privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாநீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !

நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !

-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறையின் முன்னாள் தலைவரான மருத்துவர் ஆர்.கே. சர்மா, நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான மருத்துவ ஆவணங்களைப் பார்த்துவிட்டு அரசு தரப்பில் முன்வைக்கப்படுவது போல லோயாவின் மரணம், மாரடைப்பால் ஏற்பட்ட மரணமாக இருக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, திசு பாதிப்பு அறிக்கை, உடலுறுப்பு மாதிரிகளை இரசாயன ஆய்வுக்கு அனுப்புவதற்கான அறிக்கை, இரசாயன ஆய்வின் முடிவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆவணங்களை ஆய்ந்த பின்னர், மருத்துவர் ஆர்.கே.சர்மா, லோயாவின் மர்ம மரணம் குறித்து செய்திகளை வெளியிட்ட கேரவன் இதழிடம் இது குறித்து பேசியுள்ளார். அந்த அறிக்கைகளிலிருந்து மருத்துவர் ஆர்.கே.சர்மா வந்தடைந்த முடிவும், மராட்டிய அரசின் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையும் நேர் முரணாக இருக்கின்றன.

மருத்துவர் சர்மா தனது ஆய்விலிருந்து இந்த மரணம் கண்டிப்பாக மாரடைப்பினால் ஏற்பட்டது அல்ல என்று கூறுகிறார். பிரேதப் பரிசோதனை, மற்றும் திசு பாதிப்பு அறிக்கைகளை ஆதாரமாக வைத்தே தனது வாதத்தை நிரூபிக்கிறார் சர்மா.

திசுபாதிப்பு அறிக்கையில், மாரடைப்பு ஏற்பட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அவை சிறு அளவிலான மாற்றங்களை மட்டுமே குறிப்பிடுகின்றனவேயன்றி மாரடைப்பை அல்ல. அடுத்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இரத்த நாளங்கள் கால்சிய மேற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்தால் இரத்த ஓட்டம் தடைபெற வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் லோயா உடல்நலம் சரியில்லை என விடியற்காலை 4 மணிக்குத் தெரிவித்ததாக கூறப்பட்டது. அவர் 6.15 -க்கு இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக இடையே 2 மணிநேரம் இருந்துள்ளது, ஒரு மனிதன் மாரடைப்பால் 30 நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உயிரோடிருந்திருந்தால், இருதயத்தின் நிலைமையில் கண்டிப்பாக பெரிய மாற்றம் இருந்திருக்கும். ஆனால் அறிக்கைகளின்படி அப்படி எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தமனி இரத்த நாளப் போதாமையால் ஏற்பட்ட மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அறிக்கையில் இதயத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவிலான மாற்றங்கள் தமனி இரத்தநாளப் போதாமையை உறுதி செய்வதற்கு போதுமானவை அல்ல” என்று கூறியிருக்கிறார்.

(பிரேதப் பரிசோதனை அறிக்கை – படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேற்கூறிய காரணங்களை முன்வைத்து இது மாரடைப்பால் ஏற்பட்ட மரணமல்ல என்று உறுதியாகக் கூறுகிறார் மருத்துவர் ஆர்.கே. சர்மா. மேலும் மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அறிகுறிகளைக் கொண்டு லோயா தலையில் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உணவில் விசமூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார் சர்மா.

“மூளையைச் சுற்றியுள்ள ஜவ்வு நெருக்கியிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூளைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதையே அது குறிக்கிறது” என்று குறிப்பிடுகிறார் சர்மா. லோயாவின் சகோதரியும் மராட்டிய அரசு மருத்துவருமான அனுராதா பியானி, தனது சகோதரர் இறந்த பின்னர் அவரது உடலைத் தாம் பார்த்த போது, அவரது கழுத்திலும், சட்டையிலும் இரத்த வடுக்கள் இருந்ததை தான் பார்த்ததாக முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அனுராதா பியானியின் டயரி குறிப்பிலும் இதனைக் குறித்து வைத்திருக்கிறார்.

லோயாவின் மற்றொரு சகோதரியான மன்தானே, கேரவன் இதழுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில், அவரது தலையின் பின்புறத்தில் காயம் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் லோயாவின் தந்தையும் லோயாவின் உடைகளில் இரத்தவடு இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
லோயாவின் உறவினர்களின் புகார்களுக்கு வலுவூட்டுவது போல, மராட்டிய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மருத்துவமனை இரசீதிலும், லோயா நரம்பு அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மூளையைச் சுற்றியுள்ள ஜவ்வு, எவ்வளவு நெருக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அது நெருக்கப்படுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை என்பதை ஆர்.கே.சர்மா சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மேலும் லோயாவின் உடலின் உள் உறுப்புக்கள் பலவும் நெருக்கப்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் சர்மா, லோயாவுக்கு விசமூட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் முன் வைக்கிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி லோயாவின் ஈரல், கணையம், மண்ணீரல், சிறுநீரகம், உணவுக்குழாய், மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளும் நெருக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியே இவ்வாதத்தை சர்மா முன் வைக்கிறார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலுறுப்புகளுக்கான இரசாயன பரிசோதனைகளுக்கு உடலுறுப்புகளின் மாதிரிகளை அனுப்புகையில் எழுதப்படும் உடல் விவர அறிக்கையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எழுதப்படும் உடல் விவர அறிக்கையும் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவரால் நிரப்பப்படுபவை.

இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே, இரசாயன பரிசோதனைக்கான உடல் விவர அறிக்கை நிரப்பப்படும். ஆனால் லோயா விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையும் உடல் விவர அறிக்கையும் ஒன்றுக்கொன்று பாரிய அளவில் முரண்படுகின்றன. இரண்டையும் ஒரே மருத்துவரே நிரப்பியிருக்கிறார்.

உதாரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை குறித்த பதிவில், லேசான விரைப்புத்தன்மை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உடல்விவர அறிக்கையில் பிரேதத்தின் விரைப்புத்தன்மை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

லோயாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை அளித்த மருத்துவர் எம்.கே.டுமரம் தான் உடல் விவர அறிக்கையையும் அளித்துள்ளார். அவரிடம் இது குறித்து கேரவன் இதழ் கருத்து கேட்டபோது, வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது பேச முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும் லோயா இறந்து 50 நாட்களுக்குப் பிறகே அவரது உறுப்புகளின் மாதிரிகளின் மீதான இரசாயன சோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.லோயா இறந்து சுமார் 36 நாட்களுக்குப் பின்னர்தான் அவரது உடல் உறுப்பு மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. இரசாயனப் பரிசோதனை முடிக்க சுமார் 14 நாட்கள் எடுத்திருக்கின்றனர். ஆனால் அத்தகைய இரசாயனப் பரிசோதனைக்கு 1 முதல் 2 நாட்களே அதிகபட்சம் தேவைப்படும் என்கிறார் சர்மா.

நீதிபதி லோயாவுக்கு மது. புகை போன்ற பழக்கங்கள் ஏதும் கிடையாது என்றும் அவர் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மேஜைப்பந்து விளையாடக் கூடியவர் என்றும் அவரது சகோதரி கூறியிருக்கிறார். அவருக்கு சக்கரை வியாதியோ, இரத்த அழுத்தமோ கிடையாது என்றும் அவருக்கு மாரடைப்பு வருவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறார் அவரது சகோதரி. இந்த ஆவணங்களில் காணப்படும் இச்சூழல் ஒரு விசாரணையைக் கோருகிறது என்கிறார் ஆர்.கே.சர்மா.

ஆனால் நீதித்துறை வரை ஊடுருவி உள்ள சங்க பரிவாரக் கும்பல், இந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்ய என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் செய்கிறது. லோயாவின் மகனை மிரட்டி அவனைத் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என பேட்டியளிக்க வைக்கிறது. மோடியின் அடியாள் அமித்ஷாவை இவ்வழக்கிலிருந்து காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இதற்கு நீதித்துறையும் துணைநிற்கிறது.

மேலும் :