மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 48 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
வன் தாயின் அருகே உட்கார்ந்தான். முதலில் தனது பிரகாசம் பொருந்திய முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு, தனது. உணர்ச்சிக் குழப்பத்தை மறைப்பதற்காக, பிடரி மயிரைக் கோதி விட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரமே அவன் தாயைத் திரும்பி நோக்கினான். அவளோ தனது அனுபவங்களை ஒன்றுவிடாமல், தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, எளிய வார்த்தைகளால் விவரித்துச் சொன்னாள்.

”பேரதிருஷ்டம்தான்.” என்று வியந்தான் அவன்: “உங்களைச் சிறையில் தள்ளுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன, இருந்தாலும்… ஆமாம், விவசாயிகள் விழிப்புற்று எழத் தொடங்கிவிட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; அது ஒன்றும் அதிசயமில்லை, இயற்கைதானே! அந்தப் பெண் – அவளை நான் நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது… கிராமாந்திரப் பிரதேசங்களில் உழைப்பதற்கென்று நாம் சில பிரத்தியேக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆட்கள்! நம்மில் போதுமான ஆட்கள் இல்லையே! நமக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் வேண்டும்!”

”பாவெல் மட்டும் வெளியில் இருந்தால் – அந்திரேயும் இருந்தால்!” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் அவளைப் பார்த்தான்; உடனே கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.

“நீலவ்னா, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குச் சிரமம் தருவதாயிருக்கலாம். நான் பாவெலை நன்றாக அறிவேன். அவன் சிறையிலிருந்து தப்பியோடி வரவே மாட்டான். அதுமட்டும் எனக்கு நிச்சயம். அவன் விசாரணைக்குத் தயாராயிருக்கவே விரும்புகிறான். விசாரணையின் மூலம் தனது முழு உருவையும் காட்ட நினைக்கிறான். அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் உதறித் தள்ளமாட்டான். ஏன் தள்ள வேண்டும்? அவன் சைபீரியாவிலிருந்து ஓடி வந்துவிடுவான்.”

தாய் பெருமூச்செறிந்துவிட்டு மெதுவாகக் கூறினாள்:

“ஆமாம். அதெல்லாம் அவனுக்கு நன்றாய்த்தான் தெரியும்…”

“ஹூம்!” என்று தன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு மறுகணமே சொன்னான் நிகலாய். “உங்களுடைய அந்த முஜீக் தோழன் சீக்கிரமே வந்து நம்மைப் பார்ப்பான் என்றே நம்புகிறேன். ரீபினைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு துண்டுப் பிரசுரம் எழுதியாக வேண்டும். அவன் இவ்வளவு பகிரங்கமாக வெளி வந்துவிட்டதால், இந்தத் துண்டுப் பிரசுரத்தால் அவனுக்கு எந்தக் கெடுதியும் விளையாது. நான் இன்றே எழுதிவிடுகிறேன். லுத்மீலா அதைச் சீக்கிரமே அச்சடித்துக் கொடுத்துவிடுவாள்……… ஆனால், இந்தப் பிரசுரத்தை அவர்களிடம் எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது ?”

”நான் கொண்டு போகிறேன்.”

“இல்லை; நன்றி! நீங்கள் வேண்டாம்” என்று அவசரமாகச் சொன்னான் நிகலாய். “நிகலாய் வெஸோவ்ஷிகோவால் முடியுமா என்று யோசிக்கிறேன்.”

”அவனிடம் நான் கேட்டுப் பார்க்கட்டுமா?”

“முயன்று பாருங்கள். எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.”

ஆனால், நான் என்ன செய்வது?”

”கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வேறு வேலை பார்க்கலாம்.”

அவன் எழுத உட்கார்ந்தான். மேஜையைச் சீர்படுத்திக்கொண்டே அவள் அவனைக் கவனித்தாள். வரிவரியாக வார்த்தைகளை நிரப்பிச் செல்லும் அவனது விரல்களினால் பேனா நடுநடுங்கிச் செல்வதைப் பார்த்தாள். சமயங்களில் அவனது கழுத்துத் தசை நெளிந்து அசைந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடியவாறு யோசிக்கும்போது, அவனது மோவாயின் நடுக்கத்தை அவளால் காண முடிந்தது. இது அவளது ஆர்வத்தைப் பெருக்கியது.

“தயாராகிவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவன் எழுந்தான். “இதோ, இந்தக் காகிதத்தை உடம்பில் எங்கேயாவது மறைத்து வைத்துக்கொள்ளுங்கள் – ஆனால் போலீஸார் வந்து உங்களைச் சோதனைபோட ஆரம்பித்துவிட்டால்………..”

“அவர்கள் நாசமாய்ப் போக!” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

அன்று மாலையில் டாக்டர் இவான் தனீல்விச் அங்கு வந்தான்.

”இந்த அதிகாரிகளுக்குத் திடீரென்று என்ன கொள்ளை வந்து விட்டது?” என்று கேட்டுக்கொண்டே அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் அவன். “நேற்று ராத்திரி அவர்கள் ஏழு வீடுகளைச் சோதனை போட்டிருக்கிறார்கள், சரி, நோயாளி எங்கே?”

”அவன் நேற்று போய்விட்டான்” என்றான் நிகலாய். “இன்று சனிக்கிழமை. அரசியல் வகுப்புக்குப் போகாமால் அவனால் இருக்க முடியவில்லை.”

“அது முட்டாள்தனம், உடைந்துபோன மண்டையோடு அரசியல் வகுப்புக்குச் சென்று உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம்…”

”நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.”

“ஒருவேளை தான் அடிபட்டிருப்பதைத் தன் தோழர்களிடம் காட்ட வேண்டுமென்று விரும்பினானோ என்னவோ?” என்றாள் தாய். “இதோ என்னைப் பாருங்கள். நான் ஏற்கெனவே ரத்தம் சிந்திவிட்டேன்” என்று சொல்ல நினைத்தான் போலிருக்கிறது…..”

அந்த டாக்டர் தாயைப் பார்த்தான். போலிக் கடுமையோடு முகபாவத்தை மாற்றி முகத்தைச் சுழித்துக்கொண்டு சொன்னான்.

“அடேடே நீங்கள் எவ்வளவு கல் நெஞ்சுப் பிறவி!”

“சரி இவான்! நீ இங்கேயே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சீக்கிரமே போய்விடு. நாங்கள் ‘விருந்தாளிகளை’ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நீலவ்னா, அந்தத் தாளை இவனிடம் கொடுங்கள்.”

“இன்னொரு தாளா?” என்று வியந்தான் டாக்டர்.

“ஆமாம். அதை எடுத்துக்கொண்டுபோய், அச்சாபிசிலே, கொடுத்துவிடு.”

“சரி . நான் அதை வாங்கிக்கொண்டேன்! போய்க் கொடுத்து விடுகிறேன். வேறு ஏதாவது உண்டா?”

“ஒன்றுமில்லை. வாசல்புறத்தில் ஓர் உளவாளி நின்று கொண்டிருக்கிறான்.”

“அவனை நானும் பார்த்தேன். என் வீட்டு வாசலிலும் ஒருவன் நிற்கிறான். சரி, வருகிறேன். ஏ… கல் நெஞ்சுக்காரி! நான் வருகிறேன். தோழர்களே, சந்தர்ப்பவசமாக, அந்த இடுகாட்டுச் சம்பவத்தால் நன்மைதான் விளைந்திருக்கிறது. நகர் முழுவதுமே அதைப் பற்றித்தான் பேச்சாயிருக்கிறது. அதைப் பற்றி நீ எழுதிய பிரசுரம் ரொம்ப நல்ல பிரசுரம்; மேலும், அது சரியான சமயத்தில் வெளிவந்துவிட்டது. மோசமான முறையில் சமாதானமாவதைவிட, நல்ல முறையில் சண்டையிட்டுப் பார்ப்பதே மேலானது என்று நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.”

படிக்க:
2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்
“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்

”சரிதான். நீ புறப்படு.”

“நீ மிகுந்த தயாள குணமுடையவன் என்று நான் சொல்ல மாட்டேன், நீலவ்னா. கை கொடுங்கள். அந்தப் பையன் நிச்சயம் முட்டாள்தனமான காரியத்தைத்தான் செய்துவிட்டான். அவன் எங்கு வசிக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”

நிகலாய் அவனது விலாசத்தைக் கொடுத்தான்.

“நாளை நான் அவனைப் போய்ப் பார்க்கிறேன். அருமையான பையன், இல்லையா?”

“ஆமாம்.”

”அவனை ஜாக்கிரதையோடு கவனிக்க வேண்டும். அவனுக்கு நல்ல மூளை இருக்கிறது” என்று வெளியே போகும்போது பேசிக்கொண்டே சென்றான் அந்த டாக்டர். “வர்க்க பேதமற்ற அந்த மேலுலகத்திற்கு நாம் செல்லும்போது அவன் மாதிரி நபர்கள்தான் பாட்டாளி வர்க்கத்தின் அறிவாளிகளாக வளர்ச்சி பெற்று உருவாக வேண்டும்.”

“இவான், நீ ரொம்ப ரொம்ப வாயளக்க ஆரம்பித்துவிட்டாய்.”

”ஏனெனில் நான் உற்சாக வெறியோடிருக்கிறேன். அப்படியானால், நீ சிறைக்குப் போவதைத்தான் எதிர்நோக்கி இருக்கிறாய் இல்லையா? போ… போ… போய் நன்றாக ஓய்வு பெற்றுக்கொள்.”

“நன்றி. நான் ஒன்றும் களைத்துப் போகவில்லை .”

அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் அவர்கள் அந்தத் தொழிலாளி வர்க்கச் சிறுவனின் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தாள்.

டாக்டர் சென்ற பிறகு தாயும் நிகலாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள். தங்களது இரவு விருந்தினர்களை எதிர்நோக்கி அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாடு கடத்தப்பட்ட தோழர்களைப் பற்றியும், அவர்களில் தப்பியோடி மீண்டும் ஊருக்குள் வந்தவர்களைப் பற்றியும், வெவ்வேறு பெயர்களில் அவர்கள் தங்களது இயக்க வேலையைத் தொடர்ந்து செய்து வருவதைப் பற்றியும் நிகலாய் தாயிடம் விளக்கிக் கூறினான். புத்துலக சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்ட அந்தப் புனிதமான, அடக்கமான வீரர்களைப் பற்றிய கதைகளை அந்த அறைச் சுவர்கள் கேட்டன. நம்ப இயலாத வியப்போடு அந்தக் கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிரொலித்தன. அறியப்பட முடியாத மனிதர்களின் மீது ஏற்படும் அன்புணர்ச்சியால் இதயத்திற்குச் சூடேற்றி, வெதுவெதுப்பான ஒன்று அப்பெண்மணியை இதமாகச் சூழ்ந்தது. அந்த வீரர்கள் அனைவரும் அச்சமென்பதையே அறியாத ஒரு மாபெரும் பேருருவாக உருண்டு திரண்டு உருப்பெற்று பூமியின் மீது மெதுவாக, எனினும் நிச்சயம் தீர்க்கத்தோடு, முன்னேறி வருவதாகவும், அழுகி நாற்றமெடுக்கும் பண்டைப் பொய்மைகளையெல்லாம் தமது பாதையிலிருந்து விலக்கித் தூர எறிந்து, எளிய நெளிந்த வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக முனைந்து முன்னேறுவது போலவும் தாய் கற்பனை பண்ணிப்பார்த்தாள். அந்த மாபெரும் உண்மை. புத்துயிர் பெற்ற அந்தச் சத்தியம், ஒரே மாதிரியாக எல்லோரையும் தன்னிடம் அழைக்கிறது. பேராசை, பொறாமை, பொய்மை – என்ற மூன்று ராட்சச மிருகங்கள் தமது வெறிபிடித்த சக்தியினால் உலகம் பூராவையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வைத்திருப்பதையெல்லாம் தகர்த்து, ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலையை உத்தரவாதம் அளிக்கும்… இந்தக் கற்பனா சொரூபமான எண்ணம் அவளது மனத்தில் ஓர் உணர்ச்சியைக் கிளப்பியது. மற்ற நாட்களைவிட எளிதாக இருந்த அந்த நாட்களில் அவள் விக்ரகத்தின் முன் மண்டியிட்டுத் தொழும்போது அவள் உள்ளத்தில் எம்மாதிரி உணர்ச்சி பொங்கியதோ அம்மாதிரி உணர்ச்சிதான் அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. இப்போதோ அவள் அந்த நாட்களையெல்லாம் மறந்துவிட்டாள். எனினும் அந்த நாட்களில் அவள் மனத்தில் எழுந்த உணர்ச்சி மட்டும் விரிந்து பெருகி, முன்னைவிடக் குதூகலமும் பிரகாசமும் பொருந்தியதாக வளர்ந்து. அவளது இதய பீடத்தின் ஆழத்திலே இடம்பிடித்து, ஒளிமயமான தீபச்சுடராக நின்றெரிந்தது.

”போலீஸ்காரர்கள் வருவதாகத் தெரியவில்லையே!” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.”

“அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றேனே” என்று அவனை விருட்டெனத் திரும்பிப் பார்த்தவாறே சொன்னாள் தாய்.

”உண்மைதான். ஆனால், நீலவ்னா, நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரமாவது படுத்துத் தூங்குங்கள். மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு அற்புதமான மனோதிடம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. இந்த அபாயத்தையும் அயர்ச்சியையும் ரொம்பவும் சுளுவாகத் தாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமயிர் மட்டும் விறுவிறுவென்று நரை தட்டி வருகிறது. சரி, போய்ப் படுத்துக் கொஞ்ச நேரமாவது களைப்பாறுங்கள்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க