மூன்று அதிமுக குண்டர்களின் விடுதலைக்கு என்னவெல்லாம் பொழிப்புரை போடுகிறார்கள்? சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் மறைந்து போன ஜெயா! அந்தப் பெரும் கொள்ளையில் கொசுறு வழக்குதான் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு. நீதிமன்றத்தால் 2000-ம் ஆண்டில் ஜெயாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதிமுக காலிகள் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

எரித்துக் கொல்லப்பட்ட 3 மாணவிகள் மற்றும் எரிக்கப்பட்ட பேருந்து

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரியில் அப்பேருந்தை வழிமறித்த அதிமுக காலிகள் தீவைத்தனர். இதில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள்தான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எடப்பாடி – மோடி அரசுகள் கூட்டாக நடத்திய இந்த கேடுகெட்ட செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் ஏழு பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேற்கண்ட மூன்று பேர் எப்படி விடுதலை செய்யப்பட்டனர் என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.

படிக்க:
♦ செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

இதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஆளுநர் விளக்கமளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 1858 கைதிகளை 161-வது பிரிவின் கீழ் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பிப்ரவரி மாதம் கோப்பு அனுப்பியதாம். அதில் 5 ஆண்டுகளுக்கு பதில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளைத்தான் விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியதால் மே 3 அன்று புதிய ஆணை தமிழக அரசால் வெளியிடப்பட்டதாம். இதன் பிறகு ஒவ்வொரு கைதிக்கென தனித்தனி கோப்புக்கள் சிறைத்துறை டிஜிபி தலைமை தாங்கிய குழுவால் அனுப்பப்பட்டதாம். அதன்படி ஆளுநரின் ஒப்புதலோடு இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

மூன்று மாணவிகளை பேருந்தோடு  எரித்த அதிமுக காலிகள்

அதில் மூன்று அ.தி.மு.க கைதிகளின் விவரங்களை பரிசீலித்த ஆளுநர் திருப்பி அனுப்பினாராம். அதே கோப்பை தமிழக அரசு அக்டோபர் மாதம் 25 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியதாம். பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31 அன்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனராம். அதிமுக ரவுடிகள் மூன்று பேரும் கும்பல் மனநிலையில் அப்படி செய்துவிட்டதாக சுட்டிக் காட்டினராம். பிறகு ஆளுநர் வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டாராம்.

ஆளுநர் புரோகித்துக்கு தலைமை வழக்கறிஞர் சில முக்கியமான ’லா பாயிண்டு’களை தெளிவாக்கினாராம். “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட ஐந்து கருத்துக்களாவன: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.”

அதற்கப்பால் தெளிவான ஆளுநர், ”அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இந்த மூவரும் வருவர்” என வழக்கறிஞர் சொல்லியதை ஏற்று விடுவிக்கும் ஆணையை பிறப்பித்தாராம்.

படிக்க:
♦ சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
♦ மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

இந்திய அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் சில நீதித்துறை அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கவும் அவற்றை நிறுத்தி வைக்கவும், குறைக்கவுமான அதிகாரம் குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு உண்டு.

அரசியல் சட்டப் பிரிவு 72-ன்படி குடியரசுத் தலைவரும், பிரிவு 161-ன்படி மாநில ஆளுநர்களும் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கும்கூட மன்னிப்பு வழங்க முடியும். ஆளுநர்கள் மரண தண்டனை தவிர்த்த மற்ற தண்டனைகளை மன்னிக்கவும் குறைக்கவும் மட்டுமே அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த நிர்வாக அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மூலம்தான் நடைபெறுமே அன்றி குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ தன் விருப்பப்படி செய்ய முடியாத ஒன்று.

இந்திய ரப்பர் ஸ்டாம்ப் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ரப்பர் ஸ்டாம்ப் பன்வாரிலால் புரோஹித்

ரப்பர் ஸ்டாம்ப் எனும் விதி இங்கேயும் செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். அதிகபட்சம் இவர்கள் அமைச்சரவை அனுப்பும் பரிந்துரைகளை திருப்பி அனுப்பலாமே அன்றி அவற்றை மறுக்க முடியாது. அந்தபடிக்கு இந்த மூவர் விடுதலைக்கு ஆளுநர் அளித்திருக்கும் விளக்கத்தை பார்த்தால் அது ஏதோ அவரது தீவிர கருணை மற்றும் சட்ட ஆராய்ச்சியின் படி அளிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் தருகிறது. இப்படி விளக்கும் கூறுவதே முதலில் பாரிய தவறு.

ஏனெனில் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரும் அரசின் பரிந்துரைகள் டெக்னிக்கலாக சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆயுள் தண்டணைக் குறைப்பு என்றால் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்று சில விதிகள் வைத்திருக்கிறார்கள். அவற்றைத்தான் ஆளுநர் சரிபார்க்க வேண்டுமே அன்றி குற்றவாளிகள் யார் அவர்களது குற்றம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.

அப்படிப் பார்த்தால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும், இந்துமதவெறியர்களின் செல்வாக்கால் தமிழக அரசாங்கங்கள் கடந்த ஆண்டுகளில் சிறைபிடித்த நூற்றுக்கணக்கான முசுலீம் கைதிகளையும் அல்லவா விடுவித்திருக்க வேண்டும்? அவர்களை என் விடுவிக்கவில்லை?

கேட்டால் அடிமை எடப்பாடி அரசின் டி.வி நிலைய வித்வான்கள் எழுவர் விடுதலைக்கு நாங்கள் பரிந்துரை அனுப்பிவிட்டோம், ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும், அவர் தாமதப்படுத்துவதற்கு காரணம் டில்லிதான் என்று கையைத் தூக்குகிறார்கள். அப்படித் தூக்கும் போது அவர்களது உடைகளும் கீழே கழன்று அம்மணமாக விழுவது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருக்கும் எழுவர்

மக்கள் அதிகாரம் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விசாரணை அதிகாரிகளின் சுயபரிசீலனை வாக்குமூலங்கள், இராசிவ் காந்தி குடும்பத்தினரின் மன்னிப்பு, உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, விடுதலைக்கான தமிழக அரசின் பரிந்துரை… என அ.தி.மு.க. கொலையாளிகளை விட இராசிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்கான காரணிகளே இங்கு அதிகமாக உள்ளன. ஆயினும், இவர்கள் தமிழின உணர்வாளர்கள் என்பதாலேயே, எல்.டி.டி.இ., தீவிரவாதம், பிரிவினைவாதம், தேசப்பாதுகாப்பு போன்ற பூச்சாண்டி வேலைகளைக் காட்டி இவர்களின் விடுதலை திட்டமிட்டவகையில் தள்ளிப்போடப்பட்டு வருகின்றது.” என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், “தமிழர்களின் மீதான வன்மம் காரணமாக இவர்களின் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் போராட்டக் களத்திற்குத் தள்ளுவதாகவே அமையும்” என்று எச்சரித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.

பிரிவு 161-ன்படி விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் மட்டுமே வரும். அதற்கு ஆளுநர் எனும் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை போட்டு அங்கீரிக்கத்தான் வேண்டும். அதற்கு தில்லி மோடி அரசு உத்தரவு வேண்டும் என்றால் இவர்கள் என்ன எழவுக்கு கோட்டையில் குந்தியிருக்கிறார்கள்? இப்படி ஒரு வாதம் விளக்கம், மம்தா ஆளும் வங்கத்திலோ, சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரத்திலோ வருமா என்று பலர் எடப்பாடி அடிமைகளைக் கேட்கின்றனர்.

ஆனால் எடப்பாடி கும்பலோ தனது கட்சி கும்பலை திருப்திப் படுத்துவதற்காக மூவர் விடுதலையை பயன்படுத்துவதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து பொறுக்கித் தின்ன காத்திருப்பதால் தனது அடிமைத்தனம் எனும் அம்மணத்தை வெட்கமின்றி ஏற்கிறது.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன
♦ ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

இந்த அடிமைகள் பேசத்தவறிய லா பாயிண்டுகளை பாஜக எஜமான்கள் அள்ளி விடுகிறார்கள். எழுவர் விடுதலை என்பது பயங்கரவாத வழக்கு தொடர்புடையதாம். அதில் சிபிஐ, இதர தேசிய முகமைகள் விசாரித்திருப்பதால் மாநில அரசு தலையிட முடியாதாம். இந்த அத்துப் போன வாதங்களையெல்லாம் மறுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டதே என்றால், ஏன் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

இவர்களே ஒரு பயங்கரவாதிகள் என்பது ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே எனும் பயங்கரவாதியை அன்றைக்கிருந்த காங்கிரசு கட்சியின் மராட்டிய அரசு பத்தாண்டு முடிந்தது என்று விடுதலை செய்தது. இதற்கு மேல் புருலீயா ஆயுத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு கூட பிரிவு 302-ன் கீழ் தான் நடந்தது. அது குறித்த ஜெயின் கமிஷன் அறிக்கை மீதான விசாரணை இன்னும் முடியவில்லை. இவர்களது பொய்க் குற்றசாட்டிற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரும் அநீதியல்லவா?

பாஜக பாசிஸ்டுகளின் ராமராஜ்ஜியம்

பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்கும். அதனால் தேர்தலில் தமது ஆதாயம குறையுமென்பதோடு, பாஜக எதிர்ப்பு அரசியல் போராட்டங்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் இந்த அக்கிரமத்தை செய்கின்றனர்.

மேலும் கும்பல் வன்முறை மனநிலை எனும் இந்த விளக்கத்தின்படி பார்த்தால் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இந்துமதவெறியர்கள் தினசரி பத்து பேர்களைக் கொன்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதே அவர்களை முறையாக கைது செய்து வழக்கு போடுவது இல்லை என்பதோடு எதிர்காலத்தில் யாராவது அப்படி போட்டாலும் ஆளுநர்கள் விடுவித்து விடுவார்கள்.

இந்த நாட்டின் அரசமைப்பு சட்டப்படி நடக்கவில்லை என்பதோடு, சட்டத்தை மீறுகின்ற முதல் அமைப்பாகவும் அதுதான் இருக்கிறது. எழுவர் விடுதலைக்காக தமிழகம் வீதிக்கு வந்து போராடாத வரை பாஜக பாசிஸ்டுகள் அடிமை எடப்பாடி மூலம் அதை தடுக்கவே செய்வார்கள்!