• மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் என்.எஸ்.ஏ-விலிருந்து விடுதலை!
  • துப்பாக்கிச்சூடுக்கும் சேர்த்து சிபிஐ விசாரணை !
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக நின்று போலீஸ் நடத்திய அரச பயங்கரவாதப் படுகொலையை அம்பலப்படுத்தும் விதத்தில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. சி.டி.செல்வம், திரு.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

முதலாவதாக, தூத்துக்குடி போராட்டத்தின் முக்கிய குற்றவாளியாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தாலும், போலீசாலும், பாரதிய ஜனதா கட்சியினராலும் சித்தரிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு.

தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு தற்போது உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் !

தூத்துக்குடி பேரணியில் கலந்து கொண்ட ஒரே குற்றத்துக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கலியலூர் ரஹ்மான் அவருடைய மகன்களும் மாணவர்களுமான முஹம்மது அனஸ், முகமது இர்ஷத் ஆகியோரையும், கோட்டையன், சரவணன், வேல்முருகன் ஆகிய தோழர்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு காலத்துக்கு சிறை வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது செல்லத்தக்கதல்ல என்று அவர்கள் 6 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இரண்டாவதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும், துப்பாக்கி சூடு தொடர்பான போலீசுக்கு எதிரான வழக்குகளையும் தமிழக காவல்துறையை சேர்ந்த சிபி சிஐடி விசாரிக்கக் கூடாது என்று கூறி அவற்றை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மீதுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மே 22 அன்று நடைபெற்ற சம்பவத்துக்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரில் தாங்களே தயாரித்துக் கொண்ட  பொய்யான வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து, சுமார் 175 வழக்குகளை தூத்துக்குடி போலீஸ் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட ஒவ்வொருவர் மீதும் 20 முதல் 120 வழக்குகள் வரை போட்டு, அவர்களை பிணையில் வரவே முடியாமல் செய்வது என்பதுதான் போலீசின் நோக்கம். இது குறித்து விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒரு சம்பவத்திற்கு 175 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதென்பது சட்டவிரோதமானது என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றிருந்தோம். குற்ற எண் 190, 191 ஆகிய இரண்டின் கீழ்தான் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட  வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு போலீஸ் அராஜகத்துக்கும் அத்துமீறல்களுக்கும் உதவிய அடித்தளத்தை தகர்த்து விட்டது.

இந்த இரண்டு வழக்குகளையும் தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது பொருத்தமல்ல என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளது.

முழுமையான தீர்ப்பின் நகல் இன்னும் கைக்கு வரவில்லை எனினும் அதன் சுருக்கத்தை கீழ்வருமாறு தொகுத்து தருகிறோம்.

144 தடை முதல் துப்பாக்கிச்சூடு கொலை வரை எந்தக் கேள்விக்கும் அரசு விளக்கமளிக்கவில்லை!

முதலாவதாக மே 21 ஆம் தேதி அன்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே ஒரு அசாதாரணமான நடவடிக்கை அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் போது மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லை உத்தரவு குறித்து உரிய முறையில் மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இரண்டாவதாக துப்பாக்கி சூட்டுக்கு ஒரு துணை தாசில்தார் உத்தரவிட்டிருக்கிறார் உத்தரவிட்ட துணை தாசில்தாரின் அதிகார எல்லை துப்பாக்கி சூடு நடந்த இடம் அல்ல. தான் சுமார் 12.5 கிலோமீட்டர் தூரம் பேரணியுடன் நடந்து வந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய பிறகு அங்கே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் கூறுவது சந்தேகத்துக்குரியதாக உள்ளது

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டோ அல்லது பெரும் பணம் கிடைக்குமென்பதற்காவோ உங்களால் ஒரு சிறுமியைக் கொல்ல முடியுமா?

துணை தாசில்தாரின் உத்தரவுப்படி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி, ஆங்காங்கே தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் உத்தரவிட்டது யார் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது பின்பற்றப்பட வேண்டிய காவல்துறையின் நிலை ஆணைகள் பின்பற்றப்படவில்லை.

இத்தகைய துப்பாக்கிச்சூடு நடைபெறும் தருணங்களில் இ.பி.கோ 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை.

மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பன்னிரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக மக்கள் வந்திருக்கின்றனர்.  போலீசார் இதனை எப்படி தடையின்றி அனுமதித்தனர் என்ற கேள்விக்கு காவல்துறையிடமிருந்து பதில் இல்லை.

இந்த வழக்கின் போது மனுதாரர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவை எதற்கும் அரசுத் தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்கூறிய காரணங்களினால் இந்த வழக்கை தமிழக காவல்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிபிசிஐடி துறையினர் விசாரிப்பதை விட, சிபிஐ விசாரிப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இந்தக் காலத்தில் சில நாட்களுக்கு அம்மாவட்டங்களில் இணையத் தொடர்புகள் அங்கே துண்டிக்கப்பட்டிருக்கின்றன. (இதை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பத்திரிகையாளர் கவின்மலரை மனுதாரராக கொண்டு ஒரு மனு தாக்கல் செய்து தடையை நீக்கியிருந்தோம்) இந்த இணைய முடக்கத்துக்கு தேவை இருந்ததா என்பது குறித்தும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் !

இந்த வழக்கை ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நான்கு மாதங்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் அத்துமீறல் குறித்து போலீசார் மீது தூத்துக்குடி மக்கள் புகார் கொடுத்தால் அவை குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

– என்று நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அஹ்மத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனமும் தமிழக அரசும் காவல் துறையும் இணைந்து நடத்திய அரச பயங்கரவாதக் கொலை வெறியாட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்கறிஞர்களும் அமைப்புகளும் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்ததுள்ள குறிப்பிடத்தக்க வெற்றியாகும் இந்த தீர்ப்பு.

பொய்ப் பிரச்சாரம் செய்தவர்களை மறந்து விடாதீர்கள்!

இந்த தருணத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போலீஸும் தமிழக அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ரஜினிகாந்த் போன்ற நபர்களும் சில ஊடகங்களும் பரப்பி வந்த பொய்ப்பிரச்சாரத்தை மக்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்

மக்கள் அதிகாரம் அமைப்புதான் நடைபெற்ற வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர்தான் இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் என்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீஸ் கைது செய்தது. பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் போன்றவை ஏவப்பட்டன.

மீனவ பிரதிநிதிகளை மிரட்டி மக்கள அதிகாரத்திற்கு எதிராக புகார் மனு

மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக மேற்கொண்டது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுப்பதாக தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் நேற்று மோடியும் கூறியிருக்கிறார். இது மத்திய உளவுத்துறையும் சங்கபரிவார அமைப்பினரும் இணைந்து பரப்பும் பொய்.

இந்த பொய்யின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதற்குத்தான் ரஜனி தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். தூத்துக்குடி மட்டுமல்ல, எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், சமூக ஆர்வலர்களையும் ஒடுக்குவதையும், தமிழ்நாடு முழுவதும் கருத்துரிமையை பறிப்பதையும் இந்தப் பொய்யின் அடிப்படையில்தான் பாஜகவும் தமிழக அரசும் நியாயப்படுத்தி வருகின்றனர்

யார் பயங்கரவாதிகள் யார் சமூகவிரோதிகள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக இனம் காட்டுகிறது. மக்கள் அதிகாரம் வன்முறையைத் தூண்டியதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் பாஜகவினர் தொலைக்காட்சிகளில் சவடால் அடித்தார்கள். ஆனால் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனுதாரர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இது இறுதித் தீர்ப்பு அல்ல என்பது உண்மைதான். ஆனால் 13 பேரைப் படுகொலை செய்து, பலரை துப்பாக்கிக் குண்டுக் காயத்துக்குள்ளாக்கி,

நூற்றுக்கணக்கான மக்களை சிறைவைத்து அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து, போலீசு ரெய்டுகள் மூலம் தூத்துக்குடி மக்களை பீதிக்குள்ளாக்கிய போலீசார், தங்களது நடவடிக்கைகள் எதற்கும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க முடியவில்லை என்பதை நீதிமன்றத்தில் அம்பலமாக்கியிருக்கிறோம்.

144 தடை உத்தரவை மீறினார்கள் என்பது மட்டும்தான் மக்கள் செய்த குற்றம். ஆனால் எல்லா சட்ட நெறிமுறைகளையும் மீறியிருப்பவர்கள் போலீசும், தமிழக அரசும், அவர்களுடைய எசமானான ஸ்டெர்லைட் முதலாளியும்தான்.

இந்த அளவில் ஒரு தீர்ப்பைப் பெறுவதற்கு மிகக் கடுமையான விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்தப் போராட்டத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து, அரசு தரப்பு எத்தனை வாய்தா வாங்கி இழுத்தாலும் அலுக்காமல் வந்து, கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் முதல் இந்தப் பணிகளில் இரவு பகலாக உழைத்த இளம் வழக்கறிஞர்கள் வரை அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தியாகம் வீண் போகக் கூடாது! ஸ்டெர்லைட்டை திறக்க விடக்கூடாது!

இந்த தருணத்தில்  ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் ஆலையை திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் வெற்றி பெற்று வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முதல் படியாக பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டபோது, அபராதம் கட்டிவிட்டு ஆலையை நடத்துமாறு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்து விடக்கூடாது.

தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று தனிச்சட்டம் இயற்றுவது ஒன்றுதான் தீர்வு என்று ஆலைக்கு சீல் வைப்பதாக தமிழக அரசு அறிவித்த அன்றே கூறினோம். மீண்டும் அதையே வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு என்பது அனில் அகர்வாலின் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லா விதத்திலும் அது உதவும். தமிழக அரசின் யோக்கியதை பற்றி சொல்லத் தேவையில்லை.

நிர்வாக கட்டிடத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே எந்த நோக்கத்திற்காக 13 உயிர்களை பலி கொடுத்தோமோ, எந்த நோக்கத்திற்காக படுகாயம், பொய் வழக்கு, சித்திரவதை என்று பல துன்பங்களை அனுபவித்தோமோ அந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.  இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமன்று. தமிழக மக்கள் அனைவரின் பிரச்சினை.

கார்ப்பரேட் அடியாள் அரசாக இருந்துகொண்டு குஜராத்தி பனியா மார்வாரி முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நாட்டை கூறு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தமிழகத்தில் என்ன செய்கிறதோ, அதைத்தான் நாடு முழுவதிலும் செய்கிறது.   எனவே இது நாட்டு மக்கள் அனைவரின் பிரச்சினை.

இந்தியாவிற்கு முன்னரே ஆப்பிரிக்க நாடுகளில் ஸ்டெர்லைட் நடத்திய படுகொலைகள் அம்பலமாகி இருக்கின்றன.  வேதாந்தா என்பது ஒரு சர்வதேச கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனம். இதனை எதிர்த்த போராட்டத்தை பல்வேறு நாட்டு மக்களும் ஆதரிப்பார்கள்.

இந்த போராட்டத்தில் நாம் பெறுகின்ற வெற்றி, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மக்கள் மீது கொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து தம் வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமையும்.

இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்பதை அறிவோம். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உடனே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களாகிய நாங்கள் என்றும் எப்போதும் போராடுகின்ற தூத்துக்குடி மக்களோடும், போராடும் தமிழக மக்களோடும் இருக்கிறோம். அரச பயங்கரவாத குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை, கொலைகார ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் வரை ஓயமாட்டோம்.

இவண்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு