கேள்வி பதில் பகுதிக்கு நண்பர்கள் பலரும் கேள்விகளை கிரமமாக அனுப்பி வருகிறார்கள். வாழ்த்துக்கள்! முடிந்த மட்டும் உடனுக்குடன் பதில் அளிக்க முனைகிறோம். அசை போட்டு எழுத வேண்டிய கேள்விகளுக்கு சற்று காலம் பிடிக்கும். இங்கே 5 கேள்விகள் இடம்பெறுகிறன.  நன்றி.

நட்புடன்
வினவு

*****

கேள்வி : பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி உதவுமா? மேலும் எதிர்க்கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமை இறுதி வரை  நீடிக்குமா?

-ஷாஜகான்

ன்புள்ள ஷாஜகான்,

பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி ஓரளவிற்கே உதவும். இந்தி மாநிலங்கள் மட்டுமல்ல, கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் பார்ப்பனியக் கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. இன்று வரையிலும் கூட அங்கே  சபரிமலையில் பெண்கள் நுழைய முடியவில்லை.

சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்வது என்பது தேர்தல் அரசியலை மட்டும் நம்பி இல்லை. அதற்கு வெளியே அவர்கள் மக்களிடையே கற்பனையாக முசுலீம் மக்கள் மீதான துவேசம், சாதி வெறி, பசுப் புனிதம், பாக் பயங்கரவாதம், வங்க தேச அகதிகள் என தொடர்ந்து அவதூறுகளையும் விசமப் பிரச்சாரத்தையும் திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

இறைவழிபாடு செய்வதோ ஒரு மதத்தை பின்பற்றுவதோ ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை அங்கீகரிப்பதைத் தாண்டி அரசு, அரசாங்கங்களில் மதத்திற்கு எந்த இடமும் இல்லை. இதுதான் மதச்சார்பற்ற அரசின் இலக்கணம். அதை ஒழித்துக் கட்டி நேரடியாக இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்-இன் குறிக்கோள்.

படிக்க:
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

பார்ப்பனியம் என்பது சாதி, பாலினம், மத, வர்க்க ரீதியாக மக்களை பிரித்து ஒடுக்குகிறது. இதை எதிர்த்து புத்தர், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பொதுவுடமைக் கட்சிகள், திராவிட இயக்கம் என பலர் வரலாறு நெடுகிலும் போராடினர் – போராடி வருகின்றனர். இத்தகைய கருத்து ரீதியான தொடர் பிரச்சார இயக்கம், உழைக்கும் மக்களின் வாழ்வில் தலையிடும் பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் அரசியல் ரீதியான போராட்டம். இவை எவ்வளவு அதிகம் நடக்கின்றதோ அந்த அளவுக்கு இந்துத்துவத்தின் செல்வாக்கு அகற்றப்படும். இதன் கீழ் தேர்தல் அரசியலுக்கு ஒரு பங்குண்டு அவ்வளவே.

பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கண்ட கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்தால் மட்டுமே கூட்டணி ஒற்றுமை வலுவாக இருக்கும். இவர்களில் பலர் கடந்த காலங்களில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். மேலும் பாஜக உருவாக்கியிருக்கும் ‘இந்து’ உணர்வை இவர்களும் அங்கீகரித்து அதற்கு பலியாகியும் இருக்கிறார்கள். ஆகவே மக்கள் அரங்கில் இந்துத்துவத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்தான்  ஓட்டுக் கட்சிகளின் இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையையும் வலுப்படுத்தும்.

♦ ♦ ♦

கேள்வி : வினவு தளம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வினவு ஜனநாயக முறைப்படி போராடுவது ஏன்?
நீதிமன்றங்களை குறை சொல்லும் வினவு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது ஏன்?
அரசியல் கட்சிக்கும் வினவு போன்ற மாற்று ஊடகத்திற்கும் என்ன வேறுபாடு?

-ஸ்டீபன்

ன்புள்ள ஸ்டீபன்,

இப்போதிருப்பது போலி ஜனநாயகம். ஆகையால் உண்மையான ஜனநாயகத்தை வேண்டி அதை எதிர்க்கிறோம். இங்கு தாய் மொழிக்கு இடமில்லை, ஒரு கார் ஆலையில் சங்கம் கட்டக் கூட அனுமதியில்லை, கோக்கோ கோலாவை எதிர்த்து பிரச்சாரம்  செய்யத் தடை, மக்களின் நிலங்கள் கார்ப்பரேட்கள் எடுப்பதை தடுக்க உரிமையில்லை, தெரிவு செய்யப்படும் எம்.எல்.ஏ, எம்.பி போன்றோருக்கு சட்டத்தை அமல்படுத்தும் உரிமையில்லை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்திய போலீசு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சட்டப்படி வழியில்லை…….. இவையெல்லாம் போலி ஜனநாயகத்திற்கு சில சான்றுகள்.

ஜனநாயக முறைப்படி நாம் நடத்தும் போராட்டங்கள் இந்த அரசியல் சட்டப்படியே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களோ சில நேரம் அனுமதிக்கிறார்கள். பல நேரம் கைது செய்கிறார்கள். போராட்டங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் இந்த அரசமைப்பு வழங்கியிருப்பதாக சொல்லப்படும் உரிமைகள். அதை நாம் உருவாக்கவில்லை. அந்த உரிமைகள் போலியாக இருக்கிறதென்றே சொல்கிறோம். அடுத்து இந்த போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நாம் எதிர்பார்க்கும் உண்மையான ஜனநாயகத்தை வழங்கிவிடாது என்பதையும் சேர்த்தே மக்களிடம் கொண்டு செல்கிறோம். இது உண்மைதான் என்பதை மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் அரசும் உறுதி செய்கிறது.

அப்போது சட்டத்தை மீறியும் போராடுகிறோம். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் போடப்படுகிறது. மக்கள் அதை மீறுகிறார்கள். சாலையில் போக்குவரத்தை மறிக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. மக்களை அதை மீறி போராடுகிறார்கள். டாஸ்மாக் போராட்டத்தின் போது பல கடைகளை மக்கள் தீயிட்டு கொளுத்தியதை சட்ட உரிமை மீறலாக பார்க்க கூடாது என உயர்நீதிமன்றமே சட்டவிரோதமாக விளக்கம் கொடுத்தது. ஆகையால் தேவைப்பட்டால் சட்டவிரோதமாக போராடுவோம் என மக்களே உணர்ந்து விட்ட காலமிது.

வினவு ஒரு மாற்று ஊடகம் என்று சொல்லும் போதே அது ஒரு மாற்று அரசியலையும் முன்வைக்கிறது, ஆதரிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பெரிய கட்சிகள் மற்றும் முதலாளித்துவ உலகின் அரசியலை முன்வைக்கின்றன. அரசியலே இல்லாமல் எந்த ஊடகமும் இல்லை. அரசியல் கட்சிகளிலும் கூட முதலாளிகளின் நலனைப் பேசும் கட்சிகள், உழைக்கும் மக்களின் விடுதலையைப் பேசும் கட்சிகள் என்று பிரிந்தே இருக்கின்றன. வினவு உழைக்கும் மக்களின் அரசியலை ஆதரிக்கும் ஒரு மாற்று ஊடகம்.

♦ ♦ ♦

கேள்வி: பத்திரிக்கை துறையில் (வினவு)வலை பின்னலை உருவாக்க ஏதெனும் வடிவம் உண்டா?

– வெங்கடேஷ்

ன்புள்ள வெங்கடேஷ்,

பத்திரிகை துறையில் ஒரு வலை பின்னலை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். இது காலத்தின் தேவையும் கூட. நாடு முழுவதும் மக்கள் பத்திரிகையாளர்கள் – புகைப்படக் காரர்கள் உருவாக வேண்டும். இது சாத்தியமானால் பெரும் ஊடகங்கள் செய்ய முடியாத பணியினை மாற்று ஊடகம் செய்ய முடியும்.

படிக்க:
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி
♦ கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

பத்திரிகைத் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் கருத்து ரீதியில் மக்களுக்கு பணியாற்ற விரும்புவோர் தமது ஓய்வு நேரத்தில் இத்தகைய மாற்று ஊடகங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும். அதே போன்று கல்வி- சினிமா – இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் பாற்பட்டு சிந்திப்போர் பணிபுரிந்தால் மீடியாவில் நாம் ஒரு வலைப்பின்னலை நிச்சயம் உருவாக்க முடியும்.

இதை எப்படி சாதிப்பது, என்ன வடிவில் என்பதெல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் பங்கேற்போடுதான் செய்ய முடியும். ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.

♦ ♦ ♦

கேள்வி : இப்போதைய தலைமுறை, பெரிய கட்டுரைகளை, நூல்களை படிப்பதில் ஆர்வம், ஆற்றல் இல்லாமல் உள்ளதே, இதற்கு மாற்று என்ன?
வினவு போன்ற மாற்று ஊடகங்கள், இதை எப்படி கையாளப் போகிறார்கள்?

– வசந்தன்

ன்புள்ள வசந்தன்,

முந்தைய தலைமுறை காலத்தில் எழுத்தறிவின் சதவிதமே குறைவு. இப்போதைய தலைமுறையில் எழுதப்படிக்க தெரிந்தோர் அதிகம் என்றாலும் கூடவே திசைதிருப்பும் அறிவியல் வளர்ச்சியும் அதிகம். இணையத்தில் அதிகம் உலாவுவோர் கூட அவர்கள் நீண்ட கட்டுரைகள் படிக்கும் வழக்கும் விருப்பம் உள்ளவராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்களது இணைய டி.என்.ஏ-விலேயே தொடர்பற்று திரியும் நிலை உருவாகிவிடுகிறது. வேலை நிமித்தமாக இணையத்தில் இருப்போரின் கவனக்குவிப்பும் வெகுவாக குறைந்து விடுகிறது. இதை பல ஆய்வுகள் சுட்டுகின்றன.

இன்னொரு பக்கத்தில் இன்று படிக்கும், கேட்கும், பார்க்கும் தலைப்புகள் எண்ணிக்கை பிரம்மாண்டமாய் அதிகரித்திருக்கின்றன. முன்பு நாளிதழ் மட்டும் படிக்கும் வழக்கம் கொண்டிருப்போர் கூட இன்று ஒரு செய்தியை மேற்கண்ட மூன்று வடிவங்களிலும் பின் தொடர்கிறார்கள். இத்தோடு விவாதம் செய்யும் வழக்கமும் அதிகரித்திருக்கிறது.

மெரினா போராட்டத்தின் போதும் அடுத்து வந்த சில மாதங்களிலும் தமிழக மக்களிடையே அரசியல் விவாதங்கள் அதிகம் நடந்தன. தொலைக்காட்சிகளில் கூட செய்தி பார்ப்பதும், விவாதங்களை கவனிப்பதும் சற்றே அதிகரித்தன. தற்போது அந்த மாற்றம் முடிந்து இயல்பு நிலை அதாவது பொழுது போக்கு அம்சங்களை கவனிப்பது மீண்டும் வந்தாலும் முன்பிருந்ததை விட அரசியல் செய்தி படிப்போர் அதிகரித்திருக்கின்றனர்.

ஆகவே ஒரு நாட்டில் நடக்கும் போராட்டங்களும், மக்களின் வாழ்வை தீர்மானிக்கின்ற அரசியல் அம்சங்களும் கூட நீங்கள் சொல்லும் நீண்ட கட்டுரைகளை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேற்குலகில் தற்போது மார்க்சிய நூல்களை படிப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் இன்றைய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் தலைமுறையானாலும் அவர்களது போராட்டச் சூழல் அத்தகைய படிப்பை கோருகிறது. மார்க்சை படிப்பது என்பது நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட கடிமானது.

மேலும் எல்லா விசயங்களையும் நீண்ட கட்டுரைகளாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யூ-டியூபில் பொழுது போக்கு விசயங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன. ஆனால் பணமதிப்பழிப்பின் போது தோழர் மருதையன் பேசிய கருப்புப்பணம் குறித்த நீண்ட உரைகள் பெரும் வரவேற்பு பெற்றன. இன்றும் கூட அந்த வீடியோக்கல் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட அரசியல் சூழல், அதன் தேவையை ஒட்டி இந்த ஆழமான உரைகளோ, நீண்ட கட்டுரைகளோ மக்கள் படிப்பார்கள்.

படிக்க:
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
♦ நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

வினவு தளத்தைப் பொறுத்த வரை குறுஞ்செய்திகள், நடுத்தரமான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள், கள ஆய்வுகள், படக் கட்டுரைகள், வீடியோ செய்திகள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் செயல்பட வேண்டுமென்கிறோம்.

இன்னொரு புறம் மக்களிடையே இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் ரசனை, தெளிவு, விவாத அடிப்படையில் விவாதக் குழுக்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு அதை வளர்க்கவும் முயல வேண்டும். ஒரு நூலைப் பற்றியோ, ஒரு திரைப்பட்த்தைப் பற்றியோ தொடர்ந்து விவாதிக்கும் வழக்கத்தின் மூலமாக மக்கள் அடுத்த கட்டமாக பெரிய நூல்களை படிக்கும் மனத்திண்மையினை அடைகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளாக தமிழில் நல்ல மொழிபெயர்ப்பு  நூல்களும், பொதுவான நூல்களும் அதிகம் வந்திருக்கின்றன. ஆனால் இலக்கிய எழுத்தாளர்கள் கூட சினிமா விமர்சனங்களைத்தான் அதிகம் எழுதுகிறார்கள், நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதில்லை என்கிறார் முனைவர் ஆ.இரா. வெங்கடாசலபதி. உண்மைதான்.

வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூலினை ஒவ்வொரு நகரத்திலும் ஒரு வருடம் விவாதிக்கலாம். அறிமுகப்படுத்தலாம். இது போன்று பொருளாதாரம், மார்க்சியம், வரலாறு என தமிழில் இருக்கும் நூல்களை படிக்குமாறு ஒரு அறிவியக்கம் பரவலாகாமால் மக்கள் படிப்பதற்கு முன்வரமாட்டார்கள். எதிர்காலத்தில் இந்த ஆலோசனைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

♦ ♦ ♦

கேள்வி : Need audio file for communism education ஆடியோவில் கம்யூனிச கல்வி தேவை!

– தீபக்

ன்புள்ள தீபக்,

நிச்சயம் செய்கிறோம். மார்க்சிய பாடங்களை நடத்துவதை நீண்டகாலமாக ஒத்திப் போட்டு வந்துள்ளோம். கூடிய விரைவில் உரை வடிவில் செய்ய முயல்கிறோம். தற்போது பொருளாதரம் தலைப்பில் ஒரு தொடரை வெளியிட்டு வருகிறோம்.

நன்றி.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

2 மறுமொழிகள்

  1. இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்… பாக்கிஸ்தான் இஸ்லாமிய தேசமாக இருக்கலாம், அமெரிக்கா கிறிஸ்துவ தேசமாக இருக்கலாம் ஆனால் இந்தியா மட்டும் ஏன் போலி மதச்சார்பின்மையோடு இருக்க வேண்டும். இந்தியாவையும் ஹிந்து மதம் சார்ந்த தேசமாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லை.

    இஸ்லாம் கிறிஸ்துவம் தோன்றாவதற்கு முன்பே பல ஆயிரம் வருடங்களாக ஹிந்து மதம் இந்த நாட்டில் வழிபாட்டு வந்து இருக்கிறார்கள். கிறிஸ்துவமும் இஸ்லாமும் கம்யூனிசமும் இணைந்து ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பதை ஏற்க முடியாது, இவர்களிடம் இருந்து ஹிந்து மதத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும்.

  2. நிறைய . . நிறைய . . . கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். முடிந்தவரை சுருக்கமாக இருத்தல் நலம். வினவின் வீச்சு விரிந்து கொண்டு செல்கிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் பரந்து பட்ட மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
    பாராட்டுக்கள் . . !
    மணிகண்டன், Sathish போன்ற சங்கிகளுக்கும் விவாதங்களில் முழு சுதந்திரம் வழங்கியிருப்பது சிறப்பு !
    நாள்பட்டு உறவாடும்போது அவர்களின் கல் மனதிலும் ஈரம் கசிய வாய்ப்பிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க