மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !

மியான்மரின் இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏழாண்டு சிறை; அதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்.

மியான்மர் அரசு அண்மையில் ரோஹிங்கியா இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது.

இதற்கு அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூ கி ‘அரசு ரகசியங்களை’ கையாண்ட காரணத்துக்காக பத்திரிகையாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில், இதை எதிர்த்து மியான்மரில் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை விடுவிக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் மியான்மரின் யாங்கூன் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை பொதுமக்களின் தகவல் அறியும் உரிமைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

காலனிய அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசு ரகசிய சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் வா லோன்(32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகியோர் செப்டம்பர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்து தண்டனை விதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்  செய்தி சேகரித்தனர். அதன் விளைவாகவே ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கைது மியான்மரின் ஜனநாயக சுதந்திரத்தின் மீதான சோதனை என அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சொல்கின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பத்திரிகையாளர் லங் ஜாங்க், ‘பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்றால், அங்கே ஜனநாயகம் பின்நோக்கிப் போகிறதென்று பொருள்’என்கிறார்.

‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற ஆன் சாங் சூ கி, பத்திரிகையாளர் கைது குறித்து பேசியபோது, “அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதற்காக கைது செய்யப்படவில்லை. அரசு ரகசியத்தை வெளியிட்டதற்காகவே இந்த தண்டனை. பத்திரிகை சுதந்திரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்கிறார்.

நாட்டின் தலைவராக உள்ள ஒருவர் இத்தகைய கருத்தை உதிர்த்ததற்காக பத்திரிகையாளர்கள் விமர்சித்திருக்கின்றனர். மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை நோக்கத்துடன் 7 லட்சம் ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்பட்டதாக கடந்த மாதம் வெளியான ஐ.நா அறிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கைதான பத்திரிகையாளர்களை விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில், ‘படுகொலை அரசின் ரகசியமல்ல’; ‘உண்மையைச் சொல்வது குற்றமாகாது’ போன்ற வாக்கியங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

“இங்கே என்ன நடக்கிறது என்பதை உலகுக்குச் சொல்ல, பத்திரிகையாளர்கள் தேவை. அவர்கள் இல்லாமல் நாங்கள் கண்களையும் காதுகளையும் இழந்த முட்டாள் மனிதர்களைப் போலாகிவிடுவோம்” என்கிறார் முழக்கமிட்ட பத்திரிகையாளர் ஒருவர்.

  • ரோஹிங்கியா : உலகம் அறிந்திராத இனப்படுகொலை ! ஆவணப்படம்

மேலும் :

அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க