மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 34 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
வனது முகம் சிவந்து போயிற்று; ஆக்ரோஷம் அவனுள்ளே கொதித்துப் பொங்கியது; அவனது குரலில் தொனித்த ஏற்ற இறக்கங்கள் தாயைப் பயப்படும்படி செய்தன.

“ஆனால், நான் அந்த மத குருவிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?” என்று மேலும் தொடர்ந்தான் ரீபின். “அவர் கிராமத்தில் கூட்டம் முடிந்து திரும்பி வந்து ஓரிடத்தில் அமர்ந்து சில முஜீக்குகளோடு பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசினார்? சாதாரண மக்களெல்லாம் ஆட்டு மந்தைகள்தாம் என்றும், அவர்களைக் கட்டி மேய்க்க ஒரு இடையன் எப்போதும் தேவையென்றும் அவர் பேசினார். ஹூம்! எனவே நானும் வேடிக்கையாகச் சொன்னேன். ‘வாஸ்தவம்தான். நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால், காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும், பறவைகள் மிஞ்சாது” என்றேன். அவர் தம் தலையைச் சாய்த்துக்கொண்டு என்னைப் பார்த்தார். ஜனங்கள் எப்போதும் கஷ்டப்படவே வேண்டியிருக்குமென்றும், எனவே தமது வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் சோதனைகளையும் சங்கடங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதற்குரிய சக்தியை அருளுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே நானும் ஜனங்கள் எவ்வளவோ காலமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டுதானிருக்கிறார்களென்றும், ஆனால், கடவுளுக்கு ரொம்ப ரொம்ப வேலையிருப்பதால், இந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க இயலவில்லையென்றும் சொன்னேன். ஹூம்! அப்புறம் அவர் என்னைப் பார்த்து, ‘நீ எந்த மாதிரிப் பிரார்த்திக்கிறாய்’ என்று கேட்டார். நான் சொன்னேன். ‘எல்லாச் சனங்களையும் போல் நானும் ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான் என் வாழ்நாள் முழுதும் சொல்லி வருகிறேன். கருணையுள்ள கடவுளே எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக் கொடு’, என்றுதான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவரோ என் பேச்சை முடிக்கவிடவில்லை.” திடீரென்று ரீபின் சோபியாவின் பக்கம் திரும்பினான், ‘நீங்கள் ஒரு சீமான் வீட்டுப் பிறவியா?” என்றான்.

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’ என்று வியப்போடு திடுக்கிட்டுக் கேட்டாள் சோபியா.

”ஏனா?” என்று சிணுங்கிக்கொண்டான் ரீபின். ”ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எவரெவர் எப்படியெப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் அவர்கள் விதியும் இருக்கும். ஹூம், நீங்கள் தலையில் கட்டியிருக்கிறீர்களே அந்தத் துணியினால் சீமான்களின் பாபக் கறையையெல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டியிருந்தாலும் நாங்கள் ஒரு மதகுருவை அடையாளம் கண்டுகொள்வோம். மேஜை மீது சிந்தியிருந்த எதன் மீதோ முழங்கை பட்டதுமே முகத்தைச் சிணுங்கிக் கூசி நடுங்கினீர்களே. உங்கள் ஒய்யார உடம்புக்கும் தொழிலாளன் உடலுக்கும் சம்பந்தமே இல்லை…”

தாய் குறுக்கிட்டு சொன்னாள். அவனது முரட்டுத்தனமான ஏளனப் பேச்சு சோபியாவின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாதே என அவள் அஞ்சினாள்.

”மிகயீல் இவானவிச்! அவள் என் சிநேகிதி. மேலும் அவள் நல்லவள். நமது கொள்கைக்காகப் பாடுபட்டுத்தான் அவளது தலைகூட நரைத்துப் போயிற்று. நீ ரொம்பவும் கடுமையாக வெடுக்கென்று பேசுகிறாய் …….”

ரீபின் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

“ஏன், நான் மனம் புண்படும்படி யாரையாவது எதையேனும் சொல்லிவிட்டேனா?”

“என்னிடம் ஏதோ சொல்ல விரும்பினீர்கள் என்று நினைக்கிறேன்” என்று வறண்ட குரலில் சொன்னாள் சோபியா.

“நானா? ஆமாம். இங்கே சமீபத்தில்தான் ஒரு ஆசாமி வந்திருக்கிறான். யாகவின் சொந்தக்காரன். அவனுக்குக் காசநோய். அவனை அழைத்துவரச் சொல்லட்டுமா?” என்றான் ரீபின்.

”அவசியமாய்!” என்றாள் சோபியா.

பின் அவளைச் சுருங்கி நெரித்த கண்களோடு பார்த்தான், பிறகு எபீமிடம் திரும்பி மெதுவாக சொன்னான்:

”போ. போய் அவனை இன்று மாலை இங்கு வரச்சொல்லிவிட்டு வா.”

எபீம் தன் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல், எவரையுமே பார்க்காமல், அந்தக் காட்டு வழியில் சென்று மறைந்தான். அவன் செல்வதைப் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே ரீபின் சொன்னான்:

“இவனுக்கு இப்போது கஷ்ட காலம். சீக்கிரமே, இவனும் யாகவும் பட்டாளத்தில் சேர்ந்துவிடுவார்கள். யாகவுக்கு அதற்குத் தைரியம் கிடையாது. ‘நான் போகமாட்டேன்’ என்கிறான். இவனுக்கும் திராணி இல்லை. இருந்தாலும் இவன் சேர்ந்துவிடுவான். பட்டாளத்தில் சேர்ந்து அங்குள்ள சிப்பாய்களைத் தூண்டிவிட்டுவிட முடியும் என்று இவன் நினைக்கிறான். தலையைக்கொண்டு மோதி, சுவரைத் தகர்த்துவிட முடியுமா? அவர்கள் கையிலும் துப்பாக்கி ஏறிவிட்டால், அப்புறம் அவர்களும் மற்ற சிப்பாய்கள் செல்லும் பாதையில்தான் செல்வார்கள். இக்நாத் என்னவோ அதைப் பற்றியே அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சில் அர்த்தமே கிடையாது.”

“இல்லையில்லை” என்று மறுத்துக் கூறிக்கொண்டே ரீபினைப் பார்த்தான் இக்நாத். ”இதையெல்லாம் சொல்லவில்லை என்றால், இவனுக்கு அவர்கள் கொடுக்கிற பயிற்சியில் இவனும் அவர்களைப் போலவே சுட்டுத்தள்ளத் தொடங்குவான்.”

“எனக்கு அதில் நம்பிக்கையில்லை” என்று சிந்தித்தவாறே பதிலுரைத்தான் ரீபின். “அவன் பட்டாளத்தில் சேராமல் ஓடிவிடுவதே ரொம்ப நல்லது. ருஷியா ரொம்பப் பெரிய தேசம். ஓடிப்போய்விட்டால் அவர்கள் அவனை எங்கேயென்று கண்டுபிடிப்பார்கள்? ஒரு கள்ளப் பாஸ்போர்ட் வாங்கிவிட்டால், அவன் ஊர் ஊராய்த் திரியலாம்.”

“அப்படிதான் நான் செய்யப்போகிறேன்” என்று தன் காலை ஒரு கழியால் அடித்துக்கொண்டே சொன்னான் இக்நாத், “விரோதமாகப் போவதென்று தீர்மானித்துவிட்டால், அப்புறம் தயக்கமே இருக்கக்கூடாது. நேராகப் போகவேண்டியதுதான்.”

அவர்கள் பேச்சு நின்றது. தேனீக்களும் குளவிகளும் மொய்த்துப் பறந்து, ரீங்காரித்து இரைந்தன. பறவைகள் கூவின; வயல்வெளியிலிருந்து ஒரு பாட்டுக் குரல் மிதந்து வந்தது. ஒரு கணம் கழித்து ரீபின் பேசத் தொடங்கினான்.

“நல்லது. நாங்கள் வேலைக்குப் போக நேரமாகிவிட்டது. உங்களுக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கத் தோன்றும். இல்லையா? இந்தக் குடிசைப்புறத்தில் சிறு குடில்கள் இருக்கின்றன. யாகவ், நீ போய்க் கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டுவா. சரி, அம்மா, நீ அந்தப் பிரசுரங்களை எடுத்துக் கொடு.”

தாயும் சோபியாவும் தங்கள் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.

”அடேயப்பா எவ்வளவு புத்தகங்கள்?” என்று வியந்துகொண்டே அந்தப் புத்தகங்களைக் குனிந்து நோக்கினான் ரீபின். “இந்த மாதிரிக் காரியத்திலே ரொம்பக் காலமாய் ஈடுபட்டிருக்கிறீர்களா?… ம்… சரி. உன் பேரென்ன?’ என்று சோபியாவிடம் திரும்பக் கேட்டான்.

“ஆன்னா இவானவ்னா” என்றாள் அவள்; “பன்னிரண்டு வருஷ காலமாய் வேலை செய்கிறேன். ஆமாம். எதற்காகக் கேட்டீர்கள்?”

”முக்கிய காரணம் ஒன்றுமில்லை; அது சரி, சிறைக்கும் போயிருக்கிறீர்களா?”

“ஆமாம்.”

”பார்த்தாயா?” என்று கண்டிக்கும் குரலில் சொன்னாள் தாய். ”நீ முதலில் எவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்து கொண்டாய்………”

“என் பேச்சைக் கண்டு வருத்தப்படாதே, அம்மா” என்று பல்லைக் காட்டிச் சொல்லிக்கொண்டே அவன் ஒரு புத்தகக் கட்டை வெளியில் எடுத்தான்; “சீமான்களுக்கும் முஜீக்குகளுக்கும் ஒட்டவே ஒட்டாது. இரண்டு பேரும் எண்ணெய்யும், தண்ணீரும் மாதிரி.”

“நான் ஒன்றும் சீமாட்டியல்ல. நான் ஒரு மனிதப் பிறவி!” என்று சிரித்துக்கொண்டே மறுத்தாள் சோபியா.

“இருக்கலாம்” என்றான் ரீபின். ”நாய்கள்கூட ஒரு காலத்தில் ஓநாய்களாகத்தானிருந்தன என்று சொல்லுகிறார்கள். சரி, நான் போய் இவற்றை ஒளித்து வைத்துவிட்டு வருகிறேன்.”

இக்நாதும் யாகவும் தங்கள் கைகளை நீட்டிக்கொண்டே அவன் பக்கமாக வந்தார்கள்.

”நாங்களும் அதைப் பார்க்கலாமா?” என்றான் இக்நாத்.

“எல்லாம் ஒரே மாதிரிப் புத்தகம்தானா?” என்று சோபியாவிடம் கேட்டான் ரீபின்.

“இல்லை, வேறுவேறு. சில பத்திரிகைகளும் இருக்கின்றன.”

“அப்படியா?”

அந்த மூன்று பேரும் தங்கள் குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

“இந்த முஜீக் ஓர் உருகிக்கொண்டிருக்கிற பேர்வழி!” என்று ரீபினைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள் தாய்.

”ஆமாம்” என்றாள் சோபியா. “இவனது முகத்தைப் போன்ற வேறொரு முகத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு தியாகியின் முகம் போலிருக்கிறது. சரி, நாமும் உள்ளே போகலாம். நான் அவர்களைக் கவனித்துப் பார்க்க விரும்புகிறேன்.”

“அவனது முரட்டுத்தனமான பேச்சால் நீங்கள் புண்பட்டுப் போகாதீர்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

சோபியா சிரித்தாள். ”நீலவ்னா, நீங்கள் எவ்வளவு அன்பானவர்!”

அவர்கள் வாசலுக்குச் சென்றதும், இக்நாத் தலையை உயர்த்தி அவர்களை விருட்டெனப் பார்த்தான். தனது சுருண்ட தலைமயிரைக் கலைத்துவிட்டுக் கொண்டே, மடியில் கிடந்த பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினான். பின் கூரை முகட்டிலுள்ள ஒரு கீறல் இடைவெளி வழியாக விழும் சூரிய ஒளிக்கு நேராக, ஒரு பத்திரிகையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தான். படிக்கும்போது அவனது உதடுகள் மட்டும் அசைந்தன. யாகவ் முழங்காலிட்டுத் தனக்கு முன்னால் குவிந்துகிடக்கும் பிரசுரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாய் ஒரு மூலைக்குச் சென்று உட்கார்ந்தாள். சோபியா அவளுக்குப் பின்னால் வந்து நின்று, தாயின் தோள் மீது ஒரு கையை வைத்தவாறே அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

”மிகயீல் மாமா, அவர்கள் முஜீக்குகளான நம்மைச் சீண்டிவிடுகிறார்கள்” என்று எங்கும் பார்க்காமல் யாகவ் அமைதியாகச் சொன்னான். பின் அவனை நோக்கிச் சிரித்தான்.

“அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். அதனால்தான்” என்றான் ரீபின்.

இக்நாத் ஆழ்ந்த பெருமூச்சு வாங்கிக்கொண்டே தலையை உயர்த்தினான்.

படிக்க:
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“இதோ எழுதியிருக்கிறது கேள்: ‘மனிதனாயிருந்த விவசாயி இப்பொழுது மாறிப்போனான். மனித குணங்களையெல்லாம் இழந்துவிட்டான்.’ ஆமாம், அவன் மனிதனாகவே இல்லைதான்!” அவனது தெளிந்த முகத்தில் திடீரென ஒரு கருமை ஓடிப் பரந்தது. அந்த வாக்கியத்தைக் கண்டு அவனது மனம் சிறுத்ததுபோல் தோன்றியது. “அட புத்திசாலிகளா, என் உடம்புக்குள்ளே புகுந்து கொண்டு நீங்கள் ஒரு நாள் பொழுது சுற்றி வாருங்கள். அப்போது தெரியும் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று.”

”சரி, நான் கொஞ்ச நேரம் படுக்கப்போகிறேன்” என்று சோபியாவிடம் கூறினாள் தாய். ”எனக்குக் களைப்பாயிருக்கிறது. அதிலும் இந்த நாற்றம் என்னைக் கிறக்குகிறது. சரி, நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

”நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை.”

தாய் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தாள். உடனே தூங்கத் தொடங்கிவிட்டாள். சோபியா அவள் அருகில் உட்கார்ந்து அந்த மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தாயின் தூக்கத்தைக் கலைக்க வரும் தேனீக்களையோ குளவிகளையோ கையால் விரட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அரைக் கண்தூக்கத்தில் சோபியா தனக்குச் செய்யும் சேவையைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றாள் தாய்.

ரீபின் அங்கு வந்து கரகரத்த குரலில் மெதுவாகக் கேட்டான்.

“தூங்கிவிட்டாளா?”

“ஆமாம்.”

அவன் அங்கு சிறிது நேரம் நின்றவாறே தாயின் முகத்தையே பார்த்தான். பிறகு பெருமூச்சு விட்டுவிட்டு மெதுவாகச் சொன்னான்:

“மகன் சென்ற மார்க்கத்தில் தானும் பின்பற்றிச் செல்லும் முதல் தாய் இவள்தான் போலிருக்கிறது!”

“சரி. அவளைத் தொந்தரவு பண்ணக்கூடாது. நாம் வெளியே போகலாம்” என்றாள் சோபியா.

”சரி. நாங்களும் வேலைக்குப் போக வேண்டியதுதான், உங்களோடு பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விருப்பம். ஆனால், நமது பேச்சை மாலையில் வைத்துக் கொள்ளலாம். டேய், பையன்களா! புறப்படுங்களடா !

அவர்கள் மூவரும் சோபியாவை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

“நல்லதாய்ப் போயிற்று. இவர்கள் நட்புரிமையோடு பழகிக் கொள்கிறார்கள்” என்று நினைத்தாள் தாய்.

அந்தக் காட்டுப் பிராந்தியத்தின் நெடிமணத்தோடு தார் நாற்றத்தையும் சுவாசித்தபடி அப்படியே தூங்கிவிட்டாள் தாய்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க