மதுரை கல்லூரியின் முன்னாள் முதல்வரும், PUCL அமைப்பின் மாநில செயலாளருமான தோழர் முரளி அவர்களின் வீட்டில் கடந்த 12.07.2018 அன்று அதிகாலை 03.45 முதல் 04.00 மணிக்கு ஹாலிங் பெல் அடிக்கப்பட்டுள்ளது. தோழர் முரளி அவர்கள் கதவை திறந்து பார்த்தபோது தூத்துக்குடி வட்டார மொழி பேசிய சீருடை அணியாத ஒருவரும் (க்யூ பிரிவு போலீசு) மதுரை சுப்பிரமணியபுரம் போலீசு நிலையத்தை சார்ந்த இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் போலீசும் நின்றுள்ளனர். வீட்டின் கீழே 5 முதல் 6 போலீசார் நின்றுள்ளனர்.
மேற்படி போலீசார் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்ற கார்த்திக் என்பவருக்கு உங்கள் தொலைபேசியிலிருந்து பேசியுள்ளீர்கள் என்று கூறியுள்ளனர். தோழர் முரளி அவர்களின் இணையர் விஜயா அவர்கள் LIC-யில் தென் மண்டல அமைப்பாளராக உள்ளார். விஜயா அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறி விசாரித்துள்ளனர்.
மேலும் தோழர் முரளி அவர்களிடம் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த தோழர்களை தெரியுமா? என்றும் அவர்களின் வீட்டை காட்டமுடியுமா? என்றும் கூறியுள்ளனர். நாங்கள் வந்ததாக யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறியுள்ளனர். போலீசு வந்ததன் நோக்கம் தோழர் முரளி அவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்பதை தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு கல்லூரியின் முன்னாள் முதல்வர், மனித உரிமை அமைப்பின் மாநில செயலாளரான தோழர் முரளி அவர்களுக்கே இந்நிலை என்றால் இங்குள்ள சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்.
* எவ்வித சட்டநடைமுறைகளையும் பின்பற்றாமலும், நீதிமன்ற உத்திரவு எதுவும் இல்லாமலும் மனித உரிமை களச் செயற்பாட்டாளர் தோழர் முரளி அவர்களின் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசை வன்மையாக கண்டிக்கிறோம்.
* மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அறிவுஜீவிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
-குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
CPCL-TN.