Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 735

பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

3

நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால்  அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசை ஆதரிக்கிறோம்” – தி.மு.க

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால் அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசையும் எதிர்க்கிறோம்; ஆனால் எதிர்த்து ஓட்டுப் போட மாட்டோம்” – பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி.

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோமா இல்லையா என்பதை எமது மகாராஷ்டிர நிலையை ஒட்டியே முடிவு செய்வோம். அது எப்படியிருப்பினும் நாங்கள் அரசை எதிர்க்கவில்லை” தேசியவாத காங்கிரசு.

“நாங்கள் அந்நிய முதலீட்டை எப்போதுமே ஆதரிக்கிறோம்; சில்லறை வர்த்தகத்திலும் முன்பு ஆதரித்தோம் ஆனால் இப்போதைக்கு எதிர்க்கிறோம். (எப்போதுமே எதிர்ப்போமா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது –  மைண்ட் வாய்ஸ்) ” –  இது பாரதிய ஜனதா, அ.தி.மு.க மற்றும் மமதா பானர்ஜி.

சி.பி.ஐ சி.பி.எம் மற்றும் அதையொத்த நண்டு சிண்டுகள், துண்டு துக்காணிகள், பழசு பட்டைகள் மற்றும் ஓட்டை உடைசல்களின் நிலைப்பாடுகள் மேலே உள்ளவற்றில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் அங்கேயும் இங்கேயுமாக இடம் மாற்றிப் போட்டால் வந்து விடும். இவ்வாறாக ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் “மாப்பிள்ளை இவரு தான்… ஆனா அந்த சட்டையப் பத்தி எனக்குத் தெரியாது” என்கிற பாணியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றி வழவழாவென்று பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் இதைப் பற்றிய தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

545 பேர் கொண்ட லோக்சபையில் ‘கொள்கை ரீதியில்’ வெளிநடப்பு செய்தவர்களைத் தவிர்த்த 471 பேர் வாக்களித்துள்ளனர். இதில் அரசுக்கு ஆதரவாக 253 பேரும் எதிராக 218 பேரும் வாக்களித்துள்ளனர். இதில் வெளிநடப்பு செய்த 45 எம்.பிகள் அந்நிய முதலீட்டை எதிர்த்து விவாதங்களில் சூடுபறக்கப் பேசியுள்ளனர். ஆதரித்து வாக்களித்தவர்களில், தி.மு.க எம்.பி இளங்கோவனின் பேச்சு இது – “சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 30 கோடி பேரை பாதிக்கும்  என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று தெரிவித்து விட்டு அரசை ஆதரித்துள்ளார்.

வெளிநடப்பு செய்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் பேசியவைகளைக் கேட்டால் மரித்துப் போன  சேகுவேராவே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து அமெரிக்காவையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் விட்டு விளாசுவது போலவே விளாசியுள்ளனர். ஆனால், இவையணைத்துமே பச்சையாக நடத்தப்பட்ட நாடகங்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தொடர்பான முடிவை எடுப்பது இவர்கள் கையில் இல்லை. அதற்கான அதிகாரமும் இவர்களிடம் இல்லை. 2008-ம் ஆண்டு துவங்கிய சர்வதேச பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி தேசங்கடந்த தொழிற்கழகங்களை புதிய சந்தைகளை வெறி கொண்ட முறையில் தேட வைத்துள்ளது. சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விட உலகளவிலான சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். உலகளவில் சுழற்சியில் உள்ள மூலதனத்தில் மூன்றில் இரண்டு பங்கு சூதாட்ட பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ளது.

இந்த பிரம்மாண்டமான மூலதனம் சுழலாமல் தேங்கி நிற்பது என்பது முதலாளித்துவமே மொத்தமாக செத்துப் போவதற்கு ஒப்பானது. ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளோ இதற்கு மேலும் சுரண்ட முடியாது எனும் அளவிற்கு ஏற்கனவே ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டது. அந்நாடுகளின் தொழிற்சாலை உற்பத்தி அலகுகள் குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு விட்டன. வேலையும் வாழ்க்கையும் சமூக பாதுபாப்பையும் இழந்த மக்களோ தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்து இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

இதைத் தாமதிக்கும் நாடுகளை பல்வேறு வகைகளில் மிரட்டியும் வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதங்கள் சுமார் ஓராண்டுகளுக்கு முன்பாகவே துவங்கி விட்டது. இதை எந்த விவாதமும் இன்றி திடீரென்று திணிப்பது மக்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதாலேயே இதற்கு ‘எதிர்ப்பான’ குரல்களை சில காலத்துக்கு ஒலிக்க விட்டிருந்தனர். நடந்த நாடகத்தில் இந்த ‘அடுத்துக் கெடுக்கும்’ பாத்திரத்தை திறம்பட ஏற்று நடித்த கட்சி தான் பாரதிய ஜனதா. உலகின் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு வழக்கமாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறைகளைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் விற்க தனியாக ஒரு அமைச்சரவையே ஏற்படுத்தப்பட்டது என்பதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

எனினும், அமெரிக்கா எந்தவகையான சந்தேகத்துக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. நாடகத்தின் பாத்திரங்கள் எழுதித் தரப்பட்ட திரைக்கதை வசனத்தைத் தாண்டி சொந்த வசனங்களைப் பேசினால் என்னவாகும் என்பதைக் குறிப்பாலுணர்த்தத் தவறவில்லை. அந்த வகையில் தான், அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதியன்று பொருளாதாரத்துக்கான தரநிர்ணய நிறுவனமான எஸ் & பி, இந்தியாவுக்கான பொருளாதார மதிப்பீட்டை BBBயில் இருந்து BBB-(எதிர்மறை)யாக குறைத்தது. இதற்கான காரணங்களாக, இந்தியா இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது அந்நிறுவனம்.

இதற்கும் முன்பாகவே கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சுணங்கிய நிலை குறித்து டைம் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிடுகிறது. அதன் முகப்பு அட்டையிலேயே மன்மோகனின் படத்தைப் போட்டு “உதவாக்கரை”என்று தலைப்பிட்டிருந்தது. அதே மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  இருநாடுகளின் நலனை உத்தேசித்து இந்தியா சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே மிரட்டியிருந்தார்.

உடனடியாக ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, “கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பது இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்டதாகும்” என்று தெரிவித்திருந்தார். அந்த ‘டக்கு’ தான் இந்த ‘டக்கு’. காங்கிரசு மட்டுமல்ல, பாரதிய ஜனதாவிலிருந்து சகல கட்சிகளும் அன்று ஒபாமாவின் கருத்துக்கு ‘எதிராக’ சவடால் அடித்திருந்தனர். ஆனால், அவையணைத்துமே வெறும் வெற்றுக் கூச்சல்கள் என்பதைக் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த கூத்துகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்.  அமெரிக்க -இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் – கூடங்குளத்தை மாத்திரம் எதிர்க்கிறோம் என்று சொல்வது எப்படி முரண்பாடானதோ அதே போலத் தான் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டே அதை எதிர்ப்பதாகப் பேசுவதும். இவர்கள் கொள்கையளவில் அந்நிய முதலீட்டை ஏற்றுக் கொண்டனர். எனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது ஒரு சடங்கு தான்.  அது தான் இப்போது நிறைவேறியுள்ளது.

எனினும், இதில் எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் வால்மார்ட் தெளிவாகவே இருந்துள்ளது. வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்காக கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சுமார் 125 கோடி வரை அமெரிக்க செனேட்டர்கள் மத்தியிலும் அரசுத் துறைகளின் மட்டத்திலும் லாபி செய்ய மட்டும் செலவழித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க செனேட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை. வால்மார்ட்டின் வரலாறையும் பிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சந்தை வெறியைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட அவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைகளுக்குச் செல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மறுகாலனியாதிக்கம் நமது நாட்டின் மேல் ஒரு பேரிருள் போல மெல்ல மெல்லக் கவிந்து வருகிறது. நாட்டின் இயற்கை வளங்கள்,  தொழில்கள், மனித வளம் என்று சகலமும் ஏகாதிபத்திய நாடுகளின் லாப வேட்டைக்கு இரையாக்கப் படுவதை நமது கண் முன்னே காண்கிறோம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் பின்னே செல்வதால் எந்தப் பலனும் இல்லையென்பதையும் அவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர். இதற்கு மேலும் மக்கள் இந்த மண் குதிரைகளை நம்பியிராமல் நேரடியாய்த் தாமே தெருவிலிறங்கினால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும். தேசத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் சிந்திக்கட்டும்.

________________________

– தமிழரசன்
_____________________

இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!

11

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 24

 ”இராணுவம், துணைஇராணுவம், போலீசுத்துறைஆகியவற்றில்முசுலீம்களுக்குஒதுக்கீடுசெய்யவேண்டுமென்றுஅபாயகரமானகோரிக்கைஒன்றுஎழுந்துள்ளது. இராணுவத்தில்மதத்தைவைத்துஒதுக்கீடுசெய்வதுஎன்பதுதேசப்பாதுகாப்புக்குஊறுவிளைவிக்கும்செயலாகும்.

 நாட்டைப்பாதுகாக்கஇந்துமுன்னணிவைக்கும்  கோரிக்கைகளில்ஒன்று.

 ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது. உண்மையில் பாதுகாப்புப் படைகளின் யோக்கியதை என்ன?

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995-ஆம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீசின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீசும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார். ஆக முசுலீம்களுக்கெதிரான கலவரம் வார, மாதக் கணக்கில் நீடிப்பதிலிருந்தே போலீசின் நடுநிலை இலட்சணம் என்ன என்பது தெரிகிறது. அடுத்து இந்துக்கள் மட்டும்  போலீசைத் தமது நண்பர்களாகவும், முசுலீம் – சீக்கிய மக்கள் போலீசைத் தமது வில்லன்களாகவும் கருதுவதாக விபூதி நாராயணன் ராய் குறிப்பிடுகிறார். இப்படி போலீசின் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்பது அரசின் மீதான நம்பிக்கை இழப்புக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறுகிறார்.

உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒரு ‘இந்து’ உளவுத்துறை அதிகாரியே போலீசு என்பது இந்துக்களின் காவலன் என்பதை நிரூபித்துவிட்டபோது வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இந்தியாவின் அதிகார வர்க்கம், நீதித்துறை, இராணுவ – போலீசு நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனீய இந்துமதத்தை இயல்பாகக் கருத்திலும், செயலிலும் ஆதரிக்கின்றன. அதன்படி இந்துமத வெறியர்களின் சித்தாந்தத்திற்கு நெருக்கமாகவே உள்ளன. இராணுவ – உளவுத்துறைகளின் உயர் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகப் பின்பற்றப்படுவதும் இதனால்தான்.

வேறு எந்தக் கட்சியையும் விட அதிகாரிகள் விரும்பிச் சேரும் கட்சியாக பா.ஜ.க.தான் இருக்கிறது. 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்க்பட்ட இராமன் சிலையைப் பாதுகாத்த மாவட்ட நீதிபதி நாயரும், 1987 இல் பூட்டை உடைத்து இராமனைக் கும்பிடத் தீர்ப்பளித்த நீதிபதியும் ஓய்வு பெற்றபின் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பா.ஜ.க.வில் நிரம்பி வழிகின்றனர். முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இராஜேந்திர சிங் உ.பி. மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேசபக்தி பற்றி வகுப்பெடுத்திருக்கிறார்.

எனவே, கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற மகத்கலவரங்கள் அனைத்திலும் அதிகார வர்க்கம் – போலீசு – இராணுவம் – நீதித்துறை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாகவே செயல்பட்டன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். ’87 மீரட் கலவரம் – ஹஷிம்புரா மலியானா படுகொலையிலும்’, ’89 பகல்பூரிலும்’, ’97 கோவை கலவரத்திலும்’ போலீசு – அரை இராணுவப் படைகள் ஏராளமான முசுலீம் மக்களைக் கொன்றன. ’93 பாபர்மசூதி இடிப்பை’ வேடிக்கை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், பின்பு வழிபாடும் நடத்தினர். ’93 பம்பாய்க் கலவரத்தில்’ முசுலீம்களை வேட்டையாடிய 20 போலீசு அதிகாரிகளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுகிறார். இன்றுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறியர்கள் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரத்துக்கு இப்போதே அடியாட்படை தயாராகிவிட்டதைத்தான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. முசுலீம் மக்களுக்கு எதிராக மட்டுமலல தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான மேல் சாதி வெறியோடும்தான் போலீசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. கொடியங்குளம் முதல் ரன்பீர்சேனா படுகொலை புரியும் பீகார் வரை அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. எனினும் போலீசு – இராணுவத்தில் முசுலீமைச் சேர்க்காதே என்ற ஆர்.எஸ்.எஸ். இன் பகிரங்கக் கோரிக்கை மதச்சார்பின்மை கோவணத்தையும் உருவி அரசை அம்மணமாக்குகிறது. இந்துமத வெறியர்களின் இக்கோரிக்கைக்குக் காரணம் என்ன?

பஞ்சாப் பிரச்சினையில், நீல நட்சத்திர நடவடிக்கையை எதிர்த்து இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்ட் கலகம் செய்தது வரலாறு. முசுலீம்களைப் பெருந்திரளாகப் போலீசும் பிரிவுகளில் சேர்த்தால் அவர்களும் கலகம் செய்வார்கள் – அப்பாவி முசுலீம் மக்களைக் கொல்ல மறுப்பார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் கவலை. இனிமேல்தான் இப்படி நடக்கும் என்பதல்ல. ஏற்கனவே அப்படித்தான் நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஜம்மு காசுமீர் போலீசின் வேலை நிறுத்தத்தைக் குறிப்பிடலாம். மத்திய அரசின் இராணுவ, துணை இராணுவப் படைகள் காசுமீர் முசுலீம் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைக்கு உள்ளூர் காசுமீர்  போலீசு உட்னபட மறுத்தது. அதனால் ஏற்பட்ட முரண்பாடு பின்பு பெரும் வேலை நிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது.

இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் இப்படிப் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அந்த இன மக்களைக் கொண்ட தனிச்சிறப்பான போலீசுப் பிரிவுகள் – தனிச் சிறப்பான – பயிற்சி அதிக சம்பளத்துடன் உருவாக்கப்படுகின்றன. அதாவது துரோகிகளுக்கான படை உருவாக்கப்படுகிறது. அசாம் ரைபிள்ஸ், காசுமீர் ரைபிள்ஸ் போன்றவை இப்படித்தான் உருவாக்கப்பட்டன. இப்படி அவர்கள் எத்தனை துரோகப் படைகளை உருவாக்கினாலும், படைகளுக்குள் நிச்சயம் முரண்பாடு ஏற்படவே செய்யும்.

ஆனால், இத்தகைய கலகங்கள் மதத்தோடு மட்டும் நின்றுவிடாது. பார்ப்பனிய இந்துமதம் என்பது இன, மொழி, மத, வர்க்க சாதி ஒடுக்கு முறைகளை உள்ளடக்கிறது என்பதால் கலகங்கள் இந்தப் பிரிவுகளுக்குள்ளிருந்தும் எழும். அப்படி எழக்கூடாது என்பதற்காகத்தான் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வேறு வேறு இன இராணுவப் பிரிவுகள் கவனமாக அனுப்பப்படுகின்றன. மேலும், இந்திய இராணுவத்தின் பல பிரிவுகளும் சாதி ரீதியாகவே உருவாக்கப்பட்டு, இன்றும் பராமரிக்கப்படுகின்றன. மராத்தா, ஜாட், ராஜ்புதன, சீக்கிய, கூர்க்கா ரெஜிமண்டுகள் இத்தகைய அப்பட்டமான சாதியப் பிரிவினையின் உதாரணங்களே. இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான இராணுவ, துணை இராணுவப் பிரிவுகள் அனைத்தும் தேசிய இன, சாதி ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் இயங்குகின்றன. அதனால்தான் ஒரு இன மக்கள் போராட்டத்திற்கு, வேற்று இன இராணுவத்தை அனுப்பி தற்போது அடக்கி வருகிறார்கள்.

தமிழகத்து இந்தி எதிர்ப்பை அடக்க கேரளத்தின் மலபார் போலீசு, வடகிழக்கு தேசிய இனப் போராட்டங்களைம் அடக்க மராட்டியத்தின் மராட்டா ரெஜிமெண்ட், காசுமீருக்கு மதராஸ் ரெஜிமண்ட், ஈழத்துக்கு பஞ்சாப் ரெஜிமண்ட் என ஒன்றுக்கு எதிராய் வேறு இனத்தை நிறுத்துகிறார்கள். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியும், நாடகமும் எத்தனை நாள் நடத்த முடியும்? விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் முற்றி வெடிக்கும்போது இராணுவமும் வர்க்க ரீதியாகப் பிளவுபடும். 1942 காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பம்பாயின் கப்பற்படை வீரர்களிடையே தோன்றிய எழுச்சி அதற்கோர் உதாரணம். இன்று இராணுவத்தில் முசுலீமை நம்பாதே, அசாமியனை நம்பாதே, தமிழனை நம்பாதே எனத் தொடங்குவது இறுதியில் சிப்பாயை நம்பாதே என்று முடியும்.

தன் நிழலைத்தவிர யாரையும் நம்ப இயலாத நிலைக்கு ஆளும் வர்க்கமும் அதன் அடிவருடிகளான இந்து மதவெறியாளர்களும் தள்ளப்படுவார்கள். அப்போது உழைக்கும் மக்களும் ‘போலீசை நம்பாதே, இராணுவத்தை நம்பாதே’ என்று கையில் ஆயுதம் ஏந்துவார்கள்.

– தொடரும்

__________இதுவரை____________

காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!

23

ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் !
– சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.

நத்ததிலும், அண்ணா நகரிலும்,
கொண்டாம்பட்டி செங்கல் மேட்டிலும்
அழிச்சிட்டான் அழிச்சிட்டான்
தலித் மக்களின் சொத்துக்களை
,
இரண்டு தலைமுறை உழைப்பை

ஒன்னு விடாம அழிச்சிட்டான் !

பட்டா, சிட்டா, பாட புத்தகம்
கட்டில்
, பீரோ, துணியெல்லாம்
தீ
வச்சு கொளுத்திட்டான் !

கொள்ளை போச்சு கொள்ளை போச்சு
கஷ்டப்பட்டு சேத்து வச்ச
பணமும் நகையும் கொள்ளை போச்சு
!

தமிழக அரசே தமிழக அரசே !
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய் !

கைது செய் சிறையிலடை
சாதி வெறியை தூண்டி வரும்
காடு வெட்டி குருவை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
கைது செய் சிறையிலடை !

மூச்சு விட்டாலும் போஸ்டர் ஒட்டினாலும்
மோப்பமிடும் உளவுத்துறையே
ஊரைக்கொளுத்தி சூறையாடியதை
வேடிக்கை பார்த்த மர்மம் என்ன ?

துணை போனாயே துணை போனாயே
உளவுத்துறையே
, காவல் துறையே
சாதி வெறிக்கு துணை போனாயே !

தாக்குதலை தடுக்காத
தருமபுரி போலீசாரை

கைது செய், டிஸ்மிஸ் செய் !

தஞ்சையிலே வெண்மனி,
மேலவளவு முருகேசன்,
திண்ணியம் கருப்பையா,
விருத்தாசலம் முருகேசன்,
கயர்லாஞ்சி போட்மாங்கே                              

ஆதிக்க சாதி வெறியாட்டத்தால்
எத்தனை இழப்பு எத்தனை இழப்பு
,
எத்தனை கொலைகள் எத்தனை கொலைகள் ?

தமிழக அரசே தமிழக அரசே
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய்
!

வை கடந்த 29-ம் தேதி மாலை சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள். தருமபுரியில் நிகழ்த்தப்பட்ட வன்னிய சாதிவெறியாட்டத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயநீதிமன்ற வழக்குரைஞர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பாதிக்கப்பட்ட நத்தம் காலனி மக்கள் சம்பவத்தை நேரடியாக விளக்கினர். ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தோழர் மில்டன்
தோழர் மில்டன்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.உ.பா.மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தாக்குதல் சம்பவத்தை அறிந்த உடனே ம.உ.பா.மை தோழர்கள் களத்திற்கு சென்றதையும் இது திடீர் தாக்குதல் அல்ல பொருளாதார ரீதியாக சேதம் விளைவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பொறுமையாக, நிதானமாக திட்டமிட்டு நடத்திய கொள்ளைச் சம்பவம்

என்பதை விரிவாக விளக்கினார்.

தலைமை உரையை அடுத்து பேச வந்த வழக்குரைஞர் அருள் மொழி

இந்த நாடு ஒரு புனித பூமி என்பதற்கோ, அல்லது வல்லரசு ஆவதற்கோ, முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கோ எந்த தகுதியும் அற்றது. பேசுவதெல்லாம் பெரிய பேச்சு ஆனால் நடைமுறையில், மனசுக்குள் இருப்பதெல்லாம் கசடு, அழுக்கு, அயோக்கியத்தனம். அதை மறைத்துக்கொண்டு நாகரீக மனிதர்களைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அருள்மொழி
வழக்குறைஞர் அருள்மொழி

படிக்காதவனை விட படித்தவன் தான் அதிகமாக சாதி பார்க்கிறான். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் நாங்கள் அந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

சென்னையிலுள்ள ஓட்டல்களில் வேலை செய்பவர்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். சொந்த ஊரில் ஊரும் சேரியுமாக இருப்பவர்கள் சென்னையில் ஒன்றாக டேபிள் துடைக்கிறார்கள், ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் இவர்களில் யார் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கூற முடியும், அனைவருமே உழைப்பாளிகள் தான்

என்று சாதிவெறியை சாடினார்.

அவரையடுத்து பேசிய சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார்

எங்களுடைய சங்கம் பல ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கம் ஆனாலும் நாங்கள் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல், மக்களைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கிறோம் அது தவறு தான் இனிமேல் செய்ய வேண்டும் என்று கூறியவர். தருமபுரியில் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் நடந்தது மாட்டுக்கும் மனுசனுக்குமா நடந்தது ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே நடந்தது பிறகு எதுக்கு குதிக்கிறார்கள் ?

சாதி வெறியை தூண்டுவதற்கெல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். சங்கம் என்பது எதற்காக உருவானது தெரியுமா ? பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்கள் நமக்கெல்லாம் பிரச்சினை இருக்கு அதனால நாம் எல்லாம் ஒன்றாக சேருவோம் என்று பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் ஒன்று சேருவதற்காக உருவானது தான் சங்கம். ஆனால் காடுவெட்டி குருவும் மற்ற ஆதிக்க சாதிவெறியர்களும் வைத்திருக்கின்ற சங்கங்கள் எதற்காக ? ஆதிக்கம் செய்வதற்காக. எனவே அரசு உடனடியாக இது போன்ற ஆதிக்கசாதி சங்கங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்

என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்ததாக பேசிய தோழர் மதிமாறன்

சாதி என்பது மேலிருந்து கீழாக ஒரு படிநிலை அமைப்பை கொண்டிருக்கிறது. ஒரு தலித் பையன் வன்னியப் பெண்ணையோ, அல்லது வேறு ஒரு ஆதிக்க சாதி பெண்ணையோ திருமணம் செய்யும் போது தான் இவர்களுக்கு பிரச்சினையே வருகிறது, அதுவே வன்னியப்பெண் அல்லது பையன் அந்த சாதிக்கு மேல் நிலையில் உள்ள சாதி பையனையோ பெண்ணையோ திருமணம் செய்தால் நம்ம சாதி என்ன அவங்க சாதி என்ன நமக்கு இதெல்லாம் ஒத்து வருமாம்மா என்று குலைந்து குலைந்து பேசுவார்கள். சாதி அமைப்பு இப்படிப்பட்ட படிநிலையில் தான் இயங்குகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது
உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசும் எவனாச்சும் தனது சொந்த சாதியை சேர்ந்த பெண்களை இனிமேல் எந்த சொந்த சாதிக்கார ஆணும் சொந்த சாதி பெண்ணை சுரண்டக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, இதுவரைக்கும் வாங்குன வரதட்சனையை கூட திருப்பி கொடுத்துடனும் இல்லைன்னா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். அப்படிச் சொன்னா வன்னியனே இவனுங்க வாயில குத்துவான்.

இந்த சாதி வெறியர்களை தண்டிக்க வேண்டுமானால் அவர்கள் கொள்ளையடித்த தலித் மக்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்கள் இழக்கும் போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

சாதி வெறியர்கள் எல்லோரும் இப்போது ஒன்று கூட ஆரம்பித்திருக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் வெட்டிருவேன், கொளுத்திருவேன்னு பேசுறானுங்க. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. இவனுங்க குடும்பத்தில் இருக்கின்ற பேரக்குழந்தைகள் இவங்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகி காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுடைய தாத்தாக்களிடமிருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தோழர்கள் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு வெளியிட நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் பெற்றுக்கொண்டனர்.

அதையடுத்து பேச வந்த மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு

தருமபுரி மாவட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த நகசல்பாரி இயக்கம் சிதறுண்டதால் தான் இன்று இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அது உண்மை.1970 களில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருந்த கேசவரெட்டி என்கிற நிலச்சுவாந்தார் ஊரிலுள்ள எல்லா பொம்பளையும் என் பொண்டாட்டி தான் என்று சொன்னான். அந்த கொடுங்கோலன் நக்சல்பாரி இயக்கத்தால் அழித்தொழிக்கப்பட்டான். அதே போல கியூ பிராஞ்ச் போலீசாரால் நிலச்சுவாந்தார்கள் சங்கம் என்கிற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கு வெள்ளய குண்டன் என்கிற நிலச்சுவாந்தாரை தலைவனாக்கினார்கள். அவனும் நக்சல்பாரி தோழர்களால் அழித்தொழிக்கப்பட்டான். குறிப்பாக ரவுடி ரங்கன் என்பவனுடைய ஆதிக்கமும், அட்டகாசமும் தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. அவனுக்கும் இயக்கத்தால் குறிவைக்கப்பட்டது ஆனால் அவன் தப்பி விட்டான்.

இப்படி உழைக்கும் மக்களின் காவலர்களாக இருந்தார்கள் நக்சல்பாரிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அரசு பல போலி மோதல்களை நடத்தி தோழர்களை கொன்று குவித்தது. இன்று தர்மபுரியில் நக்சல்பாரி இயக்கம் இல்லாமல் போனதன் விளைவுகளை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்

இந்த அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது. இது ஒரு செத்துப்போன அரசு. ஐந்து மணி நேரமாக நடந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு இது. இன்று வரை ஜெயலலிதா இதற்கு ஒரு சிறு வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே ஜெயலலிதா தார்மீக ரீதியில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

சேதமடைந்த சொத்துக்களை பற்றி அரசு அளிக்கும் அறிக்கைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் இதற்கு பொறுப்பேற்று உண்மையான ஆய்வை நடத்தி மக்களுக்கு பழைய நிலையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல், கொள்ளையடித்தலை நேரில் பார்த்த நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் சம்பவத்தை பற்றி விளக்கினர். அகஸ்டின் எழுப்பிய கேள்விகள் மனிதாபிமானமுள்ள அனைவரையும் பிடித்து உலுக்குவதாக இருந்தது. ஏன் நாங்க வீடு கட்டக்கூடாதா ? நாங்க பைக்கு வாங்க கூடாதா ? நல்ல சட்டை போட்டுக்க கூடாதா ? ஏன் எங்களை மட்டும் வாழ விடமாட்டேங்குறீங்க, நாங்க என்ன பாவம் பன்னினோம் ? என்று கேட்கும் போதே உடைந்து அழுதார். அவருடைய கண்ணீராலும் விம்மலாலும் கூட்டம் குற்றவுணர்வில் அமைதியானது.

அவரையடுத்து தருமபுரி மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலாளர் ஜானகிராமன் உரையாற்றினார்.

எல்லா பத்திரிகைக்காரனும், டி.விக்காரனும் இதை சாதிக்கலவரம், சாதிக்கலவரம்னு எழுதுறானுங்க. இரண்டு தரப்பு எதிரெதிராக மோதிக்கொள்வது தான் கலவரம், ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன ? ஒரு ஆதிக்க தரப்பின் திட்டமிட்ட தாக்குதல் நடந்திருகிறது. எனவே முதலில் இது கலவரமல்ல.

ராமதாசு அடிக்கடி தருமபுரிக்கு வந்து போவார். வன்னியர் சங்க கூட்டமும் அடிக்கடி நடக்கும். முதல்ல ஈழத்தமிழனை பத்தி பேசிப்பார்த்தாரு வேலைக்கு ஆகல, அப்புறம் தமிழ், தமிழன்னு பேசிப்பார்த்தாரு அதுவும் வேலைக்கு ஆகல இப்படி எதுவும் எடுபடாம செல்லாக் காசாகிப்போன ராமதாசு இப்ப சாதியை கையிலெடுத்திருக்கிறார். இது தான் அவருடைய புதிய பாதை, புதிய அரசியல், புதிய நம்பிக்கை.

நக்சல்பாரி என்கிற அந்த வார்த்தை தருமபுரி மாவட்டத்தில் சாதி ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தது. இப்போதும் அது விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் தடுக்கப்படுகிறது. இல்லை என்றால் அது இன்னமும் அதிகரித்திருக்கும்.

எந்த வன்னியனாவது அரசு அலுவலகங்களில் போய் லஞ்சம் கொடுக்காம நான் வன்னியன் உயர்ந்த சாதி எனக்கு சலுகை கொடுன்னா குடுத்துருவானா, இல்லை உலகமயமாக்கம் சாதி பார்த்து தான் தாக்குமா. மறுகாலனியாக்கத்துக்கு முன்னாடி எல்லோரும் தான் அழியனும்.

ம்க்கள் இப்படி சாதி ரீதியாக பிரிந்து கிடப்பது தான் அரசுக்கும் நல்லது. இல்லைன்னா அவனோட இவன் இவனோட அவன்னு சேர்ந்துக்கிட்டு விலைவாசி உயர்வுக்கெதிராவும், மின்வெட்டுக்கு எதிராவும் போராடுவானுங்க. சாதிவெறி அவர்களை பிரித்து வைத்திருப்பது அரசுக்கு நல்லது தானே. அரசு இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம்.

தமிழகத்தில் சாதி சங்கங்களை தடை செய்தால் தான் மக்களை சாதி வெறியர்களிடமிருந்து மீட்க முடியும். எனவே ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர் தோழர் விஜயக்குமார்

திராவிடக்கட்சிகளுக்கும், தேசியக்கட்சிகளுக்கும் மாற்றாக நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ராமதாஸ் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதுக்கு அவர் கண்டுபிடிச்ச வழி தான் இந்த வீடு கொளுத்துற வேலை.

தோழர் விஜயகுமார்
தோழர் விஜயகுமார்

இவனுங்க எதை மானக்கேடா நினைக்கிறானுங்க. திவ்யா ஒரு மாட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது மானக்கேடு. நாமெல்லாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாச்சே நம்ம சாதிப்பொண்ணு திவ்யா போய் ஒரு ஐந்தறிவு கொண்ட மாட்டை கல்யாணம் பண்ணிக்கிச்சே இது மானக்கேடு இல்லையான்னு ராமதாசு தூக்குல கூட தொங்கிடுவாறு. ஏன்னா அவரு மான அவமானமெல்லாம் பாக்கக்கூடியவரு.

ஆனா ஒரு பொண்ணு ஒரு பையனை கல்யாணம் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா இதில் என்னடா மானக்கேடு. ஜெயலலிதாகிட்ட செருப்படி வாங்குனப்ப வராத மானக்கேடா, கருணாநிதி காறித்துப்புன்னப்ப வராத மானக்கேடா ? அப்பல்லாம் வராத மானக்கேடு இவனுங்களுக்கு இப்ப மட்டும் வந்துருச்சாம்.

இந்த தாக்குதலில் போலீசின் பங்கு மிக முக்கியமானது. கடந்த இருபத்தி நான்காம் தேதி ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் என்கிற நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்திலுள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 ம் தேதி மாலை நாலரை மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். மாலை நாலரை மணிக்கு நடக்கவிருக்கிற போராட்டத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கே ஆலைக்கு அருகில் வந்துவிட்ட உளவுத்துறை போலீசுக்கு தருமபுரியில் மிகப்பெரிய அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதை கண்டு பிடிக்க முடியவில்லையாம். இதில் போலீசுக்கும் பங்கு உண்டு.  இது உளவுத்துறையும், தமிழக போலீசும் சேர்ந்து நடத்திய வன்கொடுமை.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து சாதி மக்களும் தோளோடு தோள் கோர்த்து ஒன்றாக நின்றார்கள், சகோதரர்களாக வாழ்ந்தார்கள். எப்போது ? அங்கே நக்சல்பாரி இயக்கம் இருந்த போது அப்படி வாழ்ந்தார்கள். இன்று அது பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இது தான் சாதித்திமிர் தலை தூக்க காரணம் என்று பிழைப்புவாத பத்திரிகைகளில் கூட எழுதுகிறார்கள்.

ஆம், நக்சல்பாரி இயக்கம் தான் சாதி வேறுபாடுகளை களைந்து அனைத்து சாதி மக்களையும் உழைக்கும் மக்களாக அணிதிரட்டும், அவர்களுடைய விடுதலைக்கு தலைமை தாங்கும் தகுதி நக்சல்பாரி இயக்கத்துக்கு மட்டும் தான் உண்டு என்கிற வகையில் தமிழர்களாய் அல்ல நக்சல்பாரிகளாய் அணிதிரள்வோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு

கடந்த இரண்டு நாட்களாக மூன்று கிராம மக்களும் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ஏழாம் தேதி காலை ஐம்பது லட்சம் ரூபாய் வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்த ஒருவர் எட்டாம் தேதி காலை தான் வாழ்ந்த ஊரில், பிறந்த மண்ணில் அகதியாக்கப்பட்டு சுற்றிலும் போலீசு காவல் நிற்க சாப்பிடறதுக்காக தட்ட எடுத்துக்கிட்டு லைன்ல நிக்கிறாரு. இரவு சாப்பாட்டை மதியமே வாங்கி வச்சுக்கனும்.

மூனு வேலைக்கும் சோறு கிடைக்கமாட்டேங்குது. இந்த அரசால் அந்த மக்களுக்கு சோறு கூட போடமுடியவில்லை. இந்த நிலை யாரால் வந்தது ? பூகம்பத்தால் வந்ததா, புயலால் வந்ததா. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் நடந்திருக்கிறது அதுவும் காவல்துறை கண்ணெதிரே நடந்திருக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் துப்பு துலக்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை திரிபாதி தலைமையில் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய்கள் தருமபுரியில் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன? காவல்துறையின் கண்ணெதிரிலேயே ஆறு மணி நேரத்திற்கு தீ வைக்க முடியும் என்றால், கொள்ளையடிக்க முடியும் என்றால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது,  சமமான அணுகுமுறை எங்கே இருக்கிறது ?

குற்றவாளி ராமதாசு, குற்றவாளி காடுவெட்டி குரு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் வந்து சாட்சி சொல்கிறார்கள். வீதிக்கு வருபவர்கள் நீதிமன்றத்தில் வந்து சொல்ல மாட்டார்களா ? எங்கே கைதி, எங்கே விசாரணை, எங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகள் எல்லாம் ? முடியுமா இந்த அரசால்.

நாலு பேர் கொள்ளையடித்த நகைகளையே கூட கண்டுபிடிக்கமுடியாமல் யாராவது நகைக்கடை வியாபாரியை மிரட்டி வாங்கிட்டு வந்து கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் என்று ஐ.ஜி, டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி என்று எல்லோரும் நகைகளை மேஜையில் விரித்து வைத்துக்கொண்டு ஊடகங்களை அழைத்து பறிக்கப்பட்ட நகைகளை திருப்பி ஒப்படைக்கிறோம் என்று விழா எடுக்கிறீர்களே இன்று ஏழு கோடிக்கும் மேல் தலித் மக்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது இந்த காவல்துறையால் அதை மீட்க முடியுமா ? கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உங்களால் திருப்பி வாங்கித்தர முடியுமா ? இன்றைக்கு சவால் விடுகிறோம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் கூட உங்களால் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மயிரைக்கூட பிடுங்க முடியாது.

நண்பர்களே இது விலைவாசி உயர்வு பிரச்சினை அல்ல, அந்நிய முதலீடு பிரச்சினை அல்ல, அல்லது குடிநீர் பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை அல்ல இது மனித குல நாகரீகத்திற்கும் காட்டுமிராண்டுகளுக்குமிடையே நடக்கக்கூடிய போராட்டம்.  இவன் வச்சிருக்க கட்சிக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம். தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கட்டுன மாதிரி பாட்டாளிகளை ஒன்றினைய விடாமல் தடுக்கிறவனுக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம்.

சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே கல்லூரியில், ஒரே சினிமாவில், ஒரே கடைத்தெருவில், ஒரே திருமணத்தில், ஒரே விழாக்களில் எங்களோடு கலந்துகொண்டவர்கள் சார் அவங்க கூட எங்களை அடிக்க வந்தாங்க சார் என்கிறார்கள் நத்தம் காலனி மக்கள். இது எப்படி முடிந்தது ?

பாட்டாளிகளுக்குள் மோதவிட்டு இரத்தம் குடிக்கக்கூடிய ஓநாய்களாக இராமதாசும், காடுவெட்டி குருவும் இருப்பதால் தான் இது நடந்திருக்கிறது. இதை தட்டிக்கேட்க ஜெயலலிதாவுக்கு மனம் இல்லையா, அதிகாரம் இல்லையா, அல்லது முடியவில்லையா ? அப்படி கேட்டால் ராமதாஸ் திருப்பி கேட்பார் நீ பரமக்குடியில் என்ன செய்தாயோ, தேவர் ஜெயந்தியில் என்ன செய்தாயோ அதை தான் நானும் செய்றேன்னு திருப்பி கேட்பார். கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா ?

அரசுக்கும் இது சாதகமாகிவிட்டது. பரவாயில்ல தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கெதிராகவும், மின்வெட்டிற்கெதிராகவும் போராடக்கூடிய அனைத்து அமைப்புகளும் இன்னைக்கு தர்மபுரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்ருக்காங்க, நமக்கும் பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க. இந்த பிரச்சினையில் இரண்டு குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஒன்று அரசாங்கம் இரண்டு பா.ம.க.வும் வன்னியர் சங்கமும். இந்த குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது ?

அனைத்து பிரச்சினைகளும், கியூ பிராஞ்ச், ஸ்பெஷல் பிராஞ்ச், நக்சலைட் ஒழிப்பு பிரிவு, மாவட்ட அளவிலான மேல் மட்ட அதிகாரிகளிலிருந்து எஸ்.பி முதல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலுள்ள காண்ஸ்டபிள் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அரசுக்கும் இது நேரடியாக தெரியும். தருமபுரியில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பது டி.ஜி.பி.வரைக்கும் தெரியும் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தர்மபுரி தாக்குதலை தெரிந்தும் தடுக்கத்தவறியதும், அதற்கு பொறுப்பும் இந்த மாநிலத்தின் டி.ஜி.பி.க்கு உண்டு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

நாம் அம்பேத்கர் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, பெரியார் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல. அதனால வர்ற பிரச்சினை தான் இது.

அப்பு பாலன் இருந்தவரை அங்கு சாதிப் பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. என்றைக்கு அவர்கள் சிலைகளாக மாறினார்களோ அப்போது அங்கே சாதிக்கலவரம் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு அப்பு பாலன்கள் உருவாக வேண்டிய நிர்பந்த்தத்தை இந்த அரசு நாயக்கன்கொட்டாய்க்கு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தருமபுரியில் நாங்கள் கண்டறிந்த உண்மை. ’இதற்கு மட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்’ என்கிறார்கள் அங்குள்ள இளைஞர்கள்.

போலிஸ்காரனும் அதிகாரிகளும் கேட்கிறாங்களாம் எதுக்கு இவ்வளவு பெரிய வீடு கட்டுன, உன்னை யாரு பல்சர் வாங்கச் சொன்னது, உன்னை யாரு ஏ.சி வாங்கச்சொன்னது, உன்னை யாரு பிரிட்ஜ் வாங்கச்சொன்னது, உன்னை யாரு கட்டில் வாங்கச் சொன்னது, உன்னை யாரு பீரோ வாங்கச் சொன்னதுன்னு கேட்கிறானுங்களாம். இனிமேல் எந்த அதிகாரியாவது உங்க கிட்ட அப்படி கேட்டால், இங்கு வந்திருக்கும் முருகன், அகஸ்டின் போன்ற இளைஞர்களே உங்கள் ஊருக்கு போய் சொல்லுங்கள், நாங்களும் உங்களோடு வருகிறோம். அப்படி கேட்கும் அதிகாரிகளை  ஊரிலேயே புடிச்சி கட்டி வைங்க. யார் வாங்கச்சொன்னது என்பதை முடிவு செய்வோம், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் அவர்களுக்கு புரியவைப்போம்.

அந்த மக்களுடைய வீடுகள் எல்லாம் உருகுலைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வீடும் பாழடைந்த வீடுகளைப் போல அரைகுறையாக இடிந்த நிலையில் நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து போகிறார்கள். இவங்களாவது ஏதாவது செய்யமாட்டாங்களான்னு மரத்து போன முகங்களுடன் அனைவரிடமும் வீட்டிற்கு அருகிலேயே நின்று கொண்டு இது தாங்க வீடு, இத பாருங்க, இது தாங்க வீடு, இத பாருங்க என்று காலை முதல் மாலை வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைவதற்கே குற்ற உணர்வாக இருக்கிறது. இந்த மக்களுக்கு என்ன தீர்வை நம்மால் தர முடியும், என்ன நீதியை நம்மால் பெற்றுத்தர முடியும் ?

இந்த பிரச்சினைக்கு மற்ற பிரச்சினைகளுக்கு நடப்பதை போல அடையாளமாக நடத்தப்படும் போராட்டங்களால் தீர்வு வரப்போவதில்லை. எண்ணற்ற தலித் அமைப்புகள், சென்னை முழுவதும் போஸ்டர்கள். இந்த பிரச்சினைக்காக போஸ்டர் ஒட்டாத தலித் அமைப்புகளே இல்லை. தங்களுடைய அமைப்பு இந்த பிரச்சினைக்கு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் அனைத்தும் வரம்புக்குட்பட்டது.

ராமதாசு, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் எல்லாம் இப்போது ஒன்று கூடி பேசுகிறார்கள். வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதாம். சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக மாநாடு நடத்துகிறார்கள். சாதிவெறியை தூண்டும் இவர்களை ஏன் இந்த அரசு கைது செய்யக்கூடாது ?

கூடங்குளத்தில் சாதாரன பெண்கள் மீது நூற்றுகணக்கில் வழக்குகளை போட்டு குண்டர் சட்டத்தில் வைத்திருக்கும் அரசு, கடல் பாசிகளை எடுத்து விற்கும் எழுபது வயது முதியவரைக் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் காடுவெட்டி குருவையும், ராமதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணிச்சல் இல்லை, என்ன பயம் ? அது தான் ஆதிக்க சாதி உணர்வு. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எனவே நாம் சாதி இந்துக்களிடம் பேச வேண்டும்.

பி.ஜே.பி. எப்படி முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை நடத்தி ஆதிக்கசாதிகள் எல்லாம் அதிகாரத்திற்கு வரத்துடிக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க நினைக்கிறார்கள். இதனால் தலித் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. ஜனநாயகத்திற்காக பேசக்கூடியவர்கள், உரிமைகளுக்காக பேசக்கூடியவர்கள், புரட்சிக்காக பேசக்கூடியவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நேர்மையாக வாழக்கூடிய அனைவரும் தான் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய். இதற்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும். முடியாதா ? முடியும், நாம் வீதிகளில் இறங்கி மக்களிடம் வேலை செய்தால் முடியும்.

பா.ம.க. முன் நின்று நடத்திய கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் இழுத்துக்கிட்டே போய் சமாதானம் பன்றது தான் அரசாங்கம். கொலைக்கே அப்படின்னா தர்மபுரி பிரச்சினைலையும் விசாரிக்கிறேன் விசாரிக்கிறேன்னு நாலஞ்சு வருசம் சார்ஜ் ஷீட் போட்டு, அப்புறம் சி.பி.சி.ஐ.டி விசாரிச்சி சி.பி.ஐ விசாரிச்சி. அஞ்சு பேர் கொள்ளையடிச்சதையே கண்டுபிடிக்க முடியாத போலீசு ஐநூறு பேரை விசாரிச்சு கண்டுபிடிக்கப்போறானா. ஒவ்வொருத்தனையா நிக்க வச்சு அடையாளம் காட்டி சாட்சி சொல்லி அப்புறம் கீழ்கோர்ட்ல தண்டனை கொடுத்து உடனே மேல் கோர்ட்ல பெயில் வாங்கி அப்புறம் சுப்ரீம் கோர்ட்ல கேஸ் முடிஞ்சு போயிரும் அவ்வளவு தான். அப்புறம் அனைவரும் மறந்துவிடுவார்கள். இது தான் இவர்களுடைய திட்டம்.

நாங்கள் இன்னொரு சந்தேகத்தையும் ஆணித்தரமாக முன் வைக்கிறோம். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னால் அதிகார வர்க்கத்தின் உயர்பதவிகளில் உள்ள வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் மூளையாக செயல்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உணர்சிவசப்பட்ட ஒரு கும்பல் என்ன செய்யும், கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அடிக்கும், தாக்கும். அவ்ர்கள் நினைத்திருந்தால் ஐம்பது பேரைக்கூட கொன்றிருக்க முடியும். ஒரு சில வீடுகளில் குழந்தைகளையும் பெண்களைளையும் வைத்து பூட்டியிருக்கிறார்கள், ஆனால் யார் மீதும் ஒரு சின்ன அடி கூட விழவில்லை. எனவே தெளிவாக ஒரு முடிவை எடுத்து ஆளுக்கு எந்த சேதாரமும் வரக்கூடாது என்று திட்டமிட்டு ஊரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.

குருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்த பணங்களையும், நகைகளையும் திருடிக்கொண்டார்கள். அதையெல்லாம் மொத்தமாக சேர்த்தால் பா.ம.க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்து தருமபுரியில் ஜெயிக்க முடியும். அல்லது சுப்ரீம் கோர்டில் பல ஆண்டுகளுக்கு வழக்கு நடத்த முடியும். அல்லது கொள்ளையடித்தவர்களை எல்லாம் ’தியாகி’களாக்கி அவர்களுக்கு சாகும் வரை பென்ஷன் தொகை கொடுக்க முடியும்.

தோழர் ராஜு
தோழர் ராஜு

இப்போதைக்கு நமக்கு அரசு தான் குற்றவாளி. குற்றவாளிகளை இந்த அரசு என்ன செய்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது ? நாங்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று. போலீசின் வேலை கிரைமை விசாரிப்பது மட்டும் தான். அதாவது கொள்ளையடிக்கப்பட்டது, வீடுகள் கொழுத்தப்பட்டது அதற்கு என்ன தண்டனை அத்தோடு போலீசின் வேலை முடிந்துவிட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம், பின்னணி, இதில் யார் என்ன நோக்கத்திற்காக செயல்பட்டார்கள், எதிர்காலத்தில் இது போல நடைபெறாமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மாநிலத்தின் பெரிய சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் முன் நின்று செயல்பட்டிருக்கின்றனர் என்கிற போது ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை கமிஷன் தான் இந்த தாக்குதலை பற்றி முழுமையாக விசாரித்து, இது யாருடைய மூளையில் யாருடைய நலன்களுக்காக செய்யப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.

மும்பை கலவரத்தில் சிறீ கிருஷ்ணா கமிஷன் பால்தாக்ரேவை குற்றவாளி என்று அறிவித்தது. சதாசிவம் கமிஷன் அதிரடிப்படையின் அட்டூழியங்களை பட்டியலிட்டு ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அறிவித்தது. அதைப் போல இழப்பீடுகளை முடிவு செய்ய இந்த கலவரத்தினுடைய பயணாளி யார், யாருக்காக இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள், எது சாதாரண மனிதனை கூட கொள்ளையில் ஈடுபட தூண்டியது உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அதை ஒரு தலைமை நீதிபதியின் கீழ் அமைக்கப்பட்ட குழு தான் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அதே நேரத்தில் சி.பி.ஐ யும் ஒரு போஸ்ட் பாக்ஸ்தான். போலீசு கூட பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு சி.பி.ஐ ரொம்ப மட்டம். வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொலை வழக்கில் அவரே பிளாடால் அறுத்துக்கொண்டு இறந்துட்டதா கேசை முடிச்சிட்டானுங்க. ஹைகோர்ட்ல வழக்கு நடந்த போது ஜட்ஜ் கேட்ட கேள்விக்கு சி.பி.ஐ வழகறிஞரால பதில் சொல்ல முடியல. சி.பி.ஐ அப்படித்தான் இருக்கிறது.

நிலப்பிரச்சினையில வீரபாண்டி ஆறுமுகத்தை ஆறுமாதம் சிறையிலடைத்த இந்த அரசாங்கத்துக்கு ஒரு நிலத்தையே அழித்த ராமதாசையும், காடுவெட்டி குருவையும் ரெண்டு மாசம் தூக்கி உள்ள வச்சா என்ன ஆதரவு கொறைஞ்சிறப்போவுது. இவனுங்களை புடிச்சு உள்ள போட்டா தலித் மக்கள் எல்லாம் உங்கள் பின்னால் அணிதிரளுவார்களே. ஏன் அச்சம் ? எனினும் அச்சப்படுகிறார்கள்

வன்னியர் சங்கத்தை தடை செய் என்று நாம் பிரசுரத்தை கொடுத்த உடன் அ.தி.மு.க வழக்கறிஞர், தி.மு.க வழக்கறிஞர், ம.தி.மு.க வழக்கறிஞர் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு அதெப்படி அப்படி சொல்லலாம் என்கிறார்கள்.

அதை நாங்கள் சொல்வதால் தான் வாதிடுகிறார்கள். ஏனென்றால் அதை சொல்லுகின்ற தகுதியும், ஆற்றலும், அறிவும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்கு இருக்கிறது. இவர்கள் சொன்னால் இறுதி வரை பின்வாங்க மாட்டார்கள். உறுதியாக நிற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிரட்டினால் பயந்து கொண்டு ஓடுவதற்கு நாங்கள் ஒன்றும் பிழைப்புவாதிகள் அல்ல. நாங்கள் ஆதாயத்திற்காக யாருடனாவது கூட்டு சேர்வதற்காக காலம் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் அல்ல.

கருணாநிதி உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது வெறும் ஆறே ஆறு பேர் வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கிய காவல் துறைக்கு எதிராக கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய போது தி.மு.க வழக்கறிஞர்கள் எல்லாம் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கிய போதும் போலீசை எதிர்த்து முழக்கமிட்டனர். கருணாநிதி மறுநாள் எங்கே கருப்புக் கொடி காட்டலாம், எங்கே காட்டக்கூடாது, சொல்லிட்டு காட்டனுமா, சொல்லாம காட்டனுமான்னு ஒன்றரை பக்கத்திற்கு சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.

அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களை பார்க்க ஜெயலலிதாவை நாங்கள் அழைத்து வருகிறோம் நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று எங்களிடம் பேசினார்கள். நாங்கள் இதை ஜெயலலிதாவுக்காக செய்யவில்லை, வழக்கறிஞர்களின் உரிமைக்காக செய்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டோம். நாங்கள் அன்று மருத்துவமனையில் படுத்திருந்தால் அரசு வழக்கறிஞராகவோ, வாரியத்தலைவராகவோ ஏதோ ஒரு பதவிக்கு சென்றிருக்க முடியும். அதற்கு அ.தி.மு.க வில் வாய்ப்புண்டு ஆனால் நாங்கள் சாதாரண மக்களுக்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவோடும், ஆற்றலோடும் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட அரசு எப்படி சாதிவெறியர்கள் மீது கை வைக்கும். வைக்காது. சாதி வெறியர்களையும் அவர்களுடைய சங்கங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமானால் தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் நக்சல்பாரிகள் பிறக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும்  மீண்டும் அப்பு, பாலன்கள் பிறக்க வேண்டும். என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் உடல்நிலை சரியில்லாததாலும், பேரா.கருணானந்தம் வெளியூர் சென்று திரும்ப முடியாத காரணத்தாலும் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பியிருந்தனர்.

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக வடிக்கப்பட்ட முழக்கங்கள் சாலைகளில் கடந்து செல்லக்கூடியவர்களை சற்று நேரம் நின்று கவனிக்க வைக்கும் விதத்தில் இருந்தது. நானூறு பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சாதி ஆதிக்க வெறியர்களிடமிருந்து தமிழக உழைக்கும் மக்களை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

________________________

– வினவு செய்தியாளர்
___________________________

வளர்ச்சியின் வன்முறை!

1
சென்னை அசோக் நகர் குடிசை தீவிபத்து
சென்னை அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட திடீர் தீ ‘விபத்தில்’ 500க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து போன அவலம்

சென்னையிலுள்ள கிரீம்ஸ் சாலைக்கு அருகே அமைந்துள்ள மர்கீஸ் கார்டன்  பகுதியில், கடந்த ஜூன் 26 அன்று 70 குடிசை வீடுகளும்; ஜூலை-2 அன்று 45 வீடுகளும்; எஞ்சியிருந்த குடிசைகள் ஜூலை 11 அன்றும் எனத் தவணை முறையில், சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 130 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியினை அடுத்து, ஜூலை 29 அன்று சென்னை – அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது மட்டுமின்றி, உடல்கருகி ஒருவர் இறந்தும் போனார்.

கூவம் கரையில் கட்டப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைப் பணியை காரணம் காட்டி, மர்கீஸ் கார்டன் பகுதி மக்களையும்; மெட்ரோ ரயில் பணியைக் காரணம் காட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்களையும் அவ்விடத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்புமாறு அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களின் அல்லக்கைகளான உள்ளூர் கரைவேட்டிகளும்  இப்பகுதி மக்களை  தொடர்ந்து மிரட்டி வந்ததோடு, நகருக்கு வெளியே செம்மஞ்சேரியில் மாற்று இடம் தருவதாகவும் நைச்சியமாகப் பேசிவந்தனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் நடைபெற்றுள்ள இத்தீவிபத்துக்களைத் திடீர் தீவிபத்துக்கள் என அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. எனினும், இவற்றைத் தற்செயலான தீ விபத்துகள்தான் என்று கூறி வழக்கை முடித்துவிட்டன, போலீசும் தீயணைப்புத்துறையும்.

இப்படிபட்ட மர்மமான தீவிபத்துகளில் சிக்கித் தமது குடிசைகளையும், உடைமைகளையும் பறிகொடுத்துவிட்டு நிராதராவாய் நடுத்தெருவில் நிற்கும் அம்மக்களுக்கு பெயரளவிலான நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் வழங்கக்கூட, அரசு இப்பொழுதெல்லாம் முன்வருவதில்லை. மாறாக, அப்பகுதிகளில் இருந்து அவர்களைக் காலி செய்து, புறநகர்ப் பகுதிகளுக்குத் துரத்தியடிப்பதில்தான் குறியாக இருக்கிறது.

மர்கீஸ் கார்டன் தீ விபத்து நடந்தவுடன், ஜூனியர் விகடன் இதழுக்குப் பேட்டியளித்த சென்னை மாநகரத் ‘தந்தை’ சைதை சா.துரைசாமி,  “இந்த மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் பெருகி சிரமப்படுகிறார்கள். இப்போது அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது… அவர்களுடைய ஆரோக்கியத்துக்காகவும் நலனுக்காகவுமே செம்மஞ்சேரிக்குக் குடிபெயரச்சொல்கிறோம்…. இவர்கள் செம்மஞ்சேரியிலிருந்து நகருக்குள் வந்து போவதற்கு இலவச பஸ் பாஸ் வேண்டுமானால் ஏற்பாடு செய்யலாம்” (ஜூ.வி, ஜூலை-25) எனக் கூறியிருக்கிறார். இம்மக்களின்பால் அரசு கொண்டிருக்கும் ‘நல்லெண்ணத்தை’ இந்த பேட்டி ஒன்றே புரிய வைத்துவிடும்.

இவ்வாறு அடிக்கடி குடிசைகள் எரிந்து சாம்பலாகும் சம்பவங்கள் சென்னைக்குப் புதிய தொன்றும் அல்ல. மாநகர வளர்ச்சித் திட்டங்களும், சென்னையை அழகுபடுத்தும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே சென்னை நகரில் குடிசைப் பகுதிகள் எரியத் தொடங்கிவிட்டன. வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பி.எஸ். மூர்த்தி நகர், பி.கே.புரம், புதுநகர், சேத்துப்பட்டு ஷெனாய் நகர் அவ்வைபுரம், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் விரிவு, கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர், மர்கீஸ் கார்டன் மற்றும் அம்பேத்கர் நகர் குடிசைகள் எனக் கடந்த பத்தாண்டுகளில் எரிந்துபோன குடிசைப் பகுதிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வியாசர்பாடி-பேசின்பிரிட்ஜ் சாலையை அகலப்படுத்துதல்; வியாசர்பாடி மேம்பாலம்; அடையாறு ஆற்றின் மேலும் அதன் கரையை ஒட்டியும் அமைக்கப்படும் மலர் மருத்துவமனை தொடங்கி போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை; சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையில் கூவம் நதிக்கு மேலாகச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலை; எண்ணூர்-பேசின் பிரிட்ஜ் – வால்டாக்ஸ் ரோடு வழியாக பக்கிங்காம் கால்வாய் மீது அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை; பறக்கும் ரயில்பாதைக்கு இணையான சாலை, மெட்ரோ ரயில் என ‘சிங்காரச் சென்னை’ யின் கனவுத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில் இருந்த குடிசைகளெல்லாம் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மர்மமான முறையில் எரிந்து போயுள்ளன.  உலக வங்கி அளித்துள்ள தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம்-2, 2005 என்ற ஆவறிக்கை, சென்னையிலுள்ள 122 குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குடிசைப்பகுதிகள் அப்புறப்படுத்தப்படுவதென்பது, ‘சர்வதேச தரம் வாய்ந்த சிங்கார சென்னை’ என்ற கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய அவசியமான நடவடிக்கை என்பதாக ஆளும் வர்க்கம் சித்தரிக்கிறது. நடுத்தர வர்க்கமும் மகுடிக்குத் தலையாட்டும் பாம்பு போல இக்கருத்தை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு தெருவிலிருந்து மற்றோர் தெருவிற்கு வீட்டை மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல இந்த இடப்பெயர்வு.  நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்கள், சென்னை நகரத்திலிருந்து 30 – 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர், ஒக்கியம், கார்கில் நகர், எர்ணாவூர், நல்லூர், கன்னடபாளையம் போன்ற இடங்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர்.  இதனை அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையாக இவர்கள் பார்ப்பதில்லை.

நகர், நகர் என்று அழைப்பதால், இவைகளெல்லாம் சென்னையின் அண்ணாநகர், பெசன்ட் நகர் போன்ற ‘தரமான’ நகர்களில்லை. சென்னை நகருக்குள் சேரும் குப்பைகளைக் கொட்ட பள்ளிக்கரணை மற்றும் கொடுங்கையூரில் திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளை அரசு வைத்திருப்பது போல, நகரிலிருந்து அப்புறப்படுத்தப்படும் ஏழை மக்களை நகருக்கு வெளியே கொண்டுபோய்க் கொட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட குப்பை கிடங்கை போன்றதுதான் செம்மஞ்சேரியும், மற்ற நகர்களும்!

செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை, 160 சதுர அடியில் கட்டப்பட்ட கான்கிரீட் பொந்துகள் என்றுதான் சொல்ல முடியும்.  சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூட வசதி என மக்கள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செம்மஞ்சேரியில் கிடையாது. சிறுமழைக்கே வீடுகளின் முன்பு குளம் போல் தேங்கிக் கிடக்கிறது, கழிவுநீருடன் கலந்த மழைநீர். இச்சுகாதாரமற்ற சூழலிலும் பாம்புகள் படையெடுக்கும் ஆபத்திற்கு மத்தியிலும் அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

செம்மஞ்சேரியில் அரசு இரண்டு ‘வசதிகளை’ அக்கறையோடு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஒன்று டாஸ்மாக் சாராயக் கடை. மற்றொன்று போலீசு நிலையம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து வந்து இக்குடியிருப்பை கண்காணிக்கிறது, போலீசு. “இருவருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது; இரவு 10 மணிக்கு மேல் எவரும் நடமாடக்கூடாது” என்பது போன்ற போலீசின் வாய்மொழி உத்திரவுகளே இங்கே சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி, மழிக்காத முகத்தையோ, ஒழுங்காக வாராத தலையையோ கண்டால் அவரைக் குற்றவாளியாக்குவது; எவரையும் சந்தேகக் கேசு எனத் தள்ளிக்கொண்டு போய், விடிய விடிய போலீசு நிலையத்தில் அடைப்பது; அவர்களின் கைரேகை மற்றும் விழிரேகையைப் பதிவு செய்து பீதியூட்டுவது என எந்நேரமும் போலீசின் கண்காணிப்பிலேயே இறுத்தப்பட்டிருக்கும் வதைமுகாமாகவே உள்ளது செம்மஞ்சேரி.

சென்னை நகரத்தில் நிலவும் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் புலம்பும் நடுத்தர வர்க்கத்திற்கு, செம்மஞ்சேரியில் உள்ள 7000 குடியிருப்புகளில் 5000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்ற உண்மையும்; நகரத்திலிருந்து செம்மஞ்சேரிக்கு விசிறி எறியப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது படிப்பைத் தொடரப் போதுமான பள்ளிக்கூட வசதி குடியிருப்புக்கு அருகிலேயே ஏற்படுத்தித் தரப்படாததால், படிப்பைக் கைவிட்டுக் குழந்தைத் தொழிலாளர்களாகப் போக வேண்டிய அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் தெரியுமா? தெரிந்தாலும், அவர்களுக்கு உரைக்குமா?

நகரத்திலிருந்து விரட்டப்பட்டு, செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்களுள் பெரும்பாலோர் கொத்துவேலை, வீட்டு வேலை, பெயிண்டிங் வேலை போன்ற தொழில்களில் ஈடுபடும் உதிரித் தொழிலாளர்கள்.  இவர்களது பிழைப்பு நகரத்தைச் சார்ந்ததாக இருக்கிறது.  இக்கூலித் தொழிலாளர்கள் செம்மஞ்சேரியிலிருந்து கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேருந்து பயணம் செய்தால்தான் நகரத்திற்கு போய்ச்சேர முடியும்.  அவர்கள் காலையில் எட்டு மணிக்குள்ளாக நகரிலுள்ள குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்றால்தான், வேலை தரும் தரகர்களை அணுகி அன்றைய பிழைப்பைப் பெறமுடியும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேலை நடக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்  எனவே, அதிகாலையே வீட்டைவிட்டுக் கிளம்பியாக வேண்டும்; பேருந்துக்கான கட்டணம், டீ, பீடிச் செலவுக்கு எனக் கையில்  நூறு ரூபா வைத்துக்கொள்ள வேண்டும்; தாமதமாகச் செல்ல நேரிட்டாலோ, அல்லது வேலையில்லையென்றாலோ, பேருந்துக்குக் கொடுத்த காசு அரசுக்குப் போட்ட வாய்க்கரிசி என்றெண்ணி வந்த வழி திரும்புவதைத் தவிர வேறுவழியில்லை.

தினமும் இவ்வாறு வேலைதேடிச் செல்வதில்  உள்ள சிக்கல்; பயணச்செலவு; தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, வடமாநில மற்றும் வெளிமாவட்டத் தொழிலாளர்களைப் போலவே, இவர்களும் வேலைநடக்கும் இடங்களிலே நான்கைந்து நாட்கள் தங்கி வேலைசெய்துவிட்டு, பின்னர் வீடு திரும்பும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறக் குடிசைகளில் வாழ்ந்தபோது, வீட்டு வேலைகளுக்குச் சென்றுவந்த பெண்களுள் பலர், இடப்பெயர்விற்குப் பின்னர் அந்த வேலைவாப்பை இழந்துள்ளனர். குடும்பச்சூழல் காரணமாக அந்த வேலையைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அதிகாலை 5 மணிக்கே எழுந்து ஓடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாகவே, குடும்பம் குட்டி என எதனையும் கவனிக்க முடியாத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

நாற்றம் பிடித்த கூவத்துக்கு மத்தியிலும், சுகாதாரமற்ற நகர்ப்புறச் சேரிகளிலும் வாழ்ந்துவந்த போது, கூலி வேலையைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைத்து வந்தன; இவர்கள் மீது அரசு திணித்திருக்கும் இந்தக்  கட்டாய இடப்பெயர்வோ அவர்களின்  வேலைவாப்பைப் பறிப்பதாகவும்; பிள்ளைகளின் கல்வியைப் பறிப்பதாகவும் மாறிவிட்டது. மீனவக் கிராமங்களிலிருந்து செம்மஞ்சேரிக்கு விரட்டியடிக்கப்பட்ட மீனவப் பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக சிறுநீரகத்தை விற்ற சம்பவங்களும்; செம்மஞ்சேரியிலும் கண்ணகி நகரிலும் வாழ்வைத் தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களது பட்டியலுமே இவ்வுண்மையை விளங்கச் செய்யும்.

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த நகரத்தையே உருவாக்கி, அதன் இயக்கத்திற்கும் ஆதாரமாய் அமைந்த உழைக்கும் மக்களை, இப்பொழுது வேண்டாத குப்பைகளைப் போல நகருக்கு வெளியே தூக்கி வீசுகிறது.

இது, உழைக்கும் மக்கள் மீது அரசு ஏவும் நவீன தீண்டாமை; மறுகாலனியாக்கக் கொள்கை உருவாக்கியிருக்கும் நவீன சேரிப்பகுதிகள் தான், இந்த செம்மஞ்சேரிகள்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________

Salt of the Earth (1954) – மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

24
சால்ட் ஆஃப் த எர்த் 3

சால்ட் ஆஃப் த எர்த் 1ருத்துச் சுதந்திரம் தழைத்தோங்கும் நாடு, பூவுலக சொர்க்கம், ஜனநாயகமே அதன் சுவாசம்  என்றெல்லாம் பீற்றிக்கொள்ளப்படும்  அமெரிக்காவில் 1954 இல் வெளிவந்த படம் கூடஞு The Salt of the Earth –  தி சால்ட் ஆஃப் த எர்த் (மண்ணின் உப்பு).

இதனை வெளிவராத படம் என்று கூறுவதே பொருத்தம். ஏனென்றால், அமெரிக்க அரசு பல ஆண்டுகள் இதனை  அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்திருந்தது. குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

பதில் எளிமையானது – படத்தில் உண்மை இருந்தது.

000

மெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் டெலவேர் ஜின்க் கம்பெனி என்ற பெரும் நிறுவனத்தின் சுரங்கத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த மெக்சிகன் தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். வேலை நிலைமையைப் பொறுத்த வரையில் அமெரிக்கர்களுக்கும்  மெக்சிகர்களுக்கும்  எந்த வித்தியாசமுமில்லை. மிக மோசமான ஆபத்தான பணிச்சூழல், பாதுகாப்பு நடைமுறைகளைப் புறக்கணித்து அலட்சியப்படுத்தும் நிர்வாகம், எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலைமை, காயமடைந்தாலோ, இறந்தாலோ கேட்க யாருமில்லை என்பது தான் அங்கே நடைமுறை.

’உயிரைப் பணயம் வைத்து சுரங்கத்தில் உழைக்கும் அமெரிக்க மற்றும் மெக்சிகன் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடி விடக் கூடாது’ என்பதற்காக தந்திரமாகச் செயல்படுகிறது நிர்வாகம். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் சுகாதாரமான குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறது. மெக்சிகர்களுக்கான குடியிருப்புப் பகுதிகளோ மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன.

தமது பணிச் சூழலை மேம்படுத்திடப்  போராடுவதற்காக மெக்சிகன் தொழிலாளர்கள் தமக்குள் சங்கம் அமைக்கிறார்கள். ஆனால் அதில் அமெரிக்கத் தொழிலாளர்கள் கலந்து கொள்வதில்லை.  வேலை நேரத்துக்குப் பிறகு இரவெல்லாம் சங்கத்தில் கூடி,  தமது உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றி பேசுகிறார்கள் தொழிலாளிகள். அவர்களில் ஒரு தொழிலாளி  ரமோன்.

சங்கக் கூட்டம் முடிந்து வீட்டிற்கு வருகிறான் ரமோன். ‘ சுகாதாரமான குடியிருப்புகள் வேண்டும்,  கழிவு நீர் அகற்றும் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர் சங்கம் மூலம் முன் வைக்க வேண்டும்’ என்று ரமோனிடம் சொல்கிறாள் அவன் மனைவி எஸ்பிரன்சா.

இதையெல்லாம் கோரிக்கையாக வைக்க  முடியாது என்று அவளை ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் கேலி செய்கிறான் ரமோன்.  எஸ்பிரன்சா தன் இயலாமையை எண்ணி வேதனைப்படுகிறாள். ஆனால் வேறு வழியில்லாமல் அப்போது அடங்கிப் போகிறாள்.

ஒரு  நாள் தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கிக் காயமடைகிறார். தொழிலாளிகளிடையே அத்தனை நாள் மனதில் பொங்கிக் கொண்டிருந்த கோபம் வெடித்துக் கிளம்பி வேலை நிறுத்தமாக மாறுகிறது. ஆனால் ஆலையிலிருந்த அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. மெக்சிகன் தொழிலாளர்கள் மாத்திரம் தளராமல் போராட உறுதி ஏற்கிறார்கள்.

சுரங்கத்திற்குச் செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; பாடல்கள் பல பாடியும், முழக்கமிட்டும்  போராட ஆரம்பிக்கிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை நிர்வாகம் முதலில் கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு, வேறு பகுதிகளில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் பணம், உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்து உதவுகிறார்கள். போராடும் தொழிலாளர்கள் வரும் பொருட்களைத் தங்களுக்குள்  சமமாகப் பங்கிட்டுக் கொண்டு போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

நிறுவனம் காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து போராட்டத்தைக் கலைக்கச் சொல்லுகிறது. போலீசால் கலைக்க முடியவில்லை.  எனவே, போராட்டத்தின் முன்னணியாளர்களில் ஒருவரான ரமோனை, போலீசு  தந்திரமாக கைது செய்து சித்திரவதை செய்கிறது. ரமோன் சிறை சென்று திரும்புகிறான். பிறகு நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள் தொழிலாளர்கள்.

சால்ட் ஆஃப் த எர்த் 2அதே வேளையில் தொழிலாளிகளுடைய மனைவிமார்களும், வீட்டிலுள்ள பெண்களும் ஒன்றாக இணைகிறார்கள். ‘சுகாதாரமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம்’ ஆகியவற்றையும் போராட்டத்தின் கோரிக்கைகளில் சேர்க்க  வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தில் எடுத்துக் கூற முடிவு செய்கிறார்கள். ஆனால் அப் பெண்களுடன் சேருவதற்கு எஸ்பிரன்சா தயங்குகிறாள். ‘தான் ஒரு பெண்; வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தைகளை வளர்ப்பது தான் தன்னுடைய வேலை; யூனியன் கூட்டத்திற்குத் தான் செல்வதை கணவர் ரமோன் விரும்ப மாட்டார். பிரச்சினைகள் வரும்’ எனப் பயப்படுகிறாள். ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறாள்.

சங்கத்தில் வேலை நிறுத்தத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இதற்கிடையில் பெண்களின் வருகையும், அவர்கள் வைக்கின்ற  கோரிக்கைகளும்  ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது; எரிச்சல் அடைகிறார்கள். பெண்களோ விடாப்பிடியாக  தங்களது கருத்துக்களை தொழிலாளர்கள் சங்கத்தின் முன்பு வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. அன்றிரவு வீட்டில் எஸ்பிரன்சாவை ரமோன் கண்டிக்கிறான். ”வீட்டு வேலைகள் செய்தால் போதும், சங்கம் போராட்டம் எல்லாம் பெண்களின் வேலையல்ல” என அறிவுறுத்துகிறான்.

சுரங்கத் தொழிலாளிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்ட விரோதம் என நீதிமன்ற தீர்ப்பைப் பெறுகிறது நிர்வாகம். போராட்டம் தோல்வியை நோக்கிப் போகும் தருணத்தில் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதிக்கிறது.

அந்தக் கூட்டத்திற்கு வந்து சேரும் பெண்கள் குழுவினர்  “சுரங்கத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் கைது செய்யப்படுவீர்கள். ஆகவே நாளை முதல் நீங்கள் பின்னணியில் இருங்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்கிறார்கள். இந்தக் கருத்தை தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். “முதலில் பெண்களுக்கும் ஓட்டுரிமை கொடுங்கள்” என்று கேட்கிறாள் எஸ்பிரன்சா. தொழிற்சங்கக் கூட்டம் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொண்ட சமூகக் கூட்டமாக மாற்றப்படுகிறது. இறுதியில், தீவிரமான எதிர்ப்புக்கிடையில்,  பெண்கள் முன்நின்று  போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

“பெண்கள் என்ன கிழித்து விடப் போகிறார்கள்” என ஆண்கள் நினைக்க, பெண்கள் உற்சாகமாகப் பாடல்கள் பாடியும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் அவர்களுக்கு தேநீர் கொடுத்து உதவுகிறாள். ஆனால் ரமோன் இதைக் கடுமையாக எதிர்க்கிறான். எனினும் உற்சாகம் பொங்கும்  எஸ்பிரன்சாவை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெண்களது  போராட்டம்  தீவிரமடையவே, போலீசார் அவர்களைப் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். போலீசு சுடுவேன் என்கிறது – முழக்கம்  உயருகிறது. போலீசு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுகின்றது. பெண்கள் சிறிது பின் நகர்ந்துவிட்டு, மீண்டும் போராட்டத்தைத் தொடருகிறார்கள். போராடும் பெண்கள் மீது போலீசார் கார் ஏற்றி காயமுறச் செய்கின்றனர். பதிலுக்கு பெண்கள் செருப்பால் அடித்துப்  போலீசைத் துரத்துகிறார்கள். போலீசின் துப்பாக்கி பயனற்றுப் போகிறது.

தொழிற்சங்கத்தில் ஒரு கருங்காலியை முதலாளிகள் விலைக்கு வாங்குகின்றனர். அவன் மூலம் முன்னணிப் பெண்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்படுகிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் சிறைக்குச் செல்கிறாள். வெளியில் இருக்கும் பெண்கள் போர்க்குணத்துடன் ஆர்ப்பாட்டத்தைத் தொடருகிறார்கள்.

சிறையிலும் பெண்கள் தொடர்ச்சியாகக் கோஷமிடுகிறார்கள். அவர்களின் விடாப்பிடியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய போலீசு அவர்களை விடுவிக்கிறது. வீடுகளில் பெண்கள் ஒன்றாகக் கூடி, அடுத்து எப்படிப் போராடலாம் எனத் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். மறுபுறம் ஆண்கள் இந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு, வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கின்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கும் போதுதான்,  பெண்கள் முன் வைத்த கோரிக்கைகளின் நியாயத்தை சொந்த முறையில் உணர்கிறார்கள். தொழிலாளர்களது  கோரிக்கைகளில் சுகாதாரமான குடியிருப்புகள், சுத்தமான தண்ணீர்  ஆகிய இரண்டும்  சேர்க்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பெண்களின் தலைமையில் நடக்கும் போராட்டம் கணவன்மார்களுக்கு  எரிச்சலூட்டுகிறது. ரமோன் எஸ்பிரன்சாவை கோபமாக த் திட்டுகிறான்.  அடங்கி இருக்குமாறு எச்சரிக்கிறான். எஸ்பிரன்சா அவன் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட மறுக்கிறாள்.  ரமோன் மனம் வெதும்பி வீட்டை விட்டுச் செல்கிறான்.

கம்பெனி நிர்வாகமும், போலீசும் ரமோன் வீட்டைத் தந்திரமாகக் காலி செய்யத் திட்டம் தீட்டுகின்றனர். சிலரை மாத்திரம் இப்படி விரட்டியடித்தால் உளவியல் ரீதியாக மற்றவர்கள் பயந்து போராட்டத்தைக் கைவிடுவார்கள் என நினைக்கின்றனர். ரமோன் வீடு காலி செய்யப்படுவதைக் கண்டு, எல்லாத் தொழிலாளர்களும்  அவன் வீட்டின் முன் கூடுகிறார்கள். சுரங்கத்தில் வேலை செய்யும் வெள்ளை அமெரிக்க தொழிலாளர்களும் ரமோன் வீட்டின் முன் குவிகிறார்கள்.

போலீசு வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைக்க, பெண்களும், சிறுவர்களும் அவர்களை எதிர்த்து அவற்றை வீட்டின் உள்ளே மீண்டும் வைக்கிறார்கள். சோர்ந்து போகும் போலீசார் மீது சிறுவன் ஒருவன் கல்லெறியத் துவங்க, கூடி நிற்கும் தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பார்த்து போலீசார் அஞ்சி ஓடுகின்றனர். இதைத் தொடர்ந்து நிறுவனமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யவே, போராட்டம் வெற்றியடைகிறது.

000

1950 களின் துவக்கம் என்பது இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்தி சோவியத் யூனியன் மீண்டெழுந்த காலம். ‘கம்யூனிச பூதம் அமெரிக்காவைப் பற்றி விடுமோ’ என அமெரிக்க முதலாளி வர்க்கம் அஞ்சியது. கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற  வெறியின் அதிகார வர்க்கப் பிரதிநிதியாக அப்போது வந்தவர் தான் மெக்கார்த்தி.

சால்ட் ஆஃப் த எர்த் 3அறிவுத்துறையினர், கலைஞர்கள் ஆகியோர் மத்தியிலிருந்து மட்டுமின்றி, மொத்த சமூகத்திலிருந்துமே கம்யூனிசத்தைக் களையெடுக்கவேண்டுமென வெறிகொண்டிருந்த து மெக்கார்த்தியிசம்.  அன்று தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, கலைஞர்கள் மத்தியிலும் கம்யூனிசம் செல்வாக்கு பெற்றிருந்தது.  சுதந்திரம், மக்கள் விடுதலை, மக்களுக்காகக் கலை என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்த காலம் அது.  உழைக்கும் மக்களின் பால் அன்பு கொண்ட கலைஞர்கள் கம்யூனிசத்தையும் நேசித்தனர்.

1947 முதல் 1975 வரை அமெரிக்கத்தன்மைக்கு முரணான நடவடிக்கைகளை ஆய்வதற்கான குழு, என்ற பெயரில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, கம்யூனிச ஆதரவாளர்களென்று சந்தேகப்படும் அனைவரையும் வேட்டையாடியது.  சார்லி சாப்லின் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த விசாரணைக்கு வரமறுத்த 10 கலைஞர்கள்  சிறைவைக்கப்பட்டனர்.  ‘ஹாலிவுட் டென்’ என்று அழைக்கப்பட்ட இவர்களில் ஒருவர்தான் இப்படத்தின் இயக்குநர் பிபர்மேன்.

கம்யூனிச ஆதரவுக் கலைஞர்களை யாரும் வேலைக்கு அமர்த்தக் கூடாது என  ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு அமெரிக்க அரசு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்,   இச்சவாலை எதிர்கொள்ள சுயேச்சையான தயாரிப்பாளர் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார்கள் இக்கலைஞர்கள். இக்கழக்த்தின் முதல் தயாரிப்புதான் சால்ட் ஆப் த எர்த்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில்  எம்பயர் சின்க் கார்ப்பரேசன் என்ற சுரங்க நிறுவனத்தில் நடைபெற்ற  நடந்த உண்மையான தொழிலாளர் போராட்டம்தான் இந்தத் திரைப்படத்தின் கதை. தொழிலாளர்களிடையே  நிறவெறி அடிப்படையில் பாகுபாடு காட்டியது, ஆண் தொழிலாளர்கள் பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் அலட்சியப்படுத்தியது, அதை எதிர்த்து வென்று பெண்களும் போராட்டத்தில ஈடுபட்டது ஆகிய அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகள்.

இப்போராட்டம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே திரைப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் இதன் இயக்குநர். ரசிய அரசின் நேரடி உத்தரவின் கீழ் ஹாலிவுட்டிலேயே ஒரு கம்யூனிசப் படம்  தயாராகிக் கொண்டிருப்பதாக பீதியைக் கிளப்பியது ஹாலிவுட் நியூஸ் என்ற செய்திப்பத்திரிகை.  இதன் படப்பிடிப்பையே ஹாலிவுட்டிற்கு  வெளியேதான் நடத்தினார் இயக்குநர் பெபர்மேன். படத்தில் நடித்த பெரும்பான்மையினர் தொழில்முறை நடிகர்களும் அல்லர். அவர்கள் போராட்டத்தில் உண்மையிலேயே பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்.

படப்பிடிப்பையே ரகசியமாக நடத்த வேண்டியிருந்தது மட்டுமல்ல, படச்சுருள்கள் அழிக்கப்படலாம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது கூட படக்குழுவினருக்கு பெரும் சிரமமாக இருந்தது. படம் வெளிவரத் தயாரான பிறகு படத்தைத்  திரையிட முனையும் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் பறந்தன. படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகப்பட்டவர்கள் மீது சோதனைகள் நடந்தன. படத்தில் எஸ்பிரன்சாவாக நடித்த மெக்சிகோ நடிகை ரோசாரா ரெவுல்டாஸ் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு வெறித்தனமாக நடந்து கொண்டது அமெரிக்க அரசு.

மொத்த அமெரிக்காவிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில திரையரங்குகள் மட்டும்தான் படத்தைத் திரையிட முன் வந்தன. படத்தை நியூ மெக்சிகோ சுரங்கத் தொழிலாளர்களும், பிற சுரங்கத் தொழிலாளர்களும் உச்சி மோந்து வரவேற்றனர். அமெரிக்கா முழுவதும் இருந்த பல தொழிலாளர்கள் இயக்கங்கள் இந்தப் படத்தை அப்படியே வாங்கிக் கொண்டன. அவற்றில் சில தமது பெயரையே ‘சால்ட் ஆப் த எர்த்’ என மாற்றிக் கொண்டன.

சமூகத்துக்கு ஆரவாரமின்றித் தொண்டாற்றும் எளிய மனிதர்களே ‘மண்ணின் உப்பு’ என்றழைக்கப்படுகிறார்கள். இம்மண்ணின் உப்பாகிய தொழிலாளி வர்க்கம்,  முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஊடாக,  தன்னிடம் நிலவிய ஆணாதிக்க கண்ணோட்டத்தையும், வெள்ளை நிற மேட்டிமைத்தனத்தையும் எப்படி களைந்து கொள்கிறது என்பதை அழகாக விளக்கிச் செல்கிறது இப்படம். பெண்விடுதலையும், நிறவெறி ஒழிப்பும் எங்ஙனம் தமது வெற்றிக்கு இன்றியமையாதவை என்று தொழிலாளி வர்க்கம் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதையும் வெற்றி காண்பதையும்   குறிப்பான நிகழ்ச்சிகள், சிக்கனமான வசனங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறது இந்தப் படம்.

இதன் காரணமாகத்தான் அன்று அமெரிக்க முதலாளி வர்க்கம் இப்படத்தைக் கண்டு அஞ்சியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இன்றும் இந்தப்படம் வெளியிடும் உண்மையின் அழகு நம்மை ஈர்க்கிறது.

_____________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________________

உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!

2

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு-ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஜனவரி 10, 2008-க்குப் பின் வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செதது.  மேலும் அத்தீர்ப்பில், அலைக்கற்றை போன்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடத்தப்படும் ஏலமுறைதான் சிறந்தது” என்ற வழிகாட்டுதலையும் முன் வைத்தது.

இத்தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோரி மைய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அனைத்து இயற்கை வளங்களையும் எந்தச் சூழ்நிலையிலும் ஏலத்தில் விடுவது மட்டும்தான் அனுமதிக்கப்பட்ட முறையா? முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2008-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செயப்பட்டிருப்பதால், அதற்கு முன்னர் அதேமுறைப்படி ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களின் நிலை என்ன? இதற்கு முன்னர் பல்வேறு வகையான இயற்கை வளங்கள் ஏலம் அல்லாத முறைகளில் ஒதுக்கீடு செயப்பட்டிருப்பதோடு, அந்த ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து தீர்ப்பு கூறியிருக்கிறது.  இத்தீர்ப்புக்குப் பின்னர் அந்த ஒதுக்கீடுகளின் நிலை என்ன? இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் எந்த அடிப்படையில் தலையிட முடியும்?” என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி, இக்கேள்விகளின் அடிப்படையில் இத்தீர்ப்புக்கு விளக்கம் அளிக்குமாறு கோரும் மற்றொரு மனுவை அரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்தது.  அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இயற்கை வளங்களைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்த பிரச்சினையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரியானதொரு தீர்ப்பை கடந்த செப்.27 அன்று அளித்தது.

அத்தீர்ப்பில், “இயற்கை வளங்களை ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தாம் அளித்த தீர்ப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதற்குப் பொருந்தாது.  இயற்கை வளங்களை ஏலத்தின் மூலம் ஒதுக்குவது வசதியான ஒதுக்கீடு முறையாக இருக்கலாம்.  ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அதனைக் கட்டாயமாக்க முடியாது.  ஏலத்தில் விடாமல் இருப்பதைச் சட்டவிரோதமான செயலாகக் கருத முடியாது.”

‘‘அதிகபட்ச இலாப நோக்கத்தைக் கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய ஏலமுறைதான் சிறந்தது என்றாலும், அதிகபட்ச இலாப நோக்கத்தை மட்டுமே கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது.  பொதுநலன் நோக்கத்திற்காக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும்பொழுது, ஏலமுறையைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை.  வருவாய்ப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு கொள்கைகளை வகுக்கக் கூடாது.  பொது நலனுக்கு அவசியமென்றால் ஏலம் அல்லாத பிற வழிகளிலும் இயற்கை வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம்.”

‘‘இந்நீதிமன்றம் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தவற்கு எந்தவொரு முறையையும் பரிந்துரைக்கவுமில்லை; எந்தவொரு முறையையும் தடைசெயவுமில்லை.  இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ய எந்த முறையைப் பின்பற்றலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு.  அம்முடிவு அரசியலமைப்பையும் பொதுநலனையும் மீறுவதாகக் கருதப்பட்டால், அதில் தலையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு” என விளக்கமளித்திருக்கிறது.

அரசு இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும்பொழுது, அதில் இலாப/நட்டக் கணக்குப் பார்க்க முடியாது என்பதுதான் இத்தீர்ப்பு சொல்லியிருக்கும் செய்தி.  அதாவது, அரசு இயற்கை வளங்களை ஏலத்தில் விடாதபொழுது, ஏலத்தில் விட்டிருந்தால் அரசுக்குக் கூடுதலாக இவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும்.  எனவே, ஏலத்தில் விடாததால் அரசுக்கு நட்டமேற்பட்டுவிட்டது எனத் தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்டு யாரும் இனி அரசின் மீது குற்றஞ்சுமத்த முடியாது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, 2ஜி வழக்கில் இந்த விளக்கத்தை எழுதிய கையோடு ஓய்வு பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஹெச். கபாடியா இந்த இலாப/நட்டக் கணக்கு குறித்து, இன்னும் தெளிவாகவே அரசுக்குச் சாதகமாக விளக்கியிருக்கிறார். இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன.  இக்குழப்பங்கள் நீங்க வேண்டும் என்றால்,  நட்டமென்பது உண்மையானது; இலாபமென்பது கருதுகோள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக,  நிலக்கரி ஊழல் விவகாரம் நாடாளுமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் உபதேசித்தார், அவர்.

இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள விளக்கம், இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா கூறியுள்ள கருத்து – இவை இரண்டும் ஆ.ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செயப்பட்டதில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபா நட்டமேற்பட்டுவிட்டதாகத் தணிக்கை அதிகாரி அளித்துள்ள அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.  அது மட்டுமின்றி, ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய முடிவையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

2008-ஆம் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களும் பொது நல நோக்கின் அடிப்படையில்தான் குறைந்த விலையிலும் – அதாவது, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டதாகவும், வருவாய்ப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கப்படாததால் அரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என்பதுதான் மைய அரசின் வாதம்.  மேலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையைக் கடைபிடித்தார் என்பதற்காக ஆ.ராசா மீது வழக்குத் தொடரப்படவில்லை.  வழக்கு தொடரவும் முடியாது.  ஏனென்றால், ராசா அரசின் கொள்கை முடிவைத்தான் நடைமுறைப்படுத்தினார்.  இம்முறையை அவர் பாரபட்சமற்ற முறையில் கடைபிடிக்கவில்லை; சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டார்” என்றுதான் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 122 உரிமங்களை ரத்து செய்த முடிவையும் கைவிட்டிருக்க வேண்டும்.  ஆனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வோ அரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரும் மனுவில் 2ஜி தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஒருபுறம் நழுவிக் கொண்டுவிட்டு, இன்னொருபுறம் நாட்டாமை கணக்கில், தனது முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரில் 122 உரிமங்களை ரத்து செய்தது செய்ததுதான் எனத்  தீர்ப்புக் கூறியிருக்கிறது.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இயற்கை வளமான அலைக்கற்றையை ஏலத்தில்தான் விட வேண்டும்; தோண்டி எடுத்தால் காலியாகிவிடும் நிலக்கரி, கச்சா எண்ணெ போன்ற இயற்கை வளங்களை அரசு விரும்பும் எந்த முறையில் வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் விளக்கமே தர்க்க அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை.  இயற்கை வளங்களுள் ஒன்றான அலைக்கற்றையை மட்டும் ஏலத்தில்தான் விடவேண்டும்” என்ற தனது முடிவை நியாயப்படுத்தும் விதத்தில் உச்சநீதிமன்றம் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.  மேலும், தனது இந்த முடிவைப் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தும் நாணயமும் அதனிடம் இல்லை.

ஆ.ராசா தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது மட்டுமல்ல, அதற்கு முன்பும், அதாவது தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், அதற்கும் முன்பாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அருண்ஷோரி தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும் 2ஜி அலைக்கற்றைகள் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன.  ஆனால், உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், ஆ.ராசா அமைச்சராக இருந்து, ஜனவரி 2008-க்குப் பிறகு ஒதுக்கிய அலைக்கற்றை உரிமங்களை மட்டும் உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்து ரத்து செய்திருக்கிறது.

ஆ.ராசா முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்து அரசிற்கு நட்டமேற்படுத்தினார் என்றால், தயாநிதி மாறனும் அருண்ஷோரியும் இதே முறையில் செய்த ஒதுக்கீடுகள் எப்படி அரசிற்கு இலாபத்தை ஈட்டித் தந்திருக்க முடியும்?  அலைக்கற்றைகளை ஏலத்தின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு ஆ.ராசாவின் காலத்திற்குப் பொருந்தும்பொழுது, அதற்கு முந்தையை ஒதுக்கீடுகளுக்கு எப்படிப் பொருந்தாமல் போகும் என்ற கேள்விகளுக்குள் நுழையாமல், அவற்றை வேண்டுமென்றே அலட்சியப்படுத்திவிட்டுத் தனது விளக்கத்தை அளித்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருதலைப்பட்சமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாக இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்க்க முடியாது.  காற்று, தண்ணீர் தொடங்கி நிலக்கரி, இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்கள் ஊடாக மலை, மண் ஈறாக அனைத்து இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என ஆளுங்கும்பலும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும் சாமியாடிக் கொண்டிருக்கும் வேளையில்,             உச்சநீதிமன்றமும் அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஏற்றபடியே, கார்ப்பரேட் கொள்ளைக்கு இசைந்தாற் போலவே தனது விளக்கத்தை அளித்திருக்கிறது.

எனினும், பா.ஜ.க., சி.பி.எம்., ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண், சு.சாமி உள்ளிட்ட எதிர்த்தரப்பு யானையைத் தடவிப் பார்த்து வியந்து நின்ற குருடர்களைப் போல, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்திருக்கும் இந்த விளக்கம், மைய அரசு இனி தன் விருப்பம் போல இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகளுக்கு ஒதுக்க முடியாதபடி ஆப்பு வைத்திருப்பதாகப் பொழிப்புரை எழுதி வருகிறார்கள்.  மைய அரசு பொது நலனுக்கு எதிராக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முனைந்தால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டிவிடுமென இவர்கள் ஒரேகுரலில் பீற்றி வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த விளக்கத்தை அளித்தபொழுதுதான், 2ஜி ஊழலைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் அம்பலப்பட்டு, மன்மோகன் சிங்கின் யோக்கியதை சந்தி சிரித்தது. பொதுநலனுக்கு எதிராக இயற்கை வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் நாங்கள் தலையீடு செய்வோம் எனத் தனது விளக்கத்தில் நீட்டி முழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம் இந்த ஊழல்  குறித்து மௌனமாகவே இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கள்ள மௌளம் ஒருபுறமிருக்க, இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பொது நலன் என்பதை எப்படி வரையறுப்பது? கிராம், செ.மீ., என்பது போல அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இதற்குப் பொது அளவுகோல் உண்டா? என்பதுதான் இந்த விவகாரத்தின் மையமான கேள்வியாகும்.

மக்கள் அனைவருக்கும் கைபேசி சேவை குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையைக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செததாக ஆ.ராசா வாதிட்டு வருகிறார்.  அவரது வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதை உச்சநீதிமன்றம்கூட மறுத்துவிட முடியாது.  ஆனாலும், ஆ.ராசா பொது நலனுக்கு விரோதமாக அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாகக் குற்றஞ்சுமத்தி, அவர் ஒதுக்கீடு செய்த 122 உரிமங்களை ரத்து செய்தது, உச்சநீதிமன்றம். அதேசமயம், ஆ.ராசாவிற்கு முன்பாக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் குறைந்த விலையிலும் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதை ரத்து செய்யாததன் மூலம், அந்த ஒதுக்கீடு பொது நலனுக்கு விரோதமானதல்ல எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

‘‘பொது மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விடாமல், குறைந்த விலையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததாக” மன்மோகன் சிங்கும் கூறி வருகிறார்.  ஆனால், மின்சாரக் கட்டணமோ மக்களின் மென்னியை இறுக்கும் வண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது.  எனினும், தனியார் வர்த்தக மின்சாரக் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களைத் திரும்பப் பெறுவது குறித்துப் பேச மறுக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நாட்டு நலனுக்கு எதிரானது; அதனால் அதைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவைத் தடை செய்ய மறுத்து, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

பொது நலனை வரையறுக்கும் துல்லியமான, கறரான சட்ட விதிகள் எதுவும் கிடையாது என்பது மட்டுமல்ல, அரசு, நீதிமன்றம், ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் தற்பொழுது பொதுநலன் எனப் பேசி வருவது மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ குறிக்கவில்லை.  அவர்கள் யாவரும் இன்று தனியார்மயத்துக்குச் சேவை செவதைத்தான் பொது நலன், நாட்டின் வளர்ச்சி என வரையறுக்கிறார்கள்.  தனியார்மயம் – தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின்  மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது.   வோடாஃபோன் வழக்கில், அந்நிறுவனம் 11,000 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தத் தேவையில்லை என ஹெச்.எஸ்.கபாடியா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றே, நீதித்துறை யார் பக்கம் நிற்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறது.  2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் விளக்கம், நாட்டின் இயற்கை வளங்களை, பொதுச் சோத்துக்களைக் கொள்ளையிடக் குதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே அரசு பாரபட்சம் காட்டக் கூடாது; அவர்களிடம் நேர்மையாகவும் முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும்” என்பதை உறுதி செயும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காவல்காரனாக உச்ச நீதிமன்றம் நிற்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

தனியார்மயத்துக்கு ஜே! உடன்பிறந்த ஊழலுக்கு ஜே! ஜே!

ச்ச நீதிமன்றம் உள்ளிட்டு, தனியார்மயம் – தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் அக்கொள்கையோடு ஒட்டிப் பிறந்த ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் அங்கீகரித்துக் கொண்டே, இயற்கை வளங்களையோ, பொதுத்துறை நிறுவனங்களையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏல முறை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ கைமாற்றிவிடும்பொழுது, அதில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெறக் கூடாது என உபதேசித்து வருகிறார்கள்.  இங்கே ஊழல் என்று உச்ச நீதிமன்றமும், நடுத்தர வர்க்க கனவான்களும் குறிப்பிடுவது, நிச்சயமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் பகற்கொள்ளையை அல்ல; பொதுத்துறை நிறுவனங்களையோ, இயற்கை வளங்களையோ தனியாருக்கு ஒதுக்கும்பொழுது அதில் அரசியல்வாதிகள், ஓட்டுக்கட்சிகள் தங்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அடிக்கும் கமிசனை மட்டும்தான் ஊழல் என்கிறார்கள். அரசியல்வாதிகளின் ஊழலைத்தான் இவர்கள் பொதுநலனுக்கு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறுகிறார்களே தவிர, கார்ப்பரேட் பகற்கொள்ளையை நோக்கி இவர்களின் சுண்டுவிரல் கூட நீளுவதில்லை.

உதாரணத்திற்கு 2ஜி வழக்கை எடுத்துக் கொண்டால் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. பெற்ற கையூட்டுப் பற்றி பேசிய அளவிற்கு, 2 ஜி உரிமத்தைப் பெற்ற பின்,  தங்கள் நிறுவனப் பங்குகளை விற்று 22,000 கோடி ரூபாய் அளவிற்குக் கொள்ளை இலாபம் அடைந்த டாடா டெலி சர்வீசஸ், ஸ்வான், யுனிடெக் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றி உச்ச நீதிமன்றமோ, ஜெயாவோ, சுப்பிரமணிய சுவாமியோ, சோ ராமஸ்வாமியோ பேசவில்லை.  இந்த ஊழலில் ஆதாயம் அடைந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட கலைஞர் டி.வி.யின் பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி கைது செய்யப்பட்டார்.  ஆனால், இவ்வூழலில் தொடர்பிருப்பது அம்பலமான பிறகும் பழம்பெரும் தரகு முதலாளியான டாடா சி.பி.ஐ.-யாலும் நீதிமன்றத்தாலும் விசாரிக்கப்படவேயில்லை.  ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியும் டி.பி. ரியாலிட்டி  நிறுவனத்தின் அதிபர் பல்வாவும் அலைக்கற்றை உரிமம் பெற்றதில் கூட்டுக் களவாணிகளாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்த பிறகும், அனில் அம்பானி கைது செயப்படவில்லை.  ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளும், புதுத் தரகு முதலாளியான பல்வாவும்தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.  டாடா- நீரா ராடியா தொடர்பை உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு யாரும் மறந்தும்கூடத் தற்பொழுது பேசுவதில்லை.

நிலக்கரி ஊழல், இஸ்ரோ ஊழல், ஏர் இந்தியா ஊழல், முகேஷ் அம்பானி தொடர்புடைய கே.ஜி. எண்ணெ வயல் ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், பா.ஜ.க. தொடர்புடைய ரெட்டி சகோதரர்களின் ஊழல் என கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட ஊழல்கள் அம்பலமானாலும், முதலாளித்துவப் பத்திரிகைகள், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுப்பிரமணிய சுவாமி, சோ ராமஸ்வாமி போன்ற யோக்கியர்கள் மட்டுமல்ல, அரசியல் சாசன நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தலைமை தணிக்கை அதிகாரி ஆகியோரும் 2ஜி ஊழலை மட்டும்தான், அதிலும் அவ்வூழலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் காட்டிலும் ஆ.ராசா, மற்றும் தி.மு.க.வைத்தான் குறிவைத்துக் காய்களை நகர்த்தினார்கள்; தமிழகத்தின் பார்ப்பன ஜெயா கும்பல்  1,76,000 கோடி ரூபா அளவிற்கு தி.மு.க. ஊழல் செய்துவிட்டதாகப் புளுகுணி பிரச்சாரம் நடத்தி, தமிழக முதல்வர் பதவி என்ற அரசியல் ஆதாயத்தையும் அடைந்தது.

உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு ஊழலுக்கு எதிராக சவுண்டு விடுபவர்கள் அனைவரும் தனியார்மயத்தின் கீழ் நடக்கும் எல்லா ஊழல்களையும் கண்டு கொள்வதில்லை.  ஊழலை யார் செய்தார்கள் என்ற அடிப்படையிலும் எந்த ஊழலை எந்த அளவிற்கு அம்பலப்படுத்துவது என்பதையும், இந்த ஊழல் எதிர்ப்பு சவுண்டு பார்ட்டிகள் அரசியல் உள்நோக்கம், சுய இலாபம் கருதியே தீர்மானித்து அம்பலப்படுத்துகிறார்கள்.  மற்றபடி, இவர்கள் அனைவரும், தனியார்மயத்தின் உடன்பிறப்புகளான ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையும் பொது நலன் என்ற போர்வையில் ஒரு கொள்கையாகவே வரித்துக் கொண்டுவிட்டனர்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

___________________________________________________________

புன்னகை என்ன விலை?

2

காசு

__________________________

-ஷெரிப் அராஃபா
__________________________

தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!

30

ஏசுநாதர்மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன. அந்த அறையின் தரையெங்கும் இரத்தத் துளிகள் …”

– கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி மேரி சாண்டியின் சுயசரிதையான “நன்ம நிறஞ்சவளே ஸ்வஸ்தி” எனும் நூலில் இருந்து…

67 வயதான மேரி சாண்டி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டவர். சுமார் நாற்பதாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார். அவரது 13வது வயதிலிருந்து துவங்கிய நெடும் பயணம் அது. நாற்பதாண்டு கால ‘இறைப்பணியில்’ தான் சந்தித்த அருவெறுப்பான தருணங்களை இப்போது தனது சுயசரிதையின் ஊடாக முன்வைத்துள்ளார்.

மேரியின் நூல் கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் மலிந்து விட்ட பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. பாதிரிமார்களால் வல்லுறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும் அப்பாவிக் கன்னியாஸ்திரிகளின் கதைகள் நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன என்றால், பாலியல் ரீதியிலான முறைகேடான உறவுகள், நிதி முறைகேடுகள் போன்றவற்றைப் பொது நியதியாக ஏற்றுக்கொண்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பற்றிய விவரணைகள் சாமானிய வாசகர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமூட்டும்.

கேரளத்துக்கு வெளியிலிருக்கும் பொது வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கதைகளை அதிசயமாய்த் தோன்றலாம் – ஆனால், கேரளம் இவற்றையெல்லாம் பலமுறை கேட்டுப்  பழகிவிட்டது. இதற்கு முன்பே சகோதரி ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் வாழ்க்கை வரலாறு” என்கிற நூலும், பாதிரியார் ஷிபு கலம்பரம்பிலின் “ஒரு வைதிகண்டே ஹ்ருதயாத்மா” என்கிற நூலும் இதே போன்ற விஷயங்களைக் கையாண்டுள்ளன.

இதில் ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” இன்றளவும் திருச்சபையால் செரிக்க முடியாத கடப்பாறையாய் உருத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சில வரிகள் –

“நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்து கொண்ட அருட்தந்தை, மூச்சடைக்க வைப்பது போல என்னைப் பலமாகக் கட்டிப் பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள  நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித் தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்கார வைத்து விட்டுக் கேட்டார்: ‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’ இல்லையென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார்” – பக்கம் 103.

ஜெஸ்மியின் நூல் வெளியான சமயத்தில் அது உண்டாக்கிய அதிர்வலைகள்  கேரளத்தில் மட்டுமல்ல, நாடெங்குமுள்ள கத்தோலிக்கர்களிடையேயும் எதிரொலித்தன.  கத்தோலிக்கத் திருச்சபை மலக்குட்டையில் மூழ்கித் திளைக்கும் ஆபாசக் காட்சிகள் ஜெஸ்மியின் நூலெங்கும் விரவிக் கிடந்தன. முகத்தில் வழிந்த மலத்தைத் துடைத்துக் கொண்ட திருச்சபை, ஜெஸ்மியை பைத்தியகாரி  என்றும், சூனியக்காரி என்றும் சாத்தானால் வழி நடத்தப்படுகிறாரென்றும் கதைகளைப் புனைந்து பார்த்தது. ஆயினும், இன்றளவும் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின்  மேல் எந்த விசாரணையும் நடத்தவில்லை; அப்படியொன்றைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பு கூட இல்லாத திமிர்த்தனத்தையே  திருச்சபை வெளிப்படுத்தியது.

ஜெஸ்மி மற்றும் மேரியின் நூல்களில் வருகின்ற மதகுருமார்கள் பலரும் எந்த தடுமாற்றமோ குற்றவுணர்வோ இன்றி பாலியல் முறைகேடுகளிலும், நிதி முறைகேடுகளிலும் ஈடுபடுவதும், அது கேள்விக்குள்ளாகும் போது அதிகார வர்க்கத் திமிருடன் கையாள்வதும் ‘நம்பிக்கை உள்ள’ கிருஸ்தவர்களிடையே கடும் அதிர்ச்சியைத்  தோற்றுவித்துள்ளன.

திருச்சபை எனும் மாபெரும் இயந்திரத்தினுள் மக்களுக்குச் சேவை செய்வது, இயேசுவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது என்கிற ‘தூய’ நோக்கங்களுக்காக நுழையும் ஜெஸ்மி, மேரி,  கலம்பரம்பில் போன்ற அப்பாவி ஆட்டுக்குட்டிகள் ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் வெளியேறியாக  வேண்டும் அல்லது அனைத்தையும் இயேசுவின் திருநாமத்தினாலே சகித்துக் கொண்டு இதயமற்ற அந்த இயந்திரத்தின் நட்டு போல்டுகளாய்ச் சுருங்கி விட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்- வேறு வாய்ப்புகள் ஏதும் இவர்களுக்கில்லை.

திருச்சபை எனும் இந்த இயந்திரத்துக்கு அதிகளவில் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் பின்நிலமான கேரளத்திலிருந்து இது போன்ற நூல்கள் அதிகம் வெளியாவது புரிந்து கொள்ளத்தக்கதே. கேரளத்திலிருந்து மட்டும் சுமார் 1,85,000 பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் உருவாகியுள்ளனர். இதில் சுமார் 1,35,000 பேர் கேரளத்துக்கு வெளியே ‘தேவ காரியத்தில்’ ஈடுபட்டு வருகிறார்கள். கத்தோலிக்க திருச்சபை ஊழியர்களில் மட்டும் சுமார் 15 சதவீதம் மலையாளிகள் என்கிறது அவுட்லுக் பத்திரிகை அளிக்கும் புள்ளிவிவரம்.

சகோதரி மேரி சாண்டி
“பாவமன்னிப்பிற்காக பாதிரியிடம் போகாதீர்கள்” – சகோதரி மேரி சாண்டி

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிருஸ்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது. கத்தோலிக்கர்கள் மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிருஸ்தவ நிறுவனங்களையும் சேர்த்துக்  கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 7.5 லட்சம்  கோடிகள். சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1800 தொலைக்காட்சி சேனல்களையும், 1500 பல்கலைக்கழகங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் சுமார் 400  கோடி துண்டுப் பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லாத வரம்பற்ற அதிகாரமும், ஆளும் வர்க்கங்களுடனான நெருங்கிய ஐக்கியமும் காரணமாக இவர்கள் தங்களை இயேசுவுக்கும் மேலாக நிறுவிக் கொண்டுள்னர். தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், தொழுநோயாளிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

ஐசுவரியவானை மறுத்து லாசருவுக்காகவும் – அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்களுக்காகவும் – வலுத்தவர்களைப் புறக்கணித்து எளியவர்களுக்காகவும் நின்ற ஒரு எளிய மனிதனான இயேசுவின் நாமத்தோடு பிற்காலத்தில் ‘கிறிஸ்து’ என்கிற வால் ஒட்டிக்கொண்டதைத் தொடர்ந்த ஈராயிரம் ஆண்டுகளின் வளர்ச்சி இது.

மூன்றாம் உலக நாடுகளில் கிருஸ்தவர்களின் சமூக வாழ்க்கை கிருஸ்தவ மத நிறுவனங்களோடு தவிர்க்கவியலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. அவர்களின் பிறப்பு, வாழ்வு, திருமணம், இறப்பு என்று சகலத்திலும் திருச்சபை நேரடியாகத் தலையிடுகிறது.

பதினான்காண்டுகளுக்கு முன்பே திருச்சபையிலிருந்து விலகும் மேரி சாண்டி, சொந்தமாய் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை நடத்த முற்படுகிறார். திருச்சபை தொடர்ச்சியாக அவருக்கு இடைஞ்சல்களை உருவாக்குகிறது.  அவருக்கு கிருஸ்தவர்கள் எவரும் வீடு அளிக்க முடியாதபடி செய்கிறது. ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை ஆதரவற்ற அந்தக் குழந்தைகளோடு இடம் விட்டு இடம் மாறவேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஜெஸ்மியையும், ஷிபு கலம்பரம்பிலையும் அவர்களது குடும்பத்தாரே புறக்கணிக்கும்படி செய்துள்ளது. திருச்சபையின் வழிகாட்டுதல்களை மீறும் எவருக்கும் புதைக்கச் சுடுகாடு கூட கிடைக்காது என்பதால், அந்தத் தடிக்கம்பின் அதிகாரத்திலிருந்து விசுவாசிகளை எப்பேர்ப்பட்ட தேவனாலும் காப்பாற்றமுடிவதில்லை.

கத்தோலிக்கத் திருச்சபை போன்ற கார்ப்பரேட் பாணியில் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக இல்லாமல், குடிசைத் தொழில்  போன்று ஆங்காங்கே பரவியுள்ள பெந்தெகொஸ்தே சபைகளிலும்  இவாஞ்சலிக்கல் ஊழியங்களில் ஈடுபடும் கிருஸ்தவ நிறுவனங்களிலும் அதிகார பீடங்களில் இருப்பவர்களின்  மீதான குற்றச்சாட்டுகள் இதே போலத்தான் கையாளப்படுகின்றன.

வின்சென்ட  செல்வகுமார் தமிழ்நாட்டின் பெந்தெகொஸ்தே வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்ட ஊழியக்காரர். அவர் கிருஸ்தவ ஊழியத் தொழிலைத் துவங்கிய காலத்திலிருந்து அவருடன் உடனிருந்த சொந்தக்காரர்களே சமீபத்தில் அவரிடமிருந்து விலகி வந்ததோடு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அவரது சொந்த வளர்ப்பு மகனே முன்னின்று குற்றம் சாட்டியிருந்தார். தனது ஆதரவாளர்களிடையே கையும் மெய்யுமாகப் பிடிபட்ட நிலையிலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை எளிதில் புறம் தள்ளிய வின்சென்ட், ஏஞ்செல் தொலைக்காட்சியில் தோன்றி அதற்கு சப்பைக்கட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான அணுகுமுறை இல்லை – உலகெங்கும் இதே போன்ற அணுகுமுறைகளைத் தான் திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன.

கிருஸ்தவ மதம் ஆளும் வர்க்க நிறுவனமாக மாறியது தொட்டு,  நாளது வரையிலான நீண்ட வரலாற்றுக்கு இணையாக அந்த நிறுவனங்களுக்கு உள்ளே நடந்த முறைகேடுகளின் வரலாறும் உள்ளது. கள்ளக் காதலில் இருந்து நிதிமுறைகேடுகள் வரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டே பரமண்டலத்திற்குள் நுழைந்த போப்பாண்டவர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்தப் பட்டியலில் சமீபத்திய  சேர்க்கை வாத்திகன் அரச வங்கியில் போப்பின் நேரடிப் பார்வையின் கீழ் நடந்த மாபெரும் நிதி மோசடி.

ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும், நிழலுலக மாஃபியா கும்பல்களுக்கும் பணப்பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்துள்ளது. தற்போது நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மாஃபியாக்களின் வங்கி என்றே அறியப்படும் வாத்திகன் வங்கியின் பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion)

சுமார் 6 பில்லியன் நிதிக் கையிருப்பைக் கொண்டுள்ள இந்த வங்கி, 2010ஆம் ஆண்டு மட்டும் சுமார் 55 மில்லியன் யூரோக்களை போப்புக்கு இலாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது.  கடந்த மார்ச் மாதம் வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது மேற்குலகில் போப்பின் திருட்டுத்தனங்களும் சூடான தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விவகாரம் இந்தளவுக்கு முற்றி முடைநாற்றமெடுக்கத் துவங்கிய பின்னும் கூட, நிதி மோசடியின் மூலகர்த்தாவான  போப்பிடமோ அவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர்களிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மாறாக, நுஸ்ஸியிடம் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களைக் கொடுத்தது யார் என்கிற கோணத்தில் விசாரித்து வரும் வாத்திகன் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போப்பின் சமையல்காரரைக் கைது செய்துள்ளனர்.  மதம்  நேரடியாக ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதற்கு வாத்திகனே சாட்சி – இங்கே போப்பாண்டவரே முகமூடியணிந்த திருடனாகவும், சீருடையணிந்த போலீசாகவும், அங்கியணிந்த நீதிபதியாகவும், ஒளிவட்டம் பொருத்திய மீட்பராகவும் சகல பாத்திரங்களிலும் களமிறங்கிக் கலக்குகிறார்.

பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்
12 வருடங்களுக்குப் பிறகு திருச்சபையிலிருந்து விலகுகிறார் பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்.

நிறுவனத்தின் பிரமாண்டமும், அந்த பிரமாண்டம் அளிக்கும் மமதையும், ஆளும் வர்க்கத்தோடான நெருக்கமும், அந்த நெருக்கம் அளிக்கும் அதிகாரமும், கேள்வி முறையின்றிப் பின்பற்ற கையறு நிலையிலிருக்கும் மக்கள் கூட்டமும் மத பீடங்களைத் தரையிலிருந்து ஒரு சில அடிகளுக்கு மேல் மிதக்க வைக்கிறது.

சகல திசைகளிலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தாக்கப்படும் மக்கள் ஜனநாயக உணர்வற்ற விசுவாசிகளாய், அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தேவ விசுவாசத்தின் ஊடாய் சகலத்தையும் சகித்துக் கொண்டு செல்பவர்களாய் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். தொட்டறியத்தக்க பொருளாதாயக் காரணிகளை முன்னிட்டு ஏற்படும் பாடுகளைச் சகித்துக்கொண்டு,  தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க பிரார்த்திப்பதே மேன்மை என்பதாக கற்றுத் தரப்படுகிறார்கள். அதுவே  தியாகம் என்பதாகப் புரியவைக்கப் படுகிறார்கள். கையறு நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் அறியாமையே மத நிறுவனங்களின் திமிருக்கு விளைநிலமாய் இருக்கிறது.

இது ஒரு விநோதமான உலகம். இங்கே கொலைகாரனே ஜீவகாருண்யவாதி. திருடனே மீட்பன். கொள்ளைக்காரனே வள்ளல். நாலாந்தர பொறுக்கி தான் முதல்தர ‘போதகர்’. இந்த உலகத்துக்குள் இயேசுவின் ‘அழைப்பை’ ஏற்று நுழையும் மேரி சாண்டி, ஜெஸ்மி போன்றவர்கள் எதார்த்தத்தை பிரத்யட்சமாய்த் தரிசிக்கும் அந்தத் தருணங்கள் எப்படியிருந்திருக்கும்? இது தான் அறம் என்று அவர்கள் நம்பிய விழுமியங்கள் சில்லுச் சில்லாக நொறுங்கித் தகர்ந்து விழும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்? அதை அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாகச் சொல்கிறது.

அவுட்லுக் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் மேரி, அதன் இறுதியில் இவ்வாறு சொல்கிறார் –

“பல  நல்ல பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள். நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான், உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்..”

தனது சொந்த அனுபவத்தின் காரணமாக, இளம் பெண்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நம்பவேண்டாம் என்கிறார் மேரி. சாதி ஆதிக்கம் நிறைந்திருக்கும் திருச்சபையை தலித்துகள் நம்பவேண்டாம் என்று தமது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு தலித் பாதிரியார் கூறக்கூடும். கருப்பின மக்கள் வெள்ளையினப் பாதிரியை நம்பவேண்டாம் என்று கருப்பினப் பாதிரி சொல்லுவார். திருச்சபைக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிர்வாகத்திலிருக்கும் பாதிரிகளை நம்பவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்கள்.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மேரி அல்லது ஜெஸ்மியைப் பொருத்தவரை பாலியல் முறைகேடுகளில் ஈடுபடாமல், துறவு நிலை பேணும் பாதிரிகளும் கன்னியாஸ்திரீகளும் நல்லவர்களே. ஒழுக்கம், அறம் என்பனவற்றை பாலியல் ஒழுக்கம், நிதிக் கையாடல் செய்யாமை போன்ற குறிப்பிட்ட சில பண்புகளோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்ப்பதும், திருச்சபை உள்ளிட்ட ஒரு நிறுவனத்தின் யோக்கியதையை, அந்நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் குணநலன்களை மட்டுமே வைத்து மதிப்பிடுவதும்தான் இதில் மையமான பிரச்சினை.

ஒழுக்கம், அறம் குறித்த கோட்பாடுகளின் சமூகப் பாத்திரத்தை விலக்கி விட்டு, அதாவது அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்க நலனை மறைத்துக் கொண்டு, முடிந்தவரை அவற்றைப் பூடகமாக்குவதன் மூலம், வர்க்க சுரண்டலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் மத நிறுவனங்கள் ஆற்றிவரும் பாத்திரம்.

தமது கோடானு கோடி விசுவாசிகள் பஞ்சப்பராரிகளாய், பன்றிகள் மேயும் குடிசைகளுக்குள் உழலும் போது, அவர்களுக்காய் தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க மன்றாடுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் திருச்சபைப் பாதிரிகள் வாழும் வாழ்க்கை எத்தகையது? ஒரு சாதாரண சி.எஸ்.ஐ பாதிரியின் துவக்க சம்பளமே சுமார் முப்பதாயிரம். தங்குமிடம் இலவசம், உண்ணும் உணவு இலவசம். மனைவிக்கு வேலை, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை இலவசம், மருத்துவச் செலவுகளை விசுவாசிகள் கவனித்துக் கொள்வார்கள் – இதற்கும் மேல் வரும்படியாகத் தனிப்பட்ட ஜெபக் கூட்டங்களில் வசூலாகும் தொகையும் இவர்களுக்கே. கத்தோலிக்கப் பாதிரியார்களின் வாழ்க்கை வசதிகளைப் பற்றிச்  சொல்லவே வேண்டியதில்லை.

இவர்களுக்குப் படியளக்கும் மக்கள் வறுமையிலும், துன்பத்திலும் உழன்று கொண்டிருக்கும் போது பாதிரிமார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வது தீயொழுக்கம் என்று கூறி எந்த யாரும் திருச்சபைகளில் இருந்து வெளியேறியதில்லை. ஏனென்றால் அந்த உல்லாச வாழ்க்கையை அறம் கொன்ற செயலென்று அவர்கள் யாரும் கருதியதில்லை, அவ்வாறு கற்பிக்கப் பட்டதுமில்லை.

போப்பாண்டவரின் வங்கி மோசடியைப் பற்றியும், அவர்கள் கடந்த காலங்களில் கள்ளக்காதல்களில் ஈடுபட்ட கிசுகிசுக்களையும் எழுதி மாயும் ஐரோப்பிய ஊடகங்கள், இரண்டாம் உலகப் போரின்போது பாசிசத்தை திருச்சபை ஆதரித்து நின்றதும், பற்றியும், இன்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை மவுனமாக அங்கீகரிப்பதும் அறம் கொன்ற செயல் என்று சாடுவதில்லை.

இன்றைய உலகமே போராட்டங்களின் உலகமாய் இருக்கிறது. அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கி ஸ்பெயினின் தெருக்களிலும், கிரீஸின் நகரங்களிலும் மக்கள் தங்களைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள், கல்வி தனியார்மயத்தை எதிர்த்து மாணவர்கள், விளைச்சலுக்கு விலை கேட்டு விவசாயிகள், வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து பழங்குடியினர், அணுவுலையை எதிர்த்து மீனவர்கள் என்று திரும்பிய திசைகளிலெல்லாம்  போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் புவிப்பரப்பே மக்களின் வாழ்க்கைக்கான போராட்டங்களினால் கொதிநிலையிலிருக்கும் போது திருச்சபைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யார் பக்கம் நிற்கின்றன? தங்களது சொத்துகளையும் சுகபோக வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவற்றைத் தமக்கு அருளிய ஆளும் வர்க்கங்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்துகின்றன அல்லது மறைக்கின்றன தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா பரலோகம் மட்டும்தான் என்பது போலவும், இகலோகப் பிரச்சினைகளில் தங்களுக்குத் தொடர்பில்லாதது போலவும் பம்மாத்து செய்கின்றனர்.

ஒழுக்கம் என்பதை தனிநபர் விவகாரமாகச் சுருக்கி, அந்த ஒழுக்கத்தின் வாழ்விடத்தையும் தொடையிடுக்குகளுக்குள் சுருக்கி, துறவு என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கி, அந்தத் துறவுக்கு, கண்கள் கூசுமளவுக்கு ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கிக் காட்டுவதன் நோக்கமே, மத நிறுவனங்களின் இருண்ட பக்கத்தை மறைப்பதுதான். இந்த இருட்டுக்குள்ளே தான் மேரி குறிப்பிடும் ‘நல்லவர்கள்’ உலவுகிறார்கள். இது கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

படங்கள் நன்றி: அவுட்லுக்

________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________

இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!

15

இடம்பெயரும் தொழிலாளர்கள்:
இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்!

சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்
சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்

நீண்ட தகரக் கொட்டகை. அதில் ஆறடிக்கு நாலடியில்  சிறிய அறைகள். அறை முழுவதும் பாகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் சூட்கேஸ்கள் தலையணையாக உள்ளன. சுவரில் ஆணியில் தொங்கும் சட்டைகள், பேண்டுகள். இது நான்கு பேர் தங்கும் அறை. இதுபோல் அடுத்தடுத்து பல அறைகள். வெளியே அனைவருக்கும் குளிக்க ஒரு பெரிய தொட்டி. சுகாதாரமற்ற கழிப்பறைகள். கழிவுநீர் அப்பகுதியில் சாக்கடையாகத் தேங்கி நிற்கிறது.  இவைதான் வடமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்கள்.

கால்களை நீட்டிப் படுக்கக்கூட இடமில்லாமலும், இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டும் உறங்கும் அவர்கள், காலையில் ஒப்பந்ததாரர்களால் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறார்கள். சென்னையைச் சுற்றி பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், தாம்பரம், திருவான்மியூர் ரயில் நிலயத்தை ஒட்டிய பகுதி முதலான பல இடங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத  சுகாதாரமற்ற சூழலால் இவர்களில் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். அண்மையில் சென்னையில் வட மாநிலத் தொழிலாளர் இரண்டு பேர்  வாந்தி-பேதியால் மாண்டு போயுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களுக்குப் பணியாற்றுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளோ கிடையாது. சென்னை ஜேப்பியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டிடம் சரிந்து விழுந்து உயிரோடு கொல்லப்பட்டனர். ஓமலூர் தவிட்டுக் கம்பெனியில் தீயில் வெந்து வடமாநிலத் தொழிலாளிகள் மாண்டு போயினர். இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தின் அழிவும் தீவிரமாகும் உலகமயமாக்கமும் நாடெங்கும் கிராமப்புற இளைஞர்களை வாரிக்கொண்டுவந்து பெருநகரங்களில் குவித்துக் கொண்டிருக்கிறது. 2007-08 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 30 சதவீத மக்கள், இடம் பெயரும் உழைக்கும் மக்களாக உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் பீகாரிகள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாகக் குடியேறியுள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்களின் மையமாக மும்பை நகரம் மாறியுள்ளது. இங்கு இடம் பெயர்ந்த உழைக்கும் மக்களாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலானோர்  உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்

தமிழகத்தில் ஏறத்தாழ 10 முதல் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, அசாம், பீகார், சட்டிஸ்கர், ஒரிசா, உ.பி. மணிப்பூர், மிஜோரம் முதலான மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த இக்கட்டுமான கூலித் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலைக்கு 150 முதல் 300 ரூபாய் வரை ஊதியமாகத் தரப்படுகிறது. இவர்கள் தவிர, நாளொன்றுக்கு ரூ.100,150 கூலியுடன்  தமிழகத்தின்  உணவு விடுதிகள் – தேநீர்க்கடைகளில் பல இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த போதிலும், இவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு கேன்டீன், குழந்தைகள் காப்பகம், குடிநீர், கழிவறை முதலான வசதிகளைச் செய்து தர வேண்டியது முதலாளிகளின் கடமையாகும். அல்லது ஒப்பந்ததாரர்கள் அவற்றைச் செய்ய வேண்டும். மாநில அரசு அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி உள்ளிட்டு இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் அரசு கண்டுகொள்வதில்லை. இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டபூர்வக் கூலியைக்கூட கேட்க முடியாத, அதைப் பற்றி அறிந்திராத நிலையிலேயே உள்ளனர். அவர்களை அமைப்பாக்கி தொழிற்சங்கம் கட்டக்கூட விடாமல்  முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் மூர்க்கமாகத் தடுத்து வருகின்றனர்.

இத்தகைய இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத நிலைமையே நீடிக்கிறது. அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் அவர்களால் தங்கள் பகுதிக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை. ஆனால், இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான உணவுப் பொருட்கள் இடம் பெயர்ந்த இடத்தில் வழங்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள இடத்திற்கான ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அப்படி ஒருவேளை பெற்றாலும், அந்த இடத்தில் வேலை நிரந்தரமில்லாததால், அடுத்தடுத்து வேறிடத்துக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கும் ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இது தீராத நச்சுச் சுழலாக இருப்பதால் இடம் பெயரும் உழைக்கும் மக்கள் தாங்கள் செல்லுமிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஆதாரத்தைப் பெற முடியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வாங்குவதைப் போலவே, தனியார் அங்காடிகளில் உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியதாகி, தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு இலவசப் போக்குவரத்து, குடியிருப்பு, வேலைவாப்பு, மருத்துவம், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி முதலான அடிப்படை வசதிகளைச் செதுதர வேண்டும் எனத் தொழிற்சங்கங்களும், தன்னார்வக் குழுக்களும்,  சில அறிவுத்துறையினரும் அவ்வப்போது குரலெழுப்பிய போதிலும்,  அரசும் முதலாளிகளும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. இதனால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்புகளைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையோ, தீர்வோ அவர்களிடம் இல்லை.

இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்
இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்

இந்திய அரசின் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் 19(1) பிரிவு ‘டி’ மற்றும் ‘இ’ யின் படி, எந்த ஒரு குடிமகனும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடம் பெயரவும் அப்பகுதியில் தொடர்ந்து வாழவும் உரிமை உள்ளது. இருப்பினும், கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை, புனே, நாசிக் நகரங்களில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி. பீகார் மாநிலக் கூலித் தொழிலாளிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறைத் தாக்குதலால் வட இந்திய உழைக்கும் மக்கள் மும்பையை விட்டுத் தப்பியோடிய அவலம் நடந்தது. அண்மையில் வட மாநிலங்களைச் சேர்ந்த ரிச்சர்டு லோயிதம் பெங்களூரிலும், தனா சங்மா குர்கானிலும் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிற மாநிலங்களில் கல்விக்காகவும் பிழைப்புக்காகவும் குடியேறும் மக்களைத் தாக்குவதும் இழிவுபடுத்துவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைய அரசின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும் இதனைப் பொருட்டாக மதிப்பதேயில்லை.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையானது, உழைக்கும் மக்களின் பெருந்திரளான இடம் பெயர்தலையும் சமூகத்தில் முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது. விவசாயத்தின் அழிவும், அதில் முதலீடற்ற நிலையும், திணிக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி வருகிறது. விவசாயத்தை விட்டு உழைக்கும் மக்கள் பெருந்தொகையில் நகரங்களில் குவிவதையும், தேவையேயில்லாமல் உழைக்கும் மக்களை விசிறியடித்து அலைக்கழிக்கப்பதையும் உலகமயமாக்கம் மூர்க்கமாகச் செது கொண்டிருக்கிறது. அற்பக்கூலியுடன் உரிமைகளற்ற அடிமை நிலையில் வாழும் இம்மக்கள், எஸ்.எம்.எஸ். பீதியால் உயிருக்கு அஞ்சி ஓட வேண்டிய அவலத்தைப் போன்று, எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி இடம் பெயரும் தொழிலாளர்கள் மீது இனவெறி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் தாக்குதல்கள், அச்சுறுத்துவது, விரட்டுவது, பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, கொள்ளையர்களாகச் சித்தரித்து சுட்டுக் கொல்வது – என்பதாக நிலைமைகள் தீவிரமாகி வருவதால், வரப் போகும் காலம் மிகவும் சிக்கலாகவே இருக்கும் என்று சில முதலாளித்துவ அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

கூலித் தொழிலாளிகளாகப் பெரு நகரங்களில் குவியும் இடம் பெயரும் தொழிலாளர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், வடகிழக்கிந்தியர்களை அந்நியர்களாகப் பார்க்கும் மனோபாவம்தான் சமுதாயத்தில் நிலவுகிறது. அவர்கள் வேலை வாப்பைப் பறித்துக் கொள்கிறார்கள், அவர்களால் சமூகத்தின் ஒழுங்கு சிதைகிறது என்றெல்லாம் இனவெறியர்களால் இட்டுக்கட்டப்பட்ட பிரச்சாரத்துக்கு மக்கள் எளிதில் பலியாகியாகிறார்கள். அசாமில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களும், அதைத் தொடர்ந்து வடகிழக்கிந்திய மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பெருந்திரளாக வெளியேறியதும்,  பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயே நடக்கும் குடியேற்றங்களும் இன ரீதியான வன்மத்தை மக்களிடையே மௌனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் ஏற்கெனவே நீடித்துவரும் சாதி, மத, இன முரண்பாடுகளும் வேலையின்மை, விலையேற்றம் முதலான பிரச்சினைகளும் தீராத நிலையில், இடம் பெயர் தொழிலாளர்கள்தான் இவையனைத்துக்கும் காரணம் என்பதாக வெறியூட்டப்பட்ட நிலையில்தான் நமது சமூக அமைப்பு உள்ளது.

வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்
வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்

கடந்த 2008-ஆம் ஆண்டில் வட இந்திய மாணவர்கள் ரயில்வே நுழைவுத் தேர்வு எழுத மும்பை வந்த போது இனவெறி பிடித்த ராஜ்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கி விரட்டப்பட்டனர். மும்பையில் டாக்சி ஓட்டுநர்களான பீகாரிகள் அடுத்தடுத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் மும்பை ஒருநாள் கூட இயங்க முடியாது என்பதே உண்மை. டாக்சி ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர், செய்தித்தாள் போடுபவர், டெலிவரி பையன்கள் எனப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் வடகிழக்கு மாநிலத்தவர்கள்தான். இவர்களில் பெரும்பாலோர் பீகார், உ.பி. முஸ்லிம்களாக இருப்பதால், இவர்களால் மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பண்பாடும் நாகரிகமும் நாசமாகிவிட்டதாகவும்,  இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி வெறியூட்டி வருகிறது ராஜ்தாக்கரே கும்பல். தமிழகத்தின் மணியரசன் கும்பலோ, தமிழகத்தில் பிழைப்புக்காகக் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென்று வெறியூட்டுகிறது.

பொதுவில் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராஜ்தாக்கரே அளவுக்கு வன்மத்தைக் காட்டாதபோதிலும், தமது ஓட்டு வங்கிக்காக இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடையும் நோக்கில்தான் கர்நாடகா மற்றும் கேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும், வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றுக்குக் காரணமாக இருப்பதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம்தான். ஒருபுறம் தரகுப் பெருமுதலாளிகளும், புதிய தரகு வர்க்கங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்கள் மரணப் படுகுழியில் சிக்கித் தவிப்பதற்கும் காரணமாக இருப்பது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான். இந்நிலையில், உலகமயமாக்கலை எதிர்க்காமல் குறுகிய இனவெறியூட்டுவதையே இவர்கள் தீர்வாக முன்வைக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே கும்பல் மராத்தா இனவெறி-இந்துவெறி தேசியத்தை இதற்குத் தீர்வாக வைக்கிறது. தமிழகத்தில் மணியரசன் கும்பலோ தமிழ்த்தேசியத்தைத் தீர்வாகக் காட்டுகிறது. ராஜ்தாக்கரே முன்வைக்கும் இந்துத்துவ தேசியமோ, மணியரசன் முன்வைக்கும் தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது. ஏகாதிபத்திய உலகமயத்துடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள இவர்கள், வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்தேறிய தொழிலாளர்களை எதிரிகளாகக் காட்டுகின்றனர். தமிழனுக்கு எதிரியாக வடமாநிலத் தொழிலாளர்களையும், மராத்தியனுக்கு எதிராக பீகார் தொழிலாளர்களையும் நிறுத்தி இவர்கள் இனவெறியூட்டி மோதவிடுகின்றனர்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின்கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு – பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களுக்கும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கும் – எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனம் கடந்த தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்பதன் மூலம்தான் உலகமயமாக்கத்தை வீழ்த்த முடியும். ஆனால், உழைக்கும் மக்கள் உலகமயமாக்கலுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும், குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே, வட்டாள் நாகராஜ், தமிழகத்தின் மணியரசன் கும்பல் போன்றவை கிளம்பியுள்ளன. வர்க்க ஒற்றுமையைச் சிதறடித்து இனரீதியாகக் கூறுபோட்டுப் பிரிக்கும் அடையாள அரசியலையே தங்களது நிகழ்ச்சிநிரலாகக் கொண்டுள்ள இவர்கள், தங்களது வர்க்கத்தன்மைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் செயல்படுத்துகின்றனர்.

எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடகப் பார்க்கும் மணியரசன் போன்ற இனவாத அடையாள அரசியல்வாதிகளின் காமாலைக் கண்களுக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் கொடிய விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியாது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டுவதென்பது, ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணைபோவதுதானேயன்றி, அது தேசிய இனச் சிக்கலுக்கோ தீவிரமாகிவரும் பிரச்சினைகளுக்கோ ஒருக்காலும் தீர்வாக முடியாது. வட இந்தியத் தொழிலாளிகளால் தமிழனக்குப் பாதிப்பு ஏதுமில்லை எனும்போது, இத்தகைய இனவெறியர்கள் தமிழனின் பெயரால், தமிழினத்தின் பெயரால் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் மாற்றுத் தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாகவும் இருக்க முடியும். அத்தகைய திசையில், இனவெறியர்களைத் தனிமைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராகத் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த போராட்டங்களும் தொழிலாளர்களின் ஒற்றுமையுமே இன்றைய தேவையாக உள்ளது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_______________________________________

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்…

4

எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்….
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!

-மஹ்மூத் தார்வீஷ்
(ஆங்கிலம் வழி தமிழில்: புதூர் இராசவேல்)

Mahmoud-Darwish
மஹ்மூத் தார்விஷ்

மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட. 1948இல் இசுரேல் அரசு தார்வீஷின் கிராமத்தைச் சூறையாடி முற்றிலுமாக அழித்தபோது, அவரது குடும்பம் லெபனானுக்குச் சென்றது. விடுதலைத் தாகம் கொண்ட இளம் போராளியாக தனது இருபதாம் வயதுகளிலேயே இசுரேல் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 1970இல் ரசியா சென்று படித்தார்; பிறகு பெய்ரூட்டிலும், பாரீசிலுமாக சுமார் 26 ஆண்டுகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார். 1996இல் இசுரேல் திரும்பி, கொந்தளிப்பான ‘மேற்கு கரையில்’உள்ள ரமல்லாவில் தங்கினார்.

கவிதை, உரைநடைப் படைப்புக்களில் 30 தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர், கலை மக்களுக்கானது என்பதில் தெளிவான பார்வை கொண்டவர். தார்வீஷ் பாலஸ்தீன மக்களின் உயிர்மூச்சு; தாயகம் பிடுங்கப்பட்டவர், நீக்கப்பட்டவர். தாயகம் ஏக்கம் கொண்டவர்களின் கம்பீரமான போராட்ட சாட்சி.

கடந்த ஆகஸ்டு 9, 2008 அன்று அவரது 66ஆவது வயதில் இதயநோய்ச் சிகிச்சையின் போது இறந்து போனார். பாலஸ்தீனத் தாயகத்தின் போராளியாகவும், புலம் பெயர்ந்தோரின் உரிமைக் குரலாகவும், கம்யூனிச உணர்வுமிக்க சர்வதேசவாதியாகவும் வாழ்ந்த கவிஞர் மஹ்மூத் தார்வீஷ்.

______________________________________________

-புதிய கலாச்சாரம், அக்டோபர்’ 2008
______________________________________________

வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

12

வன்னி அரசுவின் (விடுதலை சிறுத்தைகள்) பித்தலாட்டங்களை தோலுரிக்கும்
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஆம்பள்ளி. மு
னிராஜ்.

அன்பிற்குரியவர்களே,

வம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது பா.ம.க. சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரச்சாரத்தின் மூலம் நாடே இதை அறிந்தது.

பா.ம.க தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது. இதை மக்கள் மத்தியிலிருந்து ஆய்வு செய்து, அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். நான் இந்த பகுதியில் தங்கி நீண்டகாலமாக செயல்பட்டவன் என்கிற முறையில் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய மக்களை பற்றியும் இன்னபிற சாதியினர் பற்றியும் நன்றாக அறிவேன்.

1980-ல் தோழர் பாலன் இங்கு அரசியல் வேலை செய்துகொண்டிருந்த போதும், பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு தியாகியாகி அவருக்கும் தோழர் அப்புவுக்கும் நாயக்கன்கொட்டாயில் சிலை வைத்த போதும், அதன்பிறகு 1989 வரை அப்பகுதியில் தங்கி அரசியல் வேலைகளை செய்திருக்கிறேன். தோழர்கள் அப்பு, பாலன் சிலை நிறுவும் கமிட்டிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளேன். அங்கிருந்த முன்னணி புரட்சியாளர்கள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு இணைந்து தான் அந்த சிலைகள் நிறுவப்பட்டன. நக்சல்பாரி வரலாறு இம்மாவட்டத்தில் நீண்ட நெடிய துயரம் நிறைந்த பயணம் கொண்டது. இதனை சாதிக் கண்கொண்டு பார்க்கும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

அங்கு சிலைகள் நிறுவப்பட்டதானாலும், இரட்டை குவளை முறையை எதிர்த்த போராட்டமானாலும், கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்த போராட்டமானாலும் இது போன்ற பல நூறு பிரச்சினைகள் புரட்சிகர அமைப்புகளின் முன்னிலையில் தீர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை எப்போதும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள், இன்னபிற சாதி உழைக்கும் மக்கள் என அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர். சிலை அமைப்பதில் உழைப்பு, உணவு, தண்ணீர்,பொருளாதாரம் அனைத்தும் அனைத்து சாதி மக்களின் உணர்வும், உழைப்பும் தான். அனைத்து சாதி மக்களும் ’தோழர்’  ’தோழர்’  என்கிற ஒரே உணர்வில் தான் செயல்பட்டு வந்தனர்.

உதாரணத்திற்கு, மாரவாடி என்கிற ஊரில் ஒரு தாழ்த்தப்பட்ட உழைப்பாளரின் மனைவியை கந்துவட்டிக்காரன் அடித்து உதைத்த போது அந்த பெண்ணுக்கு கருவே கலைந்து போனது. இந்த கந்துவட்டி கொடுமைக்காரன் தருமபுரியிலுள்ள ரவுடி ரங்கன் என்பவனின் தந்தை. கந்துவட்டிக்காரனின் சைக்கிளை பிடுங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிக்கொள் என்று தோழர் பாலன் தலைமையில் முடிவு செய்து அறிவித்த போது, அதை ஏற்று அவனை மீட்டுக்கொண்டு போனவர் தான் இன்ஸ்பெக்டர் சிவகுரு. இந்த சம்பவத்தில் வன்னியரான அந்த கந்துவட்டிக்காரனை அடித்ததில் முன்னணியில் நின்றவர்கள் வன்னிய மக்கள் தான்.

அத்தகையவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்குகிறார்கள் என்றால் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பா.ம.க சாதிவெறியர்களால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே முதன்மையான காரணம். அதே போல தாழ்த்தப்பட்ட மக்களை வி.சி அமைப்பும் தவறாக வழிகாட்டி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது. இப்படி தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு வன்னியரசின்  இந்த  பித்தலாட்டங்களே போதுமானது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலுள்ள அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாகவும், அதில் கிருஷ்ணன் என்கிற வன்னியர் இருப்பதாகவும், அவர் தான் இந்த சாதிவெறி தாக்குதலை பின் நின்று நடத்தியதாகவும் அவர் ம.க.இ.க வைச் சேர்ந்தவர் என்றும் வன்னியரசு கூறியுள்ளார்.

அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாக கூறுவது முதல் பொய். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை தவிர வேறு எந்த சாதியினரும் இல்லை. இரண்டாவதாக தருமபுரி மாவட்டத்தில் ம.க.இ.க அமைப்பே இல்லை. வி.வி.மு என்கிற அதன் தோழமை அமைப்புதான் செயல்படுகிறது.

அண்னா நகரில் வி.வி.மு உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்லை. எனவே இல்லாத ஒரு நபரை இருப்பதாகவும், இல்லாத ஒரு சாதியை இருப்பதாகவும், இல்லாத ஒரு அமைப்பை இருப்பதாகவும் பச்சை பொய்யை கூறுகின்றார் வன்னியரசு. இப்படி அந்த பகுதி பற்றி தெரியாத, நேரடி பரிச்சயம் இல்லாத, மாநிலத்தின் பிற மாவட்ட மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உண்மையில் வன்னியரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?

இப்படிக்கு

ஆம்பள்ளி.முனிராஜ்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!

6

  பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால், பல பிராண்டுகளை விற்பனை செயும் சில்லறை வர்த்தகத்தில்  51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதி, ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை உயர்த்துவது, சமையல் எரிவாயு விற்பனையில் கட்டுப்பாடு, அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது முதலான நாட்டையும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகளை எடுத்தது,  மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.

இதுவும் போதாதென்று, இரண்டாவது கட்டமாக இப்போது காப்பீடு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது, ஓய்வூதிய நிதித்துறையில் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவை அகலத் திறந்துவிடுவது, வருடத்திற்கு ஆறு எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் எனக் கட்டுப்பாடு விதிப்பது, ஊக பேரச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முன்பேரச் சந்தைகளின் கமிசனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம்  முதலான மக்கள் விரோத முடிவுகளை அறிவித்துள்ளது, இக்கும்பல். நாட்டின் நிதித்துறையில் இருந்து வரும் பெயரளவிலான தற்சார்பை முறிப்பதோடு, நடுத்தர மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் சேமிப்புகளை அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகள் சூறையாடுவதற்கும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது, இந்த ஏகாதிபத்தியக் கூலிப்படை.

ஒரு துறை சீர்கெட்டிருந்தால் அதைச் சீர்திருத்தலாம். ஆனால், காப்பீடு துறை எந்த வகையிலும் சீர்கெட்டிருக்கவில்லை. காப்பீடு துறை நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்புதான் சீர்கெட்டுக் கிடந்தது. இப்போது நடக்கும் ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. ஆனால், இப்போது மோசடிகளையே மூலதனமாகக் கொண்டுள்ள தனியார் முதலாளிகளிடம் அத்துறையைத் தாரைவார்க்கிறது மன்மோகன் அரசு.

1956-இல் ஆயுள் காப்பீடுத் துறையும் 1971-இல் பொதுக்காப்பீடும் அரசுடமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியக் காப்பீடு சந்தை முழுவதும் அரசுத்துறை நிறுவனங்களிடமே இருந்தன. பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நோக்கத்துடன் காப்பீடு துறை சீர்திருத்தத்துக்காக 1993-இல் மல்ஹோத்ரா குழுவை அரசு உருவாக்கியது. அந்தக் குழுவோ, காப்பீடு துறையின் 74 சதவீதப் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதற்கெதிராக பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், பங்குகள் விற்பனை தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. பின்னர் 1999-இல் பா.ஜ.க. அரசு காப்பீடு துறையைத் திறந்துவிடுவதற்காக ஐ.ஆர்.டி.ஏ. சட்டத்தை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக இன்று 24 தனியார் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த 13 ஆண்டுகளில் எந்தவொரு தனியார் காப்பீடு நிறுவனமும் தொடர்ச்சியாக இலாபத்துடன் இயங்கவில்லை. மாறாக, பலவகையான முறைகேடுகளைத்தான் செதுள்ளன. மும்பையில் ஓ.பி.தீட்சித் என்பவர் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தால் மோசடி செயப்பட்ட வழக்கு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, மார்ச் 10,2011)

ஓய்வூதியம் என்பது உழைக்கும் மக்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டம். அரசுத்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒருசில தனியார்துறை ஊழியர்களைத் தவிர, கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமைக் காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாத அவலநிலையிலேயே உள்ளனர். இருப்பினும்,ஓய்வூதியம் பெற்றுவரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையையும்  2003-ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி அரசு  பறித்தது. 2004-க்குப் பிறகு மைய அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; அதற்குப் பதிலாக அந்த ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீதத் தொகையோடு, அதற்கிணையான தொகையை தனது பங்காகச் சேர்த்து அவர்களின் வருங்கால வைப்பு நிநிக் கணக்கில் மைய அரசு செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய அரசைப் பின்பற்றி மாநில அரசுகளும் 2004-க்குப் பிறகு அரசுப் பணியில் சேருவோருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று அறிவித்தன. ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாள்வதிலும் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதுவரை தொழிலாளிகளிடமிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செயும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது. ஆனால், இந்த அமைப்புகள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செயும் ஆற்றல் கொண்டதல்ல என்று காரணம் காட்டி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செயும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மகிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேப்பிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது பா.ஜ.க. கூட்டணி அரசு.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, அமைப்புசாரா துறைகளில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இழுத்துப் போடும் தேசிய ஓவூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய-மாநில அரசு ஊழியர்கள் இத்தேசிய ஓவூதியத் திட்டத்தில் இணைவது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது விருப்பப்படி இதில் இணையலாம் என்றும் அறிவித்தது.

இதனையடுத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் கடன் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியை அரசு பத்திரங்களில் மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் பங்குச் சந்தையிலும் முதலீடு செயலாம் என்ற தாராளமயம் புகுத்தப்பட்டது. நாடெங்கும் கடும் எதிர்ப்பின் காரணமாக, கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லறை வணிகம் மற்றும் தொழிலாளர்களின் ஓவூதிய நிதியைக் கையாள்வதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, இப்போது மூர்க்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் விளைவாக, ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் திட்டங்களில் ஏதாவதொன்றை தொழிலாளி தீர்மானித்துக் கொள்ள வேண்டும், அல்லது அத்தொழிலாளியின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே  முதலீடு செய்து கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், தனது ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்தத் தனியார் முதலாளியிடம் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையிலிருந்து விலகிவிடும் உரிமையோ, வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்குக் கிடையாது. ஓவூதியத் திட்டங்களில் வசூலாகும் பணத்தை   தனியார் நிறுவனங்கள்  எதில், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அரசு தலையிடாது. இதனால் அந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனால் முழுத்தொகையும் தொழிலாளர்களுக்குக் கிடைக்காது.

தற்போது இந்தியத் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செயல்படாத கணக்கு’’களில் ரூ.22,636 கோடி உள்ளது. அதாவது, வேலையிழப்பினால், ஆலை மூடலினால் தொழிலாளர்கள் தங்களது மாதச் சந்தாவைத் தொடர்ந்து  செலுத்த இயலாத நிலையில், அவர்களது கணக்கில் வைக்கப்பட்டுள்ள நிதிதான் இது. இத்தொழிலாளர்கள் வேறிடத்தில் புதிய வேலை கிடைத்த பிறகு தங்கள் கணக்கைத் தொடர்ந்தால் இது செயல்படும் கணக்காக” மாறும். இது தவிர, கேட்பாரில்லாத நிதியாக ரூ. 4,000 கோடி இந்த அலுவலகத்தில் உள்ளது. 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையைக் கேட்டுப் பெறாததால் அல்லது கேட்கத் தவறிவிட்டதால் கேட்பு இல்லாமல் உள்ள பணம் இது. இந்தப் பணத்துக்கும் இந்த அலுவலகம் வட்டி போட்டு வைத்துள்ளது.

இவ்வாறான செயல்படா கணக்குகளும் கேட்பு இல்லாக் கணக்குகளும் அரசிடம் உள்ளவரை பாதுகாப்புடன் இருக்கும். இனி இந்தத் தொகை தனியார் ஓய்வூதிய நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகிறது. அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட  சில ஆண்டுகளுக்குப் பின்னர் செயல்படாத கணக்குகளையும் கேட்பு இல்லாக் கணக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்து, கோடிக்கணக்கிலான அத்தொகையை விழுங்கினால் இனி யாரும் கேள்வி கேட்க முடியாது.

மறுபுறம், இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் நுழையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களோ, தங்கள் நாடுகளில் காப்பீடு துறையில் புகுந்து மொட்டையடித்து பொருளாதாரத்தையே திவாலாக்கியவர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்பீடு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டதும், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒருகோடியே ஐம்பது லட்சம் கோடி ரூபா பெறுமானமுள்ள ஓய்வூதிய நிதி, பங்குச் சந்தையில் சூறையாடப்பட்டு மாயமாகிவிட்டது. அமெரிக்காவின் ஏகபோக காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. திவாலாகிப் போனது. மேலும், முதலாளித்துவப் பொருளாதாரம் அடுத்தடுத்து சரிந்து வீழ்வதும், பல நிதி நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டுவதும் வழக்கமாக உள்ளன.

இருப்பினும்,  இத்தகைய மலைமுழுங்கிகளால் காப்பீடு துறையும் இந்தியப் பொருளாதாரமும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறப் போகிறது என்று குறி சோல்கிறார்கள் மன்மோகனும் சிதம்பரமும். இந்த ஏகாதிபத்திய கூலிப்படையினரால் வங்கி, காப்பீடு முதலான உயிராதாரமான துறைகள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டு, அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாததாக இந்திய நிதிச் சந்தை மாற்றப்பட்டுள்ளதையும் இந்தியா இன்னுமொரு வாழைப்பழக் குடியரசாகிவிட்டதையுமே  இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

_________________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________________________

என்டிடிவி-ஏ.சி நீல்சன்: கல்லாப் பெட்டிச் சண்டை!

8

ந்த பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்து கொண்டிருக்கும் விநோதமான பிராணிகள் தான் செய்தி ஊடகங்கள். அதிலும் இந்தியச் செய்தி ஊடகங்கள் என்றால் இன்னும் விசேஷம். திருட்டை ஒழிப்பது பற்றி திருடனிடமே பேசுவது, ஊழல் ஒழிப்பு பற்றி காங்கிரசிடம் பேசுவது, இறையாண்மை பற்றிப் பாரதிய ஜனதாவிடம் பேசுவது… என்று இந்த வரிசை நீண்டது. இந்த அக்கப்போர்களின் முன்னணியில் இருக்கும் ஊடக நிறுவனம், என்.டி.டி.வி (நியூ டெல்லி டெலிவிஷன்). இப்போது என்.டி.டி.வி நிறுவனத்திற்கே சோதனைக் காலம் வந்திருக்கிறது.

சோதனை, கற்பனை வளம் சம்பந்தப்பட்டதல்ல; கல்லாப் பெட்டி சம்பந்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரூ. 501 ஆக இருந்த என்.டி.டி.வி.யின் பங்கு விலை 2011 இன் இறுதியில் ரூ. 26 ஐ விடக் குறைந்து விட்டது.  ஜூன் 30, 2012 இல் முடிந்த காலாண்டில் அது ரூ. 22.71 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.

தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.

ஏ சி நீல்சன் பங்குதாரராக இருந்து நடத்தும் டேம் (TAM) நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை வெளியிடுகிறது. பார்வையாளர் இலக்குக் குறியீட்டுப் புள்ளிகள் (Target Rating Points) என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்குகள் தான் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சந்தையில் உள்ள கிராக்கியை அளவிட்டுச் சொல்கிறது.

பெரு நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 8,000 வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளில் பீப்பிள்ஸ் மீட்டர் எனப்படும் கணக்கீட்டுக் கருவியைப் பொருத்துகிறது டேம் நிறுவனம். இந்தக் குடும்பத்தினர் எந்த சேனலைப் பார்க்கிறார்கள், எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிற விவரத்தை அந்தக் கருவி பதிவு செய்து கொள்ளும். இப்படிப் பதிவு செய்த தகவல்களை அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலமாக இணையம் வழியே டேம் நிறுவனத்துக்கு அனுப்புகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு பிரிவிலும் (செய்தி, கேளிக்கை, விளையாட்டு, இசை) நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பியை டேம் வெளியிடுகிறது. இதில் வயதுவாரியாக யார், எந்த நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்? எந்த நேரத்தில், எந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றது? என்பதைப் போன்ற தகவல்கள் இருக்கும்.

பொழுதுபோக்கு, செய்தி, விளையாட்டு, இசை என்று வெவ்வேறு வகையாக 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவில் தமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.  அவற்றில் 163 சேனல்கள் டிஆர்பி  (இலக்கு அளவீட்டுப் புள்ளி) அளவீட்டு முறையில் பங்கு பெறுகின்றன. மேற்சொன்ன வழிமுறைகளில் டிஆர்பி கணக்கிடும் முறையில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள என்.டி.டி.வி, அதனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட $1.39 பில்லியன் (சுமார் ரூ. 7,500 கோடி) நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளது .

“டிஆர்பி கணக்கிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கையை 8,000 லிருந்து 33,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பல முறை முறையிட்டும் டேம் நிறுவனம் அதைச் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டுகிறது என்.டி.டி.வி.

“மும்பையில் உங்கள் தொலைக்காட்சியின் டிஆர்பியை நீங்கள் விரும்பும் பிரிவினர் மத்தியில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக்க வேண்டுமானாலும் செய்து தருகிறோம். கொஞ்சம் செலவாகும்’  என டேம் – நிறுவன ஊழியர்கள் பேரம் பேசியதாக என்.டி.டி.வி குற்றம் சாட்டியிருக்கிறது.

“ஒரு வீட்டுக்கு சுமார் $250 முதல் $500 வரை (சுமார் ரூ. 13,000 முதல் ரூ. 25,000 வரை) கொடுத்தால் அவர்களை நாம் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பதிவு செய்யும்படி செய்யலாம்” என்றும், “அந்த வீடுகளில் இரண்டாவதாக ஒரு டிவி வாங்கிக் கொடுத்து, அதில் விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொள்ளும்படியும், கணக்கீட்டுக் கருவி இணைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஓட விடும்படியும் சொல்லி விடலாம்” என்றும் அவர்கள் சொன்னதாக என்.டி.டி.வி தெரிவிக்கிறது.

“20 ஆண்டுகளாகத் தனது நிகழ்ச்சிகளுக்கு நல்ல டிஆர்பி பெற்று, அதன் மூலம் விளம்பரப் பணம் சம்பாதித்த என்.டி.டி.வி, இப்போது அவர்கள் நிகழ்ச்சிகளின் டிஆர்பி குறைந்தவுடன் திடீரென்று புகார் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்கின்றன ஏ சி நீல்சன் குழும நிறுவனங்கள்.

பிரணாய் ராய்
என்டிடிவியின் முதலாளி – பிரணாய் ராய்

இது என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு மட்டும் அல்ல.  தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்குக்காகவும் மக்கள் கணிசமான நேரத்தைச் செலவிடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது. ’எத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்? அதை யார் தயாரிக்க வேண்டும்? எந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்?’ என்பன போன்ற  முக்கிய முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய வழக்கு இது.

இது மட்டுமல்லாமல், செய்தித் தொலைக்காட்சிகள் என்பவை தேசத்தின் அரசியல் அரங்கில் எந்தச் செய்திகள் விவாதத்தில் இருக்க வேண்டும், யார் எவ்வளவு நாட்களுக்கு அரசியல் வானின் நட்சத்திரமாய் இருக்க வேண்டும், எந்தக் கருத்து மக்களின் கருத்தாய் பதியப்பட வேண்டும், எது மக்களின் எதிர்ப்பாக சொல்லப் பட வேண்டும், அரச எதிர்ப்புக் கருத்து எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பவற்றையெல்லாம் ‘தீர்மானிக்கும்’ செல்வாக்கைப் பெறத் துவங்கியிருக்கும் காலகட்டம் இது. எனவே இதனை என்.டி.டி.வி.க்கும், ஏசி நீல்சனுக்கும் இடையேயான சில்லறைத் தகறாராக சுருக்கிப் பார்க்க முடியாது.

2001 ஆம் ஆண்டு ’எந்தெந்த வீடுகளில் கணக்கீட்டுக் கருவிகள் பொருத்தப்படுகின்றன’ என்ற ரகசியப் பட்டியல் கசிய விடப்பட்ட போது, டிஆர்பி பற்றிய விவாதம் நடந்தது. அதைப் பற்றி விசாரிக்க வழக்கம் போல மத்திய அரசு ஒரு கமிசனை நியமித்தது. அந்தக் கமிசன் என்னவானது, அதில் இருந்தவர்கள் என்னவானார்கள், அதன் முடிவு என்ன, முடிவுகள் அமுல்படுத்தப்பட்டதா இல்லையா? என்பது போன்ற எந்த விபரங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

டிஆர்பி கணக்கீட்டுக் கருவிகள் பொதுவாக பெரு நகரங்களின் நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே பொருத்தப்படுகிறது. இதில் கணக்கெடுப்பை நடத்தும் நிறுவனம் காசு கொடுத்து தனக்கு வேண்டிய முடிவுகளைப் பெற்று விடுகிறார்கள் என்கிற உண்மை ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தப் பிரிவினரின் ரசனையையே பொது ரசனையாகவும், இவர்களின் அரசியல் வேட்கையையே பொதுவான கோரிக்கையாகவும் நிலை நிறுத்துகிறார்கள். இந்த உறவு ஆளும் வர்க்கங்களின் விருப்பத்தை இயல்பாகவே ஈடு செய்கிறது.

இந்த வகையில் தான் பெரு நகர மேல்நடுத்தர வர்க்கத்தினரின் மனங்கவர் ஜோக்கரான அண்ணா ஹசாரே, அனைவருக்குமான மீட்பராக சில மாதங்கள் வலம் வந்தார். இது ஒரு புறமென்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து இயங்கும் விளம்பரக் கம்பெனிகளின் வருவாயும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்தே முடிவாகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அதற்கு விளம்பரத் தொகை ஒதுக்கப்படுகிறது.

இந்தியத் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரங்களின் மூலம் சுமார் 21,300 கோடி ரூபாய்கள் வருடாந்திரம் கல்லா கட்டுகின்றன. பற்பசை முதல் சோப்பு வரை, சமையல் எண்ணெய் முதல் குழம்பு மிளகாய்த் தூள் வரை, செல்போன் சேவை முதல் ரயில் பயணம் வரை என மக்கள் வாங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையில் கணிசமான பகுதியை முதலாளிகள்  விளம்பரங்களுக்காகச் செலவிடுகின்றனர். தேவையில்லாத பொருட்களை வாங்க வைக்கவும், தேவைப்படும் பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்க வைக்கவும் விளம்பரங்கள் முயற்சிக்கின்றன.

என்.டி.டி.வி போன்ற இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்களின் 80% வருமானம் விளம்பரங்கள் மூலமாகவே கிடைக்கிறது. சில விநாடிகள் விளம்பரத்தைக் காட்டுவதற்கு சில நூறு ரூபாய்கள் முதல் பல லட்சம் ரூபாய்கள் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.  சன் டி.வி.யின் முக்கியமான மெகா தொடர் நடுவே வரும் 20 விநாடிகள் விளம்பரத்துக்கான கட்டணம் பல ஆயிரம் ரூபாய்களாகவும், இந்தியா விளையாடும் கிரிக்கெட் பந்தயத்தின் நடுவே அத்தகைய விளம்பரத்துக்கான கட்டணம் லட்சக் கணக்கிலும் எகிறுகிறது.

செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான 10 விநாடி விளம்பர இடைவேளைகள் ஒவ்வொன்றுக்கும் ஹூண்டாய், டாடா மோட்டார், பெப்சி, நோக்கியா, டாடா டெலி சர்வீசஸ், யூனியன் பேங்க் போன்ற விளம்பரதாரர்களிடம் தலா ரூ. 3.5 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது, ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம்.  இந்தப் போட்டிகளின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்காக ஸ்டார் குழுமம் ரூ. 250 கோடி சம்பாதிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் தொலைக்காட்சிச் சேவை என்பது பண வேட்டையாடும் களமாகத் துவங்கப்படவில்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பின் ஆரம்ப காலங்களில் மைக்ரோவேவ் எனப்படும் குறுகிய தூரம் பரவும் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அடுத்த கட்டமாக பூமிக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ள புவிநிலை செயற்கைக் கோள்கள் மூலம் உலகின் எந்தப் பகுதிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொழில்நுட்பம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொழில்நுட்பமும் அனைவருக்கும் பயன்படக்கூடிய, சமூகத்துக்கு உரிமையான ஒரு பொதுச் சேவையாகவே உருவாகி வளர்ந்தது. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது சிக்னல்களைப் பெற்றுக்கொள்ளும் கருவி (தொலைக்காட்சிப் பெட்டி, ஆண்டெனா, டிஷ்) வைத்திருக்கும் அனைத்து மக்களும் நிகழ்ச்சிகளைப் பார்க்க  முடியும்.

மக்கள் அனைவருக்கும் சொந்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தான அலைக்கற்றைகள், செயற்கைக் கோள்கள் இவற்றின் மூலம் மக்களின் அறிவையும், உணர்வையும் செறிவூட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது இயல்பானதாக இருந்திருக்கும். அதனால்தான் ஆரம்ப கால தொலைக்காட்சிகள் அரசுகளால் லாப நோக்கமில்லாமல் நடத்தப்பட்டு வந்தன. இந்தியாவில் 1980களின் இறுதி வரையில் அரசுத் தொலைக்காட்சி மட்டுமே இயங்கி வந்தது நினைவிருக்கலாம்.

தூர்தர்ஷன் என்ற பெயரில் ஒளிபரப்பான அரசுத் தொலைக்காட்சியில் மத்திய அரசின் கட்டுப்பாடு, இந்தி மொழி ஆதிக்கம், பிராந்திய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் இன்மை போன்ற பல முக்கியமான குறைபாடுகள் இருந்தன.  தொழில் நுட்பமும், வசதிகளும் மேம்பட மேம்பட அவை நிவர்த்தி செய்யப்பட்டு வந்தன.

ஆனால்  1990 களில் ஆரம்பித்த தனியார்மயமாக்கலின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, தனியார் நிறுவனங்களின் போட்டிச் சந்தைக்கு திறந்து விடப்பட்டது. ’தூர்தர்ஷன் என்றால் ஒரே வயலும், வாழ்வும் போட்டு போரடிப்பான்’ என்று சலித்துக் கொண்ட நடுத்தர வர்க்கத்துக்கு நிவாரணமாக புதிய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் நமது வான்பரப்பில் இன்று கால் பரப்பி நிற்கின்றன.

பார்வையாளர்களிடமிருந்து தனித்தனியாகக் கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட உத்திதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே விளம்பரங்களைக் காட்டுதல்.

இப்போது செட்டாப் பாக்ஸ், டி.டி.எச் போன்ற மின்னணு தொழில்நுட்பங்கள் வந்து விட்ட பிறகும் தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வழி ஒளிபரப்பு முறைகளில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களைச் சென்றடைகின்றன. இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் சந்தாத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 11,600 கோடி வருமானத்தை ஈட்டினாலும், விளம்பரங்கள் மூலமாக ரூ. 21,300 கோடி வரை சம்பாதிக்கின்றன.

தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி வெறி ’விளம்பரங்களுக்காகவே நிகழ்ச்சிகள்’ என்ற வகையில் விளம்பரதாரர்களின் ஆதிக்கத்தை வளர்த்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லாத பெண்களை விளம்பரங்களைப் பார்க்கச் செய்வதற்காக ஒளிபரப்பப்பட்ட சோப் ஓப்பராக்களின் வழித்தோன்றல்கள் தான் நமது வானலைகள் வழி வந்து வீடுகளை ஆக்கிரமிக்கும் இன்றைய மெகா தொடர்கள்.

பிறகு சென்ற நூற்றாண்டின் இறுதியில் செய்தித் தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கத் துவங்கின. இவர்களின் போட்டிதான் செய்தி தயாரிக்கும் துறையையே தலைகீழாக மாற்றிவிட்டது. செய்தியல்லாதவற்றைச் செய்தியாக்குவது, செய்தியைச் செய்தியில்லாமல் செய்வது, பிரபலங்களின் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது, அதையே ஆபாச ரசம் சொட்டச் சொட்ட பார்வையாளர்களுக்குப் பரிமாறுவது,  துயர சம்பவங்களில் தனி நபர்களின் உணர்வுகளை கிளறி சுவாரஸ்யத்தை உருவாக்க முயற்சிப்பது, அரசியல் ரீதியில் சில முக்கியமான பிரச்சனைகளைக் கூட தொலைக்காட்சி நிலையத்துக்குள் செய்தியாளர்கள் கத்தும் கத்தலில் அதன் கேந்திரமான பகுதியை மறைத்து, வெறும் பரபரப்பை மட்டுமே நிலைநாட்டி, இறுதியில் நீர்த்துப் போக வைப்பது. சினிமா தொடர்பான செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் மிக மலினமாகக் காட்டுவது – இப்படிப் பல்வேறு வகையில் மக்களின் ஓய்வு நேரங்களைக் கபளீகரம் செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்கள், அதற்கு வைத்திருக்கும் அளவுகோல் தான் டி.ஆர்.பி ரேட்டிங்.

உழைத்துக் களைத்தவர்கள் உடல் வலியை மறக்கவும், வாழ்ந்து சலித்தவர்கள் மனதை மரத்துப் போகச் செய்யவும் டாஸ்மாக் கடைகளை நாடுவது போல, அன்றாடப் பணிவாழ்வு தொடர்பான நினைவுகளிலிருந்து தப்பிக்கவும், இலக்கற்ற தமது ஓட்டத்தை நியாயப்படுத்தவும் விரும்பும் மக்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புகலிடமாக இருக்கின்றன.

விஜய் டிவியில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’, அதற்கு இணையாக சன் டிவியில் ’கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி’ போன்ற கேலிக் கூத்துகள் ஒரு பக்கம் நவீன லாட்டரிகளாக சீறிப் பறந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் போன்ற நிகழ்ச்சிகள் வளரும் பருவத்திலேயே சின்னஞ் சிறுவர்களையும், சிறுமியர்களையும் குத்தாட்ட உணர்ச்சிக்கு பழக்கப்படுத்தி வருவதும் கூட டி.ஆர்.பி புள்ளிகளைப் பெற்று, விளம்பர வருவாய் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கத் தான்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரு பத்தாண்டுகளில் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, சலுகைகள் வெட்டு என்பதைப் பணியிடங்களில் சந்திக்கும் மக்கள் இவற்றினூடாக பொருளீட்டியாக வேண்டும் என்பது தான் எதார்த்தம். புற உலகில் அதிகரிக்கும் தேவைகள், அதை நிறைவேற்றியாக வேண்டிய பதட்டம், அதற்காக வேகமெடுக்கும் வாழ்க்கையில் இளைப்பாறுதலையும் கொடுக்க வேண்டிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும், சுற்றத்தாருக்கும் பதில் அந்த இடத்தை தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துள்ளன.

செய்திச் சேனல்கள் இந்த இடைவெளிக்குள் மக்களின் மூளைகளை அரசியல் நீக்கம் செய்கிறதென்றால், பொழுது போக்குச் சேனல்கள் அந்த இடத்தை வெற்று உணர்ச்சிகளால் நிரப்புகின்றன. தமிழில் நடிகர் லட்சுமி நடத்திய ’கதை அல்ல நிஜம்’,  தமிழ்நாட்டின் குரல் வேட்டை ஆடும் ’சூப்பர் சிங்கர்’,  சிறந்த நாட்டிய ஜோடியை தேர்ந்தெடுக்கும் ’மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்களை மிகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைப்பதன் மூலம், பார்வையாளர்களிடம் போலியான உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறார்கள்.

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த போது, என்.டி.டி.வி.யின் பர்கா தத் பாதுகாப்பு படையினரின் நிலைகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் நேரடி ஒளிபரப்பு செய்து தனது தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் சம்பாதித்துக் கொடுத்தார்.  நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப் பணம் கொடுத்து, கையும் களவுமாக பிடிப்பதற்கான ரகசிய திட்டத்தை செயல்படுத்தி, படம் பிடித்த சிஎன்என் ஐபிஎன் தனது ஒளிபரப்பு முடிந்ததும் சத்தம் போடாமல் அந்த டேப்புகளை  நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து விட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெறும் பரபரப்பு என்கிற வட்டத்திற்குள் கொண்டுவரும் செய்திச் சேனல்கள், வேண்டிய மட்டிலும் டிஆர்பி புள்ளிகளைக் கறந்ததும், அந்நிகழ்ச்சியையே மொத்தமாக மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன.

உண்மையில் விளம்பர வருமானத்துக்காகப் போட்டி போடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதற்கு வாய்ப்பு என்பதைத் தீர்மானிக்கும் நாட்டாமை தான் டிஆர்பி. அதன் யோக்கியதை முதலாளிகளுக்கு இடையேயான போட்டி முரண்பாடுகளால் அம்பலமாகி அவ்வப்போது பல்லிளிக்கிறது.  அப்படிப்பட்ட தகராறு தான் என்.டி.டி.வி.க்கும், ஏ சி நீல்சனுக்கும் இடையேயான இப்போதைய வழக்கு.

என்.டி.டி.வி.யைப் பொறுத்தமட்டில் இதில் பெரிதாய் நீதி, நேர்மையெல்லாம் பார்த்துக் கொண்டு களமிறங்கவில்லை. இப்போதே நீதிமன்றத்துக்கு வெளியே தனிப் பஞ்சாயத்து நடத்தி ஒரு கவுரவமான தொகையைப் பெற்று விட்டு, வழக்கை வாபஸ் பெற்று விடவும் அவர்கள் தயார் என்றே செய்திகள் வெளியாகின்றன. அல்லது அவர்களது வழக்கு புஸ்வாணமாகப் போகலாம். எனினும் டிஆர்பி மோசடியால்தான் தனது நிறுவனம் நட்டமடைந்தது என்று பங்குதாரர்களை நம்பவைப்பதற்ககாவது இந்த வழக்கு துணை புரியலாம்.

டிஆர்பி எனும் இலாபத்தை தீர்மானிக்கும் மாயமானை நோக்கி எல்லா தொலைக்காட்சிகளும் வெறி பிடித்தவாறு ஓடுகின்றன. அந்த ஓட்டமே எல்லா சானல்களையும் வேறுபாடு இன்றி ஒன்றாக வடிவமைத்து விடுகிறது. இன்று எந்தச் செய்தியும் பரபரப்பாக யார் முதலில் காட்டுகிறார்கள் என்று போவதால் எல்லா சானல்களிலும் குறிப்பிட்ட செய்தியை ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறோம். ஒரு செய்தி குறித்த பின்னணி விவரங்கள், ஆழமான அலசல்கள் இன்றி அவை வெறுமனே கரைந்து போகும் அலங்கார ஐஸ்கீரிம் போல தோன்றிய வேகத்தில் மறைந்து போகிறது.

இறுதியில் சானல்களின் போட்டி என்பது இத்தகைய குத்து வெட்டுக்களில் வந்து முடிகிறது. விளம்பரங்கள் தரும் முதலாளிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் முக்கியம் என்றால், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பர வருவாய் முக்கியம். இவர்களுக்கிடையே நடக்கும் போட்டி, சண்டையில் யாருடைய வருமானம் குறைகிறது என்பது யாருடைய வருமானம் அதிகரிக்கிறது என்பதோடு இணைந்தது. தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் வருவாய் யாராவது ஒரு சிலருக்குத்தான் போக வேண்டும் என்ற ஏகபோகம் இதன் மூலம் உருவாகிறது. தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சன் குழுமத்தையும், உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் முர்டோச்சின் குழுமத்தையும் இதற்கு சான்றாக கூறலாம்.

என்.டி.டி.வி அத்தகைய ஆதிக்கத்தை பெற முடியவில்லை என்பதால் இந்தப் புகார், வழக்கு. விளம்பர முதலாளிகளுக்கும், தொலைக்காட்சி முதலாளிகளுக்கும் இடையே இருக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடுதான் இந்த வழக்கு. மற்றபடி இந்த வழக்கில் நீதி, நேர்மை, நியாயம், அறம் என்பதெல்லாம் மாயை.

______________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

_____________________________________________________________

வன்னி அரசு: பொய் மேல் பொய்!

38

வம்பர் 7 நாயக்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ம.க.இ.கவைச் சேர்ந்த வன்னியர்களும் உண்டு என்றொரு அவதூறை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக “வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை “ என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில் ” அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தோம். நிறைய வாசகர்களும் கீற்று தளத்தில் இதையே கோரியிருந்தனர்.

தனது பொய் குறித்து பதிலளிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவான காரணத்தினால், மீண்டும் கீற்று தளத்தில் முழுப்பிதற்றலாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அக்கட்டுரையில் “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது. எமது முந்தைய கட்டுரையிலேயே நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் எமக்கு அமைப்பு கிளைகள் இல்லை என்பதால் பென்னாகரம் பகுதி தோழர்கள் சென்று உதவியிருக்கின்றனர் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

இருப்பினும் தான் சொன்ன அபாண்டமான அவதூறை நியாயப்படுத்துவதற்காக இன்னொரு பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் ரீதியான விமரிசனங்களை விடுத்து பொய்களையும், அவதூறுகளையும் வெளியிடுவதில் கீற்று தளத்திற்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.

வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

32
  • திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
  • தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.
  • போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
  • தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.
  • கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.
  • சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.
  • நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.
  • மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
  • ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.

•••

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைமுதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைபார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.

இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.

அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஉலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைகுழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.

பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஇவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.

முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

_________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 2008
_________________________________