Thursday, May 1, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

-

கேரள-இனவெறி-அரசு-2முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்காகப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் அடாவடித்தனம் செய்யும் கேரள அரசை எதிர்த்தும், அணையை உடைக்கச்  சதிகளைச் செய்யும் கேரள போலீசை வெளியேற்றி, அணையைத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரியும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசின் இனவெறி அரசியலுக்குத் துணைபோகும் மைய அரசை எதிர்த்தும், 15.6.2012 அன்று உசிலை பேருந்து நிலையம் அருகே தேனி சாலையில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  அணைப் பாதுகாப்புக் குழு பொருளாளர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டார ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டூவீலர் மெக்கானிக் சங்கம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், ம.க.இ.க. ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

நீதிபதி ஆனந்த் குழுவின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கேரள காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஓட்டுக்கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கி, தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்காவிடில், முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றும் போராட்டமாகத் தமிழகம் கிளர்ந்தெழும் என்று பிரகடனப்படுத்துவதாக அமைந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேரள-இனவெறி-அரசு-1தமிழகத்தின்  கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் அடிப்படையாக உள்ள பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் கேரள எல்லைப் பகுதியில் 1978இல் அணை கட்ட முயற்சித்து தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் அத்திட்டங்களைக் கைவிட்ட கேரள அரசு, இப்போது மீண்டும் அவற்றைச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. முல்லைப் பெரியாறு நீரில் கேரள அரசின் இனவெறி  துரோகம் அம்பலப்பட்டுள்ளதால், தமிழகத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இதனைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. இது மட்டுமின்றி, தமிழக எல்லைப் பகுதிகளில் இரகசியமாக மருத்துவமனைக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் கொட்டித் தமிழகத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.

கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து 23.6.2012 அன்று செஞ்சிலுவைக் கட்டிடம் அருகே  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோவை மாவட்டத் தலைவர் ராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் திராவிடக் கழகம், பு.ஜ.தொ.மு; ம.க இ.க; ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், திரளான வழக்குரைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றுப் போராட அறைகூவினர்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்