒதுங்கிவிடலாம் என்று நினைத்திருந்த கீதிகாவுக்கு இது கடிவாளம் போட்டதுபோலாகிவிட்டது. இருப்பினும்  ஒருவழியாக தப்பித்து வேலையை ராஜினாமா செய்து விட்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய துபாய்க்கு போய் விட்டிருக்கிறார் கீதிகா.

அவரை எப்படியாவது மீண்டும் தன் பிடியில் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் போலி ஆவணங்களின் அடிப்படையில் அவர் வேலைக்கு சேர்ந்தார் என்றும் படிப்பிற்காக வாங்கியக் கடனை திருப்பி தராதவர் என்றும் கீதிகாவின் மேல் குற்றம் சாட்டி எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறார் கண்டா. இந்த மிரட்டல் நடவடிக்கைகளில் அவரது உதவியாளர் அருண் சத்தா உறுதுணையாக  இருந்திருக்கிறார்.

அவரும், அவரது ஆட்களும் துபாயிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனத்துக்குப் போய் கீதிகாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இவற்றால் கீதிகாவுக்கு வேலை பறிபோக, அவரை இந்தியாவில் மீண்டும் தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டிருக்கிறார் கண்டா.  இது போன்ற தொடர் பாலியல் தொல்லையால் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்ட கீதிகாவை துன்புறுத்தும் நோக்குடன் அவர் வாங்குவதற்காக பதிவு செய்து வைத்து இருந்த வீட்டையும் கிடைக்காமல் செய்துள்ளார் கண்டா.

இப்படி தொல்லைக்கு மேல் தொல்லையை பொறுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் கீதிகா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். உயிருடன் வாழ்ந்து கொண்டே கண்டாவை எதிர்ப்பது சாத்தியமற்று போன நிலையில் இறப்பதன் மூலம் கண்டாவிற்கு பதில் சொல்வது என்ற கையறு நிலையில் தான் தனக்குத் தானே முடிவு கட்டிக்கொண்டு உள்ளாள் அந்தப் பெண்.

ஒரு மகன், இரண்டு மகள்கள் என்று பொறுப்பான குடும்ப மனிதனாக நடந்து கொள்ள வேண்டிய இந்த மிருகம் தன்னுடைய 46 வயதிலும் மைனரைப்போல வலம் வந்தது மட்டுமில்லாமல் ‘கீதிகா மேல் இருந்த தீராத காதலால், அவரை தன் பக்கத்திலே வைத்துகொள்ளும் நோக்குடன்தான் இவ்வாறன வழிமுறைகளை பின்பற்றினேன்’ என்பதை போலீசிடம் வாக்குமுலமாக கொடுத்து உள்ளார் கண்டா.

இளம் வயதில், எந்த அனுபவமும் இல்லாத கீதிகாவிற்கு சீனியர் பணிப்பெண் பதவி, பெரிய கார், உயர்ந்த சம்பளம் தர கண்டா ஒன்றும் வள்ளலும் இல்லை நல்லவனும் இல்லை. இருப்பினும் அவர் வழங்கிய சலுகைகளும் அவற்றுக்கு அடிப்படையான அவருடைய அரசியல் அதிகாரமும் கீதிகாவையும் அவர் குடும்பத்தையும் செயலிழக்க செய்து உள்ளது.  கண்டாவின் நோக்கத்தை அறிந்த பின்னரும், அவர்து தொடர்புகள் மூலம் பொருளாதார வாய்ப்புகளை பெறலாம் என்று  அவர் பிடியில் சிக்கியது கீதிகா தனக்கு செய்துகொண்ட மாபெரும் தவறு.

தங்கள் மேல் அதிகாரிகளுக்கு வளைந்து கொடுத்து, முகஸ்துதி செய்வதன் மூலம் பொருளாதார சலுகைகள், பதவி உயர்வு, அதிகார பின்னணி இவற்றை பெற்று விட முயற்சிப்பவர்கள் ஒவ்வொருவரும் இது போன்ற அபாயமான விளையாட்டில்தான் இறங்கியிருக்கிறார்கள்.

சலுகைகளை பெறுவதற்காக செய்யப்படும் சில சமரசங்களும், அடிமைத் தனமும் நாள்பட நாள்பட மேலும் மேலும் இழிவான நிலையை எட்டுகிறது. ஒரு வகையான குற்ற உணர்வை தோற்றுவித்து, மனதளவில் சோர்வடையச் செய்கிறது. ஒரு நாள் ஒதுங்க நினைக்கும் போதுதான் அது வரை  பயன்படுத்திய நபரின் உண்மையான முகம் தெரியவருகிறது.

கட்டுப்படுத்தி வந்த யாரும் கட்டுக்களை அவிழ்த்து விட சம்மதம் தருவது கடினம். அதுவும் அரசியல் அதிகாரம் இருக்கும் நபர் என்றால் கேட்கவா வேண்டும்! சட்டம், அரசு, போலீஸ் என்று எல்லாவற்றையும், கை நுனியில் வைத்து இருக்கும் நபர்களிடம் அதிகார அத்துமீறலுக்கு என்ன பஞ்சம்.

பாலியல் தொடர்பான இத்தகைய உறவு பெண்களுக்கு ஒரு சிறையை போன்றது, அதில் அவர்களின் இழப்பு மிகவும் அதிகம், சமூகரீதியாக, மனரீதியாக, உடல்ரீதியாக பல அவலங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாவதோடு, பெரிய பின்விளைவு இல்லாமல் அதிலிருந்து வெளி வருவதும் சாத்தியமில்லாமல் போகிறது. அந்த நிலை தான் கீதிகாவுக்கு ஏற்பட்டிருந்திருக்கிறது.

நடந்து முடிந்த இக்கொலைக்கு அதிகார வர்க்கங்களை காக்கும் அரசு எந்திரம் தரும் தீர்ப்பு என்பது நியாயமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. பெண்கள் மேல் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூகரீதியாக சுரண்டும் கனவான்களுக்கு என்றுமே சட்டமும், அரசும் சாதகமாக இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி தனக்கு செய்த பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராடிய ரூபம் பதக், அதற்கான நீதி கிடைக்காமல் போய், ராஜ் கிஷோர் மீண்டும் அதிகாரப் பதவியைக் கைப்பற்றும் சூழல் உருவான போது, தனது ஆத்திரம் தீர அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை இங்கு நினைவு கூறலாம் அந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்திருக்கின்றனர் ரூபம் பதக்கும் அவரின் குடும்பமும்.

விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தாவின் தற்கொலையும் இந்த தன்மையுடையது தான். பாலியல் கொடுமைகளையும், பெண் என்ற காரணத்தால் நடந்த அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடிய அஞ்சலி குப்தாவிற்கு இறுதியில் கிடைத்தது பணி நீக்கமும், அவச்சொல்லும். தொடர்ந்து போராடி தோய்ந்து போன அவர் இறுதியில் தேடியது மரணத்தை தான்.

நீளும் இந்தப் பட்டியலில் இப்போது கீதிகாவும் இணைந்துள்ளார். அதிகார வர்க்கங்களை எதிர்த்து போராடுவது அர்த்தம் அற்றது என்ற நினைப்பில் தன் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துகொண்டு உள்ளார்.

படிக்க

டி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?

19
டிவி-சீரியல்

டி.வி சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்!

டிவி-சீரியல்தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.

ஆனால் இத்தொடர்களின் கதைகள் எவ்வாறு தயாராகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு வளர்ப்பு நாயை விடக் கேவலமான முறையில் தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும்.

***

மிழகத்தில் தற்போது 49 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். அடுத்த மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன.

இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ’டேம்’ (TAM) எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீடு (Television Audience Measurement)  சொல்லும் கணக்கைச் சார்ந்தே இயங்குகின்றன; நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. விளம்பர வருவாய்க்கு மட்டுமல்ல, நிகழ்ச்சித் தயாரிப்புக்கும் ’டேம்’ அளிக்கும் விவரங்கள் முக்கியமானவை. போட்டி ஊடகங்கள் என்ன நிகழ்ச்சியை, எந்த நேரத்தில் ஒளிபரப்புகின்றன, அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருவாய் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள், ஏன் அதே நேரத்தில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்… என்பதையெல்லாம் சக நிறுவனங்கள் அறிந்து கொள்ள இந்த ’டேம்’ விவரங்கள் அவசியம்.

எனவேதான் வாரம்தோறும் வெளியாகும் ’டேம்’ கணக்கின் விவரங்களை அனைத்து காட்சி ஊடகங்களும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து அலசுகின்றன. இதன் பிரதிபலிப்பை தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்கலாம். முன்னணி சேனலாக இருக்கும் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் வீதம் ஒளிபரப்பாகின்றன.

ஆனால் விஜய், ஜெயா, ராஜ், ஜி தமிழ்… போன்ற மற்ற சேனல்களில் சராசரியாக நாளொன்றுக்கு 9 நெடுந்தொடர்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், ’டேம்’ கணக்கின்படி இந்தக் காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே விளம்பர வருமானம் சன் டிவி அளவுக்கு இவற்றுக்கு வருவதில்லை.

சன் டிவியில் எப்படிக் கதைத் தொடர்கள் தயாராகின்றன? பகலில் ஒரு தொடரை ஒளிபரப்புவதற்கு அரை மணி நேரத்துக்கு ரூபாய் 7 முதல் 9 லட்சம் வரையில் சன் டிவி வசூலிக்கிறது என்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். ‘பிரைம் டைம்’ என்று சொல்லப்படும் இரவு 7.30 முதல் 9.30 வரையிலான நேரத்தில் சீரியல் ஒளிபரப்பாக வேண்டுமென்றால், அரை மணி நேரத்துக்கு கட்டணம் 12 முதல் 14 லட்சம் ரூபாய். இரவு 10 மணிக்கு மேல் என்றால், கட்டணம் ரூபாய் 6 முதல் 8 லட்சம் வரை. இந்தத் தொகை திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களுக்கு மட்டும்தான். சனி, ஞாயிறு ரேட் வேறு.

இப்படி திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை வாடகைக்கு எடுப்பது போல் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அரை அரை மணி நேரமாக ஒரு சீரியல் தயாரிப்பாளர் வாடகைக்கு எடுக்கிறார். அரை மணி நேரத்தில் 18 நிமிடங்கள் தொடருக்கு ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 12 நிமிடங்களை விளம்பரதாரர்களுக்கு விற்பார். அதுவும் பத்துப் பத்து விநாடிகளாக. இப்படி விற்றுக் கிடைக்கும்  பணத்தில் தான் அவர் அரை மணி நேரத்துக்கான வாடகையை சன் டிவிக்கு தர வேண்டும். தனது தொடரில் பணிபுரியும் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சம்பளம் தர வேண்டும். லாபமும் பார்க்க வேண்டும்.

’டேம்’ தரும் வாராந்திர புள்ளிவிபரம் எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. கெஞ்சிக் கூத்தாடினால், சந்தை நிலவரத்தை விடக் குறைவான தொகைக்கு பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் முதலுக்கே மோசமாகும். இன்னொரு பக்கம், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் சன் டிவி கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்தி விடும். சில மாதங்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ’ஆண் பாவம்’ தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் அந்தத் தொடரை தயாரித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யஜோதி பிலிம்ஸ்.

மற்ற தொலைக்காட்சிகள் பின்பற்றும் வழிமுறை வேறு. அவர்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரை அழைத்து ஒரு தொடர் அல்லது நிகழ்ச்சியைத் தயாரிக்கச் சொல்வார்கள். அதற்கான தொகையைத் தீர்மானித்து கொடுத்து விடுவார்கள். தயாரிப்பாளர் அந்தத் தொகைக்குள் தொடரோ, நிகழ்ச்சியோ தயாரித்துக் கொடுத்துவிட்டு, அந்த தொகைக்குள்ளேயே லாபத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். விளம்பர வருவாய் முழுவதையும் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த வழிமுறை கம்பி மேல் நடப்பது போல் தான். அதனால் தான் இரவு 9 மணிக்கு மேல் சன் டிவி தவிர மற்றவர்கள் சீரியலுக்குப் பதிலாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். ஒரே காரணம் செலவு குறைவு என்பது தான். அல்லது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  இந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களை ‘ஆடித் தள்ளுபடியில்’ வாங்கி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. ’சிந்து பைரவி’, ’சின்ன மருமகள்’, ’மறுமணம்’ போன்ற தொடர்கள் இப்படி இந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டவைதான்.

முன்னர் ஷகிலாவின் மலையாளப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்து ரிலீஸ் செய்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நெடுந்தொடர்களும் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவையே.

ஒவ்வொரு நெடுந்தொடரின் முடிவிலும் அந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதில் பங்காற்றிய இயக்குநர் தொடங்கி காபி வாங்கிக் கொண்டுவரும் பையன் வரையிலான அனைவரது பெயர்களும் போடப்பட்டாலும், ஒரு தொடருக்கான கதையையும் காட்சிகளையும் கதாசிரியரோ இயக்குநரோ முடிவு செய்வதில்லை. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், விளம்பர நிறுவனங்களும் சொல்லும் வகையிலேயே அவை உருவாகின்றன. இந்தக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடு, இந்த நபருக்கு விபத்தை உண்டாக்கு, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைதாக வேண்டும், மருத்துவமனை – காவல் நிலையங்களில் சில காட்சிகள் நகர வேண்டும்… என்றெல்லாம் விளம்பரக் கம்பெனிகளும், தொலைக்காட்சி நிர்வாகமும் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கும். இதற்கேற்பவே காட்சிகளைக் கோர்க்க வேண்டும்.

அது மட்டுமல்ல, நட்சத்திரங்களை உருவாக்குபவர்களும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் விளம்பர நிறுவனங்கள் தான். இவர்கள் மனது வைத்தால் யாரை வேண்டுமானாலும் முக்கியக் கதாபாத்திரமாக்கி பிரபலப்படுத்துவார்கள். முறைத்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளை அழித்து விடுவார்கள்.

அரை மணி நேரத்தில் 18 நிமிடம் தான் தொடர். நடுவில் மூன்று விளம்பர இடைவேளைகள். எனவே ஒவ்வொரு 6 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். மறுநாள் தொடருக்காக ஏங்கும் விதத்தில், முந்தைய நாளின் இறுதிக் காட்சி அதிர்ச்சி நிரம்பியதாக அமைய வேண்டும். இதை அத்தொடரின் படத்தொகுப்பாளர் (எடிட்டர்) கவனித்துக் கொள்வார். காட்சியை முன் பின்னாக மாற்றிப் போட்டு, அன்றைய தினத்தின் இறுதிக் காட்சியை அவர் முடிவு செய்து விடுவார். இதற்காக இயக்குநர் அல்லது ’திரைக்கதை’ எழுதுபவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கதாபாத்திரத்தைக் கொன்று விடுமாறு தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் கொன்று விட்டு, மிச்சமிருப்பவர்களை வைத்து இயக்குநர் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும்.

இந்தக் கதைத் தொடர்கள் அனைத்திலும் ஒரு பொதுத்தன்மையைப் பார்க்க முடியும். பெண்கள் தான் முக்கியமான பார்வையாளர்கள் என்பதால், பெண் கதாபாத்திரம் தான் மையம். கண்டிப்பாக அவள் ஆளும் வர்க்கப் பண்பாட்டின் வரையறுப்புப்படி ’நல்லவளாக’ இருக்க வேண்டும். அவளுக்கு ஒரு குடும்பம். அது பிறந்த வீடாக அல்லது புகுந்த வீடாக இருக்கலாம். இதைத் தீர்மானிக்க கதாசிரியருக்கு ’சுதந்திரம்’ உண்டு. ’அநாதை’ என்று அமைத்தால் ஏன் அநாதை ஆனாள், அவளது அப்பா – அம்மா யார்… என காரணங்களை அடுக்க வேண்டும். மொத்தத்தில், மையக் கதையில் ஒரு நல்லவள்(ன்), ஒரு கெட்டவள்(ன்), ஒரு அப்பாவி நிச்சயம் இருக்க வேண்டும்.

இந்த மையக் கதைகள் ஒரு வீடு அல்லது அலுவலகம் அல்லது கோயில் ஆகிய மூன்று இடங்களிலேயே பொதுவாக நகரும். அப்போதுதான் தயாரிப்புச் செலவு குறையும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், கடை வீதி போன்ற இடங்களுக்கு கதைக்களம் மாறினாலும், செலவு ’கட்டுபடி’ ஆகாது. எனவே நல்லதோ கெட்டதோ எதுவானாலும் இந்த மூன்று இடங்களில் முடிந்தாக வேண்டும்.

மையக் கதையின் மிக முக்கியமான தகுதி என்னவென்றால், அது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இழுக்கத்தக்கதாகவும், முடிவே இல்லாமல் கிளைக் கதைகளை பின்னும் வாய்ப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். முடிப்பதைப் பொறுத்தவரை அது எப்போதுமே இயக்குநர் கையில் இல்லை. அதை விளம்பரக் கம்பெனி அல்லது தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்யும்.

கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகிவிட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள்.

துணைக் கதாபாத்திரங்களும் நல்லவன்(ள்), கெட்டவன்(ள்), அப்பாவி என்ற மூன்று பிரிவுக்குள் மட்டுமே அடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காட்சியிலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில் ’மோதலை’க் கொண்டு வர முடியும். கதையும் ’சுவாரஸ்யமாக’ நகரும்.

நாயகிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள்… எனக் கதையைத் தொடங்கினால், தரகர் பொய் சொல்கிறாரா அல்லது ’எதிரி’ தவறான மணமகனை பரிந்துரைக்கிறாரா எனச் சில நாட்களுக்கு காட்சிகளை நகர்த்தலாம். பிறகு திருமணம் ஆகுமா, ஆகாதா என்ற ’எதிர்பார்ப்பை’ வைத்து பல நாட்களைக் கடத்தலாம். திருமண மண்டபத்தில் தாலி காணாமல் போவதில் ஆரம்பித்து சீர் அல்லது வரதட்சணையில் பற்றாக்குறை ஏற்படுவது வரை பிரச்சினையை 10 அல்லது 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம். திருமணமான பிறகு கணவனுடன் சேருவாளா அல்லது புகுந்த வீட்டில் யாராவது சேர விடாமல் தடுப்பார்களா என்ற கேள்வியை போடலாம். அது தொடர்பான காட்சிகளை நுழைக்கலாம். பிறகு கர்ப்பம். கர்ப்பப் பையில் பிரச்சினை அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிக்கல் அல்லது அபார்ஷன் செய்ய யாரேனும் முயற்சி. அப்புறம் குழந்தை பிறப்பு அல்லது பிறந்த குழந்தை திருடப்படுதல். திருடப்பட்ட குழந்தை இன்னொரு இடத்தில் வளர்தல், அக்குழந்தைக்காகத் தாய் தவித்தல். குழந்தை வளர்ப்பு, நோய்வாய்ப்படுதல், தவறான தடுப்பூசியால் பாதிப்பு. பள்ளிக்கு குழந்தை செல்லும் போது கடத்தப்படுதல், பிச்சை எடுக்க வைத்தல்; வளரும் குழந்தை சிறுமியாக இருந்தால் பூப்பெய்துதல், காதலில் சிக்குதல்; சிறுவனாக இருந்தால் போதை போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல்…

இப்படியாக 40 நாட்களுக்கு ஒரு கதை வீதம் மையக் கதையை நகர்த்திக் கொண்டே செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தலா யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். அவர்களைக் காப்பாற்ற நாயகி தீ மிதிக்க வேண்டும் அல்லது மண் சோறு சாப்பிட வேண்டும். இந்தப் ’பகுதி’ முடிந்ததுமே காவல் நிலையம் வர வேண்டும். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்…

இதற்காக பல பழைய – புதிய திரைப்படங்கள் அல்லது பாக்கெட் நாவல்களின் கதையை, காட்சிகளை ’சுடலாம்’; சுட வேண்டும். விளம்பர நிறுவனங்களே இதைப் பரிந்துரைக்கவும் செய்கின்றன. ஒவ்வொரு வசன கர்த்தாவும் தனக்கென்று சில உதவியாளர்களை வைத்துக் கொண்டு இப்படித்தான் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு தொடர்களுக்கு பணியாற்றுகின்றனர். டிவி அல்லது டிவிடியில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடி உதவியாளர்கள் ஆட்டுப் புழுக்கையைப் போல் வசனம் எழுதித் தள்ளுவார்கள்.

இப்படியான சூத்திரங்களுடன் தான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 நெடுந்தொடர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கான நேரம் என்பது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தான். சன் டிவி என்றால் அத்தொடரின் இயக்குநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட் படம் பிடிக்க வேண்டும். அதாவது 18 + 9 நிமிடங்கள். மற்ற தொலைக்காட்சிகள் என்றால், ஒரு நாளைக்கு அந்த இயக்குநர் இரண்டு முதல் மூன்று எபிசோடுக்கான காட்சிகளைச் ‘சுருட்ட’ வேண்டும். அதனால் தான் நடப்பது அல்லது மாடிப்படிகளில் இறங்குவது அல்லது ஆட்டோவில் பயணம் செய்வதை அதிக நேரம் காண்பிக்கிறார்கள்.

நாயகன் அல்லது நாயகி சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அவர்களுடைய வீடு பெரிய பங்களா போலவோ அல்லது ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் புழங்கக் கூடிய அளவுக்கு தாராளமாகவோ இருக்கும். “என்னது ஆக்சிடெண்டா?” என்று ஒரு வசனத்துக்கான முகபாவத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாகக் காட்ட வேண்டும். அதற்குத் தோதாக இடைவெளி விட்டு ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டுமானால் வீடு பெரியதாக இருந்தால்தானே முடியும். அது மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே மாடிப்படி இருப்பதும் அவசியம்.

இதுவன்றி அவ்வப்போது கதாபாத்திரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கோ, ஆத்திரத்துக்கோ ஆளாக வேண்டும். அதிர்ச்சி என்றால் வசனமே பேச முடியாமல் வாயடைத்துப் போகும் அளவுக்கு கடுமையான அதிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி, பயங்கரமான பின்னணி இசை போட்டு நேரத்தை இழுக்க முடியும்.

ஒரு நெடுந்தொடரில் 20 நடிகர்கள் இருந்தால், அந்த 20 மூஞ்சிகளின் கோபம், அதிர்ச்சி, சோகம், திகைப்பு போன்றவற்றை குளோசப்பிலும் பல கோணங்களிலும் முன்னரே எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜோக்கர் கார்டு போல செருகிக் கொள்ள முடியும். இப்படியெல்லாம் ‘அரும்பாடு பட்டுத்தான்’ ஒரு தொடரின் இயக்குநர் 18 நிமிடக் காட்சி என்கிற ஒரு நாள் இலக்கை தினந்தோறும் எட்டுகிறார்.

பொதுவாக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களேதான் அதிகமான தொடர்களில் நடிக்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்களின் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே அவர்களுடைய கால்ஷீட்டுக்கு ஏற்ப கதையைக் கொண்டு செல்வதற்கு, கிளைக் கதைகளும், துணைக் கதாபாத்திரங்களும் அவசியமாகிறார்கள்.

குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை குறிப்பிட்ட நாளில் வர முடியாமல் போகலாம். அதற்காக படப்பிடிப்பைத் தள்ளி வைக்க முடியாது. எனவே திரைக்கதை மற்றும் வசனம் எழுதுபவர்கள், இருக்கும் நட்சத்திரங்களுக்கு ஏற்ப காட்சிகளை எழுதி, அதை எப்படியாவது மையக் கதையுடன் இணைத்து விடுவார்கள்; அல்லது ஒரு கிளைக்கதையை சட்டென்று தொடங்கி விடுவார்கள். இதற்கு விளம்பர நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரச்சினை. “என்ன ஒரே டிரையா இருக்கு… அந்த கேரக்டரை கொன்னுடு… இல்லைனா அவனை கோமாவுல படுக்க வை…” என அவர்கள் கட்டளையிடுவார்கள். மறு பேச்சில்லாமல் அதை கடைபிடிக்க வேண்டும்.

இப்படி உருவாக்கப்படும் நெடுந்தொடர்களைத்தான் அன்றாடம் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். எதைக் காட்டக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் உண்மையான வேதனைகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்காக அல்லாமல் செயற்கையான உணர்ச்சிகளின் சுரண்டலுக்கே மக்கள் ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணமாக தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்படும் ஒரு தொழிலாளியின் பிரச்சினை, ஒட்டுமொத்தத் தொழிலாளர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலாகக் காட்டப்படுவதில்லை. தனி மனித வேதனையாக கதைத் தொடர்கள் வழியாக அவனது மனைவிக்கு வழங்கப்படுகிறது.

புற உலகின் முரண்பாடுகளை மறைத்து, நவக் கிரகங்களுக்குள் தன் எதிர்காலத்தைத் தேடுவது போல, சில நிர்ணயிக்கப்பட்ட சூத்திரங்களுக்குள் நிஜ வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மாமியார், மருமகள், பக்கத்து வீட்டுக்காரன், சக ஊழியன் என்று இத்தகைய தொடர்கள் உருவாக்கிக் காட்டும் பாத்திரங்களுக்குள் இவர்களுடைய பார்வையே சுருங்கி விடுகிறது.

வாழ்க்கை நிலைமையால் மக்கள் வேறுபட்டாலும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள், பிரச்சினைகள் இருப்பது போல் காட்சி ஊடகங்கள் கதைத் தொடர்கள் வழியாக ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. கதை மாந்தர்களின் பிரச்னைகளுக்காக உருகுவது மட்டுமின்றி, அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார்வையாளர்கள் உலகைப் பார்க்கவும் தொடங்குகிறார்கள்.

அந்த இடத்திலிருந்து சீரியல், தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

__________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
____________________________________________________

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

6

தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது ?

ஊழல்-எதிர்ப்பு
தரகு முதலாளி டாடாவுடன் மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (கோப்புப் படம்). தனியார்மயத்தை எதிர்ப்பதாகக் கூறிவரும் சி.பி.எம்., சிங்கூர் பிரச்சினையில் டாடாவின் அடியாளாகச் செயல்பட்டது

ளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ‘தூய்மையாளர்’ எனும்  ஒளிவட்டத்தின் பின்புலத்தில் மஞ்சக் குளித்துக் கொண்டிருந்த  மன்மோகன் சிங், நிலக்கரி ஊழல் என்று அழைக்கப்படும்  பகற்கொள்ளையில், ஆதாரங்களுடன் சிக்கி கடந்த இரு மாதங்களாகத்  திணறிக் கொண்டிருந்தார். நிலக்கரிக் கொள்ளை, டெல்லி விமான  நிலையக் கொள்ளை, டாடா-அம்பானி மின்நிலையங்கள் அடித்த  கொள்ளைகள், மகாராட்டிரத்தில் நீர்ப்பாசனக் கொள்ளை, அதற்குமுன்  காமன்வெல்த், ஆதர்ஷ், லவாசா கொள்ளைகள் என்று கார்ப்பரேட்  கொள்ளைக்கு துணை நின்ற காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்  அன்றாடம் அம்பலமாகிக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங்கின்  பரிசுத்தவான் வேடம் கிழிந்து கந்தலாகிக் கொண்டிருந்தது.

இன்னொருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு  அனுமதி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற துறைகளைத் திறந்து விடுதல்  என்பன போன்ற தாராளமய நடவடிக்கைகளை துணிச்சலாக  அமல்படுத்தாமல், தடுமாறும் மன்மோகனின் பலவீனத்தை  அமெரிக்காவின் டைம் வார இதழ் விமரிசித்திருந்தது. இந்தியாவின் தர  மதிப்பீட்டைக் குறைத்து, தாராளமய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மிரட்டியது. ரூபாயின்  மதிப்பு வீழ்ந்து கொண்டிருந்தது. கடைசியாக ஒபாமாவின் எச்சரிக்கையும்  வந்து விட்டது.

இந்த இக்கட்டை ஒரு தேர்ந்த கிரிமினலுக்கே உரிய சாதுரியத்துடன்,  சங்கிலியைத் திருட்டுக் கொடுத்த பெண் சத்தம் போடாமலிருக்க சங்கை  அறுக்கும் திருடனைப் போல சமாளித்திருக்கிறது மன்மோகன் அரசு. டீசல்  விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் குறைப்பு, சில்லறை வணிகத்தில்  அந்நிய மூலதனம், ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய நிதியில் சூதாட அனுமதி,  பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பது என ஒரே  நேரத்தில் மக்கள் மீது வீசப்பட்ட கொத்து குண்டுகள் தோற்றுவித்த  அதிர்ச்சி, ஊழல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அந்நிய மூலதனமாக  இருக்கட்டும்‘(“If we have to go down, we will go down fighting: PM on FDI”, Money control.com,14 sep, 2012)என்று பொருளாதார  விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் ‘வீர வசனம்‘  பேசியிருக்கிறார் மன்மோகன். இதே வீரத்தை இதற்கு முன்பும் ஒருமுறை  காட்டியிருக்கிறார்.  வலது-இடது கம்யூனிஸ்டுகள் ஆதரவை திரும்ப  பெறுகிறார்களா, கவலையில்லை. இந்திய – அமெரிக்க அணு சக்தி  ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்” என்று 2008 – இல் மன்மோகன்  முழங்கினார்.

பலவீனமான பிரதமர் என்று பாரதிய ஜனதாவால் அவ்வப்போது கேலி  செயப்பட்டவரும், விபத்தில் பிரதமரானவர் (Accidental Prime Minister) என்று தன்னைத்தானே  கூறிக்கொண்டவருமான மன்மோகன் சிங், எட்டுத் திக்கிலிருந்தும் ஊழல்  குற்றச்சாட்டுகளால் தாக்கப்படும் இன்றைய ஒரு சூழ்நிலையில்  வெல்லப்படமுடியாத பலசாலியாகி விட்டார்.

பாரதிய ஜனதா உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் ஊழல்  குற்றச்சாட்டுகளிலும் உட்கட்சி மோதல்களிலும் சிக்கியிருப்பதுதான்,  மன்மோகன் அரசின் பலம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இது ஒரு  எளிமைப்படுத்தப்பட்ட மேம்போக்கான கருத்து. மன்மோகன் அரசும், அதன்  எதிரிகளாகத் தம்மைச் சித்தரிக்கும் கட்சிகளும் ஒரே கொள்கையில்  ‘சிக்கி‘யிருப்பதுதான், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலிலும், காங்கிரசு  அரசை இத்தனை வலிமையானதாக ஆக்கியிருக்கிறது. வேறு  வார்த்தைகளில் கூறுவதாயின்,  மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தும்  புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கையை  எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடியாத காரணத்தினால்தான்,  மன்மோகன் சிங் பலசாலி ஆகிவிட்டார்.

வெறித்தனமான இந்தப் புதிய தாராளவாத தாக்குதலுக்கு எதிராக உடனே  போராட்டம் துவங்கும் என்பது அரசுக்குத் தெரியும். அது உடனே  முடிந்துவிடும் என்பதும் தெரியும். டீசல், எரிவாயு உள்ளிட்ட அனைத்து  மானிய வெட்டுகளையும் ஒரேயடியாக அறிவித்து விட்டால், ஒரே பந்த்  உடன் முடிந்து விடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அனைத்தும்  அவ்வண்ணமே நடந்து முடிந்தன.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கடையடைப்பில் பங்கேற்றது.  வால் மார்ட் நுழைவை எதிர்ப்பதாக கூறும் புரட்சித் தலைவியோ,  கடையடைப்பை முறியடிக்க போலீசை ஏவினார். தற்போது அந்நிய முதலீட்டுக்கு எதிராக நெருப்பைக் கக்கும் மமதாவின் 2009-ஆம் ஆண்டு தேர்தல்  அறிக்கையோ, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை  வரவேற்பதாக கூறுகிறது. கேட்டதற்கு, அது ‘அச்சுப்பிழை‘ என்று  பதிலளித்து விட்டார் மமதா.

ஊழல்-எதிர்ப்பு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்ப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய ”பாரத் பந்த்” போராட்டத்தில் கலந்து கொண்ட சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களின் கதம்பக் கூட்டணி.

இந்தப் பதிலை ஒரு கவிதை என்றுதான் சோல்லவேண்டும்.  ஆட்சியிலிருக்கும்போது தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை  அமல்படுத்துவதும், தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சியான பின்னர்  அதனை எதிர்ப்பது போலப் பம்மாத்து செய்வதும் கடந்த 20 ஆண்டுகளாக  இந்திய ஓட்டுக் கட்சிகள் நடத்தி வரும் நாடகம். மக்களின் வாக்குகள்  மூலம் பெறப்பட்ட இறையாண்மைமிக்க அதிகாரத்தை, பன்னாட்டு  நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப்  பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசமைப்பை, ‘ஜனநாயகம்‘ என்று  குறிப்பிடப்படுவதும் ஒரு வகை அச்சுப்பிழைதானே!

பாரதிய ஜனதா முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான எல்லா  கட்சிகளுமே, தமது தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகவும், தத்தம் வாக்கு  வங்கிகளை திருப்திப்படுத்துவதற்காகவும் தனியார்மய-தாராளமய எதிர்ப்பு பேசி வருகிறார்கள். சிறு வணிகர்களைத்  தம் சமூக அடித்தளமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, வால்மார்ட்டை  எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கிறது. பொதுத்துறை தொழிற்சங்க  சந்தாக்களால் உயிர் தரித்திருக்கும் வலது, இடது போலிகள்,  ‘பொதுத்துறை தனியார் மயத்தை முறியடிப்போம்‘ என்று தொண்டை  நரம்பு புடைக்க பொளந்து கட்டுகிறார்கள்.

தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்ட  மக்கள் யாரேனும் போராடினால், உடனே அங்கெல்லாம் ஓட்டுக் கட்சிகள்  பிரசன்னமாகி விடுகிறார்கள். தமது கைத்தடிகள் புடைசூழ புயலைப் போல  வந்திறங்கி, ‘தனியார் மயம் தாராளமயம் உலகமயம், அந்நிய ஆதிக்கம்,  அமெரிக்க ஆதிக்கம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்ட  அனைத்தையும் எதிர்ப்பதாக’ப் புழுதி கிளப்பி விட்டு, அடுத்த மேடையைத்  தேடிப் புறப்படுகிறார்கள்.

கொட்டகை போட்டு கூட்டம் கூடியிருந்தால், அந்த மேடையில் ஏறி  ஆதரவு தெரிவிக்க வரவேண்டும் என்பது, எழவு வீட்டிற்கு கேதம் கேட்கச்  செல்வது போன்ற ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. தலைவர்  ஆதரிக்கும் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டனுக்கு  எதுவும் தெரிந்திருக்காது என்பது மட்டுமல்ல; இத் தலைவர்களின் வீர  உரைகள் எதுவும், அவர்களது அடுத்த தேர்தல் கூட்டணிகளையும்  தீர்மானிக்காது என்பதுதான் முக்கியம்.

டீசல் விலை ஏற்றத்தையோ எரிவாயு சிலிண்டர் குறைப்பையோ  நாளைக்கு ஆட்சிக்கு வர இருக்கும் எந்தக் கட்சியும் திரும்பப்  பெறப்போவதில்லை. இருந்தாலும் இந்த விலையேற்றம்  தோற்றுவித்திருக்கும் கோபத்தை, தங்களிடமிருந்து எந்தக் கட்சி  திறமையாக ஜேப்படி செயவிருக்கிறது என்பதை, மக்களே மிகுந்த  ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் ‘அரசியல்‘ நடத்தப்படுகிறது. தேர்தல்  அரசியல் என்பது ஒரு விளையாட்டு போலவும், அந்த விளையாட்டில்  கூட்டணி அமைப்பதும், மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பெறுவதும் ஒரு  சாமர்த்தியம் போலவும் கருதி அங்கீகரிப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மக்கள்  பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தனியார்மயம்-தாராளமயம் என்பது எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஆதரிக்கும்  கொள்கை மட்டுமல்ல; அது அவர்களுடைய சொந்த தொழிலின்  அடித்தளம். பவார், கட்கரி, மாறன், வதேரா முதல் தளி ராமச்சந்திரன்  வரையிலான சர்வகட்சி மேல்மட்டத்திற்கும், காண்டிராக்டு, ஏஜென்சி,  ரியல் எஸ்டேட் தொழில்களில் வளையவரும் கீழ்மட்டத்திற்கும் அதுதான்  அமுதசுரபி. பி.ஆர்.பி. வெட்டி விற்ற ஒவ்வொரு சதுரமீட்டர்   கிரானைட்டிலும், அம்பானிக்குத் தரப்பட்ட ஒவ்வொரு சதுர கி.மீ. நிலக்கரி  வயலிலும், ஏட்டு முதல் ஐ.ஜி. வரை, தலையாரி முதல் கலெக்டர் வரை,  முன்சீப் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி வரை, வட்டச்செயலர் முதல்  அமைச்சர் வரை ஆயிரக்கணக்கான திருடர்களின் பெயர்கள் கண்ணுக்குத்  தெரியாத வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள்தான் இந்தக்  கொள்கைகளைத் தாங்கி நிற்கும் அமைப்பு. இவர்களை வைத்தே  இக்கொள்கையை முறியடித்து விட முடியும் என்று பேசுபவர்கள்  கிறுக்கர்கள் அல்லது கேட்பவனைக் கிறுக்கனாக்குபவர்கள்.

ஊழல்-எதிர்ப்புதனியார்மயம் – தாராளமயம் என்பது உலக முதலாளித்துவம் தனது  நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்கும், தனது கொள்ளையை  விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வகுத்திருக்கும் கொள்கை. இந்தக்  கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் அரசமைப்பும் சட்டங்களும்  மாற்றியமைக்கப் படுவதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த அரசமைப்பின் மூலம், கட்சிகள், நீதிமன்றம், சட்டங்கள் மூலம் –  அந்தக் கொள்கைகளை மாற்றியமைப்பதோ, தடுப்பதோ நடக்காத காரியம்.

இந்த அமைப்புக்கு வெளியே நின்று இதனை எதிர்த்துப் போராடி  வீழ்த்துகின்ற மக்கள்திரள் போராட்டங்களின் மூலம், ஒரு புதிய  ஜனநாயக அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதற்குத் தீர்வு  காண முடியும். இதெல்லாம் உடனே ஆகக்கூடிய காரியமில்லை என்றும்,  காரியசாத்தியமான தீர்வைத் தேடவேண்டும் என்றும் கூறுபவர்கள்  இருக்கிறார்கள்.

இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க  வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச்  சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று  பேசுவதும் பித்தலாட்டம். போகாத ஊருக்கு வழி சொல்வது என்பதும்  இதுதான்.

தன்னார்வக் குழுக்களும், அறிவுத்துறையினரும், போலி  கம்யூனிஸ்டுகளும் அவரவர்க்கு உரிய மொழியில் இதைத்தான்  கூறிக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிசமல்லாத, முதலாளித்துவமும்  அல்லாத, இரண்டைக் காட்டிலும் மேலான, நீதியான ஒரு மாற்று  இருப்பதைப் போலவும், கையில் சிக்காமல் நழுவிக்கொண்டிருக்கும் அந்த  ‘மாற்றை‘ பிடிப்பதற்குத் தாங்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்  பம்மாத்து செகிறார்கள்.பம்மாத்துகளால் எதார்த்தத்தை எதிர்கொள்வதற்கு  மேற்கொள்ளப்படும் முயற்சி, கோமாளித்தனத்தில் முடிவது  தவிர்க்கவியலாதது.

அச்சம் காரணமாகவோ, ஆதாயம் காரணமாகவோ இவர்கள் தமக்குத்தாமே  வகுத்துக் கொண்டிருக்கும் எல்லைக் கோட்டினைக் காட்டி, இந்தப்  பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன். ஜனநாயக  நாட்டில பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்று எதிரியை  எச்சரிக்கிறார்கள்.

சிரிக்கிறீர்களா?

அந்த பார்டரை இவர்கள் மக்களின் மூளையிலும் அழுந்த இழுத்து,  தாண்டக்கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். இது  நகைச்சுவையில்லையே!

_____________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_____________________________________________

புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி!

18
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் – ருச்சி

28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.

தில்லியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள், கணிசமாக சம்பாதிப்பவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகின்றன. சித்தார்த் சில ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். இறுதியில் இருவரும் பெங்களூரில் செட்டில் ஆகி உள்ளனர். சித்தார்த் அக்செஞ்சர் நிறுவனத்திலும் ருச்சி போட்டான் இன்போடெக் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்திருக்கின்றனர்.

திருமணம் ஆன சில மாதங்களுக்குள்ளாகவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஆரம்பித்திருக்கின்றன. காதல் வற்றிப் போய் விட்ட திருமண வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டாக சித்தார்த்துடனான உறவுகளை ருச்சி மறுக்க ஆரம்பித்திருக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தார்த் மட்டும் டெல்லி குர்கானுக்கு வேலை மாற்றி போய் விட்டிருக்கிறான். பெங்களூரில் அவர்கள் குழந்தையுடன் வசித்த ருச்சியுடன் அவளது பெற்றோரும் தங்கியிருக்கின்றனர்.

கணவனும் மனைவியும் பிரிந்து இருந்தாலும், செல்போன் மூலம் சண்டை தொடர்ந்திருக்கிறது. சென்ற வாரம் தில்லியில் புதிதாக வீடு வாங்க விரும்பிய சித்தார்த், அதற்காக கடன் எடுத்து தருமாறு தொலைபேசி மூலம் ருச்சியை வற்புறுத்தியிருக்கிறான். ருச்சி அதை மறுத்திருக்கிறாள். இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை இரவு இரண்டு பேரும் தொலைபேசியில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக ருச்சியின் பெற்றோர் சொல்கின்றனர்.

கோபம் முற்றிய சித்தார்த் திங்கள் கிழமை டெல்லியில் இருந்து விமானத்தில் பயணித்து பெங்களூர் வீடு வந்து சேர்ந்து இருக்கிறான். ருச்சியை வலுக்கட்டாயமாக சண்டை இழுத்து, தடுக்க முற்பட்ட அவள் பெற்றோரையும், குழந்தையும் தள்ளிவிட்டு, கத்தியினால் ஆத்திரம் தீரும்வரை குத்தியிருக்கிறான்.

ருச்சி அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறாள். தன் கை மணிக்கட்டுகளை அறுத்துக் கொண்ட சித்தார்த் தன் மனைவியின் உயிரற்ற உடலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். குர்கானிலேயே கூர்மையான கத்தியை அவன் வாங்கியதாகவும் அதனால் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் போலீசார் சொல்கின்றனர்.

இப்படி ஒரு கொலையை ஐ.டி துறையில் பணியாற்றும், படித்த இளைஞன் செய்து உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம்.

ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு பெருமளவு சம்பளம் கிடைப்பதால்  நினைத்த பொருட்களை வாங்க முடிகிறது. ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. ‘எது தேவையானது, எது தேவை அற்றது’ என்று பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் அகன்று ‘எனக்கு வேண்டும்’ என்ற விருப்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

நினைத்ததை நினைத்த நொடியில் வாங்கமுடியும் என்ற எண்ணமே ஒரு வகை வெறியாக மாறுகிறது. ‘தமது விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் உடனேயே கிடைத்து விட வேண்டும்’ என்ற கருத்தும் ‘அதற்குத் தடையாக நிற்கும் யாரும் தனக்கு எதிரி’ என்ற எண்ணமும் வேரூன்றுகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் ஆகி விடுகிறது. பொறுப்புகள் அதிகமாகின்றன. ‘சொந்த வீடு வாங்கியாச்சா? யாரு பில்டர்?’ என்ற கேள்விக்கு சொல்லும் பதிலில் தமது ஸ்டேட்டஸை வரையறுத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது. ‘கார் இருக்கா? என்ன மாடல்?’ என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது.

சொந்த வீடு, அதுவும் உயர் நடுத்தர வர்க்க தரத்திலான வீடு, சொந்த கார், அதுவும் தனிச்சிறப்பான கார் என்று வாங்காமல் இருந்தால் உழைத்து முன்னேற வழி தெரியாதவன், பொறுப்புகளை சுமக்கும் தன்மை அற்றவன் என்ற இமேஜ் உருவாகி விடும். எப்படியும் கடன்பட்டாவது ஒரு கார், ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை ஊன்றப்படுகிறது.

‘எப்படியாவது வீடு வாங்கிவிட வேண்டும்’ என்று நினைத்து ருச்சியை கடன் வாங்கித் தர சித்தார்த் கேட்டிருக்கிறான். அதுவும் சண்டை போட்டு பிரிந்திருக்கும் நிலையிலும் மனைவி என்பவள் தனது சொத்து என்ற நோக்கில் அவளிடம் பணம் கேட்டிருக்கிறான். அதை ருச்சி மறுத்தது, அவனது ஏமாற்றங்களின் மீது கடைசித் துரும்பாக பழி வாங்கும் எண்ணத்தை விதைத்திருக்கிறது.

காதலித்து நடந்த திருமணம் இப்படி முடிந்துவிட்டதே என்று யோசிப்பவர்க்கு, ஐடி காதல் என்பது மனம், கொள்கை பொருத்தத்தின் அடிப்படையில் அரிதாகவே அமைகிறது என்பது நிதர்சனம். ஒவ்வொருவரின் சம்பாத்தியம், சேர்த்து வைத்துள்ள பொருட்கள், பரம்பரைச் சொத்து இவற்றின் அடிப்படையில் திருமண உறவுகள் முடிவெடுக்கப்படுகின்றன.

சண்டை என்று வந்தாலும், அதை விலக்கி தீர்த்துக் கொள்வதும், யாரிடம் தவறு நடந்துள்ளது என்பதை பேசி சரி செய்வதும், மன்னிப்பை மனதார கேட்பதும் ஆகிய நடைமுறைகள் பல கணவன் மனைவியரிடையே இருப்பதில்லை. பேருக்காக, ஊருக்காக, காத்திருக்கும் சினிமா டிக்கெட், போக வேண்டிய மால்கள், சேர்ந்து வாங்க வேண்டிய பொருட்களுக்காக, சுற்ற வேண்டிய ஊருக்காக, அன்றைய சண்டையை அப்படியே ஒதுக்கி, பிரச்சனைகளை புதைத்து விட்டு அடுத்த நுகர்வை நோக்கி போகிறார்கள். தீர்க்கப்படாத இந்த கோபங்கள் நாள்பட நாள்பட பகைமை வலுவாக வளர்கிறது.

இரு தரப்புமே பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் போது ‘எதற்காக விட்டுக் கொடுப்பது’ என்ற அடிப்படையில் முறுக்கிக் கொள்கின்றனர். இரு தரப்பு பெற்றோர்களும் மகனுக்கும் மகளுக்கும் தூபம் போட்டு தமது நலன்களை வலியுறுத்துவதும் நடக்கிறது.

என்னதான் பெண் ஐ.டி துறையில் ஆணுக்கு இணையாக பணம் சம்பாதித்தாலும் அவளுக்கு சுதந்திரம் என்பது வேலைக்குபோய் சம்பாதிப்பதோடு முடிந்து விடுகிறது. மனைவியின் ஏடிஎம் கார்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கணவர்களும் உண்டு.

சம்பாதிக்கும் பெண்ணின் சம்பாத்தியத்திற்கு கணவன் ஒரு பக்கம் உரிமை கொண்டாடினால், மற்றொரு புறம் அவளைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து, சம்பாதிக்க அனுப்பிய பெற்றோர் இன்று அந்த லட்சக்கணக்கான பணமும் எவனோ ஒருத்தன் கைக்கு போகிறதே என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது. ஐ.டி வேலைக்கு போகும் பெணின் பெற்றோர்கள், ஏ.டி.எம். கார்டு அவள் கணவரிடம் இருப்பதை விரும்புவதும் இல்லை அதற்காக மகளை இடித்துரைக்காமல் விடுவதும் இல்லை.

கணவன், மனைவி ஷிப்ட் முறையில் வேலைக்குப் போகும் சூழலில் வீட்டில் அவர்கள் பெற்றோர்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதும் பெருகியுள்ளது. தங்கள் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் பிள்ளைகளுடன் வார இறுதி சுற்றுலாக்கள், கடைத்தெரு உலாக்கள் போவதற்கும் அவர்கள் தயங்குவது இல்லை.

கணவன் மனைவிக்கிடையே சண்டை வரும் போது பெற்றோர்கள் தலையீட்டால் வெறுப்பு பலமடங்கு பெருகுகிறது.

இன்னோரு கோணத்தில் நிறுவனத்தில் தனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர். ஹோட்டலில் தோசை நடுவில் பிய்ந்திருந்தால் பரிமாறுபவரிடம் கோபப்படுவது, கார் பார்க் செய்ய இடமில்லா விட்டால் செக்யூரிட்டியை கோபிப்பது போன்றவை உதாரணங்கள். வீட்டில் மனைவியிடமும் அடிமை போன்ற பணிவை எதிர்பார்க்கிறார்கள்.

இந்தச் சூழல்களின் வெளிப்பாடுதான் திட்டம் தீட்டி, கத்தி வாங்கி வந்து தன் மனைவியை 11 முறை குத்தி கொலை செய்த சித்தார்த்தின் மனோபாவம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணராமல் ஒரு விலங்கைப் போல தன் குழந்தையின் கண்முன்னே, அதன் தாயை கொல்லும் அளவுக்கு கொடுமை வாய்ந்தவனாக உருவாக்கி இருக்கிறது அவனுடைய சமூகச் சூழல்.

படிக்க:

பால் அல்ல மாடே கலப்படம்தான்!

16
பர்கூர் மாடு
பர்கூர் மாடு
காங்கேயம் காளை
காங்கேயம் காளை

ற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் விவசாயிகள் மந்தை மந்தையாக  பாரம்பரிய மாடுகளை வைத்திருந்தனர். என்றைக்கு அதிக பால் மோகம் வந்ததோ… அன்றைக்கே உள்ளூர் மாடுகள் அழிப்பும், வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் இறக்குமதியும் பெருகி விட்டது. ஏர் ஓடிய நிலங்களில் எல்லாம் இப்போது டிராக்டர்களின் ஆட்சி நடக்கிறது. ஏரில் பூட்டப்பட்ட மாடுகள் எல்லாம்,…  அடிமாடுகளாகி விட்டன. இப்போது எங்கு பார்த்தாலும்  பெருகிக் கிடப்பது… பாலுக்காகவே  வளர்க்கப்படும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் தான்.

கால்நடைகளைப் போற்றிப் பாதுகாத்த…  நிலக்கிழார்கள் தொடங்கி, அரை ஏக்கர் விவசாயி வரை… தான் எத்தனை ஜதை ஏர்களுக்கு சொந்தக்காரன் என்று சொல்லிக்கொள்வதிலே தான் பெருமைப்பட்டனர். அதற்காகவே, மாடுகளை பட்டிப்பட்டியாக தொழுவத்தில் அடைத்து வளர்த்தனர். அந்த மாடுகள், நிலத்திற்கு தேவையான எருவைக் கொடுத்து, உழவும் செய்தது.  1936-ம் ஆண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கிய கால்நடைத் துறையில் துணை இயக்குநராக வேலை பார்த்த ’கேப்டன் லிட்டில் உட்’ என்பவர், தான் எழுதிய ‘தென்னிந்திய கால்நடைகள்’ என்ற புத்தகத்தில் ‘தமிழர்கள் காளங் கன்றுகள் பிறந்தால் பால் முழுவதையும் கன்றுகளைக் குடிக்க விட்டும், பசுங் கன்றுகள் பிறந்தால் கவனிப்பாரற்றும் வளர்த்தனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை முடிந்ததும், வயல்களில் முழுவதும் மண்டிக் கிடக்கும் புற்களையும், உயரமான நெல் தாளையும்  மேய்வதற்கு முதலில்… காளங்கன்று ஈன்ற பசுவை தான் அனுமதித்தனர்.’ என்று சொல்லி இருக்கிறார்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் நம்முடைய முன்னோர்கள் தரமான காளை மாடுகளை உருவாக்கினர்.  நிறம், கொம்பு அமைப்பு, கால் குளம்பு அமைப்பு, சுழி போன்றவற்றைப் பார்த்து சிறந்த குணாதிசயம் இருக்கும் காளங் கன்றுகளைதான் பொலி காளைகளாகத் தேர்வு செய்து கோவில் மாடுகளாகத் திரிய விட்டனர். பொலி காளையை பொதுத் சொத்தாகப் போற்றி பாதுகாத்தனர். இந்தக் காளைகள் யார் நிலத்தில் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் மேய்ந்து கொள்ளலாம். சேதங்கள் அனைத்தும், சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு  பொறுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாக ஊர் முழுவதும் பருவத்திற்கு வரும் மாடுகளை மோப்பம் பிடித்து… கூடி, மனிதனின் உதவிகள் இன்றி ஊர் முழுவதும் தரமான காளைகள் உற்பத்தியாகின. அவை அதிகமான இழுவைத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, குறியீட்டு ஒலிகளை எளிதில் புரிந்துகொள்ளும் சக்தி கொண்டவையாக இருந்தன. காளைகளில்… நோஞ்சான்கள், கொம்பு வளைந்தவை, அடர்த்தி குறைந்த வால் உள்ளவை, ஓடுகாலித்தனம் உள்ளவை, திருட்டுத்தனம்  போன்ற குணாதிசயம் உள்ள  காளைகளை இனப்பெருக்கம் செய்ய விடாமல் காயடித்து ’ஆண்மை நீக்கம்’ செய்து… உயிர்ம நேயத்துடன் வண்டி இழுவைக்கவும், உழவுக்கும்  பயன்படுத்தினர். இதன் மூலம் பகுதிக்கு ஏற்ற தரமான காளை மாடுகள் உருவாகின.  உதாரணமாக காங்கேயம் மற்றும் உம்பளாச்சேரி மாடுகளைப் பற்றிச் சொல்லலாம்.

காங்கேயம் ரக மாடுகளுக்கு நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளை  சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும்.

உம்பளாச்சேரி காளை டெல்டா பகுதியில் இருக்கக் கூடிய தொடைகால் சேற்றில் கூட தொடர்ச்சியாக 8 மணி நேரம் சோர்வில்லாமல்  வேலை செய்ய வல்லது. இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும் . காலை  தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி  வைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். இன்னும் பர்கூர் மலை மாடு, புலிக்குளம், மணப்பாறை, கண்ணாபுரம் என்று மாட்டினங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைகளோடு, காலம் காலமாக போற்றி வளர்த்த மாடுகள் அனைத்தையும் ‘வெண்மைப் புரட்சிக்கு’ பலி கொடுக்க ஆரம்பித்ததன் விளைவு தான்… கால் காணி ( 33 சென்ட்) நிலத்திற்கு கூட  டிராக்டர் இல்லாத விவசாயம் சாத்தியமில்லாத நிலை.

பர்கூர் மாடு
பர்கூர் மாடு

இந்த வெண்மைப் புரட்சி (வெங்காயம்) வந்த பிறகு… நம் நாட்டில் சுற்றித் திரிந்த தரமான காளைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக காயடித்து ஆண்மை நீக்கம் செய்யப்படுவதும்; ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து   பசுக்களில் திருட்டுத் தனமாக சினை ஊசி செலுத்தும்  செயல்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இன்றைக்குக் காணுமிடமெல்லாம் கலப்பின மாடுகள் ராஜ்ஜியமாக  மாறிப் போனது. இந்தக் கலப்பின மாட்டை உற்பத்திச் செய்வதில் தான் அரசு மிகுந்த கவனமாக இருந்ததே ஒழிய…  உள்ளூர் மாட்டினங்களைப் பாதுக்காக்கவில்லை. கலப்பினப் பசுக்களால் பால் வளம் பெருகியது… காளைகள் குறைந்தன. கூடவே பலவிதமான நோய்களும் வரத் துவங்கின.

இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் டிராக்டர்களது  உழவு தான் நடக்கின்றன.  காளைகள் மண்ணை செழிக்க வைக்க உரமிட்டது. ஆனால் டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டு புகையை விட்டது. கூடவே, ஆயிலையும் பீச்சியடிக்கிறது. மாடு சிறுநீர் கழித்தால் உரம்; டிராக்டரில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு லிட்டர் ஆயில் தண்ணீரில் கலந்தால்… 1.58 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் நாசம்.கூடவே, நிலத்தில் கலந்தால் மண் மலடாகும்.

ஒரு கலப்பின மாட்டை உருவாக்குவதற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய்கள் வீதம், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். அப்படி உற்பத்தி செய்யப்படும் மாடுகளில்  பலவிதமான வியாதிகள்… சினை பிடிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு… இன்றைக்கு அனைத்து மாடுகளும்  கேரளாவுக்கு அடி மாட்டுக்கு ஏற்றப்படுகிறது.

ஒரு உயிரினத்தில் 67 சதவீத அளவு தான் கலப்பு செய்யலாம் என்ற சட்டம் இருக்கும் போது,  மாடுகளில் மட்டும் இது வரையில் 90 சதவீதம் கலப்பின மாடுகள் உருவாக்கி இருக்கிறனர். கலப்பின மாடுகள் பெருக்கத்தால்… ரகத்திற்கு பெயர் தெரியாத நாட்டு மாடுகளை ND (none described) என்ற பெயர் வைத்து, கலப்பு செய்து விட்டனர். இதனால் இன்றைக்கு பல இனங்கள் இல்லாமல் போய் விட்டது. தற்பொழுது வரை, இந்தியா முழுவதும் 30 வகை மாட்டினங்கள் மட்டும்தான் வகைப்படுத்தப் பட்டிக்கிறது. வகைப்படுத்தப் படாமல் சுமார் 30 இனங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காங்கேயம், உம்பளாச்சேரி ரக மாடுகளைத் தவிர… திருவண்ணாமலை, பர்கூர், புலிக்குளம், மணப்பாறை, கிடை மாடுகள் என்று பலவகையான இனங்கள் இதுவரை வரையறை செய்யப்படாமலே இருக்கின்றன.

1972 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் ‘வெண்மைப் புரட்சியின்’ விளைவால் 1.25 லட்சம் காளை மாடுகள் குறைந்துள்ளதாகவும், 1976 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் மட்டும் ’பர்கூர்’ இனக் காளைகள் 49 சதவீதமும், ’காங்கேயம்’ இனக் காளைகள் 18 சதவீதமும் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கால்நடைக் கணக்கெடுப்புப் புள்ளிவிபரம்  சொல்கிறது.

பொதுவாக பிறக்கும் கன்றின் எடையில் 10 சதவீதம் தான் தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அதன்படி 20 கிலோ எடை கொண்ட பசுங் கன்றின் எடையில் 1/10 பால் என்று 2 லிட்டர்கள் பால் தான் சுரக்கும். இந்தப் பால் குறைவாக சுரக்கிறது என்பது தான் அவர்களின் வாதம். அதற்காகத்தான் செயற்கை முறையில் குளிர் நாடுகளில் இருந்து உறை விந்துகளை இறக்குமதி செய்து செயற்கை முறையில் கருவூட்டலை அதிகப்படுத்தினார்கள். கன்று ஈன்ற 60 நாள் இடைவெளியில் பருவத்திற்கு வந்தவுடன் பசுவுக்கு கருவூட்டல் செய்யப்பட்டு, வருடம் முழுவதும் உள்ள  365 நாட்களில் பெரும்பாலான நாட்களும் இயந்திரத்தைப் போன்று பாலைக் கறப்பதிலேயே குறியாக இருந்தனர்.  பால் உற்பத்தியும் பெருகியது. பாலுக்கு பசு மாடு மட்டும் போதும், காளை தேவையில்லை என்று காளை அழிப்பு நடத்த நடத்த… வியாதிகளும் அதிகமாகியது.

குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது.  இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை புதிதாக  பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான்  செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு…  நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’  முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு  குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு   பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது.  இவ்வாறு ஒழுங்கற்ற  ஹார்மோன்  சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி  இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது,   நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன.  ஏ1  கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக்  கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார்  பேராசிரியர்  பாப் எலியாட்.

ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s   medicine at  aucklanad  university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும்,  அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும்  குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள்  ஏ2  பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார்.    பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில்  50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம்.   கலப்பின  மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு  அரசு துடிக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா… அம்மா…’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார். இந்த கால்நடைத்துறை மு(ம)ந்திரி கலப்பின கால்நடைகள் கத்துவதை கேட்டிருக்க மாட்டார் போலும்.  தற்பொழுது எந்த கலப்பின மாடும் ‘அம்மா’ என்று கூட கத்த திராணி இல்லாமல்… ‘ம்ம்ம்ம்ம்ம்ம்மா..ஆஆஆஆ’ என்று விநோதமாகத்தான் கத்துகிறது.  தமிழக முதல்வர் அம்மையார் கோவில் கோவிலாக போய் நந்தியை வழிப்படுகிறாரே… காளைகளை அழித்து விட்டு ஏன் நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். ‘தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்கும் நந்தியை எடுத்துவிட்டு, சிவனுக்கு டிராக்டரை பிரதிஷ்டையாக நிறுத்த வேண்டியது தானே!

காளை மாடுகளின் அழிவு என்பது ஒரு கலாச்சாரத்தின் அழிவு தான். மாடு சுமந்த ஏர்க் கலப்பைகளின் மரணம் தான். கால்நடைகளை மட்டும் இழக்கவில்லை. நம்முடைய பாரம்பரியம்…  அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களின்  அறிவையும்  உதாசீனப்படுத்தி விட்டோம். இனியாவது மண்ணுக்கு ஏற்ற மரபுக்கு ஏற்ற… பாரம்பரிய கால்நடை இனத்தைப் பாதுகாக்க வேண்டும்.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.

_____________________________________________________

கொசாக்கியன்
_____________________________________________________