பந்தய மூலதனம் – 6

பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும், நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

திர்காலத்தில் தானும் வணிக பத்திரிகைகளில் பேசப்படும் தொழிலதிபராக ஆகி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்வதற்கு பிரகாஷ் என்ன பாடு படுகிறார் என்று பார்ப்போம். இது போல ஓடும் 1,00,000 பிரகாஷ்களில் ஒருவர் இன்ஃபோசிஸ் போல வளர்ந்தால் அதுவே பெரிய விஷயம்.

விலை ’ப்ரப்போசலை’ அனுப்பி 2 நாட்களுக்குப் பிறகு செல்லமணி கம்பெனிக்கு தொலைபேசினால் மாசிலாமணி. “என்ன சாரை பார்க்கணுமா? இல்ல சார், அவரு ரொம்ப பிசி. நேத்தைக்குத்தான் கோயம்புத்தூர் போய்ட்டு வந்தார். அடுத்த வாரம் ஜெர்மனிக்கு போகப் போறார். ஒரு ரெண்டு வாரம் கழிச்சு கூப்பிடுங்களேன்”

“இல்ல சார், போன வாரமே சாரை பார்த்து பேசி, விபரம் எல்லாம் அனுப்பிட்டேன். உடனேயே முடிவு பண்ணணும். நீங்க ஒரு தடவை ராமமூர்த்தி சார் கிட்ட கேட்டிருங்களேன். இல்ல அவர் நம்பர கொடுங்க நானே பேசிர்றேன்.”

“என்ன சார், சொன்ன கேக்க மாட்டீங்களா? சரி, சரி கேட்டுட்டு நானே லைன்ல வர்றேன்”.

அடுத்த நாள் போய்ப் பார்க்க, நேரம் வாங்கிக் கொள்கிறார்.

அடுத்த நாள் சந்திப்பில் ராமமூர்த்தி தயாராக இருக்கிறார். “என்னப்பா, நீங்க யூஸ் பண்ற சாஃப்ட்வேர்ல வேலை செய்ய நிறைய பேரு கிடைக்க மாட்டாங்களாமே?” “மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலையை முடிச்சி கொடுத்துட்டீங்களா” என்று ஆரம்பித்து பல கேள்விகளை கேட்டு விட்டு இன்னும் சில புதிய தேவைகளையும் சொல்லி விட்டு, விலை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

“என்னப்பா, 30 லட்சம் எல்லாம் இதுக்கு அதிகம்பா. நான் ஏதோ 2-3 லட்சம் இருக்கும், வாங்கி பார்க்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா ஒரேயடியா 30 லட்சம்னு போட்டு அனுப்பியிருக்க” என்று ஒரு கொக்கியை போடுகிறார்.

“இல்ல சார், இதைச் செய்து முடிக்கிறதுக்கு 1 வருசம் ஆகிடும். எல்லா செலவையும் சேர்த்துதான் கணக்கு போட்டு சொல்லியிருக்கேன்.”

“எல்லாச் செலவையும் என்கிட்டையே வாங்கிடலாம்னு பார்க்கக் கூடாதுப்பா. முன்னேயே நான் சொன்னது போல எங்களுக்கு செஞ்சு கொடுத்தா பல பேர் வாங்க வருவாங்க. அப்படித்தான் யோசிக்கணும்”

ராமமூர்த்தியைப் பொறுத்தவரை செல்லமணி கம்பெனியின் ஆண்டு விற்பனை ரூ 100 கோடி. அதில் எல்லா செலவுகளும் போக சுமார் 10 கோடி லாபம் வருகிறது. இதில் தொழிலில் புதிதாக முதலீடு செய்வதற்கு வருசத்துக்கு ரூ 7-8 கோடி வரை ஒதுக்குவார்கள். தொழிற்சாலை எந்திரங்கள், வண்டிகள், கட்டிடங்கள் என்று முக்கியமான முதலீடுகள் போக மென்பொருளுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற ஒரு கணக்கு உண்டு. ஒரு மென்பொருளுக்கு 30 லட்சம் அந்த வகையில் பெரிய தொகைதான். இதுவரை இவ்வளவு முதலீடு மென்பொருளுக்கு செய்ததில்லை. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், இதே சாஃப்ட்வேரை இவ்வளவு செலவு பண்ணி நாமே செய்து கொள்ள முடியுமா என்றும் அவரது புத்தி குறுக்கே ஏர் ஓட்டுகிறது. அவரது தங்கச்சி பையன் ஒருத்தன் காலேஜில் கம்ப்யூட்டர் சைன்ஸ்தான் படிக்கிறான். அவனிடம் விபரம் கேட்டு ஆஃபிஸ்லேயே ஒரு இடம் கொடுத்து நான்கு சாஃப்ட்வேர் பையன்களை ஆளுக்கு 10,000- 12,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து இதை செய்யலாம். ஆனால், பிரகாஷ் போல அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாமல் செய்து முடிப்பது சிரமம். அப்படி ஒரு ஆளை வேலைக்கு எடுக்கப் போனால் லட்சக் கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இதுவே பி.எஸ்.எஸ்-க்கு போட்டியாக இன்னொரு நிறுவனம் விலை ’ப்ரப்போசல்’ கொடுத்திருந்தால் பேரம் பேசுவது ரணகளமாகத்தான் இருக்கும்.

இப்போது அப்படி போட்டிக்கு யாரும் இல்லை, இருந்தாலும் பிரகாஷ்-ஐ கொஞ்சம் மயக்கி எவ்வளவு செலவை குறைக்கலாம் என்று பார்க்க வேண்டும். ஒரு வருசம் ஆகும் என்று சொல்கிறார். அப்படின்னா 8 மாசம்தான் கணக்கு. கம்பெனில 4 பேருதான் வேலைக்கு வைச்சிருக்கிறார். மாசச் செலவு 2 லட்சம் வந்தாலும் 16 லட்சம்தான் செலவு ஆகும். கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு விலை சொல்லியிருக்கிறார் என்று மனக்கணக்கு போட்டுக் கொள்கிறார்.

அதாவது பிரகாஷ் 30 லட்சம் கேட்டதால் பேரம் பேசுகிறார். இதுவே 3 கோடி விலை சொல்லியிருந்தால், திரும்ப அழைத்திருக்கவே மாட்டார். 30 கோடி சொல்லியிருந்தால், காறி துப்பியிருப்பார். ஒரு கம்பெனி ஒரு பொருளை செய்து கொடுக்க முடிந்தால் அதனோடு போட்டி போட்டு அதே பொருளை செய்து விற்க பிறர் இருப்பது வரை செலவை விட பெரிய அளவு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட முடியாது.

ஒப்பந்தங்கள், லைசன்சுகள், தனித்திறமை இவற்றின் மூலம் போட்டிக்கு யாரும் வராதபடி தடுத்தால்தான் விலையை உயர்த்தி பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும். அப்படி லாபம் சம்பாதிக்கும் வகையில் பிராண்ட் ஏகபோகம், புதிய தொழில்நுட்பம், கனிம வளங்களுக்கான லைசன்ஸ் அல்லது அரசியல் தொடர்பு போன்றவற்றை வைத்திருக்கும் கம்பெனி மீதுதான் பங்குச் சந்தை பந்தயம் கட்டுவது நடைபெறும்.

அத்தகைய நிறுவனங்கள் பிரகாஷ் போன்ற சிறு முதலாளிகளிடமிருந்து அடி மாட்டு விலைக்கு சரக்குகளை வாங்குவதன் மூலமும் தமது ஏகபோக லாபத்தை அதிகரித்துக் கொள்ளும்.  ராமமூர்த்தியின் பேரம் எப்படி போகிறது என்று பார்ப்போம்.

“எல்லாம் புரியுதுப்பா, இப்போ எங்க பட்ஜெட்ல 5 லட்சத்துக்கு மேல போக முடியாது. கொஞ்சம் கணக்கு பார்த்து சரியா விலை சொல்லுப்பா”

“சரி சார், நீங்க இவ்வளவு சொல்றீங்களேன்னு நான் 25 லட்சத்துக்கு செய்றேன். எங்களுக்கு நஷ்டம்தான். ஆனா, நீங்க ராஜலட்சுமி கம்பெனிக்கும், வெற்றி என்டர்பிரைசஸ்க்கும் என்னை அறிமுகம் பண்ணி வெச்சிருங்க. அவங்க உங்க ஃபிரெண்ட்ஸ்னு கேள்விப்பட்டேன்.” – சரி லாபம் வேணாம், ஆகிற செலவு வந்தா போதும்னு விட்டுக் கொடுத்தாலும் 25 லட்சம் வேணும் – இது பிரகாஷ் கணக்கு. சம்பளம், அலுவலக வாடகை, நம்ம செலவு எல்லாம் சமாளிக்க இது போகும்.

“அது எப்படிப்பா உனக்கு நான் மார்க்கெட்டிங் பண்ண முடியும். சரி, நான் அவங்ககிட்ட ஒரு வார்த்த சொல்றேன். ஆனா 25 லட்சம்லாம் தர முடியாது. எங்க பார்ட்னர்கிட்ட பேசி பட்ஜெட்ட ரெண்டு மடங்காக்க பார்க்கிறேன். 10 லட்சம் வாங்கிக்கோ, பேசி முடிச்சிருவோம். 25 லட்சம்லாம் எங்கேயோ நிக்குது. நாங்க எல்லாம் சாதாரண ஆளுங்கப்பா, நீங்க வேலை பார்த்த கம்பெனியோட அமெரிக்கா, ஐரோப்பா கஸ்டமர் போல நினைச்சு விலை சொல்லாதீங்க”.

எதிர்பாராத ரிஸ்குக்கு ஒதுக்கின 2 மாதங்களை கழிச்சிட்டா கூட 20 லட்சம் வருது. கொஞ்சம் டைட்டா இழுத்து பிடிச்சி, பசங்களை உற்சாகப்படுத்தி, நாமளும் இறங்கி வேலை செஞ்சா முடிச்சிரலாம். இவரு சொல்ற மாதிரி இங்க புராஜக்ட முடிச்சா நிறைய ஆர்டர் கிடைக்கத்தான் செய்யும்.

“அவ்வளவு குறைச்சா எப்படி சார். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி பண்ணினா 20 லட்சம் வரை குறைக்கலாம் சார், அதுக்கு மேல முடியாது.”

“சரிப்பா, நீ இவ்வளவு சொல்ற, புரியுது. ஒரேயடியா 12 லட்சத்துக்கு முடிச்சிறலாம். இதுக்கே என் பார்ட்னர் என்னை வறுத்து எடுத்துருவார். மன்னார் கம்பெனி ஓனர் ரெக்கமன்ட் பண்ணினார்னுதான் நான் இவ்வளவு இறங்கி வர்றேன். இதைச் செய்து முடி, இன்னும் அடுத்த ஆர்டர் கூட நம்ம கம்பெனியிலேயே கிடைக்கும், இன்னும் நிறைய இடங்கள்ள ஆர்டர் வாங்கலாம். இதில செய்ய முடியும்னா சொல்லு, இல்லைன்னா அப்புறமா பார்த்துக்கலாம். நம்ம பட்ஜெட் முடிஞ்சு போச்சு”

“கொஞ்சம் யோசிச்சுட்டு சொல்றேன் சார். நாளைக்கு உங்களுக்கு கன்ஃபர்ம் பண்றேன்” என்று விடைபெறுகிறார் பிரகாஷ்.

பிரகாஷூம் ஓலா வாடகை வண்டி சேவை நிறுவனம் போலவோ, இணைய விற்பனை நிறுவனம் ஃபிளிப்கார்ட் போலவோ, ஸ்விக்கி உணவு வழங்கல் சேவை நிறுவனம் போலவோ “நஷ்டமானாலும் பரவாயில்லை” என்று வாடிக்கையாளரை குளிப்பாட்டுவதற்கு என்ன தேவை? அது பிரகாஷிடம் உள்ளதா?

(தொடரும்)
நன்றி : new-democrats

தொடரின் முந்தைய பாகங்கள்:
பங்குச் சந்தை என்றால் என்ன ? – பாகம் 1
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?
பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

2 மறுமொழிகள்

  1. இதற்கு அடுத்த பதிப்பு வேண்டும்.. இல்லை புத்தகமாக கிடைக்குமா

    • இந்தத் தொடர் New Democrats எனும் தோழமை இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு வெளியிடப்பட்டது. அந்த பகுதிக்குப் பின்னர் அவ்விணையதளத்தில் அந்த தொடர் வராதநிலையில் இங்கும் அதன் தொடர்ச்சியை வெளியிட முடியவில்லை. இத்தொடர் புத்தகமாக வரவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

      நன்றி !

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க