பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
டந்த ஒரு வாரமாக இந்திய #metoo இயக்கம் பல பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கிறது. பல ‘பெரிய’ மனிதர்களின் நாற்றமடிக்கும் நடவடிக்கைகள் குமட்டலை வரவைத்துக்கொண்டிருக்கின்றன. கூடவே, மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றன. பத்திரிகையாளராக நானும்கூட இத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறேன். நேரிடையான பாலியல் அத்துமீறலாக அவை இல்லாவிட்டாலும் பெண் என்பதாலேயே என்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், எனக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை வினவு தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே, #metoo இயக்கத்தின் ஊடாக ஒலிக்கும் குரல்களில் என்னைப் பார்க்கிறேன். அவர்களின் வலியை உணர்கிறேன்.

இன்று பிரபலமாக இருக்கும் ஒருவருக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டு என்பதால் ஊடக முக்கியத்துவம் கிடைக்கிறது அல்லது குற்றம் சொல்பவர்களுக்கு ஏதோ ஒரு அரசியல் திட்டம் இருக்கிறது என்பதையும் கடந்து #metoo இயக்கம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான சம உரிமை போராட்டத்தில் முக்கிய நகர்வினை ஏற்படுத்தும் என்பது என்னுடைய அவதானிப்பு.

பாலிவுட்டில் #metoo இயக்கம்

ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முப்பதுக்கும் அதிகமான பெண்கள் சொன்னபோது #metoo இயக்கம் உலக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்தியாவிலும் அதுகுறித்து பேச்சுக்கள் எழுந்தன. நடிகர் தனுஸ்ரீ தத்தா தனக்கு நடிகர் நானா பட்டேகரால் ஏற்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து  பேசிய பிறகே, மற்ற பெண்களும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். ‘அரசியல்’செல்வாக்கு மிக்க நடிகரான நானா பட்டேகர், இந்தி பட ஷுட்டிங்கின்போது தன் விருப்பத்துக்கு மாறாக தொட்டதும் அதை விரும்பாத நிலையில் படக்குழுவினரை வைத்து பணிய வைக்கப்பார்த்தது குறித்தும் அடுத்தக்கட்டமாக ‘நவநிர்மாண் சேனா’ என்கிற குண்டர் படையை வைத்து தன் காரின் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும் தனுஸ்ரீ தத்தா பகிர்ந்திருந்தார். அதன்பிறகு, நானா பட்டேகருடன் நடித்துக்கொண்டிருந்த படத்திலிருந்து விலகியதையும் தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சொல்லியிருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை #metoo இயக்கம் வழியாக இப்போது வெளிக்கொண்டுவந்தார் தனுஸ்ரீ. இது ஊடக விவாதமாகி, அப்போது நானா பட்டேகர் மீது பதியப்படாத வழக்கு, இப்போது பதியப்பட்டிருக்கிறது.

நானா பட்டேகர், தனுஸ்ரீ தத்தா.

இதன் பின், ஏராளமான பாலிவுட் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை, சில பாலியல் வன்கொடுமைகளை, ஒடுக்குமுறைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். பாலிவுட்டின் ‘மிக நல்ல அப்பா’ என புகழப்பட்ட நடிகர் அலோக் நாத், தன்னுடைய மகளாக படத்தில் நடித்த நடிகரை எப்படி பாலியல் பண்டமாக பார்த்தார் என்பது வெளியே வந்தது. ’குயின்’ என்ற பெண்ணிய புரட்சி படத்தை இயக்கிய விகாஸ் பால், நிதர்சனத்தில் ஒரு ரேப்பிஸ்ட் என்கிற விஷயம் வெளியே வந்தது. இயக்குநர்கள் சுபாஷ் கய், சுபாஷ் கபூர், சஜித் கான், டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார், இசையமைப்பாளர் அனு மாலிக், பாடகர் கைலாஷ் கர் என பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் அதிகாரத்தில் இருக்கிற ஆண்கள். தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு பெண்களை வேட்டையாடுவதை பகுதி நேர வேலையாக பார்த்தவர்கள் என்பது பல பெண்களின் குற்றச்சாட்டுக்களின் மூலமாக அறிய முடிகிறது.

இந்திய ஊடகவியாளர்களின் ஆணாதிக்க முகம்

தங்களுடைய பணியிடத்தில் ஏற்பட்ட பாலியல் ஒடுக்குமுறைகளை இந்தி பட உலக பெண்கள் பட்டியலிட தொடங்கியபோது, ஊடக பெண்கள் மெதுவாக பேச ஆரம்பித்தார்கள். ஊடக உலகில் ஜாம்பவான்களாக இருந்தவர்களின் ஆணாதிக்க முகம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியரும் இப்போது மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராக உள்ளவருமான எம்.ஜே. அக்பர் மீது 14 ஊடக பெண்கள் நேரிடையாக பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை கூறினர். இத்தனை பெண்களின் கூற்றிலிருந்து எம். ஜே. அக்பர், பணிக்கும் வரும் பெண்களை ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண்களை ஒடுக்கி வந்திருக்கிறார்.

எம்.ஜே.அக்பர்

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை.

எம்.ஜே. அக்பர் என்னும் ஜென்டில்மேன் அமைச்சர், பத்திரிகையாளராக இருந்தபோது, கஜாலா வகாப் என்ற பத்திரிகையாளரை எப்படி ஒடுக்கினார் என்பதைக் கேளுங்கள்…

“டெல்லிக்கு அருகே ஒரு சிறிய நகரத்திலிருந்து ஊடகப்பணிக்கு வந்தவள் நான். எங்கள் குடும்பத்தில் பெண்களை பணிக்கு அனுப்புவது நடக்காத விஷயம். நான் தான் முதன் முதலில் ஊடகப்பணிக்கு வந்தேன். எம். ஜே. அக்பரின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு அவரைப் போல பத்திரிகையாளராக வேண்டும் என பத்திரிகை தொடர்பான படிப்பைப் படித்தேன். எதிர்பாராத விதமாக அவர் பணியாற்றிய ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையிலேயே எனக்கு பயிற்சியாளர் பணியும் கிடைத்தது.

படிக்க:
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!

பணிக்கு சேர்ந்த பிறகு, எம்.ஜே. அக்பர் எப்படிப்பட்ட நபர் என தெரிந்துகொண்டேன். தொடக்கத்தில் வேண்டாத குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். தேவையில்லாமல் தன்னுடைய அறைக்கு அழைப்பதை அடுத்த கட்டமாக செய்தார். அவர் பத்தி எழுதுவதற்காக என்னை டிக்‌ஷனரி பார்த்து வார்த்தைகளை சொல்லச் சொல்வார். அதாவது, அவர் முன்பாக என்னை மணிக்கணக்கில் உட்கார வைக்க வேண்டும் என்பதற்காக. இறுதியாக, வெளியேற முடியாத இடத்தில் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.” என்கிறார் கஜாலா. ஒருகட்டத்தில் தன்னுடைய பாலியல் அத்துமீறலுக்கு ‘காதல்’ சாயம் அடிக்க முயற்சித்திருக்கிறார் அக்பர்.

‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகை அலுவலகம் ‘அக்பரின் அந்தப்புரம்’ என பத்திரிகை வட்டாரத்தில் அழைக்கப்பட்டதாகவும் பத்திரிகையின் கிளை அலுவலகங்கள் தோறும் அக்பருக்கு காதலிகள் இருந்ததாகவும் சொல்கிறார் கஜாலா. அக்பரின் காதலிகள் பட்டியலில் தன்னால் ஒருபோதும் இணைய முடியாது என முடிவெடுத்த கஜாலா, தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதன்பிறகும் அக்பரின் பின் தொடர்தல் தொடர்ந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் வேறு பத்திரிகையில் பணி தேடுவதை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார் கஜாலா.

பத்திரிகை துறையில் பணியாற்றும் கனவோடு நுழைந்தவருக்கு அக்பர் என்ற வேட்டையாடியால் ஏற்பட்ட பதட்டம் ஒருபுறம் ஆறுதலுக்காக தனது வீட்டாரிடம் நடந்ததை சொல்லக்கூட முடியாத நிலை இன்னொரு புறம். சொன்னால் இனி இந்த வேலையே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். மகளின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவருடைய குடும்பம், மீண்டும் அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

“எங்கள் குடும்பத்தில் படித்து முடித்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். நான் அப்படியிருக்க விரும்பவில்லை. என் அப்பாவிடமிருந்து பணம் பெறுவதைக்கூட நான் விரும்பவில்லை. குடும்பத்துக்குள்ளேயே பாகுபாட்டுக்கு எதிராக போராடியிருக்கிறேன். நான் மதிப்பிற்குரிய பத்திரிகையாளராக பணியாற்ற விரும்பினேன்.” என்கிற கஜாலா,

“கடந்த 21 வருடங்களாக, இதை எனக்குள்ளே வைத்திருந்தேன். நான் பாதிக்கப்பட்டவளாக இருக்க விரும்பவில்லை. அதோடு, ஒரு அரக்கத்தனமான மிருகம், என்னுடைய பணிவாழ்க்கையை கெடுக்க விடக்கூடாது என்கிற எண்ணத்தில் நான் மீண்டு வந்தேன். அப்போதும்கூட அவ்வவ்போது அந்த கொடுங்கனவு நினைவில் வந்துபோகும். இனி அந்தக் கொடுங்கனவு வராது” என வெடித்திருக்கிறார் கஜாலா. தற்சமயம் ‘ஃபோர்ஸ்’ என்கிற இதழில் பணியாற்றுகிறார்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

பிரியா ரமணி, கஜாலா வகாப், சபா நக்வீ உள்ளிட்ட 14 பேர்கள் அக்பர் மீது குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அக்பரோ இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்கிறார். அக்பரின் நடவடிக்கைகளை டெல்லி பத்திரிகை வட்டாரம் நன்றாக அறியும் என அவருடன் பணிபுரியாத பல பெண்களும் தெரிவிக்கிறார்கள். ஆனால், விரைவில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் மறைமுக திட்டத்தோடு தன்னைப் பற்றிய கதைகளை சில திட்டமிட்டு சொல்வதாகச் சொல்கிறார் அக்பர்.  பெயரோடு வெளியே வந்த 14 பேரின் குற்றச்சாட்டுகளை ஒரே அடியாக தேர்தலோடு முடிச்சு போடுகிறார். முதலமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணை நோட்டமிட்ட மோடி-அமித் ஷா கும்பலில் சேர்ந்தவரிடம் ராஜினாமாவையா எதிர்ப்பார்க்க முடியும்?  அமைச்சரவையின் காலம் விரைவில் முடிய இருக்கும் நிலையிலும்கூட இத்தனை பெண்களின் நேரடியான குற்றச்சாட்டுக்கு ஆளானோம் என்கிற உறுத்தலில் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால், இறுதிவரை பதவியில் அமர்ந்துகொண்டு அதிகார திமிரை காட்ட விரும்புகிறார் எம். ஜே. அக்பர்.  வழக்கு ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக சொன்ன அக்பருக்கு, இறுதிவரை நின்று நாங்களும் போராடுவோம் என பதிலடி தந்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் பிரசாந்த் ஜா (வலது மேல்), மாயங்க் ஜெயின் (இடது மேல்), கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் (இடது கீழ்), அனுராக் வர்மா (வலது கீழ்), கவுதம் அதிகாரி (நடுவில்)

ஊடகத்துறையில் எம். ஜே. அக்பர் மட்டுமல்ல பல அதிகார ஆண் திமிர் பிடித்த நபர்களின் முகங்களும் வெளிவந்துள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஹைதாராபாத் பதிப்பின் ஆசிரியர் கே. ஆர். ஸ்ரீனிவாஸ், டி.என். ஏ. மும்பை பதிப்பின் ஆசிரியர் கவுதம் அதிகாரி, ஹிந்துஸ்தான் டைம்ஸின் மனோஜ் ராமச்சந்திரன், அதே நாளிதழின் ஆசிரியர் பிரசாந்த் ஜா, பிஸினஸ் ஸ்டாண்டர்ஸ் நாளிதழின் மயானக் ஜெயின், ஹஃபிங்டன் போஸ்டின் அனுராக் வர்மா என பல பத்திரிகையாளர்களின் நடத்தைகள் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் பெண்கள். இதில் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவும் அடக்கம்.

ஆண்-அதிகார திமிரின் பொதுவான குணம்!

தனுஸ்ரீ, கஜாலா என பாதிக்கப்பட்ட பெண்கள் பலருடைய கூற்றுக்களிலிருந்து இந்த வேட்டையாடிகளுக்கு இடையே பொதுவான குணங்கள் உள்ளதைப் பார்க்க முடியும். முதலில் இவர்கள் அக்கறை உள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு பெண்களை நெருங்குவார்கள். அது பலன்கொடுக்காத நிலையில், நேரடியான அணுகுமுறையில் இறங்குவார்கள். அதுவும் பலன்கொடுக்காத நிலையில், அந்தப் பெண்ணின் பணி வாழ்க்கையை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குவார்கள். குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக சொல்லும்போது அந்தப் பெண்ணின் மீது திறமையின்மையை சுட்டிக்காட்டுவார்கள். இல்லையெனில் முழுவதுமாக மறுப்பார்கள்.

ஆனந்த விகடன் அலுவலகத்தில் எனக்கும் இதுதான் நேர்ந்தது. அப்போதைய ஆசிரியர், ‘சரியாக வேலை செய்வதில்லை, தனி தீவாக இருக்கிறார்’ எனக் காரணம் கூறி ஒரே நாளில் பணிநீக்கம் செய்ய நிர்வாகத்திடம் பேசினார். என்னைப்பற்றிய விமர்சனமோ, ஆய்வோ எனது எழுத்துக்கள் – பணி குறித்து இருக்க வேண்டும். மாறாக இந்த ‘தனித்து’ இருந்தார் என்பது என்ன? அவர் பேசியதற்கு முந்தைய வாரம் வரை என்னுடைய கட்டுரை கவர் ஸ்டோரியாக வந்தது, பிற கட்டுரைகளும் வந்தன. அடுத்த வாரத்தில் என்னுடைய கட்டுரைகள் அச்சில் ஏறாமல் பார்த்துக்கொள்ளப்பட்டன. என்னை பணிநீக்கும் முடிவை கேள்விப்பட்டு, நானே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினேன். அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து பெயர் போடாமல் நான் எழுதிய சில கட்டுரைகள் வெளியாகின.

’குங்குமம்’ இதழில் நான் எழுதியதை பார்த்துவிட்டு, அழைத்த அதே ஆனந்த விகடன் ஆசிரியர்தான் நான் பணிசெய்யவில்லை என குற்றம்சாட்டி வெளியேற்ற முயற்சித்தார்.  கையை பிடித்து இழுத்தாரா, ஆபாச எஸ்.எம். எஸ். அனுப்பினாரா என சிலர் கேட்பார்கள். இவை மட்டும் பாலியல் ஒடுக்குமுறைகள் அல்ல.  பெண் என்பதாலேயே சில ‘எதிர்பார்ப்புகளை’ வைத்துக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என நினைப்பதும் அதன்படி இணங்காதவர்களை ஓரம்கட்டுவதும் பாலியல் ஒடுக்குமுறையே. சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் இதுதான் எனக்கு நடந்தது.

குற்றச்சாட்டும் விளைவுகளும்

 25 ஆண்டுகள் ஆன பின்னும் கூட தனக்கு நடந்த உடல்ரீதியிலான, மனதளவிலான ஒடுக்குமுறை ஏன் பெண்கள் சொல்கிறார்கள்? ஒவ்வொரு குற்றச்சாட்டு வெளியான பின்பும் சமூக ஊடகங்களில் இந்தக் கேள்வி தவறாமல் முன்வைக்கப்படுகிறது. முதலாவதாக, நீங்கள் பொழுதைப் போக்க நாங்கள் எங்களுடைய பாடுகளை எழுதவில்லை. பணியிடத்தில் ஒரு ஆணுக்கு இருக்கும் அதே சுதந்திரமும் இடமும் பெண்ணுக்கும் வேண்டும் என்கிற சமத்துவத்துவக்கான போராட்டம் இது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டிலும் அடுத்து வருகிற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற கடமையும் எங்களுக்கு உண்டு.

படிக்க:
இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

#metoo இயக்கத்தால் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆண்கள் சமூகத்தின் அவமானத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தங்கள் பணியிடங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். நோபல் இலக்கிய தேர்வு குழுவில் இருந்தவர் இத்தகைய குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், இந்த ஆண்டு பரிசு அறிவிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் தேர்வு குழுவில் இருந்தவரை நீக்கியிருக்கிறார்கள். பாலிவுட்டிலும்கூட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என நந்திதா தாஸ், ஜோதா அக்தர் உள்ளிட்ட 11 பெண் படைப்பாளிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அமீர் கானும் அனுராக் காஷ்யப்-உம் குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என்கிறார்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளான பத்திரிகையாளர் வினோத் துவாவின் மகள், #metoo இயக்கத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்கிறார். தன் தம்பி சஜித் கான் மீது குற்றம்சொல்லப்பட்டுள்ள நிலையில், #metoo இயக்கத்தை ஆதரிக்கிறார் ஃபரா கான்.

உரிமைக்கான போராட்டத்தை ‘mistress’ பிரச்சினையாகப் பார்க்கும் தமிழக ஜீவிகள்!

உலகம் முழுமைக்கும் ஆதரிக்கப்படும் ஒரு இயக்கம், வடக்கில் இருப்பவர்களையும் சிந்திக்க வைத்திருக்கும் இயக்கம், தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு ‘mistress’ பிரச்சினையாகப்படுகிறது. அதாவது வைப்பாட்டி பிரச்சினை. அதாவது, தனது சொந்த நலன்களுக்காக ஆண்களை பயன்படுத்திக்கொண்டு, இறுதியில் அவர்கள் மீதே 10, 15 ஆண்டுகள் கழித்த பிறகு குற்றம்சாட்டுகிறார்களாம். அதில் ஒரு அறிவுஜீவி எழுதுகிறார், ஆணுறுப்பை கடித்து துப்பும் வாய்ப்பிருந்து, நன்றாக….. விட்டு, இப்போது குற்றம்சாட்டுகிறார்களாம்! ஒன்றை இவர்கள் புரிந்துகொள்வதேயில்லை, ஆண்களை பயன்படுத்திக்கொள்ளும் எந்த பெண்ணும் வெளியே வந்து குற்றச்சாட்டை பெரும்பாலும் சொல்வதில்லை. ஆனால் நேர்மையாக வாழ முனைந்து, அப்படிக் கிடைத்த பணியின் மீதான கனவை சிதைக்கும் ஆண்கள் மீதுதான் குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.

எளிய பின்னணியில் பிறந்து, முதல் தலைமுறையாகப் படித்து பட்டம் பெற்று, பணியில் சேர்ந்து பொருளீட்டி சுயமுடன் வாழ நகரம் நோக்கி வருகிற ஆண்களுக்கு இருக்கும் அதே கனவு, பெண்களுக்கும் இருக்கும். பெண்கள் படிக்கக்கூடாது; அப்படி படித்தாலும் வேலைக்குப் போகக்கூடாது; அப்படியே வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு போகக்கூடாது; மீறி போனாலும் குழந்தை பிறந்தவுடன் வீட்டில் முடங்கிவிட வேண்டும். அதன் பிறகு, பெண்களின் மூளை வேலை செய்யாது என்பது இவர்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள சிந்தினை. இந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் உரிமைக்கான பிரச்சினையை ‘வைப்பாட்டி’ பிரச்சினையாக திரித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வார காலமாக தமிழ் முகநூல் பக்கங்களில் சில எழுத்தாளர்கள் எழுதிவரும் பதிவுகளைப் பார்த்தால், இவர்களையா இத்தனை நாளும் முற்போக்காளர்கள் என நினைத்துக்கொண்டிருந்தோம் என குமட்டத்தோன்றுகிறது.  மூத்த அறிவுஜீவி சுப.வீ. ‘சார் ஒரு கம்ப்ளைண்ட்…ஆனா, அது நடந்தது 16 வருஷத்துக்கு முன்ன” என மூன்றாம் தர ஜோக் அடிக்கிறார். மூத்தவரே சொல்லிவிட்டார் அல்லவா, இளையவர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்து லிஸ்ட்ல யாரு என நாக்கை தொங்கவிட்டு கேட்கிறார்கள்.  இத்தனை வருசம் ஆகியும் நம்ம மேல யாரும் மீ டு குற்றச்சாட்டு சொல்லவில்லை என அங்கலாய்க்கிறார்கள். பாலியல் கதைகளை எழுதி தங்களுடைய மன வக்கிரங்களை சொரிந்து கொள்கிறார்கள். எனக்குள்ளதெல்லாம் ஒரு எளிமையான கேள்வி இவர்களுடைய மனைவி, குழந்தைகள், சகோதரிகளும்கூட இப்படி பாதிக்கப்படலாம். அப்படி பாதிக்கப்பட்டாலும் இவர்கள் இப்படித்தான் பாலியல் கதைகளாக எழுதுவார்களா?

தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியா சின்மயி?

இந்தியர்களுக்கு பார்ப்பனீயத்தின் மீது உள்ளுக்குள்ளே அதீத கவர்ச்சி உண்டு. பார்ப்பனர்கள் பிறப்பிலேயே அறிவுஜீவிகள், பார்ப்பனர்கள் வாழ்க்கை முறையே சிறந்தது என பட்டியல் நீளும். ஆண்களுக்கு பார்ப்பனப் பெண்கள் மீதான ஆர்வமும் அதிகம். எங்களைப் போன்ற பெண்கள் எழுப்பும் எந்தக் குரலும் இவர்களுக்கு ஆழமான கிணற்றில் கத்திக் கொண்டிருக்கும் தவளையின் சத்தமாகத்தான் கேட்கும். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதற்காக அவருடைய குற்றச்சாட்டெல்லாம் ஜோடிக்கப்பட்டதாக இருக்கும் எனவும் அது திராவிட-ஆரிய சிந்தாந்தங்களின் மோதலாக பார்க்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?, #metoo இயக்கம் என்பது சின்மயி Vs வைரமுத்து என திரிக்கப்படுவது பணியிடத்தில் சமத்துவம் கோரும் பெண்களின் போராட்டத்துக்கு செய்யும் அவமரியாதை.  அதை திராவிட அரசியல் பேசும் நபர்கள், ஆதரவாளர்கள் ஏன் செய்கிறார்கள்? இதை தெரிந்தேதான் இவர்கள் செய்கிறார்களா? மேலும் சின்மயி தமிழ்ப்பெண்களின் பிரதிநிதியும் அல்ல.

ஊடகங்களில் பார்ப்பனப் பெண்களுக்கு சர்வ சாதாரணமாக பணிவாய்ப்புகள் கிடைக்கும். நான் பணியாற்றிய ஒரு பெண்கள் இதழில் என்னுடன் பயிற்சி நிருபராக பணிக்குச் சேர்ந்து தனது திறமையின்மையால் தொடர்ந்து பயிற்சி நிருபராகவே இருத்தி வைக்கப்பட்ட அந்தப் பெண் அதைத் தாங்க முடியாமல் தடாலடியாக ராஜினாமா செய்தார். அவருடைய அந்த நேர உடல்மொழி, அந்த பத்திரிகைக்கே அவர்தான் முதலாளி என்பதாக இருந்தது.

உண்மைதான், நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? பெண்கள் பத்திரிகையில் எழுத லாயக்கில்லாத அவரை, வெகுஜன இதழில் பணிக்கு சேர்த்துக்கொண்டது நிர்வாகம். அந்தப் பெண்ணை வாயில் வரை சென்று அழைத்துவந்தார் அந்தப் பத்திரிகையின் செயல் அதிகாரி. இதெல்லாம் பார்ப்பனப் பெண்களுக்குக் கிடைக்கும் வசதிவாய்ப்புகள் !  அவர் பார்ப்பனர் என்ற ஒன்றே சகல மரியாதைக்கும் போதுமானது.

பார்ப்பன ஊடகங்களில் மட்டுமல்ல, ‘திராவிட’ பின்னணியுள்ள ஊடகங்களில்கூட பார்ப்பனப் பெண்களுக்கு கூடுதலாகவே இடம் கிடைக்கும்! கூடுதலாக மரியாதை கிடைக்கும். குங்குமம் இதழில் எனக்குப் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் வாரம் ஒரு கட்டுரை மட்டுமே வெளியானது. ஒருமுறை ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து சண்டையிட்டபோது, அவர் சொன்ன காரணம், “அவருக்கு சம்பளம் கம்மி, அவர் நிறைய வேலை பார்க்கிறார் என நிர்வாகத்துக்கு காட்ட வேண்டும்” எனவே நான்கைந்து புனைபெயர்களில் வாரம் நான்கைந்து கட்டுரைகள் அந்தப் பெண்ணின் பெயரில் வரும். அவர் பார்ப்பனப் பெண் என்பதும் அவரால் நான்கைந்து கட்டுரைகள் எழுதும் திறமை இருந்ததும் திராவிட ஆசிரியர் குழுவினர் மனதில் ஆழமாக பதிந்துபோயிருந்தது. இவருடைய கட்டுரை ஏன் ஒன்றே ஒன்று மட்டும் வருகிறது? இவருக்கு ஏன் தண்டச் சம்பளம் தரவேண்டும் என நிர்வாகமும் என்னைப் பற்றி கேட்கவில்லை. நானும் எனக்கு ஏன் தண்டச் சம்பளம் தருகிறீர்கள் எனக் கேட்கவில்லை.

பின்புலம் இல்லாமல் ஊடகங்களில் பணியாற்ற வருகிற பெண்களுக்கு திறமையின் அடிப்படையில் பணிவாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாகத்தான் நிகழும். புரபஷனலாக இருக்க நினைக்கும் ஒருசில ஆண்கள் அதற்கு காரணமாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் மனுஸ்மிருதியை கரைத்து குடித்தவர்கள் போல, பணியாற்ற வருகிற பெண்களை வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ’வைப்பாட்டியாக’ பார்க்கிறவர்கள்.

கடந்த ஒரு வார காலமாக சமூக ஊடகங்களை அவதானித்தபோது #MeToo இயக்கத்தை பற்றி ஆண்களுக்கு மூன்று விதமான கருத்து உள்ளதைக் காண முடிந்தது.

1 ) இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலை பேசும்; இதனால் நன்மைகள் விளையும் என நம்புகிறவர்கள். ஆண்களில் இவர்கள் மிகக் குறைவு. அப்படிப்பேசுகிறவர்களில் ஒருசிலர் தாராளவாதம் பேசும் 30-களுக்குள் வயது கொண்ட இளைஞர்கள்.

2) இன்னொரு பிரிவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். இவர்களைப் பற்றி நிறைய எழுதிவிட்டோம். இதில் ஆரிய-திராவிட-வலது-இடது சித்தாந்த வேறுபாடுகள் இல்லை.

3) மூன்றாவது வகையினம் மிக மிக ஆபத்தானது. குற்றம் நடக்கும்போதும் சந்தர்ப்பவாதமாக வாயை மூடிக்கொண்டிருப்பார்கள். குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களை பாதுகாப்பார்கள். குற்றம்சாட்டும் நபர்களே குற்றச்சாட்டுக்கு பொறுப்பாக்குவார்கள். உரிமைப் போராட்டத்தை mistress பிரச்சினை எனக்கூசாமல் எழுதுவார்கள். இவர்களில் ஒரு பிரிவினர், ஆளுநர் பிரச்சினையை திசை திருப்ப இந்தக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது என்கிற சதிக் கோட்பாட்டை முன்வைப்பார்கள். இன்னும் சிலர் ‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா? தலித் பெண்களுக்கு, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை பேச மாட்டீர்களா?’ என கேட்பார்கள். நாங்கள் இதுவரை எதை எழுதிக்கொண்டிருந்தோம் என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு பொருட்டில்லை, நாங்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்கிற பிரக்ஞையும் இல்லை. MeToo ஹாஷ்டேக் போடுகிறவர் எல்லாரும் சின்மயி! பார்ப்பனப் பெண்களுக்கு மட்டுமே குரல் இருக்கும் என்கிற பார்ப்பனியம் புழுத்துப் போன ஆண்களின் மனம்.

படிக்க:
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

மு.வி.நந்தினி

MeToo இயக்கத்தை சின்மயி Vs வைரமுத்து பிரச்சினையாக்கி நீர்க்கச் செய்த ஊடகங்கள், மயிலாப்பூர் பார்ப்பன இசைக்கலைஞர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தோ, ஊடகங்களில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்தோ தவறியும்கூட பேசமாட்டார்கள். எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம்,  ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது. ஆனால், பதட்டம் கொள்கிறவர்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.  கல்விக்காகவும் சொத்துரிமைக்காகவும் கோயில் நுழைவுக்காகவும்  குடும்பங்களில் சம உரிமைக்காகவும் போராடிய நாங்கள், எங்கள் பணியிட உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. போராட்டத்தில் இணைகிறவர்கள் தாராளமாக இணைந்துகொள்ளலாம்.

செய்தி ஆதாரங்கள்:

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.