14 பேரின் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?
தனிச்சட்டம் இயற்று – ஸ்டெர்லைட்டை விரட்டு !
மே-22 துப்பாக்கிச்சூடு படுகொலை – போலீசாரை கைது செய்!

அரங்கக் கூட்டம்
டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி
சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்! அனைவரும் வாரீர்!

ன்பார்ந்த தமிழக மக்களே!

டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீ்ண்டும் திறக்கலாம் என உத்திரவிட்டுள்ளது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பசுமைத் தீர்ப்பாயம்  தனது அதிகார வரம்பை மீறி தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது. மக்கள் தரப்பில் வாதிட அனுமதி மறுத்தது. ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதிகளை நியமிக்ககூடாது என்ற ஸ்டெர்லைட் வாதத்தை ஏற்றது. தீர்ப்பாய நீதிபதி உத்திரவிடும் முன் அதன் நகல் ஸ்டெர்லைட் இணைய தளத்தில் வெளியானது. இப்படி ஆரம்பம் முதலே ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பாயம் செயல்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் ஆர்.எஸ்.எஸ். சார்பாளர் மட்டுமல்ல. பா.ஜ.க அரசின் ஆசி பெற்றவர். ஆய்வுக்குழுவில் இருந்த நீதிபதி தருண் அகர்வால் பி.எப். பணம் கையாடல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஸ்டெர்லைட் வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்காமல் டெல்லி அமர்வில் விசாரித்தார்கள். எனவேதான் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்திரவு அநீதியானது அதை ஏற்க கூடாது என்கிறோம்.

போலீசு எத்தகைய அடக்குமுறைகள் செலுத்தினாலும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என எச்சரிக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் மறியல் செய்தது. பசுமைத்தீர்ப்பாய உத்திரவை கண்டித்தும், தனிச்சட்டம் இயற்றக்கோரியும் தூத்துக்குடியில் பிரசுரம் கொடுத்ததற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போலீசாரின் தடைகளைத் தாண்டி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என குரல்  கொடுக்கின்றன. இந்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற உத்திரவிற்கு நான்கு வார காலம் தடைவிதித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ கள்ள மவுனம் சாதிக்கிறது.

ஏன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே வெளியிடப்படும்  ஆர்சனிக், காரியம் போன்ற ஆபத்தான நச்சு கழிவுகள், காற்றில் பரவுகிறது. நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் சுவாசக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர், கர்ப்பப்பை சிதைவு போன்ற கோடிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஆர்சனிக், காரியத்தால் நிச்சயமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மே மாதம் மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அறுபது சதவீதத்திற்கு மேல் காப்பர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டுத்தேவை குறைவுதான். இலாப வெறிக்காக தரம் குறைந்த நச்சுத்தன்மை அதிகம் வாய்ந்த மூலப்பொருள்கள் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அபாயகரமான இந்த நச்சுக் கழிவுகளை யாரிடம் எவ்வளவு விற்றார்கள்? எந்த விபரமும் தமிழக அரசுக்கு இதுவரை தெரியாது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் 5 ஆண்டுகள் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கியுள்ளது. 25 மீட்டருக்கு பசுமையை ஏற்படுத்த வேண்டும், ஜிப்சம் பாண்டு கட்ட வேண்டும், காற்று, நீரில் மாசு கலந்திருப்பது குறித்த ஆய்வை அரசு ஆய்வகத்தில் செய்து காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தவொரு விதிமுறையையும் இதுவரை ஸ்டெர்லைட் கடைபிடிக்கவில்லை.

இப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று மக்களை கேட்கிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஸ்டெர்லைட்தான் எங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். தவறினால் ஆலையை மூடலாம். இதுதான் சட்டம். ஆனால், இந்த சட்டத்தை அமுல்படுத்த  வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையோடு கூட்டு சேர்ந்து விதிமுறைகளை மீறியுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியுமா? ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு படுகொலையை கண்டிக்காத, ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. பிரதமர் மோடி இலண்டன் சென்ற போது அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டவர் வேதாந்தா நிறுவனத்தின் முதலாளி அனில் அகர்வால். இவர் பா.ஜ.க. விற்கு பெரும் தொகையை தேர்தல் நிதியாக கொடுத்துள்ளார். அந்த பி.ஜே.பி யின் ஆசிபெற்றதுதான் தமிழக எடப்பாடி அரசு.

தமிழக போலீசார் அருகிலிருந்து தலையின் பின்பக்கத்தில் குறி பார்த்து அதிநவீன துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். இது திட்டமிட்ட படுகொலை என போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. இதுவரை எந்தப் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கைது செய்யப்பட வில்லை. எந்த போலீசார் மீதும் கொலை வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை.

பிரசுரத்தை  தரவிறக்கம் செய்ய  இங்கே அழுத்தவும்.

ஸ்டெர்லைட்டு ஆலைக்காகத்தான் நம் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என 14 பேரை உயிர்த்தியாகம் செய்துள்ளோம். ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கூடவே கூடாது.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு கொடுத்த இருபது இலட்சம் இழப்பீடு தொகையை நாங்களும் தர தயாராக இருக்கிறோம் என ஸ்டெர்லைட் சி.இ.ஓ. சொல்கிறார். தூத்துக்குடி மக்களின் மேம்பாட்டிற்காக, மருத்து செலவிற்காக, குடிநீர் தேவைக்காக நாங்கள் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என அறிவித்து பணம் திண்ணி கழுகுகளை உருவாக்க முயல்கிறான். மக்கள் கோரிக்கை பணம், நிவாரணம் அல்ல. மக்களை கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதுதான். தமிழக சட்ட மன்றத்தில் இதற்கான சிறப்புச்சட்டம் இயற்றும் வரை நந்திகிராம் சிங்கூர் போல் மக்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் படர வேண்டும்.

மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம்,
தொடர்புக்கு: 91768 01656.


இதையும் பாருங்க:

லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்

புதைந்தது உடலல்ல விதையான வீரமடா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க