சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து தெரிவித்துள்ளார்.  நீதித்துறையிலிருந்து நீதிபதி லோயாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் ஒரே ஆதரவு குரல் ஏ.பி. ஷா-வினுடையது.

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த வழக்கின் நீதிபதியாக இருந்த லோயா, மர்மமான முறையில் டிசம்பர் 2014-ம் ஆண்டு நாக்பூரில் கொல்லப்பட்டார். மாரடைப்பால் மரணமடைந்ததாக போலீசு தரப்பு தெரிவித்த நிலையில், நீதிபதியின் குடும்பம் இந்த மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா

நீதிபதி லோயா மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன், தங்களுக்கு சாதகமான தீர்ப்பைத் தர, லோயாவிற்கு குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு ரூ. 100 கோடியை லஞ்சமாக தர முயன்றதும் தெரியவந்தது. லோயாவின் மரணத்தின் பின்னணியில் இந்த விஷயத்தையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா.

“அதிகாரிகள் தரப்பில் நீதிபதி லோயா, மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, தாண்டே என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். உறவினர்களுக்கு விஷயத்தை சொல்லாமலே உடற்கூராய்வு வரை சென்றிருக்கிறார்கள். உறவுக்காரர் என நீதிபதி லோயா குடும்பத்துக்கு தொடர்பே இல்லாத ஒருவர் கையெழுத்திட்டிருக்கிறார். மருத்துவராக உள்ள லோயாவின் சகோதரி, நீதிபதியின் சட்டையில் ரத்தத் துளிகள் இருந்ததாக தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்கு கழித்து, குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்ட செல்போனில் அத்தனை தகவல்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

படிக்க:
♦ நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !
♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருப்பதாக நீதிபதியின் குடும்பம் தெரிவிக்கிறது. நீதிபதி முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பதை அவருடைய குடும்பம் அறிந்திருந்தது. நீதிபதிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரிடமிருந்து அழுத்தம் வந்ததையும் குடும்பம் அறிந்திருக்கிறது. அதுகுறித்து நீதிபதி லோயா மிகுந்த மன அழுத்ததில் இருந்ததையும் அவருடைய குடும்பம் நினைவுபடுத்துகிறது. அதோடு, நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்ற விஷயமும் தெரியவந்துள்ளது. மும்பையில் நிலம் அல்லது ஃபிளாட் வேண்டுமா என அவரிடம் கேட்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் அழுத்ததுக்கு பணியாமல், நீதிபதி பொறுப்பை உதரிவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்ய வந்துவிடப் போவதாக தன்னுடைய தந்தையிடம் லோயா தெரிவித்திருக்கிறார். இத்தனை விஷயங்களையும் அறிந்த நீதிபதி லோயாவின் மகன், தன் தந்தையின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.

இயற்கையாக மரணித்ததாகச் சொல்லப்படும் நீதிபதி லோயா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுகுறித்து விசாரிக்கலாமா கூடாதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். இந்த லஞ்ச புகார் விசாரிக்கப்படவில்லை எனில், அது நீதித்துறைக்கு மிகப்பெரும் களங்கமாக அமையும்” என தி வயர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நீதிபதி ஏ.பி. ஷா.

“நீதிபதி லோயா குறித்து விசாரித்தேன். அவர் ’மிக நேர்மையானவர்’ என பெயர் பெற்றவர். அவர் மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினர். அவருடைய மரணம் குறித்து அவர் குடும்பத்தார் எழுப்புகிற சந்தேகங்களை விசாரிக்காவிட்டால், கீழ்நிலையில் இருக்கிற நீதிபதிகளுக்கு அதுதவறான செய்தியையே தரும். சமீபத்தில் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவற்றில் விசாரணைக்கான முகாந்திரங்கள் உள்ளன. அவற்றை விசாரிப்பது, தொடர்புடையவர்களுக்கு எதிரான களங்கத்தை துடைக்கவும்கூட உதவலாம்.

லோயா லெவலுக்கு போக வேணாம் என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி?

மேலும், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிபதி லோயா குடும்பத்தாரின் குற்றச்சாட்டின் மீது நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டின் மீது நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சொல்கிறேன்.  விசாரணை நடத்தப்பட போதுமான காரணங்கள் உள்ளன. நீதித்துறையை, நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாக கருதுகிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம், குற்றச்சாட்டை எழுப்பும்போது, நிச்சயம் அது விசாரிக்கப்பட வேண்டும்” என்கிறார் நீதிபதி ஏ.பி. ஷா.

படிக்க:
♦ சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
♦ கொலைகார அமித் ஷா விடுதலை !

நீதிபதியின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 26-ம் தேதி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்கக்கோரும் மனு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு, எஸ்.பி. சுக்ரே மற்றும் எஸ்.எம். மோதக் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘எங்கள் முன் அல்ல’ எனக்கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

அந்த மனு, பி.என். தேஷ்முக் மற்றும் சொப்னா ஜோஷி அடங்கிய அமர்வு முன்  28-ம் தேதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதி சொப்னா ஜோஷி இந்த மனு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிப்பதற்குக்கூட திராணியற்ற ‘உயர்ந்த’ அமைப்பாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் இருக்கின்றன. சக நீதிபதிகளே, மூத்த நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிக்கத் தயாராக இல்லை.  ’இந்துத்துவ’ காவி கும்பல் ஆபத்தானது, பயங்கரமானது என்பதற்கு நீதித்துறையில் நடந்திருக்கும் இந்தக் கொலை மிகச்சிறந்த சான்று.

மேலும் படிக்க:
♦ Exclusive: Justice A.P. Shah Says ‘Suspicious Death’ of Sohrabuddin Case Judge Needs Probe
♦ B.H. Loya’s Death: Another High Court Judge Withdraws From the Case

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க