முகப்புஅரசியல்ஊடகம்புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

-

புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

 1. புதிய-தலைமுறைNightingale Matriculation Higher Secondary School,
 2. Valliammai Polytechnic Institute,
 3. SRM Engineering College,
 4. SRM College of Nursing and SRM College of Pharmacy,
 5. SRM School of Nursing and SRM College of Physiotherapy,
 6. SRM Institute of Hotel Management,
 7. SRM Arts & Science,
 8. SRM Polytechnic Institute,
 9. Easwari Engineering College,
 10. SRM College of Occupational Therapy,
 11. SRM Institute of Management & Technology,
 12. Valliammai Engineering College,
 13. SRM Institute of Science and Technology,
 14. SRM Dental College,
 15. SRM Medical College Hospital and Research Centre,
 16. SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
 17. Chennai Medical College, Trichy
 18. Inter Disciplinary School of Indian System of Medicine,
 19. TRP Engineering College, Trichy,
 20. Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

ந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய-தலைமுறை-2

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது.  மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

புதிய-தலைமுறை

ல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. ஆக மொத்தம் என்ன சொல்ல வரீங்கன்னா, வினவுவை தவிர எல்லாரும் கெட்டவனுங்க. நல்ல பாலிசி.

  • அண்ணே, இவர்களை ஊர்பக்கம் சென்று பாருங்கள் சாதிகட்சி நடுத்துகிறார்கள்,
   சாதியும், பணமும் தான் இவர்களின் அடித்தளம்.

   சாதியை எப்படி விளம்பரம் படுத்துகிறார்கள், அதையே இந்த சேனலில் விளம்பரம் செய்ய சொல்லுங்கள், இவர்கள் சாயம் வெளுத்துபோய் விடும்.

   எதற்கு இந்த ஏமாற்று வேலை என்று சிந்திக்க மாட்டிங்களா?

  • நல்லவங்களா கெட்டவங்களான்னு எதை வச்சு முடிவு பன்றது வெங்கடேசா ? யார் பக்கம் நிக்கிறாங்கங்கிறதை வச்சு தானே முடிவு பன்ன முடியும் ? ஆனா புதிய தலைமுறை இந்தப் பக்கமும் இல்லையாம் அந்தப் பக்கமும் இல்லையாம் நடு செண்ட்ராம். அப்படி ஒரு பக்கம் இருக்க முடியுமா ? அவங்க எந்தப் பக்கம் நிக்கிறாங்கங்கிறத மறைக்கிறதுக்கு தான் இந்த நடுப்பக்கம் டயலாக்.

   பதிவு சொல்ல வருவது இதைத்தான். மற்றபடி வினவு எல்லோரையும் கெட்டவங்கன்னா சொல்லுது ? அப்படி எங்கேயும் சொல்லவில்லையே. காரணத்தோடும் ஆதரத்தோடும் தான் விமர்சிக்கிறது. எங்கேயாவது காரணமின்றி கண்டமேனிக்கு திட்டியிருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.

 2. எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள்

 3. அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல…

  அய்யா வினவு அவர்களே, ராமின் ஆதங்கத்தை நீக்குமாறு முஸ்லீம்களைப் பற்றியும் தான் எழுதுங்களேன். முஸ்லீம்கள் இப்படி ஏதாவது குத்தக்க்காசு கட்டிவிட்டு மக்காவிற்கு செல்கிறார்களா? இருந்தால் எழுதிவிடுங்கள். இவரின் ஆதங்கத்தைப் பார்த்தால் இரவு தூங்கமாட்டார் போலிருக்கிறது.

   • கல்லெறியும் முஸ்லீம்கள் இன்னசென்ட் என்றோ அல்லது அவர்கள் பாவம் எதுவும் செய்யவில்லை என்றோ நான் சொல்லவரவில்லை. ஒருவன் என்னால் பாதிக்கப்பட்டு விட்டான். நான் பிராயசித்தமாக கோயிலுக்கு போய் உண்டியலில் காசு போடுவதோ, அல்லது அலகு குத்தி காவடி தூக்குவதோ (நீங்கள் காவடி எல்லாம் தூக்க மாட்டீர்கள்) அல்லது மக்காவிற்கு போய் வருவதோ சரியான தீர்வாகுமா? கடவுளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை மன்னிப்பதற்கு? என்னால் பாதிக்கப்பட்டவனல்லவா என்னை மன்னிக்க வேண்டும்?

    • God/Allah here means ones own conscience,when a man feels guilty for his offences he seeks his own conscience.Thats the whole point of god and theism,this is what you never forget.God is what makes justice and peace between u and the person affected by your deeds.

     Funnily,i have taken a kavadi in my life already.It is funny that you decide that i have not,but as always you fail.

    • //கடவுளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை மன்னிப்பதற்கு? என்னால் பாதிக்கப்பட்டவனல்லவா என்னை மன்னிக்க வேண்டும்?//
     Insight.

  • முட்டாள்தனமாக கண்ணை மூடிக் கொண்டு என்னை நம்பு என்று சொல்லும் எந்தக் கடவுளும் அல்லது எந்த மதமும் எனது முடிக்கு சமம் ராம் அய்யா அவர்களே

  • aamam paavamanippu vaankivittu meendum paavam seivathellam inke kutramillai..aiyappan kovil valakkam matume kutrama?pakistan kooda poga vendam india vilirunthu konde islamiyaththai patri kurai koori paarungal enna aavirgal endru therium ..athenna vellaikaaran vithaiththuvittu ponaathai innum valarththu aruvadai seikirigal..

 4. கட்டுரையில் பாரி வேந்தனின் அபரிதமான பண வளர்ச்சி பற்றியும், அவரின் நடுநிலைத் தன்மை பற்றியும் எழுதியிருக்க, அதை விட்டு விட்டு ஏன் மதத்தின் பக்கமே நிற்கிறீர்கள்.

  மதத்தை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். வெறி அதிகமாகி விட்டால் அம்பலத்திற்கு சென்று இரண்டு குட்டிக் கரணம் அடித்து விட்டு வந்து விடுங்கள்.

  நல்ல விவாதத்தை மடை மாற்றி விடாதீர்கள்.

 5. புதிய தலைமுறை பற்றி பலருக்கும் இருந்த மாயை இந்த கட்டுரை கலைத்திருக்கிறது. சிலரை பற்றி செய்தி எழுதப் போனால், மிக நீளமான கட்டுரையே எழுத வேண்டியிருக்கிறது. இப்படி பல அனுபவத்தை வினவு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செய்திகளை அருமையாக தருகிறீர்கள். நன்றி.

 6. கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகளையும் அவற்றின் செய்திகளையும் பார்க்கும் போது இது எவ்வளவோ பரவாயில்லை என திருப்தி பட்டுக்கொள்ளவேண்டியது தான். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ. நிறைய விஷயங்களை கவர் செய்கிறார்கள். மேலும் முதலாளிகளுக்கு இடையில் போட்டி வருவது ஒரு வகையில் நல்லது தான். மற்றபடி நீங்கள் சொல்வது சரி. செய்தி சேனல்களுக்கு இடையே விஷயங்களை கவர் செய்வதில் போட்டி இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு நிறைய உண்மைகள் தெரிய வரும். அதன் தொடக்கமாக இதை கருதலாம்.

  • பல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள்.

   பதிவிலிருந்து…

 7. புதிய தலைமுறை மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்சிகளை வடிவமைப்பதால் அதை நாம் பாராட்ட வேண்டும்.
  புதுப்புது அர்த்தங்கள், நன்பேண்டா, நேர்பட பேசு போன்ற நிகழ்சிகள் விவாத களமாக வடிவமைத்து மக்களிடம் அரசியல், சமூக புரிதலை ஏற்படுத்துவது அவசியம். News analysis live program ‘புதுப்புது அர்த்தங்கள்’ தகுந்த விருந்தினரை தேர்வு செய்வது அந்த தொலைகாட்சியின் உரிமை.The nature of TV media is immediate and timing of the program is 7.30 am, so obviously the guest have to be prepared.” மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார்.” – வினாவுக்கு இதில் என்ன பிரச்சனை ? சித்தாந்தம் தொடர்பான கருத்தில் ஒரு சமூக ஆர்வலர் ஆதரவாகவோ, எதிராகவோ இருக்கலாம். அவரே ஒரு ஊடகவியளராக அந்த பிரச்சனையை கைளாளும் போது தன சொந்த விருப்பு வெறுப்புக்கு மாறாக நடுநிலையோடு தான் அணுக முடியும். இருதரப்பினரின் கருத்தை விவாதித்து முடிவை மக்கள் கையில் விடும் பணியை தான் புதுப்புது அர்த்தங்கள், நன்பேண்டா, நேர்பட பேசு போன்ற நிகழ்சிகள் செய்து கொண்டிருக்கிறது. ஞாநி இந்த நடுநிலையை தான் பாராட்டுகிறார் என்பதை உணராமலோ திரித்தோ வினவு விமர்சனம் செய்திருப்பது கண்டித்தக்கது. SRM கல்வி நிறுவனத்தின் கல்வி கொள்ளை தனியாக விமர்சிக்கப்பட வேண்டிய பிரச்சனை.வினவு இப்படி தொடர்ந்து ஒருதலைபட்சமா பிரச்சனைகளை அனுகுமானால் அதன் நம்பகத்தன்மையை இழக்கும் என எச்சரிக்கிறேன்.

  • நீங்க என்ன சொல்ல வர்றீங்க தினேஷ் ? புதிய தலைமுறைக்கும் சன் நியூசுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

 8. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஏற்க்கனவே விஜய் டிவியில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் இருதரப்பை மோத விட்டு தன்னுடைய தீர்ப்பு எது என்று கூறாமல் நன்கு பேசுபவருக்கு பரிசு என கொடுத்து நிகழ்ச்சியை முடித்து காசு பார்ப்பார்கள். அது போன்றே சற்று மாற்றம் பிரச்சனைக்குரிய அரசியல் வாதிகளையே மோதவிட்டு காசு பார்கிறார்கள். அவர்களை போலவே இவர்களும் தன்னுடைய கருத்தை கூறமாட்டார்கள் விறகு வேகமாக எரிய அப்ப அப்ப கேள்வி கேட்டு தீ மூட்டிவிடுவார்கள் சரியாக நேரம் ஆனவுடன் நிகழ்ச்சி முடிந்துவிடும் நாளை மற்றொரு நாய் சண்டையை பார்ப்போம் என நிகழ்ச்சியை முடித்துவிடுவார்கள். நிகழ்ச்சியை பார்க்கும் பாமர மக்களிடம் உள்ள ஓட்டுச்சீட்டு அரசியல் வாதிகளின் மீது வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச ஆத்திரத்தையும்(நெருப்பு கங்கையும்)நீர் ஊற்றி அனைத்துவிடுகின்றனர். தவறியும் அரசுக்கெதிரான போராட்டங்களை காண்பிப்பதில்லை அப்படி எதாவது போராட்டத்தை தவிர்க்க முடியாத காரணங்களால் காட்டினாலும் அந்த போராட்டத்தை விளம்பரங்களை போல சாதாரணமாக காட்டிவிடுவார்கள். நிறைய பேருக்கு இந்த சேனல் யாருடையது? இவர்கள் பின்னனி என்ன? என்பது கூட தெரியாமல் அப்பாவித்தனமாக நடுநிலையா சொல்றாங்கய்யா அருமையா இருக்குதுப்பான்னு திரைப்படம் பார்ப்பது போல் கதை சொல்கிறார்கள். இனி பொழுது போக்க சினிமா தேவையில்லை அந்த இடத்தை பு.த தீர்த்து வைக்கிறது. வினவு கூறியது போன்று அன்னாஅசாரேவிற்க்கும் இந்த பு.த.சேனலுக்கும் ஜோடிப்பொருத்தம் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. உழைக்கும் மக்களிடையே அடுத்த டாஸ்மார்க் நுழைந்துவிடாமல் இவர்களின் போலி முகத்தை திரைகிழிப்போம். புதிய தலைமுறை(புதிய டாஸ்மார்க்).

 9. நான் உங்கள் பதிவுகளை பார்த்தவரையில் நிங்கள் சாடாத பத்திரிகையோ தொலைகாட்சியோ எதுவும் தமிழ்நாட்டில் மிச்சம் இல்லை, ஐயா நிங்கள் தயவுசெய்து ஒரு நல்லவற்றையாவது அடையாளம் காட்டுங்கள். உங்கள் தலத்திற்கு வினவு என்பதிற்கு பதிலாக வசவு என்று பெயர் வைத்தால் நன்று.

  • நிறைய நல்ல விசயங்கள் வினவு தளத்தில் எழுதப்பட்டுள்ளது தேடிப்படியுங்கள் ராஜேஷ். உதாரணமாக அருந்ததிராயின் கட்டுரைகள், சாய்நாதின் கட்டுரைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. உலகப்புகழ் பெற்ற பல கவிஞர்களை பற்றிய குறிப்புகளுடன் அவர்களுடைய கவிதைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது. சில நல்ல ஆங்கிலப்படங்களை பாராட்டி சினிமா விமர்சனம் எழுதப்பட்டிருக்கிறது. வழக்கு எண் என்கிற தமிழ் படத்தை கூட வினவில் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் நீங்கள் வாசிக்கவில்லையா ?

  • இரண்டு பேரை திட்டி ஒருவரையவது பாராட்டினால் தான் வினவை நம்புவேன் என்பது பகுத்தறியாமை. கலாநிதி மாறன் கருணாநிதி பேரன்,தி.மு.க என்ற அடையாளம் சன்நியூசில் தெரிகிறது போல பலருக்கும் புதியதலைமுறை பற்றி தெரியவராத நிலையில் இந்த அறிமுகம் அவசியமாகிறது.

  • \\நிங்கள் சாடாத பத்திரிகையோ தொலைகாட்சியோ எதுவும் தமிழ்நாட்டில் மிச்சம் இல்லை, ஐயா நிங்கள் தயவுசெய்து ஒரு நல்லவற்றையாவது அடையாளம் காட்டுங்கள்\\

   தமிழ்நாட்டில் காட்டுவதற்கு என்ன நல்லது இருக்கு, உழைக்கும் மக்களின் தியாகங்களை தவிர?

   அப்படி ஏதாவது நல்லது இருந்தால் நீங்களே எழுதி அனுப்புங்கள், நானும் படிக்க ஆர்வமாக இருக்கேன்.

 10. புதிய தலைமுறைக்குப் போட்டியாக இன்னொரு ஒளிபரப்பு வரவிருக்கிறது. துவங்கப்போவது வேறு யாருமல்ல? சாட்சாத் பாரிவேந்தரே தான். தன்னுடைய கட்சிச் செய்திகளை ஒளிபரப்ப மகன் சத்தியநாராயணா மறுத்துவிட்டதால் பாரியின் முடிவு இப்படி ஆகியிருக்கிறது. ஆனாலும் தமிழகத்தின் படிப்பாளிகள் இருக்கிறார்களே! அவர்களின் சார்புத்தன்மைக்கு ஒரு கிரகத்தையே பரிசாக வழங்கலாம்.செய்தியே சொல்லாமல் செய்தி வாசிக்கிற ஒரே சேனல் பு.த தான்!

 11. இரண்டு தலைமுறையாக கொள்ளையடிதுவரும் எஸ். ஆர். எம். பச்சைமுத்து இந்த தலைமுறை யையும் கல்வியின் முலம் ,தம்ழ நாடு மட்டும் மல்ல இந்தியா முழுவதும் கல்வி வியாபாரியா உலா வரும் பரிவேந்தன் இலங்கையிலும் கொள்ளையிட தொடங்கி இருப்பதாய் இந்த கட்டுரைமுலம் புரிதல் கொடுத்த வினவு க்கு நன்றி ……

 12. ஐயா அதைப் பாராட்டுபவர்களுக்கு அதன் பின்னால் இருப்பது யார்,அவரது தொழில் சார்ந்த அக்கறைகள் பற்றி தெரியாதா என்ன.இருந்தாலும் ஏதோ சிலவற்றில் நன்றாக செய்கிறார்கள், சன் குழுமத்திற்கு ஒரு மாற்றாக இருக்கட்டும் என்று பாராட்டுகிறார்கள். அதற்காக ஞாநி கல்வியில் தனியார்மயத்தை ஆதரிப்பவர் என்றா பொருள் கொள்ள முடியும். எல்லோரும் வினவு போல் இருந்து விட்டால் வினவின் தனித்துவம் என்ன ஆவது என்ற நல்லெணத்தினால் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் :).நீங்க பாட்டுக்கு உங்க கச்சேரியை நடத்துங்க ராசா

  • எல்லோரும் வினவு மாதிரியே ஆகனும்ங்கிறது தான் ராசா வினவோட ஆசை. வினவு மட்டுமே வினவா இருந்தால் தனிக்கச்சேரி தான் நடத்திக்கொண்டிருக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து கூட்டுக்கச்சேரி நடத்த வேண்டும் என்கிறது வினவு. இதிலென்ன தப்பு கேள்வி ?

 13. அய்யா:

  எஸ்.ஆர. எம் கல்லூரி அமைந்திருக்கும் காட்டாங்குளத்தூர் வளாகம் சோழர் காலத்தில் (சுமார் பத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு) அமைக்கப் பட்ட காட்டங்குளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.

  கொடுமை என்னவென்றால், இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரியின் மீது நின்று கொண்டு இருக்கும் ஒரு கட்டிடத்தில் இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Science Congress) 98 வது பேராயத்தை (மாநாட்டை)நடத்தி நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஏரி குளங்களை பாதுக்காக வேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்கள்.

  இந்திய அறிவியல் கழகத்தையும் அறிவியல் பேராயத்தையும் நிறுவிய இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் எல்லோருக்கும் புரியும்படி நமது மூதாதையர் அமைத்த ஏரிகள், குளங்களைக் காக்க வேண்டும் என்று ஒரு அருமையான கட்டுரையை ‘தண்ணீரே அமிழ்தம்’ (Water – Elixir of Life)என்ற தலைப்பில் எழுதினார். சிறு குழந்தைகளுக்கு நல்ல பண்புகள் வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் எழுதிய கட்டுரை பல மாநிலங்களில் ஆங்கிலம், மலையாளம் உட்பட பல மொழியில் பாடங்களாக வைத்திருக்கிரார்கள்.

  அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தான் உருவாக்கிய அறிவியல் பேராயம் (ISC) கொல்லப்பட்ட ஒரு ஏரியில் நின்று கொண்டிருக்கும் எஸ்.ஆர.எம் கல்லூரியில் நடைபெற்று அதிலும் இப்படியொரு தீர்மனத்தை நிறைவேற்றும் காட்சியை கண்டு என்ன செய்திருப்பாரோ தெரியாது. உறுதியாக, தான் கட்டியிருந்த பஞ்சகச்சத்தையும் டர்பனையும் கழற்றி மிஞ்சியிருக்கும் ஏரிக் கரை புளிய மரத்தில் தூக்கு மாட்டிச் செத்திருப்பார்.

  பலரது ஆக்கிரமிப்புகள் பற்றி எழுதி பேசி வரும் பு.த அவர்கள் கட்டம் நிற்கும் சோழர கால ஏரிகளின் ஆக்கிரமிப்பு பற்றி நிகழ்ச்சி நடத்துமா? அந்தக் கட்டிடங்களை இடித்து அந்த ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்குமா?

  இதுதான் ‘படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்னும் ஊருக்கு உபதேச வேளை போலிருக்கிறது.

  Krishna Kumar.

 14. வர வர வினவு படிக்கும் போது நல்ல நகைச்சுவை படிக்கும் திருப்தி கிடைக்கிறது.

  “புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை.” — ஆமா, இனிமே ஒரு சேனலை மாற்றும் போது, அதன் உரிமையாளர், அவரது வருமான சான்றிதழ் இதெல்லாம் கிடைத்த பின்பே பார்க்க வேண்டும்.

  “ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்” — குடுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளை அடித்து இந்தப் பணத்தை கவர்ந்து செல்லவில்லை. அவர்களது நிறுவனங்களில் தரப்படும் பட்டங்களைப் பெற இவ்வளவு பணம் மட்டுமே தகுதி என்று அவர்கள் பறைசாற்றியும், அது வெற்றிகரமாக அமுலில் இருந்தால், தப்பு அவர்களிடமில்லை.
  இனாமாக சீட்டு தந்தாள் புதிய தலைமுறை பார்க்க தடை இருக்காதோ?

  “இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர்” — நான் கூட 40 வருஷம் குமாஸ்தாவா இருந்து, ஒரு 4 லட்சம் சேமிப்பில் வைத்திருக்கிறேன். அதை வெச்சுட்டு ஒரு டி. வி. சேனல் ஆரம்பிச்சுடலாமா? முறைப்படி, நீங்கள் “நியாய வருமானத்தில் டி. வி. சேனல் ஆரம்பிப்பது எப்படி”-ன்னு ஒரு தலையங்கம் எழுதுங்களேன். நீங்கள் சொல்வது சரிதான், நான் அந்த டி. வி. சேனலை ஆரம்பிக்கும் வரை ஞானியும், மனுஷ்யபுத்திரனும் பொறுத்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும். அட, “தியாகம்தான் உன்னை உயர்த்தும்”-ன்னு இப்போ சமீபமா ஒரு படத்தில கூட கேட்டேன். அதைதான் நீங்களும் சொல்றீங்க.

  “சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது” – வாஸ்தவமான பேச்சு. சன் டி.வி.ஹ்கு எதிரா அமெரிக்கா-வின் ண்BC சேனலை சொல்லலாமா? ஓ, அது இங்க வராதோ. சரி, டிஸ்கவரி சேனலை வைக்கலாம் இப்போதைக்கு, ஆனா, அதெல்லாம் மக்கள் பெருவாரியா பாக்கறதில்ல. அதுக்கும் மேல, அந்த சேனலோட ஓனர் வருமானம் எல்லாம் தெரியாது. ஆகையால், இப்போதைக்கு சன் டி. வி.ஹ்கு மாற்று இல்லை என்று வசதியாக சொல்லிக் கொள்வோம். சரிங்களா?

  திருவிளையாடல் படத்துல ஒரு வசனம் வரும்…”குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்” – என்று. ஏனோ இந்த நேரத்தில அது ஞாபகம் வந்து தொலைக்குது.

  • சிரிக்கத் தெரிந்தவன் தான் மனிதன். ஆனால் சிரிக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவதும், கோபப்பட வேண்டிய இடத்தில் சிரிப்பதும் கோமாளித்தனம்.

   ஒருவன் மது அருந்தாதே, சிகரெட் புகைக்காதே என்று சொல்லும் போது அவன் இதையெல்லாம் செய்து கொண்டு அல்லது இவற்றையெல்லாம் தயாரித்து விற்பவனாக் இருந்து கொண்டு ஊருக்கு புத்திமதி சொல்பவனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?

   தன்னுடைய சாதிக் கட்சியின் விளம்பரத்தை மற்ற எல்லா சேனல்களிலும் விளம்பரமாகத் தரும் வேந்தன் தன்னுடைய சொந்த சேனலில் அதை ஏன் செய்வதில்லை.

   பணம் சம்பாதிப்பதற்காக தன்னை கொள்கை குன்றாக காட்டிக் கொள்ளும் வேந்தன், இயக்குநர் சங்கர் “நண்பன்” படத்தில் பாரி வேந்தன் என்ற பெயரை உபயோகித்த போது என்ன சொன்னார் தெரியுமா? என்னால் தினமும் இது போன்ற படங்கள் பத்து தயாரித்து ரிலீஸ் செய்ய முடியும். சங்கர் இவ்வாறு என் பெயரை வேண்டுமென்றே உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பேசியிருந்தார். உங்களைப் போல் காலமெல்லாம் கடினமாக உழைத்து சேகரித்து வைத்திருந்த பணமாக இருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா?

   ஒவ்வொரு டிகிரிக்கும் விலை நிர்ணயித்து அதை கொடுப்பதற்கு ஆட்கள் தயாராக் இருக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. வீடு புகுந்து கொள்ளையடிப்பவனுக்கும் இப்படி ஆபிஸ் செட்டப் அமைத்துக் கொண்டு பணம் கேட்டு வாங்குவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள். அதுவும் சரிதான். வீடு புகுந்து கொள்ளையடிப்பவன் வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் கொண்டு செல்வான். இவனுக்கா, இவன் கேட்கும் பணத்திற்காக வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமின்றி வீட்டையும் அடமானம் வைத்து பணத்தை கட்டி அழுகிறார்கள். (மதி கெட்ட மக்கள் மீது தவறு இருக்கிறது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட மக்களின் பலகீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுதிதிக் கொண்டு கோடி கோடியாக கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது?) இவர் பிறருக்காக எதையும் செய்ய வேண்டாம். தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு தன்னுடைய கல்லூரியில் இலவசமாக் சீட் தருவாரா? அப்போது கொள்கையெல்லாம் போய்விடும்.

   ஞானியையும், மனுஷ்யபுத்திரனையும் ஏன் எதிர்பார்க்கிறீர்கள். அன்றாட வாழ்வில் எத்தனையோ ஞானிகள் இருக்கிறார்கள். கண்ணைத் திறந்து பாருங்கள் தெரியும்.

   • வினவு எழுதி இருக்கும் பல நல்ல கருத்து மிக்க கட்டுரைகளில் இதுவும் ஒன்று! இத்தகைய ‘வாட்ச் டாக்’ பயன்பாடிற்கு வினவு போன்ற சமூக தளங்கள் மிக முக்கியமான தேவை! அதிலும் இன்னைக்கு திரு.தமிழ் அவர்கள் எழுதி இருப்பது ஒரு உருபிடியான பதிலுரை! வாழ்த்துக்கள்!
    வினவின் சாதீய தவறான கண்ணோட்டங்களுக்கு மத்தியிலும், இதை போன்ற நல்ல கட்டுரைகள் வருவது ஆரோக்யமானது! இப்போதெல்லாம் பல குட்டி குட்டி கட்டுரைகளை தொடர்ந்து ‘மாரத்தான்’ போல பதிவிடுவதற்கு பதில் இதை போன்ற கட்டுரைகளை ஒன்றிரண்டேனும் அழகாகவும் மக்களை அடையும்படியும் எழுதினால் நன்றாக இருக்கும்! மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்! தங்கள் பணி தொடர்க!

  • விமர்சனம் சரியா தப்பான்னு சொல்லுங்க கார்த்திக் குமார். கோபத்துல வழ வழன்னு நிறைய எழுதுறதுக்கு பதிலா கட்டுரை இந்த இந்த விதத்துல தப்பா இருக்குன்னு நாலு வரில நறுக்குன்னு சொல்லுங்க போதும்.

 15. விளம்பர வருமனம் தவிர வேர ஒரு மண்ணுமில்ல. அவனெ ஒரு கொள்ளைக்காரன்.அவனுக்கு இத்தனை விளக்கம் தேவையாஆஆஆ?

 16. சிறந்த அல்லது முக்கியமான கட்டுரைகளையும் பத்தோடு பதினொன்றாக இப்போது வினவில் படிக்க நேர்கிறது. இக்கட்டுரை சிறப்பாக இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ செய்தியின் நடுநிலைமை என்பது கூர்மையான முரண்பாடு கொண்ட பிரச்சினைகளில் நேர்மை, துணிவுடன் இருப்பது அல்ல. கடந்த மேயர் தர்தலின் போது ‘புதிய தலைமுறை’ போட்டோ கிராபரை தாக்கியது அ.தி.மு.க. ஆனாலும் அ.தி.மு.க என்ற பெயரை உச்சரிக்கவேயில்லை பு.த. அதே வேளையில் புறவயமான செய்தியையும் நடுநிலை என்றே அர்த்தப்படுத்துகின்றனர் பெரும்பாலோர். அப்படி ஒரு நாடு நிலை என்பது அவசியமான ஒன்று. நாம் ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்ள அது நமக்கு reference ஆக பயன்படக்கூடியது. அன்னா ஹசாரே அணியுடன் பு.த ஒப்பீடு சிறப்பு.

  மனுஷ்ய புத்திரன் போன்றோர் தமக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் பேச கூப்பிட அழைக்கும் போது அதனை மறுப்பதே அறிவுத்துறை நேர்மை. காத்திரமான அரசியல் பிரச்சினைகளில் பேச அழைக்கும் போது ‘மக்கள் போராளிகளையும் சமூக, அரசியல் ஆர்வலர்களையும், துறை சார்ந்த அறிவு கொண்டவர்களையும் அழைத்து பேசுங்கள்’ என்று ஒதுங்கி வழி விடுவதே ஜனநாயகமும் கூட. வினவு எடுத்து கூறியுள்ள அவரது மேற்கோள் மனுஷ்ய புத்திரனை ஒரு கோமாளியாக அடையாளப்படுத்துகிறது. ஆங்கில ஊடகங்களில் பேசும் மணி சங்கர் ஐயர், சசி தரூர், போன்றோர் பேச கூப்பிடுகிறார்களே என்று ஓடி செல்லக் கூடியவர்கள் அல்லர்.

  seeing is believing எனும் கால கட்டத்தில் வாழ்கிறோம். highly visualised செட் அப்பாக சமூகம் மாறி வருகிறது. டி,வி விவாத நிகழ்ச்சிகளை வெறும் திண்ணை வெட்டி அரசியல் என்று ஒதுங்கி நிற்க முடியாது. ஊடகத்தை இனி மேலும் நாம் மேல் கட்டுமானம் என்று சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி தான்? அர்னப் கோஸ்வாமி மட்டும் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் மத்திய காங்கிரஸ் அரசு கவிழக் கூடிய நிலையில் இருக்கிறது. கொள்கைகளை தகுந்த முறையில் விளக்கி சொல்லக் கூடிய spokepersons கையில் இன்று எல்லாம் அடங்கியிருக்கிறது.

 17. முல்லை பெரியாறு பிரச்சனையில் இவர்கள் ‘நடுநிலைமை’ நன்றாக தெரிந்தது.

 18. வைகோ வின் செய்திகளை புதிய தலைமுறையில் அதிகம் காணலாம் ஏன் எனில் அதில் நியூஸ் வாசிக்கும் வேங்கடபிரகாஷ் என்பவர் நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் கூடுதலாக அவரது திருமணத்தை முன்னின்று நடத்தியவர் வைகோபால்சாமி.

 19. கோலி குருடா இருந்தா என்ன கொலம்பு ருசியா இருக்கா அவ்வலவுதான் நீங்க சொல்ரத
  பார்தா தமிழ் நாட்டுல TVல செய்தி பாக்குரதைவிட செய்திநடந்த இடத்துல போய்தான் செய்திகளை பார்க்கனும்

 20. கடந்த செப்டம்பர் முதல் தேதியன்று புதியதலைமுறை டிவியில் கூடங்குளம் பற்றிய தீர்ப்புக்குப் பின்னான உதயகுமார் அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது. இத்தனை விரிவான கருத்துக்கள் தாங்கிய அவரது பேட்டி பத்திரிகை ஊடகங்களில்கூட வந்ததில்லை. வேறு எந்த டிவிக்கும் இவ்வளவு விரிவான பேட்டியை இந்த அளவுக்கு (சில இடங்களில் எடிட் செய்திருந்தார்கள் என்றபோதும்)ஒளிபரப்பும் தைரியமோ அல்லது கொள்கை நோக்கமோ இருக்குமா என்பது தெரியவில்லை. இந்தக் கருத்து புதியதலைமுறை பற்றிய உங்கள் கட்டுரைக்கு மறுப்போ எதிர்ப்போ தெரிவிப்பதற்கு அல்ல. மாறாக அவர்கள் ஒளிபரப்பிய இந்தப் பேட்டி மிகச்சரியான ஒன்று என்பதைத் தெரிவிப்பதற்கு மட்டுமே.
  தவிர இப்போது போல ஒரு நாளைக்கு ஏழெட்டுப் பதிவுகள் என்று எழுதிக்குவிக்காமல் முன்புபோல தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு அழுத்தமான விரிவான பதிவுகளையே எழுதுங்கள். உங்களின் தனித்துவமான முத்திரையே அதுதான்.

  • \\ ஒரு நாளைக்கு ஏழெட்டுப் பதிவுகள் என்று எழுதிக்குவிக்காமல் முன்புபோல தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு அழுத்தமான விரிவான பதிவுகளையே எழுதுங்கள்.\\

   இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன். மார்க்சிய அணுகல் முறையை நாம் வலுப்படுத்தினால் ஓர் சராசரி வாசகர் சொந்த முயற்சியிலே பிரச்சினைகளில் மார்க்சிய கண்ணோட்டத்தை பெற்று விடுவார். பிரச்சினையை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வினவின் உதவி அப்போது தேவை இராது.நாம் நீந்தி சென்று பெற்றுக் கொடுப்பதை விட நீச்சலை கற்று கொடுக்கும் செயலை போன்றதாக இருக்கும். Anthrapology , Cultural Anthrapology , Humanities , இலக்கியம், மார்க்சிய கலை இலக்கிய கோட்பாடுகள், மார்க்சிய அழகியல் என்று பரந்து கிடக்கும் அறிவு செயல்பாடுகள் பற்றிய விரிவான விசாரணைகள், விவாதங்கள் மூலம் சமூக அறிவை மேம்படுத்தும் நோக்கில் வினவின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே அவா. அன்றாட அரசியல் அலசலுக்காக தனி பிளாக் ஆரம்பிக்கலாம் என்பது எனது கருத்து. இதனை ஒரு ஆலோசனையாக மட்டுமே தெரிவிக்கிறேன். எதிர்ப்பு கருத்தாக தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டாம்.

 21. நேற்றைய அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் உதயகுமார் அவர்களது பேட்டி மிகவும் அருமையாக இருந்தது.இன்று மதியமும் மறு ஒளிபரப்பானது.

  • அந்த பேட்டியில், உதயகுமார் அவர்களின் போராட்டத்தை குறைகூறும் விதமாகவே பேட்டியெடுப்பவர் கேள்விகளை தொடுத்தார், மற்றபடி உதயகுமார் அவர்களின் பேட்டி அருமை, ஜெயலலிதாவைப் பற்றிய கண்ணோட்டத்தைத் தவிர…

 22. Suhkdev,do not glorify Goswamy.He shot many questions to Dayanidhi Maaran thinking that ADMK was going to be the king maker immediately after 2009 parliamentary elections.He wanted the meaning of Dravidian ideology instantly from Kushbu in a sarcastic tone immediately after 2011 TN Assembly elections.

 23. யேனுங்க ! இந்த பச்சமுத்துவோட ஆப்பிசுல இருந்து அங்க கேண்டீன்ல பிளேட் கழுவுற ஆயா வரைக்கும் 70 சதவீதம் அவங்க சாதிக் காரங்களுக்கு தான் வேலை! அதே பொல மற்ற நிகர்னிலை பல்கலை கழகங்களில் இருப்பது போலன்றி இங்கு 70 மார்க் இன்டெர்னல் 30 மார்க்நீங்கள் படித்து பரீட்சை எழுதி வாங்க வேண்டியட்கு. 70 மார்க் வாங்க அங்குள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பணம் தருவட்கு வரை மோசடி செஇது தான் வாங்குகின்றனர். அதே போல ஷென்னையில் அதிக அளவில் போதை மருந்து விற்பனை ஆகும் கல்லஊரிகளில் இட்குவும் ஒன்று.
  இதற்கெல்லாம் பச்சமுத்துவின் ஒரே பதில் : மாணவன் வருகிறான ! பணம் கட்டி விடுகிறானா ! அவ்வளவு தான் எப்படி இழ்டம் போல் இருக்க வேண்டுமோ அப்படி இருந்துட்டு போகட்டும் ! மாணவர்களை வதைக்க வேண்டாம்!
  ஏனெனில் அபடிப்பட்ட மாணவர்கள் தான் இன்னும்நிறைய மாணவர்களை கொண்டு வந்து பணம் கொழிக்க வைக்கிறாஇகள் !

 24. அருமையான கட்டுரை
  நடுநிலை, நடுநிலை என்று கூப்பாடு போடும் யோக்கியர்கள் கூட்டம்தான் பு.தவை ரொம்பவே தூக்கிவைக்கிறது, அப்படி இவர்களின் நடுநிலை யோக்கியம் என்ன தெரியுமா? புதிய தலைமுறையின் சின்னத்தின் நிறம் உடையார் சாதிசங்கத்தின்(தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம்) நிறமான பச்சை மஞ்சள் சிவப்பும் அவர்களின் அரசியல் கட்சியான இந்நிய ஜனநாயக் கட்சியின் வெள்ளை(சிவப்பும்)பிணைந்திருக்கும் இது இந்த நடுநிலை நாயகர்களின் யோக்கியதை. அருகாமையில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு வங்கியே இல்லாத இந்நிய ஜனநாயக் கட்சியின் வேட்பாளர்களை பேட்டி எடுத்தும் செய்திகளில் காட்டியும் நல்லா நடுநிலையாக நடந்து கொண்டார்கள்,
  பு,தவில் செய்தி வாசிப்பவர்கள் தங்களை புனிதர்களாகவும் போராளிகள் போலவும் பில்டப் செய்து கொள்வது காறித்துப்பும் படியாக இருக்கிறது.
  வடிகட்டிய அயோக்கியார்களை அம்பலப்படுத்தும் இக்கட்டுரை தேவையான ஒன்று

 25. இன்று கல்வியை காசாக்குபவன், நாளை தண்ணீரையும் காசாக்குவான்.அவர்களுக்கு மக்களின் உயிர் ஒரு பொருட்டு அல்ல.

  உதயகுமாரின் பேட்டியை இவர்களைவிட என் டி டி வி இன்னும் விளக்கமாக ஒலி பரபபியது. காராணம் அதற்கான தேவை இப்பொழுது இருப்பதனால்தான் மற்றவர்கள் மறைக்க இவர்கள் காட்டுவதால் தான் தங்களையும் தக்கவைத்துக் கொள்ள முடியும், மக்கள் மத்தியில் பேரெடுககவும் முடியும். மக்கள் சக்தி அத்தகையது. அதற்காக அவர்களது உணமை நிலையை நாம் எடுத்து விமர்சிக்காமலிருக்க முடியுமா ?

  இங்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் நேரே கண்டது இது. 2001 ல் நான் திருச்சி வந்தபோது நான் தங்கிய வீட்டின் முன்னால் ஒரு சிறு குளமும். சிறிது அப்பால் இன்னொரு குளமும் இருந்தது. இம்முறை வீட்டின் முன்னால் இருந்த குளத்தை காணோம். நிலமாகி சுத்து மதில் கட்டப்பட்டு இருக்கிறது. அதற்கு அப்பால் இருந்த குளம் பெரும் பகுதி மூடப்பட்டு இருக்கிறது.

  இப்படியாக நிலத்தடி நீரை பெறும் எல்லா உபாயங்களும் இல்லாமற் செய்யப்பட்டு வருகின்னது. இந்த அநியாயத்தை ஆரம்பததிலிருந்தே வேரறுக்க முயற்சிக்காமல் எல்லோரும் கைகட்டி பார்துக்கொண்டிருந்தால் நீரையும் காசாக்க முயலுபவர்களுக்ககெலலாம் மிகுந்த மகிழச்சியாக இருக்குமேயன்றி வேறென்ன?

 26. வினவுவின் முதலாளி யார்?

  இதன் கட்டமைப்பு என்ன என்பது போன்ற விவரங்களை வெளியிட்டால் நீங்கள்தான் சிறந்த நான்காவது தூண் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

 27. படிக்க வசதியற்ற மாணவிகளுக்கு புதிய தலைமுறை மூலம் ஒளி பிறந்தது என ‘தினமலர் செய்தி எதிரொலி’ என்பது போல பெருமையுடன் ஒரு செய்தி வந்து உள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சியில்….

  செய்தி இதோ…
  //
  உதவிக்கரம் வேண்டி காத்திருந்த மாணவிகளுக்கு கலங்கரை விளக்கம் கல்விக் கண்காட்சியில் வழி கிடைத்தது, ஒளி பிறந்தது….
  http://puthiyathalaimurai.tv/two-students-of-melur-seek-help-to-continue-higher-studies
  //

  நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி துணை வேந்தருக்கு வந்த இரக்கம் ஏன் செய்தியை ஒளிப்பரப்பிய பச்சமுத்து வரவில்லை என யாரும் கேட்கப்புடாது என்கிறது புதிய தலைமுறை.

  கல்வி என்பது பணம் படைத்தவனுக்கும், இரக்கத்துக்கு உட்பட்டு பிச்சை வாங்குபவனுக்கு மட்டும்தான் என்ற சமூக அநீதியை இன்று மக்களே இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாற்றிவிட்டார்கள் ஆட்சியாளார்கள்.

 28. இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு செஅட் தரும் இவர்கள் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தரும் சம்பளம் பற்றிக்கேட்டால் அதிர்ந்து போவீர்கள்! அடி மாட்டு விலைக்கு ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கிறார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க