(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)
ஈழத்தமிழ் மக்கள் மீத இலங்கை அரசால் ஏவிவிடப்பட்டிருக்கும் போர் நடவடிக்கைகள் எட்டாம் தேதியோடு நிறுத்தப்படவேண்டும், இல்லையேல் 9ஆம் தேதி வழக்கறிஞர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம் செல்வோம் என தூத்துக்குடி மற்றும் கரூர் வழக்கறிஞர்கள் சங்கங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்கள். இதன்படி இன்று கரூரில் எட்டுவழக்கறிஞர்களும், தூத்துக்குடியைச்சேர்ந்த ஆறு வழக்கறிஞர்களும் முல்லைத்தீவு நோக்கி காலை பத்து மணிக்கு கிளம்பினர். இந்த வழக்கறிஞர்களில் முருகேசன் கருர் (மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) ம.உ.பா.மையத்தின் அமைப்பாளர், ராமச்சந்திரன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் செயலாளர், ஹரி ராகவன் தூத்துக்குடி ம.உ.பா.மையத்தின் தலைவர் மற்றும் செல்வம்,வேலு ம.உ.பா.மையத்தின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி இந்த வழக்கறிஞர்கள் சுமார் ஐம்பது கி.மீட்டர் வரை கடலுக்குள் சென்றுள்ளனர். ஒன்றரை நாளில் முல்லைத் தீவு அடைந்து விடுவதாக திட்டம்.
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)
முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்கான புள்ளி விவரம். இரண்டிலும் புள்ளி விவரம்தான், எனினும் ஆபாசமாக இல்லையா?
இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.
ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
“தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்!
தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!”
என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
திருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்கள் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர்.
31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் பகுதி முழுவதும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள். குவிந்து கொண்டிருந்த கூட்டத்தில் மாணவர்கள் அதிகம். அவ்வகையில் முத்துக்குமாரின் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள் என்றும் கூறலாம். கூட்டத்தில் ஆங்காங்கே ராஜபக்சே, ஜெயலலிதா, சோனியா ஆகியோரின் கொடும்பாவிகளும் காங்கிரசு கொடிகளும் எரிந்து கொண்டிருந்தன.
சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள்.
அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.
பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.
அடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.
அவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.
அதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா?… யாரறிவார்? மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.
முத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.
“ராஜபக்சே ஒழிக! பொன்சேகா ஒழிக! காங்கிரசு ஒழிக! ஓட்டுக்கட்சி துரோகிகள் ஒழிக! பிரபாகரன் வாழ்க! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! சோனியாவே இத்தாலிக்கு ஓடு! ஜெயலலிதா ஒழிக! போர்நிறுத்தம் செய்! தமிழர்களைக் கொல்லாதே!”
ஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.
கொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன? பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன? “என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்” என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.
ஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.
நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.
அஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். “என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார் எம்.எல்.ஏ. “எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா?” என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.
இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. “குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்” என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். “இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்” என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.
இது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.
“உடனே எடுக்காவிட்டால் கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடும் என்று எச்சரித்தார் ஒரு தலைவர். “நேரம் ஆக ஆக கூட்டம் உணர்ச்சிக்கு ஆட்பட்டு நிலைமை கட்டு மீறிவிடும்” என்று வழிமொழிந்தார் இன்னொருவர். “உடல் தாங்காது” என்றார் ஒரு தலைவர். “சனிப்பிணம் தனிப்போகாது என்பது மக்கள் நம்பிக்கை. அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார் இன்னொரு தலைவர். இன்றே எரியூட்டி விட்டு அஸ்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துப் போகலாமே என்ற மாற்று வழியையும் சிலர் முன் மொழிந்தார்கள்.
“தனது உடல் எதிரிகளைத் துன்புறுத்தும்” என்ற நம்பிக்கையில் தீக்குளித்தான் முத்துக்குமார். ஆனால் அவ்விருப்பத்துக்கு விரோதமாக அவன் உடல் “நண்பர்களை” துன்புறுத்திக் கொண்டிருந்தது. வணிகர் சங்கத்தின் அறைக்கு வெளியே அனல் பறக்கத் தொடங்கி விட்டது. உள்ளேயோ புழுக்கம் கூடிக் கொண்டிருந்த்து.
தலைவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து இறுதி யாத்திரைக்கான வண்டிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் போலும்! அலங்கரிக்கப்பட்ட வண்டி உள்ளே நுழைந்தது. உடனே வண்டியை மறித்தார்கள் எமது தோழர்கள். “வண்டி மிஞ்ச வேண்டுமானால் உடனே இடத்தைக் காலி செய்” என்று எச்சரித்தார்கள். எதுவும் புரியாமல் பயந்து போன ஓட்டுனர் மறுகணமே இடத்தைக் காலி செய்தார்.
சேரன், வடிவேலு, அமிர், சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி என திரையுலகத்தினர் வந்திறங்கினர். “இறுதி யாத்திரையை எப்படி நடத்துவது, எப்போது நடத்துவது என்று எந்த தலைவரும் முடிவு செய்ய முடியாது. இங்கே கூடியிருக்கும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார் சேரன். பேச முடியாமல் கண்ணீர் விட்டார் சத்யராஜ். “ஓட்டுக் கட்சிகள்.. துரோகிகள்” என்று சரமாரியாக வெடித்தார்கள் திரையுலகப் பேச்சாளர்கள்.
தாங்கள் உணர்வு பூர்வமாகப் பேசினோமா அல்லது சூழலால் உந்தப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டோமா என்ற கேள்விக்கான விடை இந்நேரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். எவ்வாறாயினும் அந்தப் பேச்சு கூட்டத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.
ஆலோசனை முடிந்து முடிவை அறிவிக்க மேடையேறினார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். “இரண்டு கருத்துகள் இருக்கின்றன. நாளை அடக்கம் செய்யலாம் என்பது ஒரு கருத்து” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதனை ஆமோதித்த்து கூட்டம். “இரண்டாவதாக தலைவர்களின் கருத்து என்னவென்றால்..” என்று அவர் பேச முயன்றார். கூட்டம் அதனை அனுமதிக்கவில்லை. “துரோகிகள் ஒழிக” என்று முழக்கமிடத் தொடங்கியது. “நீங்கள் என்னைப் பேச அனுமதிக்க மாட்டேன் என்கிறீர்கள். தலைவர்களுடைய கருத்தை அவர்களே சொல்லட்டும்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.
எந்த தலைவர் பேசுவது? திருமா கையில் மைக்கை கொடுத்தார்கள். அவரைப் பேசவிடாமல் கூட்டம் கூச்சல் எழுப்பியது. ஒரு மோதல் சூழ்நிலை ஏற்படவே அதனை அமைதிப் படுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மைக் சேரன் கைக்கு வந்த்து. “நாளை அடக்கம்” என்ற கருத்தில் திருமாவும் உடன்பட்டார். மற்ற தலைவர்களுக்கு… வேறு வழியில்லை.
தலைவர்கள் புறப்பட்டனர். உரைகள் தொடர்ந்தன.. சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படவேண்டும். கொளத்தூர், பெர்ரம்பூர், ஜமாலியா, பின்னி குக்ஸ் ரோடு, ஒட்டேரி, புரசவாக்கம் ஐ ரோடு, டவுட்டன், சூளை, யானைக்கவுனி வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைய வேண்டும் என்பது முடிவு.
ஆனால் முத்துக் குமாரின் இறுதிப் பயணம் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை.
தொடரும்…
ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான்.
ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான
போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.
இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான
பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்
சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர். இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.
முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?