காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 5)

காந்தியம் ஒரு புரியாப் புதிர். அது அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் வேண்டும் என்கிறது. அதாவது நாட்டின் இப்போதுள்ள அரசியல் கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்கிறது. அதே போது வழிவழியாக வந்த அடிப்படையில் ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை அடக்கி ஆள்வதற்கு, அதாவது ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பை என்றென்றும் நிரந்தரமாய் அடக்கி ஆள்வதற்கு இடமளிக்கிற ஒரு சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்க முயல்கிறது. இந்தப் புதிருக்கு என்ன விளக்கம்? வைதிகமானவர்கள் என்றாலும் வைதிக மற்றவர்கள் என்றாலும் இந்துக்கள் அனைவரின் இடமும் சுயராச்சிய இயக்கத்துக்கு முழுமனதான ஆதரவு திரட்ட காந்தியார் வகுத்த உத்தியின் பகுதிதானா இது? அப்படித்தான் என்றால் காந்தியத்தை நேர்மையானதாகவும் உண்மையுள்ளதாகவும் கருத முடியுமா?

இது ஒரு புறமிருக்க, காந்தியத்தின் இரு கூறுகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடியவை. ஆனால் அந்தக் கூறுகள் குறித்து இது வரை கவனம் செலுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அவை மார்க்சியத்தைக் காட்டிலும் காந்தியத்தை அதிகம் ஏற்புடையதாக்குமா என்பது வேறு விவகாரம். ஆனால் மார்க்சியத்திலிருந்து காந்தியத்தை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறவை என்பதால் அந்தக் கூறுகளைக் குறிப்பிடுவது நன்று.

காந்தியத்தின் முதலாவது தனிக் கூறு என்னவென்றால்; தத்துவஞானம் உடையவர்கள் தங்களிடமிருப்பதை வைத்துக் கொள்வதற்கும், இல்லாதவர்கள் தாங்கள் அடைய உரிமை படைத்திருப்பதை அடைய விடாமல் தடுப்பதற்கும் அதன் தத்துவஞானம் உதவுகிறது. வேலை நிறுத்தங்கள் தொடர்பான காந்தியப் போக்கையும், சாதியிடம் காந்தியம் காட்டுகிற பயபக்தியையும், ஏழைகளின் நன்மைக்காகப் பணக்காரர்கள் பொறுப்பு ஏற்றிருப்பதான காந்தியக் கோட்பாட்டையும் பரிசீலிக்கிற எவரும் இது காந்தியத்தின் விளைவே என்பதை மறுக்க முடியாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்ட விளைவா, தற்செயலாக ஏற்படுகிற ஒன்றா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம், ஆனால் உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.

படிக்க:
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

காந்தியத்தின் இரண்டாவது தனி கூறு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்பாக்கியங்களை நற்பாக்கியங்களிலேயே மிகச் சிறந்தவை என்று காட்டுவதன் மூலம் அவர்களை மயக்கி அவற்றை ஏற்கச் செய்வதாகம், இந்தக் கூற்று உண்மையானது என்பதைக் காட்டுவதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுக்களே போதும்.

இந்துக்கள் புனிதச் சட்டம் சூத்திரர்கள் (நான்காம் வகுப்பிரான இந்துக்கள்) செல்வம் சம்பாதிக்க விடாமல் தடை செய்து தண்டனை விதிக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் அறியப்படாத கட்டாய வறுமைச் சட்டம் இது. காந்தியம் என்ன செய்கிறது? அது இந்தத் தடையை அகற்றுவதில்லை, சொத்தினைக் கைவிடும் மனத் துணிவுக்கான சூத்திரத்தை அது ஆசீர்வதிக்கிறது! காந்தியாரே கூறியதை மேற்கோளாகத் தருவது பொருத்தமானது. அவர் சொல்கிறார்! (1)

உண்மையில் காந்தியம் வசதி படைத்தவர்களின் தத்துவஞானம், உழைக்காமல் ஒய்வெடுக்கும் வர்க்கத்தின் தத்துவ கோட்பாடு என்பதே உண்மை.

– “மதக் கடமை என்ற முறையில் (மேல் சாதியினருக்கு) பணி செய்யும் சூத்திரர்கள், சொந்தமான சொத்து ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். உள்ளபடியே சொத்து எதுவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படவும் மாட்டார்கள்; இவர்களை ஆயிரம் முறை வணங்கி வழிபடுவது தகும். கடவுளர்களே சூத்திரர்கள் மீது பூமாரி பொழிவார்கள். ஆதாரமாகக் காட்டப்படும் இன்னோர் எடுத்துக்காட்டு, கழிப்பறைத் தொழிலாளியின் பால் காந்தியம் மேற்கொள்கிற போக்காகும். தோட்டியான ஒருவரின் வாரிசு தோட்டியாகத்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இந்துக்களின் புனிதச்சட்டம் விதிக்கிறது. இந்து மதத்தில் தோட்டி வேலை கட்டாயமாய்ச் சுமத்தப்படுவதே தவிர விரும்பித் தேர்ந்தெடுப்பது அல்ல (2) காந்தியம் என்ன செய்கிறது? தோட்டி வேலையை சமுதாயத்துக்கு மிகவுயர்ந்த சேவை என்று புகழ்ந்து இந்த ஏற்பாட்டை நிரந்தரமாக்க முயல்கிறது. காந்தியார் கூறியதை எடுத்துக்காட்டுவோம்; தீண்டாத மக்களின் மாநாடு ஒன்றின் தலைவர் என்ற முறையில் காந்தியார் பேசுகையில் சொன்னார். (3)

“நான் மோட்சமடைய விரும்பவில்லை. எனக்கு மறுபிறப்பு வேண்டாம். ஆனால் நான் மறுபடியும் பிறப்பதாக இருந்தால் தீண்டத்தகாதவனாய்ப் பிறக்க வேண்டும்; அவர்களின் வருத்தங்களையும் இன்னல்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் இழிவுகளையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் என்னையும் அவர்களையும் அந்த அவல நிலையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டும்; ஆகவே நான் மறுபடியும் பிறப்பதானால் பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக அல்லது சூத்திரனாகப் பிறக்கக் கூடாது, அதி சூத்திரனாகவே பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்…

“தோட்டி வேலை செய்வதை நான் விரும்புகிறேன். எனது ஆசிரமத்தில், ஆசிரமத்துத் தோட்டிக்குத் தூய்மையைக் கற்றுக் கொடுப்பதற்காக பதினெட்டு வயது பிராமண இளைஞன் ஒருவன் தோட்டி வேலை செய்து வருகிறான். அந்த இளைஞன் ஒன்றும் சீர்திருத்தவாதி அல்ல. வைதிகத்தில் பிறந்து வைதிகத்தில் வளர்ந்தவன்… ஆனால் குறையற்ற முறையில் தெருக் கூட்டத் தெரிந்தவன் ஆகும் வரை தன் சாதனைகள் முழுமை பெற மாட்டா என்றும், ஆசிரமத்தைக் கூட்டிச் சுத்தம் செய்கிற ஆள் அவரது வேலையை நன்கு செய்ய வேண்டுமானால் தானே அதைச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென்றும் அவன் எண்ணினான்.

“நீங்கள் இந்து சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.”

ஒரு வகுப்பினர் வேறொரு வகுப்பினர் மீது வேண்டுமென்றே சுமத்திய தீமைகளை நிரந்தரமாய் நீடிக்கச் செய்வதற்கு காந்தியார் செய்யும் இந்த முயற்சியைக் காட்டிலும் மோசமானதொரு பொய்ப் பிரச்சாரம் இருக்க முடியுமா? காந்தியம் சூத்திரருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வறுமை என்னும் விதியை உபதேசித்தால், அது பற்றி எவ்வளவு மோசமாகச் சொன்னாலும் ஒரு தவறான கருத்து என்றுதான் சொல்ல முடியும். ஆனால் வறுமையை ஒரு வகுப்பினருக்கு மட்டும் உபதேசம் செய்வது ஏன்? அவர் தனக்கெதிராக கொடிய பாகுபாடு என்று அறிவார்ந்த அடிப்படையில் வெறுத்து ஒதுக்கக் கூடியதை அவரே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் படிச் செய்வதற்காக மனிதனுக்குள்ள பலவீனங்களில் படுமோசமானவற்றை, அதாவது அகத்தையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? இந்து சாத்திரங்களின் படியும் இந்துக் கருத்துக்களின் படியும் ஒரு பார்ப்பனர் தோட்டி வேலை செய்யதாலும் கூட தோட்டியாகப் பிறந்த ஒருவர் அனுபவிக்கும் ஊனங்களை ஒரு போதும் அனுபவிக்க மாட்டார் என்பது தெளிவாக இருக்கும் போது, ஒரு பார்ப்பனர் கூட தோட்டி வேலை செய்யத் தயாராய் இருக்கிறார் என்று தோட்டியைப் பார்த்துச் சொல்வதால் என்ன பயன்? ஏனென்றால் இந்தியாவில் ஒருவர் அவரது வேலையின் காரணத்தினால் தோட்டியாக இருக்கவில்லை. தோட்டி என்பவர் தோட்டி வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் பிறப்பின் காரணத்தினால் தோட்டியாக இருக்கிறார்.

தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழிலென்று காந்தியம் போதிப்பதன் நோக்கம் அதில் ஈடுபட மறுப்பவர்களையும் ஈடுபடச் செய்வதாக இருக்குமானால் அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தோட்டி வேலை செய்வது உன்னதமான தொழில் என்றும், அது குறித்து அவர் வெட்கப்படத் தேவையில்லை என்றும் தோட்டியைப் பார்த்துச் சொல்வதன் மூலம் தொடர்ந்து தோட்டி வேலை செய்வதற்கு (4) அவரைத் தூண்ட வேண்டும் என்பதற்காக, அவரை மட்டுமே தூண்ட வேண்டும் என்பதற்காக அவரது அகந்தையையும் தற்பெருமையையும் தட்டி விடுவது ஏன்? வறுமை சூத்திரனுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, தோட்டி வேலை செய்வது தீண்டாத மக்களுக்கு நல்லது, வேறு எவருக்குமல்ல என்று போதிப்பது, அவர்களின் பலவீனங்களைத் தட்டி விடுவதன் மூலம் இந்தக் கொடுஞ்சுமைகளை அவர்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் குறிக்கோள்களாக ஏற்றுக் கொள்ளும் படி செய்வது – இது நாதியற்ற இவ்வகுப்புகளை இழிவுபடுத்துவதும் கொடிய முறையில் கேலி செய்வதுமாகும். அலட்டிக் கொள்ளாமலும் அச்சமே இல்லாமலும் என்றென்றும் இப்படிச் செய்துக் கொண்டிருக்க காந்தியாரால் மட்டுமே முடியும்.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

இது தொடர்பாக காந்தியம் போலவே இருந்த ஓர் “இசத்தை” நிராகரிக்கையில் வால்டேர் பேசிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன: “ஓ! சிலரது இன்னல் வேறு சிலருக்கு மகிழ்ச்சி தருகிறது, முழுமைக்கு நன்மை பயக்கிறது என்று மக்களை பார்த்துச் சொல்வது அவர்களைக் கேலி செய்வதாகும்: இறந்து கொண்டிருக்கிற ஒருவனைப் பார்த்து உனது உடல் கெட்டு அழுகிப் போகும் போது அதிலிருந்து ஓராயிரம் புழுக்கள் உயிர் பெறும் என்று சொல்வது என்ன வகையான ஆறுதல்?”

விமர்சனம் ஒரு புறமிருக்க, இதுதான், அநீதிகளால் பாதிக்கப்படுபவனுக்கே அந்த அநீதிகள் அவரின் சிறப்புரிமைகள் என்பது போல் தோன்றச் செய்வதுதான் காந்தியத்தின் செய் நுட்பம், பொய்யான நம்பிக்கைகளிலும் பொய்யான பாதுகாப்பு உணர்விலும் மக்கள் மயங்கிக் கிடக்கும் படிச் செய்வதற்கு மதத்தை முழு அளவில் பயன்படுத்திய ஓர் ‘இசம்’ உண்டு என்றால் அது காந்தியம்தான். ஷேக்ஸ்பியர் கூறியதுபோல் நாமும் சொல்லலாம்: பொய்த் தோற்றமே; சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா?

( தொடரும்)

காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(1) வர்ண வியவஸ்தா என்ற நூலிலிருந்து தரப்படும் மேற்கோள், பக்கம் 51
(2) யங் இந்தியா, 1921, ஏப்ரல் 27.
(3) யங் இந்தியா, 1921 ஏப்ரல் 27..
(4) இந்திய மாகாணங்கள் சிலவற்றில் இதற்குச் சட்டங்களே உள்ளன: தோட்டியான ஒருவர் தோட்டி வேலை செய்ய மறுப்பது இச்சட்டங்களின்படி குற்றமாகும். இந்த குற்றத்துக்காக குற்றவியல் நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை விதிக்கலாம்.

முந்தைய பகுதி:
பகுதி – 1 : காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2 : தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம்
பகுதி – 4 : சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை

புத்தகக் குறிப்பு:

 • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
  – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
 • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
 • பக்கம்: 461 + 30
 • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
 • வெளியீடு,
  தலித் சாகித்ய அகாதமி,
  சென்னை – 600 073.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க