privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

ஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

-

ஷாருக்-கான்
தேசிய அவமானம்

அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.

பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowship எனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட  பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.

ஷாருக்-கான்-3
நன்றி www.manjul.com

அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?

ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?

ஷாருக்-கான்
யேல் பல்கலையில் குத்தாட்டம் போடும் பாதுஷா – படம் www.thehindu.com

ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே  அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

சையத்-அகமது-காஸ்மி
சையத்-அகமது-காஸ்மி

சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு,  இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.

மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.

ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே  ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.

சையத்-அகமது-காஸ்மி-2
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)

பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும் பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.

ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம்.  ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?

இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.

நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……

_____________________________________________________

– தமிழரசன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்