Saturday, July 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!

நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!

-

manmohan-singh-coal-scandal-cartoonரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியிருக்கிறார். அப்போது பேசியவர், 2ஜி மற்றும் நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸைப் பிடி பிடியெனப் பிடித்தாராம். சிவராஜ் சிங் சௌகானையும் எடியூரப்பாவையும் ராமன் சிங்கையும் கட்சியில் வைத்துக் கொண்டு இப்படிப் பேச ஒரு தனி தைரியம் தேவை தான். ஆனால் செய்தி அதுவல்ல.

கடந்த ஏழு வருடங்களில் காங்கிரசு, பாரதிய ஜனதா உள்ளிட்ட சகல கட்சிகளும் சுமார் 4,662 கோடி ரூபாய்கள் நன்கொடையாகப் பெற்றுள்ளன என்று இரண்டு தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இதில் கணிசமான தொகை பெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவையாம். இந்த தகவல்களெல்லாம் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் கமிஷனுக்கும் அரசியல் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அளித்த விவரங்களின் அடிப்படையிலிருந்து பெறப்பட்டவை தாம்.

இப்படி நிதியை வாரிவிட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் மத்திய இந்தியாவில் கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் ‘தொழில்’ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள். குறிப்பாக, பிர்லா குழுமம், வேதாந்தா, அம்புஜா சிமென்ட்ஸ், எஸ்ஸார், ஜிண்டால் போன்ற கரி களவாணிகளும் கனிமக் களவாணிகளும் தாராளமாக நிதியளித்துள்ளனர். இதில் நிலக்கரி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட பெருச்சாளிகளும் உண்டு. தொலைத் தொடர்புத் துறையின் பெருச்சாளியான பாரதி குழுமமும், மற்ற சின்ன லெவல் பிக்பாக்கெட்டுகளான வோடஃபோன் போன்றோரும் தேர்தல் நிதியளித்துள்ளனர்.

யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் – அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக். இந்த விவரங்களை வெளியிட்ட என்.ஜி.ஓ அமைப்பு, இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்துள்ளது. மற்ற ஆங்கில ஊடகங்களும் இதே போன்ற கருத்தை முன்வைத்துள்ளன. இந்த நியாயம் எங்களுக்கு மட்டுமில்லையா என்று ஏ3 ஸ்டேசன் ஏட்டையா குமுறுவது உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா?

போகட்டும், நிலக்கரித் திருட்டைத் தடுக்க முடியவில்லை என்பதற்காகத் தான் காங்கிரசின் மேல் பாரதிய ஜனதா விழுந்து பிடுங்கிக் கொண்டுள்ளது. மோடியும் ஊழலைத் தடுக்க வக்கற்ற காங்கிரசை ஒழித்துக் கட்டுவேன் என்று அறைகூவித் தான் தனது பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார். ஆனால், திருடியது யாரோ அவரே இவர்கள் இருவருக்கும் மற்றுமுள்ள ஓட்டுக்கட்சி உறவினர்களுக்கும் ஒரே மாதிரி படியளந்துள்ளனர்.

திருடர்களிடம் வாங்கித் தின்றுவிட்டு திருட்டை ஒழிப்போம் என்று சவடால் விடும் பாரதிய ஜனதாவின் கூற்றை நம்புவது பற்றிய முடிவை உங்களிடமே விட்டு விடுகிறோம். ஆனால், பாரதிய ஜனதாவுக்கு அதிகாரத்துக்கு வருவதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள  மேற்படி செய்தியில் இருக்கும் ஒரு சின்னத் தகவலைப் புரிந்து கொள்வது அவசியம். கடந்த ஏழு வருடங்களில்  காங்கிரசுக்குக் கிடைத்தது 2008 கோடிகள் – பாரதியஜனதாவுக்கு 994 கோடிகள்.

இப்போது புரிகிறதா இந்துத்துவ கும்பலுக்கு ஏன் இத்தனை ஆவேசம் என்று? வருமானத்தில் இத்தாலி மாதா, பாரத மாதாவை ஜெயிப்பதை எப்படித் தான் அவர்களால் சகித்துக் கொள்ள முடியும்?

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க