தமிழில் தேர்வு எழுதுவது குற்றமா ? பேராசிரியர் அமலநாதன் உரை | காணொளி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் ஆற்றிய உரை.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சமீபத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட மகா புஷ்கர விழா நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தாலே, அதன் பின்னணி நமக்கு எளிமையாகப் புரிந்துவிடும். இந்த விழா பல்வேறு இடங்களில் சாதிய ரீதியாக பிரிக்கப்பட்டு சங்க பரிவாரத்தால் கொண்டாடப்பட்டது.

அதே போல சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவும் சாதிய ரீதியாக பிரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. சாதிய அடிப்படையில் கலவரத்தைத் தூண்டுகிறார்கள் சங்க பரிவாரத்தினர்.

பார்ப்பனியம் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் பேசி நடிக்கிறது. ஆதிக்க சாதியினரிடம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட, பட்டியல் சாதி மக்களிடம் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் பேசுகிறது. நாடகம் போடுகிறது.

பலரும் நினைக்கிறார்கள், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று. அது தவறு. அவர்கள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பெரும்பான்மையினரை அடிமைப்படுத்துகிறார்கள்.

இங்கு நிலவும் சாதியத்தை உடைக்க ஆதிக்க சாதிகளிலிருந்து ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும். அப்போதுதான் சாதியத்தை ஒழிக்க முடியும்.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மீது கடுமையான தடியடியை நிகழ்த்தியது போலீசு.

மாணவர்கள் போராட்டத்தில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

  1. ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படும் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  2. கல்லூரிக்கு போதுமான வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வில் எழுதும் ஒவ்வொரு தாளுக்கும் (பாடத்துக்கும்) அபராதப் பணம் கட்ட வேண்டிய புதிய விதியை எடுக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மாணவர்கள் தமிழிலேயே தேர்வு எழுதினர். இந்த இரண்டு ஒடுக்குமுறை விதிகளையும் கொண்டு வந்தது, தற்போது அங்கு துணை வேந்தராகப் பதவியேற்ற பாஸ்கர்தான்.

தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, வட மாநிலங்களில் நிலைமை மாறிவருகிறது. மருத்துவர் படிப்புக்கு ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும் என்ற நிலைமையை பல்வேறு இந்தி பேசும் மாநிலங்கள் மாற்றி வருகின்றன. ஹிந்தியிலும் மாணவர்கள் பரிட்சை எழுதலாம் என மாறிவருகிறது.

உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மாணவர்கள் அவர்களது தாய் மொழியில்தான் படிக்கின்றனர். நாமும் தமிழில் படிக்க வேண்டும் என்றே கோருகிறோம். இந்த கோரிக்கை, தமிழ் பழமையான மொழி என்பதிலிருந்து விடுக்கப்படுவது அல்ல. மாறாக, தாய் மொழியான தமிழில் மாணவர்கள் படித்தால் அறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே நாம் இதனை முன் வைக்கிறோம்.

இதனை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் அரசியல்ரீதியாக அணிதிரள வேண்டிய அவசியம் இருக்கிறது. தனித் தனிப் போராட்டங்கள் தீர்வளிக்காது. இன்று ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் தனித் தனியாக மக்களைப் பிரிக்க என்.ஜி.ஓ-க்கள் பெருகி வந்து விட்டன. அவற்றின் முதல்பணி அரசியல் இல்லாமல் செய்வதுதான்.

வினவு களச் செய்தியாளர்

மக்களின் அரசியல் உணர்வைக் காயடிக்கும் வேலையைச் செய்கின்றன, இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அரசியல்ரீதியாக அணி திரள வேண்டும்” என்றார்.

இந்த உரையை முழுமையாகக் காண

காணொளியை பார்க்கவும் ! பகிரவும் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க