(மார்ச் 20, 2026 அன்று வினவு தளத்தில் வெளியான இக்கட்டுரையானது புதிய விவரங்களுடன் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.)
***
காலநிலை மாற்றம் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல; அது ஏற்கெனவே நம் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வயநாடு நிலச்சரிவு, சென்னை வெள்ளம், சிக்கிம் வெள்ளம், ஜோஷிமத் புதைவு எனத் தொடர்ச்சியான பேரிடர்கள் இந்தியாவை உலுக்கி வருகின்றன. இச்சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும் வகையில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது காலத்தின் கட்டாயம்.
ஆனால், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசு அப்பட்டமாக விலகிக்கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமும் அதிகார வர்க்கத்திடமும் தாரைவார்க்கும் சதித்திட்டமே, பாசிச பா.ஜ.க. அரசு கடந்தாண்டு நிறைவேற்றியுள்ள “பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம் 2025”. இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள செய்திக் கூட நம்மில் பலருக்கும் தெரியவில்லை. சத்தமே இல்லாமல் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
2014-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதலே, அரசியலமைப்புச் சட்டத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றி வரும் மோடி கும்பல், தற்போது பேரிடர் சட்டத்தையும் அந்த வரிசையில் இணைத்துள்ளது. இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் இந்தியக் குடிமக்கள், தங்கள் அரசாங்கத்திடம் நிவாரணம் கோருவதற்குக் கொண்டிருந்த சட்டப்பூர்வ உரிமையை இச்சட்டம் அடியோடு தகர்த்தெறிந்துள்ளது.
பாசிசத் திமிருடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்
1947 ஆட்சி மாற்றத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், நிவாரணம் என்பது அரசின் ‘கருணை’யாக மட்டுமே பார்க்கப்பட்டது. “பஞ்சக் குறியீடுகள்” மூலம், பிச்சை போடுவதைப் போல நிவாரணம் வழங்கப்பட்டது. எனினும், 2005-இல் கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டம், அதை மக்களின் சட்டப்பூர்வ உரிமையாக மாற்றியது. ஆனால், மோடி தலைமையிலான அரசு, அந்த உரிமையை மீண்டும் “அரசின் கருணை”யாகத் தரம் தாழ்த்தியுள்ளது.
ஆகஸ்ட் 2024-இல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்மசோதா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் எவ்வித முறையான விவாதமும் இன்றி 2024 டிசம்பரில் மக்களவையிலும், பின்னர் 2025 மார்ச் 25-இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகமற்ற முறையில் இச்சட்டத்தை அரங்கேற்றிய மோடி அரசு, நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட வெறும் நான்கே நாட்களில் (மார்ச் 29, 2025) அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, நாட்டு மக்களுக்கே தெரியாமல் இதை நைச்சியமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
‘குறைந்தபட்ச நிவாரணம்’ – சட்டப் பாதுகாப்புத் தகர்ப்பு
பழைய 2005 சட்டத்தின் உயிர்நாடியாக இருந்தது பிரிவு 12. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம், மருத்துவம் மற்றும் கருணைத் தொகை உள்ளிட்ட “குறைந்தபட்ச நிவாரணத் தரநிலைகளை” வகுப்பதைப் பிரிவு 12 தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) சட்டப்பூர்வக் கடமையாக ஆக்கியிருந்தது. அரசு இதை மறுத்தால், நீதிமன்றத்தின் மூலம் அதை உரிமையாகக் கேட்க முடியும். உதாரணமாக, கோவிட்-19 காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் இப்பிரிவைச் சுட்டிக்காட்டியதால்தான் ஒன்றிய மோடி அரசு வேண்டா வெறுப்பாக ரூ.50,000 இழப்பீட்டை வழங்குவதற்கு முன்வந்தது.
புதிய சட்டத்தில், இந்தத் “தரநிலைகள்” நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்குவது இனி அரசின் கட்டாயக் கடமையல்ல; நிதிநிலைக்கு ஏற்ப அரசு முடிவு எடுக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரிவு 12 மற்றும் 13 நீக்கப்பட்டுள்ளதுடன், முன்பு “கட்டாயம் செய்ய வேண்டும்” (Shall) என்றிருந்த அம்சங்கள் தற்போது “செய்யலாம்” (May) அல்லது “பரிந்துரைக்கலாம்” என மாற்றப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன.
இப்புதிய சட்டத்தின் மிக வஞ்சகமான நகர்வு, பிரிவு 13-ஐ முழுமையாக நீக்கியதாகும். கடுமையான பேரிடர்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் நிவாரணம் அல்லது சலுகை வட்டி விகிதத்தில் புதிய கடன்கள் வழங்கப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இப்பிரிவு வழங்கியிருந்தது.
வயநாடு நிலச்சரிவும் ஒன்றிய அரசின் வஞ்சகமும்
2024 ஜூலையில் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 400-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியது. “எங்க வீடே மண்ணோடு மண்ணாகிடுச்சு, நாங்க எப்படி வீட்டுக் கடன கட்டுறது? எங்க நிலமே அடிச்சிட்டு போய்டுச்சு, நாங்க எப்படி விவசாயக் கடன கட்டுறது?” என வங்கிக் கடனைச் செலுத்த முடியாத மக்கள் கதறினர்.
2005 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, ஆகஸ்ட் 2024-இல் கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர், இந்த வழக்கு அக்டோபர் 2025-இல் விசாரணைக்கு வந்தபோது, “பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதில் பிரிவு 13 நீக்கப்பட்டுவிட்டது. எனவே, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்குக் கடன் தள்ளுபடியைப் பரிந்துரைக்கும் அதிகாரம் இனி இல்லை” என ஒன்றிய அரசு ஈவிரக்கமின்றிக் கைவிரித்தது.
ஆனால், சட்டத்தின் அடிப்படை விதிகளின்படி ஒன்றிய அரசால் இப்படி வாதிடவே முடியாது. அக்டோபர் 2025-இல் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஆகஸ்ட் 2024-லேயே இந்த வழக்கு தொடரப்பட்டுவிட்டது. ஒரு வழக்கு தொடுக்கப்படும் காலத்தில் என்ன சட்டம் அமலில் இருந்ததோ, அந்தச் சட்ட விதிகளின்படிதான் தீர்வுகள் வழங்கப்பட முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால், புதிய சட்டத்தைக் காரணம் காட்டி முந்தைய சம்பவத்திற்கு நிவாரணம் மறுப்பது அப்பட்டமான அநீதியாகும்.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்த நழுவல் வாதத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம், “பிரிவு 13 இல்லையெனினும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 73-இன் படி ஒன்றிய அரசுக்குக் கடன் தள்ளுபடி செய்யும் நிர்வாக அதிகாரம் முழுமையாக உள்ளது” என ஆணித்தரமாக வலியுறுத்தியது. நீதிமன்றம் இவ்வளவு தெளிவாகச் சுட்டிக்காட்டிய பின்பும், கடைசிவரை ஒன்றிய அரசு கடன் தள்ளுபடி செய்யாமல் மக்களை வஞ்சித்தது. இப்போது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டதால், பிரிவு 13 நிரந்தரமாகச் சட்டப் புத்தகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, இனி வயநாடு போன்ற கோரமான பேரிடர்கள் நிகழ்ந்தாலும், “கடன் தள்ளுபடி” என்ற கோரிக்கையை மக்கள் சட்டரீதியாக எழுப்பவே முடியாத அபாயகரமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, அனைத்தையும் இழந்த ஏழை விவசாயிக்கு நிவாரணம் வழங்க மறுக்கிறது. அதானிக்கும், அம்பானிக்கும் அளிக்கப்படும் சலுகைகள் ‘தேச வளர்ச்சி’ ஆகவும், விவசாயிக்கான நிவாரணம் ‘இலவசக் கலாச்சாரமாகவும்’ முத்திரை குத்தப்படுகிறது. பிரிவு 13 நீக்கம் என்பது, விவசாயிகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம். இது “கடன் நிவாரணம்” என்ற கருத்தாக்கத்தையே சட்டத்திலிருந்து ஒழித்துக்கட்டி விட்டது.
அதிகாரக் குவிப்பு: மாநில அரசுகளைப் பொம்மைகளாக்கும் சதி
பேரிடர் மேலாண்மை பொதுப்பட்டியலில் இருந்தாலும், களத்தில் செயல்பட வேண்டிய முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளுடையதே. ஆனால், 2025 சட்டமானது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, அதனை டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்திடம் குவிக்கிறது. இது சொல்லிக்கொள்ளப்படுகின்ற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நேரடிப் போர்!
பழைய சட்டத்தின்படி, மாநிலப் பேரிடர் திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பு, மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநிலச் செயற்குழுவிடம் இருந்தது. புதிய சட்டத்தின் பிரிவு 19-இல் திருத்தம் செய்யப்பட்டு, இந்த அதிகாரம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (SDMA) மாற்றப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய மாற்றமாகத் தெரியாது. ஆனால், இதில் நுட்பமான அரசியல் உள்ளது: மாநில ஆணையம் முதலமைச்சரின் தலைமையில் இருந்தாலும், அது ஒன்றிய அரசின் (NDMA) நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. மாநிலத்தின் புவியியல், சமூகத் தேவைகளைப் பிரதிபலிக்கும் திட்டங்களுக்குப் பதிலாக, மத்திய அரசின் “ஒரே நாடு, ஒரே பேரிடர் திட்டம்” என்ற வார்ப்புக்குள் மாநிலங்கள் தள்ளப்படுகின்றன.
நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையம்:
பெருநகரங்கள் மீதான ஆக்கிரமிப்பு
சதித்தனமான மற்றொரு அம்சம், “நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையம்” (UDMA) உருவாக்கப்படுவதாகும். டெல்லி, சண்டிகர் தவிர்த்த மாநிலத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இது அமைக்கப்படும். அரசியலமைப்பின் 74-வது திருத்தத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்குத்தான் நகரத்தை நிர்வகிக்கும் அதிகாரம் உண்டு. ஆனால், நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகிய அதிகாரிகளின் கையில் நகர நிர்வாகம் ஒப்படைக்கப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், சென்னை வெள்ளத்தின் போது அதிகாரிகளின் அலட்சியத்தால் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றித் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நமக்கு நினைவிருக்கலாம். இப்போது, மக்களால் நேரடியாகக் கேள்வி கேட்க முடியாத அதே அதிகார வர்க்கத்திடமே நகரத்தின் பாதுகாப்பை முழுமையாக வழங்குவது மிகவும் ஆபத்தானது.
பேரிடர் கால “போலீசு ராஜ்ஜியம்”
புதிய திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு “60A”-வானது, பேரிடர் காலங்களில் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது. இதை மீறுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவுகள் எப்படிப்பட்டவை என்பது குறித்த எந்தவொரு வரையறையோ தெளிவான விளக்கமோ அளிக்கப்படவில்லை. இந்த்த தெளிவின்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குடும்பத்தினரை மீட்குமாறு அவர்களது உறவினர்களிடமே உத்தரவிட்டு, அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் மீதே அரசு பழி போட முடியும்.
நிவாரணம் சரியாக வழங்கப்படவில்லை என்று போராடும் மக்கள் மீதோ, அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள் மீதோ, அபராதம் விதிக்கவும் வழக்குப் பதிவு செய்து ஒடுக்கவும் இந்தப் பிரிவு பயன்படுத்தப்படும். இனி மக்கள் எந்த உரிமையையும் கேட்க முடியாத நிலையை இயல்பாக்கும் பாசிசக் கணை நம்மீது ஏவப்பட்டுவிட்டது.
மக்களின் துயரத்தில் லாபம்
இச்சட்டத்தின்படி, தேசிய மற்றும் மாநில அளவில் “பேரிடர் தரவுத்தளம்” உருவாக்கப்படும். இதில் மக்களின் சொத்து விவரங்கள், இடர் மதிப்பீடு ஆகிய தரவுகள் சேகரிக்கப்பட்டு, காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படும். இந்தத் தரவுகளைக் கொண்டு, பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதிக “பிரீமியம்” வசூலிக்கும் வேலையில் தனியார்-கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்கள் இறங்கும்.
அரசு வழங்கும் நேரடி நிவாரணத்தைக் குறைத்துவிட்டு, “தேசிய பேரிடர் காப்பீட்டு நிதி” மூலம் மக்களைத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நோக்கித் தள்ளுவதே அரசின் திட்டம். அதாவது, இலவசமாகக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமையான நிவாரணம், இப்போது மக்கள் முன்கூட்டியே பிரீமியம் கட்டிப் பெறும் காப்பீட்டு ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளாலும் ஏழைகளாலும் அதிக பிரீமியம் கட்ட முடியாது. பேரிடர் வந்தால், “இது கடவுளின் செயல்” என்று கூறி காப்பீட்டு நிறுவனங்கள் நட்ட ஈட்டைத் தட்டிக்கழிக்கும். இது மக்களை மேலும் வறுமையில் தள்ளும். ஏற்கனவே ‘பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (PMFBY) விவசாயிகளிடம் பல்லாயிரம் கோடிகளைப் பிரீமியமாகக் கறந்துவிட்டு, பேரிடர் வந்தபோது ‘நுட்பமான’ காரணங்களைக் கூறி ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இழப்பீடு தர மறுத்ததை நாம் கண்கூடாகப் பார்த்தோம். விவசாயிகளின் வயிற்றில் அடித்த அதே கார்ப்பரேட் கொள்ளையைத்தான், இப்போது சாதாரண மக்களின் வீடுகளுக்கும் மோடி அரசு விரிவுபடுத்துகிறது.
பேரிடர் முதலாளித்துவம்
இந்த மசோதாவின் அடிநாதமாக இருப்பது “பேரிடர் முதலாளித்துவம்” (Disaster Capitalism) என்ற கோட்பாடாகும். பத்திரிகையாளர் நவோமி க்ளைன் (Naomi Klein) குறிப்பிடுவது போல, “மக்களின் துயரத்தை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றுவதே” இதன் நோக்கம். நெருக்கடி நேரத்தைப் பயன்படுத்தி, மக்கள் மீது தனியார்மயமாக்கலையும் சந்தைச் சீர்திருத்தங்களையும் திணிப்பதே இதன் சாராம்சம்.
பேரிடர்கள் உருவாவதற்கு காரணமான இந்த ஏகாதிபத்திய கார்ப்பரேட் முதலாளித்துவ உலகக் கட்டமைப்பானது, அப்பேரிடரையே தனது வணிகச் சங்கிலியாக, மதிப்புச் சங்கிலியாக மாற்றுகிறது. வீட்டைத் தீக்கிரையாக்கியவர்களே, அதை அணைக்கத் தண்ணீரையும் விலைக்கு விற்கும் ஈனத்தனமான வணிகச் சங்கிலியைத்தான் முதலாளித்துவம் பின்பற்றி வருகிறது.
இதுவரை பேரிடர்களின் போது, அரசு அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட்டுச் சொற்ப அளவிலாவது நிவாரணம் வழங்கி வந்தனர். இனி அதையும் வழங்க நாங்கள் தயாராக இல்லை என்பதே இச்சட்டத்தின் மறைமுக அறிவிப்பு. ஏற்கெனவே வெப்ப அலைகள், இடி மின்னல், கடலரிப்பு போன்றவற்றைத் தேசியப் பேரிடர் பட்டியலில் சேர்க்க மறுத்த மோடி அரசு, கேரளா நிலச்சரிவு மற்றும் தமிழ்நாட்டுப் பெருவெள்ளத்திற்குப் பேரிடர் நிதியையும் தர மறுத்தது. பேரிடரை ‘உள்ளூர்ப் பிரச்சினை’ எனச் சுருக்கி மாநில அரசுகளின் தலையில் சுமையைக் கட்டும் மோடி கும்பல், இப்போது புதிய சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கிறது.
நிர்வாகச் சீர்திருத்தம் அல்ல, வர்க்கத் தாக்குதல்!
இப்பாசிச சட்டத்தை வெறும் நிர்வாக மாற்றமாகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது; இது உழைக்கும் வர்க்கத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல். ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குப் பேரிடர் நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு, இப்போது மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்துவிட்டு அதிகாரத்தை அதிகாரிகளிடம் குவித்துள்ளது. அரசுக் கட்டமைப்பின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவலுடன் இணைத்துப் பார்த்தால் இந்தப் பாசிச சதி புலப்படும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது. “நிவாரணத் தரநிலைகளை” நீக்கியதன் மூலம், பீகார், ஒடிசா போன்ற ஏழை மாநிலங்களில் மக்கள் அனாதைகளாக விடப்படுவார்கள்; இது சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும்.
இறுதியாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது. பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசு முழுமையாக விலகிக்கொண்டு, பேரிடரிலிருந்து தற்காத்துக்கொள்வது மக்களின் ‘சுய பொறுப்பு’ என அவர்கள் தலையிலேயே பழியைத் தள்ளிவிடுகிறது.
இதனால், பேரிடர் பாதிப்புகளுக்கு இனி அரசிடம் மக்கள் உரிமையோடு இழப்பீடு கேட்கவே முடியாது. மாறாக, ஆளும் அரசியல் கட்சிகளிடம் சென்று கையேந்திப் பிச்சைதான் கேட்க வேண்டும். அந்த அரசியல் கட்சிகளும், தங்களுக்கு அதில் வாக்குவங்கி ஆதாயம் இருந்தால் மட்டுமே, தங்கள் அரசியல் நலனுக்கேற்ப அந்த நிவாரணத்தைப் பிச்சையாக வீசியெறிவார்கள். இனிவரும் காலங்களில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பேரிடருக்கு இவ்வளவு நிவாரணம் தருவோம்” என்று தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சி வாக்குறுதி அளித்து ஓட்டு வேட்டையாட மட்டுமே மக்களின் இந்தத் துயரம் அரசியல் கட்சிகளுக்குப் பயன்படும்.
எக்காரணம் கொண்டும் மக்கள் அரசை நோக்கி ‘உரிமை’ எனக் கேள்வி எழுப்பும் உணர்வை அறவே இல்லாமல் செய்து, ஒட்டுமொத்த மக்களையும் நிரந்தர அடிமைகளாக வீழ்த்தும் மிக மோசமான நடவடிக்கையாகவே இது அமைகிறது.
எனவே, இனி ஒவ்வொரு பேரிடரும் கார்ப்பரேட்டுகளுக்குத் திருவிழாவாகவும், மக்களுக்கு மீளாத் துயராகவும் மாறப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால், பிரிவு 12-இன் மாற்றம் நிவாரணத்தைக் கருணையாக்கியுள்ளது; பிரிவு 13-இன் நீக்கம் விவசாயிகளின் கடன் சுமையை நிரந்தரமாக்கியுள்ளது; பிரிவு 60A மக்களைக் குற்றவாளிகளாக்குகிறது; நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளாட்சியை முடக்குகிறது; மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மாநில உரிமையைப் பறிக்கிறது. எனவே, இதற்கெதிராக குரல் கொடுப்பதென்பது ஏதோ சட்டப் பிரிவுகளை எதிர்ப்பது அல்ல; இது நம் வாழ்வுரிமையை, நிலத்தை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம்.
ஆட்சியைக் கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகள், மக்கள் மத்தியில் இச்சட்டத்தை அம்பலப்படுத்திப் போராடாமல் பாசிசத்தை எதிர்ப்பதாக வாய்ச்சவடால் மட்டுமே அடிக்கின்றன. மக்கள் விரோத நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக அரங்கேற்றும் பா.ஜ.க-வின் பாசிசத் திமிரை, அதே சட்டத்தின் வழியே அடக்க முனையும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை ஒருபோதும் பலனளிக்காது. எனவே, இந்த எதிர்க்கட்சிகளை நம்பியிருக்காமல், நமது வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
தற்போது பாசிச மோடி அரசு மேற்கொண்டுள்ள இந்தப் புதிய சட்டத் திருத்தமானது இரத்து செய்யப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகரித்துள்ள பேரிடர்களின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையிலும் பேரிடர் சமயங்களில் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வெறும் கோரிக்கை மனுக்களாலோ அல்லது நீதிமன்றப் படிகளிலோ வென்றெடுக்க முடியாது. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக மக்களின் பிணங்கள் மீது சாம்ராஜ்யம் நடத்தும் மோடி அரசைத் தூக்கியெறியும் மக்கள்திரள் போராட்டங்களால் மட்டுமே நமக்கான உண்மையான நிவாரணத்தை நாம் உறுதிசெய்ய முடியும்!
![]()
ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











