மிழகத்தின் கிழக்கே நீண்டு நெடிந்து படர்ந்துள்ள வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று அதிராம்பட்டினம். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கடற்புறத்தை ஒட்டி அமைந்துள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறக்கரை.

இங்கு சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மீனவக்குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நூற்றுக்கும் அதிகமான நாட்டுப்படகு (ஃபைபர் போட்) வைத்து மீன்பிடித்துத் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதைய கஜா புயலானது இவர்களின் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.

அங்கு நாம் பார்த்துப் பழகிய மெரினா போன்றோ அல்லது புதுச்சேரி போன்றோ கடற்கரையானது காணப்படவில்லை. ஒரு வாய்க்காலில் ஃபைபர் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது ஆங்காங்கே குப்புறக் கிடந்த படகுகள் மற்றும் சிதறிக் கிடந்த வலைகளைக் காண முடிந்தது.

சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் எங்களை விடவும், மீனவ மக்களுக்கு அதிக பாதிப்பு எனத் தங்களின் சொந்த பாதிப்பையும் கூட பின்னால் வைத்துதான் பேசினர். அப்போது அங்கு தனது வலைகளை சீர்படுத்திக்கொண்டிருந்த மீனவர் சங்கரிடம் விசாரித்த போது அவர் விவரிக்கத் தொடங்கினார்.

மீனவர் சங்கர்.

“இன்னைக்குதான் எங்க படகுகளையெல்லாம் மேல ஏத்தி வச்சி இருக்கோம். புயல்ல அப்புடியே தண்ணில தலகுப்புற கிடந்தது இந்த படகெல்லாம். அப்புடி நிலமை இருந்த போதும் கூட அரசாங்கத்துல இருந்து யாரும் வரல…

அதுக்குப்பின்னாடி நாங்க இந்த ECR ரோட்டுல உக்காந்த பொறவுதான் ஆர்.டி.ஓ., கலெக்டரு எல்லாம் வந்தாங்க. ஆனா யாரும் இங்க வந்து முறையா பாக்கல. எங்ககிட்ட எத்தன படகு சேதமுன்னு கேட்டு எழுதிகிட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் ஜே.சி.பி.-ய கொண்டாந்து தண்ணில கெடந்த படகுகளை மேல ஏத்தி போட்டாங்க. அதுக்கப்புறம் நாங்க பாத்து எது.. எது எங்களோட வலை, பொட்டின்னு தேடி எடுத்துவச்சி பழுது பாத்துட்டு இருக்கோம்.” என்றார்.

சரி உங்க ஊரப் பத்தி, தொழில பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…

“எங்க ஊரு பேரு ஏரிப்புறக்கரை… இங்க சுத்தி ரெண்டுபக்கமும் பெரும்பாலும் விவசாயம்தான் செய்யுறாங்க… நடுவுல மட்டும் நாங்க ஒரு இருநூறு குடும்பத்துக்கு மேல மீனவர்கள் வாழ்ந்துட்டு வாரோம்.

என்ன எங்க தொழிலு கடலுக்கு போயி கிடைக்கிற இறாலு.. நண்டு.. அப்பைக்கப்ப கொஞ்சம் மீனு கிடைக்கும். அத கொண்டாந்து இங்க அதிரம்பட்டனத்துல வித்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கோம்.

இங்க உள்ள மீனவர்கள் பொருத்த வரைக்கும் விசைப் படகு மாதிரி தங்கி மீன் பிடிப்பது கிடையாது. ஒரே நாள்ல காலைல 4 மணிக்கு கிளம்புனா போற தூரத்த பொறுத்து அன்னைக்கு சாயங்காலம் 3 மணில இருந்து 6 மணி வாக்குல திரும்பி வந்துடுவோம். இங்க கரையில வியாபாரிங்க பைக்குல வந்து எங்க மீன வாங்கிட்டு போயி அதிராம்பட்டினம் மார்க்கெட்டுல விப்பாங்க.

எங்க தொழில பொருத்தவரைக்கும் எல்லாமே கடன்லதான் ஓடிகிட்டு இருக்கு. நாங்க ஒரு ஐம்பதாயிரம் ஒருலச்சமுன்னு வலையும் கடன்லதான் வாங்கி இருக்கோம். கடலுக்கு நாங்க ஒரு 3 – 4 பேர் போனாத்தான் எங்களுக்கு வேலைகள் பாக்குறதுக்கு வசதியா இருக்கும். கெடைக்குற வருமானத்த பங்கு பிரிச்சிப்போம். ஆனா சரியா மீன் கிடைக்காம போச்சுன்னா எங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. அதனால இப்பல்லாம் ஒரு படகுக்கு 2 பேர் ஒருத்தருன்னுதான் போறோம்.

மீனவர் ரகுராமன்.

நாங்க கடல்ல 15 நாட்டிக்கல் வரைக்கும் கூட போவோம். சில நேரங்கள்ல மீன் கிடைக்காம இன்னும் உள்ளார போறதும் உண்டு. அப்பத்தான் வலைய சீர் செய்யுறதுக்கு, படகு மெயிண்டன் பன்னுறதுக்குன்னு கொஞ்சம் பணத்த ஒதுக்க முடியும்.

படிக்க:
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

அதே போல வலைகள அப்பய்க்கப்ப சீர்படுத்தனும் ஏன்னா ஒருமுறை மீன் பிடிச்சா அதுக்கப்புறம் வலையில் இருக்குற ஓட்ட பெருசா போயிடும். அடுத்தமுறை அந்த வலைய போட்டமுன்னா மீனோ இல்ல நண்டோ வலையில தங்காது. அதுமாதிரி வலை அழிஞ்சி போகும்போது அதுக்கு திரும்பவும் கடன் வாங்கிதான் வலை வாங்கி போடனும். சில நேரம் கடல்ல வலை இழுத்துகிட்டு போயிடும். அதுக்கு அடையாளமா ஒரு கொடி கட்டி கடல்ல கொம்ப போட்டுடுவோம். பல ஆயிரம் மதிப்பு இருக்கக்கூடிய வலைகளுக்கு அடையாளம் பாதுகாப்பு எல்லாமே இந்த ஒரு கொம்பு மட்டும்தான்.

ஏது எப்படியோ எங்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ கடன்மட்டும் ஏறிகிட்டு இருக்கும். வர வருமானம் பூரா அந்த கடனுக்கு வட்டிகட்டுறது அன்னாட குடும்ப செலவுக்குதான் சரியா இருக்கும்.

அந்த வருமானமும் எல்லா நாள்லயும் இருக்காது. ஏன்னா இங்க பக்கத்துல மல்லிப்பட்டனத்துல விசைப்படகுகள் அதிகம். அதனால மீன்பிடிக்குறதுல எங்களுக்குள்ள பிரச்சினை வரக்கூடாதுன்னு அவங்க ஒரு நாள் நாங்க ஒரு நாளுன்னு மாத்தி மாத்தி போறதால மாசம் 15 நாள் தான் வேலை இருக்கும்.

அதுக்கப்புறம் புயல் அறிவிப்புன்னு அரசாங்கம் சொல்லிடுச்சின்னா நாங்க கடலுக்கு போக மாட்டோம். அப்ப வருமானம் போயிடும். இதுமாதிரிதான் எங்க வாழ்க்கயே கடல்ல அன்னாடம் காய்ச்சியாக மாறி இருக்கு.

அதுமட்டும் இல்லாம கொஞ்சம் மீன் ஏதாவது கிடைக்குமுன்னு முன்ன போனா இலங்கை கடற்படை வந்து புடிச்சிட்டு போயிடும். எங்க பொருளுக்கும் உயிருக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

இந்த புயலால உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு …

“பொதுவாவே மழைபேஞ்ச்சா இங்க இந்த வாய்க்கால் பூரா நிறைஞ்சிடும். ஆனா அது கொஞ்ச நாள்ல இறங்கிடும். அப்ப நிறுத்தி வச்சி இருக்குற படகுகள் கொஞ்சம் ஒன்னோட ஒன்னு மோதுறதால பாதிக்கும் அத நாங்களே சரி பண்ணிப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு புயல நான் பாத்ததில்ல. எங்க அப்பா தாத்தா காலத்துல என்ன நடந்துச்சோ தெரியாது. இதுதான் பெரிய பாதிப்பு.

அரசாங்கம் புயல் எச்சரிக்க குடுத்ததும் பலரும் இங்க இருக்குற புயல் கட்டிடத்துல தங்கிட்டோம். படகுகளையும் மேல ஏத்தி கட்டிட்டோம். ஆனாலும் படகுகள் எதையும் காப்பாத்த முடியல. எல்லாம் தண்ணியில பெறண்டு போயி அதுல இருந்த வலை, பாக்ஸ் (பெட்டி) எல்லாமும் வாய்க்கால்ல கெடந்துது.”

இப்ப ஏற்பட்ட பாதிப்புகள சரி செய்ய என்ன பண்ணனும்?

“இப்ப பாத்தா எல்லா போட்டும் சேதமாகி போயி இருக்கு. இந்த படக வச்சிகிட்டு நாம கடலுக்குள்ள போக முடியாது. அதனால அதுல இருக்குற ஓட்டைகள சரி பண்ணனும் அதுக்கு கொறஞ்சது ஒரு இருபதாயிரம் வரைக்கு செலவாகும். எஞ்சின் தான் ரொம்ப முக்கியமானது. அது இப்ப தண்ணில மூழ்கிப் போனதால எல்லாத்தையும் பிரிச்சி ரிப்பேர் செய்யனும். அதுக்கே, 30,000/- ஆயிடும். வலைகளெல்லாம் இப்ப எதுக்கும் பிரயோஜனம் இல்லாம போயிட்டு. வலைகள் வாங்கனுமுன்னா அது கொறஞ்சது நாப்பதாயிரம் வரைக்கும் ஆயிடும். நாங்க ஒரு ஐம்பதாயிரத்துல இருந்து ஒரு இலட்சம் வரைக்கும் அவுங்கவுங்க பாதிப்ப பொருத்து செலவு பண்ணனும்.

இதெல்லாம் சரி செஞ்சி தொழிலுக்கு போகறதுக்கு கொறஞ்சது ரெண்டுமாசம் ஆயிடும். இப்ப ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.”

அரசாங்கம் நிவாரணம் எல்லாம் உங்களுக்கு சரியா கிடைக்கும்னு நினைக்குறீங்களா?

“அரசாங்கத்த தவிர வேற யாரும் எங்களுக்கு நிவாரணம் தரமுடியாது. ஏன்னா, இன்னிக்கு பல ஊர்கள்ல இருந்தும் காலேஜி பசங்க, முசுலீம் அமைப்புகள் எல்லாம் வந்து சாப்பாடு போடுறது பெட்சீட் துணி மணி எல்லாம் செய்யுறாங்க. அது ஜனங்களா தன்னார்வமா வந்து செய்யுறது. அத சும்மா சொல்லக்கூடாது ரொம்ப உதவி பண்ணுறாங்க ஆனா அது மட்டும் எப்புடி நிவாரணமாகும்? எங்களுக்கு வாழ்வாதாரத்த உத்திரவாதம் செஞ்சா தானே நாங்க பொழைக்க முடியும்.

ஏதாவது செய்யணுமுன்னு நாங்க எதிர்பாத்துகிட்டு தான் இருக்கோம். எங்களுக்கும் அரசாங்கத்தவிட வேற வழி ஏதுமில்ல… ஆனா செய்யுமான்னு தெரியல… செய்யலன்னா திரும்பவும் போராட்டம்தான் செய்யணும்..

இது வரைக்கும் கடற்கரையில மட்டும் தான் பாதிப்பு இருக்கும். ஆனா இந்த முறை மேல ஏரி பூரா ஊரையும் நாசம் பண்ணி இருக்கு. தென்னை, நெல் எல்லாம் வீணா போயி இருக்கு. அங்கயும் போய் பாருங்க கொஞ்சம்…” என தனது வாழ்க்கை சோகத்திலும் அடுத்தவர் பாதிப்பையும் தன் பாதிப்பாக பார்க்கின்றனர் மீனவ மக்கள்.

சென்னை பெருவெள்ளத்தின் போதும், கேரள வெள்ளத்தின் போதும் யாரும் கேட்காமலேயே ஓடோடி வந்த மீனவ மக்களை வர்தா புயலின் போதும் சரி, ஒக்கி புயலின் போதும் சரி நிற்கதியாய் தவிக்கவிட்டது இந்த அரசாங்கம். அந்த வரிசையில் கஜா புயலையும் சேர்த்து விட்டார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க