பா.ஜ.க. வின் அடிமை அ.தி.மு.க. கும்பல் வந்தவரை இலாபம் என்று தமிழ்நாட்டை அன்றாடம் பகற்கொள்ளை அடித்து வருகிறது. இதற்கு கைமாறாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. காலிகள் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஏதுவாக காட்டிக் கொடுப்பதில் இருந்து கூட்டிக் கொடுப்பது வரை எட்டப்பனாகவும் தரகனாகவும் இருந்து வருகிறது அடிமை அ.தி.மு.க. அரசு. இந்த அ.தி.மு.க. கும்பலுடன் அரசியல் பினாமிகள், லேவாதேவி கந்துவட்டிக்காரர்கள், மணல் மாபியாக்கள், தரகு முதலாளிகள், சாதிச்சங்கங்கள், அதிகார வர்க்கம், தனியார் கல்வி முதலாளிகள் தமிழ்நாட்டை அரித்துத்தின்னும் கரையான்களாக வலம் வருகின்றனர். இக்கும்பலுக்கு வெட்கமின்றி சேவகம் செய்யும் எடுபிடிகளாக தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மாற்றப்பட்டிருப்பது தமிழகத்தின் இழிநிலையின் உச்சமாகும்.

எந்தளவிற்கு கல்வித்துறை தரம் கெட்டு போயிருக்கிறது என்பதற்கு சமீபத்தில் வன்னிய குல சத்திரிய அமைப்பு (!), பா.ஜ.க. அடிப்பொடிகள் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.ஸுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடத்தியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சென்னைப் பல்கலைக்கழகம் என்று ஒருகாலத்தில் சொன்னால் பல்துறை வல்லாண்மைக்கும் ஆராய்ச்சிக்கும் கல்வி பயிற்சிக்கும் சிறப்பான அடையாளமாக காட்டுவார்கள். ஆனால் இன்றோ ஜெயலலிதாவின் பட்டாபிஷேகம் என்று ஆரம்பித்து சாதிவெறிகும்பலுக்கு மண்டகப்படியாக சேவகம் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது.

துணைவேந்தர் துரைசாமி.

துறை சார்ந்த கருத்தரங்கம் மற்றும் மக்களுக்கான அறிவியல் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரங்குகளை பயன்படுத்த அனுமதிக்காத பல்கலைக்கழக நிர்வாகம் சாதிச்சங்க கழிசடைகள் கல்வி வளாகத்தை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கிறது என்றால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் (ஆர். எஸ். எஸ். சார்பு துரைசாமி அவர்கள்) பதிவாளரும் செனட் உறுப்பினர்களும் மேற்கொண்டு பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு எந்தவிதமான தார்மீக ரீதியான உரிமையும் அற்றவர்கள் என்பதோடு மட்டுமல்ல இவர்கள் மக்கள் மன்றத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஒரு புறத்தில் மதுரை பல்கலைக்கழக விடுதி ஆளுநரின் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக மாண்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் சாதிவெறிக்கும்பலுக்கு மண்டபமாக இருக்கிறது.

இதைத் தட்டிகேட்கும் நிலையில் இருக்கும் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மவுனம் காப்பதன் மூலம் பல்கலைக்கழக அதிகாரிகளைப்போலவே மாணவர்களை மக்களை நல்வழிப்படுத்தும் ஆசான்களாக இருப்பதற்கு தாங்கள் தகுதியற்றவர்கள், முதுகெலும்பற்றவர்கள் என்பதையே வெளிக்காட்டுகின்றனர்.

தரம் தாழ்ந்து நிற்கும் கல்வித்துறைக்கு இனி விடிவு காலம் மாணவர்கள் மற்றும் மக்கள் கையில் தான்.