பெண்களின் பேறுகால நேரத்தை வீட்டில் இயற்கை பிரசவம் எனும் பேரில் அபாயகரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் ஹீலர் பாஸ்கர். அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துவிட்டார். திருப்பூரில் நடந்த கிருத்திகாவின் உயிர்பலியும் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் மக்களிடம் இன்னும் ஓயவில்லை. பிரசவம் குறித்தான பல தலைப்புகளின் கீழ் ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பிரசவம் குறித்த நவீன மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வில் கிராமப்புறம் தான் பின்தங்கி உள்ளது. பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதமும் கிராமத்தில் தான் அதிகம் உள்ளது. இருந்த போதிலும் கிராமத்து மக்களும் மருத்துவமனை சென்று பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டும் என விழிப்படைந்து வருகின்றனர்.

இன்றும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பிரசவம் குறித்த விழிப்புணர்வு எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தது. ஹீலர் பாஸ்கரையோ அவர் பிரச்சாரம் செய்யும் ’வீட்டில் இயற்கை பிரசவ’ உரைகளை கேட்டிராத நரிக்குறவர் மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் நுழைந்தோம்.

பெரும்பாலான ஆண்கள், பெண்கள் வேலைக்கு சென்றிருந்தனர். மீதமுள்ள சில பேர் இரண்டு குழுவாக பிரிந்து பணம் வைத்து சீட்டுக் கட்டு விளையாடினர். இவர்களுக்கான சாப்பாட்டை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஒருவர் அணில் கறியை உறித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் பசியோடு விளையாடிக் கொண்டிருந்தனர். எங்களை கண்டு கொள்வார் யாருமில்லை.

அவர்களிடம் பேசிப் பார்த்த வரையில் பிரசவத்தோடு தாய் மரணமோ, பிள்ளைகளின் மரணமோ எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. முன்பு இருந்த சத்துணவு, ஆரோக்கியம், அதிக வேலை போன்ற பொதுவான பொதுப்புத்தி நம்பிக்கைகள் குறவர் இன மக்களிடம் மட்டுமல்ல, நாங்கள் சந்தித்த செவிலியரிடம் கூட இருந்தது. இதுதான் ஹீலர் பாஸ்கர் போன்றோரது உரைகள் மக்களிடம் எடுபடுவதற்கான அடிப்படை.

தற்போது மருத்தவமனைகள் இல்லையென்றால் அதிக மரணம் என்று கூறும் குறவர் இன மக்கள், முந்தைய அதிக மரணங்களை இயற்கையானது என்று கருதுகிறார்கள். இன்றும் கூட வேறுவழியில்லை என்றால் வீட்டிலேயே பிரசவம் என்பது கூட சிறு எண்ணிக்கையில் உண்டு. பொதுவில் மருத்துவ முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், அரசு உதவிகள் என்பவையே குறவர் இன மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை உணரலாம். எனினும் இன்றும் கூட இந்த மக்கள் தமக்கென்று சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பற்ற பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அரசு மருத்தவமனைகள் இல்லை என்றால் நாம், நமது குறவர் இன மக்களையே முற்றிலும் இழக்க வேண்டியிருக்கும்.

ரம்யா

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னோட பிரசவத்த பத்தி வேணுன்னா செல்றேன். எனக்கு வயசு 17. கர்பமாயி நாலு மாசத்துக்கு பிறகு நர்சம்மா வந்து கணக்கெடுத்தாங்க. சத்து குறைவா இருக்குன்னு ஆஸ்பத்திரி போக சொன்னாங்க. அங்க போனதும் ரத்தம் குறைவா இருக்குன்னு ரத்தமெல்லாம் ஏத்துனாங்க. ஊசி போட்டாங்க. நர்சக்கா வந்து மாசா மாசம் சத்துமாவு தருவாங்க, பிரசவத்துக்கு பணம் வாங்கி கொடுத்தாங்க.

நாங்க ஆஸ்பத்திரி போகாம இருந்தா இதெல்லாம் கெடைச்சிருக்குமா. நாங்க என்னத்த பெரிசா வீட்டுல சாப்புட்ற போறோம். மிஞ்சி மிஞ்சி போனா எங்க வீட்டுக்காரு எலி புடிச்சாந்து கறி ஆக்கி தருவாரு. பெரும்பாலும் சோறு ஆக்க மாட்டோம் கடையில டீ பன்னு வாங்கி திம்போம் ஒரு நேரம் சோறோ, டிபனோ வாங்கி திம்போம்.

சங்கீதா

எங்க அம்மாவெல்லாம் வீட்டுலதான் கொழந்த பெத்துகிட்டாங்க. இப்ப நானும் எங்க அக்கால்லாம் ஆஸ்பத்திரியில போயிதான் கொழந்த பெத்துகிட்டோம். ஒரு வருசத்துக்குள்ள எனக்கு ரெண்டு பிள்ள கலைச்சி போச்சு. மொதல்ல பிள்ள உருவானப்பையும் ஆஸ்பத்திரி போகல, கலைஞ்சப்பையும் போகல. ரெண்டாவதா கலைஞ்சப்ப வீடு முழுக்க ரத்தம், உடம்பு முடியாமெ ஆஸ்பத்திரி போனோம். பிள்ள உருவான ஆரம்பத்துல புருச பொஞ்சாதி சேத்துருக்க கூடாது அதனாலதான் கொழந்த கலைஞ்சு போச்சுன்னு டாக்டருங்க சொன்னாங்க. அவங்க சொன்னத கேட்டுதான் மூணாவதா இந்தக் கொழந்த.

மலர்

முன்னெல்லாம் எங்க ஆளுங்க வீட்டுலதான் கொழந்த பெத்துக்குவோம். இப்ப கொஞ்ச வருசமாதான் ஆஸ்பத்திரி போராங்க. எங்க ஆளுங்கள்ள யாரு தைரியமான பொம்பளையோ அவங்கதான் பிரசவம் பாப்பாங்க. தானா வெளிய வருதான்னு கொஞ்ச நேரம் பொருத்துருந்து பாப்பாங்க. இல்லன்னா கையி ரெண்டையும் கயித்தால மேல தூக்கி கட்டிட்டு மேல் வயித்துல கைய வச்சு கீழ அமுக்குவாங்க. பலதடவ செத்துக்கூட போயிடும். எண்ணிக்க இல்லாமெ பெத்துக்கறதால எறந்தே பொறந்துருச்சுன்னாலும் பெருசா கவலப்பட மாட்டோம்.

ஆத்தாளும் மகளும் ஒன்னா கொழந்த பெத்துப்போம். குடும்ப கட்டுப்பாடே பண்ணிக்க மாட்டோம். இப்ப அதெல்லாம் மாறி போச்சு. எச்சி எலை எடுத்துகிட்டு காடு மேடு சுத்திகிட்டு ஊசி, பாசிமணிய பழய கஞ்சிக்கி குடுத்துட்டு ஊருக்குள்ளேயே இருந்தப்பதான் வீட்டுலேயே பிரசவமெல்லாம். இப்ப அரசு ஆஸ்பத்திரியிலதான் நாங்க யாவரமே பாக்குறோம். ஊசி, பாசியோட சேத்து வேற சில சாமானும் வாங்கி வச்சு டவுனுப்பக்கம் போயி விக்க ஆரம்பிச்சுட்டோம். எல்லாத்துக்கும் ஆஸ்பத்திரிக்கு போவோம்.

மஞ்சுளா

நாங்களும் நாகரிகமா மாறிட்டு வர்ரோம். எச்சிலல எடுக்குறது இல்லை, நெதமும் குளிப்போம், வெளியூரு போன மாராப்பு போட்டு சேல கட்டுவோம். எங்க பசங்க ஐஸ்கூலுல படிக்கிறாங்க. முன்னல்லாம் நாகரிகமா இல்லன்னு சொல்லி ஆஸ்பத்திரியில டாக்டருங்க திட்டுவாங்க. குளிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க. இப்ப மாறிட்டதால எல்லா வைத்தியத்துக்கும் ஆஸ்பத்திரிதான் போறோம்.

முன்ன காடை, கவுதாரி, நரிக்கறி, முயல் கறின்னு தின்னுட்டு ஒடம்பு தெடமா வச்சுருப்போம். காட்டு மூலிகை, விலங்கோட எழும்பு, ரெக்க எல்லாத்தையும் கலந்து எரிச்சு எந்த நோயா இருந்தாலும் நாங்களே மருந்து, தைலம் தயாரிப்போம். அதே மாறி பிரசவமும் நாங்களே பாத்துப்போம். இப்ப எங்க வாழ்க்கையே மாறி போச்சு. ஓசிக்காக யாருட்டையும் கையேந்தாம ஒழைக்க ஆரம்பிச்சுட்டோம். நாங்களும் ஒங்களப் போல படிச்சவங்க கிட்டதான் வைத்தியம் பாத்துக்குறோம்.

வனிதா (நரிக்குறவர்களுக்கு சாப்பாடு விற்பவர்.)

அந்த காலம் இந்த காலமுன்னு இல்லிங்க எந்த காலத்துலயும் பிரசவமுன்னாலே பொம்பளைக்கி மறு பொறப்புதான். கெவுருமெண்டு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுல போயி பாருங்க பொம்பளையாவே பொறக்க கூடாதுன்னு தோணும். வலி தாங்க முடியாத பொம்பளைங்க அல்லாகு அக்பர் அல்லாகு அக்பர், ஏசப்பா ஏசப்பா, மகமாயி, அய்யனாரப்பா, ஏழுமலையானே, கருமாரின்னு தினுசு தினுசா கத்துராங்க. பிள்ள வெளிய வரப்போர நேரத்துல உயிரு பிரிஞ்சுருமுன்னுதான் நெனப்போம். அந்த நேரத்துல தாயும் பிள்ளையும் நல்லபடியாக்குற டாக்டருங்கதான் தெய்வம்.

பத்மா (நர்ஸ் புகைப்படம் தவிர்தார்.)

அந்த காலத்துல கலப்புள்ள(12) பெத்தவங்கள்ளாம் இருக்காங்க. பெத்ததுல பாதிக்கு மேல மண்ணுக்குதான் குடுத்துருப்பாங்க. இருக்குமோ செத்துருமோன்னு பயத்துலதான் அந்த காலத்துல சனங்க பத்து பிள்ளைங்களுக்கு மேல பெத்துகிட்டாங்க. பொறந்தது எல்லாம் முழுசா உயிரோட யாருக்கும் இருந்தது கெடையாது. இன்னைக்கி அப்புடி இல்லையே கணக்கா ரெண்டு பெத்துக்குறாங்க. ஏன்னா டாக்டருங்க எப்பேர்பட்ட பிரச்சனையையும் கண்டுபுடிச்சு காவந்து பன்றாங்க. பிள்ளையே பொறக்காதவங்களுக்கு கூட பிள்ளைய பொறக்க வக்கிராங்க.

அந்த காலத்துல வீட்டுலேயே அத்தன புள்ளையும் அசால்டா பெத்துகிட்டாங்கன்னா அப்ப நெலமெ வேற. அந்த காலத்துல கம்பு, கேப்பன்னு தின்னுட்டு மாங்கு மாங்குன்னு வேல செய்வாங்களாம். ஒரு நாளைக்கி பத்து மரக்கா நெல்லு குந்துவாங்களாம். பத்து புள்ளகுட்டி இருந்தாலும் கம்பு, கேப்பன்னு கல்லு திருவையுல மாவு அறைப்பாங்களாம். கெனத்துல தண்ணி எடுப்பாங்க, வயலுக்கு பாரம் சுமப்பாங்க. அன்னைக்கி சாப்புட்ட சாப்பாட்டுல சத்து கெடச்சது செஞ்ச வேலையில பிரசவத்துக்கான வழி முறையும் இருந்துச்சு. இன்னைக்கி அப்படியா வாழ்ரோம்.

சாப்புற சாப்பாடுல இருந்த சுவாசிக்கிற காத்து வரைக்கும் எதுவும் தரமானது கெடையாது. எல்லாத்துலயும் கெடுதல் கலந்துடுச்சு. சாப்பாட்டுல கெடைக்க வேண்டிய சத்தெல்லாம் மாத்தர வடிவத்துல தரவேண்டிருக்கு. ஆத்துல வர்ர மீனுல கூட ருசியில்ல. எல்லாம் செயற்கையா மாறிப் போச்சு. ஆஸ்பத்திரியில போயி பாருங்க சுகப்பிரசவம் நடக்குற பல பொம்பளைக்கி முக்கக் கூட தெம்பு இல்ல. குளுக்கோச ஏத்தி ஏத்தி முக்க சொல்ல வேண்டிருக்க. இந்த நெலையில மருத்துவம் இல்லாமெ மகப்பேறு கெடையாதுங்க.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க