முகலாய ஆட்சியாளர்கள் தொடர்புடைய ஊர் பெயர்களை மாற்றுவதை இந்துத்துவ அஜெண்டாவின் ஒருபகுதியாக செயல்படுத்திவருகிறது பா.ஜ.க.  குறிப்பாக, உத்தர பிரதேசத்தின் பா.ஜ.க. முதல்வராக இருக்கும் இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத், முகலாய அடையாளங்களை அழிப்பதில் தீவிரமாக இருக்கிறார். அண்மையில் அலகாபாத் நகரம், ‘பிரயாக்ராஜ்’  என மாற்றப்பட்டது. இதற்கு முன்பு அலி நகர் என்ற பெயரை ஆரிய நகர் என மாற்றியவர் இவர்.

உ.பி. முதலமைச்சரின் வழியில் பா.ஜ.க.வினர் பன்முகத்தன்மையுள்ள இந்திய வரலாற்றை ’இந்துத்துவம்’ என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என பேசிவருகிறார்கள். உ.பி.யின் பா.ஜ.க. – எம்.எல்.ஏ. ஜகன் பிரசாத் கார்க், பிரபலமான ‘ஆக்ரா’ நகரத்தை ‘அகரவன்’ என மாற்ற வேண்டும் என பேசிவருகிறார்.

“ஆக்ரா என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்த இந்த இடம் வனங்களால் சூழப்பட்டு ‘அகரவன’மாக இருந்தது. இந்த இடம் பற்றி மகாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  முகலாய ஆட்சியில் இந்த இடத்தின் பெயரை ‘அக்பராபாத்’ என மாற்றினார்கள்.” என்கிறார் ஜகன். ‘ஆக்ரா’வின் பெயரை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கு இந்துத்துவவாதிகளுக்கே உரிய வரலாற்று அறிவுக்குறைபாட்டுடன் ஜகன் பிரசாத் அளித்திருக்கும் விளக்கம் இது.

படிக்க:
தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

“மகாபாரதக் காலத்தில் அகரவனமாக இருந்த இடம், தற்சமயம் அதிகளவிலான  ’அகர்வால்’ சாதியினர் வாழும் இடமாக மாறியுள்ளது. அகரவனத்தை ஆண்ட அகரேசன் என்ற மன்னர் வழி வந்தவர்கள் இவர்கள்” என ஆக்ராவின் பெயரை மாற்ற மேலும் ஒரு காரணம் சொல்கிறார் ஜகன் பிரசாத்.

இர்பான் ஹபீப்.

இந்துத்துவவாதிகளின்  பன்முகத்தன்மையை அழிக்கும் செயல்பாட்டை பலர் கண்டித்துள்ள நிலையில், வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் கடுமையான எதிர்வினையை ஆற்றியிருக்கிறார்.

“பா.ஜ.க. அனைத்தையும் மாற்ற முனையும் முன்பு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பெயரை மாற்ற வேண்டும். ‘ஷா’ என்பது பெர்சிய மூலத்திலிருந்து வந்தது; குஜராத்தி பெயர் அல்ல. கூடவே, ‘குஜராத்’ என்பதுவும்கூட பெர்சிய மொழியிலிருந்து வந்ததே. ‘குஜராட்டிரா’ என அழைக்கப்பட்ட அம்மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்” என சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ கொள்கைகளின் அடிப்படையில் பா.ஜ.க. அரசுகள் பெயர் மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. அண்டை நாடான பாகிஸ்தானில் இசுலாமிய பெயர்களைத் தவிர, வேறு பெயர்கள் அழிக்கப்பட்டன. பா.ஜ.க. மற்றும் வலது ஆதரவாளர்கள் இந்து அல்லாத, குறிப்பாக இசுலாமிய பெயர்களை அழிக்க முயற்சிக்கின்றனர்” என்கிற ஹபீப், ‘ஆக்ரா’வின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு வைக்கப்படுகிற காரணங்கள் அடிப்படையற்றவை என்கிறார்.

அலிகர் முசுலீம் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான இர்பான் ஹபீப், அகரவனத்தை அகர மகாராஜா ஆண்டார் என்பது ஒரு புராணக்கதை, கற்பனைக்கதை என்கிறார். மேலும், அகர்வால் சாதியினர் ஹரியானாவில் உள்ள அக்ரோஹா என்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். எனவே, ஆக்ரா பெயரை மாற்ற வேண்டும் என்பது அடிப்படையில்லாத கோரிக்கை என்கிறார்.

“15-ம் நூற்றாண்டில் சிக்கர் லோதி என்பவரின் ஆட்சியில்தான் ‘ஆக்ரா’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம். அதற்கு முன்பு இந்த இடம் கங்கைக்கும் யமுனைக்கு இடைப்பட்ட பகுதி என பொருள்படும்விதமாக ’டோஹப்’ என அழைக்கப்பட்டது” என்கிற வரலாற்றுத் தகவலை பகிர்கிறார் ஹபீப்.

வழக்கம்போல, தர்க்கபூர்வமான எதிர்வினைக்கு பதிலளிக்க முடியாமல் புராண புரட்டுகளில் ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.

தமிழாக்கம்:

வினவு செய்திப் பிரிவு

 

நன்றி: Times of India

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. என்ன பிதற்றல்?மெட்ராஸ் பாம்பே போன்ற Anglicized. பெயர்களை அந்தந்த மாநில மொழி உச்சரிப்புக்கு ஏற்றார்போல மாற்றியது மாதிரிதான் இதுவும்.முகலாயனுங்க பண்ண கொலைவெறி அழிவு வேலைகளை அம்பேத்கரே பதிவு செம்துள்ளார்.குறிப்பாக வடமாநிலம் முழுதும் இருந்த பவுத்தத்தை அழிது மிரட்டி மத மாற்றியது முகலாயர்தான்.அந்த முகலாயன் பெயர்களை நாம் ஏன் இன்னும் வைத்துக்கொள்ள வேண்டும்?

  2. லூசுகளா, பவர் இருக்கறவன் மாத்தறான். முகலாயன் பவர் இருக்கும்போது அவன் மாத்தனான், இப்போ இவங்க மாத்தறாங்க. இதுக்கு எதுக்கு பேதி போறீங்க. தமிழ் நாட்டுல எவ்ளோ மாத்தி இருக்காங்க. புதுசா பேசறீங்க. ஆமா, பத்திரிக்கையாளர் சந்தோஷ் தம்மையாவ அரஸ்ட்டு பண்ணீட்டாங்களாம். கருத்துரிமைன்னு உங்க கூட்டத்துல உள்ள துப்பு கெட்டதுங்கள்ளாம் வீக் டேய்ஸ்ல வேலைக்கு போகாம போர்ட்ட தூக்கிக்கிட்டு போகும்னு பாத்தா குசுவக்கூட காணோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க