ப்பிரிக்காவில் ஒரு சின்னக் குற்றம் செய்த சிறுமியின் புகைப்படத்தை என் வீட்டில் கடந்த இருபது வருடங்களாக மாட்டி வைத்திருக்கிறேன். சின்னக் குற்றம் என்று சொன்னால் அங்கே பலருக்கு விளங்காது. ஆப்பிரிக்காவில் குற்றங்களை ஆண்பால் பெண்பால் என்று பிரித்திருப்பார்கள். பாரதூரமான குற்றம் என்றால் அது ஆண்பால்; சிறு குற்றம் என்றால் அது பெண்பாலாக இருக்கும்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
உதாரணமாக கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, தீவைத்தல் போன்ற குற்றங்கள் ஆண்பால். சிறுகளவு, வாய்ச்சண்டை, கடனைத் தீர்க்காமல் இருப்பது போன்றவை பெண்பால். ஆண்குற்றத்துக்கு பெரிய தண்டனையும், பெண்குற்றத்துக்கு சிறிய தண்டனையும் கிடைக்கும்.

சிறுமியின் படத்தை பார்க்கும்போதெல்லாம் அது ஒருவகையில் என் சின்ன வயதை நினைவுபடுத்தியது. என் பழைய காலத்தை மட்டுமல்லாது நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் கூட என்னால் அந்தப் படத்தில் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு வருபவர்கள் யார் இந்தச் சிறுமி என்று திரும்ப திரும்ப கேட்பார்கள். ஏதோ பதில் சொல்லி அவர்களை சமாளித்தேன்.  நான் படத்தை சோமாலியாவில் பிடித்தேன். தற்செயலாக அபூர்வமான படமாக அது அமைந்துவிட்டது.

சூரியன் நின்ற திசையும் மரத்தின் நிழலும் நான் எடுத்த கோணமும் எப்படியோ பொருந்தி அந்தக் கணம் பதிவாகியிருந்தது. சிறுமியின் பாதி முகம்தான் படத்தில் தெரியும், மீதியில் மரத்தின் நிழல் விழுந்திருந்தது. அந்தப் பாதிப் படத்திலும் அவள் திகைப்பும் தந்திரமான கண்களும் குதூகலமும் சீராக தெரிந்தது.

மாதிரிப் படம்

நான் பார்த்த சிறுமிக்கு விளையாட்டில் அதிக ஆர்வம். எப்பவும் ஓடியபடியே இருந்தாள். அவர்களுடையது ஒரு சின்னக் குடும்பம். என் சோமாலிய நண்பர்தான் என்னை அங்கே அழைத்துப் போயிருந்தார். இந்தச் சிறுமியும் இவள் தம்பியும் ஒரு கோழியை துரத்திக் கொண்டிருந்தார்கள். கோழி விளையாட்டுப் பொருளா அல்லது அன்றைய இரவு உணவா என்பது தெரியவில்லை. எங்களைக் கண்டதும் அப்படியே நின்றார்கள்; கோழி ஓடிவிட்டது. கோழிக்கு பெரிய மகிழ்ச்சி உண்டாகவில்லை. பக்கத்திலேயே நின்று மேய்ந்தது. தாயார் குடிசைக்குள் ஏதோ வேலையில் இருந்தார். சின்னப் பையன்தான் தகப்பனைக் கூட்டிவர ஓடினான்.

நண்பர் என்னை அங்கே கூட்டிச் சென்றது சோமாலியர்களின் புல்லுப் பானையை காண்பிப்பதற்கு. அவர்கள் ஒருவித புல்லில் பானை செய்து அதில்தான் தண்ணீர் பிடித்து வருவார்கள். வெளிப்புறத்தில் பிசின் பூசி இறுக்கமாக நீக்கல் இல்லாமல் இருக்கும். தகப்பன் வருமுன்னர், தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சிறுமி நண்பரிடம் என்னவோ சொன்னாள். அவர் மொழிபெயர்த்தார்.

‘அப்பா இன்றைக்கு என்னை அடித்தார்.’

‘ஏன் அடித்தார்?’

‘நட்சத்திரம் மறைந்த பிறகு நான் எழுந்ததற்கு.’

இரவு நட்சத்திரங்கள் மறையுமுன்னர் அவள் எழுந்து தண்ணீர் எடுத்துவர வேண்டும் என்பது விதி என்றார் நண்பர். அவள் கைகளைப் பார்த்தேன். தழும்பு தழும்பாக அடி விழுந்த காயங்கள். விரல்கள் சிவப்பாக இருந்தன. உள்ளங்கை காய்த்துப்போய் தடித்து கட்டைபோல கிடந்தது. ஒரு சிறுமியின் கைபோலவே இல்லை.

படிக்க:
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி
♦ என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி. அதிகாலையில் எழும்பியதும் இந்தச் சிறுமி புல்லுக்குடத்தை துக்கிக்கொண்டு தண்ணீர் பிடித்துவர பல மைல்கள் நடப்பாள். அதில் அவள் தவறினால் அவளுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். தகப்பனிடம் ஒட்டகம் இருந்தது. அது சும்மாதான் நிற்கும் ஆனால் அதில் போய் தண்ணீர் பிடித்துவர முடியாது. ஓர் ஆண் தண்ணீர் எடுத்து வந்தால் அது பெரிய அவமானமாகப் போய்விடும்.

தகப்பன் சிறுமியை அழைத்து புல்லுப்பானையை கொண்டுவரச் சொன்னார். அவர் எங்களுக்கு முன்னால் அவளை அழைத்தவிதம் அவளுக்கு பிடிக்கவில்லை. சிரித்த முகம் கறுத்தது. நண்பர் நிலத்தைப் பார்த்து சிரித்தார். தகப்பன் சிறுமியை ‘திருடித் தின்னும் மிருகமே’ என்று அழைத்ததாகச் சொன்னார். ஏன் அப்படி அழைத்தார் என்று கேட்டபோது அவர் நீண்ட முறைப்பாடுகள் வைத்தார்.

தண்ணீர் பிடித்து வருவது என்பது பெண்களின் வேலை. உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் அது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பணி.

முக்கியமான குற்றச்சாட்டு பக்கத்து வீட்டுக்காரர்களின் ஆட்டுப் பாலை திருட்டுத்தனமாகக் கறந்து குடித்து விடுகிறாள் என்பது. அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள். இப்பொழுதெல்லாம் பெண்குற்றம் செய்கிறாள். விரைவில் ஆண்குற்றம் செய்யத் தொடங்கி விடுவாள்.

சிறுமி கொண்டுவந்த புல்லுப் பானையை ஒரு படம் பிடித்தேன். பிறகு தகப்பனை  எடுத்தேன். அவர் தொப்பி அணிந்து நீண்ட உடையுடன் காணப்பட்டார். அவருடைய ஒரு கண் நீரில் மிதப்பதுபோல இருந்தது. அவராகவே பையனை தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுக்கச் சொன்னார். சிறுமி அவர் முகத்தை பார்த்தபடியே நின்றாள். எங்கே தன்னை கூப்பிடுவாரோ என்ற ஏக்கம் முகத்தில் தெரிந்தது. ஆனால் அவர் அழைக்கவே இல்லை. நான் ‘சிறுமியும் நிற்கட்டுமே’ என்று சொன்னபோது அவருக்கு அது எப்படியோ கேட்காமல் போய்விட்டது.

தகப்பன் தன் ஆட்டு மந்தையை காட்ட நண்பரை அழைத்துச் சென்றார். மந்தை என்பது இருபதுக்கு  குறைவான ஆடுகள்தான். அதுதான் அவர்களுடைய செல்வம். அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது. தகப்பன் போனபின்னர் நான் சிறுமியை படம் பிடித்தேன். அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்லமுடியாது. அப்பொழுது எறித்த சூரியனின் வெளிச்சம் முழுவதையும் அவள் கண்கள் வாங்கிவிட்டன. அந்தப் புகைப்படத்தை அவள் பார்க்கப் போவதில்லை. அது அவளுக்கு தெரியும். எனக்கும் தெரியும். அவள் தகப்பனை ஏமாற்றிவிட்டதுதான் மகிழ்ச்சிக்கான காரணம். கண்களில் தந்திரம் இருந்தது. ரத்தம் கீழேயிருந்து பாய்ந்து அவள் இருதயத்தையும் தாண்டி முகத்துக்கு போனது. அந்தப் படத்தைத்தான் நான் இன்னமும் பாதுகாத்தேன்.

தகப்பன் தூரத்தில் திரும்பி வருவது தெரிந்ததும் அவளில் மாற்றம் ஏற்பட்டது. கைகளை மறைத்து அணிந்திருந்த முழு நீளச்சட்டையின் விளிம்பை இழுத்து வாயை துடைத்தாள். தகப்பன் நெருங்க நாலைந்து இலையான்கள் அவருடன் கூடவே பறந்தன. அவர் சிறுமியிடம் ஏதோ சொல்ல அவள் குடிசைக்குள் துள்ளிக்கொண்டு ஓடினாள். சிறிது நேரத்தில் இரண்டு நீண்ட குவளைகளில் கால்பாகம் நிறைத்த தேநீரைக் கொண்டுவந்து தந்தாள். ஒரு அலுமினியத் தட்டில் ஆட்டுப்பாலில் செய்த வெண்ணெய் கட்டிகளும் வந்தன. நாங்கள் தேநீரைக் குடித்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்.

அதுவரைக்கும் கண்ணில் படாத சிறுமி பாய்ந்து வந்து தட்டை எடுத்துக்கொண்டு திரும்பினாள். திரும்பிய அதே சமயம் தன் பின்பக்கத்தை காட்டிக்கொண்டு பிளேட்டில் இருந்த அத்தனை வெண்ணெய்கட்டிகளையும் ஒரு கையால் அள்ளி வாயிலே திணித்தாள். பிறகு ஒன்றுமே நடக்காதது போல வெறும் பிளேட்டை விசிறிக் கொண்டு போய் குடிசையினுள் எறிந்துவிட்டு ஓடினாள்.

தோடம்பழம்

நாங்கள் வாகனத்தை அணுகுமுன்னர் அக்காவும் தம்பியுமாக ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு அதை நெருங்கினார்கள். பக்கக் கண்ணாடியில் சிறுமி தன் முகத்தைப் பார்த்து கைவிரல்களால் தலையை சீவினாள். கதவை திறந்ததும் அதைப் பிடித்துக் கொண்டு நின்றாள். இவள் கதவை பிடிக்காவிட்டால் அது விழுந்துவிடும் என்பதுபோல. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பத்து நாட்கள் கழித்து அவர்களைப் பிரிந்து போவதுபோல அந்தச் சிறுமியின் கண்களில் துக்கமும் ஏக்கமும் இருந்தது. நாங்கள் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அப்படியும் எங்கள் பிரிவு அவளுக்கு தாங்க முடியாததாக  இருந்தது.

நண்பர் தன் பையில் இருந்த ஒரு தோடம்பழத்தை எடுத்துச் சிறுவன் கையில் கொடுத்தார். அவன் அதை கைகளில் பொத்திக்கொண்டு வேகமாக ஓடினான். அவள் துரத்தினாள். புள்ளியாகத் தெரியும்வரை ஓடினார்கள். அவள் எப்படியாவது அதைப் பறித்து விடுவாள் என்று தோன்றியது. அவன் அப்பொழுது அழுவான். தகப்பன் சிறுமிக்கு தழும்பு வரும்படி தண்டனை கொடுப்பார். அதற்கு முன்னர் அது ஆண்குற்றமா பெண்குற்றமா என்பதை தீர்மானிப்பார்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க