கவர்னர் தாத்தாவின் அறிக்கைக்கு தடை – பு.மா.இ.மு. வழக்கு வெற்றி !

கல்வித்துறை “கலவி”த்துறையாகவும் “கல்லா”த்துறையாகவும் மாற்றப்பட்டிருப்பதற்கு நிர்மலாதேவி ஒரு சாட்சி. அப்போ அக்யூஸ்டு யார்? அவர்கள்தான் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

6

ருப்புக்கோட்டை – நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் அமைத்த சட்டவிரோதமான சந்தானம் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தாக்கல் செய்த இந்த பொதுநல வழக்கில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நிர்மலாதேவி விவகாரத்தில், ஆளுநர் அவசரம் அவசரமாக கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பு, காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் போட்ட ஐவர் குழு, அதை தொடர்ந்து ஆளுநர் நியமித்த சந்தானம் குழு, பிறகு ஐவர் குழுவை ஆளுநர் கலைத்தது, இதற்கு இணையாக தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை.. என அடுத்தடுத்து நடந்த கேலிக்கூத்துகளைப் பார்த்த அனைவருக்கும் இந்த சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் எண்ணற்ற மாணவிகள் சிதைக்கப்பட்டிருப்பர் என்பது புரியாமல் இல்லை. ஊடகங்களும் இதனை எழுதத்தான் செய்தன.

அதே நேரத்தில், ஆளுநர், துணைவேந்தர், அரசு, போலீசு மற்றும் தரகர்கள் ஆகியோர் இணைந்த இந்த கிரிமினல் கூட்டணி, விசாரணை என்ற பெயரில் சாட்சியங்களை அழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இதனைத் தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகத்தான் மேற்சொன்ன வழக்கு தொடுக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வரும் இந்த வழக்கை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு, மாணவிகளை பலியாக்க முயன்ற – நிர்மலா தேவி வழக்கினை பெண் டி.ஐ.ஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, அதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை செய்யவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் பெண் வழக்கறிஞர்களை உள்ளடக்கி – “பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்” கீழ் புகார் குழு அமைக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயர் விபரங்களை வெளியிட்ட தேவாங்கர் கல்லூரி செயலாளர் ராமசாமி மற்றும் அருப்புக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையில் உள்ள போதே

  • சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் அறிக்கையினை Status Report ஆக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • காமராஜர் பல்கலை. இப்பிரச்சினையில் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும்.
  • தேவாங்கர் கல்லூரி செயலர் ராமசாமி, அருப்புக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை இடைக்கால நிவாரணமாக கோரப்பட்டது. இவ்வழக்கு 03.05.2018 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு கவர்னருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. வழக்கு 23.05.2018 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.

இதற்கிடையில், சந்தானம் கமிட்டி தனது விசாரணை அறிக்கையினை 15.05.2018 அன்று கவர்னரிடம் வழங்குவதாக செய்தி வெளியானது. எனவே ஏற்கனவே கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டியின் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்ற நமது கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், அதன் அறிக்கையினை வெளியிடக்கூடாது என்ற அவசரக் கோரிக்கை 10.05.2018 காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குற்றவியல் விசாரணையில் கவர்னர் சட்டவிரோதமாக தலையிடுகிறார். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நபரை நீதிபதியே குறிப்பான உத்தரவின்றி விசாரிக்க முடியாது, சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் மனு போட்டு அனுமதி பெற்றுத்தான் நிர்மலாதேவி உள்ளிட்ட நபர்களை விசாரணை செய்தது, ஆனால் எவ்வித உத்தரவுமின்றி கவர்னர் நியமித்த அதிகாரி சந்தானம், ஜெயிலுக்குள்ளேயே சென்று நிர்மலாதேவியை விசாரணை செய்தது, உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கை. இப்பிரச்சினையில் உண்மையான குற்றவாளிகள் யார்? இதற்கு முன் இது போன்று பாதிக்கப்பட்டவர் விபரம் என்ன? இனிமேல் இதுபோன்று நடக்கவிடாமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்ற வகையில் விசாரணை அமைய வேண்டும். அதனை உயர்நீதிமன்றம் கண்காணிப்பது மிக அவசியம் என்றும் பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

தமிழக அரசின் வழக்குரைஞரும், காமராசர் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞரும் ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி வாதிட்டனர்.

காமராஜர் பல்கலைக் கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமிருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. துணைவேந்தர் நியமித்த குழுவை ஆளுநர் கலைத்துவிட்டதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. இப்போது கவர்னர் சட்டப்படி செயல்படுவதாக இருவரும் வாதிடுவது கேலிக்கூத்து என்று பாலன் ஹரிதாஸ் வாதிட்டார்.

நீண்ட வாதுரைக்குப் பின்னர் வழக்கினை விடுமுறைகாலம் முடிந்த பின்னர், ஜூன் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இதற்கிடையில் கவர்னர் அறிவித்த சந்தானம் கமிட்டி விசாரணை அறிக்கையினை வெளியிடக்கூடாது, “சீல்” செய்த கவரில் வைத்திருக்க வேண்டும், இவ்வழக்கின் உரிய உத்தரவுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையினை முடிவு செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.

கல்வித்துறையே கலவித்துறையாகவும், கல்லாத்துறையாகவும் மாற்றப்பட்டிருப்பதன் ஒரு வெளிப்பாடுதான் நிர்மலாதேவி விவகாரம். SAVE MKU என்ற அமைப்பில் கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரோடு இணைந்து இவ்விசயத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. இவ்வழக்கு அப்போராட்டத்தின் ஒரு பகுதி.

ஒன்றிரண்டு சிறிய மீன்களைக் காவு கொடுத்து விவகாரத்தை மூடிவிடுவதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரச்சினை குறித்து பேசும் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் கிரிமினல் கும்பலை அடையாளம் காட்டுவதற்கே கூட மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.

நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் இந்த இடைக்காலத் தீர்ப்பு என்பது அப்படி ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்பு.

தகவல்:

வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

6 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க