மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 48

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
நிகலாய் இவானவிச் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். அவனது தலை கலைந்து போயிருந்தது; கையில் ஒரு புத்தகம் இருந்தது.

”அதற்குள்ளாகவா?” என்று உற்சாகமாகக் கூறினான் அவன். ”நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான பேர்வழிதான்!”

அன்பு ததும்பும் கண்கள் அவனது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே படபடவென்று இமை தட்டி விழித்தான். அவளது மேல் கோட்டைக் கழற்றுவதற்கு அவளுக்கு உதவினான். அன்பு நிறைந்த புன்னகையோடு அவளது முகத்தைப் பார்த்தான்.

“நேற்றிரவு நம் வீட்டைச் சோதனை போட்டார்கள்” என்றான் அவன். “அதைக் கண்டு, போன இடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நான் பயந்து போனேன். ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. உங்களைக் கைது செய்திருந்தால் என்னையும் அவர்கள் நிச்சயம் கொண்டு போயிருப்பார்கள்.”

அவளைச் சாப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். போகும்போதே ஒரே உற்சாகத்தோடு பேசிக்கொண்டே போனான்.

”என் வேலை போய்விடும். அது நிச்சயம்தான். ஆனால், அது என்னைக் கொஞ்சம்கூடப் பாதிக்கவில்லை. மேஜையடியிலே உட்கார்ந்து, குதிரைகள் வைத்திராத விவசாயிகளைக் கணக்கு எடுத்து எடுத்து எனக்கே எரிச்சலாய்ப் போய்விட்டது.”

யாரோ ஒரு ராட்சதன் திடும் வெறியோடு வெளியிலிருந்து சுவர்களை உலுக்கி வீட்டிலுள்ள சாமான்களையும் உருட்டித் தள்ளிய மாதிரி. அந்த அறையே ஒரே அலங்கோலமாய்க் கிடப்பதைத் தாய் கண்டாள். படங்கள் எல்லாம் தரைமீது இறைந்து கிடந்தன. சுவரில் ஒட்டியிருந்த காகிதங்களெல்லாம் கிழிபட்டு, துண்டு துண்டாக நாடாக்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபுறத்தில் தரையில் பதிந்திருந்த பலகை அகற்றப்பட்டுக் கிடந்தது. ஒரு கண்ணாடிச் சட்டம் தகர்த்தப்பட்டிருந்தது. அடுப்புக் கரியும் சாம்பலும் தரையில் பரவிக்கிடந்தன. தனக்கு ஏற்கெனவே பழகிப்போன இந்தக் காட்சியைக் கண்டு தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நிகலாயின் முகத்திலே தோன்றும் ஒரு புதிய தன்மையை உணர்ந்து அவனையே கூர்ந்து நோக்கினாள்.

ஆறிப்போன தேநீர் பாத்திரம், கழுவப்படாத ஏனைய தட்டுக்களோடு மேஜை மீது அப்படியே இருந்தது. தட்டுக்களில் வாங்கிவராமல், தாளில் பொட்டலம் கட்டி வாங்கிவந்த பாலடையும். சாஸேஜும் அந்தந்த காகிதத்தில் அப்படியப்படியே கிடந்தன. மேஜைத்துணி முழுவதிலும் அடுப்புக் கரியும் ரொட்டித் துண்டுகளும், புத்தகங்களும் குவிந்து கிடந்தன. தாய் லேசாகச் சிரித்தாள், நிகலாவும் பதிலுக்குக் குழப்பமாகப் புன்னகை புரிந்தான்.

“இந்த மாதிரிக் குழப்பத்தில் என் பங்கும் உண்டு. ஆனால், அது சரியாய் போயிற்று, நீலவ்னா! அவர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று நினைத்தேன். எனவேதான் நான் இவற்றை ஒழுங்குபடுத்தவில்லை. சரி, அது கிடக்கட்டும். நீங்கள் போய்வந்த விவரத்தைச் சொல்லுங்கள்.”

அந்தக் கேள்வி அவள் இதயத்தில் திடுக்கென விழுந்து உலுப்பியது. மீண்டும் அவள் கண் முன்னால் ரீபினின் உருவம் தோன்றியது. வந்தவுடனேயே அவனைப் பற்றிப் பேசாதிருந்ததைக் குற்றம் என்றே அவள் உணர்ந்தாள். அவள் நிகலாயின் பக்கமாகக் குனிந்து தான் போய்வந்த விவரத்தை அமைதியாக ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினாள்.

“அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள்……”

நிகலாயின் முகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

”அப்படியா?”

அவனைக் கையமர்த்திவிட்டு, தான் ஏதோ நியாய தேவதையின் சந்நிதியில் நிற்பது போலவும், அந்த தேவதையிடம் ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையைப் பற்றி வாதாடி வழக்காடுவது போலவும், அவள் மேலும் பேசத் தொடங்கினாள். நிகலாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டும், வெளிறிய முகத்தோடு அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டும் அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் தன் கண்ணாடியை மெதுவாகக் கழற்றியெடுத்து அதை மேஜை மீது வைத்தான், தன் முகத்தில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நூலாம்படை படிந்துவிட்டது போல் முகத்தைத் துடைத்து விட்டுக்கொண்டான்.

அவனது முகபாவம் திடீரெனக் கூர்மை பெற்றது. கன்ன எலும்புகள் புடைத்துத் துருத்தின, நாசித் துவாரங்கள் நடுநடுங்கின. இந்த மாதிரி என்றுமே அவனை அவள் பார்த்ததில்லை; அவனது தோற்றம் அவளை பயமுறுத்தியது.

அவள் பேசி முடிந்த பிறகு அவன் எழுந்து தனது முஷ்டிகளைப் பைகளுக்குள் அழுத்தி ஊன்றியவாறு கீழும் மேலும் நடந்தான்.

“அவன் ஒரு மகா புருஷனாய்த்தானிருக்க வேண்டும்” என்று பற்களை இறுகக் கடித்தவாறே அவன் முணுமுணுத்தான். ”சிறையில் இருப்பது அவனுக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும், அவன் போன்ற ஆட்களுக்கு அது சிரமம்தான்.”

அவன் தனது முஷ்டிகளை அழுத்தியவாறே தனது உணர்ச்சி வேகத்தைத் தணித்துப் பார்த்தான். எனினும் அவனது நிலைமையைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அது தாய்க்குத் தானாகவே தெரிந்தது. அவன் தன் கண்களைச் சுருக்கினான். கண்கள் கத்தி முனையைப் போல் நீண்டு சுருங்கின. மீண்டும் அவன் மேலும் கீழும் நடந்தவாறே அடங்கிக் குமுறும் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.

”இந்தப் பயங்கரத்தை எண்ணிப்பாருங்கள். ஜனங்களின் மீது தமக்குள்ள ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற வெறியுணர்ச்சியில், ஒருசில அயோக்கிய நபர்கள் ஒவ்வொருவரையும் உதைக்கிறார்கள், நெரிக்கிறார்கள், நசுக்குகிறார்கள். காட்டுமிராண்டித்தனம் பெருகி வருகிறது, கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது! இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களில் சிலர் ஜனங்களை அடித்து நொறுக்கி, மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனெனில் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்வதில் அவர்கள் மோகவிகாரம் கொண்டு திரிகிறார்கள். அடிமைகளின் அடங்காத பைத்திய வெறியைப் பயன்படுத்தி, அந்த அடிமை மக்களின் அடிமை உணர்ச்சிகளையும், மிருக்குணங்களையும் அவற்றின் பரிபூரண வேகத்தோடு பாய்ந்து குதறும்படி அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள். வேறு சிலர் பழிக்குப்பழி வாங்கும் விஷ ஆசைக்கு ஆளாகிறார்கள். தாம் வாங்கிய அடி உதைகளால் ஊமையாகவும் செவிடாகவும் போகிறார்கள், சிலர். மக்கள் குலத்தையே சீர்குலைத்துவிட்டார்கள்!”

அவன் பேச்சை நிறத்திவிட்டு மெளனமாகப் பற்களைக் கடித்தான்.

“இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது!”

அவன் தன் உத்வேகத்தை அடக்கியாண்டவாறே அழுதுகொண்டிருந்த தாயின் பக்கமாக அமைதியோடு திரும்பி, தனது கண்களில் பிரகாசிக்கும் நிலையான ஒளியோடு அவளைப் பார்த்தான்.

”நாம் நேரத்தை வீணில் போக்கக்கூடாது, நீலவ்னா. நாமே முன்னின்று நமது காரியங்களைக் கவனிக்கலாம் ……..”

படிக்க:
மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்

சோகம் நிறைந்த புன்னகையோடு அவள்பக்கமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கேட்டான்:

“உங்கள் பெட்டி எங்கே?”

”சமையலறையில்.”

”நம் வீட்டு வாசலில் உளவாளிகள் திரிகிறார்கள். அதிலுள்ள அவ்வளவையும் அவர்கள் கண்ணில் படாமல் நாம் வெளியே கொண்டு போக முடியாது. அவற்றை மறைத்து வைப்பதற்கும் இடமில்லை. இன்று ராத்திரி அவர்கள் மீண்டும் சோதனை போட வருவார்கள் என்றே நினைக்கிறேன். – எனவே எவ்வளவு வருத்தம் தரத் தக்கதாயிருந்தாலும் சரி – நாம் அவற்றைச் சுட்டுப் பொசுக்கிவிட வேண்டியதுதான்.”

“எவற்றை ?”

“டிரங்குப் பெட்டியிலிருக்கிறதே – அவற்றை!”

தாய் புரிந்து கொண்டாள். அவள் எவ்வளவுதான் வருத்தங்கொண்டிருந்த போதிலும், தனது காரிய சாதனையை எண்ணி அவள் மனத்தில் ஏற்பட்ட பெருமையுணர்ச்சி புன்னகையாக உருவெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

”அதில் ஒன்றுமே கிடையாது. அதில் ஒரு துண்டுக் கடுதாசிகூடக் கிடையாது!” என்று கூறிவிட்டு, அதன் பின்னர்தான் ஸ்திபான் சுமக்கோவைச் சந்தித்த விவரத்தையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே ஆர்வத்தோடு கேட்டான், ஆனால் அந்தச் சுழிப்பு சீக்கிரமே மறைந்து, அவன் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது. இறுதியில் அவன் உணர்ச்சிப் பரவசமாகி அவள் பேச்சில் குறுக்கிட்டுக் கத்தினான்:

”அபாரம்! மாபெரும் வேலை!”

அவன் அவள் கைகளை இறுகப் பற்றி மெதுவாகச் சொன்னான்:

”உங்களுக்கு ஜனங்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது …… உங்களை நான் என் சொந்தத் தாய்போலவே நேசிக்கிறேன்!” அவன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமடைகிறான் என்பதைப் புரிய முடியாமல் அவனை வியப்போடு கூர்ந்து நோக்கியவாறே புன்னகை புரிந்தாள் தாய்.

”பொதுவாக, இது மகத்தான காரியம்!” என்று கூறிக்கொண்டே அவன் தன் கைகளைத் தோய்த்துக்கொண்டான். மெதுவாகச் சிரித்தான். ”கடந்த சில நாட்களில், எனக்குப் பொழுது மிகவும் அருமையாகக் கழிந்தது. முழுநேரமும் தொழிலாளர்கள் மத்தியிலேயே கழிந்தது; அவர்களுக்கு நான் பாடம் சொன்னேன்: அவர்களோடு பேசினேன்; அவர்களைக் கண்டுணர்ந்தேன். என் இதயத்திலே ஏதோ ஒரு புனிதமான பரிபூரணமாக வியப்பூட்டும் உணர்ச்சி நிறைந்து ததும்புகிறது. அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள், நீலவ்னா! நான் வாவியத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் எவ்வளவு பலமும். உணர்ச்சியும் அறிவுத் தாகமும் பெற்றவர்களாயிருக்கிறார்கள்! அவர்களைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் ருஷ்ய தேசம்தான் உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடாக விளங்கப்போகிறது என்ற எண்ணம்தான் நமக்கு உண்டாகும்!

அவன் தன் கூற்றை அழுத்தமாக ஆமோதிப்பதைப்போல், சபதம் எடுப்பதுபோல் கரத்தை நீட்டினான். பிறகு ஒரு கணநேரம் கழித்து மேலும் பேசத் தொடங்கினான்.

”இந்தப் புத்தகங்களோடும் உருவங்களோடும் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்குப் புளித்தே போய்விட்டது. சுமார் ஒரு வருஷகாலம் இந்த மாதிரி வாழ்க்கையை – பயங்கர வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று. நான் தொழிலாளரோடு வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனால், நான் மிகுந்த சிரமத்தோடும், பதனத்தோடும் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போதோ நான் மீண்டும் சுதந்திர புருஷனாக வாழ்கிறேன். நான் இனிமேல் முழு நேரம் அவர்களோடு வாழவேண்டும்; அவர்களோடு உழைக்க வேண்டும். நான் சொல்வது புரிந்ததா? இளமை நிறைந்த சிருஷ்டி சக்தியின் முன்னிலையிலே, புதிய சிந்தனைகள் என்னும் பிள்ளைத் தொட்டிலருகேயே நான் வளர்ச்சி பெறவேண்டும். அது அபூர்வமான அழகான வளர்ச்சி, பிரமாண்டமான உணர்ச்சிக் கிளர்ச்சி. அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு மனிதனை இளைஞனாக்குகிறது; பலசாலியாக்குகிறது. அதுவே வாழ்க்கையின் செழிப்பு நிறைந்த மார்க்கம்!”

அவன் ஆனந்தப் பரவசத்தோடும் குழப்பத்தோடும் சிரித்தான். அவனது ஆனந்தத்தைத் தானும் உணர்ந்து, அதில் பங்கெடுத்துக்கொண்டாள் தாய்.

“மேலும் – நீங்கள் ஓர் அற்புதமான பிறவி” என்றான் நிகலாய் ”எவ்வளவு தெள்ளத் தெளிவாக மக்களைப் பற்றி வருணிக்கிறீர்கள்! எவ்வளவு நன்றாக அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!”

 

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க