ஜா புயல் ஏற்படுத்திய இழப்பால் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இருந்து மக்கள் படும் அவதிகள் எந்த வகைப்படுத்தலிலும் அடங்க மறுக்கிறது. வீடிழந்தோர், வாழ்விழந்தோர், எதிர்காலம் கேள்விக்குறியானோர் என்ற பட்டியலில் தற்போது தற்கொலைகளும் சேர்ந்துள்ளன.

விவசாயி சுந்தர்ராஜன்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவரின் வயது 57. இவர் தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார். தென்னை மரங்களில் பெரும்பாலானவை கஜா புயலில் முறிந்து விழுந்தன. அன்றிலிருந்து சுந்தர்ராஜனும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் 21.11.2018 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடினாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் சுந்தர்ராஜன் நேற்று 22.11.2018 காலை ஊரின் அருகே உள்ள ஒரு குளக்கரையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தென்னை மரங்கள் சாய்ந்ததால் சுந்தர்ராஜன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதா என்ற மகளும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர். மரங்கள் முறிந்து விழுவதற்கு ஒரு புயல் போதுமானது என்றால் அந்த முறிவை சந்திக்கும் மக்களை தூக்கி நிறுத்த இங்கு எந்த ஆதார நம்பிக்கையும் இல்லை. இதுதான் நமது அரசு – சமுதாயத்தின் இலட்சணம்.

படிக்க:
♦ விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
♦ பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

சுந்தரராஜனைப் போன்று மன உளைச்சலில் மரணத்தை தேடுவோர் எத்தனை பேர் இருப்பார்கள்?

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சிவாஜி. இவரது 1 ஏக்கர் தென்னந் தோப்பை கஜா புயல் தாக்கியதில் வீட்டோடு மரங்களும் சரிந்தன. வீடில்லாத நிலையில் இவர் தனது தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.

விவசாயி சிவாஜி மாரடைப்பில் மரணம்

நேற்று 22.11.2018 காலை தனது தோப்புக்குச் சென்று சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டவர், வீடு திரும்பினாலும் தொடர் வேதனையில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் மயங்கி இறந்து போனார். இவருக்கு குணமதி என்ற மனைவியும், ஆனந்தன், கார்த்தி என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர். சிவாஜியின் வேதனையை புரிந்து கொண்டு அவரது வாழ்வைத் திருப்பித் தரும் நம்பிக்கையை தருவதற்கு இங்கு யாரும் இல்லை.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி குறுநில மன்னர்களது குழாமின் கடிவாளத்தை வைத்திருக்கும் பாஜக ஆளுநர் புரோகித்தும் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றார். அதிகாரிகள், காவலர்கள் படை சூழ நான்கு அடி நடந்து மூன்று மாவட்டங்களிலும் மூன்று இடங்களைப் பார்வையிட்டார். சில இடங்களில் அவரை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஓரிடத்தில் அவரது பவனி பரிவார ஊர்வலத்தை எதிர்த்து சாலை மறியல் செய்தார்கள். அவருக்கு மக்கள் காண்பித்த இந்த எதிர்ப்பை “நிவாரணப் பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு செய்தார்” என்று ஊடகங்கள் தலைப்பை போடுகின்றன.

பரிவாரங்கள் புடைசூழ புரோஹித் ‘ஆய்வு’ப் பணி

அது மட்டுமா, சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் பெண்கள் கதறியதை காலில் விழுந்து கதறினார்கள் என்று ஊடகங்கள் செய்தி போடுகின்றன. ஒரு ஹெக்டேர் நெற்பயிருக்கு ஒரு இலட்சமும், ஒரு ஹெக்டேர் தென்னைக்கு 10 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று சில அப்பாவி விவசாயிகள் ஆளுநரிடம் கேட்டிருக்கின்றனர். அவரோ எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று ஆசியளித்து விட்டு தனது ‘ஆய்வு’ப்பணியை முடித்து விட்டு திரும்பினார்.

கஜா புயலின் சேதம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அந்த சேதத்தின் வீச்சு எப்படி என்று தமிழக அரசுக்குத் தெரியாது. இன்று வரை பெரும்பாலான கிராமங்களில் அரசின் நிவாரணப் பணிகளோ, அதிகாரிகளோ எட்டிப் பார்த்து விடவில்லை. இந்நிலையில் குடிசைகள், தென்னை, வாழை, நெற்பயிர், படகுகள், வலைகள், சிறு தொழில்கள், கூலித் தொழிலாளிகள் என இலட்சகணக்கான வாழ்க்கை குறித்து தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது.

ஆரம்ப நாட்களில் மக்கள் அமைச்சர் வந்த இடங்களில் எல்லாம் மறித்தார்கள். இதனால் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்த எடப்பாடி அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பினார். ஏனெனில் நாகையில் மழையாம். கொட்டும் மழையில் மக்கள் அங்கே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, சுற்றியடித்த புயலில் அவர்களது வாழ்க்கை சின்னா பின்னமாயிருக்கும் போது அதை நேரில் சென்று கூட எட்டிப் பார்க்க வக்கற்றது இந்த அதிமுக கொள்ளைக் கூட்டம்.

படிக்க:
♦ அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி
♦ தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

ஹெலிகாப்டரிலேயே சேதத்தை பார்த்து விட்டேன் என்று எடப்பாடி சொல்வதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும்? ஆயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக ஒதுக்கியதாக கூறும் எடப்பாடி, தில்லி சென்று தனது பாஜக எஜமானர்களை சந்தித்து 15,000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். நான்கு மாநில தேர்தலுக்காக வார்டு வார்டாக சுற்றும்  மோடி, வழக்கம் போல இந்த பேரிடர் பாதித்த பகுதிகளை பார்ப்பதற்கு வரவில்லை. ஆனாலும் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதாம்.

எடப்பாடிக்கே தெரியாத அவர் பார்க்காத அவரது அரசாங்கம் கணக்கீடு செய்யாத பாதிப்புகள் குறித்து அவர் தில்லிக்கு ஒரு கணக்கு கொடுத்து நிவராணம் கேட்பாராம். ஏற்கனவே வர்தா, தானே, ஒக்கி புயலில் தமிழக அரசு கேட்ட தொகையில் 20-ல் ஒரு பங்கு மட்டும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பட்டேல் சிலைக்கு 3000 கோடி, நீரவ் மோடிக்கு 12,000 கோடி, மல்லையாவுக்கு 8,000 கோடி என்று அள்ளிக் கொடுத்தவர்கள் முக்கால் கோடி மக்கள் தொகையைக் கொண்ட டெல்டா மாவட்டங்களுக்கு என்ன ஒரு 500 கோடி ரூபாய் கொடுத்தால் அதிகம்.

தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி

பிறகு எடப்பாடி கெஞ்சிக் கேட்ட பிறகு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் குழுவை அனுப்புவதாக மோடி பெரிய மனதுடன் சம்மதித்தாராம். வருகை தரும் மத்திய குழுவுக்கு உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை வகிக்கிறாராம். அவர்கள் இன்று 23.11.2018 சென்னை வந்து விருந்தினர் மாளிகையில் அறுசுவை விருந்துண்டு, நாளை தஞ்சை சென்று பெரிய கோவிலில் வழிபட்டு பிறகு முதன்மைச் சாலையில் கேமராக்களோடு ஒரு வயல் பிக்னிக் செல்வார்கள். ஜிலேபியையும், சமோசாவையும் மட்டும் அறிந்தவர்களுக்கு நெல்லென்ன, தென்னை என்ன, மீனவர் வலை என்ன எல்லாம் ஏதோ ஒரு நேட்டிவிட்டி படம் பார்ப்பது போலத் தெரியும். பச்சை பசுமைகளை பார்த்து விட்டு சில பல செல்ஃபிக்களை எடுத்து விட்டு அவர்கள் திரும்புவார்கள். பிறகு பேரம் பேசும் தமிழக அரசு அதிகாரிகளோடு புன்சிரிப்புடன், போதும்ஜி ஒரு 300 கோடி ரூபாயை வெச்சுக்குங்க, இதுவே அதிகம் என்பார்கள்.

தி.மு.க ஆட்சியில் கொடுத்ததை விட நாங்கள் அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று கூவுகிறார் எடப்பாடி. இறந்தவர்களுக்கு பத்து இலட்ச ரூபாய், படுகாயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம், இறந்து போன மாடுகளுக்கு 30,000 ரூபாய், ஆடுகளுக்கு 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கு 10,000 ரூபாய், பாதி சேதமடைந்தால் 4,100 ரூபாய் என்றெல்லாம் கூறியிருக்கிறார். பாதிப்படைந்த கிராமங்களில் பலவற்றுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளே இன்னும் வராத நிலையில் இந்த இழப்பீட்டை எப்படி கணக்கீடு செய்வார்கள்? அதுவரை செத்துப்போன மாடு – ஆடுகளையும், சரிந்து கிடக்கும் மரங்களையும், பயிர்களையும் வைத்திருக்க வேண்டுமா?

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

♦ எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !

எதை எதை வைத்து இழப்பீடு கணக்கிடுவார்கள், அதை யார் முடிவு செய்வார்கள்? ஒக்கி புயலின் போது ஏதோ ஏலம் விடுவதைப் போல உயிரிழந்தவர்களுக்கு நாளொரு தொகையை மாற்றி மாற்றி ஏற்றினார் எடப்பாடி. அதுவும் கேரள அரசு காணாமல் போன மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் என அறிவித்த பிறகுதான்.

அரசின் இலட்சணம் இதுவென்றால் நமக்கு இன்றாவது ஏதாவது நிவாரணம் வராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறர்கள் டெல்டா மக்கள். சில நேரம் கோபமாய் போராடுகிறார்கள், சாலை மறியல் செய்கிறார்கள். இழந்த 20 வருட வாழ்க்கையை எப்படி மீட்க முடியும் என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. ஆனால் என்ன செய்ய முடியும் என்று உழல்கிறார்கள். இனி மீத்தேன் எடுப்பதற்கு விவசாயம் தடையில்லை எனுமளவுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிலைய வித்வான்கள், ”லா பாயிண்டுகளை” அடுக்குகிறார்கள். டெல்டா தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பாஜக மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் சபரிமலை சென்று அங்கு காரில் போக முடியவில்லை என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரியுடன் விவாதித்தாராம். அமைச்சரை எவன் கேள்வி கேட்டான் என்று இன்று குமரியில் வேலை நிறுத்தமாம். எத்தனை கொடிய மனம் இவர்களுக்கு?

இயற்கை சீற்றம் ஏற்படுத்திய அழிவுக்கு அரசு எப்படிக் கொடுக்க முடியும் என்று கத்துகிறார்கள். ஆம் இந்த அரசுகளே பெரும் இயற்கைப் பேரிடர் எனும் போது மக்களுக்கு கஜா புயல் எனும் இயற்கை பேரிடர் பெரிய பேரிடரல்ல. இன்று வரையிலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பெருங்கோபத்தோடும் எல்லா இடங்களிலும் சாலை மறியல் நடப்பதாவும் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. சிதறிக் கிடக்கும் இப்போராட்டங்கள் ஒன்றிணையும் போது அது கஜா புயலை விட பெரும் சக்தியுடன் கிளம்பும். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அரசுகளுக்கு அப்போதுதான் மக்கள் சக்தியின் வலிமை புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க