பாரதிய ஜனதா கட்சியில் பதவி கிடைக்க எச். ராஜா போல குழாயடிச் சண்டை போடும் நரியாகவோ எஸ்.வி.சேகர் போல நரித்தனமாக பேசும் ‘நம்பியாராகவோ’ இருக்க வேண்டும். சங்க பரிவாரத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டுமென்றால் கொலைகளுக்கு காரணமானவராகவோ அல்லது கொலை செய்தவராகவோ இருக்க வேண்டும். முன்னதுக்கு உதாரணமான ஒருவர் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். பின்னவர் உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருக்கிறார். யுவ வாஹினி என்ற இந்துத்துவ கும்பலுக்கு தலைவராக பல வெறியாட்டங்களை அம்மாநிலத்தில் நடத்தி, இப்போது முதல்வராகியிருக்கும் ஆதித்யநாத் மீது 19 வருடத்துக்கு முந்தைய கொலை வழக்கு பாய்ந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த தலாத் அசீஸின் மெய்க்காப்பாளரான் சத்ய பிரகாஷ் யாதவ் என்பவரை கொலை செய்த குற்றத்துக்காக அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அமர்வு நீதிமன்றம். 1999-ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி பங்கேற்ற ஒரு போராட்டத்தில் புகுந்து, ஆதித்யநாத் தலைமையிலான ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. அதில் சத்ய பிரகாஷ் யாதவ் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது இந்தக் கொலை வழக்கு. இந்நிலையில் லக்னோ உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார் தலாத் அசீஸ். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.  கடந்த செவ்வாய்கிழமை அன்று (25.09.2018) மகராஜ்கன்ஞ் அமர்வு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் தருவாயில் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க.-ஆதித்யநாத் காவிவெறி கும்பலை எதிர்க்க ஒரு முக்கியமான ஆயுதமாக இந்தக் கொலை வழக்கு பயன்படும். சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முதல்வர் பதவியை ஆதித்யநாத் ராஜினாமா செய்தால் மட்டுமே விசாரணை ஒழுங்காக நடக்கும் என கேட்கிறார்கள். இல்லையென்றால் வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்குக்கு இரையாகக்கூடும் என்பது அவர்களுடைய கருத்து.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் சிங் சஜன், “முதல்வர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன என நாங்கள் அறிவோம். ஆனால் மதிப்பிற்குரிய நீதிமன்றமே இப்போது கொலை குற்றத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் பதவி ஆதித்யநாத் நீடித்தால், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதுபோல, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்சு அஸ்வத், “முதல்வர், துணை முதல்வர் இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல் நோக்கத்துடன் போடப்பட்டதாக அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், “பாஜகவில் 300 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால், குற்றச்சாட்டுகள் இல்லாத ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க அவர்களால் முடியவில்லை பாருங்கள்” என்கிறார்.

ஆதித்யநாத் மாநில முதல்வராக பா.ஜ.க.-வால் அறிவிக்கப்பட்டபோதே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. கொலைகாரர்களையும் கும்பல் வன்முறையாளர்களையும் ஊக்குவிக்கும் பா.ஜ.க., உ.பி.யை ஆள ஆதித்யநாத்தைவிட சிறந்தவர் இல்லை என வாதிட்டது. ஆனாலும் அவ்வபோது விழித்துக்கொள்ளும் இந்திய நீதிமன்றங்கள் ஆதித்யநாத்தின் கொலை வழக்கை தூசி தட்ட உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஆதித்யநாத்தின் செல்வாக்கை குறைப்பதற்காக இந்த வழக்கை பயன்படுத்தலாம் என்ற ஒட்டுக்கட்சி அரசியல் நோக்கிலேயே பார்க்கின்றனர். ஆனால் உ.பி.யில் காவிகள் ஆட்சியைப் பிடித்ததும், இனி பிடிக்கப் போவதற்கு நடத்தப் போகும் சதித்திட்டங்களும் ஓட்டுக் கட்சி அரசியலின் பாற்பட்டதல்ல. அவை பார்ப்பனியத்தின் இந்துமதவெறி – சாதிவெறி சதித்திட்டங்களோடு தொடர்புடையவை. ஓட்டுக் கட்சி அரசியலில் கூட சங்கிகள் எதிர்க்கட்சிகளை முற்றிலும் நிர்மூலமாக்கும் நோக்கிலேயே இந்த அரசமைப்பை பயன்படுத்துகின்றனர். ஆகவே அவர்களை எதிர்த்து அரசியல் – பண்பாட்டு அரங்கில் மக்களை திரட்டி ‘போர்’ தொடுக்காமல் சங்க பரிவாரத்தின் செல்வாக்கை முறியடிக்க முடியாது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க