Tuesday, April 13, 2021
முகப்பு அரசியல் ஊடகம் சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!

சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!

-

செய்தி -99

மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா?

முடியாது என்று சொல்பவர்கள் இந்த வார ‘குமுதம்’ இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம்.

அட்டையில் சூர்யா சிரித்துக் கொண்டிருக்கிறார். 12.9.2012 என இதழின் தேதி மின்ன… மூன்று அட்டைப்பட தலைப்புகளில் ஒன்றாக ‘அப்பாவுக்கு தெரியாமல் ‘ஜோ’வுக்கு செயின் வாங்கிக் கொடுத்தேன்! சூர்யா பர்சனல் பேட்டி’ என்ற வாசகம்.

அதிகம் நம்மை சோதிக்காமல் 2வது பக்கத்திலேயே இந்தப் பேட்டி வெளியாகியிருக்கிறது. சரி, ‘மாற்றான்’ வெளிவர இருக்கும் சமயம். சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வேறு ஜெயா டிவி வாங்கியிருக்கிறது. எனவே நமது எம்ஜிஆரின் வாரப் பதிப்பான ‘குமுதம்’ அப்படம் குறித்து பேட்டி செய்தி வெளியிட்டிருக்கும் என நினைத்தால்… அஸ்கு புஸ்கு நாங்கள் சாதா வியாபரிகள் இல்லை, ஸ்பெஷல் வியாபாரிகளாக்கும் என குமுதமும் சரி, சூர்யாவும் சரி ஒன்று சேர்ந்து மாற்றானைத் தாண்டியே டப்பாங்குத்து ஆடியிருக்கிறார்கள்.

சூர்யா-மலபார்-கோல்ட்

இதுநாள் வரையில் ‘மலபார் கோல்ட்’ விளம்பரத்தில் நடித்து வந்த இளையராஜாவின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவே புதிதாக சூர்யாவை வைத்து அந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை தனது பத்திரிகையின் பின் அல்லது உள் அட்டையில் பிரசுரித்து லட்சம் லட்சமாக பணத்தை சுருட்ட இந்தப் பேட்டியின் வழியாக குமுதம் துண்டு போட்டிருக்கிறது. அநேகமாக அந்த இதழின் விளம்பர மேலாளர், சூர்யாவின் பேட்டியை காண்பித்தபடி விளம்பர ஏஜென்சியிடம் இந்நேரம் பேசிக் கொண்டிருப்பார்.

சூர்யா பேட்டி வந்த குமுதம் பக்கங்களுக்கிடையிலேயே லலிதா ஜூவல்லரி, டானிஷ்க் நகை விளம்பரங்கள் வந்திருக்கின்றன. இதற்கு பொருத்தமாய் பேட்டியின் தலைப்பிலேயே நகை வந்துவிட்டது. இதற்கென அந்நிறுவனங்களிடம் அதிக தொகையோ, இல்லை கவர் ஸ்டோரி பேக்கேஜ் என்ற பெயரிலோ நடந்திருப்பது அப்பட்டமான வியாபாரம்.

குமுதத்தின் நோக்கம் இப்படி விளம்பரத்தை வாங்குவதாக இருக்கிறது என்றால், சூர்யாவின் குறிக்கோள் தனது சுயநல சுரண்டலை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. குறிக்கோளும், அதை அடைவதற்கான செய்கைகளை நியாயப்படுத்துவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? அதனால்தான் குமுதமும் சூர்யாவும் கைகோர்த்திருக்கிறார்கள்.

பேட்டியில் சூர்யா சொல்லியிருப்பதை கவனியுங்கள்…

”விளம்பரங்களில் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்னு ஆசைப்பட்டிருந்தால் மளமளன்னு வரிசையா பல விளம்பரங்களில் நடிச்சிருப்பேன். பொதுவா நான் விளம்பரங்களில் நடிக்கணும்னு முடிவெடுக்கும் போது குறிப்பிட்ட அந்த நிறுவனம் மக்களுக்கு ஏதாவது சமூக சேவை செய்யணும்னு எதிர்பார்ப்பேன். அப்படி சில பிரின்சிபல் வச்சிருக்கிற கம்பெனிகளுடன் மட்டுமே கைகோர்க்கிறேன். இப்படி விளம்பரங்களின் மூலமா கூடுதலா கிடைக்கிற வருமானத்தை ‘அகரம் ஃபவுண்டேஷ’னுக்கு செலவு பண்ணறேன். ஒரு நல்ல காரியத்திற்காக இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் ஒரு மனநிறைவு இருக்கு…”

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என எவ்வளவு வெள்ளந்தியாக பேசியிருக்கிறார்?

விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது சரவணா ஸ்டோர்ஸ். போதுமான பாதுகாப்பு இல்லாததால் சென்ற ஆண்டு அந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டு தொழிலாளார்கள் இறந்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இருந்து ப்ளஸ் 2 படித்த இளைஞர்கள், இளைஞிகளை அழைத்து வந்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறது சரவணா ஸ்டோர்ஸ். இதன் விளம்பரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். என்ன சமூக சேவையை அந்நிறுவனம் செய்திருக்கிறது அல்லது செய்கிறது? பேசாமல் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தினமும் 14 மணிநேரங்களுக்கு மேல் உழைத்துக் கொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களை தனது ‘அகரம் பவுண்டேஷன்’ வழியாக இவர் படிக்க வைக்கலாமே? இந்த அகரத்தைப் பற்றி வினவில் விரிவான கட்டுரை வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்.

இது ஒரு சோறு பதம்தான். இப்படியே பெப்சி, நெஸ்கபே, டிவிஎஸ், பாரதி சிமெண்ட்ஸ், ஏர்செல், க்ளோசப்… என சூர்யா நடிக்கும் அனைத்து விளம்பரங்கள் குறித்தும் பட்டியலிடலாம். இந்த உலகமயமாக்கல் சூழலில் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தும், மக்களின் ரத்தத்தை உறிந்தும்தான் லாபம் சம்பாதிக்கின்றன.

ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஓராண்டு இருப்பதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடி வரை சூர்யா வாங்குகிறார். விளம்பர படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இதற்காகத்தான் இவ்வளவு பணத்தை வாங்குகிறார்.

கூடுதலாக பணம் கொடுத்தால், ஈமு கோழி விளம்பரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கும் இவர்தான், அன்றாடக் கூலியில் காலம் தள்ளும் உழைக்கும் மக்களை பார்த்து, ‘விளம்பரங்களில் நடித்துத்தான் நான் சம்பாதிக்கணும்னு அவசியமில்லை…’ என சொல்கிறார்.

உலகெங்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீர் குடிக்கும் பழக்கத்தையே ஒழித்துவிட்டு, இயற்கை வளமான நீரை வர்த்தகமாக்கி சுரண்டும் பெப்சி கம்பெனி சமூக சேவை செய்கிறதாம். அந்த சமூக சேவையை ஆதரிக்கும் பொருட்டு சூர்யா ஐந்து கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு பெப்சி விளம்பரங்களில் நடிக்கிறாராம். இதற்கும் சூர்யா உங்கள் முகத்தில் துப்புவதற்கும் என்ன வேறுபாடு?

கேட்பவர்களை முட்டாளாக நினைத்து சூர்யா வேண்டுமானால் இப்படி கதை விடலாம். குமுதமும் தன் வாசகர்களை அறிவிலிகளாக நினைத்து பேட்டியை பிரசுரித்து ஆதாயம் அடைய முயலலாம்.

ஆனால், தாங்கள் ஏன் முட்டாள்களாக இருக்கிறோம் என மக்கள் உணரும்போது, புத்திசாலித்தனமாக பேசுபவர்கள்தான் அறிவிலிகளாக காட்சித் தருவார்கள்.

சூர்யாவும், குமுதமும் இப்போது காட்சியளிப்பது மாதிரி.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. அருமையான பதிவு தோழரே! “சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லணும்”, என்ற சங்கரின் ‘சமூக பொறுப்புணர்ச்சியும்’…இந்த குட்டையில் ஊறிய மட்டையே!

 2. மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள் வினவு!
  ஆனால் குமுதம், சூர்யா சிவகுமார் போல, நீங்களும் வேஷம் போடவில்லை என்று நம்புகிறோம்! ஏன்னா கொதிக்க கொதிக்க பால்ல வாய வெச்சு பொறவு தயிர்ல கூட நாக்க வெக்க பயபடுற மாதிரி தான் அப்பாவி மக்கள் நெலம இருக்கு! நம்ம மக்கள் என்ன அடிச்சாலும் தங்குறாங்க அப்டின்ற மாதிரி தான் இருக்காங்க!
  வடிவேலு நகைச்சுவைல வர மாதிரி, இப்போ வரைக்கும் நல்ல தானே பெசிட்ட்ருந்தான் இப்போ காத கடிச்சி துப்பரானே! அப்போ இவனும் அவிங்க குருப்பாயா? அப்டின்னு வினவும் எங்கள கேக்க வெச்சுர கூடாதுன்னு கேட்டுகொள்கிறோம்!

 3. சாராயம், கந்து வட்டி என மக்கள் விரோத தொழிலைச் செய்பவன் உள்ளூர் அம்மன் திருவிழாவிற்கு ஸ்பான்சர் செய்யும் சமூக சேவையைத்தான் சூர்யாவும் அவர் பல் இளிக்கும் கம்பெனிகளும் செய்கின்றன.

 4. In this article , what you have said is right but in general ,if you analyse both the views(positive & negative) of an issue, it will much helpful for common people,they come to know about complete picture of those issues…….. else people may think , u always criticising government and other fields……..

 5. சூர்யாவை பற்றி பேச சமூகத்தின் மீது அக்கறை கொள்ளாத உங்களை போன்ற ஆட்களுக்கு உரிமை இல்லை. நம்மால் முடியவில்லை என்றாலும் நல்லது செய்பவர்களையாவது விடலாமே.
  ஒன்று மட்டும் சொல்கிறேன் சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் வாய் வலிக்கும் அன்பரே!
  ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது அதை மட்டும் நினைவில் கொண்டு உணமையை மட்டும் வினவுங்கள்!

   • //ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது அதை மட்டும் நினைவில் கொண்டு உணமையை மட்டும் வினவுங்கள்!//

    சிரிப்பை அடக்க முடியவில்லை, இது வஞ்சக புகழ்ச்சியணி தானே?

 6. (இற்தபின்) கொண்டு செல்வது ஒன்றும் இல்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கோடிகோடியாய் சுருட்டுவதும், சுருட்டுபவர்களுக்கு துணை நிற்பதும், சமூக சேவை என்ற போர்வையில் மறைந்து கொள்வதும் முதலாளித்துவத்தின் முதல் விதி. அதில் நிவேதன் போன்றவர்கள் வினையூக்கிகள்.

 7. ஒரே கேள்வி … இது வரைக்கும் ஒருத்தன் ஜோஸ் அலுக்காஸ் விளம்பரத்தில் பட்டி தொட்டி எங்கும் போஸ்டர் ல போஸ் குடுத்து நின்னானே …

  அவன பத்தி இது வரைக்கும் எதாவது ஒரு பதிவு இருக்கா …??

  விஜய் தான் ….

  வினாவோட வாய் அவன பத்தி எழுத ஏன் திறக்க வில்லை ???

  அது மட்டுமா ,

  ரோல்ல்ஸ் ராய்சே கார் வாங்குனது

  டாட்டா டோகோமோ விளம்பரம்

  கோகோ கோலா…

  மக்கள் கட்சின்னு ஊரே எமாதுரானே , இப்படி ஊற கொள்ளையடிச்சு …
  ??

  • எல்லா நடிகர்களும் தங்களது வரி ஏய்ப்பு செய்வதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள ரசிகர் மன்றங்களை ஓழிக்கும் வரை அவர்கள் வீடுகளில் ரோல்ஸ் ராஸ் கார் இருக்கத்தான் செய்யும்.

  • நீங்க கேட்கிறது நல்ல கேள்வி தான்
   அனால் அந்த ஒருத்தன் நான் சமுக சேவைக்காக தான்
   விளம்பரங்கள்ல நடிக்குறேன்னு சொல்லலையே

 8. ஒரு வேளை சூரியாவும், இக்கட்டுரையை எழுதியிருப்பவரும் பார்பனராக இருந்திருந்தால் இக்கட்டுரையின் தலைப்பு எப்படி இருந்திருக்கும் தெரியுமா, “ஷூரியனை போல் மிளிரும் ஷூரியா!!”. வளர்த்துவரும் கொஞ்ச நஞ்ச தமிழர்களையும் இப்படி மட்டம்தட்டியே என்ன சாதிக்க போறீர்கள் என்று தெரியவில்லை. உதாரணம்: இந்து ராம், சுப்பிரமணி சாமி, போன்றோர் கூறுகிற கருத்துகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், ராம் டைம்ஸ் நவ்வில்(இந்துவின் போட்டி) வருவர், சுப்பிரமணி சாமி தமிழகத்தின் முகமாக மாறுவார். இப்படி பார்பனர்கள் செயல்படும் போது நாம் மட்டும் ஏன் இப்படி ஒருத்தனை ஒருத்தர் குற்றம் சொல்லிகொண்டிருக்க வேண்டும்???

 9. சினிமா நடிகர்கள் அனைவரும் இந்த சமூகத்தையே சீரழித்த, சீரழித்துக்கொண்டிருக்கும் கொடும் குற்ற செயலை செய்பவர்கள்.. இவர்களை சமூக விரோதிகள் என்பேன் நான்..

  சூரியனும் அவன் தம்பியும் அந்த ஒரு கோடி நிகழ்ச்சியில் அடித்த கூத்து இருக்கிறதே சகிக்க முடியவில்லை… எத்தனை காலம் தான் ஏமாற்றுவாரோ ?

 10. ஜோதிகா கழுத்தில் சூர்யா செயின் மாட்டுவது போல் ஒரு விளம்பரம் மலபார் கோல்ட் நிச்சயம் வெளியிடுவான்.ஏற்கெனெவே னெஸ்கபெயோ சன்ரைசோ ரண்டு பெரும் சேர்ந்து குடிச்சி ரெண்டு கோடி சம்பாரிச் சாளாம்.இப்ப சிவகுமார் நிச்சயம் வருத்தப்படுவார்,தமன்னாவையும் மருமகள் ஆக்கி இருக்கலாமே…….

 11. சிவகாசி வெடி விபத்தின் பின்னர் இந்த வேஷதாரிகளின் சமூக அக்கறை எல்லோரும் அறிந்ததே.
  1, ரஜனி
  2, கமல்
  3, அஜித்
  4, விஜய்
  5, சூர்ய்
  6, விக்ரம்

 12. அய்யா தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை. இவன் பண்ற அலம்பு இருக்கே. தாங்கலடா சாமி. மொத்த குடும்பமே அப்படி தான் இருக்கும் போல.இவனுக்கு விஜய் டிவி ஒத்து (not nedil) ஊதும் பாரு. அடடா கோபிநாத் இருக்கானே . அவன் ஒருத்தன் போதும்

 13. இரண்டு பேரை பேட்டி எடுத்து அவர்களுக்கு ஜீரோ மார்க் போட்டு இதற்கு புரூ காபி குடிச்சுக்குட்டே 5 நிமிடம் செலவு செய்திங்கனா அவங்களை புரிஞ்சுக்குவீங்க.. என நடிகர் கார்த்தி – அகர்வால் ஜோடி சொல்கிறது. இது புரூ காபி விளம்பரம்.

  சென்னை பிலிம்சேம்பரில் 3 திரையரங்குகள் கட்ட நடிகர் கார்த்தி – சூர்யா இணைந்து 1 கோடி நன்கொடை கொடுத்து உள்ளதாகவும், சமூகநலப்பணிகள் அதிகம் செய்பவர்கள் இவர்கள் என புகழ்ந்தும், பிலிம்சேம்பரில் கட்டப்படும் ஒரு திரையரங்கிற்கு கார்த்தி-சூர்யா அவர்கள் அப்பா-அம்மாவான சிவக்குமார் – லட்சுமி பெயர் வைக்கபட உள்ளதாகவும் இன்று செய்தி வந்துள்ளது.

  **************

  கணவன் – மனைவி, அப்பா – பொண்னு என உறவுகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவதற்கும் புரூ காபி குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இப்படி சம்பந்தமே இல்லாமல் காபி கம்பெனி முதலாளி கல்லா கட்ட நம் பாக்கெட்-ல் பிளேடு போடும் ஒருவர் மனநிலை என்னவென்பது?

  இவரு இப்படி என்றால் இன்னொரு சிவக்குமார் புதல்வர் நடிகர் சூர்யா ஜட்டி முதல் வேலக்கமாறு வரை ஒரு விளம்பரமும் விடுவது இல்லை. அப்போலோ முதலாளி முதல் சரவணா ஸ்டோர் முதலாளி வரை இவர் விளம்பரம் செய்யும் அத்தனை நிறுவனங்களிலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தினந்தோறும் பாதிக்கப்படும் போது அதற்காக கவலைபடாத இவர் தான் அகரம் என்ற அறக்கட்டளை மூலம் நன்கொடை வசூல் செய்து சில நூறு குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வதை ஊடகங்கள் பாராட்டுவதை என்னவென்பது?

  கல்வி என்பது காசுக்கான பண்டமாக மாற்றப்பட்டு மாணவர்களும், பெற்றோர்களும் தற்கொலை செய்து கொள்ளும் போது அதற்கு எதிராக சிறு குரல் கூட கொடுக்காத இவர்களை தான் கல்வி வள்ளல் என்கிறார்கள்? எஸ்.ஆர்.எம் முதலாளியின் புதிய தலைமுறை சிறந்த தமிழன் விருதை நடிகர் சூர்யாவிற்கு கொடுத்தபோதே தெரிந்து கொள்ளலாம் இவர்கள் எப்பேர்பட்ட ‘வள்ளல்’ என்பதை.

  இவர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ஹார்ட்டை எடுத்து செல்ல உதவி செய்வது போல அப்போலோ ஹார்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு பேக்கேஜ் விளம்பரம் செய்யும் இவர் அரசு ஆஸ்பத்திரிகள் தரம் இல்லமால் நோய் தொற்றும் இடமாக இருப்பற்கு என்ன சமூகநலப்பணி செய்தார்கள்?

  ஆகப்பெரும்பாண்மையான மக்கள் இன்று கல்வி, மருத்துவம், வீடு, வேலை இல்லாமல் கஷ்டப்படுவதற்கு அடிப்படை காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் அமுல்படுத்தும் இந்த தனியார்மய, உலகமய கொள்கைகள் தான். அதனை மறைத்துவிட்டு இல்லாதவனுக்கு உதவி செய்வது என்ற துருப்பிடித்த கொள்கையின் சமூக நீட்சிகளே இந்த சினிமா கழிசடைகள்.

  இப்படிப்பட்டவர்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக நிலைநிறுத்தும்போது தான் தங்கு தடையில்லாமல் இன்றைக்கு நிலவும் இந்த சமூக அநீதி நடைபெற முடியும் என முதலாளிகளுக்கு நல்லா தெரியும். அதனால் தான் அவர்களுடைய ஊடகங்கள் அனைத்தும் இவர்களை கொண்டாடுகின்றனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க