மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 24

மாக்சிம் கார்க்கி

ரு நாள் அதிகாலையில், பாவெலும் அந்திரேயும் வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மரியாகோர்சுனவா ஜன்னல் கதவைத் தட்டியவாறு சத்தமிட்டாள்:

”அவர்கள் இஸாயைக் கொன்றுவிட்டார்கள்! வா, போய்ப் பார்க்கலாம்…”

தாய் திடுக்கிட்டாள். அவளது மனத்தில் கொலைகாரனின் பெயர் மின்னிப் பளிச்சிட்டு மறைந்தது.

“யார் கொலை செய்தது?” என்று கேட்டுக்கொண்டே ஒரு போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள் தாய்.

“கொன்றவன் அவன் பக்கத்திலே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. கொன்று தள்ளிவிட்டு ஓடியே போய்விட்டான்!”

அவர்கள் இருவரும் தெருவழியே போய்க்கொண்டிருக்கும்போது மரியா மீண்டும் தொடர்ந்து பேசினாள்.

“இனிமேல், அவர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடி அலசிப் பார்த்து கொன்றவனைக் கண்டுபிடிக்க முனைவார்கள். உன்னுடைய ஆட்கள் நேற்றிரவு வீட்டுக்குள்ளே இருந்தது நல்ல காலத்துக்குத்தான். அதற்கு நானே சாட்சி. நான் இரவு நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போது உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன். நீங்கள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தீர்கள்…”

“நீ என்ன சொல்கிறாய் மரியா? அவர்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்?” என்று பயத்தால் வெலவெலத்துப் போய்க் கேட்டாள் தாய்.

“பின்னே? யார்தான் கொன்றிருப்பார்கள்? எல்லாம் உன் சகாக்களோடு” என்று தீர்மானமாகச் சொன்னாள் மரியா: ”அவன் உங்களை வேவு பார்த்துத் திரிந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே…”

தாய் திடுக்கிட்டு நின்றாள். அவள் தொண்டை அடைத்தது. தன் நெஞ்சை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

“அதனால் என்ன? வீணாகப் பயப்படாதே. அவனுக்கு இந்தக் கதி கிடைத்தது ரொம்ப சரி. சீக்கிரம் வா. இல்லையென்றால் அவர்கள் உடலை அப்புறப்படுத்திவிடுவார்கள்” என்றாள் மரியா.

நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பற்றிய சந்தேகம் தாயினது கால்களை பின்னுக்கு இழுத்து நிறுத்துவதுபோல் தோன்றியது.

“அவன்தான். அவன் இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டானா?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

தொழிற்சாலை மதில் சுவர்களுக்குப் பக்கத்தில் சமீபத்தில்தான் எரிந்து சாம்பலாய்ப் போய் மூளியாய் நின்ற ஒரு வீட்டுக்குப் பக்கத்தில், ஒரே கூட்டமாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர். அங்கு எத்தனையோ பெண்களும், குழந்தைகளும், கடைக்காரர்களும், சாரயக்கடைப் பையன்களும், போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மார்பகம் நிறைய மெடல்களும், அடர்ந்து சுருண்ட வெள்ளி நிறத் தாடியும் கொண்ட உயரமான கிழவன் மூமூ அரசியல் போலீஸ்காரன் ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.

பாதியுடம்பு தரையில் கிடந்தவாறும் பாதியுடம்பு உட்கார்ந்த பாவனையிலும் இஸாய் கிடந்தான். அவனது முதுகு ஒரு கருகிப்போன கட்டையின் மீது சாய்ந்திருந்தது. தலை வலது தோளின் மீது சாய்ந்து சரிந்து கிடந்தது. வலது கை, கால்சராய்ப் பைக்குள் புகுத்தப்பட்டவாறு இருந்தது. இடது கரத்தின் விரல்கள் மண்ணையள்ளி இறுகப் பிடித்திருந்தன.

தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர்.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். நீண்டு பரந்து கிடக்கும் அவனது கால்களுக்கிடையே கிடக்கும் தொப்பியை வெறித்துப் பார்ப்பதுபோல் அவனது ஒரு கண் பிதுங்கி நின்றது. வாய் ஏதோ வியப்புற்றது போல் பாதி திறந்து தொங்கியது. அவனது சிவந்த தாடி ஒருபுறமாக சாய்ந்து ஒட்டி நின்றது. மெலிந்த உடம்பும் குறுகிய தலையும் புள்ளி விழுந்த ஒட்டிய முகமும் மரணத்தினால் மேலும் குறுகிச் சிறுத்துவிட்டது போலத் தோன்றின. தாய் தனக்கு நேராகக் கையால் சிலுவை கீறிவிட்டுப் பெருமூச்செறிந்தான். உயிரோடிருந்த காலத்தில் அவனைக் கண்டாலே அவளுக்கு வெறுப்புத்தான் தோன்றும். இப்போதோ அவனுக்காக ஒருவித அனுதாப உணர்ச்சி அவள் உள்ளத்தில் தோன்றியது.

“இரத்தக் கறையையே காணோம்” என்று யாரோ தணிந்த குரலில் சொன்னார்கள். “இல்லை, முஷ்டியால் குத்தித்தான் கொன்றிருக்க வேண்டும்.”

“காட்டிக் கொடுக்கிற பயலுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தாகிவிட்டது” என்று யாரோ ஒருவன் வக்கிரமாகச் சொல்லிக்கொண்டான்.

அந்த அரசியல் போலீஸ்காரன் பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னே சென்றான்.

“யாரது? யார் இப்படிச் சொன்னது?” என்று அவன் பயங்கரமாகக் கேட்டான்.

அவனது முன்னிலையில் ஜனங்கள் பயந்து கலைந்து சென்றார்கள். சிலர் ஓடியே போய்விட்டார்கள். யாரோ ஒருவன் வர்மத்தோடு சிரித்துக்கொண்டான்.

தாய் வீட்டிற்குத் திரும்பினாள்.

“அவனுக்காக யாருமே வருத்தப்படவில்லை” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.

அவளது கண்களுக்கு முன்னால், நிகலாயின் தடித்த உருவம் தோன்றுவது போலிருந்தது. அவன் தனது ஈரமும் இரக்கமுமற்ற குறுகிய கண்களால் அவளை வெறித்து நோக்குவது போலவும் ஏதோ அடிபட்டுவிட்டதுபோல் வலது கையை நொண்டி நொண்டி வீசி வருவதுபோலவும் அவளுக்குப் பிரமை தட்டியது.

அந்திரேயும் பாலெலும் வந்தவுடனே, அவள் அவர்களிடம் அந்த விஷயத்தைப் பற்றி அவசர அவசரமாக விசாரித்தாள்.

“இஷாயைக் கொன்றதற்காக யாரையாவது கைது செய்திருக்கிறார்களா?”

“இதுவரை ஒன்றும் கோள்விப்படவில்லை” என்றான் ஹஹோல்.

அவர்கள் இருவரும் மிகவும் மனம் கசந்து போயிருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துகொண்டாள்.

“யாராவது நிகலாயின் பேரை வெளியிட்டார்களா?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.

“இல்லை” என்றான் மகன். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன. அவனது குரலில் தெளிவு இருந்தது. “அவர்கள் அவனை சந்தேகிப்பதாய்த் தெரியவில்லை. அவன் இங்கு இல்லை. நேற்று மத்தியானம் அவன் ஆற்றுக்குப் போனான். போனவன் இன்னும் திரும்பவில்லை. நான் அவனைப்பற்றி விசாரித்தேன்……”

“எல்லாம் கடவுள் அருள், அவன் அருள்” என்று நிம்மதி நிறைந்து பெருமூச்செறிந்தாள் தாய்.

ஹஹோல் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்ந்துகொண்டான்.

“அங்கே அவன் கிடக்கிறான். என்ன நடந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வியந்து விழிப்பது போலக் கிடக்கிறான்” என்று லேசாகப் பேசத் தொடங்கினாள் தாய்: “அவனுக்காக யாருமே வருத்தப்படக் காணோம். யாருமே ஒரு நல்ல வார்த்தை சொல்லக் காணோம். அவன் அவ்வளவு சிறுமைப்பட்டுக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறான். என்னவோ ஒரு உடைந்து விழுந்த உதவாக்கரைச் சாமானைப்போல் நாதியற்றுக் கிடக்கிறான்.”

சாப்பாட்டு வேளையின்போது, பாவெல் திடீரெனத் தன் கையிலிருந்த கரண்டியை விட்டெறிந்துவிட்டுக் கத்தத் தொடங்கினான்.

“இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!”

“எது?” என்று கேட்டான் ஹஹோல்.

ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.

”நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம். அது சரிதான். அது எனக்கும் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்துக்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?

ஹஹோல் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

“இவனும் ஒரு காட்டு மிருகத்தைப்போல மோசமானவன்தான்” என்றான் ஹஹோல், “நாம் கொசுவை எதற்காகக் கொல்கிறோம்? நம்முடைய உடம்பிலிருந்து அது ஒரு துளி ரத்தத்தை உறிஞ்சிவிட்டது என்பதற்குத்தானே?”

”அது உண்மைதான். நான் அதைச் சொல்லவில்லை. அது எவ்வளவு அருவருப்புத் தரும் விஷயம் என்பதைத்தான் குறிப்பிட்டேன்.”

“வேறு வழியில்லை” என்று அந்திரேய் மீண்டும் தன் தோளைக் குலுக்கிவிட்டுச் சொன்னான்.

“அந்த மாதிரி ஜந்துவை நீ கொல்லுவாயா?” என்று சிறிது நேரம் கழித்துக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தனது அகன்ற கண்களால் பாவெலையே வெறித்துப் பார்த்தான். பிறகு தாயின் பக்கம் திடீரெனத் தன் பார்வையைத் திருப்பினான்.

”நம்முடைய கொள்கையின் நலத்துக்காகவும், என்னுடைய தோழர்களின் நலத்துக்காகவும் நான் எதையுமே செய்வேன்” என்று துக்கமும் உறுதியும் தோய்ந்த குரலில் சொன்னான் அந்திரேய்; “அதற்காக, நான் என் சொந்த மகனைக் கூடக் கொல்லுவேன்!”

”ஆ! அந்திரியூஷா!” என்று திகைத்துப்போய் வாய்க்குள் முணுமுணுத்தாள் தாய்.

“வேறு வழியில்லை, அம்மா” என்று கூறி அவன் புன்னகை புரிந்தான். ”நமது வாழ்க்கை அப்படிப்பட்டது.”

“நீ சொல்வது சரி. வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!” என்றான் பாவெல்.

இதயத்துக்குள்ளே ஏதோ ஒன்று தட்டியெழுப்பிய மாதிரி திடீரென உத்வேக ஆவேசத்தோடு துள்ளியெழுந்தான் ஹஹோல்.

“அதற்கு நாமென்ன செய்ய முடியும்?” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சத்தமிட்டான் ஹஹோல். “மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும். தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். நேர்மையான மனிதர்களின் மார்க்கத்தை எவனாவது ஒரு யூதாஸ்* வழிமறித்தால், அவர்களைக் காட்டிக்கொடுப்பதாகச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தால், அவனை ஒழித்துக் கட்டத்தான் நான் முனைவேன்! அவனை ஒழித்துக்கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ் மாதிரியே ஆகிவிடுவேன்! அப்படிச் செய்ய எனக்கு உரிமை கிடையாது என்கிறாயா?

ஆனால் நம்மை அடக்கியாள்கிறார்களே, நமது முதலாளிகள், – அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? படைபலத்தையும் கொலையாளிகளையும் வைத்திருக்க, சிறைக் கூடங்களையும் விபசார விடுதிகளையும் நாடு கடத்தும் இடங்களையும் வைத்திருக்க, தங்களது சுகபோகத்தையும் பாதுகாப்பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகலவிதமான கொலைச் சாதனங்களையும் வைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சங்கடத்துக்கு நான் ஆளானேன் என்றால் அது என்னுடைய தவறா? என்னுடைய குற்றமா? இல்லை. நானும் அதை உபயோகிப்பேன். அவர்கள் நம்மை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மாயிருக்கமாட்டேன். நானும் என் கையை ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு உண்டு….. அவர்களில் ஒருவரையேனும் நான் ஒரே போடாய்ப் போட்டுக் கொல்லுவேன். எனக்குப் பக்கத்தில் வரும் பகைவனின் தலையை நான் நொறுக்கத்தான் செய்வேன். மற்றவர்களைவிட, எனது வாழ்க்கை லட்சியத்துக்கு அதிகமான தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் செய்வேன். வாழ்க்கை அப்படி அமைந்து கிடக்கிறது.

மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும்.

ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் செய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு நான் விரும்பவும்தான் இல்லை. அவர்களது ரத்தத்தால் எந்தவிதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. அது வெறும் விருதா ரத்தம். விளைவற்ற ரத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நமது ரத்தம் மட்டும் பூமியில் மழை மாதிரி பொழிந்து கொட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கும்; சத்தியம் அவதாரம் செய்யும்! ஆனால் அவர்களது நாற்றம்பிடித்த ரத்தமோ எந்தவித மச்ச அடையாள மறுக்கள் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப்போய்விடும்! எனக்கு அது தெரியும். இருந்தாலும் இந்தப் பாபத்தை நான் என் தலையில் ஏற்றுக்கொள்கிறேன். கொலை செய்துதான் ஆக வேண்டுமென்றிருந்தால், நான் கொல்லத்தான் செய்வேன். ஞாபகம் இருக்கட்டும்! நான் எனக்காகத்தான் பேசிக்கொள்கிறேன். எனது பாபம் என்னுடனேயே சாகும். அந்தப் பாபம் எதிர்காலத்தில் கறைபடியச் செய்யாமல் தொலையும்! அந்தப் பாபம் என்னைத் தவிர, வேறு எவரையும், வேறு எந்த ஆத்மாவையும் கறைப்படுத்தாது மறைந்து மாயும்!”

அவன் அறைக்குள்ளே கீழும் மேலும் உலவினான். எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – தன் இதயத்திலிருந்து எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – கைகளை வீசிக்கொண்டான். தாய் அவனைப் பீதியும் துக்கமும் கலந்த மனத்தோடு பார்த்தாள். அவனது இதயத்துக்குள்ளே ஏதோ ஒரு பலத்த காயம் ஏற்பட்டு, அவனை வேதனைப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள். அந்தக் கொலையைப் பற்றிய இருண்ட பயங்கர ஆபத்தான எண்ணங்கள் அவளை விட்டுப் பிரிந்தன. நிகலாய் வெஸோவ் ஷிகோவ் அந்தக் குற்றத்தைச் செய்திராவிட்டால், பாவெலின் நண்பர்களில் மற்றவர் எவருமே அதைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. பாவெல் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு ஹஹோலின் பலம் பொருந்திய அழுத்தம் வாய்ந்த பேச்சைக் கேட்டவாறு இருந்தான்.

“தங்கு தடையற்று நீ முன்னேறிச் செல்ல வேண்டுமானால், சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக்கூடச் செய்யவேண்டும். அதற்காக நீ சகலத்தையும், உன் பரிபூரண இதயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது மிகவும் லேசான காரியம். அதைவிட மகத்தானவற்றை, உன்னுடைய சொந்த வாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான், நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகாசக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்க முடியும். அந்தச் சத்தியம்தான் இந்த உலகத்தில் உனக்கு மிகவும் அருமை வாய்ந்த அரிய பொருளாக இருக்கும்!”

அவன் அறையின் மத்தியில் சட்டென நின்றான். முகமெல்லாம் வெளுத்துப்போய், கண்களைப் பாதி மூடியவாறு கையை உயர்த்தி அமைதி நிறைந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்கினான்.

“மக்கள் தங்கள் அழகைத் தாமே பார்த்து வியக்கின்ற காலம். மற்றவர்களுக்கெல்லாம் தாம் தனித்தனித் தாரகைகளைப்போல் ஒளி வீசப்போகும் காலம் வரத்தான் போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்தப் புண்ணிய காலத்தில் உலகத்தில் சுதந்திர மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்; அந்த மனிதர்கள் தமது சுதந்திரத்தால் பெருமை அடைவார்கள். சகல மக்களின் இதயங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும். அந்த இதயங்களில் பொறாமை இருக்காது; பகைமையைப் பற்றிய அறிவு கூட இருக்காது. அப்போது வாழ்க்கை என்பது மனித குலத்துக்காக மகத்தான சேவையாக மாறிவிடும்; மனிதனது உருவம் மகோன்னதச் சிகரத்தில், வானத்தை முட்டும் கொடுமுடிவரையில் உயர்ந்து சென்று கொலு அமரும். ஏனெனில் சுதந்திர புருஷர்களுக்கு எந்தச் சிகரமும் எந்த உயரமும் எட்டாத தூரமல்ல; தொலைவல்ல. அப்போது, மக்கள் அனைவரும் அழகின் பொருட்டு சத்தியத்தோடு, சுதந்திரத்தோடு வாழ்வார்கள். உலகத்தைத் தங்களது இதயங்களால் பரிபூரணமாக அதிகப்படியாகத் தழுவி, அதனை முழுமனத்தோடு காதலிப்பவர்களே அந்த மனிதர்களில் மகோன்னதப் புருஷர்களாக விளங்குவார்கள்; எவர் மிகுந்த சுதந்திரமாக வாழ்கிறாரோ அவரிடமே மகோன்னதமான அழகு குடி வாழ்கிறது. அவர்களே அந்தப் புத்துயிரின் புண்ணிய புருஷர்கள்; மகாபுருஷர்கள்!”

அவன் ஒரு நிமிஷ நேரம் மெளனமாயிருந்தான். பிறகு மீண்டும் நிமிர்ந்து நின்றுகொண்டு, தனது ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழும் குரலோடு பேசத் தொடங்கினான்.

“அந்தப் பெரு வாழ்வுக்காக – நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்………”

அவனது முகம் சிலிர்த்து நடுங்கியது, பெரிது பெரிதான கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தோடியது.

பாவெலின் முகம் வெளுத்தது. அவன் தலையை நிமிர்த்தி, தனது அகன்ற கண்களால் அவனைப் பார்த்தான். ஏதோ ஒரு இருண்ட பீதி தன் மனத்தில் திடீரெனக் கவிந்து பெருகுவது மாதிரி உணர்ந்த தாய் திடுக்கிட்டு நாற்காலியை விட்டுத் துள்ளியெழுந்தாள்.

“இதென்ன, அந்திரேய்?” என்று மெதுவாகக் கேட்டான் பாவெல்.

ஹஹோல் தன் தலையை மட்டும் குலுக்கியசைத்துவிட்டு, உடம்பை விறைப்பாக நிமிர்த்தி நின்றவாறு தாயை ஏறிட்டுப் பார்த்தான். ”ஆமாம், என் கண்ணால் பார்த்தேன். நானறிவேன்.”

அவள் ஓடோடிப் போய் அவனது கைகளை இறுகப் பற்றினாள். அவன் தனது வலது கையை விடுவிக்க முயன்றான். ஆனால், அவளோ அவனது கைகளை இறுகப் பிடித்தவாறு இரகசியமாகச் சொன்னாள்:

”உஷ்! ஐயோ, என் கண்ணே! என் அருமை மகனே…”

“ஒரு நிமிஷம் பொறுங்கள். அது எப்படி நடந்தது என்று நான் சொல்கிறேன்” என்று கரகரத்துச் சொன்னான் ஹஹோல்.

“இல்லை, வேண்டாம். வேண்டவே வேண்டாம். அந்தியூஷா” என்று அவள் தனது நீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.

பாவெல் மெதுவாக நெருங்கி வந்தான். அவனது கண்களிலும் ஈரம் கசிந்திருந்தது. அவனது முகம் வெளுத்திருந்தது. அவன் லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்.

“நீதானோ என்று அம்மா பயந்துவிட்டாள்!”

”நானா – நானா பயந்தேன்? நான் அதை நம்பவே மாட்டேன். என் கண்ணாலே பார்த்தால் கூட நான் நம்பமாட்டேன்!”

“பொறுங்கள்” என்று தன் தலையை உலுப்பிக் கொண்டும் கைகளை விடுவிக்க முயன்று கொண்டும் சொன்னான் ஹஹோல்.

“அது நான் இல்லை. ஆனால் நான் அதைத் தடுத்திருக்க முடியும் …….”

”அந்திரேய் வாயை மூடு” என்றான் பாவெல்.

அவன் தன் நண்பனது கையை ஒரு கையால் பற்றிப் பிடித்தான், மறுகையை ஹஹோலின் தோளின்மீது போட்டு, நடுநடுங்கும் அவனது நெடிய உருவத்தை தடவிக்கொடுத்தான். அந்திரேய் பாவெலின் பக்கம் திரும்பி உடைந்து கரகரக்கும் குரலில் பேசினான்.

தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும்.

“பாவெல், அப்படி நடக்கவேண்டும் என்று நான் விரும்பியிருக்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியும், நடந்தது இதுதான். நீ போன பிறகு நான் திராகுனவுடன் அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது இஸாய் வந்தான். எங்களைக் கண்டதும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டு எங்களை ஓரக்கண் போட்டுச் சிரித்தான். ‘அவனைப் பார். அவன் இரலெல்லாம் என் பின்னாலேயே சுற்றித் திரிகிறான். ‘அவனை நான் அடிக்காமல் விடப்போவதில்லை’ என்றான் திராகுனவ். பிறகு அவன் போய்விட்டான். வீட்டுக்குத்தான் போகிறான் என்று நான் நினைத்தேன். பிறகு இஸாய் என்னிடம் வந்தான் ……..”

ஹஹோல் பேச்சை நிறுத்திவிட்டு மூச்செடுத்துக்கொண்டான்.

“அந்த நாயைப் போல், அவனைப்போல் என்னை இதுவரை எவனுமே அவமானப்படுத்தியதில்லை.”

தாய் பேசாது மேஜைப் பக்கமாக வந்து அவனை உட்கார வைத்தாள். அவனருகிலே வந்து அவனது தோளோடு தோள் உரசி ஒட்டிக்கொண்டிருக்க அவளும் உட்கார்ந்து கொண்டாள். பாவெல் வெறுமனே நின்றவாறு, தன் தாடியை உவகையற்று இழுத்து உருவிவிட்டுக்கொண்டிருந்தான்.

“அவர்களுக்கு நம் அனைவரது பெயர்களும் தெரியுமென்றும், போலீஸ் பட்டியலில் நம்முடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன வென்றும், மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்னால் நம்மையெல்லாம் அவர்கள் உள்ளே தள்ளப் போவதாகவும் அவன் என்னிடம் சொன்னான். நான் பதில் பேசவில்லை. வெறுமனே அவனைப் பார்த்துச் சிரித்தேன். ஆனால் என் உள்ளமோ உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு புத்திசாலிப் பையன் என்றும், இந்த மாதிரி வழியில் செல்வது தவறு என்றும், எனக்கு அவன் போதிக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் நான் இந்த வழியைக் கைவிட்டு விட்டு ……..”

அவன் பேச்சை நிறுத்திவிட்டு, இடது கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். அவனது கண்களில் ஏதோ ஒரு வறண்ட பிரகாசம் பளிச்சிட்டது.

“எனக்குப் புரிகிறது” என்றான் பாவெல்.

“இதைக் கைவிட்டு விட்டு, நான் சட்ட உத்தியோகம் பார்ப்பது நல்லது என்று சொன்னான் அவன்!” என்றான் ஹஹோல்.

ஹஹோல் தன் முஷ்டியை ஓங்கி ஆட்டினான்.

”சட்டம் நாசமாய்ப் போக!” அவன் பற்களை இறுகக் கடித்தவாறே பேசினான். “அவன் என் முகத்தில் அறைந்திருந்தால் கூட, எனக்கு – ஒருவேளை அவனுக்கும் – எளிதாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பயலோ என் இதயத்தில் அவனது நாற்றம் பிடித்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டான். அந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லை.”

அந்திரேய் பாவெலிடமிருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான், அதன் பின் கசப்பும் கரகரப்பும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கினான்:

”நான் அவனது முகத்தில் ஓங்கியறைந்துவிட்டு, விலகிப் போனேன். அப்போது எனக்குப் பின்னால், “மாட்டிக் கொண்டாயா?” என்று திராகுனவ் மெதுவாகச் சொல்லியது எனக்குக் கேட்டது. அவன் அந்த மூலையிலேயே காத்துக்கொண்டிருந்தான் போலும்…”

சிறிது நேரம் கழித்து, ஹஹோல் மீண்டும் தொடர்ந்து பேசினான். ”நான் திரும்பியே பார்க்கவில்லை. என் மனதில் மட்டும் என்னமோ ஒரு உணர்ச்சி அடி விழுந்த சத்தத்தை மட்டும் நான் கேட்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தவளையை மிதித்துவிட்ட மாதிரி அருவருப்போடு நான் என் வழியே நடந்தேன். வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று ஜனங்கள் சத்தம் போட்டுக்கொண்டு வந்தார்கள்.

படிக்க:
அமித்ஷாவின் பெயரை முதலில் மாற்றுங்கள் : வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் !
தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

‘இலாயைக் கொன்றுவிட்டார்கள்’ என்று சத்தம் கேட்டது. என்னால் அதை நம்ப முடியவில்லை. எனது கையில் வலியெடுத்தது, என்னால் வேலையைப் பார்க்க முடியவில்லை. எனக்கு உண்மையில் வலி இருந்ததா என்பது தெரியாது. இருந்தாலும், என் கை மரத்துத் திமிர்பிடித்துப் போயிற்று…”

அவன் தன் கையை வெறித்துப் பார்த்துக்கொண்டான்.

“என் கையில் படிந்துவிட்ட இந்தக் கறையை என் வாழ்நாள் முழுவதுமே என்னால் கழுவிவிட முடியாது.”

“ஆனால் உன் இதயம் பரிசுத்தமாய் இருக்கிறதே!” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

“நான் அதற்காக என்மீது குறை கூறிக்கொள்ளவில்லை. இல்லவே இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் ஹஹோல்.

“இந்தச் சம்பவம் அருவருக்கத்தக்க சம்பவம். இந்த வேண்டாத விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டாம்.”

“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்று தோளை உலுப்பியவாறு சொன்னான் பாவெல், “நீ அவனைக் கொல்லவில்லை. அப்படியே செய்திருந்தாலும்……”

”கேளு. தம்பி! ஒரு கொலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதென்றால்…..”

”எனக்குப் புரியவேயில்லை” என்று பாவெல் அழுத்திக் கூறினான். பின் சிறிது யோசனைக்குப் பின்பு, ”அதாவது புரிகிறது. ஆனால் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை.”

ஆலைச்சங்கு அலறியது. அதனது அதிகாரபூர்வமான ஆணையைக் காதில் வாங்கிக் கொண்ட ஹஹோல் தலையை ஆட்டியபடி சொன்னான்:

“நான் வேலைக்குப் போகவில்லை.”

“நானும்தான்.”

“நான் குளிக்கிற இடத்துக்குப் போகப்போகிறேன்” என்றான் அந்திரேய். அவன் லேசாகச் சிரித்தான். பிறகு தன் துணிமணிகளைச் சேகரித்துக் கொண்டு, உற்சாகமேயற்று வீட்டைவிட்டு வெளியில் சென்றான்.

தாய் அன்பு ததும்பும் கண்களோடு அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

”நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, பாவெல்” என்று பேசத் தொடங்கினாள் தாய். “ஒரு மனிதனைக் கொலை செய்வது மகா பாபம் என்று எனக்குத் தெரியத்தான் செய்கிறது. என்றாலும் நான் யாரையுமே குற்றஞ்சாட்ட மாட்டேன். நான் இஸாயிக்காக அனுதாபப்படுகிறேன். அவன் ஒரு குள்ளப்பிறவி. அவனை இன்று பார்த்தபொழுது, அவன் என்னைப் பார்த்துச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உன்னைத் தூக்கில் போடப் போவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். ஆனால், அவன் இப்போது செத்துப்போய் விட்டான். அவன் மறைந்து போனான் என்பதற்காக சந்தோஷப்படவோ, அவன் சொன்ன சொல்லுக்காக அவனைப் பகைப்பதற்கோ என்னால் முடியாது. அப்போது நான் அவன் மீது அனுதாபம் கொண்டேன். இப்போது அந்த அனுதாபம் கூட இல்லை …….”

அவன் மீண்டும் மௌனமாகிச் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு வியப்பு நிறைந்த புன்னகையோடு மேலும் பேசினான்:

”அட கடவுளே பாஷாக்கண்ணு! நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயா?”

உண்மையில் அவள் பேச்சை அவன் கேட்கவில்லை. எனவே அவன் முகத்தைச் சுழித்துக்கொண்டே பதில் சொன்னான். தரையைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்த பாவெல் பின்வருமாறு சொன்னான்:

”இதுதானம்மா வாழ்க்கை! ஜனங்கள் ஒருவருக்கொருவர் எப்படி புதிருமாய் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? நீ உன் விருப்பத்துக்கு விரோதமாக ஒருவனை அடித்து வீழ்த்திவிடுகிறாய். ஆனால் தாக்கப்படுவது யார்? உனக்கு இருக்கும் உரிமைகளைவிட எந்த அளவிலும் அதிக உரிமையற்ற ஓர் அப்பாவிப் பிராணியையா தாக்குவது? இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் உன்னைவிட அதிருஷ்டக் குறைவான பிறவி; காரணம் – அவன் ஒரு முட்டாள். போலீஸ், அரசியல் போலீஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. நம்மைப்போலவே, ரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம்தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. உலகம் அப்படியிருக்கிறது. ஒரே மாதிரி இருக்கிறது! ஆனால் அந்த முதலாளிகளோ ஜனங்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை மூட்டிவிடுகிறார்கள். பயத்தினாலும், அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து ரத்தத்தை உறிஞ்சித் தீர்க்கிறார்கள். மக்களை ஒருவருக்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள்; அவர்கள் மக்களைத் துப்பாக்கிகளாகவும், குண்டாந்தடிகளாகவும், கற்களாகவும் உருமாற்றி, ‘பார்! இது தானடா அரசு என்று கூறுகிறார்கள்.”

அவன் தன் தாயருகே சென்றான். பிறகு பேசினான்.

“அது மகா பாவம், அம்மா! லட்சோப லட்சம் மக்களைக் கொன்று குவிக்கும் பஞ்சமாபாதகப் படுகொலை! மனித இதயங்களைக் கொன்று தள்ளும் கோரக் கொலை …… நான் சொல்வது புரிகிறதா, அம்மா? அவர்கள், இதயங்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள்! அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? நாம் ஒருவனைத் தாக்கினால், அதை எண்ணி வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம்; நாம் அனைவருமே அப்படிப்பட்ட செயலை அருவருத்து வெறுத்துத் தள்ளுகிறோம். ஆனால் அவர்களோ ஆயிரக்கணக்கான மக்களை அமைதியாக, ஈவிரக்கமற்று, ஈர நெஞ்சமற்று, வேதனையற்று – சொல்லப் போனால் பரிபூரணமான இதய திருப்தியோடு – கொன்று தள்ளுகிறார்கள்! அவர்கள் ஜனங்களைக் கசக்கிப் பிழிந்து உயிரைப் பருகுவதற்குரிய ஒரே காரணம் என்ன தெரியுமா? தங்களது தங்கத்தையும், வெள்ளியையும், சொத்து சுகங்களையும் பாதுகாப்பதற்காக. நம் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஆட்சியை நிலைக்கவைக்கும் சகல சட்டதிட்டங்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்ப்பதற்காகவேதான். அம்மா, நீ இதைக் கொஞ்சம் யோசித்துப்பார். மக்கள் குலத்தைக் கொன்று குவிப்பதும், மக்கள் குலத்தின் இதயங்களைச் சின்னாபின்னப்படுத்துவதுமான காரியத்தை அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்? தங்கள் இனத்தையோ தங்கள் உயிரையோ பாதுகாப்பதற்கான தற்காப்பு முயற்சி அல்ல அது! ஆனால், தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிப்பட்ட கோரக் கொலையில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இதயத்துக்குள்ளே இருப்பதை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. இதயத்துக்கு வெளியேயுள்ள பொருள்களைத்தான் அவர்கள் காப்பாற்ற எண்ணுகிறார்கள்…”

அவன் அவளது கரங்களை எடுத்து, அவற்றை அழுத்திப்பிடித்தவாறு பேசினான்:

”நீ மட்டும் இந்தச் செய்கையிலுள்ள கசப்பையெல்லாம் உணர்ந்துவிட்டால், இந்தச் செய்கையின் வெட்ககரமான கேவல நிலையை உணர்ந்துவிட்டால், நாங்கள் எந்த சத்தியத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை லகுவில் புரிந்து கொள்வாய். அந்தச் சத்தியம் எவ்வளவு மகத்தானது, புனிதமானது, அருமையானது என்பதையும் நீ கண்டு கொள்வாய்!”

தாய் உணர்ச்சி வசப்பட்டு எழுந்தாள். தனது இதயத்தையும் தன் மகனது இதயத்தையும் ஒன்றாக்கி ஒரே ஜோதியாக, பிரகாசமான ஏக ஜோதிப் பிழம்பாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனத்தில் நிறைந்து நின்றது.

”கொஞ்சம் பொறு , பாவெல்” என்று சிரமத்தோடு முனகினாள் அவள், “என்னால் அதை உணர முடியும் …… கொஞ்சம் பொறுத்திரு.”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) யூதாஸ் – ஏசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தவன். அவரோடு கூடவே இருந்து துரோகம் செய்தவன். – மொ-ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க