“சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியா ஒரு இந்து நாடாக தன்னை அறிவித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அது மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இந்தியாவை முசுலீம் நாடாக்கும் முயற்சியை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வல்ல அரசாங்கம் திரு நரேந்திர மோடியின் அரசாங்கம் மட்டுமே” என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் யாராக இருக்க முடியும் ? ஒரு ஆர்.எஸ்.எஸ்.-காரராகவோ அல்லது ஒரு  பாஜக-காரராகவோதான் இருக்க முடியும் என்றுதானே நினைப்போம். ஆனால் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தவர் மேகாலயா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி சுதீப் ரஞ்சன் சென்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்திருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர், புத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள், காஸிக்கள், ஜைன்தியாக்கள் மற்றும் கரோக்கள் ஆகிய மதப் பிரிவினர் சித்திரவதை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார் அந்த நீதிபதி.

நீதிபதி சுதீப் ரஞ்சன் சென்

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்றும் கூட, அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர்கள் வேறு போக்கிடம் ஏதுமின்றி தவிப்பதாகவும் கூறினார். பிரிவினையின் போது இந்தியாவிற்கு வந்த இந்துக்கள் இன்றளவும் வெளிநாட்டினராகவே கருதப்படுவதாகக் கூறிய அவர், அவ்வாறு கருதுவது தனது புரிதலின்படி தர்க்கமற்றது என்றும் சட்டவிரோதமானது என்றும் இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் அந்நீதிபதி கூறியுள்ளார்.

மேலும், அவர்களிடம் எவ்வித ஆவணத்தையும் சமர்ப்பிக்கக் கோராமல் அவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்க வேண்டும் என பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் எம்.பிக்களை கேட்டுக் கொண்டுள்ளார் மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி சுதீப் ரஞ்சன் சென்.

கடந்த டிசம்பர் 10 அன்று, மேகாலயாவில் தங்கியிருக்கும் ஒருவருக்கு குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குகையில் இத்தகைய கோரிக்கையை நமது மாண்புமிகுக்களுக்கு முன் வைத்துள்ளார் நீதிபதி.

அவரது ஆணையில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களான, தற்போது வெளிநாட்டில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் எந்நேரமும் இந்தியாவிற்குள் திரும்பி வர அனுமதிக்கப்படும் வகையில் அவர்களுக்கு தானாகவே (automatically) குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது ஆணையில் ஒருபடி மேலே போய், “பாகிஸ்தான் தம்மை இசுலாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை மதத்தின் அடிப்படையில் நடந்ததன் காரணமாக, இந்தியாவும் இந்து நாடாக தம்மை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்

தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இந்துக்களை சேர்த்து விட்டு, மற்ற மதத்தினரை நீக்கு என்கிறார் மேகாலயா நீதிபதி

இந்த ஆணையின் நகலை பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், மேகாலயா ஆளுநர் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சரிடமும் வழங்குமாறு இந்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதி சென் பணித்துள்ளார்.

மேலும், “நான் ஒன்றைத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். யாரும் இந்தியாவை மற்றுமொரு இசுலாமிய நாடாக்க முயற்சிக்கக் கூடாது. இல்லையெனில், அதுவே இந்தியாவிற்கும் இந்த உலகிற்கும் இறுதி நாளாக இருக்கும். திரு நரேந்திர மோடிஜியின் ஆட்சியின் கீழ் இந்த அரசாங்கம் மட்டும்தான் இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளும் என்றும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்றும் தனது ஆணையில் தெரிவித்துள்ளார்.

படிக்க:
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

கடந்த புதன்கிழமை 12.12.2018 அன்று, மேகாலயாவின் வலுவான மாணவர் அமைப்பான, க்ஹாசி மாணவர்கள் அமைப்பு நீதிமன்ற ஆணையை ஒத்துக் கொள்ள மறுத்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலாலர் டொனால்ட் தாபா இது குறித்துக் கூறுகையில், “குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவில் அடைக்கலம் கேட்டவுடன் அவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்க வேண்டுமென பிரதமருக்கு மேகாலயா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்திருக்கும் சமீபத்திய  கோரிக்கையை எங்கள் மாணவர் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆணை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ’மக்கள் தொகை அமைப்பின்’ அனைத்து பரிமாணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார். மேலும் அத்தகைய உடனடி குடியேற்றம் வழங்கப்பட்டால், வட கிழக்கு இந்தியாவின் தனிச்சிறப்பான மக்கள் சமூகம் அங்கிருந்து துடைத்தெறியப்படும் நிலைக்குத் தள்ளப்படுவர் என்றார்.

ஒருவேளை மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி சென்னுக்கு, முன்னாள் நீதிபதியும் இன்னாள் தே.ப.தீர்ப்பாய தலைவருமான கோயலும், முன்னாள் நீதிபதி இன்னாள் கேரள கவர்னர் சதாசிவமும் ரோல்மாடல்களாக இருந்திருக்கலாம். ’வளர்ச்சி நாயகனின்’ மனம் கவர்ந்தால் கிடைக்கவிருக்கும் ராஜ வாழ்க்கை கண்களில் வந்து சென்றிருக்கும்.

என்ன இருந்தாலும் வெட்கத்தை விட்டு அரசனுக்கு வாழ்த்துப்பா பாடுவது, பாசிசப்பா பாராட்டுப் பத்திரம் வாசிப்பது இன்றைய ‘ஜனநாயக’ அமைப்பில் நேரடியாக செய்யமுடியாதல்லவா? அதனால்தான் அரசனின் மனம் கவர, இந்துத்துவப் பஜனையையே ’தீர்ப்பு விடு தூதாக’ பாடி அனுப்பியிருக்கிறார் நீதியரசர் !

இனி ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரின் புனிதக் கருத்துப் புத்தகமே நமது நீதியரசர்களின் அரசியல் சாசன புத்தக அலமாரியில் கிரீடமாக அமரும். காவிமயமான நீதியை வெள்ளையடித்து சுத்தம் செய்யாமல் சத்தம் போடுவதற்கே பயந்து என்ன பயன்?

நந்தன்
செய்தி ஆதாரம்: Hindustan Times