தூத்துக்குடியில் நடைபெற்றது, பெருந்திரளான மக்கள் போராட்டம். போராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குகிற பொறுப்பு மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் உண்டு. அம்மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையோ, நடைமுறை சார்ந்த உதவிகளையோ மக்கள் அதிகாரம் செய்ததில் எந்தக் குற்றமோ, குறையோ கிடையாது. செய்யாமல் இருந்தால்தான் அதனை குறையாக நாம் சொல்ல முடியும். இது அவர்களது ஜனநாயக உரிமை, கடமை. இவ்வாறு இம்மக்களுக்கு துணை செய்வதைக் குற்றமாகக் காட்டுவதற்கு சட்டத்திலும் இடமில்லை. நீதியிலும் இடமில்லை.

மக்களுடன் அரசு எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியது? போராட்டத்தை இப்படி நடத்துங்கள், இங்கே நடத்துங்கள் என்று பேசியதைத் தாண்டி, போராடும் மக்களை பிளவுபடுத்தியதைத் தாண்டி, அரசு ஆலையை மூடுவதற்காக இன்னின்ன முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது என்று என்றைக்காவது பேசியிருக்கிறார்களா?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் யாரோ சிலர் வாகனங்களுக்குத் தீ வைக்கிறார்கள். இந்தக் காட்சிகள் பதிவாகாமல் இருக்க, ஆட்சியர் அலுவலகத்தின் சி.சி.டி.வி. காமிராக்கள் உடைந்து தொங்குகின்றன. இதன் பின்னால் உள்ள சூழ்ச்சித் திட்டமென்ன? ஸ்டெர்லைட் தூண்டிவிட்டு  சில ஆட்கள் செய்தார்களா? அல்லது காவல்துறை சாதாரண உடையில் வந்து இதைச் செய்ததா? அல்லது காவல்துறையால் தூண்டிவிடப்பட்ட சில சமூகவிரோதிகள் செய்துவிட்டு மக்கள் மீது பழிபோடப்படுகிறதா?

இது புதுவகையான போலிமோதல் கொலை. பிரித்தானியா ஆட்சி காலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கென்று வகுத்திருக்கிற எச்சரிக்கை விதிமுறைகளின் படி நடத்தப்படவில்லை. இதுவரை நாட்டில் எங்கும் நடந்திராத வகையில், ஒருவிரிவான திட்டத்தை வகுத்து அதற்குரிய ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டத்திற்கு நடுவில் செய்து, உளவாளிகளையும், கைக்கூலிகளையும் கூட்டத்திற்கு நடுவே உலவ விட்டு, யார்யார் சுடப்பட வேண்டியவர்கள் என்று அடையாளம் காட்டி, அவர்களை குறிவைத்து சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

லண்டனிலிருப்பவன் தூத்துக்குடியில் தொழிற்சாலை நடத்தலாமாம். வெளியூர் போலீசு, வெளிமாநில இராணுவத்தை வரவழைத்து போராட்டத்தை ஒடுக்கலாமாம். ஆனால், தூத்துக்குடி மக்களைப் பாதுகாப்பதற்கு வெளியூர் தமிழர்கள் கலந்துகொண்டால், அது குற்றமாம்.

எந்தத்தடை வந்தாலும், எத்தனைப்பேரை சிறைப்படுத்தினாலும் மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாது.

இந்திய அரசினுடைய அழிவுத்திட்டங்கள் பரவ பரவ அந்த அழிவுத்திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களும் பரவும்.

தமிழ்மக்களாகிய நாம், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாம், இயற்கைச் சுற்றுசூழல் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்ட நாம், போராடும் மக்கள் பக்கம் நிற்போம். பழிவாங்கப்படுகிற இயக்கங்கள் பக்கம் நிற்போம். சிறைப்பட்டிருக்கிற தோழர்கள் பக்கம் நிற்போம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க