“செத்தும் கொடுத்தார் வள்ளல் சீதக்காதி” என்பார்கள். ஜெயலலிதாவோ உயிரோடு இருந்த போதும் இறந்த போதும் கொள்ளையடித்த ஊழல்கள் மளிகைக் கடை பில் போல வந்து கொண்டே இருக்கின்றன.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவது தெரிந்ததே. தமிழகத்தில் ஆதித்யா சானலுக்கு அடுத்தபடியாக காமடியில் போட்டி போடுவது ஆறுமுகசாமி சானல் செய்திகள்தான். அதில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது, குலோப் ஜாமுன் ருசித்தது இன்ன பிற வரலாற்று விவரங்கள் எல்லாம் ஊடகங்களின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

அதில் லேட்டஸ்ட் சமாச்சாரம் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா 75 நாட்கள் இருந்தபோது செலவழிக்கப்பட்ட மருத்துவக் கட்டணம், மளிகைக் கடை பட்டியல் போல வெளிவந்திருக்கிறது. பட்டியலின் மொத்தக் கட்டணம் 6.85 கோடி ரூபாய். இந்தக் கட்டண விவரங்களை நகல் ரசீதுகளுடன் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

அப்பல்லோவில் ’அம்மா’

அதில் ஜெயா தங்கிய அறைக் கட்டணம் 24 லட்சம், சசி அண்ட் கோ, அரசு அதிகாரிகள் அன்ட் கோ தங்கிய அறை வாடகை ஒரு கோடியே 24 லட்சம், உணவுக் கட்டணம் ஒரு கோடியே 17 லட்சம், மருத்துவர்களின் பரிந்துரை 21 லட்சம், மருந்துகளுக்கு 30 லட்சம் என்பவை அடக்கம். இன்னும் நர்சிங், மருந்து, இன்ஜியனிரிங் என பட்டியல் நீள்கிறது. இந்த கட்டணத்தில் ஆறு கோடி ரூபாய்க்கான காசோலையை அதிமுக கட்சி கொடுத்திருக்கிறதாம். மீதியை கொடுக்க வேண்டுமாம். ஊழல் கட்சியாக இருந்தாலும் அப்பல்லோ மருத்துவமனையிடம் காசை காசோலையாக கொடுத்திருக்கறார்கள். ஜெயா உயிரோடு இருந்து, சசிகலாவும் வெளியே இருந்தால் அப்பல்லோ இப்படி தைரியமாக காசு வாங்கியிருக்குமா என்ன?

படிக்க:
♦ அன்னலட்சுமி – திருவோட்டுத் தமிழன் !
♦ அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி, பொங்கல், கேசரி, வடை, ரவா கிச்சடி, குலோப் ஜாமுன், காபி, பிஸ்கட், பழச்சாறு, தயிர் சாதம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டார் என்று மருத்துவர்கள் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து இருந்தனர். அதேபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அம்மா இன்று இட்லி சாப்பிட்டார், நேற்று பொங்கல் சாப்பிட்டார், நாளை அல்வா சாப்பிடுவார் என்றெல்லாம் அடித்து விட்டனர்.  இதை வைத்துப் பார்த்தாலும் இந்த சரவண பவன் அயிட்டங்களை தினசரி முழுங்கினாலும் 75 நாட்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தாலும் இலட்ச ரூபாயை தாண்டியிருக்காது. பிறகு எப்படி 1.17 கோடி செலவானது என்பது மக்களின் கேள்வி

ஜெயலலிதா மட்டும் இப்படி சாப்பிட்டிருந்தால் அவர் 75 நாட்கள் தங்கியிருக்கத் தேவையில்லை. இரண்டு நாட்களிலேயே பரலோகம் போய் சேர்ந்திருப்பார். மாறாக எப்படி ஜெயலலிதா கொடநாடு போனால் கோட்டை முதல் தோட்டம் வரை அப்படியே  ஊட்டிக்கு செல்லுமோ அது போன்று அப்பல்லோ மருத்துவமனையிலும் தமிழக அரசும், தோழி சசிகலா பரிவாரமும் சென்று முகாமிட்டனர். அதற்கும் சேர்துத்தான் இந்த ஒரு கோடியே…. உணவு செலவு. இதுபோக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல் அதிகாரிகள், ஊடகங்கள் என அனைவரும் தின்று தீர்த்த கணக்கும் இந்த மெஸ் பில்லில் அடக்கம்.

அதிலும் குறிப்பாக இந்த ஒரு கோடியே 17 லட்சத்தில் யாரெல்லாம் எவ்வளவு சாப்பிட்டு இருக்கிறார்கள் என்பதையும் பட்டியல் போட்டிருக்கிறார்கள் . 48 லட்சம் ரூபாயில் மீடியாக்கள் சாப்பிட்டு இருக்கின்றன. அதனால்தான் அன்று அம்மா மருத்துவமனை அனுபவத்தை தந்தி டிவி முதல் புதிய தலைமுறை வரை அழுது கொண்டே கவரேஜ் செய்தார்கள் போலும். அழுதாலும் தின்பதற்கு அவர்கள் குறைவைத்து விடவில்லை.

அடுத்து அரசு அதிகாரிகள் தின்ன செலவு 20 லட்சம், போலீஸ் அதிகாரிகள் 26 லட்சம், விஐபிக்கள் 18 லட்சம், ஜெயலலிதா வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் 17 லட்சம் என மொத்தமாக 1 .17 கோடி  ரூபாயில் சாப்பிட்டு தீர்த்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !
♦ அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ

இந்த பட்டியலில் பார்த்தால் கட்சிக்காரர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் இருக்க வேண்டும். அவர்களை விட மீடியா அதிகம் தின்றிருக்கிறது. அதிகார வர்க்கம் மொத்தமாக சேர்த்தால் 46 லட்சத்திற்கும் தின்று தீர்த்திருக்கிறது. ஆக இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அழுது இழந்த கலோரியை விட தின்று சேர்த்த கலோரி அதிகம் எனத் தெரிகிறது. அந்த 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனை சமையல் அறையில் மணமும், பணமும் அதிகம் வீசியிருக்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா சாப்பிட்டது ஒன்றே கால் கோடி ரூபாய் என்றால் அம்மா அறிமுகப்படுத்திய அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாயிலும் விற்கப்படுகிறது.

தமிழனை திருவோட்டுத் தமிழனாக்கிய திருட்டு ’அன்னலட்சுமி’

2013-ம் ஆண்டில் சென்னையில் அம்மா உணவகம் அறிமுகப்படுத்தப்பட்ட போது 10 இடங்களில் திறந்தார்கள். அதற்கு உத்தேசமாக ஓராண்டு 3 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவகத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாப்பிடுவார்கள். அப்படி 10 இடங்களிலும் சேர்ந்து 365 நாட்கள் சாப்பிட்டாலும் அதற்கு இவர்கள் கொடுத்த கணக்கின்படி மூன்று கோடி ரூபாய்தான் செலவு. ஆனால் ஏழை மக்களுக்காக அம்மா உணவை அறிமுகப்படுத்திய போயஸ் தோட்டத்து அம்மா மருத்துவமனையில் தங்கியபோது அவரும் அவரது பரிவாரமும் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சாப்பிட்டிருக்கின்றனர்.

சமீபத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் இரட்டையர்கள் அம்மா உணவகம் சென்று சீன் போட்ட போது அங்கே புதிய தட்டு ஒன்றில் சரவணபவனில் இருந்து வருவிக்கப்பட்ட இட்லி பொங்கலை சாப்பிட்டார்கள். இந்த சீனை ஒப்பிட்டாலும் அப்பல்லோவில் மெஸ் கணக்கு சரியாகத்தான் வந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து மதிய உணவு திட்டத்தை அரசுப்பள்ளிகளில் அமல்படுத்துகின்றனர். அதில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு உணவு செலவாக 4 ரூபாய் 13 காசை நிர்ணியத்திருக்கிறார்கள். இதையே நடுநிலைப் பள்ளியின் குழந்தைக்கு ஆறு ரூபாய் 18 காசு என நிர்ணயித்திருக்கிறார்கள்.

படிக்க:
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
♦ ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் குழந்தைகள் ஒரு மதிய உணவில் 50 கிராம் காய்களையும் 100 கிராம் அரிசியையும், 20 கிராம் பருப்பையும், ஐந்து கிராம் எண்ணையையும், 12 கிராம் புரதத்தையும் பெறுகிறார்கள்.

ஆறு முதல் எட்டு வரை படிக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 75 கிராம் காய்கறி, 30 கிராம் பருப்பு, 150 கிராம் அரிசி, 20 கிராம் புரதம் , 7.5 கிராம் எண்ணையையும் பெறுகிறார்கள்.  யோசித்துப் பாருங்கள் நான்கு ரூபாயிலும், ஆறு ரூபாயிலும் ஒரு குழந்தைக்கு என்ன தந்துவிட முடியும்? ரேசன் அரிசையை மட்டும் சோறாக போட்டுவிட்டு பேருக்கு அதில் ரெண்டு பருப்பும், ஒரு காய்ஞ்ச கத்திரிக்காய் துண்டும் இருக்கும். தமிழகத்தில் ஒரு முட்டை போடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அதுவும் இல்லை.

இதனால்தான் என்னவோ உலக பட்டினி அட்டவணையில் உள்ள நாடுகளின் தரவரிசையில் இந்தியா கடைசி இடங்களில் இருக்கிறது. இங்கே 20 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினி கணக்கிலும் சத்துக் குறைவு பட்டியலிலும் வருகிறார்கள்.

அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?

– மதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க