எந்த இடத்தில் எதை சொல்வது என்று தெரிய வேண்டாமா?
பறக்கும் விமானத்தில் அப்படி சத்தம் போடலாமா?
மற்ற கட்சித் தலைவர்களை நோக்கி இப்படி சொல்லிவிட முடியுமா?

– என இதில் கலர் கலராக தொழில்நுட்பக் காரணங்களை கண்டுபிடித்து அலசுவோர் பலரையும் பார்க்கிறோம்.

தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள்

இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த தடையையும் தாண்டப் போவது இல்லை. அவர்கள், தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள். அத்தகைய காரியவாதிகளுக்கு சோபியாவின் சுயமரியாதை மிக்க முழக்கத்தின் உணர்ச்சியை புரிந்துகொள்ள இயலாது.

தான் வாழ்ந்த மண்ணை நஞ்சாக்கி, பல்லாயிரம் மக்களை நோயாளிகளாக மாற்றி, குழந்தைகளுக்குக் கூட புற்றுநோயை கொண்டுவரும் ஸ்டெர்லைட் என்ற கொடிய ஆலையின் நேரடி சாட்சியம், சோபியா. கனடாவில் படித்துக் கொண்டிருந்த போதிலும், அவரது மனம் தூத்துக்குடியின் ஒவ்வோர் அசைவோடும் இணைந்திருந்தது என்பதை அவர் எழுதியுள்ள பதிவுகளும், கட்டுரைகளும் சொல்கின்றன. மே 22-ம் தேதி மஞ்சள் சட்டை அணிந்த தமிழக காவல்துறையின் கூலிப்படை, போராடிய மக்களைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்திய காட்சிகளைக் கண்டு நமக்கு மனம் கொதித்ததுபோல, சோபியாவும் ஆத்திரம் கொண்டார்.

ஒரு நாளோடு முடியவில்லை… அடுத்தடுத்த நாட்களும் வீதி வீதியாக, வீடு வீடாக விரட்டிச்சென்று மக்களை நரவேட்டையாடிய, இளைஞர்களை இழுத்துப்போட்டு அடித்துக்கொலை செய்த இந்த காவல்துறையை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் யாராலும் மறக்க இயலாது. அப்படி இருக்கும்போது தன் சொந்த ஊரின் மீது நீங்கா நேசம் கொண்ட, தன் மண்ணின் மக்கள் மீது காதல் கொண்ட சோபியாவின் மனதில் அந்த துப்பாக்கி சூடும், போலீஸின் அடாவடி வன்முறைகளும் எத்தகைய ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அதே துயருடன் அவர் கனடாவில் இருந்து சென்னை வந்திறங்கி, தூத்துக்குடி விமானத்தில் ஏறுகிறார். அங்கே தமிழிசை சவுந்தர்ராஜனைப் பார்க்கிறார்.

தமிழிசை யார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை இந்த கணம் வரை நியாயப்படுத்தி வரும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை பின்னின்று இயக்கும் ஒரு கட்சியின் தலைவர். அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது சோபியாவின் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பு என்பது மிக இயல்பானது. தனது சொந்தங்களைக் கொலை செய்த ஒரு கொலைகாரனை கண்ணெதிரே காண்கையில் உருவாகும் மனக் கொந்தளிப்பு அது. மனித மனதின் ஆதாரமான நீதியுணர்ச்சி. அந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தினால் விளைவுகள் என்னவாகும் என்று அவர் கணக்கு போடவில்லை. மாறாக கணக்கு போட்டவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

தமிழிசையை கதறவிட்ட சோபியா

தான் சார்ந்த ஒரு கட்சியை பாசிச கட்சி என்று தன் கண்ணெதிரே ஒரு பெண் முழக்கமிடுகிறாள். அதுவும், கனவான்கள் பயணிக்கிற விமானப் பயணத்தில், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற சத்தம், தமிழிசைக்கு எப்படி துளியும் எதிர்பாராத ஒன்றாகவும், திடுக்கிட வைத்த துர்கனவாகவும் இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகாயத்தில் ஒலித்த அந்த போர்க்குரலை அங்கேயே எதிர்கொள்ளும் திராணி தமிழிசைக்கு இல்லாமல் போனது ஏன்? ’சோபியாவுக்கு இங்கிதம் இல்லை;  தமிழிசைக்கு சபை நாகரிகம் தெரிந்துள்ளது’ என இதை புரிந்துகொள்வதா?

பார்ப்பனியத்தின் பெயரால் இந்தியாவை வதைத்து வரும் ஒரு பாசிசக் கட்சி தலைவரிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பதே அநாகரீகம். எனினும் அந்த அநாகரீகங்களையே நாகரீகம் என நம்பும் சில அப்பாவிகளுக்காக தமிழைசை ‘நாகரீகமாக’ நடந்து கொண்டால் எப்படி இருக்குமென கற்பனை  செய்து பார்ப்போம்.

அதன்படி சோபியாவை அழைத்து, “உங்கள் கோபத்துக்கு என்ன காரணம்?” என்று விசாரித்திருக்கலாம். பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி இல்லை என்று அவர் நம்புவதை விளக்கியிருக்கலாம். எதையும் செய்யவில்லை என்பதுடன், விமானம் தரையிரங்கும் வரையிலும் காத்திருந்து தன் கட்சிக்காரர்கள் நிற்கும் இடத்தை வந்தடைந்தவுடன் கோபத்தை வெளிப்படுத்துவது ஏன்? ஏனெனில் சோபியாவுக்கு வந்த கோபம் மிக இயல்பானது. தமிழிசைக்கு வந்த கோபம் செயற்கையானது; காரியவாதமானது. அடியாட்களின் பலத்தில் கொலேச்சும் ஒரு சர்வாதிகாரியுடையது.

ஒருவேளை விமானத்துக்கு உள்ளேயே தமிழிசை தனது கூச்சலை நிகழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ’உங்க அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை மேடம்’ என்ற பெண் காவலரின் உள்குத்தையும், ‘அறிவெல்லாம் இருக்கு. அதனாலதான் பா.ஜ.க. ஆட்சி ஒழிகன்னு கத்துது’ என்ற தமிழிசையின் சொந்த உள்குத்தையும் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போம் என்பதைத் தவிர ஆகாயத்தில் உண்மையிலேயே என்ன நடந்திருக்கும்?

இது ஒரு சுவாரஸ்யமான யூகம்தான். ஆனால் ஒருவேளை அப்படி நடந்திருந்தால் பறக்கும் விமானத்துக்குள் சோபியாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒரு சிலவேனும் எழுந்திருக்கும் என்பது நிச்சயம். அவரது முழக்கத்துக்கு விமானத்தின் இதர பயணிகளில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்ற பயணிகளின் அடியாழத்தில் புதைந்துகிடந்த பேசாக்குரலின் சாட்சியாகவே சோபியா ஓங்கி ஒலித்திருக்கிறார்.

உண்மையில் சோபியா செய்ததும், அதற்கு பொதுவெளியில் கிடைக்கும் ஆதரவும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிலைமைகளில் மட்டுமே சாத்தியம். அறிவுஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதைத் தாண்டி, தமிழ் சிவில் சமூகம் சோபியாவின் பக்கம் நிற்கிறது. அவரது உணர்ச்சியுடன் தன்னை மிக இயல்பாக ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. ஆனால் இது வட இந்தியாவில் சாத்தியம் இல்லை. சோபியா ஒரு வட இந்தியராக இருந்திருந்தால் இந்நேரம் அவர் லூயிஸ் சோபியா என்ற பெயருக்காகவே மத அடையாளம் முன்னிருத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருப்பார்.

சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற நான்கு சொற்கள், உறைந்து கிடந்த தமிழ் பொது மனநிலைக்கு ஓர் உத்வேகத்தை தந்துள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்… சமூக ஊடகங்களில் கூட அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மை மட்டுப்பட்டிருந்தது. அந்த மடையை சோபியா திறந்துவிட்டிருக்கிறார்.

என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை – சோபியாவின் தந்தை

தன் செயலுக்கு மன்னிப்புத் தெரிவிக்க சோபியா மறுத்திருக்கிறார். “நான் வெளிப்படுத்தியது இயல்பான பேச்சுரிமை” என்கிறார் அவர். “என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஒரேயொரு அவச்சொல்லை கூட பேசவில்லை” என்கிறார் சோபியாவின் தந்தையும் மருத்துவருமான கிருஷ்ணசாமி. ஆனால், இந்த அரசு சோபியாவை எளிதில் விட்டுவிடாது. கனடாவில் மீதமிருக்கும் அவரது ஆய்வுப் படிப்பை தொடர்வதற்கு தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் இடையூறைத் தரும். அதை மோடியின் ஒன்னாம் நம்பர் அடிமையான எடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வார். இதன் முதல் கட்டமாக சோபியாவின் பாஸ்போட்டை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே சமூக ஊடகங்களின் ஒருநாள் கொண்டாட்டமாக சோபியா செய்தி முடிந்துவிடாமல் அவருக்காக நாம் தொடர்ந்து பேச வேண்டும்.

தமிழ்நாட்டில் தொட்டதெல்லாம் பூம்ராங் ஆக மாறி பா.ஜ.க.வை திருப்பித் தாக்கியபோதிலும், தொடர்ந்து எதிர்மறை செய்திகளில் அடிபடுவது குறித்து அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற இயலாது என்று தெரிந்துவிட்ட பின்பு, தேர்தலுக்கு அப்பாற்பட்ட சமூக உடைப்பை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இறுகிப்போன இந்து மதவாத உணர்ச்சியை இன்னும் ஒருபடி வெறியேற்றவும், தேசியவெறியின் பெயரால் நடுத்தர வர்க்க உணர்வுகளை திசைதிருப்பவும், இவற்றுக்கு முட்டுக்கொடுக்கும் லிபரல்வாதிகளை ஊடகங்களில் உலவவிடவும் இதுபோன்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

நாம் இவர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற முழக்கத்தை சொல்ல வேண்டியது தமிழிசைக்கு எதிராக மட்டுமல்ல. அது பொன்னாருக்கு எதிராக, எச்.ராஜாவுக்கு எதிராக, கே.டி.ராகவனுக்கு எதிராக, நாராயணன் திருப்பதிக்கு எதிராக, பத்திரிகையாளர் மாலனுக்கு எதிராக, குருமூர்த்திக்கு எதிராக, எஸ்.வி.சேகருக்கு எதிராக… இன்னும் பலருக்கு எதிராக எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.

உரக்க முழங்குவோம், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’! 

  • வழுதி

9 மறுமொழிகள்

  1. பாசிச பா.ஜ.க ஒழிக
    பார்ப்பன பாசிச RSS ஒழிக
    பாசிச மோடி ஒழிக
    பாசிச அமித்ஷா ஒழிக
    பாசிச எச்ச ராஜா ஒழிக
    பாசிச வானதி சீனிவாசன் ஒழிக
    பாசிச மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள்
    ஒழிக
    பாசிச KD.ராகவன் ஒழிக
    பாசிச RSS மோகன் பாகவத் ஒழிக
    பாசிச அடிமை தமிழக எடுபிடி சர்க்கார் ஒழிக
    பாசிச சிந்தனை கழிவு நாராயணன் ஒழிக
    பாசிச சிந்தனை கைக்கூலிகள் ஒழிக
    பாசிசம் பற்றி சிந்திக்க மறுக்கும் அப்பாவி வேஷதாரிகளும் ஒழிக
    பாசிசம் போற்றும் தினமலர் தினமணி தமிழ் இந்து மற்றும்
    பாசிச ஒளி ஒலி ஊடகங்கள் ஒழிக
    பாசிச கழிவுகளை சிந்தனையில் சுமக்கும் மக்கள் விரோதிகளும் ஒழிக

    பெயர்கள் விடுபட்ட பாசிசவாதிகள் மன்னிக்கவும்

    முடிவாக: பாசிச பா.ஜ.க ஒழிக

  2. விமான நக்சல் ஜோஃபியா வாழ்க பா.ஜ.க. எச்.ராஜா.பொன்னார் .எஸ்.வி.சேகர். இல.கணேசன். நாரயணன் மற்றும் உள்ள அனைத்து இந்து மதவெறி பாஷிஸ்ட்டுகள் தமிழின துரோகிகள் உள்ளிட்ட தமிழிசை……..ஒழிக! ஒழிக!

  3. திரவிடம் ஒழிக
    தி க ஒழிக
    தி மு க ஒழிக
    அ தி மு க ஒழிக
    அ அ தி மு க ஒழிக
    திரு கமல்ஹாசன் ஒழிக
    திரு சீமான் ஒழிக
    திரவிட சிந்தனை என்று கூரிக்கொண்டு தமிழ் இனத்தையும் , பாரத நாட்டையும் பிரிக்க நினைக்கும் சிந்தனை கைக்கூலிகள் ஒழிக
    திரவிட என்று கூரிக்கொண்டு, மதம் மாறி, சொந்த மண்ணில் சொந்த இந்தியர்களை எதிர்க்கும் மக்கள் விரோதிகளும் ஒழிக
    திரவிட சிந்தனை கைக்கூலிகள் ஒழிக
    திரவிட போற்றும் தமிழ் திரவிட மற்றும்
    திரவிட ஒளி ஒலி ஊடகங்கள் ஒழிக
    திரவிட கழிவுகளை சிந்தனையில் சுமக்கும் மக்கள் விரோதிகளும் ஒழிக

    முடிவாக: இந்தியாவையும் எதிர்க்கும் தீய எண்ணங்கள் ஒழிக

    • பாரதம் என்பதே பார்ப்பனீய ஃபார்முலா
      பாரதம் போற்றும் பார்ப்பனீயம் ஒழிக
      பாரதம் போற்றும் அடிமைகளும்
      ஒழிக
      பார்ப்பனீயம் ஏதடா பாரதமும் ஏதடா

      அனைத்து தேசிய இனங்களும் சமத்துவமாக வாழ வழிகாட்டும் புதிய ஜனநாயக இந்தியாவே
      உண்மையான இந்தியா!

  4. சங்கிகள் இருவகை; திமிர்பிடித்த முட்டாள் மூடர் மற்றும் யோசிக்கத் தெரிந்த திமிர்பிடித்தோர் என.
    ஆட்சி முதல் வகையினரிடம்,
    அவர்கள் இதயமற்ற உலகின் அரசர்கள்,
    மக்கள் நாடித்துடிப்பையுணரா மருத்துவர்கள்.
    துனைக்கண்டமெங்கும் எதிரொலித்தது சோபியாவின் முழக்கம்.
    அவரது குரலில் கலந்திருக்கிறது
    ஓக்கியின் துயரம்,
    ஸ்டெர்லைட்டின் கனல்,
    வாக்களித்து ஏமாந்தோரின் பெருமூச்சு.
    பிரிதொரு வகையினர் முதல் வகையினரை முட்டுக்கொடுக்க ஊடக வித்தகர் உதவியுடன் பல குரலில் பேசுவர்;
    பொருளாதாரப்பிலிகளாக,
    பென்சன் போஜனக்காவலாராக,
    சமூகஆர்வலாராக.
    தினமல தந்தியில் போராடும் மக்களுக்கெதிராக பதிவிடுவராக.
    இவர்களை இனங்கான தேவையொரு மூக்குக்கண்ணாடி பெரியார் அம்பேத்கர் என்ற இரு ஆடிகளைக்கொண்ட..

Leave a Reply to சத்யமாணிக்கம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க