சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 6

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டாபிராம் பகுதியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்த நவம்பர் – 18 அன்று நவம்பர் புரட்சிதின விழா நடைபெற்றது. பு.ஜ.தொ.மு., கிளை – இணைப்புச் சங்க தொழிலாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என  300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட குடும்ப விழாவாக நடைபெற்றது.

விழாவிற்கு தலைமையேற்ற மாவட்ட பொருளாளர் தோழர் மு. சரவணன், ரசியப் புரட்சியின் சாதனைகளை, இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டு விளக்கினார். நிமிர் கலையகம் தோழர் பாரதி தலைமையிலான பறையிசை குழுவின் அரங்கம் அதிர்ந்த பறையிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

விழாக்குழுவின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாறுவேடத்தில் வீரமங்கை ஜான்சிராணி, பாரதியார், பகத்சிங், பாரதிதாசன், நவீன ஒளவையார் போன்ற வேடங்களில் சிறுவர் – சிறுமியர் வந்து சமூக பிரச்சனைகளுக்கு எதிராக போராட அறைகூவினர். சுடிதார் அணிந்து வந்த நவீன ஔவையார் பெரியார் அறிவுச்சுவடியில் வெளிவந்த மூடநம்பிக்கைக்கு எதிரான விந்தனின் ஆத்திச்சூடியை மழலை மொழியில் எடுத்துரைத்தார். இரண்டாம் வகுப்பு பயிலும் செயலினி ம.க.இ.க -வின் ஜி.எஸ்.டி. பாடலை பாடினார். சிலம்பாட்டம், இயற்கையை அழிக்கும் எட்டுவழிச் சாலை என சமூக அவலங்களை மழலைகளுக்கே உரிய முறையில் அம்பலப்படுத்தினர்.

பு.ஜ.தொ.மு., இணைப்பு சங்கமான டி.ஐ. மெட்டல் பார்மிங் ஆலை தோழர்கள் நடத்திய நேருக்கு நேர் விவாத மேடையில் எச்.ராஜாவை நிருபர் கலங்கடித்தது சிறப்பாக இருந்தது. பு.ஜ.தொ.மு. தோழர்கள் இணைந்து “காவி – கார்ப்பரேட் கும்பலை விரட்டியடிப்போம்” என்ற  நாடகம் நிகழ்த்தினர்.  இதில் காவி கும்பல் தொழிலாளர் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்வதும், ஊர் பிரச்சனையில் தலையிடுவதை எதிர்த்து தொழிலாளர்களும், ஊர் மக்களும் இணைந்து காவிக் கும்பலை விரட்டியடிப்பதாக எளிமையாக விளக்கும் விதமாக இருந்தது.

மேலும் தூசன் கிளை பொதுச் செயலாளர் தங்களது போராட்ட அனுபவங்களை நேருரையாக விளக்கினார். டி.ஐ மெட்டல் தோழர் செந்தில் – மோடியின் நான்கரை ஆண்டு மோசடிகளை அம்பலப்படுத்தி பேசினார். எம்கீ கிளை தோழர் ராஜா தேர்தல் வாக்குறுதிகள் ஒரு ஏமாற்று என தானே பாடல் எழுதி பாடினார். தோழர் ரத்னா – சபரிமலைக்கு வந்தா தீட்டா? தீட்டா? என்ற பாடலை பாடியும், தோழர் நிலாஃபர் சோசலிச நாயகன் தோழர் லெனின் பெருமைகளை கவிதையாக வாசித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் அவர்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் நாம் ஏன் வீழ்த்த வேண்டும் என்று  சிறப்புரையாற்றினார்.

படிக்க:
கஜா புயல் : மாந்தோப்பு விவசாயியின் கண்ணீர்
டிகிரி காஃபி டிஸ்கசனும் ஹீரோ அந்தர குருசாமி உருவாக்கமும்

இறுதியாக விழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர்  தோழர். அ.முகுந்தன் பரிசளித்தார். தோழர் ஆ.கா. சிவா நன்றியுரையுரையோடு நவம்பர் தின விழா நிறைவுற்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க