ளைகுடா கத்தார் நாட்டைச் சேர்ந்த அல் ஜசிரா தொலைக்காட்சி சானலை தடை செய்திருக்கிறது மோடி அரசு ! உள்துறை அமைச்சகம் அந்த தொலைக்காட்சிக்கான பாதுகாப்பு அனுமதியை திரும்பப் பெற்றிருக்கிறது. அல்லது ரத்து செய்திருக்கிறது.

அல் ஜசீரா ஏதோ காமோ சோமோ சானல் அல்ல. சர்வதேச அளவில் புகழ் பெற்ற தொலைக்காட்சி. ஒரு கீழை நாட்டிலிருந்து கொண்டு மேற்குலகின் அலங்கார ஜனநாயகயத்தை முடிந்த மட்டும் கலைத்துப் போடும் தொலைக்காட்சி. வளைகுடாவிலேயே சவுதி போன்ற நாடுகள் கத்தார் நாட்டைச் சேர்ந்த அல்ஜசிராவை தடை செய்ய நினைக்கின்றன. அது போல அமெரிக்காவும் விரும்புகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு என்ன காரணம்?

அதை இன்னும் அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் காஷ்மீர் குறித்த அல்ஜசீராவின் ஆவணப்படங்கள் செய்திகளால் மத்திய அரசு வெறுப்புற்றிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.  அந்த ஆவணப்படங்களால் நாட்டில் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் எனும் ஒரு முழுப் பொய்யைச் சொல்லித்தான் இந்த தடை நியாயப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் எந்த ஒரு தொலைக்காட்சி சானலும் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் ஒளிபரப்பு உரிமம் வாங்கியே செயல்பட முடியும். ஆனால் உள்துறை அமைச்சகம்தான் பாதுகாப்பு அனுமதியை வழங்குகிறது. ஆகவே உள்துறை அமைச்சகம் அதை ரத்து செய்யும் போது செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒன்றும் செய்ய இயலாது.உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி அல்ஜசீராவிற்கு டிசம்பர் 3, 2010-இல் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டு மே 29, 2018 ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உள்நாட்டு ஊடகங்களில் தன்னைப் பற்றி உண்மைச் செய்திகளையும், விமரிசனங்களையும், அம்பலப்படுத்தல்களையும் யாராவது செய்தால் அவர்களை வேலையை விட்டு தூக்குவது, நிர்வாகத்தை மிரட்டுவது போன்றவற்றை செய்யும் மோடி அரசு, அல் ஜசீரா போன்ற தொலைக்காட்சிகளுக்கு அனுமதியையே மறுக்கிறது.

வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.

காஷ்மீர் மக்களது குரல் எங்கேயும் பதிவு செய்யக் கூடாது என மத்திய அரசு வெறி பிடித்து அலைவதன் மற்றுமொரு வெளிப்பாடே இந்தத் தடை! அங்கே சென்ற ஆண்டில் பெல்லட் குண்டுகள் தாக்கி பல நூறு மக்கள், குழந்தைகள் பார்வை இழந்து தவித்த போது அதை அல்ஜசிராதான் ஆவணப்படுத்தியது.

மழலைகளின் துயரை பதிவு செய்தால் அதைப் பார்த்து மோடி அரசு சும்மா இருக்குமா?

அல் ஜசீரா மீதான தடை என்பது காஷ்மர் மக்கள் மீதான ஒடுக்குமுறையாகவும் நீள்கிறது.

காஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
அல் ஜசீரா தொலைக்காட்சி தடை நீக்க குரல் கொடுப்போம்!

  • வினவு செய்திப் பிரிவு.