மோடி தலைமையிலான பாஜக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சி குறித்து நாட்டு மக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் சில பாஜகவினரும் கூட மோடியின் மோசடி வாக்குறுதிகளை அம்பலப்படுத்த ஆரம்பித்து விட்டனர். இவர்கள் பதவியில் இல்லாத, பதவி கிடைக்காத பாஜக-வினர் என சங்கிகள் பதில் சொல்லலாம். ஆனால் மோடியை எதிர்த்தால்தான் மக்களிடம் செல்ல முடியும் என்ற சூழல் இப்போது அனைவருக்கும் கண்டிஷன் அப்ளையாகி வருகிறது.

முன்னாள் பாஜக அமைச்சர் லட்சுமி காந்த சாவ்லா

சமீபத்தில் அமிர்தரஸிலிருந்து அயோத்திக்கு ரயிலில் பயணம் செய்த பஞ்சாபை சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சர் லட்சுமி காந்த சாவ்லா, ரயில்வே துறைக்கு இன்னும் நல்ல நாள் வரவில்லையே என வீடியோ பதிவு போட்டு ஆதங்கப்பட்டிருக்கிறார். புல்லட் ரயில் விடுவது இருக்கட்டும் முதலில் இருக்கிற ரயிலை ஒழுங்காக பராமரியுங்கள் என பிரதமர் மோடியையும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலையும் சாடியிருக்கிறார் லட்சுமி.

ஞாயிற்றுக்கிழமை சரயு-யமுனா எக்ஸ்பிரஸில் அமிர்தசரஸிலிருந்து அயோத்தி சென்றார் லட்சுமி. வரும்போதே ஒன்பது மணி நேரம் தாமதமாக வந்த அந்த ரயில், போய்சேருவதற்குள் ஆங்காங்கே தாமதம் செய்து, மொத்தமாக 14 மணி நேரம் தாமதமாக அயோத்தி போய் சேர்ந்துள்ளது. ஏசி கோச்சில் பயணம் செய்த லட்சுமி, ரயில் தண்ணீர், உணவு இல்லாததோடு, கழிப்பறையில் இருக்கை இல்லை எனவும் வீடியோவில் தெரிவிக்கிறார்.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
♦ தண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு

ரயில் தாமதமாக வந்தது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சரியான பதிலை அவர்கள் தரவில்லை எனவும் அவர் பதிவு செய்கிறார். ரயில்வே நிர்வாகம் அறிவித்த உதவி எண்களும் வேலை செய்யவில்லை; ரயில்வே அமைச்சருக்கு எழுதிய இமெயிலுக்கு பதில் இல்லை என்கிறார் லட்சுமி.

ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்

“ரயில்வே நிர்வாகம் அவசர உதவிக்கு அளித்திருக்கும் அத்தனை தகவல்களும் வீணான விளம்பரம் தானே தவிர, அதனால் ஒரு பயனும் இல்லை” என்கிறார். அதோடு, ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் நபர்களிடம் டிக்கெட் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் எனவும் அதை தானே கையும் களவுமாக பிடித்ததாகவும் வீடியோவில் சொல்கிறார்.

“ரயிலுக்கு காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் குளிரில் திறந்த வெளியில் படுத்திருக்கிறார்கள். ரயில் நிர்வாகம் அவர்களுக்கு காத்திருக்கும் அறைகளை கட்டித்தரவில்லை. அவர்களுடைய நிலையை கற்பனை செய்யும்கூட முடியவில்லை” என்கிற லட்சுமி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் சாமானிய மக்களைப் போல பயணம் செய்து பார்த்தால் அவர்களுடைய நிலையை அறிந்து கொள்வார் என்கிறார்.

சதாப்திகளும் ராஜ்தானிகளும் பணக்காரர்களுக்கானதே தவிர, ஏழைகளுக்கானது அல்ல என்கிறார் இவர். பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிற எவரும் தலைவராக நீடித்ததில்லை என மோடியின் பொய் பரப்புரைகளை கடுமையாக சாடுகிறார்.

*****

டுத்து, பாஜகவைச் சேர்ந்த பெரும் தலை ஒருவர் மோடியின் மோசடிப் பேச்சுகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திங்கள் கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘பேச்சு திறமை மட்டும் தேர்தலில் வெற்றியை தந்துவிடாது; சமூக – பொருளாதாரத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவதே முக்கியம்’ என பேசியிருக்கிறார்.

“வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம்முடைய சிறப்பு. அனைவரையும் மதிக்கும் விதமாக பேசினால், அதற்கு தனி மதிப்பு இருக்கிறது. நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் என்பதற்காக தேர்தலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. நீங்கள் வித்துவானாக இருக்கலாம், ஆனால் மக்கள் வாக்களித்துவிட மாட்டார்கள்” என மறைமுகமாக மோடியை சாடினார் நிதின் கட்கரி.

முதல் பிரதமர் நேருவை மோடி அரசு அவமதிக்கும் விதமாக செயல்பட்டுவரும் நிலையில், “நான் நேருவின் பேச்சை விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமல்ல, அது மக்களின் தொகுப்பு என்று அவர் சொன்னார்” என நேருவை மேற்கோள் காட்டியிருக்கிறார் நிதின் கட்கரி.

படிக்க:
நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1
♦ கட்காரி வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது யார் ?

ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, “சகிப்புத்தன்மை நம்முடைய அமைப்பின் முக்கியமான சொத்து. ‘எனக்கு ஒருவர் இதைச் செய்தார்; நான் அதை மற்றவர்களுக்குச் செய்வேன்’ என்பது என்னைப் பொறுத்தவரை சரியல்ல. நான் மன்னிக்கத் தயார்” என பேசியுள்ளார் கட்கரி.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் இந்துத்துவ மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் மண்ணைக் கவ்வியது பாஜக. அந்த இழப்பின் காரணங்களை ஆர்.எஸ். எஸ். அலச ஆரம்பித்திருக்கும். ஆர்.எஸ்.எஸ்-ஸின் செல்லப் பிள்ளையான நிதின் கட்கரி மறைமுகமாக மோடிக்கு ஒரு எச்சரிக்கை தருகிறார். இதை வைத்து வரும் தேர்தலில் இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது போல சித்தரிக்கப்படுவது உண்மையல்ல.

மோடியின் ‘அகங்காரத்திற்கு’ ஒரு குட்டு வைக்க வழியுண்டா என ஆர்.எஸ்.எஸ் யோசிக்கலாம். இதை கோஷ்டி மோதல் என்று மக்கள் வழக்கில் மொழிபெயர்க்கலாம். மற்றபடி இவர்களுக்கிடையே சிந்தாந்த வேறுபாடு எல்லாம் இல்லை. பார்ப்பனிய பாசிச திட்டங்களை அமல்படுத்தும் போதே இவர்கள் காந்தி, நேரு, சகிப்புத் தன்மை என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். மேலும் தனது பேச்சுக்களை வைத்து தனக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே சிலர் பிளவு உருவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் நிதின் கட்காரி விளக்கமளித்திருக்கிறார்.

ஆனால் மேற்கண்ட பஞ்சாப் அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா போன்றோர் உண்மையிலேயே மோடி அரசின் தில்லுமுல்லுக்களை அம்பலப்படுத்துகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

கலைமதி
நன்றி: தி பிரிண்ட், அவுட்லுக்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க