யற்கை வளங்கள் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டக்காரர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பது, கருத்துரிமை – எழுத்துரிமையை மறுப்பது என்று தொடரும் மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த குரல் 21-07-2018 சனிக்கிழமை அன்று மாலை 5:30 மணிக்கு தஞ்சை இரயிலடியில் ஓங்கி ஒலித்தது.

கடந்த 08-07-2018 அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்று தமிழகத்தில் நிலவிவரும் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்தது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. ஒருசில பத்திரிகைகள் தவிர வேறு ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை.

அதன் தொடர்ச்சியாக 10-07-2018 அன்று தஞ்சை மண்டல காவல்துறை தலைவரையும், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை அனைத்துக் கட்சிகள் – இயக்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை போலீசு தடைசெய்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 21-07-2018 அன்று தஞ்சை இரயிலடியில் நடைபெறவிருக்கும் தொடர்முழக்கப் போராட்டத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தப்பட்டது.

மனுவை பரிசீலித்து அனுமதி அளிப்பதாக, தஞ்சை மண்டல காவல்துறை தலைவர் வாக்குறுதி தந்தார். பங்கேற்பாளர்கள் விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரமும், சுவரொட்டிகளும் நகரில் பரவலாக விநியோகிக்கப்பட்டும், ஒட்டப்பட்டும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.

வழக்கம்போலவே 20-07-2018 அன்று கேள்விகேட்டு விளக்கம் பெறும் சடங்குகளை முடித்துவிட்டு அனுமதி மறுத்தது காவல்துறை. கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் தடைக்குக் காரணம் கூறியது.

20-07-2018 அன்று மாலையே அனைத்துக் கட்சிகள் – இயக்கங்கள் பிரதிநிதிகள் கூடி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அடக்குமுறை கடுமையாக இருந்தாலும் எதிர்கொளவது சிறைக்குச் செல்ல வேண்டி இருந்தாலும் செல்வது என்ற முடிவோடு கைதுக்குத் தயாராக கைலி, துண்டுடன் பலர் வந்திருந்ததை ஆர்ப்பாட்ட இடத்தில் பார்க்க முடிந்தது. 200க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை இரயிலடியில் குவிந்து போலீசின் கட்டளை செல்லுபடியாகாது என்ற நிலையை உருவாக்கத் தயாராகினர்.

போலீசு சற்று பின்வாங்கி கெடுபிடிகளைக் குறைத்துக்கொண்டு 2 மணிநேரம் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்தது. சரியாக 5.30 மணிக்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்ட இடத்தைச் சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வமுடன் நின்று ஆதரவு அளித்தனர். கருத்துரிமை பறிப்புக்கு எதிராக விண்ணதிர முழக்கம் எழுப்பப்பட்டது.

கோ.திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), சு.பழனிராஜன் (சமவெளி விவசாயிகள் சங்கம்), மருத்துவர். இளரா. பாரதிச்செல்வன் (மீத்தேன் திட்ட எதிரப்புக் கூட்டமைப்பு), அருண்ஷோரி (தமிழ் தேசிய மக்கள் முன்னணி), வைகறை (மாவட்ட செயலர் – தமிழ் தேசியப் பேரியக்கம்), செல்லப்பா (மனிதநேய மக்கள் கட்சி), ஜீவா (சி.பி.ஐ – எம்.எல் – லிபரேசன்), விடுதலை குமரன் (சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை), காளியப்பன் (மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர்), கோ.நீலமேகம் (மாவட்ட செயலர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), செந்தில் (மாவட்டக்குழு உறுப்பினர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் உரையாற்றினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், நாடு முழுவதும் நடைபெறும் மோடி, எடப்பாடி அரசுகளின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் எழுந்த ஒன்றுபட்ட கண்டனக்குரல் மக்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. தஞ்சையில் அடக்குமுறைக்கு அஞ்சாமல், பதிலடி கொடுத்த ஒற்றுமைக் குரல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையை இந்த ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.

  • வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க