சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 3

ஒனுர்கன் உல்கர்: பல வளரும் நாடுகள் சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், இன்று சீனா மட்டுமே வெற்றிக்கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களால் கூவி விற்கப்பட்ட மற்ற மாதிரிகள் முடங்கி விட்டன. இதன் முக்கிய காரணம் என்ன?

ஃபிரட் எங்ஸ்ட்: இது சுவாரசியமானது. வளர்ச்சி என்பதைப் பற்றி முதலாளித்துவப் பொருளாதார இயலாளர்களுக்கு ஒரு முழுமையான பார்வையே இல்லை. மூன்றாம் நாடுகள் வளர முடியாததற்குக் காரணம் ஏகாதிபத்தியம்தான். சீனாவால் வளர முடிந்ததற்கான ஒரே காரணம், இந்த ஏகாதிபத்திய சகாப்தத்திலும் தனது இறையாண்மையை சீனாவால் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததுதான்.

மாவோ காலத்தில் போடப்பட்ட பொருளாதார அடித்தளம் ஒரு சுயாதிபத்தியத்தியம் உள்ள முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைக்கும் உலக நாடுகளைப் பாருங்கள். அந்நிய படைகள் காலூன்றாத நாடு ஒன்று உண்டா? ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே அப்படியிருக்கின்றன. இந்தியாவை ஓரளவுக்குச் சொல்லலாம்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவிற்குப் பிந்தைய சீனாவில் உழைப்பு ஒரு பண்டமாக்கப்பட்டதனால் விளைந்த உள்நாட்டு முரண்பாடுகளைப் பற்றிக் கூறுங்கள். சீனாவின் புதிய உழைக்கும் வர்க்கத்தின், குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலை மற்றும் வேலைநிலைமைகள் இந்தப் பொருளாதார மாதிரியின் நிலைத்ததன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளனவா?

ஃபிரட் எங்ஸ்ட்: இந்த இடத்தில் மாவோ சகாப்தம் அளித்த மற்றுமொரு பெரிய பலன் குறித்துச் சொல்ல வேண்டும். இதை அறிஞர்கள் காண மறுக்கிறார்கள். மற்ற பல நாடுகளில் மிகவும் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இருந்தும் அதனை அந்நாடுகளால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இது சீனாவால் மட்டும் எப்படி முடிகிறது? இந்தப் புதிருக்கு மேற்கத்திய அறிஞர்களும் ஊடகங்களும் அளிக்கும் விளக்கங்கள் பொருத்தமானவையாக இல்லை.

நான் பிலிப்பைன்ஸைப் பார்க்கும் வரை எனக்கும் இது புதிராகத் தான் இருந்தது. அங்கே மூன்று முறை போயிருக்கிறேன். மக்களிடம் பேசி அந்நாட்டின் சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். பிலிப்பைன்சிற்கும் சீனாவிற்கும் முக்கியமான வேறுபாடு நிலச்சீர்திருத்தம் தான். நிலச்சீர்திருத்தம் காரணமாக சீனாவில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பங்கு நிலம் கிடைத்தது. சீனாவின் மலிவான உழைப்பை புரிந்து கொள்வதற்கான சாவி இங்கேதான் இருக்கிறது.

சீனாவின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் பிலிப்பைன்சின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், இந்த ஊதியத்தைப் பெறுகின்ற பிலிப்பைன்ஸ் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். சீனாவிலோ நல்லபடியாக வாழ்கிறார்கள்.

ஏனென்றால், சீனாவில் கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம்பெயரும் தொழிலாளி முழுக்க முழுக்க தனது சம்பளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. அவர்களுக்குக் கிராமத்தில் நிலம் இருக்கிறது. ஒரு தொழிலாளி குழந்தைப் பருவத்திலிருந்து இளைஞனாக வளர்வதும், முதியவர்களைப் பராமரிப்பதும் கிராமப்புறங்களிலேயே நடந்து விடுவதால், உழைக்கும் வர்க்கத்தின் மறுஉற்பத்தி கிராமப்புறத்திலேயே நடந்து முடிந்து விடுகிறது.

ஆனால், ஒரு நிலமற்ற விவசாயி நகர்ப்புறத்திற்கு வந்தால், மேற்கண்ட செலவுகளெல்லாம் நகர விலைவாசியின் அடிப்படையில் செய்ய வேண்டி இருக்கும். செலவு அதிகமாகும்.

படிக்க :
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

சீனாவின் கிராமப்புறத்தில் 80 வயதானவர்கள் கூட விவசாய வேலை செய்கிறார்கள். அவர்கள் சொந்த வீடு, நிலம், வருமானம் என்று இளைய தலைமுறைக்குப் பாரமாக இல்லாமல் தன்னிறைவாக இருக்கிறார்கள். இதனால்தான் சீனாவில் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இதைச் சாத்தியமாக்கியது 1949-இன் சீனப் புரட்சியே.

இன்று சீனாவில் ஊதியம் (உழைப்பின் விலை) அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் நகரமயமாக்கம். அரசும், ரியல் எஸ்டேட் சூதாடிகளும் பல்வேறு தொழில் திட்டங்களுக்காக நிலத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்தி விவசாயிகளை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்த பின்னர், நகரமயமாக்கப்பட்ட சூழலில் அவர்களால் முந்தைய சம்பளத்தை நம்பி உயிர்வாழ முடியாது. ஊதியத்தை உயர்த்தித்தான் ஆகவேண்டும்.

சோசலிச சீனா சமூகத்தின் சேவைத்துறைகள்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவின் சீனத்தில் எல்லா அடிப்படை சேவைகளும் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைத்த போதிலும், அந்த சேவைகள் தரமற்றவையாக இருந்தன என்று முதலாளித்துவ அறிஞர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சேவைகள் எப்படி இருந்தன?

ஃபிரட் எங்ஸ்ட்: ஒரு சிறு திருத்தம். எல்லாமே இலவசமில்லை. சில சேவைகள் நகரவாசிகளுக்கு மட்டுமே கிடைத்தன. கிராமப்பற மக்களுக்குக் கிடைக்கவில்லை. வீடு முற்றிலுமாக இலவசமில்லை. குறைந்த வாடகை இருந்தது. கல்வி கிட்டத்தட்ட இலவசம்தான். நூல்கள் மட்டும் விலைக்கு – குறைந்த விலைதான். இதனால்தான் மாவோ காலத்தின் நிகர உள்நாட்டு உற்பத்தியை (GDP) பின்னாளில் கணக்கிட்டபோது அது குறைவாக இருந்தது. ஏனென்றால், இலவச சேவைகள் உற்பத்திக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

தரம் இப்போது இருக்கும் அளவுக்கு இல்லைதான். ஆனால், அப்போது என்ன சாத்தியம் என்பதை வைத்துப் பார்க்குமிடத்து, அவை அளப்பரியவை. எடுத்துக் காட்டாக, கிராமப்புறங்களுக்கான வெறுங்கால் மருத்துவர்கள்! இது வெற்றிகரமான சேவை என்று உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒனுர்கன் உல்கர்: ஐ.நா.வின் சுகாதார அமைப்புகூட இதை மூன்றாம் உலக நாடுகளுக்குச் சிபாரிசு செய்தது.

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அது பெரிய ஆச்சரியம்தான். வெறுங்கால் மருத்துவர்களின் சேவை மருத்துவமனை மருத்துவர்களின் சேவை அளவுக்கு உயர்வானது இல்லைதான். அன்று தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு மருத்துவமனைகள் எட்டாதவையாக இருந்தன. அத்தகைய நிலையில் வெறுங்கால் மருத்துவர்களுடைய சேவையின் தரத்தைக் குறை கூறுவது அபத்தமானது.

மாவோவின் கொள்கைகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தின. மக்களின் சராசரி ஆயுட்காலம் பன்மடங்கு அதிகரித்தது. மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல, எந்த உலக நாட்டை ஒப்பிட்ட போதும் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருந்தது.

அவர் காலத்தின் மூன்று கடினமான வருடங்களில் கூட இறப்பு விகிதம் 2.5 விழுக்காடாகத்தான் இருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை இதுதான் மிக இயல்பான இறப்பு விகிதம்.

மாவோ சகாப்தத்தைக் குறை கூறுவதற்குப் பல பொய்கள் கூற வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்தில், இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் நமக்கு சோதனைக்கூடங்கள் இருக்கின்றன. புறவய உண்மைகளை உள்ளது உள்ளபடி நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சமூக அறிவியலில், புறவய உண்மையைத் திரிப்பது எளிது. நாம் நமது நலன்களுக்குத் தகுந்தாற்போலத்தான் புறவுலகைப் பார்க்கிறோம்.

மூன்று கடினமான வருடங்களும் உட்கட்சிப் போராட்டமும்

ஒனுர்கன் உல்கர்: மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்றை நியாயப்படுத்த மீப்பெரும் முன்னோக்கிய பாய்ச்சலுக்குப் பின் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைக் கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள். மாவோ அந்த அளவுக்கு கற்பனாவாதியா?

ஃபிரட் எங்ஸ்ட்: கற்பனாவாதம் என்ற சொல்லை என்ன பொருளில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உடனே, அவரைக் கிறுக்கு என்றோ கற்பனாவாதி என்றோ சொல்லிவிடலாம். கற்பனாவாதம் என்பதற்கு என்ன வரையறை? என்ன இலக்கணம்? அவர்களைப் பொருத்தவரை மார்க்சியமே கற்பனாவாதம்தான்.

மாவோ மக்களைக் கொன்று குவித்தார் என்பது உண்மைக்குப் புறம்பானது. இதை நிரூபிக்கப் பல உதாரணங்கள் இருக்கின்றன. உட்கட்சிப் போராட்டத்தின் போது – பலருடைய நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் மாறாக – யாரையும் தீர்த்துக்கட்ட மாவோ விரும்பவில்லை. சிறை வைக்கலாம். ஆனால் மரண தண்டனை கூடாது. ஏனென்றால், “முடிவு தவறென்றால், அதைச் சரிசெய்யவே முடியாது” என்று வலியுறுத்திய மிகச் சிலரில் அவரும் ஒருவர். புரட்சியின்போது ஏற்பட்ட அனைத்து இறப்புகளுக்கும் அவர் மேல் பழி போடுகிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்தக் கூற்றுகள் நகைப்புக்குரியவை. கட்சியில் யாரேனும் ஒருவரைத் தீர்த்துக்கட்டுமாறு அவர் உத்தரவிட்டார் என்றோ, இரகசியமாகக் கொலை செய்ய உத்தரவிட்டார் என்றோ ஒரு சான்றைக்கூட யாராலும் காட்ட முடியாது.

மாவோவின் கொள்கைகளைக் குறை கூற முடியும் என்று ஏதேனும் ஒரு காலம் இருக்குமென்றால், அது மூன்று கடினமான வருடங்கள் தான். அப்போது மக்கள் இறந்ததற்கான காரணம் பட்டினி. இந்த பிரச்சனையில், சிறிது உள்ளே நுழைந்து பார்த்தால், மாவோ ஏன் சிலரை முதலாளித்துவ பாதையினர் என்று கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ள உதவுமென்றால், எத்தனை மக்கள் செத்தாலும் அதைப் பற்றி முதலாளித்துவ வர்க்கத்தினர் கவலைப்படமாட்டார்கள் – ட்ரம்ப்பைப் போல. முற்றிலும் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக சிரியா மீது குண்டு மழை பொழியுமாறு மிகவும் அலட்சியமாக டிரம்ப் உத்தரவிடுகிறார்.

ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் இந்தப் படுகொலைகளை அவர்கள் செய்கிறார்கள். அன்று சீனத்தில் இது போன்றவர்கள் கட்சியிலும், தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்கள். இந்த முதலாளித்துவப் பாதையினரால்தான் அந்த மூன்று கடினமான வருடங்கள் ஏற்பட்டன.

முதலில், 1950-களின் தொடக்கத்தில், அவர்கள் கூட்டுப் பண்ணைககள் உருவாக்குவதை எதிர்த்தார்கள். கூட்டுப்பண்ணைகள் வெற்றியடைந்தவுடனே, அவற்றை மேலும் தீவிரப்படுத்த விரும்பினார்கள்.

இதுதான் கம்யூனிசக் காற்று அல்லது மிகைப்படுத்தல் காற்று என்பதற்கான பின்புலம். அவர்கள் ஏன் அதைத் தீவிரப்படுத்தினார்கள்? ஏனென்றால், தனி விவசாயிகளிடம் இருந்து தானியத்தைக் கொள்முதல் செய்வதைவிடக் கூட்டுப் பண்ணைகளிடம் இருந்து திரட்டு வது எளிது. அதனால்தான் கம்யூனிசக் காற்று என்பதை அவர்கள் தீவிரப்படுத்தினார்கள். ஏனெனில், விவசாயிகளின் உபரியைக் கைப்பற்றுவதற்கு இதுதான் எளிய வழி என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் எத்தனை விவசாயிகள் பட்டினி கிடந்து சாவார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதுதான் இக்கட்டுநிலை தோன்றியதற்கான காரணம்.

ஒனுர்கன் உல்கர்: இன்று அதிகாரப்பூர்வ வரலாற்றில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், உண்மையில் லியு ஷோ சி, டெங், பெங் ஜென், தாவ் சூ (Liu Shoqi, Deng, Peng Zhen, Tao Zhu) போன்றவர்கள் தான் இந்த கம்யூனிசக் காற்றை முழுமூச்சுடன் முன்தள்ளியவர்கள் இல்லையா?

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அவர்கள் தான் அதை வலியுறுத்தினார்கள். அவர்களின் பாதையை மாவோ கடுமையாக விமர்சித்தார். ஆனால், மாவோ சிறுபான்மையாக இருந்தார். விவசாயிகளின் நலன்களில் அவர்களுக்கு அக்கறை இல்லாததைக் கண்டு மாவோ அதிர்ந்தார்.

1958-இல் எல்லா இடங்களிலும் அமோக விளைச்சல். ஆனால், 59-ல் ஹெனானிலும் அன்ஹூயிலும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டன. தானிய உற்பத்தி குறைந்தது. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் பற்றாக்குறையைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. விவசாயிகள் விளைச்சலில் பாதியைத் தர மறுக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

படிக்க:
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

அப்படி அவர்கள் தராமல் பதுக்கி வைத்தால் என்ன செய்வீர்கள்? இரண்டு வழிகள் உள்ளன. முதலாளித்துவப் பாதையினர் என்ன ஆனாலும் தானியத்தைக் கைப்பற்று என்பார்கள். “விவசாயிகள் தானியத்தை மறைக்கிறார்கள் என்றால், நாம் அவர்களைப் பகைத்துக் கொண்டோம்” என்று பொருள் என்பது மாவோவின் பார்வை. “நமது கணக்குப்பதிவுக்கான அலகாகப் பெரிய கம்யூனை வைத்துக் கொள்ளக் கூடாது. அளவைக் குறைக்க வேண்டும்” என்றார் மாவோ. கம்யூனுக்கு கீழே இரண்டு அலகுகள் கொண்ட மூன்றடுக்கு உடைமை முறையை அவர் வலியுறுத்தினார்.

லியு ஷோ சி, டெங் சியாபெங், ஜாவோ ஜியாங் (Zhao Ziyang) போன்றவர்கள் கம்யூன் அலகை வலியுறுத்தினார்கள். “நீங்கள் இவ்வாறு செய்தால்,மக்களைப் பட்டினி போடுவீர்கள்” என்றார் மாவோ. இதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக மெமோக்கள் உள்ளன.

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் கட்சியில் இவர்கள் எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறார்கள் என்பதை மாவோ புரிந்து கொண்டார்.
மூன்று கடினமான வருடங்களுக்குப் பிறகு இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அவர்கள் என்ன தீர்வை முன்வைத்தார்கள் என்பதை யூகிக்க முடிகிறதா? கூட்டுப் பண்ணைகளைக் கலைக்கச் சொன்னார்கள்.

அவர்கள் 1950-களின் ஆரம்பத்தில் கூட்டுப் பண்ணைகளை எதிர்த்தார்கள். பிறகு கம்யூனிசக் காற்று கொள்கையை கொண்டு வந்தார்கள். பஞ்சத்திற்கு பிறகு மறுபடியும் கூட்டுப்பண்ணைகளை ஒழிப்பதை வலியுறுத்தினார்கள். முதலாளித்துவப் பாதையாளர் என்போர் இவர்கள்தான்.

மக்களின் இறப்புகளுக்கு, குறிப்பாக சிச்சுவானில் (Sichuan) நடந்தவைகளுக்கு, அவர்கள் மாவோவின் மீது பழி சுமத்தினார்கள். ஆனால், சிச்சுவான் பஞ்சம் தானியப் பற்றாக்குறையால் உருவானதல்ல. அங்கே நல்ல விளைச்சல்தான். டெங் சியாபெங் சிச்சுவான்காரர் தான். டெங்தான் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் லீ ஜிங்க்வானுக்கு (Li Jingquan) அங்கிருந்த தானியத்தை நகரத்திற்கு அனுப்புமாறு கட்டளையிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சிச்சுவான் விவசாயிகள் பட்டினி கிடப்பார்கள் என்று லீ எச்சரித்திருக்கிறார்.

பெய்ஜிங் நகரத்தின் மக்கள் இறப்பதைவிட சிச்சுவான் மக்கள் இறப்பது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன் என்ற ரீதியில் டெங் பதில் கூறினாராம். இது போன்ற தலைவர்களின் கொள்கைகளால்தான் 1960-61 இல் மக்களுக்கு மிகக் கொடூரமான துன்பங்கள் நேரிட்டன. 1989-இல் டெங்கினால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்த பிறகு, டியானன்மென் சதுக்கப் படுகொலையைப் பார்த்த பிறகு, டெங் இவ்வாறு சொல்லியிருப்பார் என்று என்னால் நம்ப முடிகிறது.

-தொடரும்
– புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

இத்தொடரின் முந்தைய இரண்டு பாகங்கள்:

♦ சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
♦ அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

 

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க