முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆலங்காடு. அப்பகுதியின் தொடக்கமான செட்டித்தெரு பகுதியில் மக்கள் கூட்டமாக உணவு சமைத்து அதனை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே சோற்றுக்கு வழியில்லாது தவித்துவரும் இந்த நேரத்தில் கூலி விவசாயிகளின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அச்சாலையில் போகின்ற வாகனங்கள் அனைத்தின் முன்பும் கைகாட்டி நிறுத்துகின்றனர். அவற்றில் பல இவர்களைப் பார்த்ததும் வேகமெடுக்கின்றன. கிட்டத்தட்ட அவர்களை வாகனங்கள் இடித்துவிடும் என்ற நிலை வரும் நேரத்தில் விலகி விடுகின்றனர். சில வாகனங்கள் வேகத்தை குறைத்தால் அதில் நிவாரணப் பொருட்கள் ஏதேனும் தங்களுக்கு கிடைக்குமா என அவர்களிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே கிடைத்த பொருட்கள் இருப்பின் அந்த வாகனத்தை அனுப்பி வைக்கின்றனர். பல ஊர்களில் இருந்து வரும் தன்னார்வலர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பதை கூறி நிற்கின்றனர்.

மக்களிடம் கேட்டதற்கு,

எங்கள் பகுதி முழுவதும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் விவசாயக் கூலிகள் நிறைந்த பகுதி, எங்களின் உடமைகள் அனைத்தும் சேதமாகிப் போய்விட்டது. பெரும்பாலும் கூரை வீடுகள். புயலில் கூரைகள் அனைத்தும் பறந்து விட்டன. அதுமட்டுமல்ல சமைத்து சாப்பிடுவதற்கு எந்தப் பொருளும் இல்லை. அனைத்தும் நாசமாகிப் போய்விட்டது. இங்கு இப்பகுதியில் உள்ள மாடி வீடுகளில் தான் புயலின் போது அனைவரும் தஞ்சமடைந்தோம். அதன் பின்னர் கடந்த ஏழு நாட்களாக எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அமைச்சர்கள் அதிகாரிகள் இவர்களெல்லாம் யாரைப் பார்வையிட செல்கிறார்கள் எனத் தெரியவில்லை. நாங்களும் கிடைத்த பொருள்களை வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தோம்.

அதுவும் கூட ஒவ்வொருவரும் தங்கள் கையில் கிடைக்கும் பணத்தை சேர்த்துப் போட்டு பொருட்கள் வாங்கி, ஊருக்கு மையமான இடத்தில்  உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் இன்று அவர்களிடம் எஞ்சியிருந்த பொருட்களும் காலியாகி விட்டது. சிலர் தங்களிடம் இருந்த கடைசிப் பணத்தையும் போட்டுவிட்டனர். இந்த நிலையில்தான் ஈ.சி.ஆர். சாலையில் அனைவருக்கும் தெரியும்படி உணவு சமைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எப்படியாவது தங்களின் துயரம் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு தெரியாதா? என்ற ஏக்கத்தை அவர்கள் சொல்லியதில் இருந்து உணர  முடிந்தது.

அப்படி இருந்தும் கூட யாரும் வாகனத்தை நிறுத்தி எந்த நிவாரணப் பொருளும் தராத காரணத்தால் தான் தாங்கள் இப்போது அனைத்து வாகனங்கள் முன்பும் கைகாட்டி ஏதாவது நிவாரணப் பொருள் கிடைக்குமா என கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

நாங்கள் அப்பகுதியை நெருங்கும் போதுதான் நாம் தமிழர் கட்சியின் நிவாரண வாகனம் சென்றிருக்கிறது. அதனை மறித்து தங்கள் நிலைமையை சொன்னபிறகு அதிலிருந்த ஒருமூட்டை அரிசியை அவர்களுக்கு தந்திருக்கின்றனர்.

நாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான் கவர்னரின் வாகனமும் கடந்து சென்றது. அதற்கு சற்று முன்னர்தான் டி.டி.வி. தினகரனின் வாகனமும் சென்றிருந்தது. இவ்வாறு பலரும் தங்களை கடந்து செல்கின்றனர்.

“எல்லாரும் இங்க மெயின் ரோட்டிலேயே பாத்துட்டு போறானுவோ.. உள்ள கொஞ்சம் எறங்கி பாத்தாதானே எங்க நெலமை தெரியும்… போட்டோ புடிக்கிற நீங்களும் கூட இங்க மட்டுதான் வார்ரீங்க.. வாங்க உள்ள போயி பாக்கலாம் எங்க நெலமைய சொல்லுங்க எல்லாருக்கும் தெரியட்டும்…” என அழைத்துச் சென்றனர். அங்கு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் சேதத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தனர்.

அரசு நிவாரணம் பற்றி …

“அங்காடியில (அரசு நியாயவிலை அங்காடியில்) மொதல்ல ரெண்டு மூட்ட அரிசி, பருப்பு எண்ணெ.. இதெல்லாம் குடுத்தாங்க அதுக்கப்புறம் எங்களுக்கு வேற எதுவும் குடுக்கல.. காய்கறி, மளிகை சாமான் எல்லாம் நாங்கதான் காசு போட்டு ஏற்பாடு செஞ்சோம். நீங்களே சொல்லுங்க ரெண்டு மூட்ட அரிசி எத்தனை நாளுக்கு போதுமானதா இருக்கும்? சொல்லுங்க நாங்க ஒரு நாப்பது குடும்பத்துக்கு மேல இங்க இருக்கோம்..” என நம்மையே திருப்பிக் கேட்டனர்.

“அது மட்டுமில்ல அரசாங்கம் எங்களுக்கு சொன்ன நிவாரணத்த இன்னும் தரவே இல்ல. பத்துகிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, புடவ எதுவும் இன்னும் தர ஆரம்பிக்கல அத குடுத்தாக்கூட நாங்க வீட்டுலயே சமச்சி சாப்பிட்டுகிட்டு இருப்போம். எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்புடி ரோட்டுல நின்னு சாப்புடனமுன்னு.” என கொந்தளித்தனர்.

படிக்க:
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

உண்மையில் பலரும் தன்னார்வமாக வந்து இவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான உதவிகளை தங்களால் இயன்ற அளவு செய்கின்றனர் அது தற்போது அவசியமானதுதான். அதே நேரத்தில் தலைமைச் செயலர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை அரசு ஊழியர் வலைபின்னலை வைத்துள்ள அரசு அவர்களை இன்று கையேந்த வைத்துள்ளது. இந்நிலைமை பொறுக்காமல்தான் பல இடங்களில் விவசாயிகள் போராட ஆரம்பித்துள்ளனர். ஆளும்கட்சி அமைச்சர்களை விரட்ட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த புயல் மக்களுக்கு பேரழிவை மட்டுமல்ல ஒரு பாடத்தையும் தந்துவிட்டு சென்றுள்ளது.

வினவு களச் செய்தியாளர் தற்போது எப்படி தங்கள் வீடுகளுக்கு மேற்பூச்சு செய்தோ அல்லது ஒருபக்கம் மட்டும் தார்பாய் கட்டியோ வாழ முடியாது என்பதோடு வீட்டை மறுகட்டுமானம் செய்ய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அது போல இந்த அரசிடம் தமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டும் என்ற அவசியத்தையும் மக்கள் கற்று வருகின்றனர்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க