ந்தியாவைப் போல் அல்லாமல் புதிய பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்தப்படுவர் என கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

naseeruddin shah and imran khan
இம்ரான்கான், நஸ்ருதீன் ஷா

மத வன்முறைகளுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்ற பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், ‘புதிய பாகிஸ்தான், முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தானாக இருக்கும். இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது போல் அல்லாமல், எங்களுடைய சிறுபான்மையினரை சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவோம் என உறுதி கூறுகிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜின்னாவின் பிறந்த நாளை ஒட்டி, ட்விட்டரில் தொடர் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், ஜின்னாவின் ஆரம்ப கால அரசியல் இந்து – முசுலீம் ஒற்றுமையின் தூதராகத்தான் தொடங்கியது என்கிறார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முசுலிம்கள் சரியாக நடத்தப்பட மாட்டார்கள் என்பதை உணர்ந்த காரணத்தால், ஜின்னா முசுலிம்களுக்கு தனி நாடு கோரினார் எனவும் இம்ரான் கான் தெரிவிக்கிறார்.

கடந்த வாரம், நடிகர் நஸ்ருதின்-ஷா இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கும்பல் கொலைகள் குறித்து கருத்து தெரிவித்த போது இந்துத்துவ கும்பலால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் நஸ்ருதின் ஷாவுக்கு பாகிஸ்தான் செல்ல ஒருவழி விமான சீட்டை அனுப்பினார்.

படிக்க:
♦ பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

ஷாவுக்கு நடந்தது குறித்து கரிசனப்பட்ட இம்ரான் கான், ‘நரேந்திர மோடி அரசுக்கு சிறுபான்மையினரை எப்படி நடத்துவது என்பது குறித்து எங்களுடைய அரசு சொல்லித்தரும்’ என ட்விட்டரில் பதிவிட்டார். பாகிஸ்தான் பிரதமருக்கு பதிலளித்த ஷா, “நாங்கள் 70 வருட ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். எங்களுடைய பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்குள்ள பணிகளைப் பாருங்கள்” என்றார்.

நஸ்ருதீன்-ஷா பெருந்தன்மையாக தனது நாட்டை அயல்நாட்டுடன் விட்டுக்கொடுக்காமல் பேசலாம். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளில் நிலைமைகள் தலைகீழாக மாறிக் கொண்டிருப்பது என்னவோ உண்மை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற பெயரளவு அடையாளத்தை துறந்து வெளிப்படையான இந்துமதவெறி நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானோ வெளிப்படையான முஸ்லீம்மதவெறி நாடு என்ற அடையாளத்திலிருந்து மாறுவதற்கு முயல்கிறது.

இன்றும் பாகிஸ்தான் ஒரு மதம்சார்ந்த நாடு என்ற போதிலும் ஜனநாயகத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறது. இந்துத்துவர்களில் கைகளில் சிக்கியிருக்கும் இந்தியா தனது ஜனநாயக பாதையிலிருந்து சர்வாதிகாரத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறது.  இந்தியா மத சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க மக்கள் காவி அரசியலை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

– கலைமதி
நன்றி: ஸ்கரால்