எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

நான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால் ‘உங்கள் காதலிக்கு வைரம் பரிசளியுங்கள்’ என்று விளம்பரம் வேறு செய்தார்கள். சாப்பிடுவதற்கு வழியில்லாத ஏழை மக்கள் வைரத்துக்கு எங்கே போவார்கள்.

அரசாங்கம் வைரம் கிடைத்ததை நினைவுகூரும் விதமாக ஒரு தபால்தலை வெளியிட்டது. முக்கோண வடிவத்தில் புது வைரத்தின் படத்துடன் வெளிவந்த அபூர்வமான தபால்தலையை வாங்கி தபால்தலை சேகரிக்கும் இலங்கை நண்பர்களுக்கு நான் அனுப்பிவைத்தேன். புதிதாகக் கண்டுபிடித்த வைரத்தை வெட்டுவதற்கு உலகத்திலேயே தலைசிறந்த வைரம் வெட்டும் நிபுணரான Lazane Kaplan என்பவரை நியமித்தார்கள். அவர் ஒரு வருடகாலமாக அந்த வைரத்தின் முன் உட்கார்ந்து அதைப் பல கோணங்களிலும் படித்து ஆராய்ந்து திட்டமிட்டார். இறுதியில் அமெரிக்க தொலைக்காட்சியின் முன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்க அதை வெட்டினாராம். The Star of Sierra Leone என்ற அந்த வைரமும், சியாரா லியோனும் உலகப் பிரபலமானது அப்படித்தான்.

சியாரோ லியோனின் கிழக்குப் பகுதிகளில் வைரம் விளைந்தது. ஆற்றோரங்களில் சனங்கள் கும்பல் கும்பலாக ஆற்று மணலை அரித்து வைரம் தேடுவது சாதாரண காட்சி. உரிமம் இல்லாமல் வைரம் அரிப்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை விதிக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஒருவரும் அந்த புதுச் சட்டத்தை பொருட்படுத்தவில்லை. வைரம் கிடைத்தால் அதனால் வரும் லாபம் எக்கச்சக்கமாக இருக்கும். சாதாரண விவசாயம் செய்துவந்த ஏழை மக்கள் அந்த தொழிலை துறந்துவிட்டு வைர வேட்டையில் இறங்கினார்கள். ஒரு நல்ல விவசாய நாடு வைரம் தேடும் பேராசைக்காரர்களால் நிறைந்துகொண்டு வந்தது.

வைரம் தேடுபவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் உலாவின. யெங்கிமா, ரொங்கோ போன்ற இடங்களில் மழை பெய்து தண்ணீர் அடித்துப் போனபிறகு கற்கள் கிளம்பி மேலே வந்துவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி நடப்பது வேடிக்கையாக இருக்கும். ஒருநாள் ஒரு பெண் ஆற்றிலே குளித்துவிட்டு திரும்பும்போது காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள். ஒரு கையிலே அடக்க முடியாத அளவுக்கு பெரிதான  வைரக்கல். அதை இரண்டாம் ஆளுக்கு தெரியாமல் கொண்டுபோய் ஒரு லெபனிஸ் வைர வியாபாரியிடம் விற்றிருக்கிறாள். அவர் அவளுக்கு 5000 லியோன் காசு கொடுத்தார். பெரும் தொகை. அடுத்தநாள் அந்த வியாபாரி அதே வைரக்கல்லை ஐந்து லட்சம் லியோனுக்கு விற்றது அவளுக்கு தெரியாது.

படிக்க:
ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…
♦ மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு
♦ சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!

இன்னொரு நாள் ஒருவர் வேலைக்கு போய்விட்டு வரும் வழியில் ஏதோ மினுங்குவதைக் கண்டு தூக்கிப் பார்த்தார். அவரால் நம்பமுடியவில்லை. பெரிய வைரக்கல். அதை அவருடைய இரண்டு நண்பர்களுக்குக் காட்டி ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் அதை அங்கேயுள்ள வியாபாரிகளுக்கு விற்கவேண்டாம், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள். நேரே தலைநகரத்துக்கு எடுத்துப்போய் விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று கூறினார்கள். அவரும் அடுத்தநாள் காலை போவதென்று முடிவு செய்தார். அன்றிரவு அந்த நண்பர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு வைரத்தை திருடிக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கதைகள் எல்லாம் ஒரு லெபனிஸ் வைர வியாபாரி எனக்கு சொன்னவைதான். இவர் அங்கேயிருந்த வியாபாரிகளில் நேர்மையானவர் என்று பெயரெடுத்திருந்தார். வைரக்கற்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர். இவர் வீட்டு வாசலில் ஒரு காவல்காரன் எப்போதும் நிற்பான். அவனைத் தாண்டிப் போனால் பெரிய இரும்புத் தூண்கள் போன்ற கதவு.  உள்ளே இருந்து கடவு எண்களைப் பதிந்தால்தான் அது திறக்கும். திருடர்கள் அதிகமாக இருந்ததால் தன் வியாபாரத்துக்கு பாதுகாப்பு அவசியம் என்பார்.

ஒரு நாள் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது ஓர் இளைஞன் வந்தான். சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டபடியே நின்றான். நாங்கள் பார்க்கும்போதே கொடுப்புக்குள் இருந்து புளியங்கொட்டை அளவு வைரக்கல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவர் அந்தக் கல்லைப் பரிசோதித்தார். அவரிடம் பலவித கருவிகள் இருந்தன. வைரத்துக்கு எடையும், உருவமும் முக்கியம். எடை கூடி இருந்தாலும் உருவம் சரியாக அமையாவிட்டால் வெட்டுவதில் சேதாரம் உண்டாகி வைரத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். இளைஞன் கொண்டுவந்த வைரம் அளவில் பெரிதாக இருந்தாலும் மதிப்பு குறைந்தது என்றார். அதிலே மோசமான கறுப்பு புள்ளி விழுந்திருந்தது. பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது அவனிடம் ஒரேயரு கேள்விதான் கேட்டார். ‘எங்கே கிடைத்தது?’ அதற்கு அவன் ‘ரொங்கோ’ என்று பதில் சொன்னான்.

ரொங்கோவுக்கு என் நண்பர்களைப் பார்க்க நான் அடிக்கடி போவதுண்டு. ஓர் இடத்தில் ஆறு மெல்லிய ஓடைபோல பிரிந்து நிலம் தெரிய ஓடும். அந்த இடம் மனதைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். ஒரு நாள் அந்தப் பாதையில் போனபோது தூரத்து மலை பூக்களால் மூடப்பட்டுக் கிடந்தது. நெடிதுயர்ந்த மரங்கள், நீலமான ஆகாயம், தெளிந்த நீர். வாழ்க்கையில் ஒருமுறைதான் அந்தக் காட்சி பார்க்கக்கிடைக்கும் என்று எனக்குப் பட்டது. ஒரு புகைப்படம் பிடிக்கலாம் என்று காரை விட்டு இறங்கினேன். ஆற்று மட்டத்துக்கு இறங்கிய பிறகுதான் நான் எடுக்க வந்த படத்திலும் பார்க்க இன்னும் அரிய காட்சி ஒன்று கிட்டியது.

இரண்டு பெண்கள் வெகு சிரத்தையாக வைரத்துக்காக மண்ணை அரித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு முதுகைக் காட்டியவாறு. நானும் சாரதியும் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பார்த்தால் சிநேகிதிகள் போலவும் இருந்தது; சகோதரிகள் போலவும் தெரிந்தது. இருவரும் ஒரே மாதிரியான உடை தரித்திருந்தார்கள். கீழே பூப்போட்ட லப்பா உடுத்தி மேலே மஞ்சள் ரீசேர்ட் அணிந்திருந்தார்கள். பெரியவளுக்கு 25 – 26 வயதிருக்கலாம்; சின்னவளுக்கு 12 -13 மதிக்கலாம். அவர்கள் மென்டே மொழியில் கலகலவென்று பேசுவதும், பின்பு சிரிப்பதுமாக முழங்கால் தண்ணீரில் குனிந்தபடி நின்று  வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

படிக்க:
♦ கோலார் சுரங்க வரலாறு !
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
♦ உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

எங்களுடன் வந்த சாரதி மென்டே மொழியில் வணக்கம் சொன்னான். திடுக்கிட்டு திரும்பிய அவர்கள் கண்களில் வியப்பும், பயமும், வெட்கமும் ஒரே அளவில் கலந்திருந்தது. நான் ஒரு படம் பிடிக்கலாமா என்று கேட்டேன். அதைச் சாரதி மொழிபெயர்த்தான். அதற்கு அவர்கள் பதில் சொல்ல அவன் என்னவோ சொன்னான். அவர்கள் அதற்கும் ஏதோ சொல்லிவிட்டு சிரிசிரியென்று சிரித்தார்கள். இப்படி என்னை விட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீண்ட உரையாடலில் இறங்கினார்கள். நான் ஒருவன் அங்கே நட்ட மரம் மாதிரி நிற்கிறேன் என்பதே அவர்களுக்கு மறந்துவிட்டது.

‘சரி, சரி என்ன சொல்கிறார்கள்’ என்றேன். அவன் சிரித்தபடி சொன்னான் அவர்கள் இருவரும் தாயும் மகளுமாம். பக்கத்து கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த ஒதுக்குப்புறமான இடத்தை அவர்கள் பிடித்திருக்கிறார்கள். தினமும் காலையிலிருந்து இரவு வரைக்கும் அரிப்பார்கள். இன்னும் ஒரு வைரமும் அகப்படவில்லை. ‘கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?’ இது என் கேள்வி.’ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா?’ இது அவர்கள். ‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?’ இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். ‘அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.’ அவள் வெடிப்பதுபோல வாயைத் திறந்து சிரித்தாள். தாயை கலந்து ஆலோசிக்காமல் அவளாகவே சிந்தித்து அந்தப் பதிலை கொடுத்ததில் தாய்க்கு பெருமை தாங்க முடியவில்லை.

நான் காமிராவை தயார் செய்தேன். அவர்கள் இருவரும் ஏதோ தங்களுக்குள் பேசினார்கள். பிறகு சாரதியிடம் பேசியபோது முகம் வாடி அவர்கள் உற்சாகம் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. என்னவென்று கேட்டால் அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறதாம். எனக்கு ஆச்சரியம். கூச்சம் என்ற வார்த்தையே மென்டே மொழியில் இல்லை. சாரதி தொடர்ந்தான். அழுக்கான  ரீசேர்ட்டை அணிந்து படம் பிடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை; ரீசேர்ட்டை கழற்ற அனுமதித்தால்தான் சம்மதிப்பார்களாம். இப்பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. யாராவது இந்த உலகத்தில் மறுப்பு சொல்வார்களா. மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் ஒப்புக்கொண்டேன்.
அது பொத்தான் வைத்து முன்னுக்கு பூட்டும் ரீசேர்ட். அது முடிந்த இடத்தில் கழுத்து தொடங்கி மேலே போனது. ஒரே இழுவையில் இருவரும் தலைக்கு மேலால் ரீசேர்ட்டைக் இழுத்துக் கழற்றி வீசிவிட்டு ஒருவர் தோளை ஒருவர் அணைத்தபடி நின்றனர்.  இருவரும் ஒரே அச்சாக  இருந்தனர். பூக்கள் நிறைந்த மலையும், மரங்களும், ஆறும் பின்னணியாக அமைந்தது. படம் எடுத்து முடிந்தபிறகும் அது தெரியாமல் அவர்கள் சிரித்தபடி காமிரா முன்னால் நின்றார்கள்.

தங்களுக்கு ஒரு படம் வேண்டுமென்று கேட்டாள் சின்னவள். அவள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அழுக்கான ரீசேர்ட்டை மறுபடியும் மாட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய தலையும், ஒரு கையும் ஒரு மார்பும் ரீசேர்ட்டுக்கு உள்ளேயும், மற்ற மார்பு வெளியேயும் இருந்தது. அடுத்தமுறை இந்த வழியால் போகும்போது கொடுப்பேன் என்றேன். ஆனால் அவர்களை எங்கே தேடுவது? மறுபடியும் சிறியவளே பதில் கூறினாள். ‘இந்த ஆற்று தண்ணீரிலேயே நிற்போம். இல்லாவிட்டால் அதோ அந்தப் பளிங்கு வீட்டில் இருப்போம்’ என்றாள். மறுபடியும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சிரிப்பு அலை அலையாக எழும்பியது.
அந்த அலையுடன் நான் காருக்கு திரும்பியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை, எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ‘இது சட்டவிரோதமான காரியம் அல்லவா?’ அவ்வளவு குறைந்த நேரத்தில் முழுச் சிரிப்பில் இருந்து முழுக் கோபத்துக்கு ஒருவர் மாறியதை அன்றுதான் கண்டேன். அம்மாக்காரி சொன்னாள், ‘சட்டவிரோதமா? அவர்கள் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும். நானும் என் மகளும் இன்று காலை உணவு சாப்பிட்டோமா என்று ஒருவருமே கேட்பதில்லை. என்னுடைய ஆற்றுத் தண்ணீரில் நான் நிற்கக்கூடாதா?’

நான் அந்தப் பெண்களை எடுத்த படம் அருமையாக விழுந்திருந்தது. பார்த்தால் தாயும் மகளும் என்று சொல்லவே முடியாது. அக்காவும் தங்கையும் போலவே தோளுக்கு மேல் கைபோட்டபடி நின்றார்கள். நான் பெரிய புகைப்படக்காரன் அல்ல; என்னுடைய காமிராவும் பெரிய விலையுயர்ந்த காமிரா என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்தப் படத்தில் எல்லா அம்சங்களும்  பொருந்தியிருந்தன. பூச்சொரிந்த மலையும், உயர் மரங்களும், படிகம் போன்ற ஆற்று நீரும், அடக்கமுடியாமல் எழும்பிய சிரிப்பை கொஞ்சமாக வெளியே விடும் பெண்களும். அவர்களின் அழகு அப்படி அபூர்வமாக அமைந்ததற்கு காரணம் அந்தக் கண்களில் துள்ளிய சூரிய ஒளிதான்.

அடுத்து வந்த சில வாரங்களில் மழை பிடித்துக்கொண்டது. மழை என்றால் ரொங்கோ போகும் ரோட்டுப்பாதை சேறும் சகதியுமாக மாறிவிடும். கார் உருளுவதற்குப் பதிலாக மிதக்கவும், சறுக்கவும் செய்யும். மழைப் பருவம் முடிந்து போனபோது வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களைத் தேடினால் அவர்களைக் காணவில்லை. அவர்கள் வேலைசெய்த அதே இடத்தில் வேறு  இரண்டு நடுத்தர வயது ஆண்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஆற்று மணலை அரித்தார்கள். அந்தப் பெண்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. புகைப்படத்தை எடுத்துக் காட்டினதும் புரிந்துகொண்டார்கள். அவர்களை சில வாரங்களுக்கு முன்னால் பொலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. எதற்காக என்று கேட்டபோது உரிமம் இல்லாமல் வைரம் அரித்த குற்றத்திற்காக என்றனர்.

‘உங்களிடம் உரிமம் இருக்கிறதா?’

‘இல்லை, ஆனால் மறுபடியும் பொலீஸ் இந்தப் பகுதியில் திடீர்சோதனை நடத்த ஆறுமாதம் பிடிக்கும்.’

நான் அவர்களிடம் படத்தைக் கொடுக்கப் போனபோது மனைவி தடுத்துவிட்டார். திரும்பவும் காருக்குள் ஏறியதும் இன்னொரு தடவை அந்தப் படத்தை வெளியே எடுத்துப் பார்க்கத் தோன்றியது. மனைவி ‘கண்கள் என்ன பளபளப்பாக இருக்கின்றன’ என்றார். உண்மைதான், எப்படியும் ஒரு பளிங்குவீடு வாங்கவேண்டும் என்ற கனவு அந்தப் பெண்களின் கண்களில் மினுமினுத்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அது சூரிய ஒளி இல்லை, வைரக் கற்கள் என்பது தெரிந்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க