புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு ஆகிய ஊர்களில் உள்ள கிராம மக்களை மக்கள் அதிகாரம் சார்பில் சந்திக்க சென்றோம். ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா உள்ளது என வியந்து ரசித்த நெடுவாசல் கிராமம், முட்புதர் காடுகள் போல காட்சியளித்தது அதிர்ச்சியாக இருந்தது.

நெடுவாசல் பசுமை இராமநாதனிடம் பேசினோம். சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கன்றுகளை தனது பத்து ஏக்கர் தோட்டத்தில் நடும்போது, இதெல்லாம் எங்க இந்த மண்ணில் வளரப் போகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், தோட்டக்கல்லூரி மாணவர்கள், சினிமாத்துறையினர் என ஏராளமானவர்கள் வந்து ரசித்து செல்லும்படி அதை பாதுகாத்து வைராக்கியமாக வளர்த்துள்ளார். அந்த தோட்டம், இன்று கால் வைக்கக்கூட இடமில்லாமல் அனைத்து மரங்களும் கீழே விழுந்து நாசமாகிக் கிடப்பதை வேதனையுடன் காட்டினார். ஒரு மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “நான் சப்பாணி ஆகிட்டேன். உங்கள மாதிரி ஆளுங்க தான் எங்கள தூக்கி விடனும்” என்றார். துப்பாக்கி, கப்பல், இசைக்கருவி தயாரிக்க உதவும் இம்மரங்கள் கீழே விழுந்ததால் தனக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

நெடுவாசலில் பணிபுரியும் மின் ஊழியர்களுக்கான உணவு, தண்ணீர், பராமரிப்பு போன்ற செலவுகளைக்கூட அரசு செய்யாததால், கோயில் பொதுப்பணத்திலிருந்து மக்கள் செலவு செய்துகொண்டிருப்பதாக கூறினார்.

கறம்பக்குடி பஞ்சாயத்து, முள்ளங்குறிச்சி ஊராட்சி, கருப்பக்கோன் தெருவில், முனியாண்டி கோனார் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்டு நேரில் சென்றோம். அவர், ஒரு கரும்பு விவசாயி. சவுக்கு மரவளர்ப்பு மற்றும் பண்ணை விவசாயம் செய்து வருபவர். புயல் பாதிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை கட்ட முடியாது என்ற மன உளைச்சலில் இருந்தவர் அதிர்ச்சியில் நெஞ்சு வெடித்து இறந்ததாக கூறினர் அவரது குடும்பத்தினர்.

அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை சந்தித்து பேசினோம். பூபதி என்பவர், ‘’ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், நூற்றுக்கணக்கான தேக்கு மரங்கள் கீழே விழுந்துவிட்டது. 25 வருசத்துக்கு பின்னாடி போய்விட்டோம். அரசாங்கம் எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை. விழுந்த ஓடு, மரங்கள் அப்படியே கிடக்குது. குழந்தைகள் படிப்பிற்கும், வீட்டு தேவைகளுக்கும் மரம் தான் அடிப்படை. இனி என்ன செய்வோம்?  அரசு உதவுமா?’’ என்றார். மற்றொரு தாழ்த்தப்பட்ட குடியிருப்பில் (15 வீடுகள்) பேசும் போது, “இங்க எல்லாரும் கூலி வேல தான் பாக்குறோம். குடிக்கத் தண்ணியில்ல, சாப்பாடில்ல. இதுவர எந்த அதிகாரியும் வரல. அநாதையா இருக்குறோம்” என்றனர்.

வடகாடு பகுதியில் இளைஞர்களிடம் பேசியபோது, “சென்னை, கடலூர் பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் போது, நாங்கள் இலட்சக்கணக்கில் பொருட்களை கொண்டு சென்று உதவியுள்ளோம். ஆனால், இன்று ரொட்டித் துண்டுக்காக காத்துக் கிடக்கிறோம். ஒரு மெழுகுவர்த்திக்காக வேனைத் துரத்தி ஓடியதையும், லாரி டிரைவர் சொல்லியும் பிஸ்கட், பிஸ்கட் என மண் லாரியை பார்த்து குழந்தைகள் ஓடியதையும் வாழ்நாளில் மறக்க முடியாது’’ என்றனர்.

“பிள்ளைங்களுக்கு பீஸ் கட்டனும்னா அண்ணாந்து தென்ன மரத்த பார்ப்போம். பொட்டபுள்ள வயசுக்கு வந்திருச்சி, மாப்பிள்ள தேடி வாரான்னா பழா மரம் இருக்குங்ற தைரியம் இருந்துச்சு. இனி என்ன செய்வோம்?” என்றதுடன், இதுவரை இப்படி ஒரு புயலை பார்த்ததில்லை என்றனர் மக்கள். குடிக்கவும், புழங்கவும் தண்ணீரின்றி தவித்த மக்கள், போராட்டம் நடத்திய பின்னரே ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 70 கார்களில் பரபரப்பாக வந்த மத்திய ஆய்வுக் குழுவினர், கிராமங்களுக்குள் செல்லாமலேயே தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்ததாக கூறுகின்றனர்.

முள்ளங்குறிச்சி கிராமத்திற்கு வந்த இசுலாமிய அமைப்பினர், பாரபட்சமின்றி அனைவரையும் அழைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீர், அரிசி, பருப்பு, காய்கறி, சேலை, கைலி, துண்டு என அடிப்படைத் தேவைக்கான பொருள்களை விநியோகித்துள்ளனர். இந்து கோஷம் போடும் சங்கிகளைத் தான் களத்தில் எங்குமே காணோம். சங்கிகள் அனைவரும் சபரிமலை டூயூட்டியில் பிசியாக உள்ளதால் கஜா புயலில் பாதிக்கப்பட்ட ‘இந்துக்களுக்கு’ உதவ வர இயலவில்லை போலும்!

கிராமங்களுக்கு செல்லும் வழி நெடுக கீழே விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்  அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குடியிருப்புகளின் மீது விழுந்த மரங்களை மக்கள் தங்கள் சொந்த முயற்சியிலும், தன்னார்வலர்களின் உதவியுடனும் தான் அப்புறப்படுத்துகின்றனர். நிலங்களிலிருந்து, மரங்களை அப்புறப்படுத்துவதற்கு ஆகக்கூடிய செலவுக்குக் கூட பணம் இன்றி தவிக்கின்றனர் விவசாயிகள். நெடுவாசலை சுற்றியுள்ள கிராமங்களில் மா, பலா, வாழை, தென்னை ஆகிய மரங்கள் செழித்து வளர நீர் தான் அடிப்படை. தற்போது, நிலத்தடி நீரும் 400 அடிக்குக்கீழ் சென்றுவிட்டதால் இனி மரங்கள் செழித்து வளர பல ஆண்டுகள் பிடிக்கும். விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதராமான மரங்கள் சரிந்தது, கிராமப்புற பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத இப்புயலால் தங்கள் வாழ்க்கை நரகமாகிப் போனதாகவும், இதிலிருந்து மீள அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை என ஆத்திரம் கொள்கின்றனர்.

“அரசாங்கம் இனிமேலும் ஒன்னும் செய்யலன்னா ரெண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டோம்” என்றனர் வடகாடு இளைஞர்கள். கஜாப்புயலால் மட்டுமல்ல, தோற்றுப்போன இந்த அரசமைப்பால் தினம்தினம் செத்து மடியும் மக்களை மீட்க, மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்றே தீர்வு!

விவசாயிகளின் கோரிக்கைகள்:

  • 1. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
  • 2. ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 மின் இணைப்பு இலவசமாக வழங்க வேண்டும்.
  • 3. விவசாயக் கடன்கள், நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • 4. வாகனக் கடன்களை ஆறு மாதத்திற்கு வசூலிக்கக் கூடாது.
  • 5. ஏக்கருக்கு 70 தென்னைக் கன்றுகள் கொடுக்க வேண்டும்.
  • 6. தென்னை நடுவதற்கு ஊருக்கு ஒரு டிராக்டர் வழங்க வேண்டும்.
  • 7. ஒரு கிராமத்திற்கு 10 மரஅறுவை இயந்திரம் வழங்க வேண்டும்.

தகவல்
திருச்சி மண்டலம், 94454 75157.

நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்

ஜா புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் தங்கி புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வருகின்றனர்.

டலூர் மக்கள் அதிகாரம் சார்பில் வீடுகளிலும், கடைவீதிகளிலும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.  இந்த நிவாரண பொருள் சேகரிப்பு பணியில் மாணவர்களும், கட்டுமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.  24, 27 ஆகிய தேதிகளில் வீடுகளிலும், கடைகளிலும் முன்கூட்டியே துண்டறிக்கை கொடுத்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து வருகிறோம் என்று கூறிவிட்டு பின் ஒரு சிறிய வாகனத்தின் மூலம் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.  வீடுகளில் பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு வாங்கிய புதிய துணி மற்றும் போர்வைகளையும் கொடுத்ததோடு விலை உயர்ந்த புடவைகளையும் எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.  மேலும் கடைகளுக்க சென்று பிஸ்கட், மெழுகுவர்த்தி, சோப்பு போன்றவைகளையும் அளித்தனர்.  கடை வீதிகளில் பெரும்பாலும் நிதி மற்றம் உணவு பொருட்களான பிஸ்கட், போர்வை, பாய், குழந்தைகளுக்கு தேவையான துணிகள் கொடுத்தனர்.

இவை மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சுற்றுலா வேன் சங்கத்தை சேர்ந்தவர்கள்  மற்றும் அரசு, ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  நிவாரண பொருட்கள் கொடுத்தனர். தச்சு வேலை செய்யும் ஆதரவாளர் ஒருவர் தான் வைத்திருந்த மரம் அறுக்கும் இயந்திரத்தை கொடுத்து உதவி செய்தார்.  ஒரு ஓய்வுபெற்ற காவலர் தான் வைத்திருந்த ரூ 2000/- மதிப்புள்ள 2 ரெயின் கோட்டுகள், ரூ 1000 மதிப்புள்ள 5 பூட்சு மற்றும் நிதி, துணியும் கொடுத்து உதவினார்.

படிக்க:
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

தமிழ்நாடு தீயணைப்பு துறையை சேர்ந்த நண்பர்கள் தங்கள் ஊழியர்கள் மத்தியில் நிதி திரட்டி 100 பேருக்கான மளிகை சாமான், அரிசி உள்ளிட்டவைகளை கொடுத்து உதவினர்.

கடலூர்,
செல்; 8110815963.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க